ஈழநாதம், 18.06.1993

சீதனம் பற்றிய விவாதத்தை மிகவும் உன்னிப்பாகப் படித்து வரும் வாசகர் என்ற ரீதியில் இந்த விவாதம் பற்றி எனது தனிப்பட்ட மதிப்பாய்வை முன்வைக்க விரும்புகிறேன். சீதனம் பற்றிய பிரச்சினையைப் பல கோணங்களில் பார்த்திருக்கிறார்கள். ஆனால் எவருமே முழுமையாக இப்பிரச்சினையை அணுகியதாகத் தெரியவில்லை. சீதனப் பிரச்சினையால் பாதிக்கப்படுவது யார்? இது எங்கிருந்து, எப்படி, ஏன் தோற்றம் கொண்டது? இது ஒரு குடும்பப் பிரச்சினையா? வர்க்கப் பிரச்சினையா? சமூகப் பிரச்சினையா? இது போன்ற கேள்விகளை ஆராய்ந்து பார்ப்பதில்தான் விவாதத்தின் பெரும் பகுதி விரயமாகி இருக்கின்றது. வேறு சிலர் சீதனப் பிரச்சினையை ஒழிப்பதற்கு ஆலோசனைகளை வழங்கியிருக்கிறார்கள். காதலை ஊக்குவிக்க வேண்டும், சமுதாயத்தை மாற்றியமைக்க வேண்டும், சட்டத்தைக் கொண்டுவர வேண்டும், கலாச்சாரப் புரட்சியை நடத்த வேண்டும் என்ற ரீதியில் பல்வேறு பரிந்துரைகளை வழங்கியிருக்கிறார்கள். ஒரு சிலர் சீதனத்தை ஆதரித்தும் எழுதியிருக்கிறார்கள். பெண்ணின் முதலீடு இருந்தால்தான் குடும்பம் நடத்த முடியும் என்று மிகவும் பிற்போக்கான கருத்துக்களையும் முன்வைத்திருக்கிறார்கள். இன்னொருவர் ‘தலைவிதியில்’ நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுவதாகப் புராண காலக் கதையைச் சொல்லியிருக்கிறார். இப்படியாக விவாத மேடை நகைச்சுவையாகவும், இடைக்கிடையே ‘சீரியஸ்’ ஆகவும், பரவலாக அபத்தமாகவும் அமைந்திருக்கிறது என்பதே எனது கருத்து.

