சிங்கள இளைஞரின் ஆயுதக் கிளர்ச்சி

1971ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் இலங்கையில் ஒரு பிரமாண்டமான ஆயுதக் கிளர்ச்சி வெடித்தது. ஆயுதம் தரித்த ஆயிரமாயிரம் சிங்கள இளைஞர்கள் ஆட்சியாளருக்கு எதிராகக் கிளர்ச்சியில் குதித்தனர். தென்னிலங்கையில் பெரும் பகுதி கிளர்ச்சிக்கார இளைஞர்கள் வசம் வீழ்ந்தது. பதட்டமும், பயமும் கொண்ட பண்டா அம்மையார், உலக நாடுகளிடம் உதவிக்கு மண்டியிட்டார். மேற்கத்தைய முதலாளித்துவ வல்லரசுகளும், சோசலிச நாடுகளும் ஆயுதங்களைக் கொட்டிக் குவித்தன. அயல்நாடான இந்தியா ஒரு பட்டாளத்தை அனுப்பி வைத்தது. சிங்கள முதலாளித்துவ இராணுவ இயந்திரம் புத்துயிர்பெற்று, கிளர்ச்சிக்கார இளைஞர்களை நசுக்கக் கிளம்பியது. ஒரு சில வாரங்களில் கிளர்ச்சி முற்றாக முறியடிக்கப்பட்டது. பத்தாயிரம் இளைஞர்கள் வரை மிருகத்தனமாகக் கொல்லப்பட்டனர். பதினையாயிரம் பேர் வரை சிறையில் தள்ளப்பட்டனர்.

இந்த ஆயுதக் கிளர்ச்சியின் அரசியல், சமூக, பொருளாதாரப் பின்னணி என்ன? இது யாரால், எப்படி உருவாக்கப்பட்டது? இதன் நோக்கந்ததான் என்ன? இந்த இளைஞர் கிளர்ச்சி படுதோல்வியடைந்ததன் காரணங்கள் யாவை? இந்த வினாக்களுக்கு விரிவான, தெளிவான விடைகளை ஆராய்வதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.

தமிழீழத்தைத் தனிநாடாக அமைக்கும் ஒரு தேசிய விடுதலைப் போராட்டத்தை எதிர்கொண்டுள்ள நாம், ஆயுதம் தரித்த புரட்சியில் குதிப்பது தவிர்க்க முடியாதது. ஆகவே, எமது அயல்நாட்டில் வெடித்த ஒரு ஆயுதக் கிளர்ச்சியின் அம்சங்கள் அனைத்தையும் நாம் அறிந்திருப்பது அவசியம். தோல்வியின் காரணங்களைத் தெரிந்து கொள்வதில்தான், வெற்றியின் பாதையைக் கண்டு கொள்ளலாம்.

1971ஆம் ஆண்டு இளைஞர் கிளர்ச்சியின் மூலகர்த்தாவாக விளங்கியவன் றோகன் விஜேவீரா. அவன் தன்னைப் பற்றியும், தனது அரசியல் இலட்சியம் பற்றியும் எவ்விதம், எதற்காக ஒரு ஆயுதக் கிளர்ச்சியைத் திட்டமிட்டுச் செயல்படுத்தினான் என்பது பற்றிய விரிவான விளக்கம் கொடுத்திருக்கிறான்.

முதலில் அவனது அறிக்கையைப் பார்ப்போம். பின்னதாக எமது ஆராய்ச்சியில் இறங்குவோம்.

1973ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 2ஆம் திகதி, குற்றவியல் நீதி ஆணைக்குழு (Criminal Justice Commission) முன்பாக விஜேவீரா நீண்ட அறிக்கை ஒன்றை விடுத்தான். அந்த அறிக்கையின் முக்கிய அம்சங்களைக் கீழே தருகிறோம்.

‘‘நான் ஒரு புரட்சிவாதி; பயங்கரவாதியல்ல’’

“நான் பதின்மூன்றாவது சந்தேக நபராக இந்த ஆணைக் குழுவினால் குறிப்பிடப்பட்டிருந்த போதும், பிரதம நீதியரசர் என்னையே தலையான சந்தேக நபர் எனச் சுட்டிக் காட்டியுள்ளார். ஆகவே, ஆரம்பத்திலேயே நான் யார் என்பதை விளக்குவது அவசியமாகிறது. நான் ஒரு மார்க்சிச, லெனினிசவாதி (Marxist Leninist). நான் ஒரு பாட்டாளி வர்க்கப் புரட்சிவாதி. மார்க்சிச-லெனினிசவாதம் என்பது ஒரு தெளிவான அரசியல் சித்தாந்தம். மார்க்சிச-லெனினிசவாதி என்பவன் ஒரு சதிகாரன் அல்லன். நான் ஒரு புரட்சிவாதி. நான் ஒரு பயங்கரவாதியல்லன். நான் ஒன்றை மட்டும் திடமாகச் சொல்லுவேன். அதாவது, நான் ஒரு பாட்டாளி வர்க்கப் புரட்சிவாதியென்பதால், தற்போதைய முதலாளி வர்க்க அரசமைப்பை வீழ்த்தி, ஒரு சமதர்ம சமுதாயத்தை அமைப்பதே எனது இலட்சியமாகும்.

பிற்போக்கான, பின்தங்கிய முதலாளித்துவ அமைப்பைக் கைவிடுவதோ, அல்லது இந்தப் பழைய அமைப்பை மாற்றி, மனித சமுதாயத்தின் முன்னேற்ற வரலாற்றில் தோன்றிய, உன்னதமான ஒரு நவீன சோசலிச சமூக அமைப்பை உருவாக்குவதோ அல்லது இந்த இலட்சியத்தின் பேரில் செயற்படுவதோ சதித்திட்டமெனச் சொல்ல முடியாது. ஆகவே, சரித்திர முன்னேற்றத்தின் நியதியைக் கொண்டு பார்க்கப் போனால் நான் ஒரு சதிகாரன் அல்லன்.

மகிமைக்குரிய நீதியரசர்களே! நான் உங்களிடம் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். ஆளும் வர்க்கத்தின் கையில் நான் மிக மோசமான முறையில் இம்சைப்படுத்தப்பட்டேன்; அவமானத்திற்கு ஆளானேன்; பல வருடங்களாக என்னைத் தூற்றினார்கள்; இழிவுபடுத்தினார்கள்; மானபங்கப்படுத்தினார்கள். இவ்வளவிற்கும் சட்டத்தின் பாதுகாப்பு எனக்குக் கிடைக்கவில்லை. நான் உங்களிடம் கேட்டும் ஒரேயொரு கோரிக்கை என்னவென்றால், எனது கபடமற்ற தன்மையை எவ்வித தடையுமின்றிச் சுதந்திரமாக, வெளிப்படையாக எடுத்தியம்ப எனக்கு உரிமை தாருங்கள் என்பதுதான். முதலாளித்துவ ஆளும் வர்க்கம், நீண்ட காலத்திற்கு எனது வாய்க்குப் பூட்டுப் போட்டு விடும். ஆகவே, இந்தச் சந்தர்ப்பத்தில் நான் சொல்ல வேண்டியது அனைத்தையும் உங்கள் முன்பு சொல்ல விரும்புகிறேன். ஆகவே, எனது பேச்சுச் சுதந்திரத்தைத் தடை செய்து விடாதீர்கள்.

இந்த நீதிமன்ற முதலாளித்துவ நிறுவனமானது, எனக்கு எதிராகப் பாரதூரமான முறையில் பிரயோகிக்கப்பட்டிருக்கிறது. நான் இதுபற்றி ஆச்சரியப்படவில்லை. ஆளும் வர்க்கமானது, முதலாளித்துவத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் தனது நிறுவனங்களை அமைத்துக் கொள்ளும் என்பது எனக்குத் தெரிந்ததே. ஆனால், அண்மைக்கால இலங்கைச் சரித்திரத்தில் நிகழ்ந்த மிகவும் கோரமான, மிகவும் மிருகத்தனமான மனிதப் படுகொலைகளின் சரித்திரப் பின்னணி என்ன என்பதனை இங்கு விளக்குவதே எனது நோக்கம்.

கௌரவத்திற்குரிய ஆணைக்குழு அங்கத்தவர்களே! மனித வாழ்க்கையின் அர்த்தத்திற்கு ஒரு உருசிய அறிஞன் பின்வரும் விளக்கத்தைக் கொடுக்கிறான். ‘மனிதனிடம் ஒரு உயர்வான, உன்னதமான, மகத்துவமான பொக்கிசம் உள்ளதென்றால், அது அவனது வாழ்க்கைதான். அந்த வாழ்க்கையை மனிதன் ஒரு தடவைதான் வாழலாம். ஆகவே, அந்த வாழ்க்கையை ஒருவன் நிறைவானதாக, இலட்சிய பூர்வமானதாக வாழ்ந்தால்தான், சாகும் கணத்தில் அவன் கவலையோ, கலக்கமோ, ஏமாற்றமோ, ஏக்கமோ அனுபவிக்கத் தேவையில்லை. மனித இனத்தின் விடிவிற்காக, விடுதலைக்காக, விருத்திக்காக வாழ்க்கையை அர்ப்பணித்த ஒருவன், சாகும் தறுவாயில் சந்தோசத்தையே அனுபவிப்பான்.’ இப்படியான ஒரு இலட்சிய வாழ்க்கையையே நானும் தழுவ விரும்புகிறேன். ஆகவே, இந்த முதலாளித்துவ ஆளும் கும்பலானது எனது வாழ்க்கையை என் இளமையிலேயே துண்டித்து விட்டாலும், நான் எவ்வித கவலையும் கொள்வதற்கு இடமில்லை. எனது தலைவிதி எவ்விதம் நிச்சயிக்கப்படவிருக்கிறது என்பது பற்றி எனக்குக் கவலையேயில்லை. என்மீது எவ்வித பழிதீர்க்கப்பட்டாலும், ஏப்பிரல் சம்பவங்களின் சரித்திர அடிப்படையான காரணங்கள் அனைத்தையும் ஒளிவுமறைவின்றி உங்களுக்கு ஒப்புவிக்க விரும்புகின்றேன்.

நான் 1943ஆம் ஆண்டு, ஜுலை மாதம், தங்காலை என்னுமிடத்தில் பிறந்தேன்; மாத்தறை மாவட்டத்திலுள்ள ஒரு குக்கிராமமாகிய கோட்டைகொடையில் வளர்ந்தேன்; கொடானந்த அரசாங்கப் பாடசாலையில் படித்தேன். இளமைப் பருவத்தில் கம்யூனிச சித்தாந்தம் என்னைக் கவர்ந்தது. ஏகாதிபத்தியத்திற்கும், முதலாளித்துவத்திற்கும் எதிராக டாக்டர் எஸ்.ஏ.விக்கிரமசிங்கா தென்னிலங்கையில் அன்று நடத்திவந்த மாபெரும் பிரச்சாரத்தினால் ஈர்க்கப்பட்டுக் கம்யூனிசக் கட்சி அனுதாபியானேன். கம்யூனிச இளைஞர் சம்மேளனத்தில் அங்கத்தவனாகி, வாழ்க்கையில் முதன் முறையாக அரசியலில் ஈடுபடத் தொடங்கினேன். 1959ஆம் ஆண்டு, ஜுலை மாதம், விஞ்ஞானத்துறையில் ஜீ.சி.ஈ. (சாதாரண பிரிவில்) சித்தியடைந்தேன்.

ஒரு நாள் ‘சோவியத் நாடு’ என்ற சஞ்சிகையில் வெளியாகிய ஒரு செய்தி என்னைக் கவர்ந்தது. அதில் ஆசிய, ஆபிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளைச் சார்ந்த வறிய மாணவர்களுக்கென, மாஸ்கோவில் ஒரு சர்வதேச சர்வகலாசாலை திறக்கப்படவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. எனது குடும்பமோ ஏழ்மையானது. உயர்கல்வி படிப்பிக்க அவர்களால் முடியாது. ஆகவே, நான் மாஸ்கோ சர்வதேச மக்கள் நட்புறவுச் சர்வகலாசாலைக்கு விண்ணப்பித்தேன்.

வைத்தியப் பட்டதாரிப் படிப்புக்கு உபகாரநிதி கிடைத்ததும் 1960ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 25ஆம் திகதி நான் மாஸ்கோ புறப்பட்டேன். உருசிய மொழியைக் கற்பதற்காக, என்னை முதலில் மொழியியல் போதனா பீடத்தில் அனுமதித்தார்கள். 1961ஆம் ஆண்டு ஜுன் வரை உருசிய மொழி பயின்றேன். அத்துடன் உலக சரித்திரமும், மார்க்சிய சித்தாந்தமும் பயின்றேன். அவ்வேளையில்தான் பிரபல உருசிய சரித்திர வல்லுனரான பேராசிரியர் மெற்றாபொல்சிக்கியை சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. நான் அவரது மாணவனராக இருந்திராது போனால், இன்று உங்கள் முன்னிலையில் நிற்க மாட்டேன். ஒரு வைத்தியனாக மாறுவதைவிட, ஒரு புரட்சிவாதியாவதால் நான் மனித சமுதாயத்திற்கு இந்த யுகத்தில் அளப்பரிய சேவை ஆற்றலாம் என்பதை எனக்கு உணர வைத்தது இந்த மனிதரின் புரட்சிகரமான கருத்துக்கள்தான்.’’

