விடுதலைப் புலிகள் பத்திரிகை

மாசி – பங்குனி 1991

தேசிய சுதந்திரத்தை வேண்டி நிற்கும் ஒரு மக்கள் சமுதாயத்திற்கு ஒரு தேசியக் கொடி இன்றியமையாதது. தேசிய தனித்துவத்தையும், ஒருமைப்பாட்டையும், இறைமையையும் ஒரு தேசியக் கொடி சித்தரித்துக் காட்டுகிறது. தேசாபிமானத்தின் சின்னமாகவும் அது திகழ்கிறது. அரசியல் சுதந்திரத்தின் ஆணிவேரான குறியீடாகவும் தேசியக் கொடி அமைகிறது.

தேசிய விடுதலையை இலட்சியமாகக் கொண்டு போராடி வரும் தமிழீழ மக்களுக்கு ஒரு தேசியக் கொடி உண்டு. சென்ற ஆண்டு இரண்டாவது மாவீரர் நாளன்று (27.11.1990) புலிக்கொடி தமிழீழத்தின் தேசியக் கொடியாகப் பிரகடனப்படுத்தப்பட்டிருக்கிறது.

எமது தேசியக் கொடியைச் சித்தரித்து நிற்கும் புலிச்சின்னம் எப்படித் தோற்றம் கொண்டது? யாரால் தோற்றுவிக்கப்பட்டது? அந்தக் குறியீட்டின் அர்த்த பரிமாணங்கள் என்ன? என்பதைப் பிரகடனப்படுத்துகின்றோம்.

சரியாக 19 ஆண்டுகளுக்கு முன்னர், 1972ஆம் ஆண்டு எமது தேசியத் தலைவர் பிரபாகரன் தமிழீழ சுதந்திர இயக்கத்திற்கு அத்திவாரமிட்டார். அன்று அவர் ஆரம்பித்த ஆயுத எதிர்ப்பு இயக்கத்திற்கு புதிய தமிழ்ப் புலிகள் எனப் பெயரிட்டார். பின்னர் 1976ஆம் ஆண்டில் புதிய தமிழ்ப் புலிகள் என்ற எமது அமைப்பு தமிழீழ விடுதலைப் புலிகள் எனத் தலைவரால் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அன்றிலிருந்து தமிழீழ தேசத்தின் தனித்துவத்தையும், தமிழீழ விடுதலை இலட்சியத்தையும் சித்தரிக்கும் சின்னமாகப் புலிச்சின்னம் விளங்கியது.

புலிச் சின்னத்தைத் தமிழீழத்தின் தேசிய சின்னமாகப் பிரபாகரன் தேர்ந்தெடுத்ததற்குக் காரணமுண்டு. புலிச்சின்னம் திராவிடர் நாகரீகத்தில் வேரூன்றி நிற்கும் ஒரு படிமம். தமிழரின் வீர வரலாற்றையும், தேசிய எழுச்சியையும் சித்தரித்துக் காட்டும் குறியீடு. வலிமையையும், வீரத்தையும், தன்னம்பிக்கையையும் குறித்துக் காட்டும் சின்னம். அன்று வீரவரலாறு படைத்த சோழ மன்னர்களும், புலிக்கொடியின் கீழ் தமிழனை எழுச்சி கொள்ளச் செய்தனர். தமிழுணர்வை, இன உணர்வை, தேசியப் பற்றுணர்வை, பகைவனுக்கு அஞ்சாத வீரவுணர்வைப் பிரதிபலிக்கும் ஆழமான, அற்புதமான குறியீடாகத் திகழ்கிறது புலிச்சின்னம்.

ஐநூறு ஆண்டு காலத்திற்கு மேலாக அந்நியர்களாலும், அயல்நாட்டுச் சிங்களவர்களாலும் அடிமைப்பட்டுக் கிடந்த ஈழத்தமிழினத்தை ஆயுதப் போராட்டப் பாதையில் வழிநடாத்த முன்வந்த எமது தலைவன், அன்று புலியைத் தேசிய விடுதலை இயக்கச் சின்னமாகத் தேர்ந்தெடுத்தது மிகவும் மதிநுட்பம் வாய்ந்த ஒரு முடிவு. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வு.

