கடந்த பொதுத் தேர்தலில் இந்தச் சரித்திரச் சம்பவம் நிகழ்ந்தது. இலங்கை அரசியல் வரலாற்றிலேயே சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சி இது. கால் நூற்றாண்டு காலமாய் குமுறி வந்த தமிழ் அரசியல் போராட்டத்தில் ஒரு மாபெரும் திருப்பமாக இது அமைந்தது. அதுதான் சோசலிசத் தமிழீழத் தனிநாட்டுக் கோரிக்கை. தமிழீழ மக்கள் மேற்கொண்ட புரட்சிகரமான தீர்மானம்.

1977இல் தமிழ்த் தேசிய இனத்திற்கு எதிரான ஒடுக்குமுறையின் உச்ச கட்டத்தின்போது இலங்கையில் பொதுத் தேர்தல் நடந்தது. ஒரு தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் பிரிந்து சென்று தனிநாடு அமைப்பதென்ற கோரிக்கைக்கு வாக்களிக்குமாறு தமிழ் பேசும் மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டார்கள். தமிழ் பேசும் மக்களைப் பொறுத்தவரை ஒரு தேசிய இனத்தின் தலைவிதியை நிர்ணயிக்கும் பொதுசன வாக்கெடுப்பாகவே இந்தத் தேர்தல் அமைந்ததெனலாம். இத்தேர்தலில் தமிழீழ தேசிய சுதந்திரத்தை, அதாவது இறைமை கொண்ட சோசலிச அமைப்பைக் கொண்ட தனியரசை ஆதரித்து மக்கள் வாக்களித்தனர். அதாவது இத்தேர்தலில் தமிழ் பேசும் மக்கள் தமது சுயநிர்ணய உரிமையை சனநாயக அரசியல் நியதிக்கு அமையப் பிரயோகித்துத் தனியரசை அமைப்பதே தமிழ்த் தேசிய இனத்தின் ஒன்றுபட்ட அபிலாசையெனச் சிங்கள ஆட்சியாளருக்கும் உலகத்திற்கும் எடுத்துரைத்தனர்.

தமிழீழ மக்கள் மேற்கொண்ட இத்தீர்மானம் மாக்சிச-லெனினிச கொள்கைத் திட்டத்திற்கு அமைய, அதாவது புரட்சிவாத சோசலிச அரசியல் நியதியின்படி சரியானது என்பதை இந்நூலில் வலியுறுத்தியிருக்கிறோம். தனித் தமிழ் நாட்டுக் கோரிக்கையை எதிர்க்கும் மாக்சிசவாதிகளின் நிலை, மாக்சிச சித்தாந்த ரீதியில் முற்றிலும் தவறானது என்பதை இந்நூல் தெளிவாகச் சுட்டிக் காட்டுகிறது. சுயநிர்ணய உரிமையென்ற அரசியற் கோட்பாட்டிற்கு லெனினின் கொள்கை விளக்க மேற்கோள்களுடன் தெளிவான வரைவிலக்கணம் அளித்து, தமிழ்த் தேசிய இனப்பிரச்சினையை சமூக, பொருளாதார, அரசியல் வடிவங்களில் நோக்கி, தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்டத்தை வெற்றிப் பாதையில் இட்டுச் செல்வதற்கு ஒரு புரட்சிகரமான வேலைத் திட்டமும், அதனைச் செயற்படுத்த ஒரு புரட்சிகரமான விடுதலை இயக்கமும் அவசியமென வலியுறுத்தியுள்ளோம்.

