(சாத்தானின் படைகள் நூலிற்கு எழுதிய முன்னுரை)
வெளியீடு: 1990
தமிழீழத்தில் இந்தியப் படையின் தலையீடு இந்தியா விட்ட ஒரு மாபெரும் தவறு என்பதை உலகம் இன்று ஏற்றுக் கொண்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் மீது இந்தியா நடாத்திய போரால் பெருமளவில் உயிர் இழப்புக்கள் ஏற்பட்டன. பெரும் செலவுடன், மிக நீண்டகாலம் இந்தியாவால் நடாத்தப்பட்ட இப்போரில், இந்தியப் படைக்கு ஏற்பட்ட தோல்வி இந்தியாவுக்கும், இந்தியப் படைக்கும் பெரிய அவமானத்தைக் கொடுத்துள்ளது.
இந்திய ஆக்கிரமிப்பு எவருக்கும் எதுவித பயனையோ, நன்மையையோ தரவில்லை; மாறாக எதிர்விளைவுகளையே கொடுத்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைப்பீடத்தால் மேற்கொள்ளப்பட்ட சாதுர்யமான அரசியல் இராஜதந்திரச் சாணக்கியத்தாலும், விடுதலைப் புலிகளின் உக்கிரமான போர்த் தாக்குதல்களாலும் இந்தியப் படையினரின் திட்டங்கள் யாவும் தவிடு பொடியாகின.
இந்திய – புலிகள் போரில், அதன் முரண்பட்ட தன்மையை, அப்போரின் இறுதி விளைவிலிருந்து நன்கு உணர்ந்து கொள்ளலாம்.
- அமைதிப் படை என்று சொல்லிக் கொண்டு வந்தவர்கள், மிகவும் கொடூரமான, மனிதத் தன்மையற்ற ஒரு போரை நடாத்தினார்கள்.
- ஆயுதக் களைவு என்று சொல்லிக் கொண்டு வந்தவர்கள், பயங்கரமான ஆயுதங்களைக் கொடுத்துத் ‘தமிழ்த் தேசிய இராணுவம்’ என்ற கைக்கூலிகள் பட்டாளத்தை உருவாக்கினார்கள்.
- தமிழ் பேசும் மக்களின் பாதுகாப்பு என்று நுழைந்தவர்கள், தமிழ், முஸ்லிம் மக்களைப் படுகொலை செய்தார்கள்.
- விடுதலைப் புலிகளை அழித்து, ஒழிக்க இந்தியா தீட்டிய திட்டங்கள், அவர்கள் இன்று அரசியல் ரீதியாகவும், இராணுவ ரீதியாகவும் மிகவும் சக்தி வாய்ந்த இயக்கமாக வளரே வழிவகுத்தது.
இந்திய அரசின் தவறான கணிப்பீடும், விளைவுகளும்
72 மணிநேரத்தில் வெற்றியடையும் இராணுவ நடவடிக்கை என்று கூறி இந்தியாவால் புலிகள் மீது 10-10-87 அன்று தொடங்கப்பட்ட போரானது 720 நாட்களுக்கு மேலாக நீடித்தது மட்டுமல்லாமல், இந்தியப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட மிக நீண்டகாலப் போராகவும் மாறியது. இந்தப் போரில் நேரடியாகப் பாதிக்கப்பட்டவர்கள் தமிழ் பேசும் மக்களேயாவர். தமிழ்-முஸ்லிம் மக்கள் இப்போரினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டார்கள். இந்தியப் படை மிகக் குறுகிய காலத்துக்குள்ளேயே வெற்றியடைய விரும்பியது. ஆனால் போர் நீண்டது. தமக்கேற்பட்ட பலத்த சேதத்தினால் ஆத்திரமடைந்து, மனவிரக்தியடைந்து, ஒழுங்கீனமாக நடந்த இந்தியப் படையினர், போர்முறையின் தர்மங்கள், நடைமுறைகள் சகலவற்றையும் மீறி இரக்கமில்லாது நடந்தார்கள்.
பொதுமக்கள் மீது தாக்குதல்
விடுதலைப் புலிகளின் கடுமையான, உக்கிரமான எதிர்த்தாக்குதலைச் சமாளிக்க முடியாத இந்தியப் படையினர், பாதுகாப்பற்ற அப்பாவிப் பொதுமக்களின் இருப்பிடங்களை நோக்கித் தொலைதூர ஏவுகுண்டு (ஆட்லறி, மோட்டார் செல்)களால் தாக்கினார்கள். இந்த இரக்கமற்ற தாக்குதல் குடிமக்களுக்குப் பெரிதும் சேதத்தை உண்டாக்கியது.
