வெளியீடு: சித்திரை 1983
காணிக்கை: அரச பயங்கரவாதிகளின் கொலை வெறிக்கு ஆளாகி சிந்திய குருதியால் விடுதலை விதைகளைத் தூவிச் சென்ற தமிழீழ விடுதலைப் போராளிகளுக்கு இச்சிறு நூல் காணிக்கை.
தமிழீழ அரசியற் சித்தாந்த உலகில் ‘பயங்கரவாதம்’ என்ற பதம் இன்று பலரால், பல்வேறு அர்த்த பரிமாணங்களில் பாவிக்கப்பட்டு வருகிறது. ஈழத்தமிழனின் விடுதலை எழுச்சிக்கு இழிவு கற்பிப்பதையே இலட்சியமாகக் கொண்ட சிங்கள முதலாளிய அரசின் மும்முரமான பிரச்சாரம் ஒரு புறமிருக்க, தமிழ் அரசியல்வாதிகளினதும், ‘இடது’ சார்பான இயக்கங்களினதும் குதர்க்கமான வியாக்கியானங்களும் இச் சொற்பிரயோகம் குறித்து தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை உண்டுபண்ணியுள்ளன. இச் சொற்பிரயோகம் குறிப்பாக எமது விடுதலை இயக்கத்தின் ஆயுதப் போராட்ட வடிவத்தை அவமதித்து, அவமானப்படுத்த விழைவதாலும், தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டம் ஆயுதப் போராட்டமாக உயர்மட்ட அரசியல் உருவம் பெற்று வருவதாலும், அரசினதும், அரசியல்வாதிகளினதும் இந்த விசமப் பிரச்சாரத்தை முறியடிக்க நாம் கடமைப்பட்டுள்ளோம். ஆகவே இச்சந்தர்ப்பத்தில் உண்மையான பயங்கரவாதிகள் யார்? புரட்சிவாதிகள் யார்? என்பதை எமது மக்களுக்கு எடுத்துக் கூறும் அதேவேளை, எமது புரட்சி இயக்கத்தின் வரலாற்றுத் தோற்றம், எமது போராட்ட வடிவம், போர் யுக்திகள், போராட்ட இலக்குகள், இலட்சியங்கள் பற்றியும் இப்பிரசுரத்தில் இரத்தினச் சுருக்கமாக எடுத்தியம்ப விரும்புகிறோம்.
மூன்றாவது உலக நாடுகளில் இன்று கொழுந்துவிட்டெரியும் சுதந்திர எழுச்சியைக் கொன்றுவிடும் நோக்குடன், உலக முதலாளித்துவமும், ஏகாதிபத்தியமும் பயங்கரவாதம் என்ற பதத்தைப் பாவித்து வருகின்றன. பின்தங்கிய இந்நாடுகளில் கிளர்ந்துள்ள சோசலிசப் புரட்சி இயக்கங்கள், தேசிய விடுதலைப் போராட்டங்கள் போன்ற விடுதலை எழுச்சிகள் எல்லாம் பயங்கரவாதமாகவே சித்தரிக்கப்படுகின்றன. மாவோவிலிருந்து மகாபே வரை, சேகுவாராவிலிருந்து அரபாத் வரை, தேசிய சுதந்திர வீரர்கள் எல்லோரும் பயங்கரவாதிகள் எனப் பட்டம் பெற்றவர்களே. தேசிய சுதந்திரக் கிளர்ச்சிகளை நசுக்கி, நவகாலனித்துவ சுரண்டலை நீடிக்க முயலும் உலக முதலாளித்துவம், ஒடுக்கப்படும் மக்களின் சுதந்திர எழுச்சியை, அவர்களின் புரட்சிகரப் போராட்ட முறைகளைப் பயங்கரவாதம் என்றே அன்றும், இன்றும் வர்ணித்து வருகிறது. ஐரீஸ் மக்கள், பாலஸ்தீனியர்கள், எரீத்திரியர்கள், எல்-சல்வடோரிய மக்கள், கறுப்புத் தென்னாபிரிக்கர், பாஸ்க் மக்கள், கிழக்குத் தீமோரியர், இப்படியாக உலகத் தேசிய இனங்களின் ஆயுதப் போராட்டங்கள் அனைத்திற்கும் பயங்கரவாதம் என்ற முத்திரையே குத்தப்படுகின்றது. இந்த அடிப்படையில்தான் அமெரிக்க ஜனாதிபதி றேகன் உலக தேசிய விடுதலைப் போராட்டங்களை சர்வதேசப் பயங்கரவாதம் என்று வர்ணித்ததை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அமெரிக்க ஏகாதிபத்திய சித்தாந்த அகராதியில் பயங்கரவாதம் என்ற பதம் மிகவும் முக்கியமானது. தேசிய விடுதலைக்கும், சோசலிசப் புரட்சிக்கும் ஆப்புவைக்கும் ஆணிவேரான அரசியற் கோட்பாடு இது. லத்தீன் அமெரிக்க நாடுகளில் காட்டுத் தீ போலப் பரவி வரும் ஆயுதக் கிளர்ச்சிப் போராட்டங்களை அடியோடு அழித்துவிட முயலும் அமெரிக்க அரசின் அதிமுக்கிய சித்தாந்த ஆயுதம் இது. பயங்கரவாதம் என்ற பொய்ப் பிரச்சாரத்திற்கு அப்பால் உலக ஏகாதிபத்தியமானது ஆயிரமாயிரம் அப்பாவி மக்களைக் கொன்று குவித்துப் பேயாட்டம் ஆடி வருவது இன்று உலகறிந்த உண்மை.
