விடுதலைப் புலிகள் பத்திரிகை, பங்குனி – சித்திரை 1992
பெண் விடுதலை என்றால் என்ன? பெண் விடுதலை சம்பந்தமான விடுதலைப் புலிகள் இயக்கத்தின் நிலைப்பாடு என்ன? பெண் விடுதலை என்ற குறிக்கோளை அடைவதற்கு விடுதலைப் புலிகள் நெறித்துள்ள கொள்கைத் திட்டங்கள் என்ன? இந்தக் கேள்விகளுக்குத் தெளிவாக விடை அளிக்கும் வகையில் இந்தக் கொள்கை விளக்கக் கட்டுரை அமைகிறது.
எமது இயக்கத் தலைவர் பிரபாகரன் அண்மையில் அனைத்துலகப் பெண்கள் நாளை முன்னிட்டு ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார். இந்த அறிக்கையில் பெண் விடுதலை சம்பந்தமாகப் புலிகள் இயக்கத்தின் தத்துவார்த்த நோக்கினை, குறிக்கோள்களை, போராட்ட அணுகுமுறையை இரத்தினச் சுருக்கமாக எடுத்துக் கூறியுள்ளார். இந்தக் கருத்துக்களை அடிப்படைக் கருவாகக் கொண்டு இந்தக் கட்டுரை மேலும் விளக்கங்களைத் தர முயற்சிக்கின்றது.
‘பெண் ஒடுக்குமுறை என்பது யுகம் யுகமாக எல்லாச் சமூகங்களிலும், எல்லாப் பண்பாடுகளிலும் நிலவி வந்த ஒரு சமூக அநீதி. இந்தச் சமூக அநீதிமுறை இன்னும் இந்தப் பூமியிலிருந்து அகன்றுவிடவில்லை’ என்கிறார் தலைவர் பிரபாகரன்.
பெண் ஒடுக்குமுறை என்பது உலகளாவிய ஒரு சமூகப் பிரச்சினை. இந்தச் சமூக அநீதிமுறை இன்னும் இந்தப் பூமியிலிருந்து அகன்றுவிடவில்லை. இன்னும் மனித உலகத்திலிருந்து ஒழிக்கப்படவில்லை என்பதைப் பிரபாகரன் சுட்டிக் காட்டுகிறார்.
பெண் ஒடுக்குமுறை மனித சமூகங்கள் தோன்றிய இருண்ட யுகங்களிலிருந்து தோற்றம் கொண்டு, நீண்ட நெடுங்காலமாக நீடித்து வந்தபோதும், இன்னும் இந்த நவயுகத்திலும் இப்பிரச்சினை தீர்ந்தபாடில்லை. இந்த ஒடுக்குமுறையானது இன்றும், காலத்திற்கு ஏற்ற கோலங்களில், புதிய தோற்றப்பாடுகளாக, மிகவும் நுட்பமான வடிவங்களில், முன்னடைந்த நாடுகளிலும் சரி, பின்னடைந்த நாடுகளிலும் சரி, மேற்கிலும் சரி, கிழக்கிலும் சரி, முதலாளித்துவ உலகிலும் சரி, மூன்றாம் உலகிலும் சரி, எங்கும், எல்லாச் சமூகக் கட்டமைப்புக்களிலும் தொடர்ந்து ஒரு சமூக நோயாக இருந்து வருகிறது. மனித இனத்தின் சரிபாதிச் சனத்தொகையான பெண்ணினம், தொடர்ந்தும் ஒடுக்குமுறை விலங்குகளால் பிணைக்கப்பட்டிருக்கின்றதென்ற எதார்த்த உண்மை நிலையை யாராலும் மறுக்க முடியாது.
