விடுதலைப் புலிகள் பத்திரிகை, ஆடி-ஆவணி 1992
மதம் சம்பந்தமான விடுதலைப் புலிகள் இயக்கத்தின் நிலைப்பாடு என்ன? விடுதலைப் புலிகள் மதத்திற்கு விரோதமானவர்களா? மதவழிபாட்டுச் சுதந்திரத்திற்கு எதிரானவர்களா? மதம் பற்றி விடுதலைப் புலிகளின் சித்தாந்தக் கருத்துப் பார்வை என்ன? இவ்விதமாக மக்கள் மத்தியில் எழுப்பப்படும் கேள்விகளுக்குத் தெளிவான கொள்கை விளக்கத்தை அளிக்க முயல்கிறது இக் கட்டுரை.
மதம் சம்பந்தமான விடுதலைப் புலிகள் இயக்கத்தின் நிலைப்பாடு என்ன என்பதை எமது கொள்கைத் திட்டப் பிரகடனம் தெட்டத்தெளிவாக எடுத்து விளக்குகிறது. அதில் கீழ்க்கண்டவாறு சொல்லப்படுகிறது:
‘‘தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மத சார்பற்ற நிலைப்பாட்டைக் கடைப்பிடிக்கும். அதேவேளை சகல மதங்களையும் சார்ந்த மக்களினதும் அடிப்படை உரிமையான வழிபாட்டுச் சுதந்திரத்திற்கு எமது இயக்கம் உத்தரவாதமளிக்கும். சகல மதத்தவர்களும் தமது ஆன்மீக அபிலாசைகளைப் பூர்த்தி செய்யவும், மத-கலாசாரப் பண்புகளைப் பேணி வளர்க்கவும் எமது இயக்கம் ஊக்கமளிக்கும்.’’
புலிகளின் கொள்கைப் பிரகடனத்தில் இரத்தினச்சுருக்கமாகத் தரப்பட்டுள்ள இந்த விளக்கம் மதம் சம்பந்தமான மூன்று முக்கிய அம்சங்களை முதன்மைப்படுத்துகிறது.
ஒன்று மதசார்பற்ற நிலை. இரண்டாவது, மக்களின் வழிபாட்டுச் சுதந்திரம். மூன்றாவது, தமிழரின் தேசியப் பண்பாட்டு வாழ்வு. இந்த மூன்று அம்சங்களையும் இனி விரிவாகப் பார்ப்போம்.
விடுதலைப் புலிகள் இயக்கம் மத சார்பற்றது எனும் பொழுது, எந்த ஒரு குறிப்பிட்ட மதத்தையும் சார்ந்ததாக அது இருக்கவில்லை என்பதுதான் அர்த்தம். தமிழீழ மக்கள் தழுவிக் கொண்ட சகல மதங்களையும் அரவணைத்து, கௌரவித்து, சகல மதத்தவர்களுக்கும் பொதுவாக நின்று நிடுநிலையைக் கடைப்பிடிப்பதுதான் மத சார்பற்ற நிலையாகும்.
தமிழ் இன ஒருமைப்பாட்டையும், தேசிய சுதந்திரத்தையும் இலட்சியமாக வரித்துக் கொண்ட ஒரு விடுதலை இயக்கம், மதசார்பான கொள்கைகளைக் கடைப்பிடிப்பது தவறானதாகும். இந்தக் குறுகிய மதவாதப் போக்கு தமிழ் இன ஒற்றுமைக்கும், தமிழ்த் தேசிய ஒருமைப்பாட்டிற்கும் பெரும் முட்டுக்கட்டையாக அமையும். இதனைக் கருத்திற்கொண்டுதான் எமது இயக்கம் ஆரம்ப காலத்திலிருந்தே மதசார்பற்ற நடுநிலையைத் தழுவிக் கொண்டது.
சிங்கள அரசு மத சார்பானது. ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு, அதாவது பௌத்த மதத்திற்குத் தேசிய அந்தஸ்தும், கௌரவமும் வழங்கி, ஏனைய மதங்கள் சார்ந்த மக்களை அந்நியப்படுத்தியது. இந்தக் குறுகிய மதவாதப் போக்கு சிங்கள-பௌத்த பேரினவாதத்திற்கு வழிகோலி, சிங்கள-தமிழ் தேசிய இன முரண்பாட்டைத் தீவிரமடையச் செய்தது. சிங்கள தேசத்து மதவாத, இனவாத ஒடுக்குமுறையைச் சந்தித்து நிற்கும் தமிழ்த் தேசிய இனம், மத நம்பிக்கைகளின் அடிப்படையில் பிளவுபட்டு நிற்க முடியாது; அது எமது தேசியப் போராட்டத்தைப் பலவீனமடையச் செய்யும். எமது மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தை வழிநடத்திச் செல்லும் விடுதலை இயக்கம் மதசார்பற்ற நிலையைத் தழுவி, மதங்களுக்கு அப்பால் நின்று, இன ரீதியில் – தேசிய ரீதியில், எமது மக்களை அணிதிரட்டி ஐக்கியப்படுத்தும் அணுகுமுறையைக் கடைப்பிடித்து வருகிறது.
தமிழீழ மக்களின் சுதந்திர இயக்கம் என்ற ரீதியில் நாம் எமது மக்களின் அடிப்படையான சுதந்திரங்களுக்காகவும், உரிமைகளுக்காகவும் போராடி வருகிறோம். இதில் வழிபாட்டுச் சுதந்திரம் முக்கியமானது. இறை வழிபாடு மனிதர்களின் அடிப்படையான உரிமை. புனிதமான இந்த உரிமையை எமது இயக்கம் கௌரவிக்கிறது.