ஏகாதிபத்திய, காலனித்துவ நாடுகள் மட்டுமன்றி, அவற்றுக்கு முண்டுகொடுக்கும் சுதேசிய முதலாளிய அரசுகளும், சர்வாதிகார ஆட்சியமைப்புக்களும் உள்நாட்டுப் புரட்சிப் போராளிகளைப் பயங்கரவாதிகள் என்றே பழிசுமத்தி வருகின்றன. இந்த ரீதியில் சிறீலங்கா ஆளும் வர்க்கமானது தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தையும், அவ்விடுதலைப் போராட்டத்தின் வரலாற்றுப் பரிணாமத்தில் உதித்த ஆயுதந்தாங்கிய எதிர்ப்பு இயக்கத்தையும், அவ்வியக்கத்திற்கு முன்னணி வகித்துச் செல்லும் விடுதலைப் புலிகளையும், பயங்கரவாதக் கோட்பாட்டின் அடிப்படையில் அணுகும் போது நாம் ஆச்சரியப்படவில்லை. ஏனென்றால், முதலாளிய சித்தாந்தக் கண்ணாடியில் புரட்சிகர சக்திகள் எல்லாம் பயங்கரவாதப் பேயுருவமாகத்தான் தெரியும். ஆனால் மார்க்சீயத்தைத் தமது புரட்சிகர சித்தாந்தமாக வரித்துக் கொண்ட சிங்கள-தமிழ் இடதுசாரி இயக்கங்களும் பயங்கரவாதம் என்ற கோட்பாட்டின் அடிப்படையிலேயே தமிழீழ ஆயுதப் புரட்சி இயக்கத்தையும், அதன் போராட்ட வடிவங்களையும் விமர்சித்து வருவது எமக்கு விந்தையைக் கொடுக்கிறது. மார்க்சீயமானது சகல சமூக அரசியல் சக்திகளையும், பொருளுற்பத்தி வடிவங்களையும் வரலாற்றுக் கண்ணோட்டத்தில், அதாவது வரலாற்றுப் பொருள்முதல்வாத, இயங்கியல் தத்துவார்த்த அடிப்படையில் நோக்குவதை நாம் அறிவோம். நிதர்சனமான, யதார்த்தபூர்வமான உண்மை நிலைகளை, அவற்றின் தோற்றம், வளர்ச்சி, தாக்கம் என்ற ரீதியில் திண்ணியமாக ஆய்வு செய்யும் அவசியத்தை மார்க்சீச-லெனினிச தரிசனம் வற்புறுத்துகிறது. “Concrete analysis of concrete conditions” என்று லெனின் சதா வலியுறுத்துவதும் இந்த ஆய்வு பற்றியதே. வரலாற்று ரீதியான அரசியல் மெய்யியல்பினை, அதன் நிதர்சனத்தை, அதன் புறநிலை உண்மையை, அது பிரவாகமெடுத்துள்ள முரண்பாட்டுக் களத்தினைப் பூரணமாகத் தரிசிக்கத் தவறும் மார்க்சீயவாதிகள், வெகுசனப் போராட்ட சக்திகளையும், அவற்றின் புரட்சித் தன்மைகளையும் புரிந்து கொள்ளப் போவதில்லை. இந்த குருட்டுத்தனத்தாலேயே பழைய மார்க்சீயவாதிகளால் ஈழத்தமிழரின் தேசிய இனப்பிரச்சினையையோ, அன்றி சிங்களப் பேரினவாத சித்தாந்த முரண்பாட்டினையோ செம்மையாகக் கிரகித்துக் கொள்ள முடியவில்லை. இதுவே அவர்களது அரசியல் வீழ்ச்சிக்கும் காரணீயமாக அமைந்தது. தமிழீழத்தில் ஆயுதம் தாங்கிய எதிர்ப்பு என்பது ஒரு வரலாற்று ரீதியான நிதர்சன அரசியல் உண்மை (Armed resistance in Tamil Eelam is a concrete historical political reality). ஈழத்தமிழரின் தேசிய விடுதலை எழுச்சியின் வளர்ச்சியைப் பிரதிபலிக்கும் ஒரு புரட்சிகர சக்தி. இந்தப் புரட்சிகர அரசியல் போராட்ட சக்தியை அதன் வரலாற்று பரிமாணத்தில், அதாவது ஈழத்தமிழரின் தேசிய விடுதலைப் போராட்ட வரலாற்று வளர்ச்சியில் ஆய்ந்தறிந்து கொள்வதை விடுத்து, பயங்கரவாதம் என்ற பிற்போக்கான முதலாளிய கோட்பாட்டில் விமர்சிக்க விழைவது மார்க்சீய அணுகுமுறை அல்ல. இதனை இன்றைய வலது குறைந்த இடதுசாரிகளும், ரொக்சிசவாதிகளும் உணர்ந்து கொள்வது அவசியம்.
