ஈழநாதம், 01.01.1993
ஒரு யுத்தத்தின் போக்கை நிர்ணயிப்பது ஆட்பலமோ அல்லது ஆயுத பலமோ அல்ல. மிகவும் நுட்பமாகத் தயாரிக்கப்படும் போர்முறைத் திட்டங்களே ஒரு போரின் விளைவுகளைத் தீர்மானித்து விடுகிறது.
நில எதார்த்தத்தையும், மற்றும் புறநிலை உண்மைகளையும் மிகவும் துல்லியமாகக் கணிப்பிட்டு, எதிரியின் பலத்தையும், பலவீனத்தையும் சரியாக எடைபோட்டு, எதிர்விளைவுகளை மதிப்பீடு செய்து, இவற்றின் அடிப்படையில் நெறிப்படுத்தப்படும் போர்த்திட்டங்கள் ஒரு யுத்தத்தை நகர்த்திச் செல்ல உறுதுணையாக அமைகின்றன. இந்த வகையில் போர்முறைத் திட்டங்களை வகுப்பது ஒரு பிரத்தியேகமான, நுணுக்கம் மிக்க கலைத்திறன்.
எதிரியின் யுத்த நோக்குகளையும், உபாயங்களையும் முன்கூட்டியே தீர்க்க தரிசனத்துடன் அனுமானித்தறிந்து, இதற்கேற்ப போர்த் திட்டங்களை வகுப்பது போர்க்கலையில் ஒரு சிறப்பம்சம். எதிரியின் போர்த் திட்டங்களை முறியடித்து, எதிரியை நிலைகுலையச் செய்வதற்கு இது இன்றியமையாதது. கடந்த பத்தாண்டுப் போரை ஒட்டுமொத்தமாக மதிப்பீடு செய்கையில், சிங்கள படைத்துறைத் தலைமையின் போர்த்திட்டங்களை நடைமுறைச் சாத்தியமற்றதாக்கிச் செயலிழக்கச் செய்தமையே விடுதலைப் புலிகள் ஈட்டிய மிக முக்கிய போர்ச்சாதனை எனலாம். இந்தப் போர் இலக்கை அடையும் வகையில், கடந்தாண்டு புலிகளின் தாக்குதற் திட்டங்கள் அமைந்தன. இந்த நுட்பமான போர்த்திட்டத்தை வகுத்து, அதை மிகவும் சாதுரியமாக நடைமுறைப்படுத்திய பெருமை தலைவர் பிரபாகரனைச் சாரும். 1991ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியிலேயே யாழ் குடாநாடு மீது படையெடுப்பதற்கான பாரிய போர்த்திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டது.
புலிகளின் கோட்டை எனக் கருதப்படும் யாழ் குடாநாட்டைக் கைப்பற்றி, அங்கு சிங்கள ஆட்சியதிகாரத்தை நிறுவினால்தான் தமிழீழத்தில் விடுதலைப் புலிகளின் இராணுவ மேலாதிக்கத்தைத் தகர்த்து விடலாம் எனப் பிரேமதாசா அரசு எண்ணியது. ஆனையிறவு, மணலாறு சமர்களில் பெரும் உயிரிழப்பைச் சந்தித்து நின்ற புலிகளால், மரபுவழிப் போர்முறையில் முப்படைகளின் பெரும் கூட்டுத்தாக்குல்களை ஈடுகொடுத்துப் போரிடுவது கடினம் என அரசு தரப்பில் மதிப்பீடு செய்யப்பட்டது.
சிங்கள இராணுவத் தலைமையின் இந்தத் தாக்குதல் திட்டம் பற்றித் தலைவர் பிரபாகரன் அறிந்திருந்தார். இராணுவத்திடம் முன்முனைப்புச் செயற்பாட்டை விட்டுக் கொடுத்து, ஆபத்துக்கள் நிறைந்த தற்காப்புப் போரில் சிக்கிக் கொள்வதைத் தவிர்ப்பதானால், முன்முனைப்பைத் தன் கையில் வைத்துக் கொள்ள வேண்டும் எனக் கருதிய அவர், அதற்கேற்ப புதிய உத்திகளைக் கொண்ட போர்த்திட்டம் ஒன்றை வகுத்து, உடனடியாகவே அதனைச் செயற்படுத்தினார். இராணுவத்தின் போர்த்திட்டத்தை முறியடித்துச் செயலிழக்கச் செய்வதே தலைவர் பிரபாகரனின் போர்த் தந்திரோபாயமாக அமைந்தது.