சீன-உருசிய சித்தாந்தப் பிளவு

‘‘வைத்தியக் கல்லூரியில் இரண்டாவது வருடப் படிப்பை ஆரம்பித்த போது, எனது அக்கறையும், ஆர்வமும் அரசியலில் திரும்பியது. இந்தச் சந்தர்ப்பத்தில் சீன-உருசிய சித்தாந்தப் பிணக்குப் பற்றி எனது நெருங்கிய நண்பர்களுடன் விவாதித்தேன். இந்த விவாதங்களின் பயனாய், சீனக் கம்யூனிசக் கட்சியின் நிலைதான் சரியானதென எனக்குத் தோன்றியது. இதைக் கொண்டு நான் உருசியாவுக்கு விரோதமானவன் என எண்ணிவிடக் கூடாது.

எம்மைப் பொறுத்தவரை இந்தப் பிளவானது, ஒரு சரியான கொள்கைத் திட்டத்தை அணுகுவதில் சீன, உருசியக் கட்சிகள் மத்தியில் எழுந்த, ஒரு சினேகபூர்வமான சித்தாந்த வாதம் என்றே எண்ணினோம். விரோதிகள் மத்தியில் எழும் கொந்தளிப்பாக இது மாறக்கூடுமென நான் அன்று எதிர்பார்க்கவில்லை.

இந்தச் சந்தர்ப்பத்தில் இவ்வழக்குடன் தொடர்புடையதான ஒரு முக்கிய விடயத்தை நான் இங்கு விளக்க விரும்புகிறேன். அதாவது, சாத்வீகம், பலாத்காரம் சம்பந்தப்பட்ட மட்டில் மார்க்சிசவாதிகளின் நிலை என்னவென்பதுதான். நான் இதை விளக்க விரும்புவது ஏனென்றால், எனக்கு எதிரான சாட்சியங்களில் பலாத்காரம் பிரதான பிரச்சினையாக எழுப்பப்பட்டிருக்கிறது. சீன-உருசிய சித்தாந்தப் பிளவை எடுத்துக் கொண்டாலும், பலாத்காரக் கோட்பாட்டில்தான் அடிப்படையான பிணக்குத் தோன்றியுள்ளது.

சமாதான வழியைத் தழுவி, முதலாளித்தவத்திலிருந்து சமதர்ம சமுதாயத்தை அமைப்பது சாத்தியமா என்பது பற்றி உலகக் கம்யூனிச இயக்கத்தில் நீண்ட காலமாக மிகச் சூடான விவாதம் நடைபெற்று வருகிறது. மார்க்சிசவாதிகளான எம்மைப் பொறுத்தவரை, தேச பரிபாலன அதிகாரம் சுரண்டி வாழும் முதலாளி வர்க்க ஆளும் கும்பலிலிருந்து, பாட்டாளி வர்க்கத்திற்குச் சமாதான முறையில் கைமாறுவதையே நாம் பெரிதும் விரும்புகிறோம்.

ஒரு சிலரின் கைவசமிருக்கும் சொத்துரிமையானது, பொதுமக்களிடம் சமாதான முறையில் கையளிக்கப்படுவதையே நாம் விரும்புகிறோம். மனிதனை மனிதன் சுரண்டி வாழும் இந்த அநீதியான ஆட்சியமைப்பு, சமாதான முறையிற் சுலபமாக, சீக்கிரமாக ஒழிந்து போகுமாயின், நாம் அதனை ஆட்சேபிக்கவில்லை. வர்க்க முரண்பாடுகள் நெருக்கடியின்றி, சினேகபூர்வமான முறையில் தீர்க்கப்படுமாயின், நாம் அதனை ஆட்சேபிக்கவில்லை. முரண்பாடான வர்க்க வேறுபாடுகள் அகன்ற, மனிதனை மனிதன் சுரண்டும் அநீதி அழிந்த பொருளாதார உற்பத்தி, பொதுமக்களுக்கு உரித்தான ஒரு சமதர்ம சமுதாயத்தை உருவாக்கும். எமது அரசியல் இலட்சியமானது சமாதான முறை தழுவிப் பூர்த்தியடைவதையே, மார்க்சிசவாதிகளான நாம் விரும்புகிறோம். ஆனால் இங்கு முக்கியமாக வலியுறுத்த வேண்டியது என்னவென்றால், ஒரு பாட்டாளி வர்க்க சோசலிசப் புரட்சி, சமாதான முறையிலோ அல்லது பலாத்காரம் மூலமோ நடைபெற வேண்டும் என்பதைத் தீர்மானிப்பது புரட்சிவாதிகள் அல்ல.

சுரண்டி வாழும் சொத்துரிமை கொண்ட ஆளும் வர்க்கமானது, தனது ஆட்சியதிகாரத்தையும், விசேட சலுகைகளையும் தானாக விட்டுக் கொடுத்ததாக இதுவரை சரித்திரத்தில் சம்பவம் இடம்பெறவில்லை என்பதை, கார்ல் மார்க்சு தெளிவாக விளக்கியிருக்கிறான். பெரும்பான்மை மக்களின் தேவைகளுக்கும், அவர்களின் வேண்டுகோளுக்கும் அடிபணிந்து, சொத்துடமையுள்ள வகுப்பினர் தமது சலுகைகளை விட்டுக் கொடுத்த வரலாறு இந்த முழு உலகத்திலும் நடைபெறவில்லை. எமது சமுதாயத்தில், ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி வைத்திருக்கும் வகுப்பினர், இந்த அதிகாரத்தைப் பயன்படுத்தித் தனியார் சொத்துரிமை முறையைப் பாதுகாத்து வருகின்றனர். இந்த முதலாளித்துவ ஆளும் வர்க்கமானது, தனது சொத்துரிமையைப் பாதுகாக்கும் வண்ணம் ஒடுக்கப்பட்ட மக்கள் மீது மிகக் கொடூரமான, படுபாதகமான குற்றங்களைப் புரியத் தயங்கி நிற்காது.’’

பலாத்காரமும், புரட்சியும்

‘‘மார்க்சிசவாதிகளான நாம் பாட்டாளி வர்க்கப் புரட்சிவாதிகளாவோம். தற்போதைய சமுதாய அமைப்பைப் புரட்சிகரமான முறையில் மாற்றியமைப்பதில் நம்பிக்கை கொண்டுள்ள நாம், இந்த இலட்சிய நோக்கைக் கொண்டே செயல்புரிவோம். இந்த முதலாளித்துவ அமைப்பை, மற்றவர்கள் தோளில் சுமந்து சென்று புதைக்கும் நாளை எதிர்பார்த்தபடி நாம் கைகட்டிக் காத்திருக்கப் போவதில்லை.

இந்த முதலாளித்துவ ஆட்சிமுறையானது, இந்நாட்டின் முப்பது இலட்சம் பாட்டாளி வர்க்கத்தினரை ஆழ்ந்த துயரத்திற்கும், அடக்குமுறைக்கும் ஆளாக்கியுள்ளது; ஏழை விவசாயிகளைப் பசியிலும், பட்டினியிலும் வாட்டி வருகிறது; வேலையில்லாத இளைஞர் பட்டாளத்தையும், போசாக்கற்ற குழந்தைகளையும் படைத்து வருகிறது. இந்நாட்டின் சமூகப் பிரச்சினைகள் அனைத்திற்குமே, இந்த ஆட்சிமுறைதான் மூலகாரணமாக விளங்குகிறது.

புரட்சிக்கு எதிரான பிற்போக்குவாதிகள் பலாத்காரத்தைப் பிரயோகிக்கத் தவறமாட்டார்கள். ஆகவே ஒரு புதிய சோசலிச சமுதாயத்தைப் பாதுகாப்பாகப் பிரசவிக்கச் செய்யவும், முதலாளித்துவ வர்க்கம் கையாளும் பலாத்காரத்தை முறியடிக்கவும், பாட்டாளி வர்க்கப் புரட்சிவாதிகள் புரட்சிகரமான பலாத்காரத்தில் குதிப்பது அவசியமாகிறது.

இங்கு அடிப்படையான பிரச்சினை அரசின் அதிகாரம். முதலாளித்துவ அரசைத் தகர்த்தெறிந்து, பாட்டாளி வர்க்க அரசை, அதாவது பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தை உருப்பெறச் செய்வதுதான் ஒரு சமுதாயப் புரட்சியின் பிரதான கைங்கரியமாகும். ஒரு சமதர்ம சமுதாயம் உருவாகுவதற்கு முதற்படியாக, பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தைத் தொடங்குவது அத்தியாவசியமாகும். பாட்டாளி வர்க்கத்தினர் அரசின் அதிகாரத்தினைக் கைப்பற்றி, அதனை நிலைப்படுத்திக் கொள்ளத் தவறினால், சோசலிச சமுதாயம் ஒருபோதும் உதயமாகப் போவதில்லை.

மார்க்சிசவாதிகளான நாம், பலாத்காரத்தைப் போதிப்பவர்கள் அல்லர். புரட்சி வெடிக்கும் சமயம், பலாத்காரச் செயல்கள் நிகழ்வது திண்ணம் என்பதை மட்டும் நாம் திடமாக முன்கூட்டியே சொல்ல முடியும். சோசலிசப் புரட்சி மூலம், சமுதாயமானது முற்போக்குப் பாதையில் முன்னேறிச் செல்கையில், ஆட்டம் காணும் ஆளும் வர்க்கத்தினர் இதற்கு முட்டுக்கட்டையாக, எதிர்ப்புரட்சிப் பலாத்காரத்தில் இறங்குவார்கள். இவ்வேளை பாட்டாளி வர்க்கமானது, இதனை எதிர்கொள்ளப் பலாத்காரமான புரட்சிகர செயல்களில் குதிக்க வேண்டி வரும்.

உருசியா விசா மறுத்தது

‘‘1964ஆம் ஆண்டு பங்குனி 24ஆம் திகதி விடுமுறையைக் கழிப்பதற்காக இலங்கை வந்தேன். இலங்கை வந்ததும், சீனக் கம்யூனிசக் கட்சியின் சார்பாக, அதன் அனுதாபியாகச் சில செயல்கள் புரிந்தேன். பல மாணவச் சங்கங்களும், மற்றும் பொது நிறுவனங்களும் எனக்கு அழைப்புக்களை விடுத்துச் சோசலிசம் பற்றியும், சோவியத் நாடு பற்றியும் பேசும்படி சொன்னார்கள். இக் கூட்டங்களின் போது, சீன-உருசிய சித்தாந்தப் பிளவுபற்றிக் கேள்விகள் கேட்கப்பட்டன. நான் சீனாவின் நிலையை ஆதரித்துப் பதிலளித்தேன். இதனால் மாஸ்கோ சார்புக் கம்யூனிசக் கட்சித் தலைவர்கள் சீற்றமடைந்தனர். 1964 ஆவணியில் நான் மீண்டும் உருசியா செல்வதற்காக விசாவுக்கு விண்ணப்பித்த போது, சோவியத் தூதராலயம் எவ்வித காரணமும் காட்டாமல் எனது விசா மனுவை நிராகரித்தது. இதனையடுத்து இலங்கை அரசியலில் எனது கவனம் திரும்பியது.

1967ஆம் ஆண்டு நடுப்பகுதியில், நானும் எனது நண்பகள் சிலருமாக, எனது வீட்டில் ஒரு கூட்டம் நடத்தி, எமது எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் பற்றி ஆராய்ந்தோம். இப்படி நாம் கூடி நடத்திய விவாதங்கள் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். ஏனெனில், இதன் பயனாகவே ‘ஜனதா விமுக்தி பெரமுன’ (மக்கள் விடுதலை முன்னணி) என்ற புதிய அரசியல் இயக்கம் உதயமாகியது.

இது இவ்வாறிருக்க, சர்வதேச ரீதியாகப் புரட்சி அரசியலில் ஒரு புதிய நோக்குப் பிறந்து, எமது நாட்டிலும் அதன் தாக்கத்தை விளைவித்தது. பொலிவியாவில் சேகுவேரா கொலை செய்யப்பட்ட சம்பவம் உலக ரீதியாகப் பிரசித்தமானதுடன், பாரதூரமான விளைவுகளையும் உண்டு பண்ணியது.

