வெளிச்சம் சஞ்சிகை

பிரேமிள் (தர்மு சிவராமு) ஒரு புதுமைக் கவிஞர். புதுக் கவிதையில் புதிய பரிமாணங்களைத் தொட்டுக் காட்டியவர். படிம உலகில் புதுமைகள் செய்தவர். அவர் படைத்த கவிதை உலகம் தனித்துவமானது. அபூர்வமான உணர்வுகளைக் கிளறிவிடும் வீச்சும், வேகமும் அவரது கவிதைகளுக்குண்டு.

படிமவாதி என்றும், குறியீட்டுக் கவி என்றும், கனவுலகக் கற்பனாவாதி என்றும், மிகையுணர்ச்சிக் கவி என்றும் தனது படைப்பிலக்கியத்திற்குக் குத்தப்படும் அடையாள முத்திரைகள் எதையும் அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. காவியத்தனமான ஆன்மீகச் சுயதேடலிலிருந்து தனது கவிதைகள் உருவகம் பெறுவதாக அவர் கூறுவார். ‘நான் என்னையே தேடிச் செல்கிறேன். இந்தத் தேடலில்தான் என்னுடைய சாராம்சம் உள்ளது. தேடலின்போது நான் நடந்து செல்லும் பாதை கவிதையினுடையது’ என்று ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார்.

1939ஆம் ஆண்டு, திருகோணமலையில், ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்த பிறேமிள், அறுபதுகளில் சி.சு.செல்லப்பாவின் ‘எழுத்து’ பத்திரிகை மூலம் பிரபல்யமானார். எழுபதுகளின் ஆரம்பத்திலிருந்து தமிழ் நாட்டில் வசித்து வந்தார். ‘எழுத்து’வில் அவர் படைத்த புதுக் கவிதைகள் சொற்பம். ஆனால் புதுக் கவிதைபற்றி நிறைய எழுதினார். ‘எழுத்து’விற்குப் பின் சிறு பத்திரிகைகளில் அவரது கவிதைகள் வெளிவந்தன. குறுநாவல், சிறுகதைகள், இலக்கியத் திறனாய்வுக் கட்டுரைகளாக அவரது படைப்பிலக்கியம் விரிகிறது. எனினும் கவிதையிலக்கியம் அவரது சிருஸ்டி களம். கவிதையில்தான் புதுமை செய்திருக்கிறார்.

புரிய முடியாதவாறு பூடகமாக எழுதுகிறார் என அவர் பற்றிக் கண்டன விமர்சனங்கள் எழுப்பப்படுவதுண்டு. தனது கவிதைகளைப் புத்தி பூர்வமாகப் புரிந்து கொள்வதைவிட, உணர்வுபூர்வமாக உணர்ந்து கொள்வதுதான் முக்கியம் என்பது அவரது வாதம். ‘வாசகனை உணர்வுபூர்வமாக ஒரு உன்னத நிலைக்கு இட்டுச் செல்வதுதான் எனது நோக்கம்’ எனக் கூறுவார்.

‘மேல் நோக்கிய பயணம்’ என்ற நீண்ட கவிதையை நூலாக வெளியிட்டு எனக்கு ஒரு பிரதியை அனுப்பியிருந்தார். பின்பு நேரில் சந்தித்த பொழுது அக்கவிதை பற்றி எனது கருத்தைக் கேட்டார். ‘அகவெளியின் ஆழங்களைத் தொடும் ‘‘மெட்டாபிசிக்கல்’’ கவிதை’ என்றேன். அவர் ஒன்றும் சொல்லவில்லை. அவரது மௌனத்தில் ஒரு இணக்கப்பாடு தெரிந்தது.

இளம் பராயத்திலிருந்தே நிறைய வாசித்தவர். ஆங்கிலம், சமஸ்கிருதத்தில் பாண்டித்தியம் பெற்றவர். மேலைத்தேய, கீழைத்தேய நாகரீகங்கள், இதிகாசங்கள், இலக்கியங்கள், தத்துவங்கள் என்ற ரீதியில் உலகளாவிய சிந்தனைப் போக்குகளைக் கிரகித்துத் தெளிவுபெற, விடாது முயற்சி செய்தவர். அவரது கவிதைகளில் காணப்படும் படிமச் செறிவுக்கு இந்தப் பரந்த வாசிப்பு உதவியது. தமிழுக்கும் அது புதிய செழிப்பை அளித்தது.