இந்த விவாத அரங்கில் பெண்ணிலைவாதக் கருத்துக்கள் ஆணித்தரமாக எடுத்துச் சொல்லப்படவில்லை. சீதன முறைமை என்பது ஒரு பெண் ஒடுக்குடுறை வடிவம் என்பதைச் சமூகவியல் கண்ணோட்டத்துடன் இதுவரை எவராவது எடுத்து விளக்கவில்லை. ஒரு சில பெண் எழுத்தாளர்களின் ஆக்கங்கள் வெளிவந்த போதும் அவற்றில் கருத்தாழத்தைக் காண முடியவில்லை. பிரச்சினையைப் பெண்ணிய நோக்கில் தெளிவாக, ஆழமாக விளக்காமல், சீதனத் தடைச்சட்டம் வேண்டுமென இவர்கள் முன்வைக்கும் கருத்துக்கள் நுனிப்புல் மேய்ச்சலான பார்வையாக அமைந்துள்ளன. சீதனம் வாங்குவது ஆண்மையின் ஆளுமைக்கு இழுக்குத்தேடும் செயல் என ஒரு பெண்மணி வாதிடுகிறார். இந்தப் பார்வையில் ஆண்நிலைவாதம்தான் மேலோங்கி நிற்கிறது என்பதை அவர் புரிந்து கொள்ளவில்லை போலும். பெண்கள் ஆயுதம் ஏந்திப் போராடும் ஒரு புரட்சிகரச் சூழலில், பெண்ணிலைவாதக் கருத்து நிலையில் ஏன் இந்த வறுமை ஏற்பட்டதோ தெரியவில்லை. அனேகமாக ஓய்வு பெற்ற ஆசிரியர்களும், மாணவர்களும் ஒரு சில அனாமதேய எழுத்தாளர்களும் இந்தப் பிரச்சினை பற்றி எழுதியிருக்கிறார்கள். சொந்த அனுபவம் என்றும், நட்பியல் எதார்த்தம் என்றும் இவர்கள் முன்வைக்கும் கருத்துக்கள் சனரசனையை ஏற்படுத்திய பொழுதும், பிரச்சினையைத் தீர்க்கமாக அணுகவில்லை. பாதிக்கப்படுபவர்கள் யார்? பயனடைபவர்கள் யார்? என்ற வகையில் ஒருவரை ஒருவர் விமர்சித்துக் கருத்துப் போர் நடைபெற்றுள்ளதே தவிர, பிரச்சினையை ஆழமாக அலசிப் பார்க்கும் புலமை இவர்களிடம் இருப்பதாகத் தெரியவில்லை. எந்த விதமான உருப்படியான தீர்வையும் இவர்கள் முன்வைக்கவில்லை. காதலுறவுக்கு சுதந்திரம் வழங்கிவிட்டால் சீதனத் திருமணங்கள் ஒழிந்துவிடும் என்பது சிலரது கருத்து. ஏதோ யாழ்ப்பாணத்தில் காதல் உணர்வு செத்துப் போய்விட்டது என இவர்கள் எண்ணுகிறார்கள் போலும். ஆனால் இங்கு காதல் மலிந்து போய்க் கிடக்கிறது. இந்தக் காதல் எல்லாம் திருமணத்தில் போய் முடிகிறதா? என்பதுதான் கேள்வி. திருமணத்தில் முடிந்த காதல் உறவுகளும் சீதனப் பிரச்சினையிலிருந்து விடுபட்டுள்ளனவா? என்பதும் கேள்விக் குறிதான். மேற்குலக சுதந்திரத்தை சிலர் உதாரணமாகக் கொள்கின்றனர். இந்தக் ‘காதல் சுதந்திரம்’ எந்த அளவிற்கு விபரீதக் கோலங்கள் கொண்டுள்ளன என்பதோ, அல்லது தாம்பத்திய உறவுகள் சிதைந்து திருமணங்கள் எந்த அளவுக்கு முறிந்து வருகின்றன என்பதோ இவர்களுக்குத் தெரியாது போலும். காதல் என்பது பாலெழுச்சியின் தோற்றப்பாடான ஓர் உணர்ச்சிநிலை என்பதால் அது எல்லா மனித சமூகங்களிலும், எல்லா மனிதர்களையும் ஆட்டிப் படைக்கிறது. ஆயினும் அது பண்பாட்டு உலகத்தால் பண்படுத்தப்பட்டு, தாம்பத்திய அன்புறவிற்கு அத்திவாரமாக அமையும் பொழுதுதான் அது மகத்துவம் பெறுகிறது. இனக்கவர்ச்சியின் அப்பட்டமான உணர்ச்சி வெளிப்பாடாகத் தோற்றம் கொள்ளும் காதலுக்கும், இல்லற வாழ்வின் இதயமாக அமைந்துவிடும் காதலுக்கும் வேறுபாடு உண்டு. திராவிடர் பண்பாடு இல்லற வாழ்வுக்கு நிறைவுதரும் அன்பு உறவாகவே காதலைக் கௌரவிக்கிறது.

காதலை ஊக்குவித்துச் சீதனத்தை விரட்டிவிடலாம் என எண்ணுவது தவறு. சீதனத்தை ஒழித்துவிட்டால்தான் உண்மையான காதல் உறவு, அதாவது தாம்பத்திய வாழ்வுக்கு ஆதாரமான காதல் உறவு, தோற்றம் கொள்ள வாய்ப்புண்டு.

சீதனம் ஒழிந்து போவதற்குச் சமுதாயம் மாற வேண்டும் எனச் சிலர் எழுதுகிறார்கள். ஆனால் சமுதாய மாற்றம் என்றால் என்ன என்ற தெளிந்த பார்வையுடன் இவர்கள் இந்தக் கருத்தைக் கூறுவதாகத் தெரியவில்லை. சமுதாய மாற்றம் என்றால் பழைய சமூக உறவுகள் ஒழிக்கப்பட்டுப் புதிய சமூக உறவுகள் கட்டி எழுப்பப்படுவதையே குறிக்கும். எமது சமூகத்தின் பொருளாதார உற்பத்தி வடிவம், பொருளுற்பத்தி உறவுகள், சாதியக் கட்டமைப்பு, அதன் உறவு முறை என்பன போன்ற எமது சமூக வாழ்வின் அடிப்படைகளை ஆழமாகப் பார்க்காமல், மேலெழுந்தவாரியாகச் சமூக மாற்றம் எனக் கோருவது சிறுபிள்ளைத்தனமானது. அத்துடன் நிலநிதர்சனத்தையும் நாம் பார்க்க வேண்டும். இங்கு ஒரு விடுதலைப் போர் நடந்து கொண்டிருக்கிறது. எமது தாயக பூமியை மீட்டெடுத்து, ஒரு தனி அரசை நிறுவ நாம் போராடிக் கொண்டிருக்கிறோம். எமது இலட்சியம் நிறைவேறி, ஆட்சி அதிகாரம் எமது கைக்கு வரும்போதுதான் அடிப்படையான சமூக மாற்றம் பற்றி நாம் சிந்திக்கலாம்.