இலங்கையிலுள்ள கியூபா தூதராலயம் சேகுவேராவினதும், காஸ்ட்ரோவினதும் சொற்பொழிவுகளையும், அரசியல் நூல்களையும் சிங்களத்தில் மொழிபெயர்த்து நாடு பூராவும் விநியோகம் செய்திருந்தது. இந்தக் கருத்துக்களினால் தூண்டப்பட்ட எமது கட்சி ஆதரவாளர்கள் சிலர், இலங்கையும் கியூபாவின் புரட்சிப் பாதையைப் பின்பற்ற வேண்டுமென வாதாடினர். ஒரு புரட்சிகரமான கட்சியைக் கட்டியெழுப்பாமல், ஒரு புரட்சியை நடத்தலாமென இவர்கள் கருதினர். முதலாளித்துவத்தின் அடக்குமுறைக்கு அடிபணிந்து, பழைய இடதுசாரி இயக்கம் மக்களுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்ததால், ஒரு புரட்சிகரமான கட்சி எழும்ப முடியாதென்றும், புரட்சிவாதிகள் ஆயுதப் போராட்டத்தைத் தொடக்கி, அடக்குமுறையின் கீழுள்ள மக்களைத் தம் பக்கமாக அணிதிரளச் செய்ய வேண்டுமெனவும் இவர்கள் கருதினர். கியூபாவின் புரட்சிப் பாதையைப் பின்பற்ற விரும்பிய இத்தோழர்கள், இப்புரட்சியின் தன்மையை நன்கு புரிந்து கொள்ளவில்லை. பதினொரு பேர்கொண்ட புரட்சிவாதிகள் குழு ஒன்று துப்பாக்கிகளின் உதவியுடன் ஒரு புரட்சியைத் தொடங்கி, போரிட்டு, வெற்றி பெற்றார்கள் என இவர்கள் கருதுகிறார்கள் போலும். கொடுங்கோலனான பட்டீசாவின் சர்வாதிகாரத்திற்கு எதிராக, எவ்வாறு பொதுமக்கள் அணிதிரட்டப்பட்டார்கள் என்பதை இவர்கள் உணரவில்லை.’’

சோசலிசப் புரட்சி

‘‘நாம் சீனக் கம்யூனிசக் கட்சிக்குச் சார்பாக இருந்த சமயம், இலங்கையில் ஒரு சமுதாயப் புரட்சி எவ்வாறு அமைய வேண்டும் என நாம் கொண்டிருந்த கருத்துத் தவறானதென உணர்ந்து கொண்டோம். சீனாவுக்குச் சார்பாக இருந்தபோது, மக்கள் சனநாயகப் புரட்சியை மேற்கொள்ளப் போராடுவதெனத் தீர்மானித்திருந்தோம். இலங்கையின் சூழ்நிலையைப் பொறுத்தவரை எமக்குத் தேவையானது சோசலிசப் புரட்சியேயன்றி மக்கள் சனநாயகப் புரட்சியல்ல. இலங்கையின் தற்போதைய சமுதாய வளர்ச்சியையும், சர்வதேச முதலாளித்துவத்தின் தன்மையையும் பார்க்குமிடத்து, அந்நிய ஏகாதிபத்தியத்தை முற்றாக முறியடிப்பதானால் அது சோசலிசப் புரட்சியால்தான் முடியும். தேசிய சுதந்திரம், விவசாயப் புரட்சி, சனநாயகம் போன்ற நிறைவுபெறா இலட்சியங்களை நிறைவு பெறச் செய்ய வேண்டுமாயின், அது சோசலிசப் புரட்சியால்தான் முடியும். பாட்டாளி வர்க்கத்தினால்தான் இந்தப் புரட்சிகரமான சாதனையைப் புரிய முடியும்.

ஆகவே, நாம் ஒரு பாட்டாளி வர்க்கப் புரட்சிவாதக் கட்சியைக் கட்டியெழுப்பத் தீர்மானித்தோம். எனினும், மார்க்சிசவாதிகள் அல்லாத ஒரு மார்க்சிசக் கட்சியை உருவாக்க முடியாது. கடந்த முப்பது ஆண்டு காலமாகப் பழைய இடதுசாரி இயக்கம் புரிந்த சாதனைதான் என்ன? இந்தப் பழைய இடதுசாரித் தலைவர்கள் முதலாளித்துவ சித்தாந்தத்திற்குள் சிறைப்பட்டதால், பாட்டாளி வர்க்கத்திற்கு மார்க்சிச தரிசனம் பற்றி அடிப்படையான விளக்கம்கூடக் கொடுக்கத் தவறிவிட்டார்கள். மார்க்சிசக் கருத்துக்களைச் சிங்கள மொழியில் பரப்பக்கூடிய கட்சித் தொண்டர்கள் எவரையும் பழைய இடதுசாரித் தலைவர்கள் உருவாக்கவில்லை. ஒழுங்கற்ற முறையில் ஓரிரண்டு அரசியல் வகுப்புக்களை நடாத்தினார்கள். ஆயினும் செம்மையாக, ஒழுங்கான முறையில் தொழிலாளி வர்க்கத்திற்கு அரசியற் கல்வி புகட்டத் தவறிவிட்டார்கள். தமது சொந்தக் கட்சியணியிற்கூட அரசியல் விழிப்புணர்வை உருவாக்கத் தவறிவிட்டார்கள். ஆகவே, இந்த இடதுசாரித் தலைவர்கள் வலதுசாரிகளுடன் சார்ந்த போது, அங்கு அவர்களை எதிர்த்துப் போராடும் வலிமை பெற்ற மார்க்சிசவாதிகள் இருக்கவில்லை. கட்சி அங்கத்தவர்கள் அனைவரும் கண்மூடித்தனமாகத் தலைவர்களைப் பின்பற்றினார்கள்.’’

ஐந்து வகையான அரசியல் வகுப்புக்கள்

‘‘பழைய இடதுசாரி இயக்கம் இழைத்த தவறுகளைப் படித்தறிந்த நாம், சதாதாரண மக்களுக்கு மார்க்சிச சித்தாந்தத்தைத் தெளிவான முறையிற் புகட்ட விரும்பினோம். மக்கள் இலகுவாகக் கிரகித்துக் கொள்ளும் விதத்தில், சிக்கலில்லாத சாதாரணமான எளிய முறையைத் தழுவி, அரசியல் வகுப்புக்களை நடத்தத் தீர்மானித்தோம். ஐந்து வகுப்புக்களைக் கொண்ட இந்த அரசியற் கல்வியின் சாராம்சத்தை இங்கு தருகிறேன்.

முதலாவது வகுப்பு, பொருளாதார நெருக்கடி என்ற விடயம் பற்றியது. ஒரு சமுதாயத்தின் பொருளாதார அமைப்பிலேயே மற்றைய நிறுவன அமைப்புக்கள் தங்கியிருப்பதால், பொருளாதாரத்தை ஆழமாக அலசிப் பார்க்கும் அவசியத்தை உணர்ந்தோம். எமது தற்போதைய பொருளாதார நிலை, அதன் நெருக்கடி, அதன் மூலகாரணிகள், அதன் வளர்ச்சி, அதன் எதிர்காலம், அதன் தவிர்க்க முடியாத விளைவுகள் ஆகியன பற்றி அலசி ஆராய்ந்தோம். காலனித்துவ, நவீன காலனித்துவ ஆதிக்கங்களுக்கு அடிமைப்பட்டிருக்கும் சமுதாயங்களின் பொருளாதார நெருக்கடியானது, ஒரு அரசியல் நெருடிக்கடியாக உருவாகும் நிலையில் உள்ளது என்றும், இது ஒரு மாபெரும் தேசியக் கொந்தளிப்பை ஏற்படுத்துமென்றும், இந்தக் கொந்தளிப்பைத் தவிர்ப்பதானால் வர்க்கப் போராட்டத்தை முன்னேற்றப் பாதையில் வலுப்படுத்தி, பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தை அமைத்து, சோசலிசக் கைத்தொழில் மயமாக்குதலையும், கூட்டுறவு விவசாயத்தையும் துரிதப்படுத்த வேண்டுமென விளக்கினோம்.

இரண்டாவது வகுப்பு, சுதந்திரம் ஒரு நவீன காலனித்துவ சூழ்ச்சி என்ற தலைப்பைக் கொண்டது. 1948ஆம் ஆண்டு மாசி 4ஆம் திகதி தேசியக் கொடிகள் மாற்றப்பட்டு எமக்குக் கிடைத்த சுதந்திரமானது, முழுமையான தேசிய சுதந்திரமோ அல்லது பொருளாதார சுதந்திரமோ அல்ல என்பதனை இந்த வகுப்பில் எடுத்து விளக்கினோம். ஏகாதிபத்தியத்திற்கு எதிரான விடுதலை இயக்கங்களின் எழுச்சியில் இருந்து தனது முதலீடுகளையும், சொத்துக்களையும் பாதுகாப்பதற்காகப் பிரித்தானிய ஏகாதிபத்தியமானது ஒரு நவீன காலனித்துவ சூழ்ச்சித் திட்டத்தில் எமது நாட்டின் பொருளாதாரத்தைச் சுரண்டி வருகிறது என்பதனை எடுத்து விளக்கினோம். பொருளாதார சுதந்திரமற்ற அரசியல் சுதந்திரமானது போலியானது என்பதனைச் சுட்டிக் காட்டினோம்.

மூன்றாவது வகுப்பு, இந்திய விரிவாதிக்கம் பற்றியது. இந்திய முதலாளித்துவ ஆளும் வர்க்கமானது, தனக்கருகாமையில் உள்ள சிறிய அயல் நாடுகள் மீது எவ்விதம் தனது அரசியல், பொருளாதார ஆதிபத்தியத்தை விரிவடையச் செய்து வருகிறது என்பதைப் பற்றியதே இவ்வகுப்பு. இந்த இந்திய விரிவாக்கத்தினால் எவ்விதம் எமது நாடு பாதிக்கப்பட்டு வருகிறது என்பதனை இவ்வகுப்பில் விவாதித்தோம். மிகவும் பலம் வாய்ந்த இந்திய முதலாளித்துவ வர்க்கம் எவ்விதம் எமது நாட்டைச் சுரண்டி வருகிறது என்றும், இந்திய வம்சாவழித் தோட்டத் தொழிலாளரை நாட்டின் ஏனைய பாட்டாளி வர்க்கத்துடன் இணைய விடாது பிரிக்கும் நோக்கத்துடன் இந்திய முதலாளி வர்க்கம் மேற்கொண்டு வரும் இனவாத அரசியல் பற்றியும் விவாதித்தோம். இந்த முதலாளி வர்க்கம் இந்திய வம்சாவழித் தோட்டத் தொழிலாளரைத் தப்பான வழியில் இட்டுச் செல்வதாகச் சுட்டிக் காட்டிய நாம், இத்தொழிலாளரை முதலாளித்துவ சித்தாந்த வலையிலிருந்து விடுவிக்க வேண்டுமெனத் தீர்மானித்தோம். ஆனால், இந்தச் செயலைப் பூர்த்தி செய்வதற்கான கட்சி வேலையாட்கள் எம்மிடம் இருக்கவில்லை. தேசிய சிறுபான்மை இனங்களைச் சார்ந்த தோழர்கள் மத்தியிலிருந்து கட்சித் தொண்டர்களைக் கட்டியெழுப்ப நாம் மேற்கொண்ட முயற்சிகள் எதுவும் பயன் தரவில்லை.

நான்காவது வகுப்பு, இலங்கையின் இடதுசாரி இயக்கம் பற்றியது. பழைய இடதுசாரி இயக்கத்தின் தவறுகளிலிருந்தும், அதன் தோல்வியிலிருந்தும் நாம் என்ன பாடங்களைப் படித்துக் கொள்ளலாம் என்பது பற்றியதே இந்த வகுப்பு. 1930ஆம் ஆண்டிலிருந்து பழைய இடதுசாரி இயக்கம் மேற்கொண்டு வந்த கொள்கைத் திட்டங்களையும், அரசியல் நடவடிக்கைகளையும் இவ் வகுப்பில் கண்டித்தோம்.

ஐந்தாவது வகுப்பு, மிகவும் முக்கியமானது. இலங்கைப் புரட்சி எந்தப் பாதையில் செல்ல வேண்டும் என்பது பற்றியதே இந்த வகுப்பு. சேகுவேராவின் ‘கெரில்லாப் போர்’ என்ற நூல் வெளியானதையடுத்து, எமது ஆதரவாளர்களிற் சிலர் எமது பொருளாதார நெருக்கடிக்கு விடிவுகாணச் சேகுவேராவின் வழியைப் பின்பற்ற விழைந்தனர். இதேவேளை லின்பியாவோ எழுதிய ‘மக்கள் போரின் வெற்றி நீடூழி வாழ்க’ என்ற நூலும், மாசேதுங்கின் ‘இராணுவ எழுத்துக்கள்’ என்ற நூலும் சிங்களத்தில் வெளியாகின. இந்த எழுத்துக்களில் குறிப்பிடப்பட்ட யுக்திகளைக் கையாளலாம் எனச் சிலர் கருதினர். நாட்டுப் புறங்களிலிருந்து பட்டினங்களைச் சூழ்ந்து கைப்பற்றும் சீனப் புரட்சியின் நீடித்த கெரில்லா யுத்தத்தை மேற்கொள்வதே இலங்கைப் புரட்சிக்கு ஏற்ற பாதையென, சீன சார்பானவர்கள் வாதாடினர். வேறு சிலர் உருசியப் புரட்சியின் பாதையில் செல்ல வேண்டுமெனக் கருதினர். இந்தக் கருத்துக் குழப்பத்திற்குத் தெளிவு காணும் நோக்கத்துடனேயே இந்த ஐந்தாவது வகுப்பு நடத்தப்பட்டது.