கடந்த ஒரு நூற்றாண்டு காலகமாக, குறிப்பாக மேற்குலகிலும், சோசலிச உலகிலும் பெண் விடுதலை அமைப்புகள் தோற்றம் கொண்டு பெண் உரிமைப் போராட்டங்களை முன்னெடுத்தன. பெண்ணினம் விழிப்புற்றுத் தனது விடுதலை நோக்கிய இலட்சியப் பயணத்தை ஆரம்பித்தது; இதில் குறிப்பிடத்தக்க சாதனைகளையும் ஈட்டியது.
‘நீண்ட காலமாக வளர்ச்சி கண்ட நாடுகளில் தொடர்ச்சியாக நடந்து வந்த உரிமைப் போராட்டங்களின் பலாபலனாகப் பெண்ணினம் குறிப்பிடத்தக்க சில வெற்றிகளை மட்டும் ஈட்டிக் கொள்ள முடிந்தது. அடிப்படையான மனித உரிமைகளையும், அரசியல் சுதந்திரங்களையும் பெண்கள் வென்றெடுக்க முடிந்தது. கலை வாய்ப்பும், தொழில் வாய்ப்பும் பெற்றுக் கொள்ள முடிந்தது. எனினும் இந் நாடுகளில் பெண்ணின் பிரச்சினைகள் தீர்ந்தபாடில்லை. இங்கு பழைய பிரச்சினைகள் புதிய வடிவங்களில் தோற்றங்கண்டு வருகின்றன’ என்கிறார் பிரபாகரன்.
முதலாளிய உலகில் பெண்ணினம் ஈவிரக்கமற்ற முறையில் சுரண்டப்படுகிறது. தொழிலில் சமத்துவமின்மை நிலவுகிறது. ஆணாதிக்க வன்முறை தாண்டவமாடுகிறது. மிகவும் ஆபாசமான விளம்பரப் படிமங்களாகப் பெண்கள் சித்தரிக்கப்படுகிறார்கள். குடும்பச் சீரழிவு, விவாகரத்துப் போன்ற பிரச்சினைகள் மேலோங்கி வருகின்றன. இப்படியாக மேற்குலகிலும் பெண் பிரச்சினை புதிய வடிவங்கள் எடுத்து வருகிறது.
பெண் ஒடுக்குமுறைக்கு மூலகாரணம் முதலாளித்துவ உற்பத்தி முறை என சோசலிசவாதிகள் வாதாடினர். தனியார் சொத்துடமையின் தோற்றமும், வளர்ச்சியும் ஆணாதிக்க அதிகார உறவுகளை உருப்பெறச் செய்து, பெண் அடிமைத்தனத்திற்கு வழிகோலியதாக வரலாற்று ஆய்வுகளை வைத்து வாதாடினார் ஏங்கெல்ஸ். தனியார் சொத்துடமை ஒழிக்கப்பட்டு, சமத்துவமான பொருள் உற்பத்தி அமைப்புக் கட்டியெழுப்பப்பட்டால் பெண் ஒடுக்குமுறை அகன்றுவிடும் என்றார் லெனின். பெண்ணின் விடிவிற்குச் சோசலிச சமுதாய மாற்றமே ஒரே வழி என்ற கருத்து வலுப்பெற்றது. அன்றைய சோசலிச பெண்நிலைவாதிகளும் இந்தத் தத்துவக் கோட்பாட்டை ஏற்றுக் கொண்டனர். விரக்தி அடைந்து, விடுதலை வேண்டி நின்ற பெண்ணினம், சோசலிசப் புரட்சிப் போராட்டங்களில் அணிசேர்ந்து கொண்டது. பெண்ணினத்தின் முழுமையான பங்களிப்போடு பல நாடுகளில் சோசலிசப் புரட்சிகள் நிகழ்ந்தன. தனியார் சொத்துடமை ஒழிக்கப்பட்டது. முதலாளியப் பொருள் உற்பத்தி முறை மாற்றியமைக்கப்பட்டது; சோசலிசப் பொருளாதாரம் நிர்மாணிக்கப்பட்டது. என்றுமில்லாதவாறு பெண்ணினம் பொருள் உற்பத்தித் துறையில் ஈர்க்கப்பட்டது.