கடந்தாண்டின் ஆரம்பத்திலிருந்தே இந்தத் தாக்குதல் திட்டம் முழுமுனைப்புடன் செயலாக்கம் பெற்றது. எதிரியின் நிலைகள் மீது ஓயாத, தணியாத, இடைவிடாத தாக்குதல்கள் தொடுக்கப்பட்டன. எதிரி தன்னைச் சுதாகரித்துக் கொண்டு உதவிபெற்று எதிர்த் தாக்குதல்களைத் தொடுப்பதற்கு இடமளியாத வண்ணம், புலிகளின் இராணுவ நடவடிக்கைகள் பெரும்பாலும் இரவில் மின்னல் வேகத்தில் இடம்பெற்றன. பெரும் தாக்குதல்கள்கூட ஒரு சில மணிநேரமே நீடித்தன. எதிரியின் முன்னணிப் பாதுகாப்பு நிலைகள், காவலரண்கள், இராணுவ வேலிகள் தொடர்ச்சியாக மாறி, மாறித் தாக்கி அழிக்கப்பட்டன. ரோந்து அணிகள் நிர்மூலம் ஆக்கப்பட்டன. எதிரியின் எல்லைவரை போர் விரிவாக்கம் கண்டது. தரைப் போருடன் நிற்காது, கடற்பரப்பிலும், ஆகாயத்திலும் புலிகளின் தாக்குதல் நீண்டது. எதிரி இராணுவம் என்றுமில்லாதவாறு இரத்தம் சிந்தியது.
தலைவர் பிரபாகரனின் புதிய போர்த் தந்திரோபாயம் சிங்களப் படைகளை நிலைகுலையச் செய்தது.
இராணுவம் முன்முனைப்பை இழந்தது. படையெடுப்புத் திட்டங்கள் செயலிழந்தன. விடுதலைப் புலிகள் முன்னெடுத்த இந்த யுத்த தந்திரோபாயம், கெரில்லாப் போர்முறைப்பாணியிலான அதிரடித் தாக்குதல்களாக மட்டும் அமையவில்லை. பெரும் படையணிகள் ஒழுங்கமைக்கப்பட்ட பாரிய தாக்குதல்களைக் கொண்டதாகவும் இப்போர்முறை அமைந்தது. இத் தாக்குதல் வடிவத்தை நகர்வுப் போர்முறை என முன்னைய வியட்னாமிய தளபதி ஜெனரல் ஜியாப் வர்ணிக்கிறார். பெரும் படையுடன் திடீர் தாக்குதலை நடத்திவிட்டுத் துரித கெதியில் படைகளை இடம் நகர்த்தும் இப்போர்முறையானது, கெரில்லாப் போரின் பரிணாம வளர்ச்சியையும், உயர்வடிவ விரிவாக்கத்தையும் குறித்துக் காட்டுகின்றது. கெரில்லாப் போர் உத்திகளும், மரபு வழிப்படை நகர்த்தல் அம்சங்களும் ஒன்றிணைத்த இப்புதிய போர்முறைத் திட்டம், கடந்தாண்டில் முதன் முதலாகத் தலைவர் பிரபாகரனால் அறிமுகம் செய்யப்பட்டது. இது எமது போர் வரலாற்றில் புதிய திருப்புமுனையாகவும் அமைந்தது.
எதிரிக்குப் பெரும் உயிர்ச் சேதத்தை விளைவித்தல், போராளிகளின் உயிரிழப்பை வெகுவாகக் குறைத்தல், எதிரியின் ஆயுதங்களைப் பறித்தெடுத்தல், எதிரியின் முன்முனைப்பை சிதறடித்தல், எல்லாவற்றிற்கும் மேலாக எதிரியின் தாக்குதல் திட்டங்களைச் செயலிழக்கச் செய்தல் – இவ்வாறான போர் இலக்குகளைக் கொண்ட இத் தாக்குதல்முறை, விடுதலைப் புலிகளுக்குப் பெரும் வெற்றியை ஈட்டிக் கொடுத்தது. சிறிய அளவு கெரில்லா அதிரடிகளாகவும், பெரிய அளவிலான நகர்வுத் தாக்குதல்களாகவும் தொடர்ச்சியாக இடம்பெற்ற இத்தாக்குதல்களில் எதிரியின் ஆட்பலத்தில் பாரிய அளவு சிதைவு ஏற்பட்டது. பெருமளவு உயிரிழந்து, ஊனம் அடைந்தவர்கள் ஒருபுறமிருக்க, மனமுடைந்து படையிலிருந்து விலகி ஓடியவர்களின் தொகையும் பெரிதாக வீங்கியதால், எதிரியின் எதிர்த் தாக்குதல் சக்தி வலுக்குறைந்தது. இதனால் எதிரி இராணுவம் படையெடுப்புக்களைத் தவிர்த்து, பாதுகாப்புத் தேடிக் கொள்ளும் நிர்ப்பந்தத்திற்குள் தள்ளப்பட்டது.