ஒரு நாட்டில், ஒரு காலகட்டத்தில், அந்தச் சூழ்நிலைக்கேற்ப மேற்கொள்ளப்பட்ட ஒரு புரட்சியானது இன்னொரு நாட்டில், இன்னொரு காலகட்டத்தில், இன்னொரு சூழ்நிலைக்கு வேறுபட்டதாக இருக்கும் எனச் சுட்டிக் காட்டிய நாம், சோசலிசப் புரட்சிகளானது பிரத்தியேகமான ஒரே பாதையைக் கடைப்பிடிக்கவில்லையென்றும், காலம், இடம், சூழ்நிலைகளுக்கேற்ப ஒவ்வொரு புரட்சியும் தனக்கிசைவான, தனித்துவமான பாதைகளை மேற்கொண்டன என்பதையும் விளக்கினோம். இந்த ரீதியில் சீனப் புரட்சியானது உருசியாவின் புரட்சியிலிருந்து வேறுபட்டதென்றும், இவ்விரு புரட்சிகளோடு ஒத்துப் பார்க்கையில் கியூபாவின் புரட்சி மாறுபட்டதென்றும் எடுத்துக் காட்டினோம்.

இந்த அடிப்படையான ஐந்து வகுப்புக்களுடன் எவரும் மார்க்சிசவாதிகளாக மாறிவிடுவார்கள் என நாம் எதிர்பார்க்கவில்லை. முதலாளித்துவ சித்தாந்தத்தின் ஆதிக்கத்திலிருந்து மக்களைக் காப்பாற்றி, அவர்களை மார்க்சிசப் புரட்சிவாதத்தில் கவருவதற்கு இந்த வகுப்புகள் முக்கிய சாதனமாக அமைந்தன எனலாம்.

1968ஆம் ஆண்டிலிருந்து, நாடு பூராகவும் இந்த வகுப்புகளை நடத்தினோம். அரசாங்கத் தொழிலாளர்கள், விவசாயிகள், இளைஞர்கள் பெரும்பாலானோர் இந்த வகுப்புகளிற் கலந்து கொண்டனர். எமது வகுப்புகளிற் பங்குபற்றிய பல இளைஞர்கள் சர்வகலாசாலைகளில் அனுமதி பெற்றனர். இதன் விளைவாக உருசிய, சீன சார்பாக இருந்த பலர் எமது இயக்கத்தின் ஆதரவாளர்களாக மாறினர். இதனையடுத்துச் சர்வகலாசாலைகளிலும், பாடசாலைகளிலும் எமது வகுப்புகளை ஆரம்பித்தோம்.’’

புரட்சி செய்யும் உரிமை

‘‘நான் ஒரு மார்க்சிசவாதி என்ற ரீதியில், ஒரு அநீதியான ஆட்சிமுறைக்கு எதிராகப் புரட்சி செய்யும் உரிமை மக்களுக்குண்டு என்ற கருத்தைக் கொண்டுள்ளேன். இது மார்க்சிசவாதிகளின் கருத்து மட்டுமல்ல, சரித்திரத்தை எடுத்துக் கொண்டாற் பல்வேறு சித்தாந்தங்களிலும், மதங்களிலும் நம்பிக்கை கொண்ட மக்கள், ஒரு கொடுமையான ஆட்சிக்கெதிராகப் புரட்சி செய்யும் உரிமையில் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்திருக்கிறார்கள். மகாராணியாரின் அரசாங்கத்திற்கு எதிராகப் புரட்சி செய்தோம், புரட்சிக்கு முயற்சி செய்தோம் என்றெல்லாம் எம்மீது குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறது.

மகிமைக்குரிய தலைமை நீதியரசர் அவர்களே! 1649ஆம் ஆண்டில் ஆங்கிலேய மக்கள், ஒலிவர் குரோம்வெல் என்பவன் தலைமையில், இன்றைய மகாராணியாரின் மூதாதையாகிய முதலாம் சாள்சு மன்னனுக்கு எதிராகப் புரட்சி செய்யவில்லையா? அவனைச் சிம்மாசனத்தில் இருந்து அகற்றி, மக்கள் வெற்றி கொள்ளவில்லையா? ஒரு கொடுங்கோலாட்சிக்கு எதிராகக் கிளர்ச்சி செய்வது நீதியானது, தர்மமானது என அன்றைய ஆங்கிலேயே மக்கள் நம்பினார்கள். 1778ஆம் ஆண்டு ஜோர்ச் வாசிங்டன் தலைமையில் அமெரிக்க மக்கள் பிரித்தானியப் பேரரசுக்கு எதிராகப் புரட்சி செய்து வெற்றி கொண்டார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். இவை எதைக் காட்டுகின்றன என்றால், மார்க்சிசம் தோன்றுவதற்கு முன்னரே புரட்சி செய்யும் உரிமை தமக்குண்டு என்பதில் மக்கள் நம்பிக்கை கொண்டிருந்தார்கள் என்பதையே. மகாவம்சம், சூளவம்சம் எனப்படும் எமது நாட்டின் சரித்திரக் குறிப்பு ஏடுகளில் எடுத்துப் பார்த்தாலும், கொடுங்கோலாட்சிக்கு எதிராகப் பல தடவைகள் மக்கள் கிளர்ச்சி செய்தார்கள் என்பதைக் காணலாம். எமது நாட்டு மக்களும் புரட்சி செய்யும் உரிமையை ஏற்றிருந்தார்கள் என்பதையே இது எடுத்துக் காட்டுகிறது. ஆகவே, ஒரு ஒடுக்குமுறை ஆட்சிக்கு எதிராகப் புரட்சி செய்யும் உரிமை மக்களுக்குண்டு என்பதே எனது கருத்தாகும்.’’

ஏப்பிரல் கிளர்ச்சிக்குக் காரணங்கள் யாவை?

‘‘1971ஆம் ஆண்டு நிகழ்ந்த சில முக்கிய சம்பவங்களை உங்களது கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகிறேன். எமது இயக்கத்தின் ஆரம்ப காலத்தில், நகரப்புறத் தொழிலாளி வர்க்கத்தினர் மத்தியில் எமக்கு அதிக ஆதரவிருக்கவில்லை. 1971ஆம் ஆண்டில் கிராமப் புறங்களிலிருந்து பட்டினங்களுக்கும் எமது இயக்கம் விரிவடைந்தது. எமது அரசியற் பிரச்சார இயக்கத்தின் தாக்கம் நகரங்களிலும், நகரப் பாட்டாளி வர்க்கத்தின் சில பிரிவினர் மத்தியிலும் பரவியது. தொழிற்சாலைகளிலும் மற்றும் தொழிலகங்களிலுமுள்ள இளைஞர்கள் எமக்குச் செவிகொடுக்கத் தொடங்கினர். இந்தச் சந்தர்ப்பத்தில்தான், பழைய இடதுசாரிகள் எம்மால் ஏற்படக்கூடிய ஆபத்தை உணரத் தொடங்கினர்; எம்மை எதிர்கொண்டு மடக்கும் திட்டங்களைத் தீட்டினர்.

முதல் முயற்சியாக, எம்மை அமெரிக்க உளவுத்தாபனமாகிய சி.ஐ.ஏயின் ஏஜெண்டுகள் என்று பொய்ப்பழி சுமத்தினர். இந்த முயற்சி பலிக்கவில்லை. அடுத்தபடியாகத் தமது உள் ஊர் இயக்க ஆதரவாளர்களைத் தூண்டி, எமது அங்கத்தவர்களைத் தாக்க முயன்றனர். அதுவும் பயனளிக்காது போகவே, அமைச்சரவையைக் கூட்டி, சனதா விமுக்தி பெரமுனை ஒரு பலம் வாய்ந்த அரசியல் இயக்கமாவதைத் தடை செய்யும் வழிவகைகளை ஆராய்ந்தனர்.

எமது நாடு இன்று மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியிருக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். இந்தப் பொருளாதார நெருக்கடியானது திடீரென வானத்தில் இருந்து தோன்றவில்லை. 1971ஆம் ஆண்டு ஏப்பிரல் 5ஆம் திகதியும், அது இருக்கத்தான் செய்தது. அதற்கு முன்னரும் அது இருக்கத்தான் செய்தது. இன்று மக்கள் மீது சுமத்தப்பட்டிருக்கும் பொருளாதார, சமூகச் சுமைகளை அன்று மக்கள் மீது திணிக்க அரசாங்கம் தயங்கியது. ஏனென்றால், அன்று ஒரு புரட்சிவாத அரசியல் இயக்கம் இருந்தபடியால்தான். இந்தப் புரட்சிவாத இயக்கம், அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக மக்களைக் கிளர்ச்சி செய்யத் தூண்டலாமென அரசாங்கம் அஞ்சியது. ஆகவே, மக்களுக்கெதிரான தீவிர நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முன்னராக, எமது இயக்கத்தை ஒழித்துக் கட்டத் திட்டமிட்டனர்.

1971ஆம் ஆண்டு சனவரிக்குப் பின்னர் நிலைமை உச்ச கட்டத்தை அடைந்தது. முன்னாள் பொலிசுமா அதிபரான திரு.எல்.ஏ.திசநாயாக்கா பாதுகாப்பு வெளிவிவகார அமைச்சின் உப நிரந்தரக் காரியதரிசியாக நியமிக்கப்பட்டார். இதற்கு முன்னரே, இரகசியப் பொலீசார் தமது முழு அதிகாரங்களையும் பிரயோகித்து, எமது இயக்கத்தின் நடவடிக்கைகளை விசாரணை செய்து வந்தனர். எமது இயக்கத்தின் விவகாரங்களைக் கண்காணிக்க, ஒரு விசேட பொலிசுப் பிரிவு ஒன்று நியமிக்கப்பட்டது. நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் எமது இயக்கத்தைச் சார்ந்த தோழர்கள் கைது செய்யப்பட்டனர். எமது இயக்கத்தின் அமைப்பு எல்லாவற்றிலும் உளவுப் படையினரை ஊடுருவச் செய்தனர்.

மார்ச்சு மாதம் 6ஆம் திகதி அமெரிக்கத் தூதராலயம் மீது ஒரு தாக்குதல் சம்பவம் நிகழ்ந்தது. இந்தச் சம்பவத்தைச் சாக்காகக் கொண்டு எமது புரட்சிவாத இயக்கத்தை நசுக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. மார்ச்சு 13ஆம் திகதி நான் கைது செய்யப்பட்டேன். மார்ச்சு 16ஆம் திகதி அவசர காலச்சட்டம் பிறப்பிக்கப்பட்டது. 1971ஆம் ஆண்டு ஏப்பிரல் 5ஆம் திகதிக்கு முன்னதாக 4098 பேர் கைதாகினர்.

1971ஆம் ஆண்டு ஏப்பிரலில் ஒரு ஆயுதப் புரட்சிக்கான, அல்லது பாட்டாளி வர்க்கம் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான புரட்சிகரமான சூழ்நிலையிருக்கவில்லை. இதுவே எனது கருத்து. நெருக்கடியான பொருளாதார, சமூகச் சூழ்நிலையும், புரட்சிகரமான மானசீகச் சூழ்நிலையும் இல்லாத பட்சத்தில் ஒரு ஆயுதக் கிளர்ச்சி எழுவது கடினம்.

ஆயுதப் புரட்சி மூலம் அரசாங்க அதிகாரத்தைக் கைப்பற்றும் சூழ்நிலை, அச்சமயம் பக்குவமாகவில்லையென்பதே எனது கருத்து. எனினும் இச்சூழ்நிலை துரிதமாக வளர்ந்து கொண்டிருந்தது. ஆனால், ஆயுதப் புரட்சியைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலைக்கு மக்கள் தள்ளப்படவில்லை. மக்களின் பரந்த ஆதரவைப் பெற்று, அவர்களை ஆயுதப் புரட்சிப் பாதையில் இட்டுச் செல்லும் சக்தி வாய்ந்த ஒரு புரட்சிகரமான கட்சியும் இருந்திருக்கவில்லை. சனதா விமுக்தி பெரமுனை இந்தப் பாதையில் வளர்ந்து கொண்டிருந்ததே தவிர, பலமும், பக்குவமும் அடையவில்லை. எமது இயக்கத்தை வடக்குக் கிழக்கு மாகாணங்களிலும், மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் மத்தியிலும் ஒரு அரசியல் சக்தியாகத் தாபிக்கத் தவறிவிட்டோம்.

1971ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 5ஆம் திகதி, அரசின் அதிகாரத்தைக் கைப்பற்றச் சனதா விமுக்தி பெரமுனை தீர்மானித்தது என்பதை நான் முற்றாக நிராகரிக்கிறேன். நான் அதனை ஒருபொழுதும் அங்கீகரிக்க மாட்டேன். ஆனால் ஒன்றை மட்டும் நான் மறுக்கவில்லை. அது எனக்குப் பின்புதான் தெரிய வந்தது. அதாவது தாங்க முடியாத ஒடுக்குமுறையை எதிர்கொண்ட எமது இயக்கத் தோழர்கள் சிலர், அந்த ஒடுக்குமுறையை எதிர்த்துப் போராட்டத்தில் குதித்தனர் என்பதுதான். புரட்சிவாத அரசியல் இயக்கங்களை, குறிப்பாக சனதா விமுக்தி பெரமுனையை, இந்நாட்டில் நசுக்க வேண்டும் என்ற ஒரு தேவை இந்நாட்டின் ஆளும் வர்க்கத்திற்கு ஏற்பட்டது. அதன்படி அவர்கள் நடவடிக்கையில் இறங்கினார்கள். ஏப்பிரல் சம்பவங்கள் அதன் விளைவுகளாகும்.