இன்று தமிழ்த் தேசிய இனமானது சிங்கள ஆயுதப் படைகளின் பயங்கரவாதத்தின் மத்தியில் பயந்து வாழ்கிறது. மிருகத்தனமான பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்துவிட்டு, மக்களை மிரட்டி மண்டியிடச் செய்து, தமிழ்த் தேசிய இனத்தின் விடுதலை வேட்கையை நசுக்கி விடுவதே இனவெறிபிடித்த சிங்கள ஆளும் கும்பலின் இலட்சியமாக இருக்கிறது. இந்த ஆயுத பலாத்காரத்தை அகிம்சையென்ற அமைதிவழிப் போராட்டத்தால் முறியடிக்க முடியாது என்பது இன்று அனைவரும் உணர்ந்த அரசியல் உண்மையாகும். ஆயுத பலாத்காரம் எம்மீது திணிக்கப்பட்டு, நாம் அடிமை வாழ்விற்கு ஆளாக்கப்பட்டுள்ளோம். எமது விடுதலையின் பாதை இனி ஆயுதம் தரித்த புரட்சிப் போராட்டமாக அமைய வேண்டுமே தவிர வேறென்றுமல்ல. அநீதிக்கும், அட்டூழியத்திற்கும் எதிராகப் புரட்சி செய்வது, பலாத்காரத்திற்கு எதிராகப் போர் செய்வது அதர்மம் ஆகாது. அது புனிதமான செயல். மனித செயல்களில் புனிதமான புரட்சி. புரட்சிதான் புதுமையைப் பிறப்பிப்பது. புரட்சிதான் புதுவாழ்வைத் தருவது. புரட்சியின்றிப் புதியது பிறக்காது. புரட்சியென்பது சரித்திரத்தின் விசை. புரட்சி செய்பவன் சரித்திரம் படைப்பவன். அடக்குமுறையின் கீழ் அடிமை வாழ்க்கையில் தள்ளப்பட்ட எமது மக்களின் விடுதலைக்குப் புரட்சி அவசியம். அதாவது, ஆயுதம் தாங்கிய புரட்சிப் போராட்டம் அவசியம்.

இனவாதம் பிடித்த சிங்கள இராணுவ இயந்திரத்தின் முன் நிராயுதபாணிகளாக நின்றுகொண்டு விடுதலை முழக்கம் எழுப்புவதில் எவ்வித பயனும் இல்லை. எம்மிடம் ஆத்ம பலம் மட்டுமே இருந்தால் போதாது. ஆயுத பலமும் அவசியம். ஆயுத பலம்தான் இன்று உலகத்தை ஆளுகிறது. ஆயுதம்தான் மக்களை அடிமை கொள்கிறது. ஆயுதம்தான் மக்களை அடக்குமுறைக்கு ஆளாக்குகிறது. எம்மை அடிமைப்படுத்தி வைத்திருப்பது சிங்கள மக்கள் அல்ல; சிங்கள ஆளும் வர்க்கத்தின் ஆயுதங்களே. ஆயுத அடக்குமுறையின் கீழ் விடுதலை வேண்டி நிற்கும் ஒரு தேசிய இனமாகிய நாம், முதலில் ஆயுதத்திற்கு எதிராகப் போராட எம்மைத் தயார் செய்து கொள்ள வேண்டும். உலக தேசிய விடுதலை இயக்கங்கள் எல்லாம் ஆயுதம் தரித்த விடுதலைப் போராட்டத்தில்தான் குதித்துள்ளன. ஆயுத ஒடுக்குமுறையை ஆயுதத்தால்தான் முறியடிக்க முடியும் என்ற யதார்த்த உண்மையை இந்த விடுதலை இயக்கங்கள் உணராமலில்லை. ஆயுதம்தான் மக்களை அடக்கவும் செய்கிறது; அதேவேளை மக்களை விடுவிக்கவும் உதவுகிறது. ஆகவே சிங்கள ஆயுதப் படைகளின் அடக்குமுறையை உடைத்தெறிந்து எமது மக்கள் விடுதலை பெறுவதாயின், ஆயுதம் தரித்த போராட்டத்தால்தான் அது சாத்தியமாகும் என்பதில் அசையாத உறுதி கொண்டவர்கள் நாம். இந்த உறுதியில்தான், நாம் ஆயுதம் தரித்த போராட்டத்திற் குதித்துள்ளோம்.