புலிச்சின்னம் தேசிய சின்னமாக மக்களின் உணர்வுகளில் ஆழமாகப் பதிந்தது. செத்துப் போய்க் கிடந்த தமிழ்த் தேசிய ஆன்மா புத்துயிர் பெற்றது. இன்று எமது தேசியக் கொடியாகிய புலிக்கொடியின் கீழ் தமிழீழ தேசிய இனம் ஒன்றுபட்டு நிற்கிறது. எழுச்சி கொண்டு நிற்கிறது.

எமது தலைவர் பிரபாகரன், தாம் உருவாக்கிய விடுதலை இயக்கத்திற்குப் புலிகள் என்ற பெயரைத் தேர்ந்தெடுத்ததற்கு இன்னுமொரு காரணமும் உண்டு.

நீண்ட கால அடிமைத்தனத்தில் ஊறிப்போன ஒரு சிறிய தேசிய இனம், ஒரு பெரிய தேசிய இனத்தின் நவீனமான, பலம் மிக்க ஆயுதப் படைகளை எதிர்த்துப் போராடுவது எப்படி? இராணுவ பலம் மிக்க ஒரு அரசுக்கு எதிராக ஆயுதப் போராட்டத்தை வெற்றிப் பாதையில் முன்னெடுத்துச் செல்வதாயின் சிறப்பான, விசேடமான போர்க்குணங்களைக் கொண்ட ஒரு விடுதலைப் படை உருவாக்கப்பட வேண்டும். அபாரமான துணிவும், சாவுக்கும் அஞ்சாத வீரமும், விடுதலை வேட்கையும் கொண்ட வீரர்களை உருவாக்க வேண்டும். மனித வேங்கைகளை உருவாக்க வேண்டும். புலிபோல வேகத்துடனும், மூர்க்கத்துடனும் போராடும் தலைசிறந்த வீரர்களை உருவாக்க வேண்டும். இந்த நோக்கில்தான் புலிப்படையைக் கட்டி எழுப்பினார் பிரபாகரன். பிரபாகரனின் புலிப்படை இன்று உலகின் தலைசிறந்த விடுதலை இராணுவமாகப் போற்றப்படுகிறது.

இன்று எமது தேசியக் கொடியில் பொறிக்கப்பட்டிருக்கும் புலிச்சின்னத்தின் உருவப்படம் பிரபாகரனின் கருத்திற்கு அமையவே வரையப்பட்டது. பிரபாகரனின் நண்பரும், மதுரையைச் சேர்ந்த பிரபல ஓவியருமான நடராஜன் என்பவர் 1977ஆம் ஆண்டு புலிச்சின்னத்தின் உருவப்படத்தை வரைந்தார். பிரபாகரனின் யோசனைக்கு அமையப் பல தடவைகள் வரைந்து, இறுதியில் எமது தலைவரின் எண்ணப்படம் புலிச்சின்னமாக உருவகம் பெற்றது. இந்தப் புலிச் சின்னம் இன்று எமது தேசியக் கொடியை அலங்கரிக்கிறது. சுதந்திரத் தமிழீழத்தின் தேசியக் கொடியாகவும் ஒரு நாள் உயர்த்தப்படவிருக்கும் இக்கொடியில் சித்தரிக்கப்பட்டுள்ள குறியீடுகளின் அர்த்தங்களை இனிப் பார்ப்போம்.

எமது தேசியக் கொடியை மூன்று நிறங்கள் அலங்கரிக்கின்றன: மஞ்சள், சிவப்பு, கறுப்பு ஆகிய நிறங்கள்.

