மனிதனிலிருந்து தொடங்குகிறது இந்தத் தத்துவம். எல்லாவற்றிற்கும் மேலாக, மனித இருப்பிற்கு அது முதன்மை கொடுக்கிறது.

இது மனித உலகம். மனிதன் வாழும் உலகம். மனிதனால் படைக்கப்பட்ட உலகம். மனித உறவுகளால் பின்னப்பட்ட உலகம். இந்த உலகில் சகலதற்கும் அவனே அடிப்படை. மனிதனே இவ்வுலகின் மெய்ப்பொருள். சகலதற்கும் அவனே கோல். அவனிலிருந்தே சகலதும் அர்த்தம் பெறுகிறது.

எனது இருப்பே எனக்கு முதன்மையான உண்மை. எனது இருப்பு நிலையிலிருந்தே நான் என்னையும் இந்த உலகத்தையும் இனம் கண்டுகொள்கிறேன். நானே எனக்கு வெளிச்சம். நானே எனது வழிகாட்டி. நானே எனது இருப்பிற்கு ஆதாரம். என்னிலிருந்தே எல்லாம் எனக்குத் தோற்றப்பாடு கொள்கிறது. நான் வாழும் இந்த உலகமும், நான் உறவு கொள்ளும் மற்றவனும், என்னைச் சூழ இருப்புக் கொள்ளும் எல்லாமே எனது அனுபவ தரிசனத்தால் அர்த்தம் பெறுகிறது.

மனித வாழ்வு பற்றிய விசாரணைகள் அனைத்தும் மனிதனிலிருந்தே தொடங்க வேண்டும் என்கிறது இந்தத் தத்துவம். மனித அனுபவத்திற்கு அது முக்கியத்துவம் கொடுக்கிறது.

மனிதனுக்கு புறம்பாக நின்று, மனித உலகத்திற்கு அப்பால் நின்று, மனிதனைக் கண்டு கொள்ள முடியாது. மனித மெய்யுண்மையை மனிதனிடமிருந்து, மனித அனுபவத்திலிருந்து, மனித வாழ்நிலையிலிருந்தே கண்டு கொள்ள முடியும்.

மனிதன் என்பவன் வானத்திலிருந்து பூமியில் விழுந்த அற்புதம் அல்ல. அன்றி இயற்கையால் வனையப் பெற்ற பொம்மையும் அல்ல. மனித இயல்பு என்பது இயற்கையின் பரிணாம விதியால் மனிதனிடம் திணிக்கப்பட்ட பண்பு அல்ல. மனித இருப்பிலிருந்தே மனிதனின் இயல்பு தோன்றுகிறது. மனிதனே தன்னைப் படைக்கிறான். தன்னை உருவாக்கம் செய்கிறான். மனிதனே மனிதனின் சிருஷ்டி கர்த்தா.

மனித இயல்பிற்கு முன்னோடியானது மனித இருப்பு (Human existence proceeds human essence) என்கிறது இந்தத் தத்துவம்.

பிறப்புடன் இந்த உலகிலே பிரவேசம் செய்யும் மனிதன், தான் பிறந்த கணத்திலிருந்து தனது இருப்பையே முதலில் உணர்ந்து கொள்கிறான். ஜீவானுபவமே எல்லாவற்றிற்கும் முதன்மையானது. தனது இருத்தலை உணர்ந்து கொண்ட பிரக்ஞையுடன், மனிதன் முதலில் தன்னை எதிர்கொள்கிறான். தன்னைச் சூழவுள்ள மனித உலகத்தை எதிர்கொள்கிறான். தொடக்கத்தில் மனித இயல்பு என்று எதுவும் இருப்பதில்லை. ஆரம்பத்தில் மனிதன் ஒரு வெறுமையாகப் பிறப்பு எடுக்கிறான். காலப் போக்கிலேயே தனது வெறுமையை நிறைவு செய்து கொள்கிறான். மனித இயல்பு என்பது இருப்பின் வாயிலாக, வாழ்வனுபவத்தினால் மனிதன் தானாக சிருஷ்டித்துக் கொள்ளும் மாண்பு.

மனிதனின் இருப்பு நிலையை ஆழமாகத் தரிசிக்க விழையும் இந்தத் தத்துவம் தனி மனிதனுக்கும் தனி மனித வாழ்வனுபவத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கிறது.