மெய்யுண்மையைத் தரிசிக்க விழையும் மனிதனின் ஆன்மீகத் தேடுதலானது எல்லாக் காலங்களிலும், எல்லாச் சமூகங்களிலும் ஒரு முடிவில்லாத இலட்சியப் பயணமாகத் தொடர்கிறது. வாழ்வியக்கத்தின் அர்த்தத்தையும், பிரபஞ்சத்தின் அற்புதத்தையும் புரிந்துகொள்ள விழையும் மனிதத்தின் மிகவும் ஆழமான அபிலாசையாக இந்த விழைதல் தொடர்கிறது. ஆன்மீகமும் சரி, விஞ்ஞானமும் சரி, இந்த விழைதலின் தோற்றப்பாட்டையே குறித்து நிற்கின்றன.
எந்த வழியிலோ, எந்த வடிவத்திலோ உண்மையைத் தேடும் உரிமை மனிதனுக்கு உண்டு. இது அவனது ஆன்மீக உரிமை. தனது ஆன்மீக அபிலாசைகளுக்குத் திருப்திகாணும் வகையில் ஒரு மனிதன் சிந்திப்பதும், செயற்படுவதும், தேடுவதும், நம்புவதும், நம்பாமல் விடுவதும், வழிபடுவதும், வழிபடாமல் விடுவதும் அவனுக்கே உரித்தான தனிமனித சுதந்திரமாகும். இந்த வகையில் வழிபாட்டு உரிமையானது மனிதனின் சிந்தனைச் சுதந்திரத்தைச் சார்ந்து நிற்கிறது. இந்த உரிமையை எமது விடுதலை இயக்கம் மதிக்கிறது; கௌரவிக்கிறது. ஏனென்றால் இது சுதந்திரமான மனித வாழ்விற்கும், உன்னதமான மனித வளர்ச்சிக்கும் இன்றியமையாதது.
மத வழிபாடு எமது மக்களின் பண்பாட்டு வாழ்வுடன் இழையோடி நிற்கிறது. பண்பாட்டு வாழ்வு எமது தேசியத்திற்கு ஆதாரமானது. எமது தேசியம் ஒரு சுதந்திர அரச நிர்மாணத்திற்கு அத்திவாரமானது.
தேசிய உரிமைப்பாட்டின் அடிப்படையில், தன்னாட்சி கோரி ஒரு வீரசுதந்திரப் போரை நடத்தி வரும் விடுதலை இயக்கம் என்ற ரீதியில், எமது மக்களைத் தேசிய ரீதியில் அணிதிரட்டுவது எமது அடிப்படை அரசியல் இலட்சியம். இந்த இலட்சியத்தை நிறைவேற்றுவதாயின் எமது தேசியத்திற்கு ஆதாரமாகவும், எமது தேசியக் கட்டுமானத்திற்குத் தூண்களாகவும் விளங்கும் எமது பண்பாட்டு வடிவங்களைப் பேணிப் பாதுகாப்பது அத்தியாவசியமானது. இந்த வகையில் தமது பண்பாட்டுக் கோலமாக எமது மக்கள் வரித்துள்ள மத வாழ்வுக்கு நாம் மதிப்பளிக்கிறோம். அவர்களது மத வழிபாட்டு வாழ்வின் மேம்பாட்டுக்காக எமது இயக்கம் உழைக்கும்.
அடிப்படையான தனிமனித உரிமைகளும், சுதந்திரங்களும் பேணப்படும் சமூக உலகில்தான் மனித வாழ்வு சிறப்புறும்; முழு மனித விடுதலை சாத்தியமாகும்; மனிதமும், தர்மமும் தழைத்தோங்கும். தனிமனித சுதந்திரங்கள் பேணப்படாமல், சமூக நீதியுடைய சமத்துவ சமுதாயத்தைக் கட்டி எழுப்ப முடியாது. தனிமனித தனித்துவத்தை மறுதலித்துவிட்டு, பொருளுலகத்தைச் சீரமைக்க முயன்ற சமூகப் பரிசோதனைகள் தோல்விகளையே சந்திக்க முடிந்தது.
தமிழீழ சமுதாயம் அந்நிய ஆதிக்கத் தளைகளிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள விழைகிறது. விடுதலையை நோக்கிய இந்த விழைதல், மண் விடுதலையை மட்டும் நோக்காகக் கொண்டதல்ல. தனிமனிதத் தமிழன் ஒவ்வொருவனும் தனது ஆன்மீக அபிலாசைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய ஒரு சுதந்திர தேசத்தைக் கட்டி எழுப்புவதுதான் எமது விடுதலைப் புரட்சியின் இறுதி இலட்சியமாகும்.
வழிபாட்டு உரிமையைக் கௌரவித்து, எமது மக்களின் அடிப்படைச் சுதந்திரங்களுக்காகப் போராடும் எமது விடுதலை இயக்கத்தின் இலட்சியப் போருக்கு மதங்களும் துணை நிற்க வேண்டும். ஒடுக்கப்பட்ட மனிதர்களின் விடிவிற்காக எமது தேசத்தில் ஒரு தர்மப் போர் நிகழ்ந்து வருகிறது. இந்த சத்திய யுத்தத்திற்கு ஆதரவாக எமது மத நிறுவனங்கள் குரலெழுப்ப வேண்டும். சகல மதங்களதும் தவிர்க்க முடியாத தார்மீகக் கடப்பாடு இது.
மக்களின் விடிவிற்காகத் தனது உயிரை அர்ப்பணிக்கும் ஒரு சுதந்திர வீரனின் தியாகமும் சாராம்சத்தில் புனிதமானது; ஒரு ஆழமான பரிமாணத்தில் ஆன்மீகமானது என்றும் சொல்லலாம்.