ஆயுதப் போராட்டத்தின் தோற்றம்
ஒரு அரசியல் போராட்டத்தின் அதியுயர்ந்த கட்டத்தில், அதியுன்னத வடிவமாக எழுவதே ஆயுதப் போராட்டமாகும் என்கிறார் லெனின். சமாதான வழிதழுவி மேற்கொள்ளப்படும் சனநாயகப் போராட்ட வடிவங்கள் படுதோல்வி கண்டு, மக்கள் சக்தியை அணிதிரட்டும் ஆன்ம பலத்தை இழக்கும் பொழுது, ஆயுதம் தாங்கிய புரட்சிப் போராட்டம் தவிர்க்க முடியாத சரித்திர நியதியாகி விடுகிறது. தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தின் வளர்ச்சியையும், முதிர்ச்சியையும் வரலாற்று ரீதியில் நாம் ஆய்வு செய்கையில் இந்த உண்மை நன்கு புலனாகும். சிறீலங்கா ஆளும் வர்க்கத்தின் பேரினவாத ஒடுக்குமுறையை எதிர்த்துக் கால் நூற்றாண்டு காலத்திற்கு மேலாகத் தமிழ்த் தேசிய இயக்கமானது சமாதான, சனநாயக வழிதழுவிய போராட்ட நுணுக்கங்களைக் கையாண்டது. அகிம்சைத் தத்துவத்தின் அடிப்படையில், அமைதிமுறையில் வெளிப்பாடு கண்ட வெகுசன எழுச்சிப் போராட்டங்கள் அனைத்தும் சிங்கள ஆயுதப் படைகளால் அடக்கியொடுக்கப்பட்டன. அறநெறி அரசியல் பண்புகளுக்கு மதிப்பளிக்காத அரச பயங்கரவாதத்தை, அன்பு மார்க்கங்களின் ஆன்மீக பலத்தால் எதிர்கொள்ள முடியாது என்பதை தமிழ் மக்கள் உணர்ந்து கொண்டனர். தேசிய சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லக் காந்தியப் பாதை நடைமுறைச் சாத்தியமற்றது என்பதனைப் புரட்சியுணர்வு பெற்ற புதிய இளைஞர் சமுதாயம் உணர்ந்து கொண்டது. பிற்போக்கு வன்முறைக்கு எதிராக மென்முறைப் பாதை பயனளிக்காது என்பதை உணர்ந்து கொண்ட புதிய பரம்பரை, புரட்சிகர வன்முறை அரசியலை நாடியது.
வேலை வாய்ப்பின்மை, கல்வி வாய்ப்பின்மை, அந்நிய மொழித் திணிப்பு, அரச படைகளின் அட்டூழியம் – இப்படியான சிங்களப் பேரினவாத ஒடுக்குமுறைகளுக்குப் பலிக்கடாவாகிய தமிழ் இளைஞர்கள், தமது எதிர்கால சுபீட்சம் புரட்சிகர அரசியலிலேயே தங்கியிருப்பதை உணர்ந்து கொண்டனர். தேசிய முரண்பாட்டுக்குள் சிக்குப்பட்டிருக்கும் தமிழ்த் தேசிய இனம், சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் பிரிந்து சென்று தனியரசு அமைப்பதன் மூலமே பூரண விடுதலையைக் காண முடியும் என்பதைப் புரிந்து கொண்ட அவர்கள், தங்களது சுதந்திர வேட்கைக்கு வெளிப்பாடு காணப் புரட்சிகர அரசியல் வன்முறைப் போராட்டத்தில் குதித்தனர்.
எழுபதின் ஆரம்ப காலகட்டத்தில் தமிழீழத்தில் தலைதூக்கிய அரசியல் வன்முறையானது, கொடூரமான ஒடுக்குமுறையால் எழுந்த தேசிய முரண்பாட்டுக் களத்திலிருந்தே பிரவாகமெடுத்தது. சிங்கள அரச பயங்கரவாதத்திற்குச் சவாலாகப் பிறந்த இவ்வன்முறையை ஈழத்தமிழரின் தேசிய விடுதலைப் போராட்டத்தின் புரட்சிகர வெளிப்பாடாகவும், அப் போராட்டத்தின் புதுமுக வளர்ச்சியும், தொடர்ச்சியுமாகவே கொள்ளுதல் வேண்டும். இவ்வன்முறையானது, தமிழ்த் தேசிய இனத்தின் அரசியல் விடுதலைக்கான போராட்டத்தில் ஒரு புதிய புரட்சிகர சகாப்தத்தைப் பிறப்பித்தது எனலாம்.
ஈழத்தமிழ் இளைஞரின் புரட்சிகர வன்முறைப் போராட்டத்தின் தோற்றம்பற்றி வரலாற்று ரீதியாக ஆய்வு செய்கையில், தமிழ் மாணவர் பேரவையின் முக்கியத்துவத்தையும், அதன் பங்கையும் இங்கு குறிப்பிடுவது அவசியமாகிறது. இந்த அமைப்பே மிகத் தீவிரமான அரசியல் செயல் வீரர்களையும், புரட்சிகர அரசியல் நடைமுறைக்கான சூழ்நிலையையும் உருவாக்கியது எனலாம். இப்பாரம்பரியத்தில் உருவான மிகச் சிறந்த விடுதலை வீரன் சிவகுமாரன் என்ற இளம் தியாகியே. சிங்கள அரச அதிகாரத்தை, குறிப்பாக இனவாதத்தின் இயந்திரமான காவல்துறையை எதிர்த்துச் சவால்விட்ட இந்த இளம் தமிழ்ப் புரட்சி வீரன், தனது வீரத்தால், வியப்பூட்டும் துணிச்சலால், விடுதலையுணர்வால் ஒரு வீரகாவியத்தையே படைத்தான். அஞ்சா நெஞ்சம் படைத்த இவ்விளைஞன் ஏற்றிவைத்த சுதந்திரச் சுடரானது, அணைக்க முடியாத பெரும் தீயாகத் தமிழீழம் எங்கும் பரவத் தொடங்கியது.
புலி இயக்கத்தின் பிறப்பு
எழுபதின் ஆரம்பத்தில், தனிப்பட்ட முறையிலும், குழு ரீதியிலுமாகக் கட்டுப்பாடற்ற முறையில் பிரவாகமெடுத்த தமிழ் இளைஞரின் புரட்சி உத்வேகமானது, புரட்சிகரக் கொள்கையிலும், நடைமுறையிலும் கட்டி எழுப்பப்பட்ட இயக்கமொன்றில் வெளிப்பாடு காண விழைந்தது. தமிழ் அரசியல் கட்சிகளோ, அன்றி இடதுசாரி இயக்கங்களோ கிளர்ச்சிப் போக்குடைய இளைஞரிடம் புதைந்து கிடந்த புரட்சிகர சக்திக்குக் களம் அமைத்துக் கொடுக்கும் செயற்திட்டம் எதையும் கொண்டிருக்கவில்லை.
