ஈழநாதம், 16.07.1993
புத்தபிரான் போதித்தார்.
தோற்றம், மாற்றம், மறைவு என்ற சூட்சுமச் சுழற்சியில் காலம் நகர்கிறது. ஓய்வு இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் கால நதியில், கணத்திற்குக் கணம் தோன்றி மறையும் குமிழிகள் போன்றது மனித வாழ்க்கை. இந்த நிலையற்ற வாழ்க்கையில், பிறப்பிலிருந்து இறப்பு வரை தேகத்தின் பளுவைச் சுமந்து நிற்கிறான் மனிதன். நோயும், பிணியும், உடல்நலிந்த முதுமையும், சாவுமாக மனித வாழ்வு சோகத்தில் தோய்ந்து கிடக்கிறது. மனிதத் துயரங்கள் எல்லாம் ஆசையிலிருந்து பிறப்பு எடுக்கின்றன. ஆசைகள் எல்லாம் அறியாமையிலிருந்து தோற்றம் கொள்கின்றன. ஆசையின் பிடியிலிருந்து மீட்சிபெறாதவரை சோகத்தின் சுமையிலிருந்து மனிதன் விடுபட முடியாது. உனக்கு உள்ளே, உனது அக உலகத்தில் பொய்யாகக் கவிந்து கிடக்கும் அறியாமை இருளிலிருந்து நீ விடுதலை பெறுவதாயின், மெய்ஞான வெளிச்சத்தைத் தேடிக் கொள். அந்த ஞானோதயத்தில்தான் உனக்கு விடிவு உண்டு.
தர்மத்தின் மகத்துவம் பற்றியும் சித்தார்த்த முனிவர் போதித்தார்.
இந்தப் பிரபஞ்சமும் சரி, மனித வாழ்வியக்கமும் சரி தர்மத்தின் சக்கரத்திலேயே சுழல்கிறது. பிரபஞ்ச ஒருங்கிசைவிற்கும், இன்னிசைவான மனித வாழ்விற்கும் தர்மம் ஆதாரமானது. அன்புறவில், சகோதரத்துவப் பண்புறவில் பின்னப்படும் மனித உறவுகளில் சமூக தர்மம் தழைத்தோங்கும்.
பௌத்தம் ஓர் ஆழமான ஆன்மீக தரிசனம். அன்பையும், அறத்தையும், ஆசைகள் அகன்ற பற்றற்ற வாழ்வையும், தர்மத்தையும் வலியுறுத்தி நிற்கும் தார்மீக தத்துவம். இந்தத் தார்மீக மரபில், இந்த ஆன்மீகக் கருத்துலகில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக வேரூன்றி வளர்ந்த சிங்கள மனிதனின் மன அமைப்பில், மிகவும் கொடிய இனவாத விசம் புகுந்து கொண்டது எப்படி? மிருகத்தனமான வன்முறைக் கோரத்தாண்டவம் ஆடுவது எங்ஙனம்?
இந்தக் கேள்விக்கு விடைகாணும் முயற்சியாக அண்மையில் ஒரு நூல் வெளிவந்திருக்கிறது. ‘மனிதன் மட்டுமே இழுக்கானவன்’ என்ற விசித்திரமான தலைப்பில் அமெரிக்கப் பத்திரிகையாளரான வில்லியம் மக்கோவன் இந்த நூலை எழுதியிருக்கிறார்.
சுவர்க்கம்போல இது ஒரு அழகான தீவு. இங்கு எல்லாம் நிறைவாக இருக்கிறது. ஆனால் இங்கு வசிக்கும் மனிதர்கள் அசிங்கமானவர்கள். இழுக்கானவர்கள். இப்படியாக கிறிஸ்தவ ஆயர் ஒருவர் அன்றொரு காலம் ஆயிரத்து எண்ணூறுகளில் சிங்களவர்களின் குணவியல்பு பற்றிக் குறிப்பிட்டு இருந்தார். இந்தப் பண்புருவ சித்திரத்தைச் சமகால, கடந்தகால வரலாற்று நிகழ்வுகளை ஆதாரமாகக் காட்டி எடுத்து விளக்க முயல்கிறார் மக்கோவன். இந்த நூலை ஒரு சீரியஸான வரலாற்று ஏடாகக் கொள்ள முடியாது. அந்த ஆய்வு முறைமையில் இது எழுதப்படவில்லை. இதனை ஒரு அங்கத சித்திரமாக ரசிக்கலாம். ஒரு வெளிநாட்டுப் பத்திரிகையாளன், அதுவும் ஒரு இளம் அமெரிக்க எழுத்தாளன், தனது பண்பாட்டு உலகின் வரம்பிற்குள் நின்றபடி சிங்களவர்களின் சிதைந்துபோன நாகரீகத்தையும், அவர்களின் இன்றைய அவல நிலையையும் மிகவும் வியப்புடனும், திகைப்புடனும் பார்ப்பதுபோல இன்னூல் எழுதப்பட்டிருக்கிறது. இலங்கையின் இனப்பிரச்சினையின் அடிப்படைகள் எதையும் ஆழமாகத் தொடாமல், சிங்களப் பேரினவாதக் கருத்துநிலை ஆதிக்கத்தையும், அதன் தோற்றப்பாடாகத் தலைவிரித்தாடும் சிங்கள அரசியல் வன்முறையின் அசிங்கமான முகத்தையும் வரைந்துவிட முனைகிறார் ஆசிரியர்.