முடிவாக இதைமட்டும் சொல்ல விரும்புகிறேன். முதலாளி வர்க்கமானது ஒரு தற்காலிக வெற்றியை அடைந்துள்ளது என்பதை, நான் ஏற்றுக் கொள்கிறேன். இது பாட்டாளி வர்க்கத்திற்கு ஏற்பட்ட ஒரு தோல்வியாக நான் கருதவில்லை. பாட்டாளி வர்க்கத்திற்கு இது பெரியதொரு பின்வாங்குதலாகும். ஆனால், பின்வாங்குதல் ஒரு தோல்வியாகாது. அது ஒரு கட்டத்தைக் குறிப்பது. இந்தக் காலகட்டத்திற் புத்துயிர் பெறும் பாட்டாளி வர்க்கம், திடமான ஒரு வெற்றியை நோக்கி வீறுநடைபோடும் என்பது திண்ணம். புரட்சிவாத இயக்கங்களின் முன்னேற்றப் பாதையில் பின்வாங்குதல் ஏற்படுவது இயல்பான விடயம். இதே நிலைதான் இன்று எம்மை எதிர்நோக்கியுள்ளது. இந்த நிலையில் நின்று கொண்டுதான், நான் உங்கள் முன்பாகச் சாட்சியம் அளிக்க வந்தேன். எனது தனிப்பட்ட நன்மையைக் கருதி, எனது இலட்சியத்திற்கு மாறாக நான் எதையும் சொல்லவில்லை. நான் இங்கு ஆதரித்துப் பேசுவது என்னையல்ல் மார்க்சிசக் கொள்கைகளையே.

முதலாளித்துவ வர்க்கமானது இந்த ஏப்பிரல் சம்பவங்கள் மூலம் எவ்வித பயனை எதிர்பார்த்தார்களோ எனக்குத் தெரியாது. அதன் இறுதி விளைவு என்னவாக முடியும் என்பதை ஒரு புரட்சிவாதக் கவிஞன் ஒரு கவிதையில் அழகாகச் சொல்கிறான். அந்தக் கவிதையின் அர்த்தம் இதுதான்:

‘புரட்சியின் பூக்கள் பூத்தன. அவையோ
உலர்ந்து மடிந்தன. அவற்றின்
நறுமணமோ என்றும் சாவதில்லை.
புதிய மொட்டுக்கள் மலர்ந்து, பெருகி
அந்த சுகந்தத்தைத்திக் கெங்கும் பரப்பி வரும்.’

முதலாளித்துவமானது தனது தற்காலிக வெற்றியைக் கண்டு களிப்படைவதற்கு எவ்வித காரணமுமில்லை. ஏனெனில், வர்க்கப் போராட்டத்தில், இறுதியில் வெற்றிவாகை சூடுவது பாட்டாளி வர்க்கமேதான்.”

புரட்சியின் தோல்விக்குப் பிரதான காரணங்கள்

தன்னைப் பற்றியும், தனது இலட்சியம் பற்றியும், தனது இயக்கம் பற்றியும், ஏப்பிரல் புரட்சி பற்றியும் றோகன் விஜேவீரா அளித்த வாக்குமூலத்தைப் பார்த்தீர்கள். இக்கூற்றுக்களிலிருந்து இவன் மார்க்சிச-லெனினிசக் கொள்கைத் திட்டத்தைச் சீரியமாகத் தழுவிய ஒரு பாட்டாளி வர்க்கப் புரட்சிவாதியெனக் கருதிவிடக் கூடாது. இவனது வாக்குமூலத்திலேயே பல பொய்கள் ஒளிந்து கிடக்கின்றன. இந்தப் பொய்களையும், புரட்சியின் தோல்விக்கான பிரதான காரணங்களையும் இனி ஆராய்ந்து பார்ப்போம்.

முதலாவதாக நாம் சுட்டிக் காட்ட விரும்புவது என்னவென்றால், றோகன் விஜேவீரா மார்க்சிச-லெனினிசக் கொள்கைத் திட்டத்தைத் தனது அரசியல் இலட்சியமாய் வரித்துக் கொள்ளவில்லை. அதனைப் புரிந்து கொள்ளும் சிந்தனைத் தெளிவும் அவனிடம் இருக்கவில்லை.

ஒரு புரட்சிகரமான கொள்கைத் திட்டமில்லாமல், ஒரு புரட்சிகரமான இயக்கம் உருப்பெறாது என்பது லெனினின் அனுபவக் கூற்று. இந்தப் புரட்சிகரமான கொள்கைத் திட்டமானது, ஒரு சமுதாயத்தின் சரித்திர, பொருளாதார, அரசியல் அம்சங்களை ஆணித்தரமாக ஆராய்ந்து, யதார்த்த சூழ்நிலையைக் கிரகிப்பதாக அமைய வேண்டும். அப்படி வரிந்து கொள்ளப்படும் கொள்கைத் திட்டத்தின் அத்திவாரத்தில் கட்டப்படும் ஒரு இயக்கம், ஒடுக்கப்படும் மக்களின் விருப்புக்களைப் பூர்த்தி செய்யும் புரட்சிகரமான தீர்வுகளைக் கொண்டிருப்பதால், அது பொதுசன இயக்கமாய் விரிந்து வளரும். சோசலிசப் புரட்சிக்கோ, ஆயுதக் கிளர்ச்சிக்கோ ஒரு புரட்சிகரமான கொள்கைத் திட்டம் அவசியம் என்பதை, எந்த மார்க்சிசப் புரட்சிவாதியும் மறுக்க முடியாது.

றோகன் விஜேவீராவோ அல்லது சனதா விமுக்தி பெரமுனையோ அப்படியான புரட்சிகரமான கொள்கைத் திட்டத்தைக் கொண்டிருக்கவில்லை. இனவாதமும், பிற்போக்குவாதமும், பேரினத்தேசியவாதமும் ஒன்றுகலந்த ஒருவிதத் திரிபுவாத சோசலிசத்தின் அடிப்படையில் ஆட்சியைக் கைப்பற்றும் அதீத ஆசையும், அவசரப் புத்தியும், முரட்டுத் துணிச்சலும் சேர்ந்த ஒரு குளறுபடியான திட்டத்தில் உருவாக்கப்பட்டதுதான் சனதா விமுக்தி பெரமுனை. உலகப் புரட்சி வீரர்களான சேகுவேரா, மாசேதுங், கோ-சி-மின் போன்றோரின் சரித்திரப் பாடங்களை சரிவரப் புரிந்து கொள்ளாத குழப்பத்துடன், புரட்சிப் பாதையில் காலடி வைத்து, சறுக்கி விழுந்த மாபெரும் அரசியல் தற்கொலை இது.

தெளிவான கொள்கைத் திட்டம் இல்லாததால், சனதா விமுக்தி பெரமுனைத் தலைமைப்பீடத்தில் ஆரம்பத்திலிருந்தே சித்தாந்தப் பிணக்கு ஏற்பட்டது. சித்தாந்தப் பிணக்கால் தலைமைப்பீடம் மூன்று குழுக்களாகப் பிளவு கண்டது. உருசியப் புரட்சியை வலியுறுத்தி ஒரு குழுவும், மாவோவின் புரட்சி நுட்பங்களைக் கையாள வேண்டுமென இன்னொரு குழுவும், சேகுவேராவின் கெரில்லா யுக்திகள்தான் சிறந்த மார்க்கம் என மற்றொரு குழுவுமாக மூன்று பிரிவினர் தலைமைப்பீடத்திற்குள் தோன்றிச் சர்ச்சைப்பட்டு வந்தார்கள்.

சேகுவேராவின் பாதையைப் பின்பற்ற விரும்பிய குழுவே இயக்கத்தில் பலம் வாய்ந்ததாக உருப்பெற்றது. இப்பிரிவினருக்கு லொக்கு அத்துல, பியதிலகா போன்றோர் தலைமை தாங்கினர். இவர்களது பிரச்சாரத்தால்தான் சனதா விமுக்தி பெரமுனைக்கு சேகுவேரா இயக்கம் என்ற புனைபெயரும் கிட்டியது. றோகன் விஜேவீரா இம் மூன்று குழுவினரையும் சித்தாந்த ரீதியில் இணைக்க முயன்றது தோல்வியில் முடிந்தது. கொள்கையில் குழம்பி நின்ற இந்த சக்திகளை இணைக்கவல்ல, சரியான கொள்கைத் திட்டத்தை வகுக்கும் ஆற்றலும், அனுபவமும், அரசியல் ஞானமும் றோகனிடம் இருக்கவில்லை. இதனால் சனதா விமுக்தி பெரமுனை இறுக்கமான, கட்டுக்கோப்பான இயக்கமாக அமைந்திருக்கவில்லை. தலைமைப்பீட அமைப்பிலிருந்த ஒவ்வொரு குழுவும், நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொண்டது. இயக்க அமைப்பு கட்டுக்குலைந்தது ஒருபுறமிருக்க, அங்கத்தவர் மத்தியில் சித்தாந்த வேறுபாடு சிதறிக் கிடந்தது. இயக்கத்தின் நோக்கம், கொள்கை, புரட்சிப் பாதை எதிலும் தெளிவு இருக்கவில்லை. தலைமைப்பீட அங்கத்தவர்கள் ஒருவருக்கெதிராக ஒருவர் சதியில் ஈடுபட்டனர். கொலைகளும் திட்டமிடப்பட்டன. உதாரணமாக இயக்கத் தலைவர்களில் ஒருவரான சரத் விஜயசேகரா சனதா விமுக்தி பெரமுனை அங்கத்தவன் ஒருவனால் சுட்டுக் கொல்லப்பட்டான். இந்தக் கொலையைத் திட்டமிட்டது யார் என்ற மர்மம் இன்னும் துலக்கப்படவில்லை. றோகன் விஜேவீராவைக் கொல்ல லொக்கு அத்துல திட்டம் தீட்டியிருந்தான் என்பது, ஏப்பிரல் கிளர்ச்சியை அடுத்து நடந்த வழக்கு விசாரணையின் பொழுது அம்பலமாகியது. இப்படித் தலைமைப்பீடத்திற்குள் குத்துவெட்டு.

இவற்றிலிருந்து நாம் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது என்னவென்றால், ஏப்பிரல் கிளர்ச்சியின் தோல்விக்குப் பிரதான காரணங்களில் ஒன்று சனதா விமுக்தி பெரமுனையின் தெளிவற்ற குழப்பகரமான சித்தாந்த விளக்கமாகும். இதனால் தலைமைப்பீடப் பிளவும், கட்சிக் கட்டுப்பாட்டமைப்பிற்குச் சீர்கேடும் உருவாகி, ஈற்றில் மாபெரும் அழிவுக்கு வழிவகுத்தது. தமிழீழப் புரட்சிவாதிகளாகிய எமக்கு இது ஒரு முக்கிய பாடத்தைப் புகட்டுகிறது. அதாவது ஆயுதப் புரட்சியின் நோக்குடன் ஒரு புரட்சிகரமான தேசிய விடுதலை இயக்கம் ஒன்றையமைத்து, அதனை வெற்றிகரமாகச் செயல்படுத்துவதாயின், ஒரு தெளிவான அரசியல் சித்தாந்தத்தில் வகுக்கப்பட்ட, புரட்சிகரமான கொள்கைத் திட்டம் அவசியம். இயக்க வளர்ச்சிக்கும், கட்டுப்பாட்டிற்கும், ஒருமைப்பாட்டிற்கும், பிரதானமாகப் பொதுசன ஆதரவைத் திரட்டுவதற்கும் இது இன்றியமையாதது. ஆகவே, அரசியற் சித்தாந்த விளக்கமும், புரட்சித் திட்டமும் இல்லாமல், ஆயுதப் புரட்சியில் இறங்க விழைவது மிகவும் ஆபத்தானது. சனதா விமுக்தி பெரமுனையின் சீர்கேடான புரட்சித் திட்டத்திலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டிய முக்கிய பாடம் இது.