பழமைவாத முதலாளிய சித்தாந்தத்தினுள் சிக்குண்டு கிடந்த தமிழ்த் தேசியக் கட்சிகள், பிரிட்டிஸ் ஏகாதிபத்தியத்தின் எச்சமான பாராளுமன்றத்திற்கு முண்டுகொடுத்து நின்றன. தமிழ்த் தேசியவாதத் தீயைப் பற்றி எரியச் செய்து, விடுதலை இலட்சியம் பற்றி ஆவேசமாகப் பேசிடினும், தமிழினத்தின் தேசிய சுதந்திரத்திற்கு வழிகோலும் உருப்படியான நடைமுறைச் சாத்தியமான வேலைத்திட்டம் எதையும் இக்கட்சிகள் முன்வைக்கவில்லை. பழைய இடதுசாரிக் கட்சிகளோ, சிங்களப் பேரினவாத சித்தாந்தத்திற்குள் சிறைப்பட்டுக் கிடந்தன. இதனால் இவர்கள் தமிழரின் தேசிய விடுதலை எழுச்சியின் யதார்த்தப் புறநிலைத் தன்மைகளைப் புரிந்து கொள்ளும் ஆற்றலையோ, அல்லது தமிழ்ப் புரட்சிவாத இளைஞரின் புரட்சிகர அபிலாசைகளை அணிதிரட்டும் சக்தியோ அற்றிருந்தனர். இப்படியான அரசியல் சூன்யத்தை எதிர்கொண்டும், அதேவேளை தாங்கொணா ஒடுக்குமுறையால் எழுந்த புரட்சிகர சூழ்நிலையால் சிக்குண்டும் தத்தளித்த தமிழ் இளைஞருக்கு, விடுதலைப் பாதையை முன்னெடுத்துச் செல்லவல்ல புரட்சிகர அரசியல் இயக்கமொன்று அவசியமாயிற்று. இந்தச் சூழ்நிலையிலேயே 1972இல் எமது இயக்கம் சரித்திர ரீதியாகப் பிறப்பெடுத்தது.
ஆரம்ப காலகட்டத்தில் புதிய தமிழ்ப் புலிகள் என்னும் பெயரில் இயங்கிய எமது இயக்கத்தில், ஆயுதப் புரட்சியில் அசையாத நம்பிக்கை, அடக்குமுறையை உடைத்தெறியும் ஆவேசம், சமதர்ம தமிழீழமே தணியாத இலட்சியம் – இப்படியான உறுதிப்பாடும், செயற்பாடும் கொண்ட இளம் புரட்சிவாதிகள் அணிதிரண்டனர். நகரப்புற கெரில்லா அணியான அமைப்பையும், இராணுவக் கட்டுக்கோப்பையும், போராட்ட முறைகளில் திகைப்பூட்டும் செயற்திறனையும், இலட்சியத்தில் இரும்பையொத்த உறுதியையும் உடைய உறுப்பினர்களைக் கொண்ட எமது இயக்கத்தை, ஈழத்தமிழ் மக்களது விடுதலை எழுச்சியின் புரட்சி மையமாகவும், தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தின் ஆயுதமேந்திய புரட்சிகர விடுதலை இயக்கமாகவும் அமைத்துக் கொண்டோம். 1976இல் எமது இயக்கத்திற்குத் தமிழீழ விடுதலைப் புலிகள் என்னும் பெயர் சூட்டப்பட்டது. எமது இயக்கத்தை ஆரம்பித்து, அதனைக் கட்டுக்குலையாது கட்டுப்பாட்டுடன் கட்டி வளர்த்து வரும் பெருமை எமது தலைவர் பிரபாகரனையே சாரும். இவரே இன்று எமது இயக்கத் தலைவராகவும், தளபதியாகவும் இருந்து கொண்டு இயக்கத்தை வழிநடத்தி வருகிறார்.
புரட்சிகர சித்தாந்தமும், போர்முறையும்
இன ஒடுக்குமுறையால் எழுந்த சமூக, அரசியல் பொருளாதாரப் புறநிலைகள், தமிழ்த் தேசியவாத எழுச்சியை ஈழத்தமிழரிடையே வலுப்பெறச் செய்தன. ஆரம்பத்தில் அதே தேசியவாதத்தால், தேசாபிமானத்தால் உந்தப்பட்டு ஆயுதப் போராட்டத்தில் குதித்த நாம், காலப் போக்கில் ஒரு புரட்சிகர சித்தாந்தத்தையும், அதனால் நெறிப்படுத்தப்பட்ட கொள்கைத் திட்டம், செயற்திட்டத்தின் முக்கியத்துவத்தையும், அவசியத்தையும் உணர்ந்து கொண்டு, ஒரு விடுதலை இயக்கத்தைக் கட்டுக்கோப்பாக அமைத்து, ஒரு புரட்சிகர கொள்கைத் திட்டத்தை நெறிப்படுத்துவதற்கும், நாம் வரித்துள்ள ஆயுதப் போராட்ட வடிவங்களுக்கு வலுவேற்றித் தேசிய விடுதலையுடன் சோசலிசப் புரட்சியையும் முன்னெடுத்துச் செல்லவும், மார்க்சீய-லெனினிச தத்துவத்தை இன்றியமையாததாக ஏற்றுக் கொண்டோம். இந்த அரசியல் விழிப்புணர்வால் நாம் புரட்சிகர சோசலிசத்தை எமது புரட்சிச் சித்தாந்தமாக வரித்துக் கொண்டோம்.