சோசலிச நாடுகளில் பெண்ணின் பொருளாதார வாழ்க்கைநிலை உயர்ந்து, சமூக அந்தஸ்தும் மேம்பட்டது என்பது உண்மை. வீட்டுக்குள் முடங்கிப் போயிருந்த பெண்ணினம் கல்வி வாய்ப்புப் பெற்று, தொழில் வாய்ப்புப் பெற்று, பொருளாதார தங்குநிலையிலிருந்து விடுதலை பெற்று, தனித்துவமாகத் தனது வாழ்க்கையைத் தானே நிர்ணயித்துக் கொள்ளும் அளவிற்குச் சுதந்திரமான வாழ்வுநிலையைப் பெற்றுக்கொள்ள முடிந்தது.
‘ஆயினும் இந்த நாடுகளில் பெண் ஒடுக்குமுறை முற்றாக நீங்கியபாடில்லை. சமதர்ம சமூக உலகத்திலும் பெண்ணிற்குச் சமநீதி கிடைத்ததாகக் கூறிவிட முடியாது’ என்ற உண்மை நிலையைச் சுட்டிக் காட்டுகிறார் பிரபாகரன்.
சோசலிச உலகில் பெண்ணின ஒடுக்குமுறை புதிய பரிமாணங்களில் தோற்றப்பாடு கண்டது. தேச நிர்மாணம் என்ற புதிய இலட்சியத்துடன், சுயாதீனப் பொருளாதார வாழ்வைப் பெறப் பொருள் உற்பத்திக் களத்தில் குதித்த பெண்களுக்குக் குடும்பச் சுமை அதிகரித்தது. வீட்டுத் தொழிலும், வெளித் தொழிலுமாகப் பெண்கள் இரட்டைப் பழுவைச் சுமக்க வேண்டியிருந்தது. குடும்பப் பொறுப்புக்களைப் பகிர்ந்து கொள்ள ‘கம்யூனிஸக் கணவர்கள்’ மறுத்தனர். தாய்மை என்ற கோட்பாட்டை வலியுறுத்திச் சோசலிச அரசுகள் இன உற்பத்தியை ஊக்குவித்தன. பொருள் உற்பத்தியும், இன உற்பத்தியும், வீட்டுப் பொறுப்புகளுமாகச் சோசலிசப் பெண்ணின் மீது சுமை ஏறியது.
பொதுவுடமைச் சமதர்மம் ஆணாதிக்கத்தையும், அதனால் எழும் அதிகார அடக்குமுறை உறவுகளையும் அசட்டை செய்தது. இதனால் வீட்டு நிர்வாகத்திலும், நாட்டு நிர்வாகத்திலும் ஆணின் சர்வாதிகாரத்தைப் பெண்ணினம் எதிர்கொண்டது. இதனால் சமதர்ம உலகில் பெண்ணிற்குச் சமநீதி கிட்டவில்லை.
‘இந்த சமூகப் பரிசோதனை அனுபவங்களிலிருந்து நாம் ஒரு உண்மையைக் கண்டுகொள்ளலாம். அதாவது பொருளுலகத்தை எந்த வடிவங்களில் சீரமைத்தாலும் ஆண்களின் மனோவுலகில், பெண்மை பற்றிய அவர்களின் கருத்துலகில் ஆழமான மாற்றங்கள் நிகழாமல் பெண் சமத்துவம் சாத்தியமாகப் போவதில்லை.
பெண்ணினத்தின் விடுதலை நோக்கிய பாதையில் அவர்களது சமூக, பொருளாதார வாழ்வு மேம்படுவது அவசியம் என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆயினும் அதேவேளை ஆண்-பெண் உறவிலும், அந்த மானசீக உலகிலும் மாற்றங்கள் தேவை. உண்மையான சமத்துவம் என்பது ஆண்-பெண் உறவில் எழும் ஆழமான புரிந்துணர்வில்தான் சாத்தியமாகிறது’ என்கிறார் பிரபாகரன்.