தேசிய விடுதலைப் போராட்ட அமைப்பையுடைய ஆயுதப் புரட்சியென்பது அப்படி இலகுவான செயலல்ல என்பதை நாம் நன்கு உணருவோம். ஒரு புரட்சிகரமான கொள்கைத் திட்டத்தின் கீழ் கட்டியெழுப்பப்பட்ட ஒரு புரட்சிகரமான விடுதலையியக்கத்தால்தான் இந்தப் பிரமாண்டமான இராணுவச் சாதனையைச் சாதிக்க முடியும். மிகவும் நுணுக்கமாய்த் திட்டமிட்டுச் சரிவர எம்மைத் தயார் செய்து கொள்ளாமல், அவசரப்பட்டு ஆயுதப் புரட்சியில் குதிக்கும் கற்பனாவாதப் போக்கு எம்மிடம் எள்ளளவும் இல்லை. 1971ஆம் ஆண்டு ஏப்பிரலில் றோகன வீஜே வீராவின் தலைமையிலான சிங்கள இளைஞரின் ஆயுதக் கிளர்ச்சி எவ்விதம் கொடூரமாக நசுக்கப்பட்டதென்பதை இந்நூலில் விரிவாக ஆய்வு செய்கிறோம். சித்தாந்தத் தெளிவின்றி, கொள்கைத் திட்டமின்றி, ஒருமைப்பாடின்றி, பொதுசன ஆதரவின்றி, ஆயுத பலமின்றி, வெளிநாட்டு அனுதாபமின்றி, அரசியல் சூழ்நிலையை அசட்டை செய்து, அவசரப்பட்டு ஆயுதக் கிளர்ச்சியில் குதித்ததால் இக்கிளர்ச்சிக்குப் பத்தாயிரம் இளைஞர்கள் பலியானார்கள். எமது அயல் நாட்டில் கிளர்ந்தெழுந்த இந்த ஆயுதக் கிளர்ச்சியும், அதனை மிருகத்தனமாக நசுக்கிய சிங்கள இராணுவ வெறியாட்டமும் எமக்குப் பல அரசியல் உண்மைகளைப் போதிப்பதாக உள்ளன. இவை இந்த நூலில் ஆராயப்படுகின்றன.

தமிழ்த் தேசிய விடுதலையையும், சோசலிச சமூகப் பொருளாதாரத்தையும் நோக்காகக் கொண்ட ஒரு புரட்சிக்கு முதற்படியாக ஒரு புரட்சிகரமான கொள்கைத் திட்டம் அவசியம். அந்தப் புரட்சிகரமான கொள்கைத் திட்டத்தைச் செயற்படுத்த, ஒரு புரட்சிகரமான விடுதலை இயக்கம் அவசியம். புரட்சிகரமான சித்தாந்தத் தெளிவும், புரட்சிகரமான செயல் திட்டமும், புரட்சிகரமான இயக்கமும் இல்லாமல் ஒரு புரட்சி நடைபெறாது என்பது லெனின் போன்ற அரசியல் ஞானிகளின் அனுபவக்கூற்று. இந்த ரீதியில் தமிழீழ விடுதலைப் புலிகளாகிய நாம் ஒரு புரட்சிகரமான விடுதலை இயக்கமாக உருப்பெற்றுள்ளோம். புரட்சிகரமான சித்தாந்தத் தெளிவில், ஒரு புரட்சிகரமான செயல் திட்டத்தை வகுத்து அதனைச் செயல்படுத்தி வருகிறோம்.

மக்களின் விடுதலைக்காக உதித்த எமது இயக்கம், மக்கள் இயக்கமாக மலர்ந்து, மக்களின் விடுதலை வேட்கையைப் பிரதிபலிக்கும் மாபெரும் புரட்சிச் சக்தியாக உருப்பெற்று வருகிறது. இந்தச் சூழ்நிலையில் எமது கருத்துக்கள், கொள்கைகளை மக்கள் மத்தியில் பரப்பி, மக்கள் பலத்தை மேலும் அணிதிரட்டும் இலட்சியத்தில் தீவிரமாகச் செயற்பட உறுதிபூண்டுள்ளோம். எமது அரசியற் பிரசுரங்கள், கொள்கை விளக்கக் கட்டுரைகள், செயல் திட்டங்கள் மக்கள் மத்தியில் விநியோகிக்கப்படும். எமது இயக்கத் தோழர்கள் பொதுமக்கள் அரங்கில் தீவிர பிரச்சாரத்தை மேற்கொள்வர். சிங்கள ஆட்சியாளரின் தணிக்கையையும், ஒடுக்குமுறையையும் தகர்த்து, எமது வெளியீடுகள் பொதுமக்கள் கைக்கு எட்டும் என்பதை உறுதியாகக் கூறுகின்றோம்.