மகாவம்சம் புனைந்துவிட்ட புரளிகளால் சிங்கள இனம் வழிதவறிச் சென்று பேரினவாதப் படுகுழிக்குள் விழுந்துவிட்டதாக எழுதுகிறார் நூலாசிரியர். பௌத்தத்தின் புராணக் கதைகளைப் புகுத்திக் கௌதமரின் மெய்யியல் தரிசனத்தை சிதைத்தது மட்டுமல்லாமல், சிங்களவர்களின் வரலாற்றையும் மகாவம்சம் தலைகீழாகத் திரித்துவிட்டு இருக்கிறது. ஆதித் திராவிட மக்கள் கூட்டம் ஒன்றைத் தூய ஆரிய இனக்குழுவெனத் திரிவுபடுத்தி ஒரு பொய்யான எண்ணக்கருவை ஆழமாக விதைத்துவிட்டது. பரிசுத்தமான மதம், பரிசுத்தமான இனம், பரிசுத்தமான பூமி என்ற ரீதியில் மதவாதமும், இனவாதமும், தேசியவாதமும் ஒன்றுகலந்த ஒரு விபரீதமான பேரினவாதக் கருத்துலகம் படைக்கப்பட்டது. சிங்கள இனம் தனது மூலத்தையும், தனித்துவத்தையும் தவறாகக் கற்பிதம் செய்வதற்கு மகாவம்சம் வழிகோலியது. இந்தப் புராணத்துப் பொய்யை இன்றைய சிங்கள புத்திஜீவிகளும், வரலாற்று ஆசிரியர்களும் ஆதாரமின்றி, விசாரணையின்றி விழுங்கிக் கொண்டதாக நூலாசிரியர் விமர்சிக்கிறார்.
சிங்கள-பௌத்த பேரினவாதம் இன்றொரு தேசிய சித்தாந்தமாக சிங்கள தேசத்தில் மேலாதிக்கம் செலுத்தி வருகிறது என்கிறார் நூலாசிரியர். இந்தக் கருத்தாதிக்க எழுத்திற்கும், மறுமலர்ச்சிக்கும் வித்திட்டவர்களில் முதன்மையானவர் அனகாரிக தர்மபாலா. இவர் மகாவம்ச புராணத்திற்கு உயிர் ஊட்டி, ஒரே நாடு, ஒரே இனம், ஒரே மதம் என்ற ரீதியில் பேரினவாதப் பூதத்தைத் தட்டி எழுப்பினார். பண்டாரநாயக்கா பேரினவாதத்தை அரசியல் மயப்படுத்தினார். இன்று இந்தக் கருத்தாதிக்கம் பாடசாலைகள், பல்கலைக் கழகங்களிலிருந்து, பத்திரிகைத்துறை வரை ஊடுருவி நிற்கிறது. மாணவனோ, புத்திஜீவியோ, எழுத்தாளனோ சுயமாகச் சிந்திக்க முடியாதவாறு சிங்கள மூளையத்தை இந்தக் கருத்துலகம் சிறைப்பிடித்து வைத்திருக்கிறது. பௌத்த பண்பாடு என்ற பெயரில் இங்கு பெரியதொரு கலாச்சார சீரழிவு ஏற்பட்டு இருக்கிறது எனக் குறிப்பிடும் நூலாசிரியர், அன்றொரு காலம் தர்மத்தின் இருப்பிடமாகத் திகழ்ந்த இந்தத் தீவு இன்று இனவாத நரகமாக மாறிவிட்டது என்கிறார். இந்திய-இலங்கை ஒப்பந்த காலகட்டத்தில் இலங்கையில் தங்கியிருந்த சமயத்தில் தான் நேரில் கண்டவற்றையும், மற்றவர்கள் மூலம் அறிந்து கொண்டதையும் சம்பவக் கோவையாகத் தொகுத்துக் கதை சொல்லும் நடையில் சுவாரசியமாக இந்நூலை எழுதியிருக்கிறார் மக்கோவன். வடக்குக் கிழக்கில் இந்திய-புலிகள் யுத்தமும், தெற்கில் ஜே.வி.பியின் கிளர்ச்சியும் நேரில் கண்ட விபரணையாக சித்தரிக்கப்படுகின்றன. இந்திய இராணுவம் யாழ்ப்பாணம் மீது நிகழ்த்திய படையெடுப்பும், விடுதலைப் புலிகளின் துணிவுமிக்க எதிர்ப்பியக்கமும், மக்களின் அவலங்களும் இந்நூலில் மேலெழுந்தவாரியாகச் செய்தி அறிக்கை போலப் பதிவாகிறது. யாழ்ப்பாண யுத்தச் செய்திகளைத் திரட்ட வேண்டும் என்ற ஆவலில் குடாநாடு வந்தபோது, போர்ச் சூழலைக் கண்டு பயந்து அவசர அவசரமாகத் திரும்பிச் சென்றுவிட்டதால் இந்திய-புலிகள் யுத்தத்தின் காரணிகளையோ, அன்றி இந்திய இராணுவ அட்டூழியங்களையோ இவரால் செம்மையாகச் சித்தரித்துக் காட்ட முடியவில்லை.