அரசியல் சூழ்நிலையை அசட்டை செய்தார்கள்

ஆட்சியாளரின் சதியும், ஆயுதப் படைகளின் ஒடுக்குமுறையின் கொடூரமும் காரணமாகவே ச.வி.பெ. ஆயுதக் கிளர்ச்சியில் இறங்க நிர்ப்பந்திக்கப்பட்டது என்கிறான் றோகன். இந்தக் கூற்று உண்மையானதல்ல. ஏப்பிரலில் ஒரு கிளர்ச்சி நடத்த வேண்டுமென்று பல மாதங்களுக்கு முன்னரே திட்டமிடப்பட்டது. இரகசியப் பொலிசார் இயக்கத் தலைமைப்பீடம் வரை ஊடுருவி, ஏப்பிரல் கிளர்ச்சிக்கான திட்டங்கள் பற்றி விபரமாக அறிந்து கொண்டார்கள். ஒளித்து வைக்கப்பட்ட வெடிகுண்டுகள், துப்பாக்கிகள் பொலிசார் வசம் இலகுவாகச் சிக்கியதும், ஏப்பிரலுக்கு முன்னரே நாலாயிரம் பேர் வரை கைதானதும் இதற்குச் சான்று பகர்கின்றன. ஏப்பிரல் திட்டம் அம்பலமாகியதால்தான் அரசாங்கம் ச.வி.பெ. மீது மிகப் பயங்கரமான ஒடுக்குமுறையில் இறங்கியது. ஏப்பிரலில் புரட்சிக்கு ஆயத்தங்கள் நடைபெறுவதாக அரசாங்கம் அறிந்திருந்தாலும், ஏப்பிரலில் எந்தத் திகதியில், எவ்வித புரட்சி வெடிக்குமென அரசாங்கத்திற்குத் திட்டவட்டமான தகவல் கிடைக்கவில்லை. அது மட்டுமன்றி, நாட்டுப் புறங்களில் ச.வி.பெ.யின் பலத்தை அரசாங்கம் தப்பாக எடை போட்டிருந்தது. தலைவர்களையும், மற்றும் முக்கிய அங்கத்தவர்களையும் கைது செய்தால் இயக்கத்தை, நசுக்கிப் புரட்சியையும் ஒடுக்கி விடலாமென ஆட்சியாளர் எண்ணினர். ஆனால் தென்னிலங்கையிற், குறிப்பாகத் தென் மாகாணம், மேற்கு மாகாணம், மத்திய, வடமத்திய மாகாணங்களில் வேலையற்ற இளைஞர்கள் மத்தியிலும், நிலமற்ற ஏழை விவசாயிகள் மத்தியிலும் ச.வி.பெ. வேரூன்றிப் பரவலாக வளர்ந்திருந்தது. ஏப்பிரல் 5ஆம் திகதி, திடீரெனப் பல பொலிசு நிலையங்கள் தாக்கப்பட்ட பொழுது, ஆட்சியாளர் பதட்டப்பட்டனர்; செய்வதறியாது தடுமாறினர். இது அரசாங்கத்தின் தப்பான மதிப்பீட்டைக் காட்டுகிறது.

1971ஆம் ஆண்டு ஏப்பிரலில் ச.வி.பெ. ஆயுதக் கிளர்ச்சிக்குத் திட்டம் வகுத்துள்ளதாயின், ஒரு பொதுசனப் புரட்சிக்கு இக்காலகட்டம் உகந்ததா என நாம் பார்க்க வேண்டும். அப்படிப் பார்க்குமிடத்து சரித்திரக் காலகட்டம், மக்கள் மனோநிலை, அரசியற் சூழ்நிலை போன்றவற்றை முற்றாக அசட்டை செய்து, அவசரத்தில் ஆக்கப்பட்ட திட்டமென்றே இதைச் சொல்ல வேண்டும்.

1970ஆம் ஆண்டு மே 27ஆம் தேதி நடந்த பொதுத் தேர்தலில், சிறீலங்கா சுதந்திரக் கட்சி, லங்கா சமசமாசக் கட்சி, கம்யூனிசக் கட்சி என்பன ஒன்று சேர்ந்த ஐக்கிய முன்னணி பொது மக்களின் அமோக ஆதரவைப் பெற்று ஆட்சிபீடம் ஏறியது (151 தொகுதிகளில் 114 தொகுதிகள் ஐக்கிய முன்னணிக்குக் கிட்டியது குறிப்பிடத்தக்கது). சோசலிச அரசாங்கம், மக்கள் அரசாங்கம் பதவிக்கு வந்துவிட்டது, ஒடுக்கப்பட்ட வர்க்கங்களுக்கு சுபீட்சம் கிட்டப் போகிறது என்றெல்லாம் மக்களிடையே அலாதியான நம்பிக்கை குடிகொண்டிருந்த காலகட்டம் இது. நாட்டின் சமூக, பொருளாதார நிலை சீர்கெட்டு இருந்த பொழுதும், பதவிக்கு வந்துள்ள இடதுசாரி அரசாங்கம் எப்படியோ ஒரு விடிவைக் கொண்டு வரப் போகிறது என மக்களிடையே ஆர்வம் தோன்றியிருந்த அரசியல் சூழ்நிலை இது. இப்படியான அரசியல் சூழ்நிலையில், பொதுமக்களின் நம்பிக்கையும், ஆதரவும் புதிய அரசாங்கத்திடம் சார்ந்திருந்த தவறுவாயில், ஒரு ஆயுதக் கிளர்ச்சிக்குத் திட்டம் இடுவது அரசியல் அசட்டுத்தனமாகும். பொதுமக்கள் ஆதரவின்றி எந்தவொரு கிளர்ச்சியும் வெற்றி பெறாதென்பது, புரட்சி அரசியல் வரலாற்றிலிருந்து புரிந்து கொள்ள வேண்டிய பாடமாகும். பொதுசன ஆதரவையும், அரசியல் சூழ்நிலையையும் அசட்டை செய்தது கிளர்ச்சியின் தோல்விக்கான முக்கிய காரணங்களில் ஒன்று.

இந்திய விரிவாக்கம் என்ற இனவாதப் பிரச்சாரம்

ச.வி.பெ. நடாத்தி வந்த வகுப்புகளில், மூன்றாவது வகுப்பு இந்திய விரிவாக்கம் பற்றியது என்பதனை றோகனின் அறிக்கையிலிருந்து பார்த்தோம். இந்த வகுப்பு, றோகனின் கூற்றுக்கு முற்றிலும் மாறாக, மிகவும் துவேசமான இனவாதப் பிரச்சாரமாக அமைந்தது. தென் இந்தியத் தமிழ் வர்த்தகர்கள் இலங்கையைச் சுரண்டி வருவதாகக் கூறியது ஒருபுறமிருக்க, தமிழ்த் தோட்டப் பாட்டாளி வர்க்கத்தின் தோளில் நாட்டின் பொருளாதாரமே தங்கியிருப்பதாகவும், அதை மாற்றியமைக்க வேண்டுமென்றும் பிரச்சாரம் செய்யப்பட்டது. பர்மிய அரசாங்கம் எவ்விதம் இந்திய மக்களை நாட்டை விட்டு விரட்டிக் கலைத்ததோ, அதேபோலவே இலங்கையிலிருந்தும் தமிழர்கள் விரட்டப்பட வேண்டுமென ச.வி.பெ. தலைவர் ஒருவர் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசியது இங்கு குறிப்பிடத்தக்கது. இன்னொரு விதத்திற் சொல்லப் போனால், ‘இந்திய விரிவாக்கம்’ என்ற பதம், ‘தமிழ் விரிவாக்க’மாகத் திரிக்கப்பட்டு, தமிழ் பேசும் மக்களுக்கு எதிரான இனத்துவேசப் பிரச்சாரமாக மாற்றப்பட்டது. ஒரு விதத்தில் இந்த இனவாத அரசியலே, ச.வி.பெ.க்கு இனவெறிபிடித்த இளைஞர் மத்தியில் செல்வாக்கைத் தேடிக் கொடுத்தது எனலாம். இந்த இனவாதத் துவேசம் காரணமாகவே, ச.வி.பெ. தமிழ் பேசும் இனத்தைத் தனது புரட்சித் திட்டத்தில் இருந்து ஒதுக்கி வைத்தது.

இலங்கையின் அதிபலம் வாய்ந்ததும், பாட்டாளி வர்க்கப் புரட்சிக்கு முதுகெலும்பானதுமான தோட்டத் தொழிலாளி வர்க்கத்தின் ஆதரவைத் தேடாமல், தமிழீழத் தமிழ் பேசும் மக்களை முற்றாக ஒதுக்கிவிட்டு, அரசியல் புரட்சித் திட்டம் வகுத்தது, ச.வி.பெ.யின் இனவாதத்தின் இறுமாப்பை அம்பலப்படுத்துவதாக உள்ளது. தமிழ் பேசும் இனத்தை ஒதுக்கி வைத்து, எந்தவொரு அரசியல் சக்தியாவது ஒரு தேசியப் புரட்சியை நடத்த முடியாதென்பது ச.வி.பெ.யின் படுதோல்வியிலிருந்து சிங்களப் புரட்சிவாதிகள் கற்றுக் கொள்ள வேண்டிய பாடமாகும். இன்றைய ச.வி.பெ. இந்தப் பாடத்தைப் பட்டுணர்ந்து கொண்டதால்தான், இன்று வட, கிழக்கிலும், மலையகத்திலும் தமிழர்களின் ஆதரவுக்கு வலைவீசித் திரிகிறது. எமது புரட்சிவாத இளைஞர்கள், இந்த அரசியலில் சிக்கி விடக்கூடாது. தமிழ் பேசும் மக்களின் சுயநிர்ணய உரிமையை ஆதரிப்பதாக இவர்கள் சொல்லிக் கொண்டாலும், தனிநாட்டுக் கோரிக்கையை எதிர்க்கிறார்கள் என்பதையும், இது மார்க்சிச-லெனினிச சித்தாந்தத்திற்கு விரோதமானது என்பதையும் நாம் ஏற்கனவே சுட்டிக் காட்டினோம். இவர்களது அரசியல் சந்தர்ப்பவாதத்திற்கும், பேரினத் தேசியவாதத்திற்கும் எமது இளைஞர்கள் வசப்படக் கூடாது.

புரட்சிவாதம் பேசும் எந்தவொரு சிங்கள அரசியல் இயக்கத்தில் சேர்ந்தாலும், எமக்கு விடுதலை கிட்டப் போவதில்லை. புரட்சிகரமான ஒரு விடுதலை இயக்கத்தை நாம் கட்டியெழுப்பி, அந்த இயக்கத்திற்கும், அதன் புரட்சிகரமான கொள்கைத் திட்டத்திற்கும், சிங்களப் புரட்சி இயக்கங்களின் ஆதரவைப் பெற்றுக் கொள்வதே எமது நோக்கமாக இருக்க வேண்டும். எமது தேசிய விடுதலையை நாமே போராடிப் பெற்றுக் கொள்ள வேண்டும். மற்றவர்கள் பெற்றுத் தருவார்கள் என எதிர்பார்ப்பது அரசியல் மூடத்தனமாகும். எமது பிரச்சினை இன்னும் மொழிப் பிரச்சினை என்பதே, பல சிங்கள மார்க்சிச அரசியல் இயக்கங்களின் கருத்தாகும். எமது பிரச்சினையானது சமூக, பொருளாதார, அரசியல் வடிவங்களைக் கொண்ட ஒரு தேசிய இனப் பிரச்சினையென்பதை, இவர்கள் இன்னும் உணர்ந்து கொள்ளவில்லை போலும்.

போர் நுணுக்கங்களிற் பயிற்சி பெறவில்லை

ச.வி.பெ.யின் ஏப்பிரல் கிளர்ச்சி நடவடிக்கைகளை ஊன்றிக் கவனித்தால், எந்தவிதமான இராணுவப் போர் நுணுக்கங்களிலும் பயிற்சியில்லாத, முட்டாள்தனமான ஒரு தாக்குதலாகவே அது அமைந்ததெனச் சொல்ல வேண்டும். தாமாகத் தயார் செய்த கைக்குண்டுகளுடனும், களவாடிய சில துப்பாக்கிகளுடனும் பொலிசு நிலையங்களைத் தாக்கி, அங்கு கைப்பற்றக்கூடிய ஆயுதங்களை ஆதாரமாகக் கொண்டு, நாட்டுப் புறங்களைத் தமது ஆதிக்கத்தில் வைத்திருப்பதே இவ்வியக்கத்தினரின் நோக்கமாக இருந்தது. ஆயுதப் படைகளின் எதிர்த் தாக்குதலைச் சமாளிக்கும் திட்டமோ, அல்லது நீண்டகால நாட்டுப்புறக் கெரில்லா யுத்தத்திற்கான திட்டங்களோ வரிக்கப்படவில்லை. தலைநகரமும், ஆயுதப் படைகளின் தளங்கள் மற்றும் கேந்திர நிலையங்களும் தாக்கப்படுவதற்கான திட்டங்கள் வகுக்கப்படவில்லை.

ஏப்பிரல் 5ஆம் திகதியிலிருந்து 10ஆம் திகதிக்குள், மொத்தம் 93 பொலிசு நிலையங்கள் கிளர்ச்சிக்கார இளைஞர்கள் வசம் வீழ்ந்தன. கிளர்ச்சி வெடித்து ஒரு வாரத்திற்குள், கேகாலை, மாத்தறை, குருநாகல், அனுராதபுரம், மாத்தளை, பொலனறுவை, காலி, அம்பாந்தோட்டை, அம்பலாங்கொடை, கட்டுநாயக்கா போன்ற பத்து நிருவாக மாவட்டங்கள் கிளர்ச்சிக்கார இளைஞர்களின் தாக்குதலுக்கு இலக்காகின. தென்னிலங்கையில் குறிப்பிடத்தக்க நாட்டுப்புறப் பகுதி இவர்களின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது.

