ஈழநாதம், 15.01.1993
தலைவர் பிரபாகரனை நேரில் சந்திக்கும் வாய்ப்பு ஏற்படுமென அவர் எதிர்பார்க்கவில்லை போலும். அதனால்தான் என்னவோ தலைவரை நேரில் சந்தித்த பொழுது அங்கிலிக்கன் ஆயர் தனது ஆச்சரியத்தை வார்த்தைகளில் வடித்து விட்டார். ‘‘நீங்கள்தான் உண்மையில் பிரபாகரனா? அல்லது பிரபாகரனின் ஆவிதான் இங்கு காட்சி தருகிறதா?’’ என்றார்.
இது ஆவி உலகம் இல்லை என்பது போல தலைவர் பிரபாகரனும் அங்கிருந்தவர்களும் சிரித்தார்கள்.
‘‘பிரபாகரன் பற்றி எத்தனையோ புரளிக் கதைகளையும், பொய்களையும் தென்னிலங்கையில் சிங்கள மக்கள் மத்தியில் திரித்து விடுகிறார்கள். பிரபாகரன் உயிருடன் இல்லை என்பதும் இப்படியான ஒரு கட்டுக்கதை’’ என்று கொழும்பு ஆயர் விளக்கம் கூறினார்.
சிங்கள தேசம் எத்தகைய மாயையில் வாழ்ந்து வருகிறது என்பதை நன்கு புரிந்து கொண்டவர் போல் தலைவர் மெல்லிய புன்முறுவலுடன் தலையசைத்தார். அன்றைய சந்திப்பு வரலாற்றில் பதிந்த ஒரு நிகழ்வு.
மூன்று முக்கிய திருச்சபைகளின் ஆயர்களும் அவர்களது பிரதிநிதிகளும் ஒன்றாகக் கலந்து கொண்டது இந்நிகழ்வின் சிறப்பம்சமாக அமைந்தது.
அங்கிலிக்கன் திருச்சபை ஆயர் கிளாலிக் கடலில் பௌத்த தர்மத்தின் காருண்யத்தை நேரில் தரிசித்து வந்திருக்கிறார். தலைவர் பிரபாகரனின் அரசியல் நாடியைத் தொட்டுப் பார்க்க வேண்டும் என்பது அவரது ஆவல். மற்றைய இருவரும் யாழ்ப்பாணத்தைத் தளமாகக் கொண்டவர்கள். குடாநாட்டு மக்கள் சுமக்கும் துன்பச் சிலுவையின் பளுவை நன்கறிந்தவர்கள். இவர்கள் மூவரும் தலைவரை நேரில் சந்தித்துக் கலந்து உரையாடிய இச்சம்பவம் விசேடமானது.
‘‘நேரில் வந்து நிலைமையைக் கண்டறியும் பொழுதுதான் உண்மை புரிகிறது. எதார்த்தம் விளங்குகிறது. மக்களின் அவலங்களையும், ஏக்கங்களையும் உணர முடிகிறது. தமிழர் வாழும் உலகத்தை, அவர்களது வாழ்வுநிலை உண்மைகளைத் தென்னிலங்கை அரசியல்வாதிகள் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை’’ என்று ஆரம்பித்த அங்கிலிக்கன் ஆயர், சிங்கள தேசத்தில் ஒரு பெரிய மனமாற்றம் ஏற்பட்டு வருவதாகக் கூறினார்.
‘‘சிங்கள மக்கள் யுத்தத்தை வெறுக்கிறார்கள். தமிழர் பிரச்சினைக்கு ஒரு முடிவு கட்ட விரும்புகிறார்கள். இதனால் சிங்களவரிடையே சிந்தனை மாற்றம் தோன்றியிருக்கிறது. சமஸ்டிக் கோட்பாடு பற்றி சிந்திக்கும் அளவிற்கு ஒரு முற்போக்கான மாற்றம் நிகழ்ந்திருக்கிறது’’ என்று உடனடியாகவே அரசியல் உலகத்தில் பிரவேசித்தார் அங்கிலிக்கன் ஆயர்.
‘‘சமஸ்டி அமைப்பு முறை ஒரு புதிய சிந்தனையோட்டம். இது பாராளுமன்ற தெரிவுக் குழுவில்தான் உருவாக்கம் பெற்றது. முக்கிய சிங்களக் கட்சிகள் இந்தக் கோட்பாட்டை ஏற்றுக் கொண்டமை ஒரு பெரிய அரசியல் திருப்பத்தை சுட்டிக் காட்டுகிறது அல்லவா?’’ என்று கூறிய ஆயர், தலைவர் பிரபாகரனைக் கேள்விக்குறியுடன் பார்த்தார்.
தலைவர் மிகவும் நிதானமாகப் பதில் அளித்தார்.