சமத்துவம் என்ற இலட்சியத்தை அடைய அடிப்படையான மனித உரிமைகளையும், சுதந்திரங்களையும் பெண்ணினம் வென்றெடுப்பது அவசியம். அத்துடன் கல்வியும், வேலை வாய்ப்பும் அவர்களது சமூக அந்தஸ்தையும், பொருளாதார வாழ்வையும் உயர்வடையச் செய்யும் என்பது உண்மை. பெண் விடுதலைக்கு இவை அடிப்படையானவை. ஆயினும், சமத்துவத்திற்கு இவை மட்டும் போதாது. ஆணின் மேலாதிக்கம் அகல வேண்டும்; ஆண்-பெண் உறவில் முரண்பாடுகள் நீங்கள் வேண்டும். இதற்கு ஆழமான புரிந்துணர்வு வேண்டும். சோசலிசச் சமுதாயப் பரிசோதனைகள் இந்த எதார்த்த உண்மையை உணர்த்தத் தவறவில்லை என்பதே பிரபாகரனின் வாதம்.
மூன்றாம் உலகில் பெண்களின் நிலைமை மிகவும் மோசமானது. இங்கு பெண்கள் மிகவும் அநாகரிகமான முறையில் அடக்கப்படுகிறார்கள். வறுமையும், அறியாமையும், புராதனக் கருத்துலகின் மூடநம்பிக்கைகளும் பெண்ணினத்தை விலங்கிட்டு வைத்திருக்கின்றன. இங்குதான் பெண் விடுதலை மிகவும் முனைப்புடன் முன்னெடுக்கப்பட வேண்டிய ஒரு வரலாற்றுத் தேவையாக எழுந்திருக்கிறது. தமிழீழமும் இந்த மூன்றாம் உலகின் ஒரு அங்கமாக இருக்கின்றது.
தமிழீழ மக்கள் ஒரு தனித்துவமான வரலாற்றுப் புறநிலைக்கு முகம்கொடுக்க வேண்டியுள்ளனர். இங்கு பெண்ணினம் எதிர்கொள்ளும் ஒடுக்குமுறை வடிவங்கள் பிரத்தியேகமானவை; தனக்கே உரித்தான எதார்த்த புறநிலைகளால் உருவாக்கப்பட்டவை.
‘எமது சமூகக் கட்டமைப்பில் பெண்ணினம் மிகவும் மோசமான ஒடுக்குமுறை வடிவங்களை எதிர்கொண்டு நிற்கிறது. மிகவும் பின்தங்கிய சமூகப் பொருளாதார வாழ்வு ஒரு புறமும், அரச அடக்குமுறை அழுத்தங்கள் மறுபுறமும், ஆணாதிக்கக் கொடுமைகள் இன்னொரு புறமுமாகப் பல பரிமாணங்களில் எமது பெண்கள் ஒடுக்குமுறையைச் சந்திக்கிறார்கள்.
நீண்ட நெடுங்காலமாக எமது சமூகத்தில் வேரூன்றி வளர்ந்த மூட நம்பிக்கைகளும், இந்த மூட நம்பிக்கைகளிலிருந்து தோற்றம் கொண்ட சமூக வழக்குகளும், சம்பிரதாயங்களும், எமது பெண்களின் வாழ்க்கையைச் சீரழித்து வருகின்றன. ஆணாதிக்க அடக்குமுறையாலும், வன்முறையாலும், சாதியம், சீதனம் என்ற கொடுமைகளாலும் தமிழீழப் பெண்ணினம் விபரிக்க முடியாத துன்பங்களை அனுபவித்து வருகிறது.’ இவ்வாறு தமிழீழப் பெண்ணினத்தின் பிரச்சினைகளைக் குறிப்பிட்டுக் காட்டுகிறார் பிரபாகரன்.
