ஈழநாதம் 19.03.1993
யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் வெளியீடாகப் பல்வேறு ஆய்வாளரின் ஆக்கங்களைக் கொண்ட தொகுப்பாக ஆரியச் சக்கரவர்த்திகளின் காலத்தில் வாழ்ந்த யாழ்ப்பாண மனிதனையும், அவனது சமூகப் பண்பாட்டு வாழ்வையும் சித்தரிக்கும் வரலாற்றுப் பதிவேடாக ‘யாழ்ப்பாண இராச்சியம்’ என்ற நூல் வெளியாகி இருக்கிறது.
புதிய ஆய்வுகள் மூலம் எமது இருண்ட பழமைக்கு ஒளியேற்றும் முயற்சிகள் வரவேற்கத்தக்கது; பாராட்டுக்குரியது.
வரலாறு பற்றிய ஒரு தெளிந்த தரிசனம், வரலாற்று ஆய்வு முறைமை பற்றிய ஒரு திண்ணியமான அறிவியல் பார்வை, சுயவிருப்புச் சலனங்களற்ற புறநிலைநோக்கு, சமூகவியல் பற்றிய ஒரு ஆழமான கண்ணோட்டம், இவை ஒரு வரலாற்று ஆசிரியனுக்கு இருக்க வேண்டிய அறிவுசார் பண்பியல்புகள். காலத்தில் யாத்திரை செய்து, கடந்தகால மெய்யுண்மைகளைக் கண்டு கொள்வதற்கு இந்தப் புலமைத் தகமைகள் இன்றியமையாதவை. இல்லாது போனால் ஒரு வரலாற்றுக் காலகட்டத்தை அதன் ஆழத்திலும், அகலத்திலும், அதன் எதார்த்தக் கோலத்திலும் தரிசித்துக் கொள்வது கடினம்.
வரலாறு என்பது செத்துப் போன காலத்தின் புதைகுழிக்குள் உக்கிப் போன எலும்புகளைத் தேடுவதல்ல. கடந்தபோன நிகழ்வுகளைக் காலவரிசையில் நிரைப்படுத்திவிடுவதும் வரலாறு ஆகிவிடாது. வரலாறு என்பது மனித சமூக வாழ்வியக்கம் பற்றியது. அந்த அசைவியக்கத்திற்கும், மாற்றத்திற்கும் உந்தியல்பான தன்மைகள், சக்திகள், விதிகள் பற்றியது.
‘யாழ்ப்பாண இராச்சியம்’ எந்த வகையில், எந்த அளவிற்கு, எந்த ஆழத்திற்கு இந்த வரலாற்றுப் பதிவைச் செய்து கொள்கிறது எனப் பார்ப்பது இக்கட்டுரையின் நோக்கமல்ல. அதாவது, இந்நூலை அதன் முழுமையில், அதன் பல்பரிமாண அம்சங்களில் விசாரணை செய்து விமர்சிப்பது எனது குறிக்கோள் அல்ல. இந்த நூலின் வரலாற்று அறிமுகத்தில், ஈழத்து வரலாற்றுப் பின்னணியில் சமகால அரசியல் பற்றிப் பதிப்பாசிரியர் எடுத்தியம்பும் கருத்துக்கள் பற்றி விமர்சிப்பதே எனது நோக்கம்.
‘யாழ்ப்பாண இராச்சியம்’ பற்றிச் சில குறிப்புகள்
பல்வேறு ஆய்வாளரின் கூட்டு ஆக்கமாகப் படைக்கப்படும் ஒரு வரலாற்றுக் குறிப்பேட்டிற்கு அறிமுகம் எழுதுவதில் சில அறிவியல் பண்புநெறிகள் பேணப்படுவது அவசியம். இந்தப் பண்பு நெறிகளை உதாசீனம் செய்து, நூலின் உள்ளடக்கத்திற்கு அப்பால் சென்று, வரலாற்றுக் காலத்து வரம்புகளைக் கடந்து நின்று, சமீபகால அரசியல் பற்றி சுயவியாக்கியானம் செய்வது பதிப்பாசிரியரின் புறநிலை நோக்கைக் கேள்விக் குறிக்கு இலக்காக்கியுள்ளது. இந்தத் தனிமனித அரசியல், நூலின் தகைமையையும், புலமைத்துவத்தையும் பங்கப்படுத்தலாம் என்பதால் பதிப்பாசிரியர் இதனைத் தவிர்த்திருக்கலாம். ஆயினும் ஆரியச் சக்கரவர்த்திகளின் அரச பாரம்பரியத்துடன் அமிர்தலிங்கத்தின் அரசியலைத் தொடர்புபடுத்திக் காட்ட வேண்டும் என்ற அங்கலாய்ப்பில் அவரது நிதானம் தளம்பிவிடுகிறது. படிநிலைகளாகப் பரிணாம வளர்ச்சி கண்ட தமிழ்த் தேசியத்தின் உருவாக்கத்திற்கு அகிம்சை முறையிலும், ஆயுதவழியிலும் எழுச்சி கொண்ட அரசியல் போராட்டங்கள் உந்துசக்தியாக அமைந்தன. இந்த வகையில் ஒரு வரலாற்றுக் கட்டத்தில் திரு.செல்வநாயகத்தின் தலைமையில் செயற்பட்ட தமிழரசுக் கட்சி, தமிழ்த் தேசியத்தின் வளர்ச்சிக்கு குறிப்பிட்ட பங்களித்தது. அக்கால கட்டத்தில் வரலாற்றுப் புறநிலைகள், நிர்ப்பந்தங்கள், வெளி உலக நிலைமைகளுக்கு அமைய இந்தப் பங்கினை மதிப்பாய்வு செய்ய வேண்டும். ஆனால் யாழ்ப்பாண இராச்சியத்தினதும், திரு.