‘‘சமஸ்டிக் கோட்பாடு தமிழ் அரசியலுக்குப் புதிய விடயமல்ல. சமஸ்டி என்ற கோசத்தின் அடிப்படையில் தமிழர் தாயகம் இரு மாகாணங்களாகப் பிரிக்கப்படுவதைக் கொழும்பிலுள்ள தமிழ் அரசியல் குழுக்களே வன்மையாக எதிர்க்கின்றன என்பதை நீங்கள் அறிவீர்கள். எம்மைப் பொறுத்தவரை தாயகக் கோட்பாடு தமிழரின் தேசியப் பிரச்சினைக்கு அடிப்படையானது. தமிழ்த் தாயகத்தைக் கூறுபோடும் எந்த ஒரு திட்டத்தையும் தமிழ் மக்கள் அங்கீகரிக்கப் போவதில்லை’’ என்று விளக்கினார் தலைவர் பிரபாகரன்.
தெரிவுக் குழுவின் அரசியல் தீர்வுத் திட்டம் பற்றிய சிக்கலான சர்ச்சையை இந்தச் சந்திப்பில் தவிர்ப்பது நல்லது எனப் புலிகள் தரப்பில் கூறப்பட்ட யோசனையைச் சகலரும் ஏற்றுக் கொண்டனர். தெரிவுக் குழுவின் தீர்க்கமான முடிவு இன்னும் தெரியவில்லை. அப்படியிருக்க உத்தேச திட்டங்கள் பற்றி விவாதிப்பதில் பயனில்லை. தமிழ் மக்களைப் பாதிக்கும் பொதுப் பிரச்சினைகள் பற்றியும், சமாதானச் சூழ்நிலையை உருவாக்குதற்கான வழிவகைகள் பற்றியும் கலந்துரையாடுவது பொருத்தமானது என எல்லோரும் இணங்கியதை அடுத்து கிளாலி விவகாரம் பற்றிப் பேசப்பட்டது.
‘‘அரசாங்கத்தின் நடவடிக்கைகளையும், இராணுவத்தின் அட்டூழியங்களையும் உன்னிப்பாகக் கவனித்தால் ஒரு உண்மை புலனாகும். அதாவது இந்த யுத்தம் என்பது மக்களுக்கு எதிராகவே ஏவிவிடப்படுகிறது. கிளாலிப் பாதை விவகாரம் இதற்கு நல்ல உதாரணம். போக்குவரத்துப் பாதைகளைத் தடை செய்து குடாநாடு மீது திணிக்கப்பட்டுள்ள முற்றுகை பொதுமக்களையே பெரிதும் பாதிக்கிறது. குடாநாட்டுப் பாதைகளைத் தடை செய்ததால் விடுதலைப் புலிகளின் நகர்வுகள், போக்குவரத்துக்கள் எவ்வகையிலும் பாதிப்பிற்கு உள்ளாகவில்லை. ஆனால் மக்கள்தான் பெரும் துன்பத்திற்கும், அவலத்திற்கும் ஆளாகியுள்ளார்கள். எனவே இந்த யுத்தம் தமிழ் மக்களுக்கு எதிரானதாகவே திட்டமிட்டு நடத்தப்படுகிறது’’ என்று விளக்கினார் தலைவர் பிரபாகரன்.
‘‘போரின் கொடூரத்தை மக்களுக்கு எதிராகத் திருப்பிவிட்டு, மக்கள் மீது தாங்கொணாத் துன்பப் பளுவைச் சுமத்தி, மக்களைப் புலிகள் இயக்கத்திற்கு எதிராக மாற்றிவிடலாம் என அரசு திட்டமிட்டுச் செயற்படுகிறது. குடாநாட்டு முற்றுகையும், பாதைத் தடைகளும், கண்மூடித்தனமான குண்டுவீச்சுக்களும் இதைத்தான் எடுத்துக் காட்டுகின்றன. இந்த நடவடிக்கைகளால் எமது மக்கள் அரசு மீது வெறுப்பும், ஆத்திரமும் அடைந்து வருகிறார்கள்’’ என்றார் தலைவர்.
குடாநாட்டு மக்களின் அவலநிலை பற்றி ஏனைய திருச்சபையின் ஆயர்களும், குருவானவர்களும் எடுத்து விளக்கினார்கள். இந்தக் கலந்துரையாடலை அடுத்து ஆயர்களைத் தனித்தனியே சந்தித்துப் பேசினார் தலைவர். விடுதலைப் புலிகளின் நிலைப்பாடு பற்றி அங்கிலிக்கன் ஆயரிடம் தலைவர் கூறியதாவது:
‘‘அரசியல் தீர்வு நோக்கிய பாதைக்கு முதற்படியாகச் சமாதானச் சூழல் அவசியம். பரஸ்பர நல்லெண்ணம் அவசியம். ஆனால் அரசாங்கமோ இராணுவ நெருக்குதலையும், பொருளாதார நெருக்கடியையும் எமது மக்கள் மீது திணித்தபடி தீர்வுத் திட்டங்கள் பற்றி ஆராய்ச்சிகளை நடத்துகிறது. போரைத் தொடர்ந்தபடி பேச்சுக்களை ஆரம்பிக்க விரும்புகிறது. இந்த அணுகுமுறை நியாயமானதல்ல. நடைமுறைக்குச் சாத்தியமானதுமல்ல.