எமது தனித்துவமான சமூகச் சூழலிலிருந்தும், எம்மை வியாபித்து நிற்கும் வரலாற்றுப் புறநிலை நிர்ப்பந்தங்களிலிருந்தும் எமது பெண்ணினம் எதிர்நோக்கும் ஒடுக்குமுறையின் தன்மைகள் இங்கு சுட்டிக் காட்டப்படுகின்றன. இதில் பிரதான முரண்பாட்டு வடிவமாகப் பிரத்தியேகத்தன்மை பெற்றிருப்பது பேரினவாத அரச அடக்குமுறையாகும். அரச ஒடுக்குமுறையின் பேரழுத்தங்கள், தேசிய ரீதியில் முழு இனத்தையுமே பாதித்த போதும், பெண்ணினமே மிக மோசமான கொடுமைகளுக்கு ஆளாகின்றது. விதவைகளாக, அகதிகளாக, அனாதைகளாக அல்லற்படுவதும், எதிரியின் பாலியல் வன்முறைக்கு ஆளாகி மானபங்கப்படுவதும், குடும்ப வாழ்வு சீரழிந்து அவலப்படுவதும் பெண்ணினமே. இந்த இனவாத அடக்குமுறையானது, பெண் சமூகத்தின் அடிப்படையான வாழ்வுரிமைக்கே பெரும் அச்சுறுத்தலாக அமைந்திருக்கிறது.
எனவே ஆக்கிரமிப்பிற்கும், அடக்குமுறைக்கும் ஆளாகியுள்ள எமது தேசத்தின் சுதந்திரத்திற்காகப் போராடுவது தமிழீழப் பெண்ணினத்தின் முதன்மையான தேசியப் பணியாக அமைகிறது. எமது தாயக பூமி மீட்டெடுக்கப்படாமல் பெண்ணினம் சுதந்திரமாக, கௌரவமாக வாழ்வதென்பது சாத்தியமில்லை.
‘எதிரியால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் எமது மண்ணை முதலில் மீட்டெடுப்பது இன்றைய வரலாற்றுத் தேவை. இந்த வரலாற்று நிர்ப்பந்தத்தை நாம் அசட்டை செய்ய முடியாது. எமது மண்ணின் விடுதலை, பெண்ணின் விடுதலைக்கு மட்டுமன்றி எமது இனத்தின் விடுதலைக்கும் அத்திவாரமானது’ என்கிறார் பிரபாகரன்.
எமது தேசம் எதிர்கொண்டு நிற்கும் எதார்த்தப் புறநிலை உண்மைகள், வரலாற்று நிர்ப்பந்தங்கள் ஆகியவற்றின் அடிப்படையிலும், எமது சமுதாயத்தில் பெண்ணினம் முகம்கொடுக்கும் ஒடுக்குமுறை வடிவங்களையும் கருத்திற்கொண்டே பெண் விடுதலைக்கான தனது போராட்டத் திட்டத்தைப் புலிகள் இயக்கம் நெறிப்படுத்தி உள்ளது. பெண் விடுதலை நோக்கிய இப்போராட்டத் திட்டம், எமது விடுதலை இயக்கத்தின் பிரதான அரசியற் குறிக்கோள்களில் ஒன்றாக முன்னெடுக்கப்படுகிறது. அரசியல், சமூக, பொருளாதாரப் பரிமாணங்களைக் கொண்டதாக, மிகவும் சிக்கலான பிரச்சினையாக வடிவங்கொண்டுள்ள பெண் ஒடுக்குமுறை, பல முனைகளில், ஒரே காலகட்டத்தில் எதிர்கொள்ள வேண்டிய போராட்டமாக அமைந்துவிட்டது. இதன் அடிப்படையில் பெண் விடுதலை என்ற புலிகளின் இலட்சியக் குறிக்கோளுக்கு ஒரு வரைவிலக்கணம் கொடுக்கிறார் பிரபாகரன்.