சோசலிசத் தமிழீழம் என்ற எமது அரசியல் கொள்கைத்திட்டம் இருமுகப் போராட்ட இலக்குகளை ஒன்றிணைத்த புரட்சித் திட்டமாக அமையப் பெற்றது. தேசிய முரண்பாட்டில் சிக்குப்பட்டிருக்கும் தமிழ்த் தேசிய இனம், முதலில் ஒடுக்குமுறை அமைப்பிலிருந்து அரசியல் ரீதியாக விடுபடுவது அவசியமாதலால், தேசிய விடுதலைப் போராட்டம் முதன்மை பெறுகிறது. எனினும் ஒரு தேசிய இனம் அரசியல் ரீதியாக மட்டும் விடுதலை அடைந்து இறைமையைப் பெற்றெடுத்தால் மாத்திரம் அவ்வின மக்கள் பூரண சுதந்திரம் அடைந்ததாகக் கொள்ள முடியாது. சமூக ஏற்றத்தாழ்வு, பொருளாதார முரண்பாடுகள், வர்க்க வேறுபாடுகள் நிறைந்த ஒரு சமுதாயம் தனியரசு அமைத்துக் கொண்டால் மாத்திரம் மக்கள் விடிவு பெற்றுவிட முடியாது. எனவே தேசிய விடுதலைப் போராட்ட இலக்குடன் தமிழ் பேசும் தொழிலாள-விவசாய வர்க்கத்தின் சமூக, பொருளியல் சுபீட்சத்திற்கு வழிகோலும் சோசலிசப் புரட்சியும் ஒன்றிணைந்ததாக எமது கொள்கைத் திட்டம் நெறிப்படுத்தப்பட்டிருக்கிறது.
சிங்கள ஆயுதப் படைகளால் முற்றுகையிடப்பட்டு, இனக்கொலைத் திட்டத்திற்கு இலக்காகியுள்ள ஈழத்தமிழினத்தின் தேசிய சுதந்திரத்தை வென்றெடுப்பது, சமாதான, சனநாயக வழிதழுவிய போராட்டங்களால் சாத்தியமாகாது. இது தமிழீழ அரசியல் வரலாறு பகரும் உண்மை. சனநாயகப் போராட்ட வடிவங்கள் தோல்வி கண்டு, வேறெந்த வழியிலும் சுதந்திரத்தை வென்றெடுக்க முடியாத நிலையில், ஒடுக்கப்படும் மக்கள் புரட்சிகர ஆயுதப் போராட்டத்தைத் தழுவிக் கொள்வது தவிர்க்க முடியாதது. இது மார்க்சீச-லெனினிச புரட்சி அரசியலுக்குப் புறம்பான பாதை அல்ல. வரலாற்று ரீதியான யதார்த்தப் புறநிலைகளை அனுசரித்து, அந்தந்த நாடுகளில், அந்தந்த மக்கள் தமது போராட்ட வடிவங்களை நெறிப்படுத்திக் கொள்கின்றனர். உலகத் தேசிய இனங்களின் சமீபகால சுதந்திரப் போராட்ட வரலாறுகளை ஆய்வு செய்கையில் இது புலனாகும். இதன் அடிப்படையில், எமது தேசிய விடுதலைப் போராட்டத்தின் வளர்ச்சியையும், அதன் பரிமாணங்களையும், யதார்த்த சூழ்நிலைகளையும் நன்கு பரிசீலனை செய்தே ஆயுதப் போராட்டத்தை நாம் முன்னெடுத்துச் செல்கிறோம்.
நாம் தேர்ந்துள்ள கெரில்லாப் போர்முறைத் திட்டமானது, ஒரு வெகுசனப் போராட்ட வடிவம் என்பதை சோசலிச தத்துவம் ஏற்றுக் கொள்கிறது. அந்நியப் படைகளால் ஆக்கிரமிக்கப்பட்டு, அதர்மமான ஆட்சிக்கு ஆளாகும் ஒரு மக்கள் கூட்டம், தேசிய ரீதியான எதிர்ப்பாக (national resistance) கெரில்லாப் போர்முறையைக் கையாளுவதை மார்க்சும் வரவேற்கத்தான் செய்தார். ஆயுதப் போராட்டமானது, ‘‘சோசலிசத்தின் விழிப்பூட்டுவதும், அணிதிரட்டுவதுமான ஆற்றலால் மேம்பாடுபடுதல் அவசியம்’’ என்கிறார் லெனின். ஒரு புரட்சிகர சூழ்நிலையில், தனது புரட்சி இலக்கை அடையப் பாட்டாளி வர்க்கமானது ஆயுத பலாத்காரத்தில் குதிக்க வேண்டியதன் அவசியத்தை மார்க்சீய-லெனினிசம் வலியுறுத்தவே செய்கிறது. அக்டோபர் புரட்சியில் ரஸ்ய தொழிலாளர் வர்க்கம் ஆயுதக் கிளர்ச்சி மூலமே அரச இயந்திரத்தை முறியடித்தது. ஆயினும் ஆயுதப் போராட்டத் தன்மையும், அதன் பரிமாணங்களும், சோசலிசப் புரட்சியிலும், தேசிய விடுதலையிலும் வேறுபட்டவை என்பதை நாம் உணர வேண்டும். ரஸ்ய சோசலிசப் புரட்சியில் உருவகம் கொண்ட வெகுசன ஆயுதக் கிளர்ச்சியும், தேசிய விடுதலையை உள்ளடக்கிய சீனப்புரட்சியில் ஆயுதப் போராட்டம் எடுத்த வடிவங்களும் இதற்கு உதாரணமாகின்றன. மாவோ சுட்டிக் காட்டுவது போல, ஒரு