வாழ்வனுபவ நிலையில், எல்லா மனிதர்களும் தனி மனிதர்கள். அனுபவம் அகவயமானது; அகநிலை தனித்துவமானது; தனிமனிதம் சார்ந்தது. எனவே, மனிதானுபவம் என்பது தனி மனிதனிடமிருந்து, தனி மனிதக் கூறுகளாகப் பிராவகம் எடுக்கிறது.

இந்த உலகத்தில் நான் ஒரு தனி மனிதப் பிறவி. இனம், மதம், தேசம், சமூகம் என்ற முழுமையில், மொத்தத்தில், கூட்டுறவில் நான் கட்டுண்டு கிடந்த போதும் நிதர்சன வாழ்வில் நான் தனித்துவமானவன். முழுமை என்ற பெருவெள்ளம் என்னை அடித்துச் சென்றபோதும், நான் என்னை நானாக, ஒரு தனித்துவ ஜீவனாக, ஒரு சுதந்திரப் பிறவியாக, நானே எனக்குப் பொறுப்பானவனாக, நானே எல்லாவற்றையும் தெரிவு செய்பவனாக, தீர்மானிப்பவனாக, எனது வாழ்வனுபவத்திற்கு நானே உரித்தானவனாக, நான் என்னை, எனது தனித்துவத்தை உணர்கிறேன். மீள முடியாதவாறு, தனிமனிதம் என்ற சிலுவையில் நான் அறைபட்டுக் கிடக்கிறேன்.

தனி மனிதத்துவத்தை இந்தத் தத்துவம் வலியுறுத்துகிறது. ஆயினும், அதே வேளை கூட்டு வாழ்வின் நிதர்சனத்தை அது மறுதலிக்கவில்லை.

மனிதன் தனிமனிதப் பிறவியாக வாழ்ந்த போதும் மனித உறவுகள் என்ற சங்கிலித் தொடர்பில் பிணைக்கப்பட்டிருக்கிறான். தனிமனித இருப்பு சமூக இருப்பு என்ற சமுத்திரத்துடன் சதா சங்கமிக்கிறது.

இந்த உலகம் என்பதே, மானிடத்தைக் குறிக்கிறது; மற்றவர்களைக் குறிக்கிறது. இந்த மனித உலகில் நான் தனித்து நின்றபோதும் மற்றவர்களுடன் இணைந்து வாழ நிர்ப்பந்திக்கப்படுகிறேன். எனது இருப்பின் எண்ணற்ற தேவைகளை நிறைவு செய்ய மற்றவர்களின் உறவு எனக்குத் தேவை. நான் தனித்தவனாக, தனிமனிதனாக, சமூக உறவுகளை அறுத்துக் கொண்டு தனிச் சீவியம் நடத்த முடியாது. நான் வாழ, மற்றவர்களுடனான கூட்டு வாழ்வு எனக்கு அவசியம். நான் மட்டும் எனக்கு பொறுப்பாளி அல்ல. நான் மற்றவர்களுக்கும் பொறுப்பாளியாக இருக்கிறேன். சமூகத்தின் சட்டம், சமூகத்தின் கட்டுப்பாடுகளிலிருந்து நான் தப்பிவிட முடியாது. எனது செயற்பாடுகளும் நான் எடுக்கும் முடிவுகளும் மற்றவர்கள் சம்பந்தப்பட்டதால், நான் எனக்கு மட்டுமல்ல, உலகத்தாருக்கும் பொறுப்புள்ளவனாக இருக்கிறேன். அன்பையும், ஆதரவையும், அரவணைப்பையும் நான் மற்றவர்களிடமிருந்து வேண்டி நிற்கிறேன். எனது உடற்பசிக்கும், உளப் பசிக்கும், எனது ஆசைக்கும் அவாவிற்கும் மற்றவர்களின் உறவு அத்தியாவசியமாகிறது. நான் எனக்காக, என் குறிக்கோளுக்காக, என் திருப்திக்காக, என் நிறைவுக்காக, என் வாழ்வுக்காக, என் இருப்பிற்காக மற்றவர்களை நாடி நிற்கிறேன். நானும் மற்றவர்களும் என்ற உறவு, என் இருப்பின் தவிர்க்க முடியாத நிர்ப்பந்தமாக என்னையும் மற்றவர்களையும் பிணைத்து வைத்திருக்கிறது. என்னைப் புரிந்து கொண்டவர்களுடன், எனது போக்கிற்கும், பார்வைக்கும் ஒத்திசைவான மற்றவர்களுடன் நான் உறவு கொள்ளும் போது, அந்தக் கூட்டுறவு எனது தனித்துவத்தைப் பேண ஏதுவாக அமைகிறது. இந்த உறவில் நானும் மற்றவனும் அவரவர் தனித்துவ அடையாளங்களை இனம் கண்டு, அதைப் புரிந்து கொண்டு, அந்தப் புரிந்துணர்வால் எழும் பற்றுறவால் பிணைந்து கொள்ளும் பொழுது எனது தனித்துவத்தின் சுதந்திரம் மேம்பாடு கொள்கிறது.