அந்தக் காலம் வரை நாம் காத்திருக்கத் தேவையில்லை. இப்பொழுது உள்ள புரட்சிகரச் சூழ்நிலையில் எமது கட்டுப்பாட்டின் கீழுள்ள பிரதேசத்தில் சமூக சீரமைப்பு வேலைகளை நாம் மேற்கொள்வது சாத்தியம். இந்தச் சந்தர்ப்பத்தில் சட்டம் மூலம் சீதனத்தை ஒழித்துக் கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென சிலர் யோசனைகள் தெரிவித்திருக்கிறார்கள். இந்தச் சட்டவாக்க நடவடிக்கை சம்பந்தமாக இதுவரை எவரும் ஆக்கபூர்வமான கருத்துக்களைத் தெரிவிக்காதது விசனத்துக்குரியது.

தனியார் சொத்துடமை, சாதியம், சீதனம், பெண்ணடிமைத்தனம் போன்றவற்றுக்குக் காப்பரணாக நின்று அநீதியில் அமைந்த யாழ்ப்பாண சமூக உறவுகளை நியாயப்படுத்தி வரும் தேச வழமைச் சட்டம் செயல்பட்டு வருகிறது. இந்தத் தேச வழமைச் சட்டத்தை மாற்றியமைப்பது எப்படி? இச்சட்டத் தொகுப்பில் உள்ள தேவையற்ற, நடைமுறைக்கு ஒவ்வாத, சமூக அநீதிக்கு மாறான அம்சங்கள் என்ன? இவற்றைக் களைந்து, எத்தகைய புதிய சட்ட விதிகளை ஆக்கம் செய்வது? சீதனத் தடைச் சட்டம் எப்படியாக அமைய வேண்டும்? அதை நடைமுறைப்படுத்துவது சாத்தியமா? தடைச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் எத்தகைய சிக்கல்கள் ஏற்படும்? இந்தச் சட்டவாக்கப் பிரச்சினை பற்றி எவருமே விவரமாக, ஆழமாக எழுதவில்லை. தேச வழமைச் சட்டத்தில் புலமை பெற்றவர் எனக் கருதப்படும் சட்டத்தரணி ஒருவர் எழுதியிருக்கிறார்: ‘சொர்க்கத்தில் நீதி பரிபாலனம் நடக்கிறது; அங்குதான் தலையெழுத்தும் எழுதப்படுகிறது; திருமணங்களும் அங்குதான் நிச்சயிக்கப்படுகின்றன’ என்றவாறு இவர் எழுதுகிறார். சீதனத் தொகையும் சொர்க்கத்தில்தான் நிச்சயிக்கப்படுகிறது என இவர் எண்ணுகிறார் போலும். சட்டத்தரணிகளே இப்படி மூட நம்பிக்கைகளில் புதைந்துபோய் கிடந்தால், சாதாரண மக்கள் மத்தியில் மனப்புரட்சியை ஏற்படுத்துவது எப்படி? சீனப் பாணியில் தமிழீழத்திலும் ஒரு கலாச்சாரப் புரட்சி ஏற்பட வேண்டும் என ஒரு நண்பர் எழுதியிருக்கிறார். வரவேற்கப்பட வேண்டிய யோசனை. காலத்தின் தேவையும் அதுதான். ஆனால் இந்த இமாலயச் சாதனையை எப்படிச் சாதிப்பது? யாழ்ப்பாண இராச்சியம் இன்னும் புராண யுகத்தில் உறங்கிக் கிடக்கிறது; இருண்ட காலத்து இதிகாசங்களில், தாலாட்டுப் பாடல்களில் நிம்மதியாகத் தூங்குகிறது. யாழ்ப்பாணத்து மனிதனைத் தட்டியெழுப்புவது யார்? படித்தவர்களும், புத்திஜீவிகளும் கும்பகர்ணர்களாகத் தூங்கும் போது, யாழ்ப்பாண சமூகத்தின் விழிப்புணர்வை செயற்படுத்துவது எங்ஙனம்?

சீதனப் பிரச்சினை பற்றி அறிவுசார் உலகத்தில் இருந்து எவரும் எழுதியதாகத் தெரியவில்லை. ஒரு பிராரம்ப உசாவலாகத்தன்னும் இந்தப் பிரச்சினையைத் தொட்டுப் பார்க்க எவரும் துணியவில்லை. இது சாதாரண மனிதர்களின் சாதாரணப் பிரச்சினை எனக் கருதி உலகம் அக்கறை காட்டவில்லை போலும். சாதாரண மனிதனின் சமூகப் பிரச்சினைகளை, சாதாரண மனிதன் புரிந்து கொள்ளும் வகையில் சாதாரண மொழியில் எழுதி விளக்குவது, சமூக ஆய்வின் தரத்தைக் குறைத்துவிடும் என இவர்கள் சிந்திக்கிறார்களோ தெரியவில்லை.