தேசிய விடுதலைப் போராட்டத்திற்கும், வர்க்கப் போராட்டத்திற்கும் இடையில் வேறுபாடுண்டு. ‘‘முன்னதில் ஒரு தேசத்தின் சகல மக்களும் வர்க்க, கட்சி வேறுபாடின்றி தேசிய விடுதலைச் செயல்திட்டத்தின் அங்கமாகிய கெரில்லாப் போரை முன்னின்று நடத்துவர். எனவே வர்க்கப் போராட்டத்துடன் ஒப்புநோக்கின் இதன் அடித்தளம் பரந்தது’’ என்கிறார் மாவோ. சீன, ரஸ்ய புரட்சிகள் ஒருபுறமிருக்க, சமீபகால தேசிய விடுதலைப் போராட்டங்களும், அவற்றில் வெளிப்பாடு கண்ட ஆயுதப் போராட்ட வடிவங்களும், கெரில்லாப் போர்முறைத்திட்டம் பற்றிய மார்க்சீய சிந்தனையில் புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்தத் தவறவில்லை. ‘‘கியூபா புரட்சி, லத்தீன் அமெரிக்க வெகுசனப் போராட்டம் பற்றிய பழைய சித்தாந்தத்தில் புரட்சிகரமான சிந்தனையைத் தூண்டிவிட்டது. கெரில்லாப் போராட்டத்தின் மூலம் ஒரு அடக்குமுறை ஆட்சியிலிருந்து தம்மை விடுவித்துக் கொள்ளும் மாபெரும் சக்தி மக்களுக்கு உண்டு என்பதைக் கியூபா புரட்சி தெட்டத் தெளிவாக எடுத்துக் காட்டியது’’ என்கிறார் சேகுவாரா. சமீபத்திய கறுப்பு ஆபிரிக்கர்களின் தேசிய விடுதலைப் போராட்டங்களை எடுத்துக் கொண்டாலும், ஆயுதப் போராட்டமானது மக்களை அணிதிரட்டும் வெகுசனப் போராட்ட சக்தியாக உருப்பெற்றுக் காலனித்துவத்தை முறியடித்ததை நாம் கண்டுகொள்ளலாம். காலனித்துவத்திற்கு எதிரான கறுப்பர்களின் போராட்டங்கள் பற்றிப் பனன் (Frantz Fanon) குறிப்பிடுகையில், ‘‘வன்முறைப் போராட்டமானது இம் மக்களை ஒரு முழுமையில் ஒன்றுபடுத்தியது. ஏனென்றால் இவர்கள் தனிப்பட்ட நபர்களாக வன்முறைப் பிணைப்பால் ஒரு மாபெரும் சங்கிலித் தொடர்பில் இணைக்கப்பட்டிருந்தனர். ஆரம்பத்திலிருந்தே ஆக்கிரமிப்பாளனின் வன்முறை காரணமாக உருவகம்பெற்ற ஒரு பாரிய பலாத்கார உயிரமைப்பில் இவர்கள் ஒரு அங்கமாக இயங்கி வந்தனர். இந்தப் பிணைப்பால் ஒவ்வொரு குழுவும் ஒன்றை ஒன்று இனம்கண்டு கொண்டது. இதனால் எதிர்கால தேசம் ஏற்கனவே ஐக்கியப்பட்டிருந்தது. ஆயுதப் போராட்டமானது மக்களை அணிதிரட்டும் வல்லமை பெற்றது. ஏனென்றால் அது மக்களை ஒரே பாதையில், ஒரே இலக்கில் இட்டுச் செல்லும் சக்தி வாய்ந்தது.’’
வெகுசன ஆதரவின்றி ஒரு சிலர் மாத்திரம் ஆயுதம் ஏந்திப் போராடிக் கொண்டிருந்தால் மட்டும் அப்போராட்டமானது தேசிய விடுதலைக்கோ அன்றி சோசலிசப் புரட்சிக்கோ வழிகோலப் போவதில்லை என்பது எமக்குத் தெரியாதது அல்ல. ஆயுதப் போராட்டமானது அணிதிரண்ட மக்கள் சக்தியாக, வெகுசன ஆயுதக் கிளர்ச்சியாக விரிவடையும் முக்கியத்துவத்தையும், அவசியத்தையும் நாம் உணர்ந்து செயல்படுகிறோம். ஆகவே, புரட்சிகர வன்முறை தழுவிய எமது போராட்டமானது, வெகுசன இயக்கத்திற்கு மாறாக எதுவிதத்திலும் அமையவில்லை. ஆயுதம் தாங்கிய புரட்சிப் போராட்டத்தை மக்கள் மத்தியில் நிலைப்படுத்தி, அதற்கு ஆதரவாக வெகுசனத்தை அணிதிரட்ட வேண்டும் என்பதே புலி இயக்கத்தின் செயற்திட்டமாகும். ஒன்றுதிரண்ட மக்கள் சக்தியின் மாபெரும் வல்லமையால்தான் எதையும் சாதிக்க முடியும். எமது போராட்டமானது ஒரு மக்கள் யுத்தமாக உயர்நிலை எய்தும் என்பதில் எமக்கு அசையாத நம்பிக்கை உண்டு. எனவே, நீண்டதும், தொடர்பானதுமான எமது கெரில்லாப் போரைத் தேசிய விடுதலை தழுவிய வெகுசன ஆயுதப் போராட்டமாக வலுவடையவும், விரிவடையவும் செய்வதே எமது அரசியல், இராணுவப் போர்முறைத் திட்டத்தின் அடித்தள நோக்கமாகும்.
பயங்கரவாதிகள் யார்?