‘பெண் விடுதலை எனும் பொழுது அரச அடக்குமுறையில் இருந்தும், சமூக ஒடுக்குமுறைகளில் இருந்தும், பொருளாதாரச் சுரண்டல்களில் இருந்தும் பெண்ணினம் விடுதலை பெறுவதையே குறிக்கின்றோம். எனவே, எமது இயக்கம் வடிவமைத்துள்ள பெண் விடுதலைப் போராட்டமானது தேச விடுதலை, சமூக விடுதலை, பொருளாதார விடுதலை என்ற குறிக்கோள்களைக் கொண்ட மும்முனை விடுதலைப் போராட்டமாக முன்னெடுக்கப்படுகின்றது.’
தேசிய ரீதியில், சமூக ரீதியில், பொருளாதார ரீதியிலாக மும்முனைகளில் பெண் விடுதலைக்கான போர் முனைப்புறுவதாயின், பெண்ணினம் முதலில் மனோ ரீதியாகச் சமூகத்தின் கருத்துலக மாயையிலிருந்து விழிப்படைய வேண்டும் என்பதையும், பிரபாகரன் வலியுறுத்தத் தவறவில்லை.
பெண்ணடிமைவாத மூட நம்பிக்கைகளில் பிறப்பிடம் கருத்துலகம்.
எமது சமூகத்தின் பழமைவாதக் கருத்துலகம், பெண்மையின் தன்மை பற்றிப் பொய்மைகளைப் புனைந்து விட்டிருக்கிறது; பெண்மையை இழிவுபடுத்தும் படிமங்களைப் படைத்திருக்கிறது. பெண்மை பற்றிய தவறான எண்ணக் கருக்களை விதைத்து விட்டிருக்கிறது. இந்தச் சித்தாந்த உலகம் சிருஸ்டித்து விட்டிருக்கும் மனவுலகச் சுவர்களுக்குள் பெண்ணினம் சிறைபட்டுக் கிடக்கிறது.
‘இந்த ஒடுக்குமுறைச் சிறையிலிருந்து விடுதலை பெறுவதானால், பெண்ணினம் முதலில் தனக்கெதிராக ஏவப்பட்டு வரும் ஒடுக்குமுறையின் தன்மைகளைப் புரிந்து கொள்ள வேண்டும். தனது சீரழிந்த வாழ்க்கை நிலையைச் சீரமைத்துக் கொள்வதானால், பெண்ணினம் தனது இழிநிலை பற்றி விழிப்புக் கொள்ள வேண்டும். தலைவிதி என்றும், கர்மவினை என்றும், தனக்காக விதிக்கப்பட்ட மனுநீதி என்றும், பழமை என்றும், பண்பாட்டுக் கோலமென்றும் காலங்காலமாக மனவுலக இருளுக்குள் முடங்கிக் கிடந்த பெண்ணினம் விழித்தெழ வேண்டும்’ என விளக்கம் கொடுக்கிறார் பிரபாகரன்.
பெண்ணினத்தின் விடுதலைக்குப் பெரும் முட்டுக்கட்டையாக இருப்பது பெண்ணினத்தின் அறியாமையாகும். இது பெண்ணடிமைத்தனத்திற்கு ஒரு பிரதான காரணியாக இருந்து வருகிறது. எனவே பெண்ணினம் முதலில் தன்னைப் பற்றி, தனது வாழ்க்கை நிலையைப் பற்றி, தனது சுதந்திரத்திற்கும், கௌரவத்திற்கும் இடையூறாக இருந்து வரும் சக்திகள் பற்றிப் புரிந்து கொள்ள வேண்டும். இந்த அரசியல், சமூக விழிப்புணர்வு பெண் விடுதலைப் போராட்டத்திற்கு அத்திவாரமாகிறது.
‘விழிப்படைந்து எழுச்சிக் கொள்ளும் பெண்ணினமே ஒரு போராட்ட சக்தியாக உருப்பெற முடியும்; அந்தப் போராட்ட சக்தியால்தான் ஒடுக்குமுறை விலங்குகளை உடைத்தெறிய முடியும்’ என்கிறார் பிரபாகரன்.