ஆழ்நிலை அனுபவங்களுக்கு இட்டுச் செல்வும் படிமச் சித்திரங்களாக அவரது கவிதைகள் அமைவதைக் காணலாம். படிமங்களில் பரிசோதனை செய்து, புதுக் கவிதைக்குப் புதுமை சேர்த்தார். படிமப் பிரயோகத்தில் அவரது ஆற்றலை வெளிப்படுத்தும் இந்தக் கவிதையைப் பாருங்கள். ‘முதுமை’ என்ற தலைப்பில் வெளியான சிறு கவிதை:

காலம் பனிந்து விழுந்து
கண்களை மறைக்கிறது.
கபாலத்தின் கூரையுள்
ஒட்டியிருந்து
எண்ணவலை பின்னிப் பின்னி
ஓய்கிறது மூளைச் சிலந்தி.
உணர்வின் ஒளிப்பட்டில்
புலனின் வாடைக்காற்று
வாரியிறைத்த பழந்தூசு.
உலகை நோக்கிய
என் விழி வியப்புகள்
உயிரின் இவ் அந்திப் போதில்
திரைகள் தொடர்ந்து வரும்
சவ ஊர்வலமாகிறது.
ஒவ்வொரு திரையிலும்
இழந்த இன்பங்களின்
தலைகீழ் ஆட்டம்.
அந்தியை நோக்குகிறேன்;
கதிரிக் கொள்ளிகள் நடுவே
ஏதோ எரிகிறது…
ஒன்றுமில்லை
பரிதிப் பிணம்.

‘முடிச்சுக்கள்’ என்ற கவிதையின் ஒரு அலகாக இந்த வரிகள்:

மண்ணைப் பிடித்தான் கடவுள்
மனிதனாயிற்று. ஆகி
அது என்ன உளிச் சத்தம்?
கல்லைச் செதுக்கிச் செதுக்கி
கடவுளைப் பிடிக்கிறது
மண்.

கிரகிக்கும் மனதின் நேரடி அனுபவத்திற்கு அப்பால் உணர்வுலக விழிப்புநிலைகளைத் தூண்டிவிடும் படிமக் குறியீட்டுக் கவிதைகள் நிறைய எழுதியிருக்கிறார். விபரிக்க முடியாத ஒரு வசீகரம் அவற்றில் இழையோடும். அந்த வரிசையில் இதுவும் ஒரு குட்டிக் கவிதை:

சிறகிலிருந்து பிரிந்த
இறகு ஒன்று
காற்றின்
தீராத பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை
எழுதிச் செல்கிறது.

பிரேமிளின் கவிதைகளில் வெளிப்பாடு காணும் சுய தரிசனத்தை நோக்கிய தேடல் ஆன்மீக ரீதியானது. இந்த ஆன்மீகம் மதம் சம்பந்தப்பட்டதல்ல. சத்தியத்தை நோக்கிய மனிதத் தேடலையே அது குறிக்கும். இந்த மெய்ஞானத் தேட்டத்தில் நாட்டம் கொண்டவரான பிரேமிள், ஜிட்டு கிருஸ்ணமூர்த்தி, ரமண மகரிசி போன்றோரை ஆழமாகப் புரிந்து கொண்டவர். அவரிடம் கிருஸ்ணமூர்த்தியின் தாக்கம் அதிகமாகத் தென்படும். கிருஸ்ணமூர்த்தி கூறும் அகன்ற பிரபஞ்ச விழிப்புணர்வைக் கலாரீதியான உணர்வாகக் கொள்கிறார் பிரேமிள். இதனை ஒரு பேட்டியில் கீழ்க்கண்டவாறு விளக்குகிறார். ‘கலாரீதியான உணர்வு என்பது, எல்லாவிதமான மனத்தடைகளையும், சமூக ரீதியான தடுப்புக்களையும், வேலிகளையும், தேசங்கள், மொழிகள் சம்பந்தமான எல்லைகளையும், நம்பிக்கைகளையும் தாண்டி, மனிதனை மனிதன் தொற்றக்கூடிய தன்மையுள்ள ஒரு வீர்யம்.’ இதுதான் தனது பார்வையின் அத்திவாரம் என்கிறார் பிரேமிள்.