எமது இயக்கப் போர்ச் சக்தியின் வரம்புகளுக்கு உட்பட்டதாக, எமது தனித்துவமான பூகோள-அரசியல் புறநிலை எதார்த்தத்திற்கு அமைய, முழுக்க முழுக்கத் தாமாக வரித்துக் கொண்ட போர்த் திட்டங்கள், தந்திரோபாயங்களின் அடிப்படையில் நாம் எமது விடுதலை யுத்தத்தைக் கட்டம் கட்டமாக முன்னோக்கி நகர்த்துகிறோம். இந்நிலையில் போர்வடிவ விரிவாக்கம் என்பது எமது ஆயுத, ஆட்பல வளங்களின் தன்மையில் மட்டுமன்றி, மிகவும் நுட்பமாக நெறிப்படுத்தப்படும் போர் யுக்திகளின் திண்ணியமான விளைவுகளிலும், போராளிகளின் அபாரமான உறுதிப்பாட்டிலுமே தங்கி நிற்கிறது.
உலக விடுதலைப் போராட்டங்களின் வளர்ச்சி நிலைகளும், போர்வடிவ விரிவாக்கங்களும், அப்போராட்டங்களில் அரசியல் ஆதிக்க அக்கறையும், பொருண்மிய நலனும் கொண்ட வெளிநாடுகளின் நேரடி அல்லது மறைமுக ஆயுத உதவிகளால் நிச்சயிக்கப்படுகின்றன. எமது விடுதலைப் போராட்டத்தின் நிலையோ வேறு. எந்த ஒரு நாட்டினதும் ஆயுத உதவியோ அல்லது அரசியல் ஆதரவோ அல்லது தார்மீகப் பக்கபலமோ இன்றி தனித்து நின்று, தனது கால்களில் நிலைத்து நின்று, எதிரியின் ஆயுதங்களைப் பறித்தெடுத்து, அந்த ஆயுத பலத்தையே ஆதாரமாகக் கொண்டு உலகம் திகைத்து நிற்கும் வகையில் ஒரு தேசிய விடுதலைப் போரை முன்னோக்கி நகர்த்திச் செல்வது என்பது நினைத்துப் பார்க்க முடியாத இமாலய கைங்கரியம். இந்த மலையான பழுவைத் தனியாகச் சுமந்து தமிழரின் விடுதலைப் போரை வழிநடத்தி வருகிறார் தலைவர் பிரபாகரன்.
இந்த ஆண்டு யுத்தத்தில் எதிரியின் ஆயுத தளபாட வளத்தில் ஒரு பகுதி அழிவுக்கு உள்ளாகி இருக்கிறது.
இன்னொரு பகுதி புலிகளுக்குக் கைமாறி இருக்கிறது. கோடிக்கணக்கில் பணத்தைக் கொட்டி, உலகெங்கும் இருந்து ஆயுதங்களைத் தருவித்து, அதில் கணிசமான தொகையை எதிரியானவன் புலிகளிடம் ஒப்படைத்து விடுகிறான். எதிரியின் ஆயுதங்களைப் பாவித்து, எதிரியின் ஆயுதங்களைப் பறித்தெடுத்து, அந்த ஆயுத பலத்தின் ஆதாரத்தில் தனது இராணுவ பலத்தைக் கட்டி எழுப்பும் புலிகளின் போர் உத்தி தனக்கே உரித்தான தனிச்சிறப்பு வாய்ந்ததாகும். இந்தத் தந்திரோபாயத்தின் அடிப்படையில் பார்க்குமிடத்து, எந்த அளவிற்குப் புலிகள் எதிரியின் இராணுவ பலத்தை வலுவிழக்கச் செய்தார்களோ, அந்த அளவுக்குப் புலிகளின் இராணுவ பலம் வலுப்பெறும் எனத் திட்டவட்டமாகச் சொல்லலாம். புலிகளின் அடுத்த கட்ட வளர்ச்சிப் பரிமாணம் இந்தத் தந்திரோபாயத்தில் தங்கியிருக்கிறது.
புலிகளின் தேசத்தில் அகலக் கால் நீட்டுவதும், நீட்டிய காலை நிலையாக வைத்திருப்பதும் மிகவும் ஆபத்தான விவகாரம் என்பதைச் சென்றாண்டுப் போரிலிருந்து சிங்கள அரசு உணர்ந்திருக்கலாம். ஊடுருவிய பகுதிகளில் பெருந்தொகையான படைகளை முடக்கி வைத்து, ஆளில்லாப் பிரதேசங்களில் ‘ஆட்சி’ புரிந்து வரும் இராணுவத்துக்குப் போதாக்குறைக்கு ஆட்பற்றாக்குறையும் ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் நில ஆக்கிரமிப்பு என்ற பொறியில் மீண்டும் விழுந்து கொள்ள சிங்கள இராணுவம் முனைகிறது. இதன் பாரதூரமான விளைவுகளை அது சந்தித்தே ஆக வேண்டி வரும்.