உலக விடுதலைப் போராட்டங்கள் பகரும் வரலாற்று உண்மைகளைக் கற்றறிந்து, சோசலிசத் தத்துவத்தின் புரட்சி இலட்சியத்தைத் தழுவிக் கொண்டு, எமது மக்களின் தனித்தன்மை பெற்ற விடுதலைப் போராட்டங்களின் சிக்கலான பரிமாணங்களை நன்கு புரிந்து கொண்டே நாம் ஆயுதப் புரட்சிப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்கிறோம். இதனைப் புரிந்து கொள்ளாத சிங்கள-தமிழ் இடதுசாரி இயக்கங்கள், எமது போர்முறைத் திட்டத்தையும், போராட்ட வடிவத்தையும் பயங்கரவாதம் என விசமத்தனமாக விமர்சனம் செய்து, புரட்சிகர இளைஞர்களைக் குழப்பி வருகின்றனர். போல்சேவிக் புரட்சிக்கு முந்திய காலகட்டத்தில், ரஸ்யாவில் தோன்றிய தனிப்பட்ட கொள்ளைக் கோஸ்டிகள், அராஜகக் குழுக்களை லெனின் பயங்கரவாதிகள் எனச் சாடியதை உதாரணமாகக் கற்பித்து, இந்த இடதுசாரிகள் எம்மையும் அந்தப் பேயுருவமாக உருவகப்படுத்த விழைகின்றனர். இந்தத் தோழர்களுக்கு நாம் தெட்டத் தெளிவாகச் சொல்ல விரும்புவது இதுதான். தமிழீழ அரசியல் வரலாற்றில் பரிணாமம் பெற்ற ஆயுதக் கிளர்ச்சியை, ஒரு நிதர்சன அரசியல் போராட்ட சக்தியாக ஏற்றுக் கொள்ள மறுக்கும் நீங்கள், அவ்வரலாற்று ஓட்டத்தில் பிறப்பெடுத்த எமது இயக்கத்தின் விடுதலை இலட்சியம், போராட்டப் பாதை, போர்முறைகளைப் பயங்கரவாதக் கோட்பாட்டின் கீழ் திரித்துக் காட்ட விழைவது வரலாற்று விஞ்ஞானமாகிய மார்க்சீய கண்ணோட்டத்திற்கு முற்றிலும் மாறானதாகும். தமிழீழத்தில் அரச நிர்வாகத்தை நிலைகுலையச் செய்து, அரச உடமைகளை அழித்து, அரச படைகளை எதிர்கொண்டு தாக்கி, அந்தக் கூலிப்பட்டாளத்தைக் கிலிகொள்ளச் செய்து, அவர்களைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்டியடிக்கும் நோக்கில் செயற்படும் எமது நகர்ப்புறக் கெரில்லா யுத்த நடவடிக்கைகளையும், அவை இராணுவ ரீதியில் எமது நீண்டகாலப் புரட்சிப் போர்முறைத் திட்டத்தின் வழிமுறையாக நிறைவேற்றப்படுவதையும் பயங்கரவாதம் என்ற களங்கம் படிந்த கண்ணாடிக்குள் சதா பார்த்துக் கொண்டிருந்தால், தமிழீழ விடுதலை எழுச்சியின் யதார்த்த, புரட்சிகரத் தன்மைகளையும், அவற்றின் வரலாற்றுப் போக்கையும், வளர்ச்சிiயும் நீங்கள் புரிந்து கொள்ளப் போவதில்லை.
புரட்சி அரசியலுக்குப் புறம்பாக இருந்து கொண்டு, தமது சொந்த வயிறுகளைக் கழுவும் நோக்கில் மக்களைச் சுரண்டி வாழ விழையும் சமூக விரோதிகளையும், தனிநபர் பயங்கரவாதக் கும்பல்களையும் நாம் கண்டிக்கத் தவறவில்லை. இந்தச் சமூக விரோதிகளிடமிருந்து எமது மக்களைக் காப்பதையும் எமது பணியாகக் கொள்கிறோம். இந்த இலட்சியத் தூய்மையும், தியாக உணர்வும் காரணமாகவே மக்கள் சக்தி எமக்குப் பக்கபலமாக அணிதிரண்டு வருகிறது.
பயங்கரவாதம் என்ற பதத்தைப் பாவித்து நீங்கள் எம்மைப் பரிகாசம் செய்யும் போது, அது சிங்கள ஆளும் வர்க்கத்தின் பிற்போக்கான இனவாதப் பிரச்சாரத்திற்கு வலுவூட்டி வருகிறது என்பதை நீங்கள் உணரவில்லை போலும்! உங்களது இந்தப் பிரச்சாரமானது, அரச பயங்கரவாத அட்டூழியங்களைத் திசைதிரும்பச் செய்து, எமது மக்களின் விடுதலை எழுச்சிக்கே மாசு கற்பிப்பதாக அமைந்து விடுகிறது. முற்போக்கு அரசியலைத் தழுவிக் கொண்டதாகக் கூறிக் கொள்ளும் நீங்கள், ஒரு முதலாளிய கொடுங்கோன்மை அரசின் ஒடுக்குமுறை அட்டூழியங்களைப் பயங்கரவாதம் என சித்தரித்துக் காட்டாமல், அந்த அரசுக்கு எதிரான எமது ஆயுதப் போராட்டத்தை மட்டும் பயங்கரவாதம் எனப் பட்டம் சூட்ட விழைவது எமக்கு வேதனையைக் கொடுக்கிறது. ஆனால் பயங்கரவாதம் எங்கிருந்து உண்டாகிறது, எந்தெந்த வடிவங்களில் வந்து சேர்கிறது, இந்தப் பயங்கரமான பூதத்தை தமிழ் இனத்தின் மீது கட்டவிழ்த்து விட்டவர்கள் யார், அதன் கோரத்தாண்டவத்தின் கொடுமை என்ன – என்பதை எல்லாம் எமது மக்கள் அறியாமல் இல்லை. நாளாந்தம் வீதியில் எதிர்கொள்ளும் பயங்கரவாதப் பேய்களை அவர்கள் இனம் காணத்தான் செய்கின்றனர். பயங்கரவாதக் கொடூரங்களின் இரத்தம்படிந்த வடுக்கள், அவர்களது ஆன்மாவின் ஆழம்வரை புரையோடிக் கிடக்கின்றன.