தமிழ் இலக்கிய உலகில் பிரேமிள் ஒரு சர்ச்சைக்குரிய படைப்பாளியாக விளங்கினார். அவரது இலக்கியத் திறனாய்வு எழுத்துக்கள், தமிழ் இலக்கிய உலகில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. மிகவும் கடுமையான தொனியில் கண்டன விமர்சனங்களை எழுதி, முதுபெரும் எழுத்தாளர்களை ஈவிரக்கமின்றிச் சாடினார் பிரேமிள். விமர்சகர்களைக் கடுமையாக விமர்சித்தார். இதனால் பல எழுத்தாளர்களையும், விமர்சகர்களையும் பகைத்துக் கொண்டார். தமிழ் இலக்கிய உலகில் பிரேமிளின் கவித்துவத் திறனாற்றல் ஓரங்கட்டப்பட்டு அந்நியமானதற்கு இதுவும் ஒரு காரணம்.

பிரேமிள் ஒரு விசித்திரமான தனிப்போக்குடையவர். தன்னைச் சுற்றி ஒரு தனியுலகை சிருஸ்டித்து வாழ்ந்தவர். அந்தத் தனித்துவ அறிவுலகில் சகிப்புத்தன்மைக்கும், சமரச மனப்பான்மைக்கும் அவர் இடமளிப்பதில்லை. இது பிரேமிளின் ஆளுமைச் சிக்கலாக இருக்கலாம். ஆயினும் இக் குறைபாட்டை மிகைப்படுத்தி, அவரது படைப்பாற்றலை இழிவுபடுத்துவதோ, அவரது கவிதைகளின் மகத்துவத்தை மதிப்பிறக்க முனைவதோ தவறானதாகும்.

எண்பதுகளின் நடுப்பகுதியில் சென்னையில் பிரேமிளை ஒரு தடவை சந்தித்த போது ‘தமிழீழ ரணகளம்’ என்ற புகைப்பட நூலுக்கு ஒரு கவிதை எழுதித் தருமாறு கேட்டேன். மறுநாளே கவிதையுடன் வந்தார். ‘உதிர நதி’ என்ற தலைப்பில் வெளியான கவிதை இது:

அச்சிட்ட எழுத்துக்களின்
அறிவிப்புப் பவனி
ஸ்தம்பிக்கிறது.
செய்தித் தாளில்
பிரதிபலிக்கும்
வாசக முகத்துக்குள்
அலறுகின்றன
ஓராயிரம்
கபாலங்கள்.
அலறும் ஒவ்வொரு
அச்செழுத்திலும்
குரல்பெறுகிறது ஓர்
மூதாதை இனம்.
மனித வர்க்கத்தின்
மனச்சாட்சியினுள்
பாய்கிறது அதன்
உதிர நதித் துடிப்பு.
நேற்றிலிருந்த முற்றத்தில்
மழலை விளைத்து இன்று
குற்றுயிரில் துடிக்கும்
குழந்தையின் நாளத்தில்
நேற்றைக்கும் மிகமுந்தி
எகிப்தின் பிரமிட்கள்
எழுமுன்னாடி ஒரு
யுகத்தின் வாசலில்
இமயம் உருகி
ஏழு கிளை விரித்து
பிரவஹித்த சப்த
சிந்து துடிக்கிறது.
துடித்துக் கொடுங்கோலின்
துப்பாக்கி ரவை மழையில்
உடைந்து சொரிகிறது.

பிரேமிள் இன்று உயிருடனில்லை. உணர்வுத் தூரிகையால் அவர் வரைந்த படிம ஓவியங்கள் உயிர்க் கவிதைகளாகத் தமிழுலகில் என்றும் நிலைத்திருக்கும்.