ஆரம்பத்தில் இரண்டு வாரங்களுக்கு மேலாக நடந்த யாழ்ப்பாணப் போரினால், இரண்டாயிரத்துக்கும் அதிகமான தமிழ் மக்கள் கொல்லப்பட்டார்கள். 5000க்கும் மேற்பட்ட மக்கள் காயமடைந்தார்கள்; ஐந்து இலட்சத்துக்கு (500,000) மேற்பட்ட மக்கள் அகதிகளானார்கள். போரில் முன்னேறிச் சென்ற இந்தியப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட இரத்தப் படுகொலைகளும், பயங்கரத் தாக்குதல்களும், ஆதரவற்ற அகதிகள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களும் மனிதத்தன்மையற்ற காட்டுமிராண்டித்தனமான செயலாகவே இருந்தன. விடுதலைப் புலிகள் மீது தொடுக்கப்பட்ட இப் போரானது, இறுதியில் பொதுமக்கள் மீது நிகழ்த்தப்படும் ஒரு தாக்குதலாகவே மாறியது.
இந்தியப் படைகள் கொல்லப்படும் போது பதிலுக்குச் சாதாரண பொதுமக்கள் கொல்லப்படுவது சாதாரண சம்பவமாகவே மாறியிருந்தது. இதில் மிகப் பயங்கரமானது யாழ் அரசினர் வைத்தியசாலை மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் இந்தியப் படையினர் ஈவிரக்கமில்லாமல், மனிதாபிமானமற்று வைத்தியர்கள், தாதிகள், வெளிநோயாளர்கள், தங்கியிருந்த நோயாளிகள் உட்பட 60க்கும் அதிகமானோரைக் கொன்றனர். யாழ்ப்பாணம் பிரம்படி ஒழுங்கை மீதான தாக்குதல், சாவகச்சேரி நவீன சந்தை மீதான போர் உலங்குவானூர்திகளின் ஏவுகணைத் தாக்குதல், இறுதியாக வல்வையில் நிகழ்த்தப்பட்ட படுகொலைகள் என்பன சர்வதேச ரீதியில் இந்தியாவுக்குக் கண்டனத்தைக் கொடுத்தன.
விடுதலைப் புலிகளின் அதிகரித்த உக்கிர தாக்குதல்களுக்கு ஈடுகொடுக்க முடியாத இந்தியப் படையினர், பொதுமக்களைப் பழிவாங்கினார்கள். அப்பாவிப் பொதுமக்கள் மீது இவர்கள் பிரயோகித்த ஈவிரக்கமற்ற அடக்குமுறைகளால் இந்த இரண்டு வருட காலத்தில் 6000க்கு மேற்பட்ட பொதுமக்கள் அழிக்கப்பட்டார்கள்.
இந்தியப் படையைக் கண்ட மக்கள் பயந்தார்கள்; அதை வெறுத்தார்கள். அதனைத் தமது தாயகத்தை ஆக்கிரமித்துள்ள ஒரு படையாகவே கருதினார்கள். இப்படை இங்கு இருப்பதால் தமிழ்-முஸ்லிம் மக்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் கிடைக்கும் என்ற எண்ணம் அறவே இல்லாமற் போயிற்று. அதனால் தமிழ்-முஸ்லிம் மக்கள் இந்திய ஆக்கிரமிப்புப் படைக்கு எதிரான புலிகளின் தாக்குதல்களைப் பெருமளவில் ஆதரித்தார்கள்.
இந்தியப் படை பொதுமக்கள் மீது மேற்கொண்ட ஒழுக்கமற்ற நடவடிக்கைகளும், வெறுக்கத்தக்க செயற்பாடுகளும், ஈவிரக்கமற்ற கொடூரமான தண்டனை முறைகளும், மனித உயிருக்கும், மனித வாழ்க்கைக்கும் அளிக்கப்பட்ட அவமரியாதையும் மக்கள் இந்தியப் படையை அடியோடு வெறுக்கக் காரணமாய் அமைந்தன. இந்தியப் படையின் தலையீடு தோல்விடையக் காரணமாக அமைந்தன.