ஆரம்பத்திற் பதட்டமடைந்த போதும், தலைநகரும், இராணுவத் தளங்களும் மற்றும் கேந்திர நிலையங்களும் தாக்கப்படாததால், ஆயுதப் படைகளைப் பலப்படுத்தி, எதிர்த் தாக்குதல்களை நடத்திக் கிளர்ச்சியை முற்றாக முறியடிக்க அரசாங்கத்திற்குப் போதிய அவகாசம் கிடைத்தது. ஊரடங்குச் சட்டத்தை மாறி மாறி அமுலாக்கி, அவசரகாலச் சட்டத்தின் கீழ் ஆயுதப் படைகளுக்கு அளவுக்கு மீறிய அதிகாரங்கள் வழங்கி, வெளிநாட்டாயுத உதவிகள் பெற்று, ஆட்சியாளர்கள் தம்மைச் சரிவரத் தயார் செய்து கொண்டனர். பல வகையான ஆயுத உதவிகள் பெற்றுப் பலமடைந்த சிங்கள இராணுவ இயந்திரம், எதிர்த் தாக்குதலில் மும்முரமாக இறங்கிய போது கிளர்ச்சிக்காரர்கள் சிதறுண்டு பின்வாங்கினர். டாங்கிகள், பீரங்கிகள், இயந்திரத் துப்பாக்கிகள் மூலம் நடாத்தப்பட்ட தாக்குதல்களை எதிர்கொண்டு சமாளிக்கும் போர்த்திறனும், ஆயுத பலமும் இளைஞர்களிடம் இருக்கவில்லை. பிரதான வீதிகள், பாலங்களைத் தடுத்துப் போக்குவரத்தைத் துண்டிக்க முயன்றவர்கள் மீது, விமான ஹெலிகாப்டர் தாக்குதல்கள் நிகழ்ந்த போது, நூற்றுக்கணக்கானோர் மாண்டனர். சரணடைந்த இளைஞர்களை, இராணுவத்தினர் இரக்கமின்றிச் சுட்டுக் கொன்றனர். இலங்கைச் சரித்திரத்திலேயே நடைபெறாத மிருக்கத்தனமான படுகொலைகளைச் சிங்கள இராணுவம் புரிந்தது. நவீன இராணுவத்தை எதிர்கொள்ள முடியாது பின்வாங்கி ஓடியவர்களும், சரணடைந்தவர்களும், சந்தேகத்தில் கைதானவர்களும் இராணுவத்தின் பயங்கரவாதத்திற்குப் பலியானார்கள். சுடப்பட்டவர்கள் காட்டுப் புறங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டு எரிக்கப்பட்டார்கள்; புதைக்கப்பட்டார்கள். சுடப்பட்ட பிணங்கள் ஆறுகளில் வீசப்பட்டன. பௌத்தர்களின் புனித நதியான களனி கங்கையில் மட்டும் நூற்றுக்கணக்கான பிணங்கள் மிதந்து வந்து, கொழும்பு நகருக்கு அருகாமையில் உள்ள முகத்துவாரத் துறையிற் குவிந்தன.

ஒரு சில வாரங்களில் ச.வி.பெ.யின் கிளர்ச்சி முற்றாக நசுக்கப்பட்டது. சிங்கள ஆயுதப் படைகளின் மிலேச்சத்தனத்திற்கும், பயங்கரவாதத்திற்கும் பத்தாயிரம் இளைஞர்கள் பலியாகினர். இந்தப் பயங்கரமான சரித்திர நிகழ்ச்சியிலிருந்து நாம் ஒன்றை மட்டும் முக்கியமாகப் படித்துக் கொள்ள வேண்டும். அதாவது, சிங்கள இராணுவத்தின் மனிதாபிமானமற்ற மிருகத்தனத்தையே. இராணுவ அறநெறிக் கட்டுப்பாடற்ற, இந்த இதயமற்ற இராணுவம், தனது இனத்தைச் சேர்ந்த இளைஞர்களையே ஈவிரக்கமின்றிக் கொன்று குவித்து வெறியாட்டம் ஆடியுள்ளது. அப்படியான இந்த ஆயுதப் படை, தமிழீழ விடுதலைப் படை மீது ஒரு ஆயுதப் போரில் எவ்விதம் நடந்து கொள்ளும் என்பதை நாம் ஊகித்துக் கொள்ளலாம்.

அந்நிய நாடுகளின் ஆதரவு

ச.வி.பெ.யின் கிளர்ச்சி மிகப் பயங்கரமான முறையில் நசுக்கப்பட்ட பொழுது, எந்தவொரு வெளிநாட்டு அரசாங்கமாவது ச.வி.பெ.க்கு ஆதரவோ, அனுதாபமோ தெரிவிக்கவில்லை. தாம் மார்க்சிச-லெனினிச கொள்கைத் திட்டத்திற் செயல்பட்டு வந்த இயக்கத்தினர் என்று சொல்லிக் கொண்ட போதும், மார்க்சிசத்தைத் தழுவும் எந்தவொரு சோசலிச நாடாவது உதவிக்கு முன்வரவில்லை. அதற்குப் பதிலாகச் சோசலிச நாடுகளும், முதலாளித்துவ நாடுகளும் கூட்டாகச் சேர்ந்து, கூட்டணி அரசாங்கத்திற்கு ஆயுத உதவிகளை அள்ளி வழங்கி, ச.வி.பெ.யின் அழிவுக்குக் காரணமாக இருந்தன.

றோகன் விஜேவீராவினதும், மற்றும் இயக்கத் தலைவர்களினதும் கொள்கைக் குழப்பத்தினால் வந்த விளைவு இது. தொடக்கத்தில் உருசியா சார்பாக இருந்து, பின் சீனா சார்பாகத் திரும்பி, அதன் பின் கியூபாவை வழிபட்டு, இறுதியில் உருப்படியான நிலை எதுவுமின்றிக் குழம்பி நின்றதால், சோசலிச அரசாங்கங்கள் ச.வி.பெ.யைச் சந்தேகக் கண்கொண்டு நோக்கின. ஆயுத ரீதியாகவே, சித்தாந்த ரீதியாகவோ ச.வி.பெ. சோசலிச நாடுகளின் ஆதரவை நாடவில்லை. அப்படித்தான் அணுகியிருந்தாலும், ஆயுத உதவியோ அல்லது தார்மீக ஆதரவோ கிடைத்திருக்கும் என்பது சந்தேகமானதுதான். ஏனென்றால் ஆட்சியிலிருந்த அரசாங்கத்தின் வெளிநாட்டுக் கொள்கை அப்படியானது. கூட்டுச் சேராத நடுநிலைமைக் கொள்கையைக் கடைப்பிடிப்பதாகக் கூறிச் சோசலிசப் போர்வையைப் போர்த்திக் கொண்ட போதும், சுதந்திரக் கட்சித் தலைமைப்பீடமானது பூர்சுவா அபிலாசைகளைக் கொண்டதென்பது உலக நாடுகளுக்குத் தெரியாததல்ல. இதனால் மேற்கத்தைய முதலாளித்துவ அரசுகள், கூட்டணி அரசாங்கத்திற்கு ஆதரவாக இருந்தன. உருசியா சார்பு கம்யூனிஸ்ட் கட்சி அரசாங்கத்துடன் ஒட்டிக் கொண்டு இருந்ததனால், உருசியாவினதும், மேற்கு ஐரோப்பிய நாடுகளினதும் ஆதரவு இவ் அரசாங்கத்திற்கு சார்பானதாக இருந்தது. சீனாவைப் பொறுத்தவரை, முன்னாள் பிரதமர் திரு.சூ.என்.லாய்க்கும், பண்டா அம்மையாருக்கும் நெருக்கமான நட்புறவு இருந்து வந்தது என்பதனை, கிளர்ச்சியை அடுத்துச் சீனப் பிரதமர் எழுதிய தனிப்பட்ட அனுதாபக் கடிதம் சுட்டிக் காட்டுகிறது. இஸ்ரவேலின் ஆக்கிரமிப்பை அரசாங்கம் கண்டித்து வந்ததால், அரபு நாடுகளும் அம்மையார் பக்கமாக இருந்தன. ஆகவே ச.வி.பெ. இளைஞர்கள் கிளர்ச்சியில் குதித்த சமயம், அம்மையார் வெளிநாட்டு உதவிக்குக் குரல் கொடுத்ததும், எல்லாத் திசைகளிலிருந்தும் உதவி வந்து குவிந்ததில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

முதலாவதாக, பிரித்தானிய ஏகாதிபத்தியம் உதவிக்கு முன்வந்தது. சிங்கப்பூர் தளத்திலிருந்து பெருந்தொகையில் ஆயுதங்களையும், அத்துடன் இராணுவ ஹெலிக்காப்டர்களையும் உதவியாக வழங்கியது. இதனையடுத்து அமெரிக்காவும் ஆயுத உதவி அளித்தது. இந்தியாவும், பாக்கிஸ்தானும் ஆயுத உதவி மட்டுமன்றி, ஆயுதப் படைகளையும் கொடுத்துதவ முன்வந்தன. இந்தியா உடனடியாக ஒரு பட்டாளத்தை அனுப்பி வைத்ததுடன், நான்கு இந்திய யுத்தக் கப்பல்களையும் அனுப்பிக் கொழும்புத் துறைமுகத்தை ரோந்துக் காவல் செய்தது.

முதலாளித்துவ நாடுகளுக்குப் போட்டியாகச் சோவியத் யூனியனும் உதவிக்கு முன்வந்தது; எகிப்தில் குவித்து வைத்திருந்த ஆயுத தளவாடங்களில், ஒன்பது தொன் எடையுள்ள நவீன ஆயுதங்களைச் சோவியத் விமானம்மூலம் அனுப்பி வைத்தது; இதனையடுத்து ஆறு மிக் விமானங்களையும், இருபது பீரங்கி வாகனங்களையும் உதவியாகக் கொடுத்தது. யூகோஸ்லேவியாவும் பெருந்தொகையான மலைப் பீரங்கிகளைக் கொடுத்துதவியது. கம்யூனிஸ்ட் சீனாவும், தனது பங்கைச் சரிவரச் செய்யாமல் விடவில்லை. ஆயுதங்களுக்குப் பதிலாகச் சீன அரசாங்கம், அவசரகால நிதி உதவியாகப் பதினைந்து கோடி ரூபாயை வட்டியில்லாக் கடனாக வழங்கியது.

ச.வி.பெ.யின் ஆயுதக் கிளர்ச்சிக்குக் கம்யூனிஸ்ட் சீனா மறைமுகமாக உதவியதாகவும், கொழும்பிலுள்ள வடகொரியத் தூதராலயம் மூலம் ஆயுதங்கள் கடத்தப்பட்டதாகவும் பத்திரிகைகளில் செய்திகள் வெளிவந்தது இங்கு குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து வடகொரியத் தூதராலயம் மூடப்பட்டதும், உள் ஊர் சீனக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதும் சகலரும் அறிந்ததே. ஆனால், இந்த இளைஞர் கிளர்ச்சியில் கம்யூனிச சீனாவோ அல்லது வடகொரியாவோ எவ்வித பங்கும் கொள்ளவில்லை என்பது பின்னர் தெள்ளத் தெளிவாகியது. உண்மையில் நடந்தது என்னவென்றால், உள் ஊர் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியில் அங்கம் வகித்தவர்களாக இருந்த பல இளைஞர்கள் ச.வி.பெ.யில் சேர்ந்து, மாவோவின் போர் நுணுக்கங்களை இயக்கம் கடைப்பிடிக்க வேண்டுமென வலியுறுத்தி வந்தனர். இதனைப் புரிந்து கொள்ளாத இரகசியப் பொலிசார், கம்யூனிச சீனாவும் இந்தக் கிளர்ச்சிக்கு ஆதரவளித்ததென எண்ணினர். கிளர்ச்சிக்கு முன்னராக ச.வி.பெ. தலைவர்கள் சிலர் வடகொரிய தூதராலயத்திற்கு அடிக்கடி விசயம் செய்த சம்பவம் காரணமாகவே வடகொரியத் தூதராலயம் மீது சந்தேகம் எழுந்தது. ஆனால் வடகொரியா எவ்விதத்திலும் கிளர்ச்சிக்குத் தூண்டுதலோ அல்லது மறைமுகமாக ஆயுத உதவியோ அளிக்கவில்லை.

கம்யூனிசச் சீன அரசாங்கம், பண்டா அம்மையாருடன் நீண்ட காலமாக நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தது. உள் ஊர் பீக்கிங் கம்யூனிசக் கட்சித் தலைவர்கள் சந்தேகத்தின் பேரில் கைதாகிச் சீனா மீது சந்தேகம் எழுந்ததும், சீன அரசாங்கத்திற்கு இது சங்கடமான நிலையை உண்டு பண்ணியது. இந்தச் சந்தேகத்தைப் போக்கவும், தனது நட்புறவை நிலைநாட்டிக் கொள்ளவும் விரும்பிய சீனா, பதினைந்து கோடி ரூபாயை வட்டியில்லாக் கடனாக வழங்கியது. அதுமட்டுமன்றி சீனப் பிரதமர் திரு.சூ.என்.லாய், திருமதி பண்டாரநாயக்காவுக்குத் தனிப்பட்ட கடிதமொன்று அனுப்பி, கிளர்ச்சியை அரசாங்கம் முறியடித்ததைப் பாராடியுள்ளார். சீனப் பிரதமர் அனுப்பிய செய்தியில், ச.வி.பெ.யைப் பிற்போக்குவாதிகள் என்றும், தீவிர இடதுசாரிக் கும்பலென்றும் கண்டித்துள்ளார். 1971ஆம் ஆண்டு ஏப்பிரல் 26ஆம் திகதி, பண்டா அம்மையாருக்குச் சீனப் பிரதமர் எழுதிய கடிதத்தை அப்படியே ஆங்கிலத்தில் இங்கு தருகிறோம்.