21.10.1987 அன்று நானும், யோகியும் இந்த நூலாசிரியரை வெளிநாட்டுப் பத்திரிகையாளர் சிலருடன் வடமராட்சியில் ஒரு வீட்டில் சந்தித்தோம். போர் நிலைமையை விளக்கிப் பேட்டி நடந்து கொண்டிருந்த போது யாழ் போதனா வைத்தியசாலையில் அன்று நிகழ்ந்த படுகொலைச் சம்பவம் பற்றி எமக்குத் தகவல் கிடைத்தது. இந்திய இராணுவத்தின் இந்த அட்டூழியத்தை நாம் இப்பத்திரிகையாளர்களுக்குக் கூறியபோது, எவருமே அதை நம்பவில்லை. இந்தச் செய்திக்கு தகுந்த சான்றுகள் வேண்டும் என மக்கோவன் வலியுறுத்தினார். இந்தச் சம்பவத்தை நேரில் கண்ட வைத்தியர் ஒருவரை அழைத்துப் பேட்டி கொடுக்க நாம் ஏற்பாடு செய்தோம். ஆனால் அதுவரை தம்மால் காத்திருக்க முடியாது என்றும், உடனடியாகக் குடாநாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றும் இப்பத்திரிகையாளர்கள் அடம்பிடித்தனர். நாம் மன்றாட்டமாகக் கேட்டும் பயன் ஏற்படவில்லை. அன்று யாழ்ப்பாண நிலத்தில் கால்வைக்காது பறக்க வேண்டும் என்று துடித்துக் கொண்டு நின்றவர் இந்த அமெரிக்கப் பத்திரிகையாளர். இந்திய இராணுவத்தின் படுகொலைகள் பற்றி வதந்திகள் கிடைத்ததே தவிர சான்றுகள் கிடைக்கவில்லையென ஐயப்பாட்டுடன் இந்த நூலில் இவர் குறிப்பிட்டிருக்கிறார். பயத்தில் பறக்கும் பத்திரிகையாளருக்கு சான்றுகள் எப்படிக் கிடைக்கும்?
தமிழரின் தேசியப் பிரச்சினையும், விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டமும், அவற்றின் ஆழமான பரிமாணங்களில் அலசப்படாமல், மேல்புல் மேய்ச்சலாகத் தொடப்பட்டிருக்கிறன. தனது அவதானிப்பைவிட மற்றவர்களின் பதிப்புகள், மதிப்பாய்வுகளை ஆதாரமாகக் கொண்டே மக்கோவன் இந்த நூலை எழுதியிருக்கிறார். பௌத்த பேரினவாதத்தின் கோரத்தாண்டவமும், அது பிரவாகம் எடுக்கும் சிங்கள மனிதனின் மனவியல்பும் நூலாசிரியரின் கவனத்தை ஈர்த்து இருக்கிறது.
இது ஒரு கனமான ஆய்வு நூல் அல்ல. சாதாரண வாசகரைக் கவரக்கூடிய இலகுமொழியில் எழுதப்பட்டிருக்கும் இந்நூல், சிங்கள-பௌத்த பேரினவாதத்தை மேற்குலகிற்கு அறிமுகப்படுத்தி வைக்கிறது. சாதாரண மேற்குலக வாசகர், சிங்கள வன்முறை அரசியலின் பின்னணியைப் புரிந்துகொள்ள இது உதவும்.
இந்த நூல் கொழும்பு அரசியல் வட்டத்தில் ஒரு சிலுசிலுப்பை ஏற்படுத்தி விட்டிருக்கிறது. புனித மதத்தையும், தூய ஆரியக் கோட்பாட்டையும் இந்நூல் நகைப்பிற்கு இடமாக்கி இருப்பதால், பேரினவாதிகள் கொதிப்படைந்து இருக்கிறார்கள்.
‘‘இது ஒரு அபத்தமான குப்பை. வாசித்து முடிந்ததும் இந்தப் புத்தகத்தைக் குப்பைத் தொட்டிக்குள் வீசிவிட்டேன்’’ என்று பிரபல சிங்கள எழுத்தாளர் தனது மதிப்பாய்வில் கோபத்தைக் கொட்டியிருக்கிறார்.
என்றாலும், மேற்குலகில் தமிழர்கள் இந்நூலை தேடிப்பெற்று வாசித்து இரசிப்பதாக எனது நண்பர் ஒருவர் கூறினார்.