‘றோ’வின் தவறான கணிப்பு
விடுதலைப் புலிகளின் எண்ணிக்கை பற்றியும், அவர்களின் போராட்ட வல்லமை, இலட்சியத்தில் அவர்களுக்கு இருந்த திடசங்கற்பம் பற்றியும் தவறாகக் கருதி, தவறாகக் கணித்து எடைபோட்டதும் அவர்களின் தோல்விக்கு இன்னொரு காரணமாகும். விடுதலைப் புலிகளின் பலத்தையும், நோக்கத்தையும் தவறாகக் கணித்து எடைபோட்ட ‘றோ’ அமைப்பு, ‘‘விடுதலைப் புலிகளை ஒரு சில தினங்களில் அழித்துவிடலாம்’’ என்று கொடுத்த அறிக்கையை இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் நம்பினார்கள். போர் நீண்டு கொண்டிருந்த போது, இந்தியப் படை இழப்புக்களைச் சந்தித்த போது, இந்தியா தனது தவறை உணர்ந்து கொண்டது.
இந்தியர்கள் எண்ணியது போல, சாரமணிந்த விளையாட்டுப் பையன்களைக் கொண்ட அமைப்பல்ல விடுதலைப் புலிகள். இந்தியப் படை முன்னெப்போதும் கண்டிராத, உலகிலேயே தலைசிறந்த ஒரு கெரில்லா போராட்ட இயக்கத்தை, திடமான இலட்சியப் பற்றும், மிகவும் கட்டுப்பாடும், ஒழுக்கமும், நல்ல அமைப்புமுடைய ஓர் இயக்கத்தை எதிர்நோக்க வேண்டி இருந்தது. யுத்த முறையை மீள் பரிசீலனை செய்ய வேண்டிய நிலைக்கு இந்திய அரசு தள்ளப்பட்டது. இந்தியப் படையின் கௌரவம் கேலிக்கிடமானது.
இருந்தும், விடுதலைப் புலிகளின் நிபந்தனையற்ற யுத்த நிறுத்தக் கோரிக்கையை ராஜீவ் காந்தி நிராகரித்ததுடன், கூடிய விரைவில் போரில் வெற்றியடைய விரும்பினார். தமிழர் தாயகத்தில் தமது பலத்தைக் காட்டியதுடன், புலிகளுக்குகெதிரான தாக்குதல்களில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான படையினர் பல வகைப்பட்ட சங்கேதப் பெயர்களில் (code name) தாக்குதல் நடவடிக்கைகளையும் மேற்கொண்டனர். காடுகளில் சிறந்த பயிற்சி பெற்ற அதிரடிப் படையினர், காட்டுப் பகுதிகளில் புலிகளுக்கெதிரான தாக்குதல்களில் ஈடுபடுத்தப்பட்டனர். புலிகளால் தொடுக்கப்பட்ட பலத்த எதிர்த்தாக்குதல்கள் இந்தியப் படைக்குப் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. இதனால் இந்தியப் படைகளின் மனோநிலை பாதிக்கப்பட்டது. பல வகையான தீவிர தாக்குதல்களை மேற்கொண்டு, கடுமையான பிரயத்தனத்தின் முடிவில், இந்தியா புலிகளை வெற்றி கொள்ள முடியாது என்பதை உணர்ந்தது. விடுதலைப் புலிகளை அழிப்பதற்காகச் செலவிடப்பட்ட பணத்தொகையும், உயிர்ச் சேதமும் கற்பனை செய்ய முடியாத அளவுக்குக் கூடியது.