அரசாங்கம் உண்மையில் எமது மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண விரும்பினால் மக்களின் நம்பிக்கையைப் பெறும் வகையில் சில நல்லெண்ண முயற்சிகளை மேற்கொள்ளலாம் அல்லவா? போக்குவரத்துப் பாதைகளுக்கு தடை போடுவது ஒரு அநீதியான செயல். மிகவும் சிரமத்துடன் அப்பாதையூடாகப் பயணம் செய்பவர்களை படுகொலை செய்வது மிகவும் கொடுமையானது. இந்த அட்டூழியங்களை நிறுத்திப் பூநகரிப் பாதையை அரசு திறந்து விட வேண்டும். பூநகரியிலிருந்து இராணுவத்தை விலக்கிக் கொண்டு மக்கள் பாதுகாப்பாகப் போக்குவரத்துச் செய்ய அரசு நடவடிக்கை எடுத்தால் என்ன? சமாதானத்திற்கு வழியமைக்கும் நல்லெண்ண முயற்சியாக இதனை அரசு செய்யலாம் அல்லவா?’’ என்று கூறினார் பிரபாகரன்.
‘‘போர்நிறுத்தம் செய்து, சமாதானச் சூழலை உருவாக்க அரசு தயங்குகிறது என்பது உண்மை. ஏனென்றால் இந்தப் போர் ஓய்வு இடைவெளியைப் பயன்படுத்தி நீங்கள் உங்களை ஆயுத ரீதியில் பலப்படுத்திக் கொள்ளலாம் என அரச வட்டாரங்களில் சந்தேகம் நிலவுகிறது’’ என்றார் ஆயர்.
‘‘நாம் ஆயுதப் படைகளிடம் இருந்து ஆயுதங்களைப் பறித்து எம்மைப் பலப்படுத்திக் கொள்கிறோம். இந்த வகையில் போர் ஓய்வு எமக்கு இராணுவ ரீதியில் அனுகூலமானது என எண்ணுவது தவறு. அரசுக்குத்தான் இது அனுகூலமாக அமையலாம். தொடர்ந்தும் அரசாங்கம் வெளிநாடுகளிலிருந்து ஆயுதங்களைத் தருவித்துத் தன்னைப் பலப்படுத்திக் கொள்ளவே செய்யும். போர் தொடர்ந்தாலும், போர் நிறுத்தப்பட்டாலும் அரசு தனது இராணுவ இயந்திரத்தைப் பலப்படுத்தவே முயற்சிக்கும். இதனை யாராலும் தடுக்க முடியாது’’ என்று பதிலளித்தார் பிரபாகரன்.
‘‘அரசாங்கம் நல்லெண்ணம் காட்ட வேண்டுமெனக் கூறுகிறீர்கள். ஆனால் நீங்கள் முதலில் ஒரு நல்லெண்ண முயற்சியை மேற்கொண்டால் என்ன?’’ என்று கேட்டார் அங்கிலிக்கன் ஆயர்.
‘‘என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கள்’’ என்றார் பிரபாகரன்.
‘‘உங்களின் பாதுகாப்பில் உள்ள ஒரு சில யுத்தக் கைதிகளை விடுதலை செய்வீர்களா? அரசினதும் சிங்கள மக்களினதும் நல்லெண்ணத்தைப் பெற இது பெரிதும் உதவும்’’ என்றார் ஆயர்.
‘‘நாளைக்கே இரண்டு போர்க் கைதிகளை விடுதலை செய்கிறேன். உங்களிடமே அவர்களை ஒப்படைத்து விடுகிறேன். நீங்கள் கொழும்பு திரும்பும்போது அவர்களை அழைத்துச் செல்லலாம்’’ என்றார் தலைவர்.
ஆச்சரியத்தில் அதிர்ந்து போனார் ஆயர்.
‘‘உங்கள் கருணை உள்ளத்தைப் பாராட்டுகிறேன். இது சமாதானத்திற்குக் கிடைத்த வெற்றி’’ என மகிழ்ச்சி பொங்கக் கூறினார் ஆயர்.
‘‘சிங்கள தேசத்திலிருந்து சமாதானத் தூதுவர்களாக யாழ்ப்பாணம் வர விரும்புகிறவர்களை அனுமதிப்பீர்களா? நான் அடுத்த தடவை வரும்பொழுது சில முக்கிய பௌத்த குருமார்களையும், புத்திஜீவிகளையும் அழைத்து வர விரும்புகிறேன்’’ எனக் கேட்டார் ஆயர்.
“நிச்சயமாக எமது சமாதானக் கதவுகள் திறந்திருக்கின்றன’’ என்று சிரித்தபடியே கூறினார் தலைவர்.
ஆயர் தனது உள்ளங்கனிந்த நன்றியைத் தெரிவித்தார்.
அன்றைய சந்திப்பு இனிதே முடிந்தது. மறுநாள் இரு சமாதானப் புறாக்கள் சிறைக்கூட்டிலிருந்து சுதந்திரமாக வெளியே பறந்தன. அதேநாள் இரு போர்க்கழுகுகள் மட்டுவில் கிராமம் மீது இராட்சதக் குண்டுகளை வீசிவிட்டுச் சென்றன.