தமிழீழ மக்களுக்கு ஒரு தாயகம் உண்டு. அந்தத் தாயகம் அவர்களது சொத்துரிமை. தமிழீழ மக்கள் ஒரு தனித்துவமான தேசிய இனம் என்பதால், அவர்களுக்குத் தன்னாட்சி (சுயநிர்ணய) உரிமை உண்டு. இந்தத் தன்னாட்சி உரிமை அவர்களது அடிப்படை அரசியல் உரிமை. தமது தாயகத்தை மீட்டெடுத்து, தன்னாட்சி உரிமையை நிலைநாட்டுவதற்காகத் தமிழீழ மக்கள் மேற்கொண்டுள்ள தேசிய விடுதலைப் போராட்டம் அறத்தின்பாற்பட்டது, மனித தர்மத்தை அடிப்படையாகக் கொண்டது என்பதை மஞ்சள் நிறம் சுட்டி நிற்கிறது.

தேசிய சுதந்திரம் பெற்றுத் தமிழீழத் தனியரசை அமைத்துவிட்டாற்போல நாம் முழுமையாக விடுதலை பெற்றதாகக் கொள்ள முடியாது. தமிழீழ சமுதாயத்திலுள்ள ஏற்றத்தாழ்வுகள் ஒழிக்கப்பட வேண்டும். வர்க்க, சாதிய முரண்பாடுகள் அகற்றப்பட வேண்டும். பெண் அடிமைத்தனம் நீக்கப்பட வேண்டும். இதற்கு சமுதாய அமைப்பில் புரட்சிகரமான மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும். சமத்துவமும், சமதர்மமும், சமூக நீதியும் நிலைநாட்டப்பட வேண்டும். இப்படியான புரட்சிகரமான சமுதாய மாற்றத்தை வேண்டும் எமது அரசியல் இலட்சியத்தைச் சிவப்பு நிறம் குறியீடு செய்கிறது.

விடுதலைப் பாதை கரடுமுரடானது. சாவும், அழிவும், தாங்கொணாத் துன்பங்களும் நிறைந்தது. இத்தனையையும் தாங்கிக் கொள்ள இரும்பு போன்ற இதயம் வேண்டும். அசைக்க முடியாத நம்பிக்கை வேண்டும். என்றும் தளராத உறுதி வேண்டும். கறுப்பு நிறம் மக்களின் மன உறுதியைக் குறித்துக் காட்டுகிறது.

தேசியக் கொடியின் மையத்தில் புலிச் சின்னம் அமையப் பெற்றிருக்கிறது. ஆவேசத்துடன் பாயும் புலியைக் குறிப்பதாகப் புலித்தலையும், முன்னங்கால்களும் சித்தரிக்கப்பட்டுள்ளன. புலிச் சின்னத்தின் அர்த்தம் பற்றி மேலே விளக்கியிருந்தோம். தமிழ்த் தேசாபிமான எழுச்சியை மட்டுமன்றி, வலிமையையும், வீராவேசத்தையும் புலிச்சின்னம் குறித்து நிற்கிறது. பாயும் புலியை ஒத்த எமது வீர விடுதலைப் போரையும் அது சித்தரிக்கிறது. புலித்தலையைச் சுற்றி வட்டமாக ரவைகளும், இருபுறத்திலும் கத்திமுனையுடைய துப்பாக்கிகளும் எமது ஆயுதம் தரித்த விடுதலைப் போராட்டத்தைக் குறியீடு செய்கின்றன.

ஒட்டுமொத்தத்தில் எமது தேசியக் கொடி, சுதந்திரத்தையும், சமதர்மத்தையும் வேண்டி நாம் நடாத்தும் வீரவிடுதலைப் போரை அற்புதமாகச் சித்தரிக்கிறது. தமிழரின் வீர மரபில் வேரூன்றி நின்று, பிறப்பிக்கப் போகும் தமிழீழத் தனியரசின் குறியீட்டு வடிவமாகவும் எமது தேசியக் கொடி திகழ்கிறது.