இந்நிலையிலேயே 1989ஆம் ஆண்டு வைகாசி மாதம் 1ஆம் திகதி ஜனாதிபதி ஆர்.பிரேமதாசாவின் அழைப்பை ஏற்று, இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட விடுதலைப் புலிகளின் தலைமைப்பீடம் கொழும்பு சென்றது. முரண்பட்டுக் கொண்டிருந்த இரு பகுதியினராலும் மேற்கொள்ளப்பட்ட கொழும்புப் பேச்சுவார்த்தை, இந்திய அரசாங்கத்தை (அப்போது ஆட்சியில் இருந்த) பெரிதும் பாதித்தது. வரலாற்று எதிரிகளான விடுதலைப் புலிகளும், சிறீலங்கா அரசும் சுமுகமான நிலையில் சமாதானப் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டது, இலங்கை அரசு சார்பாக, விடுதலைப் புலிகளுக்கு எதிராக, இந்தியப் படையால் மேற்கொள்ளப்பட்ட போரை அர்த்தமற்றதாகவும், நகைப்புக்கிடமானதாகவும் ஆக்கியது. விடுதலைப் புலிகளின் சாதுர்யமான இராஜதந்திர நடவடிக்கையால் ஒதுக்கப்பட்டு, அவமானப்பட்டு, திக்குமுக்காடிப்போன ராஜீவ் அரசின் நிர்வாகம், இலங்கை அரசுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியதுடன், விடுதலைப் புலிகளுக்கு எதிரான தனது தாக்குதல்களையும் உக்கிரப்படுத்தியது. இந்த நடவடிக்கையானது இந்தியப் படையின் தலையீட்டை உலக நாடுகளின் பார்வையில் கேலிக்குள்ளாக்கியது.
கொழும்புப் பேச்சுவார்த்தையின் போது விடுதலைப் புலிகளின் குழுவினர் இந்தியப் படையின் அட்டூழியங்களைக் கண்டித்ததுடன், இந்தியப் படையை ஆக்கிரமிப்புப் படை எனவும் நிரூபித்தனர். ஐ.நா. சாசனங்களில் அமைதிப் படைகள் தொடர்பாக உள்ள மாதிரிகளைக் காட்டி, இந்தியப் படையை அமைதிப் படையாகக் கருத முடியாது, அது ஓர் ஆக்கிரமிப்புப் படை என வாதிட்டனர்.
அமைதிப் படையும், அதன் கடமைகளும்
அமைதி காக்கும் படைகளின் மாதிரிகள் குறித்து ஐ.நா. சபை உருவாக்கியிருந்த மரபுகளை உதாரணம் காட்டி விடுதலைப் புலிகளின் குழு பின்வருமாறு வாதிட்டது.
முரண்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்கும், மோதல்களைக் கட்டுப்படுத்துவதற்கும், சமாதானத்தை ஊக்குவிப்பதற்கும், சர்வதேச ரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட அளவு கோல்கள் உள்ளன.
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட தரப்பினர்க்கிடையே பக்கஞ்சாராது ஓர் அமைதிப் படை நிற்க வேண்டும். மோதல்கள் ஏற்படும் பகுதிகளில் அமைதியை மீண்டும் நிலைநாட்டுதல், அல்லது அதனைப் பேணுவதற்கு உதவுவதே அமைதிப் படையின் பிரதான பணியாகும்.
அமைதி காக்கும் பணி என்பது மோதலைக் கட்டுப்படுத்துதலாகும். ஐ.நா. சபை மரபில் ஓர் அமைதிப் படைக்கு வழங்கப்படும் ஆணை என்னவென்றால், மோதல் நிறைந்த நிலைமையை மோசமடையாது தடுத்தல் என்பதும், சமாதானமும், சகஜநிலையும் ஏற்படுவதற்காக வேண்டிய சூழ்நிலையை உருவாக்குதலுமே.
சமாதானப் பேச்சுவார்த்தைகள் மூலம் முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கு இவை அடிப்படையான முதற் தேவைகளாகும். அமைதி காக்கும் பணியில் ஈடுபடுத்தப்படும் இராணுவத்திற்கு நிர்ப்பந்திக்கும் அதிகாரம் கிடையாது. பலாத்காரத்தைப் பயன்படுத்துவதற்கு அவர்களுக்கு அதிகாரமில்லை. அவர்கள் எளிமையான தற்காப்பு ஆயுதங்களையே எப்பொழுதும் தம்முடன் கொண்டு செல்வார்கள். மோதல்களைப் பொறுத்தவரை முக்கிய கொள்கையான நடுநிலைமை வகித்தல், சம்பந்தப்படாதிருத்தல் என்பனவற்றை ஒவ்வொரு அமைதிப் படையும் கடைப்பிடிக்க வேண்டுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
போரில் ஈடுபட்டிருக்கும் சக்திகளின் சமநிலையில் எவ்வித மாற்றத்தினையும் ஏற்படுத்தக்கூடிய வகையில் அமைதிப் படை நடந்துவிடக் கூடாது.