மற்றவர்களுடனான உறவு ஒத்திசைவாக அமையும்போது, தனிமனித வாழ்வு நிறைவுடையதாக அமைகிறது. கூட்டு வாழ்வு இசைவாக அமைந்து, எனது மனிதத்துவத்தையும் சுதந்திரத்தையும் மேம்பாடு செய்யுமானால், எனது இருப்பு ஆக்கபூர்வமானதாக, அர்த்தபூர்வமானதாக (Authentic Existence) அமைகிறது. ஆனால் அதே வேளை, சமூகக் கூட்டுவாழ்வு எனது தனித்துவத்தை நசுக்கிவிடும் எதிர்மறைத் தன்மைகளைக் கொண்டது. தனிமனிதனுக்கு விரோதமானதாக, தனிமனித சுதந்திரங்களை ஏப்பம் விடும் அதிகாரப் பூதமாக சமூகக் கட்டமைப்பு உருவாக்கம் பெறும் பொழுது எனது இருப்பு அர்த்தவீனமாக மாறிவிடுகிறது. இந்தச் சூழ்நிலையில், அரூபமான, அனாமதேயமான ஒரு முகமற்ற சக்தியாக சமூகத்தை நான் எதிர்கொள்கிறேன். எனக்குப் புறம்பாக, எனக்கு முரணாக, எனக்கு விரோதமாக சமூகம் இருப்புக் கொள்கிறது. ஆன்மாவை இழந்தவர்களாக, அடையாளம் அற்றவர்களாக, வெற்று மனிதர்களாக நான் மற்றவர்களை எதிர்கொள்கிறேன். இப்படியான சமூகச் சூழலில், எனக்கும் மற்றவர்களுக்குமான உறவு அர்த்தமற்றதாகிறது. அபத்தமாகிறது.

அபத்தமான வாழ்நிலைபற்றியும், அபத்தத்திலிருந்து அர்த்தத்தைத் தேடும் மனிதனின் முனைப்புகள் பற்றியும் இந்தத் தத்துவம் ஆழமாக விசாரணைகளைச் செய்கிறது.

இந்தத் தத்துவம் இருப்பியம் (Existentialism) எனப்படும்.

இந்த தத்துவார்த்த சிந்தனை 19ம் நூற்றாண்டுகளில் ஐரோப்பாவில் தோற்றம் கொண்டது. இந்தக் கருத்துலகைச் சிருஷ்டித்த தத்துவாசிரியர்கள் பலர். ஒவ்வொருவரும் வித்தியாசமாக எழுதினார்கள். ஒவ்வொருவரது வாழ்க்கைப் பின்னணியும் வரலாற்றுச் சூழ்நிலையும் வேறுபட்டிருப்பினும், தாம் வாழ்ந்த காலத்தை உருவகப்படுத்தி, அக்காலத்தில் வாழ்ந்த மனிதனின் வாழ்நிலை அனுபவத்தை முதன்மைப்படுத்தி எழுதினார்கள்.