பொருளுலகம், அரசியல் உலகம், சமூக உலகம், கருத்துலகம் என்ற வகையில் பல்வேறு பரிமாணங்களில் பெண் ஒடுக்குமுறையின் சிக்கலான அம்சங்களைச் சுட்டிக் காட்டும் பிரபாகரன், இறுதியாக ஆண்-பெண் உறவின் அர்த்தத்தையும், அதன் முக்கியத்துவத்தையும் எடுத்து விளக்குகிறார்.
‘மனித உறவுகளில் அடிப்படையானது ஆண்-பெண் உறவு. இந்த உறவு சாதாரண சமூக உறவு அல்ல. இது மனித உயிர் இயக்கத்திற்கும், மனித இன விருத்திக்கும் மூலமானது. மனித இனத்தின் வளர்ச்சிக்கும், உயர்ச்சிக்கும் ஆதாரமானது’ எனக் குறிப்பிடும் பிரபாகரன், ‘ஆண்-பெண் உறவில் எழும் அபசுரங்களாகவே இன்று பெண்ணினம் எதிர்கொள்ளும் பல அவலங்கள் தோற்றம் பெறுகின்றன’ என்கிறார்.
பெண் ஒடுக்குமுறை என்பது ஒரு சமூகப் பிரச்சினை. பாலியல் ரீதியான ஒரு அதிகார உறவுப் பிரச்சினை. இதில் உள்ள சமூக, அரசியல், பொருளாதார உறவுகளின் முரண்பாட்டுக் கோலங்களையும், சமூக எண்ணவியக்கத்தின் ஆதிக்கத்தையும் யாரும் மறுக்க முடியாது. ஆயினும் இப் பிரச்சினையில் இன்னும் ஒரு பிரதான அம்சமாக ஆண்-பெண் உறவும், அதன் அகவுலகப் பரிமாணங்களும் இருக்கத்தான் செய்கின்றன.
தாம்பத்திய உறவு என்பது மனித உறவுகள் எல்லாவற்றிற்குமே மூலாதாரமானது. குடும்பமே சமுதாயத்தின் மூலக்கூறு.
ஆண்-பெண் உறவும், அந்த உறவால் பின்னப்படும் குடும்ப வாழ்வும் ஒரு முரண்பாட்டுத் தளமாக மாறும் பொழுது, அந்த முரண்பாடுகளின் பூதாகர வெளிப்பாடுகளாகப் பெண் ஒடுக்குமுறை வடிவங்கள் தோற்றப்பாடு கொள்கின்றன.
ஆணாதிக்கமும், அதனால் எழும் அதிகார உறவுகளும் நீங்கிப் பெண் சமத்துவம் நிலவுவதானால், ஆண்-பெண் உறவில் அடிப்படையான மாற்றங்கள் தேவை. மனவுலகப் புரட்சி தேவை. ஆண்களின் அக உலகில்தான் இந்தப் புரட்சிகரமான மாற்றம் அவசியமாகிறது. ஆணினத்தின் விழிப்புணர்விலும், புரிந்துணர்விலும் இது தங்கியிருக்கிறது.
‘ஆணும், பெண்ணும் ஒத்திசைவாக, ஒருவர் மற்றவரின் சுதந்திரத்தையும், சமத்துவத்தையும், கௌரவத்தையும் மதித்து, குடும்ப வாழ்வின் பொறுப்புக்களைப் பகிர்ந்து, சமூகத்தின் மேம்பாட்டிற்கு உழைத்து, பரஸ்பர புரிந்துணர்வுடன் பற்றுக் கொண்டு வாழ்ந்தால், இந்தப் பால் வேறுபாட்டால் எழும் பல்வேறு முரண்பாடுகள் நீங்கும். இந்த அன்புறவின் ஆழமான அர்த்தத்தையும், முக்கியத்துவத்தையும் ஆண் இனம் புரிந்துகொள்ளும் பொழுதுதான் ஆணாதிக்கமும், அதனால் எழும் அதிகார அடக்குமுறைகளும் அகன்றுவிட வாய்ப்புண்டு’ என்கிறார் பிரபாகரன்.