அத்துடன் உள்நாட்டு விவகாரங்களிலும் அது தலையிடக்கூடாது. நிலைமைகளை மேலும் மோசமடையாது தடுப்பதே அமைதிகாக்கும் பணியின் நோக்கமாகும். மோதலில் ஈடுபட்டிருப்போருக்கிடையே உள்ள உறவுகளை நிலைபெறச் செய்வதே இப்பணியின் இலக்காகும்.
இந்தியப் படை அமைதிப் படை அல்ல
அமைதி காக்கும் மரபுகளின் விதிப்படியும், விளக்கப்படியும் இந்தியப் படையை எந்த விதத்திலும் அமைதிப் படையாகக் கருத முடியாது. இந்தியப் படை ஒருபோதும் சமாதானத்தைப் பேணவில்லை; அத்துடன் முரண்பாட்டைக் கட்டுப்படுத்தவில்லை. பதிலாக இந்தியப் படை கொடூரமான போரை நடாத்தி, சமாதானத்தைக் குழப்பி, முரண்பாட்டை மேலும் கூட்டியது. அத்துடன் தமிழர் தாயகத்தில் பலவந்தமாக நிலைநின்றதுடன், அதிகாரத்தைப் பிரயோகித்து இராணுவ ஆட்சியை உருவாக்கியிருந்தது.
இந்தியப் படை ஒருபோதும் நடுநிலைமையையோ, தலையிடாமையையோ கடைப்பிடிக்கவில்லை. பதிலாக, புலிகளுக்கெதிராகச் செயற்பட்டதுடன், இந்திய சார்புக் குழுக்களுக்கு ஆதரவும், ஆயுதமும் வழங்கி, பயிற்சியும் அளித்தது. அமைதி காப்பதற்குப் பதிலாக இந்தியப் படையானது விடுதலைப் புலிகளுடன் மோதியது. இந்தியப் படையானது அமைதிப் படைக்குரியதாக ஏற்றுக் கொள்ளப்பட்ட செய்முறைகளையும், விதிகளையும் முற்று முழுதாக மீறிச் செயல்பட்டது. விடுதலைப் புலிகளின் நிலைப்பாடு என்னவெனில், தமிழர் தாயகத்தில் நிலைகொண்டிருந்த இந்தியப் படைகளுக்கு, அமைதிப் படைக்குரிய தகுதிகள் எதுவும் இல்லை எனவும், அது ஓர் ஆக்கிரமிப்புப் படையே எனவும் கருதுவதாகும்.
போர்நிறுத்தம்
போர்முனையில் புலிகளது உறுதிமிக்க, உக்கிரமான தாக்குதல்களும், கொழும்புப் பேச்சுவார்த்தையின் போது கையாண்ட இராஜதந்திர நடவடிக்கைகளும், இறுதியாக இந்தியப் படைக்கும், தமிழ்ப் புலிகளுக்கும் இடையே ஒரு போர்நிறுத்தத்தைத் தோற்றுவித்ததுடன், எமது தாயகத்திலிருந்து இந்தியப் படை வெளியேறுவதற்கும் வழி செய்வதாயிற்று.
இந்தியப் படையால் அமைதியின் போர்வையில் தமிழ் பேசும் மக்களுக்கு இழைக்கப்பட்ட போர்க் கொடுமைகள் உலகத்தின் கண்முன் தெரியப்படுத்த வேண்டியது எமது கடமையும், பொறுப்புமாகும். இக்கடமைப்பாட்டில் ‘சாத்தானின் படைகள்’ என்ற இந்த நூல் மிக முக்கிய பங்களிக்கின்றது.
சாத்தான் ஒரு தீயசக்தி
இந்திய ஆக்கிரமிப்புப் படை இங்கு புரிந்த மிகக்கொடிய செயல்களை விவிலிய நூல் குறிப்பிடும் சாத்தானுடன் தொடர்புபடுத்துவது வெகு பொருத்தமே. மனிதர்களை அழிக்கும் ஒரு தீயசக்தியையே சாத்தான் என்னும் கருத்துருவம் குறித்து நிற்கிறது. இந்தியப் படை சாத்தானின் படை போன்று நடந்து கொண்டது. மனித உயிர்களை அறவே பொருட்படுத்தாது ஆயிரக்கணக்கான அப்பாவிகளின் உயிரைப் பிசாசுகளைப் போலப் பறித்து அழிவை ஏற்படுத்தியது. ஒரு சிறிய தேசிய இனம் அனுபவித்த மாபெரும் துயரத்தை ஆதாரங்களோடு இந்தத் தொகுப்பு ஆவண வடிவத்தில் தருவது ஒரு துணிகர முயற்சி எனலாம். இத்தனைக்கும் இச்சிறிய தேசிய இனம் இழைத்த ஒரேயொரு குற்றம் சிங்கள ஆயுதப் படைகள் மேற்கொண்ட இன அழிப்பு முயற்சிகளிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்ளவும், அமைதியைத் தேடி இந்தியாவின் உதவியை நாடியதுமேயாகும்.