ஐரோப்பிய முதலாளியத்தின் வளர்ச்சி, ஏகாதிபத்தியத்தால் எழுந்த ஆதிக்கப் போட்டி, ரஷ்ய கம்யூனிஸ்ட் புரட்சி, நாசிசத்தின் எழுச்சி, உலக மகா யுத்தங்கள் – இப்படியான வரலாற்று நிகழ்வுகளால் ஐரோப்பிய மனிதனின் வாழ்விலும் பார்வையிலும் பாரதூரமான பாதிப்புகள் விழுந்தன. மனித நாகரீகத்தின் சிகரத்தில் நின்று கொண்டு உலகத்திற்கு ஒளி விளக்காக இருப்பதாக ஐரோப்பிய மனிதன் கண்டு வந்த கனவு, இந்த நிகழ்வுகளால் தகர்ந்து போனது. கிறீஸ்தவ அறத்தில் கேள்விக் குறி எழுந்தது. கடவுட் கோட்பாட்டில் நம்பிக்கை தளர்ந்தது. சர்வாதிகார சமூகக் கட்டமைப்பில் வெறுப்புத் தட்டியது. விஞ்ஞானத்தின் அழிவு நோக்கிய அசுர வளர்ச்சியில் பயம் எழுந்தது. இந்தப் புறநிலைப் பாதிப்புகளால் ஐரோப்பிய சிந்தனையாளர் சிலர், ஐரோப்பிய சிந்தனைப் பாரம்பரியத்தை உடைத்துக் கொண்டு வித்தியாசமாகச் சிந்தித்தனர். மனிதத்துவத்தின் இயல்பையும், வாழ்க்கையின் அர்த்தத்தையும் கண்டு கொள்ள விழைந்த இந்தச் சிந்தனையாளரின் தேடுதலாக இருப்பியக் கருத்துலகம் தோற்றம் எடுத்தது.

இருப்பியல் கருத்துலகைப் படைத்த தத்துவாசிரியர்கள் வரிசையில் சோரன் கைகேகார்ட் (Soren Kierkegaard), நீச்சே (Nietzsche), மார்டின் கைடேகர் (Martin Heidegger), கார்ள் ஜாஸ்பர்ஸ் (Karl Jaspers), ஹூசேள் (Husserl), ஜோன் போல் சாத்தர் (Jean Paul Satre), ஆகியோரை முக்கியமாகக் குறிப்பிடலாம். டொஸ்தோவஸ்கி (Dostoyevsky), காவ்கா (Kafka) போன்ற எழுத்தாளர்களின் படைப்பிலக்கியங்களும் இருப்பியத் தரிசனங்களாகக் கொள்ளப்படுவதுண்டு.

வித்தியாசமான காலத்தில், வித்தியாசமான சூழலில், வித்தியாசமான வடிவத்தில், வித்தியாசமான நடையில், வித்தியாசமான பார்வையில், இவர்களது எழுத்துக்கள் அமைந்த போதும், பொதுப்படைக் கருப்பொருளாக மனித நிதர்சனம் பற்றியும் மனித இருப்புநிலை பற்றியும் மனித வாழ்வனுபவம் பற்றியும் மிகவும் தீட்சண்யமான கூர்நோக்குடன் இவர்கள் எழுதினார்கள்.

சோரன் கைகேகார்ட் (1815-1855) இருப்பிய தத்துவத்தின் தந்தையாகக் கருதப்படுபவர். இவர் டென்மார்க் நாட்டைச் சேர்ந்த சிந்தனையாளர்.

ஐரோப்பிய பாரம்பரியம் தனிமனிதனின் ஆழமான உணர்வுகளை தொட்டு நிற்கவில்லை. மாறாக, மனித வாழ்வனுபவத்திற்குப் புறம்பாக நின்று, புரியாத மொழியில், பூடகமான தத்துவக் கோட்டைகளை கட்டியெழுப்பியது என விமர்சித்தார் கைகேகார்ட். இந்தத் தத்துவ தரிசனங்களில் சிறப்புப் பிரதிநிதியாக விளங்கிய ஹேகலை அவர் கண்டித்தார். மனித இருப்பு நிலைக்கு அப்பால், புலனாகாத பிரபஞ்ச விசாலத்தில் மனித வாழ்விற்கு அர்த்தம் தேடும் ஹேகலின் தத்துவத்தில் எவ்வித அர்த்தமும் இல்லை என்கிறார். சிந்தனை உலகத்தில் உண்மையைக் கண்டு கொள்ள முடியாது. உண்மை என்பது அகவயமானது; அது மனிதனின் உள்ளார்த்த இரகசியமாக, மனிதனின் உள்ளுணர்வில் மறைந்து கிடக்கிறது என்றார். வாழ்நிலையில் மனிதன் எதிர்கொள்ளும் மன அவலங்களை, அங்கலாய்ப்புகளை அவரது எழுத்துகள் மிகவும் துல்லியமாக விபரிக்கிறது. நிலையாமையை, நித்தியமின்மையைச் சந்தித்து நிற்கும் தனிமனிதன், இருப்பின் அர்த்தத்தைப் புரியாது தடுமாறும் தவிப்பையும் துயரத்தையும் மிகவும் ஆழமான ஆன்ம சோதனையாக அவர் சித்தரிக்கிறார். அவரது எழுத்துகள் மனித இருத்தலையும், மனித உணர்வுகளையும் முதன்மைப்படுத்தி நிற்பதால் இருப்பிய தத்துவத்தின் முன்னோடியாக அவர் கருதப்படுகிறார்.