அரசியல் வன்முறை இருவகைப்பட்டது. ஒன்று பிற்போக்கானது. மற்றது புரட்சிகரமானது. ஒன்று அடக்குமுறையையும், அடிமைத்தனத்தையும் நீடிப்பது. மற்றது விடுதலைக்குக்கும், விடிவிற்கும் வித்திடுவது. ஒன்று ஒடுக்குவோரின் ஆயுதம். மற்றது ஒடுக்கப்படுவோரின் ஆயுதம். ஒடுக்குவோரின் பிற்போக்கான, அதர்மமான, அடக்குமுறையான வன்முறையே பயங்கரவாதம் ஆகும். ஒடுக்கப்படுவோரின் முற்போக்கான, தர்மமான, விடுதலையை நோக்காகக் கொண்ட வன்முறையானது பயங்கரவாதம் ஆகாது. அது பயங்கரவாதத்திற்கு எதிரான புரட்சிகர வன்முறைப் போராட்டம் ஆகும். வன்முறை என்பது முரண்பாட்டு நியதியின் இரு துருவ எதிர்ச்சக்திகளைக் கொண்டது. ஒன்று அழிவையும், மற்றது ஆக்கத்தையும் குறிப்பது. ஒன்று பயங்கரவாதத்தையும், மற்றது சுதந்திரவாதத்தையும் குறிப்பது. சுதந்திரத்தை இலட்சியமாக வரித்து, அதர்மத்திற்கு எதிராகத் தொடுக்கப்படும் வன்முறை தர்மமானது. இந்தப் பரிமாணத்தில் வன்முறையானது, அடிப்படையான மனித உரிமைகளை நிலைநாட்டும் ஆயுதமாகிறது.
• சிங்கள ஆளும் வர்க்கமானது எமது மக்கள் மீது கட்டவிழ்த்துவிட்ட வன்முறையே பயங்கரவாதமாகும்.
• அப்பாவிகளான எமது மக்களை வெட்டிக் கொல்வதும், சுட்டுக் கொல்வதும், உயிரோடு தீயிட்டுக் கொல்வதும் பயங்கரவாதம்.
• எமது தாய், சகோதரிகளைக் கற்பழித்துக் களங்கப்படுத்துவது பயங்கரவாதம்.
• எமது கோவில்களைக் கொளுத்துவதும், எமது நூலகங்களை எரிப்பதும், பத்திரிகையாலயங்களைத் தீக்கிரையாக்குவதும் பயங்கரவாதம்.
• எமது கடைகளைக் கொள்ளையடிப்பதும், சந்தைகளைத் தீமூட்டி எரிப்பதும் பயங்கரவாதம்.
• எமது இளைஞர்களை நரவேட்டையாடுவதும், அவர்களைச் சிறைவைத்து, சித்திரவதை செய்து கொல்வதும் பயங்கரவாதம்.
• வீடுகளுக்குள் புகுந்து எமது மக்களுடன் வீம்புசெய்வதும், வீதிகளில் நடமாடுபவர்களை விரட்டி அடிப்பதும், பயணம் செய்பவர்களை வழிப்பறி செய்வதும் பயங்கரவாதம்.
• மனித உரிமைக்குக் குரல் கொடுக்கும் மதகுருமாரையும், கல்விமான்களையும் சிறையில் வைத்து சித்திரவதை செய்வது பயங்கரவாதம்.
• குடியுரிமையைப் பறிப்பதும், மொழியுரிமையைப் பறிப்பதும், கல்வியுரிமையைப் பறிப்பதும், கலாச்சார உரிமையைப் பறிப்பதும், பாரம்பரிய நிலங்களைப் பறிப்பதும், இப்படியாக எமது இனத்தின் இனக்கொலைக்குத் திட்டம் தீட்டுவது மிகப்பெரிய பயங்கரவாதம்.
சிங்களப் பேரினவாத ஆளும் வர்க்கமே எமது மக்கள் மீது உண்மையான பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விட்டிருக்கிறது. இந்த அதர்மமான வன்முறையையே அரச பயங்கரவாதம் என்கிறோம். இதே அரச பயங்கரவாதத்தின் இயந்திரமாக இயங்குவது ஆயுதப் படைகள். ஆயுதப் படைகளின் ஆதிக்க வல்லமையினால், மக்களை அடக்குமுறைக்குள் ஒடுக்குபவர்களை அரச பயங்கரவாதிகள் என்கிறோம். இப்படிப்பட்ட பயங்கரவாதக் கும்பல் ஒன்றுதான் இன்று இலங்கையில் ஆட்சிபுரிகிறது.
• இந்த அரச பயங்கரவாத இயந்திரத்திற்கு எதிராகப் போராடும் நாம் பயங்கரவாதிகளா?
• அடிமைத்தனத்தால், அவமானத்தால் அல்லல்படும் எமது மக்களின் தன்மானத்திற்காகப் போராடும் நாம் பயங்கரவாதிகளா?
• ஈழத்தமிழ் இனத்தின் சுதந்திரச் சுடரை உலகெங்கும் பிரகாசிக்கச் செய்யும் எமது போராட்டம் பயங்கரவாதமாகுமா?
அதர்மத்தையும், அநீதியையும், அடக்குமுறையையும் எதிர்த்துப் போராடும் நாம் பயங்கரவாதிகள் அல்லர். ஒடுக்கப்படும் ஒரு இனத்தின் விடிவுக்காகப் போராடும் புரட்சிப் போராளிகள் நாம்.
இந்த உண்மையை அரச பயங்கரவாதிகளுக்கு அடிமைப்பட்டுக் கிடக்கும் தமிழ் அரசியல் தலைவர்களும் உணர்ந்து கொள்ள வேண்டும். அன்று நீங்கள் மூட்டிய தேசியவாதத் தீயில், அந்த சுதந்திர மகா யாகத்தில் பிறந்த அக்கினிக் குழந்தைகள் நாம். என்றும் நாம் விடுதலை நெருப்பாகவே எரிந்து கொண்டிருப்போம். எம்மில் சுடர்விடும் சுதந்திரத் தீயை எவராலும் அணைத்துவிட முடியாது.