அமைதி காக்கும் பணி என்ற ‘சாக்குப் போக்கில்’ எமது தாயகம் மீது படையெடுத்த இந்தியத் துருப்புக்கள் விட்டுச் சென்ற மரணமும், அழிவும் நிறைந்த துயர்தோய்ந்த கதை, சிங்களப் படையினர் புரிந்த அட்டூழியங்களையும்விட மிக மிருகத்தனமானது. இந்தியப் படையினருடன் டில்லி அரசாங்கமும் உடந்தையாக இருந்து ஒத்துழைத்ததன் பயனாகத் தாம் புரிந்த அட்டூழியங்கள் பற்றிய தகவல்கள் உலகிற்கு எட்டுவதைத் தடுப்பதில் மோசடி மிக்க முறைகளைக் கையாண்டனர். சர்வதேச மனித உரிமைகள் சங்கங்கள் தமிழீழத்திற்கு விஜயம் செய்து நேரடி விசாரணைகளை நடாத்துவதற்கு அனுமதி வழங்க இந்திய அரசாங்கம் அறவே மறுத்தது.
தொடர்பு சாதனங்கள் தடை
இந்திய ஆக்கிரமிப்புப் படை உள் ஊர் தொடர்பு சாதனங்களுக்குத் தடை விதித்து, தமிழ்ப் பத்திரிகையாளர்களைச் சிறையிலிட்டு, ஆக்கிரமிப்புச் செய்யப்பட்ட நிலப்பரப்பிற்குள் உலகத் தொடர்பு சாதனங்களைச் சேர்ந்தவர்கள் வருவதையும் தடுத்தது.
அத்துடன் இந்தியப் படையும், தமிழ் எட்டப்பர் கூட்டமும், குறிப்பாக ஈ.பி.ஆர்.எல்.எவ்வும், ஈ.என்.டி.எல்.எவ்வும், பல தமிழ்ப் பிரமுகர்களையும், மனித உரிமைகளுக்காக உழைத்தவர்களையும், இந்தியப் படையின் காட்டுமிராண்டித்தனங்களுக்கு எதிராகக் குரல்கொடுத்த பிரஜைகள் குழுத் தலைவர்களையும் திட்டமிட்டுக் கொன்றனர்.
டில்லி அரசாங்கமும், கொழும்பிலுள்ள அதன் தூதரகமும், பலாலியிலிருந்த இந்தியப் படை அதிகாரிகளும் ஆக்கிரமிப்புப் படை புரிந்த குற்றங்களை மூடி மறைப்பதற்கு எல்லா முயற்சிகளையும் மேற்கொண்ட போதிலும், குற்றவாளிகளை இனங்காணுவதற்கு நாம் எடுத்த அயராத முயற்சிகள் வெற்றி அளித்துள்ளன. சர்வதேச மன்னிப்புச் சபையும், மனித உரிமைகளுக்கான ஐ.நா. ஆணைக்குழுவும், சர்வதேச தொடர்பு சாதனங்களும் இந்திய அமைதிப் பணியைக் கிண்டலுக்கும், கேலிக்கும் உள்ளாக்கி, ஆக்கிரமிப்பிற்குள்ளான தமிழ் நிலப்பரப்பில் இந்தியா இழைத்த பாரிய மனித உரிமை மீறல்களைக் கண்டித்துள்ளன.
எமது விடுதலைப் போராட்டத்தின் வரலாற்றில் ஏற்பட்ட இருள்மிக்க ஒரு காலப்பகுதியினை இந்தப் பெரிய ஆவணத்தின் வாயிலாகப் பதிவு செய்வதற்கு உழைத்த தோழர்களின் அயராத, நுட்பமான பணியினை நாம் பாராட்டுகின்றோம்.