CHOU EN-LAI’S MESSAGE TO SRIMAVO BANDARANIKE

‘‘I am grateful to Your Excellency and the Ceylon Government for your trust in the Chinese Government and your friendly sentiments towards the Chinese people. The friendship between China and Ceylon is in the fundamental interests of the two peoples and can stand tests. The Chinese Government and people highly treasure the friendship between our two countries and no one with ulterior motives will ever succeed in trying to sow discord and sabotage our friendly relations.

Following Chairman Mao Tse-tung’s teaching, the Chinese people all along opposed ultra ‘left’ and ‘right’ opportunism in their protracted revolutionary struggles. We are glad to see that thanks to the efforts of your Excellency and the Ceylon Government, the chaotic situation created by a handful of persons who style themselves ‘Guevarists’ and into whose ranks foreign spies have sneaked has been brought under control. We believe that as a result of your Excellency’s leadership and the co-operation and support of the Ceylonese people these acts of rebellion plotted by reactionaries at home and abroad for the purpose of undermining the interests of the Ceylonese people are bound to fail.

We fully agree to the correct position of defending state sovereignty and guarding against foreign interference as referred to by Your Excellency. The Chinese government and people admire this and firmly support Ceylon in her just struggle towards this end. As Your Excellency is deeply aware the Chinese government has consistently abided by the Five Principles of Co-existence, has never interfered in the internal affairs of other countries, and is also firmly opposed to any country interfering in other countries’ internal affairs, and particularly to foreign reactionaries taking advantage of the opportunity to carry out armed intervention. I would like once again to reaffirm this unshakable stand of the Chinese Government.

In the interests of the friendship between China and Ceylon and in consideration of the needs of the Ceylon Government, the Chinese Government agrees to provide it with a long-term interest free loan of 150 million rupees in convertible foreign exchange. We would like to hear any views which Your Excellency might have on this matter. We are prepared to deliver a portion of the loan in May and sign a document on it. As for other material assistance, please let us know if it is needed.’’

சிறீமாவோ பண்டாரநாயக்காவுக்கு திரு.சூ.என்.லாய் அனுப்பிய கடிதத்தின் தமிழாக்கம்

‘‘தாங்கள் சீன அரசாங்கத்தின்பால் நம்பிக்கையும், சீன மக்களின் மேல் தோழமை உணர்வும் கொண்டிருக்கிறீர்கள். அதற்காக மேன்மை மிகு தங்களுக்கும், இலங்கை அரசாங்கத்துக்கும் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். சீனாவுக்கும், இலங்கைக்குமிடையிலுள்ள நட்புறவு இரு நாட்டு மக்களினதும் அடிப்படை நலன்களுக்கு உகந்தது; சோதனைகளைத் தாங்கக் கூடியது. எங்கள் இரு நாடுகளுக்குமிடையிலுள்ள நட்புறவை, சீன அரசாங்கமும், மக்களும் உயர்வாக மதிக்கிறார்கள். தீய உள்நோக்கமுடைய எவரும், இந்த நட்புறவில் கருத்து வேறுபாட்டை விதைத்து, இதைச் சிதைப்பதற்கு எடுக்கும் எந்தவொரு முயற்சியும் ஒருபோதும் வெற்றியளிக்காது.

சீன மக்கள் தங்கள் நீடிக்கப்பட்ட புரட்சிகரப் போராட்டங்களில், தலைவர் மா-சே-துங்கின் போதனைகளைப் பின்பற்றி, எப்பொழுதுமே அதிதீவிர ‘இடதுசாரி’, ‘வலதுசாரி’ சந்தர்ப்பவாதத்தை எதிர்த்து வந்திருக்கிறார்கள். வெளிநாட்டு ஒற்றர்களால் ஊடுருவப்பட்ட, தங்களைத் தாங்களே ‘சேகுவேரிஸ்டுகள்’ என்று அழைத்துக் கொள்ளும் ஒரு சிறு கூட்டத்தால் ஏற்பட்டிருந்த குழப்பகரமான நிலைமை, மேன்மை மிகு தாங்கள் இலங்கை அரசாங்கத்துடன் சேர்ந்த எடுத்துக் கொண்ட முயற்சிகளால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது என்பதை அறிவதில் மகிழ்ச்சி அடைகிறோம். மேன்மை மிகு தங்களது தலைமையினாலும், இலங்கை மக்களின் ஒத்துழைப்பாலும், ஆதரவாலும் இந்தக் கிளர்ச்சி நடவடிக்கைகள் தோற்றே தீரும் என்பதில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம். இலங்கை மக்களின் நலன்களை நயவஞ்சகமாகக் கெடுக்கும் நோக்குடனேயே, உள்நாட்டிலும், வெளிநாட்டிலுமுள்ள பிற்போக்குவாதிகளால் இந்தச் சதி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

மேன்மைமிகு தாங்கள் நாட்டின் இறைமையைப் பாதுகாப்பதிலும், வெளியார் தலையீட்டை எதிர்த்து நிற்பதிலும் கொண்டுள்ள சரியான நிலையை நாம் முழுமையாக ஏற்கிறோம். இந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக இலங்கை நடத்தும் நீதியான போராட்டத்தை, சீன அரசாங்கமும், மக்களும் மெச்சுவதோடு, அதை உறுதியாக ஆதரிக்கவும் செய்கிறார்கள். சமாதான சகவாழ்வின் ஐந்து பிரதான கொள்கைகளை சீன அரசாங்கம் தொடர்ச்சியாகக் கடைப்பிடித்து வந்திருக்கின்றது என்பதை மேன்மைமிகு தாங்கள் அறிவீர்கள். சீன அரசாங்கமானது எந்த நாட்டினதும் உள் விவகாரங்களில், ஒருபோதும் தலையிட்டது கிடையாது; அத்துடன் வேறெந்த நாடும் மற்ற நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதையும், முக்கியமாக, வெளிநாட்டுப் பிற்போக்குவாதிகள் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ஆயுதம் தாங்கிய தலையீட்டை மேற்கொள்வதையும் உறுதியாக எதிர்க்கிறது. இந்த விடயத்தில் சீன அரசாங்கத்தின் அசைக்க முடியாத நிலையை மீண்டும் உறுதிப்படுத்த விரும்புகிறேன்.

இலங்கைக்கும், சீனாவுக்கும் இடையிலுள்ள நட்புறவுக்காகவும், இலங்கை அரசாங்கத்தின் தேவைகளுக்காகவும், சீன அரசாங்கமானது இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கைப்படி நீண்டகால வட்டியில்லாக் கடனாக, மாற்றக்கூடிய அந்நியச் செலாவணியில் 15 கோடி ரூபாய் வழங்கச் சம்மதிக்கிறது. இந்த விடயத்தைப் பற்றி மேன்மைமிகு தாங்கள் ஏதாவது அபிப்பிராயம் கொண்டிருப்பின் அதை அறிய விரும்புகிறோம். கடனின் ஒரு பகுதியை மே மாதத்தில் கொடுத்து, கடன் பத்திரத்தில் கையொப்பமிடுவதற்குத் தயாராக இருக்கிறோம். வேறு பொருளுதவி தேவைப்படின் தயவு செய்து எங்களுக்கு அறியத் தருக.’’

வெளிநாட்டு ஆயுத உதவி, பண உதவி, ஆட்படை உதவி இவையெல்லாம் பெற்றுப் பலம் பெற்று, சிங்கள முதலாளித்துவ இராணுவ இயந்திரம் புரட்சிவாத இளைஞர்கள் மீது படுபாதகமான பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விட்டது. ஆயிரக்கணக்கானோர் அநியாயமாகக் கொல்லப்பட்ட போதும், மிருகத்தனமான அட்டூழியங்கள் நடைபெற்ற போதும், அதனை ஆட்சேபிக்க எந்த உலக நாடும் முன்வரவில்லை. இதிலிருந்து நாம் ஒரு முக்கிய பாடத்தைப் படித்துக் கொள்ள வேண்டும். அதாவது ஆயுதக் கிளர்ச்சி மூலம் தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டம் ஒன்றில் நாம் குதிப்பதாயின், முதலில் நாம் உலக நாடுகளின் ஆதரவை, குறிப்பாக சோசலிச நாடுகளினதும், உலகத் தேசிய விடுதலை இயக்கங்களினதும் ஆதரவைத் திரட்டிக் கொள்ள வேண்டும். ‘நாம் விடுதலை வேண்டும் ஓர் ஒடுக்கப்பட்ட தேசிய இனம்; எமது சுதந்திரக் கோரிக்கை நியாயமானது; சோசலிச அரசியல் கொள்கைத் திட்டத்திற்கு இசைவானது’ என நாம் சர்வதேச ரீதியில் பிரச்சாரம் செய்து, உலக சோசலிச புரட்சிவாத சக்திகளை எமக்கு ஆதரவாகத் திரட்டிக் கொள்ள வேண்டும். உலக நாடுகளின் தார்மீக ஆதரவு, ஒரு தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு இன்றியமையாதது.

எதிரிகள் யார்? நண்பர்கள் யார்?

ஆயுதக் கிளர்ச்சியின் அடிப்படையில் ஒரு தேசிய விடுதலைப் போராட்டத்தைத் திட்டமிடுவதாயின், வெளிநாட்டு ஆதரவு திரட்டுமிடத்து எமது எதிரிகள் யார், நண்பர்கள் யார் என்பதனை நாம் முதலில் சிந்திக்க வேண்டும்.

எமது போராட்டமானது மிகப் பிற்போக்கான, வலதுசாரி முதலாளித்துவ அரசுக்கு எதிரானது. இந்த அரசாங்கம் உலக முதலாளித்துவத்தின் நண்பன்; சர்வதேச ஏகாதிபத்தியத்தின் அடிமை; ஏகாதிபத்திய உளவு சக்திகளின் சிலந்திவலைக்குள் சிக்குப்பட்டது. இந்த ஆட்சி பீடத்திற்கு ஆபத்து ஏற்படும் சமயம், ஏகாதிபத்திய நாசகார சக்திகள் உதவிக்கு முன்வருவது திண்ணம். ஆகவே, எமது பிரதான எதிரிகள் சிங்கள ஏகாதிபத்தியம் மட்டுமன்றி, உலக முதலாளித்துவ வல்லரசுகளும், அவற்றின் அடிவருடிகளும்தான் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

ஈரான், ஆப்கானிஸ்தான் புரட்சிகளின் பின் உலக ஏகாதிபத்தியத்தின் அக்கறை இந்து சமுத்திரப் பிராந்தியத்தில், குறிப்பாகத் தென் ஆசியப் பிரதேசம் மீது திரும்பியிருக்கிறது. இப்பிரதேசத்தில், கடலாதிக்க ரீதியில் இலங்கை முக்கிய இடமாக அமைகிறது. ஆகவே, இலங்கையின் அரசியல் நிலையை நிலைப்படுத்துவதில், அதாவது தனக்குச் சார்பான முதலாளித்துவ அமைப்பைப் பலப்படுத்துவதில், உலக ஏகாதிபத்திய நாடுகள் அக்கறை காட்டி வரும்.

இப்படியான சூழ்நிலையில், சோசலிச சமுதாய நிர்மாணத்தை இலட்சியமாய்க் கொண்டு தேசிய விடுதலை வேண்டும் எமது போராட்டத்தை, உலக ஏகாதிபத்தியம் விரும்பப் போவதில்லை. முதலாளித்துவத்தின் தென் ஆசிய நிலைப்பாட்டிற்கு இப்போராட்டம் ஆபத்தானதென்றே இவர்கள் கருதுவார்கள். ஆகவே இந்த முதலாளித்துவ நாசகார சக்திகள் சிங்கள ஆட்சியாளருக்கு உதவியாக நின்று, எமது போராட்டத்தை நசுக்க முற்படலாம். ச.வி.பெ.யின் கிளர்ச்சியை முறியடிப்பதில், அமெரிக்க உளவுத் தாபனமாகிய சி.ஐ.ஏ. பெரிய பங்கு கொண்டிருந்ததென்பதனை நாம் மறந்துவிடக் கூடாது.

இதன் காரணமாகத்தான், எமக்குச் சோசலிச நாடுகளின் ஆதரவு அவசியமென வலியுறுத்துகிறோம். தமிழீழ விடுதலை வீரர்கள் சிங்கள முதலாளித்துவ ஆயுதப் படைகளை வெற்றிகொண்டு, சோசலிசத் தமிழீழ சுதந்திரப் பிரகடனம் செய்யும் பொழுது, சோசலிச நாடுகள் எமது தேசிய சுதந்திரத்திற்கு அங்கீகாரம் வழங்க வேண்டும். சிங்கள ஆயுதப் படைகளின் எதிர்த் தாக்குதலையும், அந்நிய ஏகாதிபத்தியத்தின் தலையீட்டையும் தடுத்து நிறுத்துவதற்கு இது அவசியமாகும்.

முடிவாக, சிங்களக் கிளர்ச்சிக்கார இளைஞர்களின் கிளர்ச்சியிலிருந்தும், அதன் வீழ்ச்சியிலிருந்தும் நாம் பல அரசியற் பாடங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும். தோல்விகளின் காரணங்களைக் கற்றுக் கொண்டால் வெற்றியின் பாதை புலனாகும்.