புலிகளை அழிக்கும் இலக்குடன், ஒருபுறம் போரைத் தீவிரமாக முடுக்கிவிட்டு, மறுபுறம் தமிழரின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காண்பது என்ற பிரேமதாசாவின் கேலிக்கூத்தான அணுகுமுறை, சென்ற ஆண்டு படுதோல்வியைச் சந்தித்திருக்கிறது. இந்தப் போரும், தீர்வும் என்ற அரசியல் இரட்டை அணுகுமுறை அடிப்படையிலேயே தவறானது. எந்தப் போராட்ட சக்தியுடன் பேசிப் பிரச்சினையைத் தீர்க்க வேண்டுமோ, அந்தப் போராட்ட சக்தியை அந்நியப்படுத்தி அழித்துவிட்டுப் பிரச்சினைக்குத் தீர்வு காணலாம் என்ற இந்த அணுகுமுறை சாத்தியமற்றது என்பது ஒருபுறம் இருக்க, இது சிங்களப் பேரினவாதிகளின் அரசியல் அசட்டுத்தனத்தையே வெளிக்காட்டுகின்றது.
போர்நிறுத்தத்துக்குத் தயார்; பேச்சுவார்த்தைக்குத் தயார்; சமாதானக் கரங்களைப் பற்றிக் கொள்ளத் தயார் எனக் காலத்திற்குக் காலம் தொடர்ச்சியாகப் புலிகள் இயக்கம் பகிரங்கப் பிரகடனங்கள் மூலம் நல்லெண்ண சமிக்ஞைகளைக் காட்டிய போதும், பிரேமதாசா அரசு அதனைச் செவிசாய்க்கவில்லை.
பிரேமதாசா அரசு போரைத் தொடர விரும்புகிறது. தமிழரைப் போர் அழுத்த நெருக்கடிக்குள் திணற வைத்துப் பேரம்பேச விரும்புகிறது. அதனால் போர்நிறுத்தம் செய்து, சமாதானச் சூழ்நிலையை உருவாக்காமல், யுத்தத்தைத் தொடர்ந்தபடி யாருக்கும் தெரியாமல், இரகசியமாகப் புலிகளுடன் அந்தரங்கப் பேச்சை நடத்த விரும்புகிறது. இந்த யோசனையை நாம் ஏற்க முடியாது. தொடரும் யுத்தத்தில் எமது போராளிகளும், பொதுமக்களும் சாவையும், அழிவையும் சந்தித்து நிற்க, நாம் எதிரியுடன் கைகோர்த்து நின்று சமரசப் பேச்சுக்களை நடத்த முடியாது.
இது ஒருபுறமிருக்க சிங்கள அரசுடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு ஒரு அடிப்படை வேண்டுமல்லவா? அப்படியான ஒரு அடிப்படையை சிங்கள தேசம் இதுவரையும் முன்வைக்க மறுத்து வருகிறது. எமது இலட்சியம் என்னவென்பது உலகறிந்த விவகாரம். எனவே மாற்றுத்திட்டத்தை எமது பரிசீலனைக்கு முன்வைப்பது சிங்கள அரசியல்வாதிகளின் பொறுப்பு அல்லவா? ஆனால் அவர்களுக்கு இன்னும் அந்த அக்கறையோ, துணிவோ பிறக்கவில்லை.
விக்கிரமாதித்தனின் வேதாளம் போல, பிரேமதாசாவின் தெரிவுக் குழுவும் மீண்டும் பேரினவாத முருங்கையில் ஏறி இருக்கிறது. ஒரு வருடத்திற்கு மேலாகக் கூடிப்பேசிக் கலந்தாலோசித்து, விசாரணை செய்து, விவாதங்கள் நடத்தி இறுதியில் தமிழரின் தேசியப் பிரச்சினையின் அடிப்படைகள் எதையுமே தொடாது தெரிவுக் குழு கேலிக்கூத்தான ஒரு தீர்வை வழங்கியிருக்கிறது. இந்தத் தீர்வு தமிழ் மக்களுக்கு ஒரு உண்மையைத் தெளிவாகப் புலப்படுத்தியது. சிங்களப் பேரினவாதம் ஒருபொழுதும் தமிழருக்கு நீதி வழங்கப் போவதில்லை என்ற உண்மையை வலுப்படுத்தியது. நாமாகவே போராடி எமது உரிமையை வென்றெடுக்க வேண்டும் எனக் காலம் காலமாகப் புலிகள் இயக்கம் பிரகடனம் செய்துவந்த கூற்று, இன்று அரசியல் மெய்யுண்மையாகித் தமிழ் மக்களை ஆழமாகச் சிந்திக்க வைத்திருக்கிறது.