நாஸ்திக இருப்பியவாதிகளின் குருநாதராகக் கருதப்படுபவர் நீச்சே. “கடவுள் மரணித்துவிட்டார்” என்ற செய்தியை இவர் மானிடத்திற்கு எடுத்துச் சொல்கிறார். நீச்சே சொல்கிறார்:

“கடவுளின் மரணத்துடன் ஆன்மீக உலகமும் அஸ்தமித்து விடுகிறது. நரகம் என்றும், சுவர்க்கம் என்றும், பாவம் என்றும், புண்ணியம் என்றும், கர்மம் என்றும், தர்மம் என்றும், கடவுட் கோட்பாட்டின் கீழ் கட்டியெழுப்பப்பட்ட அறநெறிகள் அனைத்தும் அர்த்தமிழந்து போகின்றன. நிரந்தரமான ஆன்மாவைக் கற்பித்து, நித்திய சீவியத்திற்கு ஆசைகொண்ட மானிடத்தின் கனவும் கடவுளின் மரணத்துடன் செத்துப் போய்விடுகிறது. மனித வாழ்வும் அர்த்தமிழந்து போகிறது. அபத்தமாக மாறுகிறது. நித்தியமானது செத்துப் போனதால் நிலையாமையானது இருப்பின் பேருண்மையாகிறது. சாவின் இருள் பூமி மீது நிரந்தரமாகக் கவிந்து கொள்கிறது. மரணத்தின் குகைக்குள் வாழ மானிடம் நிர்ப்பந்திக்கப்படுகிறது.”

நீச்சே, மனிதனின் கனவுகளைக் கலைத்துவிட முனைந்தார்; மனித இருப்பின் மிகவும் கசப்பான உண்மைகளை எடுத்துரைத்தார்; பூமியில் கடவுளின் ஆட்சியைக் கவிழ்த்து, அந்தச் சிம்மாசனத்தில் மனிதனை இருத்திவிட முனைந்தார் என்பது அவரைக் குருவாக வரித்துக் கொண்டவர்களின் கூற்று.

கடவுள் இல்லாத உலகமும் அறமில்லாத வாழ்வும் நிலையில்லாத சீவியமுமே மனித இருப்பின் துயரமான, அவலமான நிதர்சனமான நிலை என்பதை அவரது எழுத்துகள் அழுத்தமாகச் சொல்கின்றன.

காலத்தில் முகிழ்கிறது வாழ்வு. பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடையே விரியும் காலத்தில் நிலைக்கிறது வாழ்வு. இந்தக் காலம்தான் மனித இருப்பின் எல்லைக் கோட்டை இடுகிறது. இருத்தலின் எல்லைக்கு அப்பால் இல்லாமை இருக்கிறது. இல்லாமையை, அதாவது இருத்தலிலிருந்து இல்லாமல் போவதை, சாவு என்று சொல்கிறான் மனிதன்.

காலமும், நிலையாமையும், சாவும் மனித இருத்தலின் மெய்யுண்மைகள். இவை பற்றிய ஆழமான தரிசனத்தைத் தருகிறார் கைகேடகர். இருப்பிய தத்துவாசிரியர்களில் இவர் மிகவும் முக்கியமானவர்.

இருப்பு என்பது காலத்தின் பாதையால் நடைபெறும் பயணம். இந்தப் பயணத்தில் நான் ஒரு கணமும் தரித்து நிற்க முடியாதவாறு காலம் என்னை நகர்த்திச் செல்கிறது. நான் காலத்தில் மிதந்து கொண்டு பயணிக்கிறேன். நடந்து முடிந்தது இறந்த காலமாகவும், நடக்கப் போவது எதிர்காலமாகவும், நடந்து கொண்டிருப்பது நிகழ்காலமாகவும் எனக்குத் தென்படுகிறது. இறந்த காலம் செத்துப்போனாலும், எனது அனுபவத்தின் நிழலாக அது என்னை சதா பின்தொடர்கிறது.