இன்றைய சமூகவியல் இரண்டு திசைகளில் செல்கிறது. இதன் அடிப்படையில்தான் சமூக ஆய்வியல் முறைமையும் அமைகிறது. ஒன்று சமூக முரண்பாடுகளையும், அதன் காரணிகளையும் ஊடுருவிப் பார்க்கும் ஆய்வு முறைமை. இதனை conflictual model என்பார்கள். மற்றது சமூகத்தை ஒரு உடற்கூற்றுக் கட்டமைப்பாக, பல்வேறு உறுப்புக்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளதாக இயங்கும் கட்டமைப்பாகக் கொள்ளும் அணுகுமுறை. இதனை consensus model என்பார்கள். இந்த இரண்டாவது அணுகுமுறையில் சமூக நிறுவனங்களும், அவற்றின் ஒத்திசைவான செயற்பாடும் சமூக இயக்கத்திற்கு அவசியமானதாகக் கருதப்படுகிறது. அமெரிக்க சமூகவியல்துறை இந்தக் கோட்பாட்டிற்கு முதன்மை கொடுக்கிறது. இது சமூக முரண்பாட்டுத் தத்துவத்தை நிராகரித்துவிடுகிறது. புரட்சிகரமான சமூக மாற்றத்தை எதிர்த்து நிற்கிறது. எல்லா சமூக அலகுகளும் ஒத்திசைவான சமூக இயக்கத்திற்கு ஆதாரமானவை என்ற பார்வையில் சமூக நிறுவனங்களின் சீரமைப்பை மறுக்கிறது. சமூக மாற்றத்தை எதிர்க்கும் பழமைவாதிகள் இந்தச் சமூக தத்துவத்தைப் பற்றிக் கொள்வதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. யாழ்ப்பாண சமூகச் சிந்தனைத்துறையிலும் இந்தத் தத்துவம் ஆழமாக வேரூன்றி நிற்கிறது. இந்தத் தத்துவார்த்தப் பார்வையும், அடிப்படையில் சமூக அநீதியின் வடிவங்களான சாதியம், சீதனம் போன்றனவும் சமூக வாழ்வியக்கத்திற்கும், அதன் ஸ்திரமான நிலையாக்கத்திற்கும் உறுதுணையானவை என நியாயப்படுத்தப்படுகின்றன. உதாரணமாகக் கலாநிதி சிற்றம்பலத்தின் ‘யாழ்ப்பாண இராச்சியம்’ என்ற நூலில் மிகவும் நுட்பமான முறையில் சாதியம் நியாயப்படுத்தப்படுவதைக் கீழ்க்கண்ட பந்தியில் காணலாம்.

‘‘இத் தேச வழமைச் சட்டங்கள் வேளாண் சமூகத்தினரதும், அவர்களது அடிமைகள், குடிகள் ஆகியோரதும் வழக்கங்களை எடுத்துக் காட்டுவதால் சாதிய அமைப்பு என்ற வட்டத்துக்குள்ளேதான் இவை செயற்பட்டன எனலாம். இத்தகைய அமைப்பு அக்கால, மத்திய காலப் பொருளாதாரப் பின்னணியிற் சமூகத்தின் பல்வேறு பிரிவினர் பிணக்குகள் இன்றி இயங்குவதற்கும், சமூகத்தில் ஸ்திரமான நிலை காணப்படுவதற்கும் உறுதி செய்வதாக அமைந்திருந்தது (137ஆம் பக்கம்).’’

இங்கு சமூக ஒத்திசைவுத் தத்துவம் சாதிய முரண்பாட்டை மூடிமறைத்து விடுவது மட்டுமல்லாது, நிலையான சமூக இயக்கத்திற்குச் சாதியம் ஆதாரமாக அமைவதாகவும் நியாயப்படுத்த முனைகிறது.

யாழ்ப்பாண அறிவுலகம் சீதனம் பற்றியோ, சாதியம் பற்றியோ உண்மையை எழுத ஏன் துணிவதில்லை என்பதைப் புத்தி கூர்மையுள்ளவர்கள் புரிந்து கொள்வார்கள்.

‘‘அறிவு புகட்டுபவர்களுக்கு முதலில் அறிவு புகட்டப்பட வேண்டும்’’ என்று ஒரு சமூக சிந்தனையாளன் கூறியது இங்கு நினைவிற்கு வருகிறது.