பெண் விடுதலை சம்பந்தமாகப் பிரபாகரனின் தத்துவார்த்தக் கண்ணோட்டத்தை இங்கு பார்த்தோம். பிரபாகரனின் கருத்துக்கள் பெண் பிரச்சினை சம்பந்தமாக விடுதலைப் புலிகள் இயக்கம் வரித்துள்ள குறிக்கோள்களையும், கொள்கைத் திட்டங்களையும் எடுத்து விளக்குவதாகவும் அமையப் பெற்றிருக்கிறது. ஒரு விடுதலை இயக்கத்துடன் அணிசேர்ந்து கொள்வதன் மூலமே பெண்ணினம் தனது விடுதலை நோக்கிய இலட்சியப் பாதையில் வெற்றிபெற முடியும் என்பதும், அப்பொழுதுதான் போராட்டமும் முதிர்ச்சி பெற்று, முழுமை பெறும் என்பதும் தலைவர் பிரபாகரனின் கருத்து.
பெண் விடுதலை சம்பந்தமாகத் தத்துவார்த்தக் கோட்பாடுகளை மட்டும் வரித்துக் கொள்வதில் அர்த்தமில்லை. கொண்ட கொள்கையை உருப்படியான முறையில் நடைமுறைப்படுத்தி வெற்றிகாண வேண்டும் என்பதில் பிரபாகரன் உறுதியான நம்பிக்கை உடையவர். இதன் பிரகாரம் 1984ஆம் ஆண்டிலிருந்தே விடுதலைப் புலிகள் இயக்கம் பெண் விடுதலை அமைப்புக்களைக் கட்டியெழுப்பியது.
பெண் விடுதலைக்குக் களம் அமைத்துக் கொடுத்த புலிகள் இயக்கத்துடன், ஆயிரமாயிரம் புரட்சிப் பெண்கள் அணிசேர்ந்து கொண்டனர். தேசிய விடுதலை, சமூக விடுதலை என்ற மூலாதாரக் கொள்கையின் அடிப்படையில், இராணுவ-அரசியல் கட்டமைப்புக்களாக மகளிர் படைப் பிரிவும், மகளிர் முன்னணியும் உருவாக்கப்பட்டடு விரிவாக்கப்பட்டது. தென்னாசிய வரலாற்றிலேயே முதன் முதலாக, முழுமையான மகளிர் படையணி தோற்றங் கொண்டது. போர்த் திறனும், துணிவும், தியாகமும் மிக்க பெண் போராளிகள் போர்க்களத்தில் பிரமிக்கத்தக்க சாதனைகளை ஈட்டினர்; தமிழரின் தேசிய விடுதலைப் போராட்டத்தில் ஒரு வரலாற்றுத் திருப்புமுனை ஏற்பட்டது.
‘மண்மீட்புப் போர்க்களத்தில் இன்று தமிழ் இளம் பெண்கள் ஆயுதம் ஏந்தி நிற்கின்றார்கள். முழு உலகமுமே வியக்கும் வகையில் அபாரமான அர்ப்பணிப்புக்களைச் செய்து வருகிறார்கள். விடுதலைப் புலிகளின் மகளிர் படைப் பிரிவின் தோற்றமும், வளர்ச்சியும், எழுச்சியும் எமது இயக்கம் படைத்த மாபெரும் சாதனைகளில் ஒன்று என்பதை நான் பெருமிதத்துடன் கூறமுடியும். தமிழீழப் பெண்ணினத்தின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் இது ஒரு புரட்சிகரமான திருப்பத்தைக் குறித்து நிற்கிறது’ என்கிறார் பிரபாகரன்.
இவ்விடயத்தில் தலைவர் பிரபாகரன் மட்டுமன்றி, முழுத் தமிழினமுமே பெருமை கொள்ள வேண்டும்.