எனது வாழ்வனுபவம் எப்பொழுதுமே நிகழ்காலமாகவே கட்டவிழ்கிறது. எதிர்காலமானது, இறந்த காலமாக மாறும் நொடிப் பொழுதுகளாக நான் நிகழ்காலத்தை அனுபவிக்கிறேன்.

நிகழ்கால அனுபவமே நிதர்சனமானது. மெய்மையானது என்கிறார் கைடேகர். ஆனால் மனிதன் நிகழ்காலத்தில் வாழாமல், எதிர்காலம் பற்றியே சிந்திக்கிறான். மனித ஆசைகளும், எதிர்பார்ப்புகளும், திட்டங்களும், எதிர்காலத்தில் நிறுத்தப்பட்டிருப்பதால், மனித மனமானது எதிர்காலத்தை நோக்கியதாக, எதிர்காலத்தில் நிலைத்துப் போகிறது. செத்துப் போன காலத்தில் புதையுண்டு போகாமலும், எதிர்காலத்தையே சதா எண்ணிக் கிடக்காமலும், நிகழ்காலத்தில் வாழ்வதுதான் அர்த்தபூர்வமானது என்கிறார் அவர்.

காலத்தில் நிகழும் எனது பயணம் சாவுடன் முடிவடைகிறது.

நிலையற்ற இந்த உலகில், நிலையான ஒன்று உண்டு என்றால் அதுதான் சாவு. எனது உயிர்ப்பின் கணத்திலிருந்து சாவும் என்னோடு உடன்பிறப்பு எடுத்திருக்கிறது. எனது இருத்தலின் ஒவ்வொரு கணத்திலும் இல்லாமை என்ற சூன்யத்தை நான் எதிர்கொண்டு வாழ்கிறேன். எனது சாவை நான் பட்டறிந்து கொள்ள முடியாது. இந்த உலகில் அதுமட்டும் எனது அனுபவத்திற்கு அப்பாலானது. எனது அனுபவத்தின் முடிவாக, எனது இருத்தலின் முடிவாக, நான் இல்லாமல் போகும் இறுதிக் கணமாகச் சாவு என்னை எதிர்கொண்டு நிற்கிறது.

என்னைச் சூழ எங்கும் சாவு நிகழ்கிறது. மற்றவர்களது சாவை நான் நித்தமும் சந்திக்கிறேன். எனக்கு வேண்டியவர்கள், நான் பற்றுக் கொண்டவர்கள் மடியும் போது, துயரத்தின் சுமை என் ஆன்மாவை அழுத்துகிறது. மனித இருப்பின் மிகவும் சோகமான, துன்பமான நிகழ்வாக சாவு சம்பவிக்கிறது.

எந்த நேரத்திலும், எந்தச் சூழ்நிலையிலும் நான் சற்றும் எதிர்பாராத சந்தர்ப்பத்தில், சாவு எனது கதவைத் தட்டலாம். திடீரென, இருப்பிலிருந்து இல்லாமை என்ற சூன்யத்திற்குள் நான் தூக்கி வீசப்படலாம். எனது இருப்பின் நிலையாமை எனக்குத் தெரிந்தும், சாவின் நிச்சயத்துவத்தை நான் உணர்ந்தும், நான் அதுபற்றி சிந்திக்கத் துணிவதில்லை. மனித பயங்கள் எல்லாவற்றிற்கும் மூலபயமாக, தலையான பயமாக, மரண பயம் எனது ஆழ்மனக் குகைக்குள் ஒளிந்து கிடக்கிறது. நான் அதை அடக்கி, ஒடுக்கி, என் நனவு மனதிலிருந்து ஒதுக்கி வைத்திருக்கிறேன்.

சாவு என்பது மனித இருப்புநிலையின் தவிர்க்க முடியாத உண்மை என்கிறார் கைடேகர். அதை மறுப்பதும், அதற்கு அஞ்சுவதும், அதிலிருந்து ஓடி ஒளிந்து கொள்ள முயல்வதும் அபத்தமானது. சாவின் பிடியிலிருந்து எவருமே தப்பிவிட முடியாது. அது வாழ்வின் ஒரு நிகழ்வாக என்றோ ஒரு நாள் எதிர்கொள்ளப்பட வேண்டியது. சாவைச் சந்திப்பதற்கு மனிதன் துணிய வேண்டும். அந்தத் துணிவிலும் தெளிவிலும் விழிப்பிலுமே மனித வாழ்வு அர்த்தமுள்ளதாக, நிறைவானதாக அமையும் என்கிறார் கைடேகர்.