செல்வநாயகத்தினதும் அரசியல் பாரம்பரியத்தினை அமிர்தலிங்கம் முன்னெடுத்துச் சென்றார் என்ற தொனியில் ஒரு கருத்து நிலையை உருவாக்க முனைவது தவறானதாகும். இந்தப் பாரம்பரியத் தொடர்பினை நிலைநாட்ட யாழ்ப்பாண அரசின் மகிமையும், பெருமையும் பற்றி அமிர்தலிங்கம் பாராளுமன்றத்தில் நிகழ்த்திய உரையொன்றை நீண்டதொரு பந்தியாக கலாநிதி சிற்றம்பலம் மேற்கோள்காட்டுகிறார். இந்த உரையில் அமிர்தலிங்கம் தமிழ் இராச்சியத்தின் பண்டைய புகழ்பாடிய போதும், நல்லூர் இராஜதானியை புனரமைப்பதற்கு மாவட்ட சபைக்கு ஓரளவதிகாரமாவது தருமாறு ஜெயவர்த்தனாவிடம் மன்றாடுகிறார் என்பதைப் பதிப்பாசிரியர் உணரவில்லை போலும். இந்தப் பாராளுமன்ற உரையின் ஒரு பந்தியில் ‘‘அதி உத்தம ஜனாதிபதி அவர்களே! தங்களுடைய அரசாங்கம் மாவட்ட அபிவிருத்திச் சபைகள் மூலம் மக்களுக்கு ஓரளவு அதிகாரத்தைக் கொடுத்து, அதிகாரத்தைப் பரவலாக்க அச்சபைகளை மாவட்டம் மாவட்டம் தோறும் நிறுவியிருக்கிறது. எனவே யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்திச் சபைக்கு இந்த நல்லூர் இராஜதானியைப் பாதுகாத்துப் புனரமைக்கும் அதிகாரத்தை, வாய்ப்பை வழங்க வேண்டும்…’’ என்று இரங்குகிறார் அமிர்தலிங்கம். தமிழரசுக் கோரிக்கையை விட்டு, மாவட்ட சபையை ஏற்று, அதற்கு அதிகாரம் போதாது என அமிர்தலிங்கம் புலம்புவதைத் தமிழர் ஆட்சியின் பாரம்பரியத் தொடர்பாகக் காட்டுவது கேலிக்கூத்தாக இருக்கிறது.
1983இல் 6ஆவது சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்து, தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு அரசாங்கம் பாராளுமன்றக் கதவுகளை அடைத்து விட்டதாகக் கூறும் கலாநிதி சிற்றம்பலம், எவ்வாறு அமிர்தலிங்கம் 6ஆவது சட்டத்திருத்த நிபந்தனைகளை ஏற்று, 1989இல் மீண்டும் பின்கதவால் பாராளுமன்றம் நுழைந்தார் என்ற விசித்திரமான கதையைக் கூறத்துணியவில்லை.
1985இல் திம்பு மகாநாட்டில் முன்வைக்கப்பட்ட தமிழர் தாயகம், தமிழர் தேசியம், தமிழர் தன்னாட்சி உரிமை என்ற கோட்பாடுகள் 1949இல் தமிழரசுக் கட்சியின் அங்குரார்ப்பணக் கூட்டத்தில் கருப்பெற்றது எனத் தொல்லியல் ஆராய்ச்சிக் கண்டுபிடிப்பு நிகழ்த்திவிடும் கலாநிதி சிற்றம்பலம், ‘‘இதன் பெறுபேறுதான் 1987இல் ஏற்பட்ட இலங்கை-இந்திய ஒப்பந்தம் ஆகும்’’ என்ற ஒரு அபத்தமான கருத்தை முன்வைக்கிறார்.
திம்பு மகாநாட்டில் உண்மையில் என்ன நிகழ்ந்ததென்பதும், இந்திய-இலங்கை ஒப்பந்தம் எவ்வாறு, ஏன் கைச்சாத்தாகியது என்பதும் வரலாற்றுத்துறைத் தலைவருக்குத் தெரியாமல் இருந்திருக்கலாம். ஆயினும் நல்லூர் அரச பாரம்பரியத்தைத் தமிழரசுக் கட்சியுடன் தொடர்புபடுத்தித் தமிழரசுக் கட்சியின் அரசியல் பாரம்பரியத்தை அமிர்தலிங்கத்துடன் தொடர்புபடுத்தி, 1949இல் இருந்து 1987வரை கிட்டத்தட்ட நான்கு தசாப்தங்கள் வரை தமிழரசுக் கட்சிக்குத் தொடர்ச்சியான ஒரு அரசியல் வரலாற்று மரபைச் சிருஸ்டித்துவிட முனைகிறார் பதிப்பாசிரியர். மிகவும் நுட்பமாகச் செய்யப்பட்ட இந்த வரலாற்றுத் திரிபில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல்-ஆயுதப் போராட்ட வரலாறு இருட்டடிப்புச் செய்யப்படுகிறது.
திம்பு மகாநாடு பற்றி ஒரு விடயத்தை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். திம்பு மகாநாடு ஆரம்பிப்பதற்கு முன்னராக ஈழத்தமிழினத்தின் ஏகோபித்த கோரிக்கையாகத் திம்புவில் முன்வைப்பதற்காகத் தமிழீழ சுதந்திர சாசனம் ஒன்றை விடுதலைப் புலிகள் இயக்கம் தயாரித்தது. இந்தச் சாசனத்தில் தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை ஆகிய கோட்பாடுகளுக்குத் தெளிவான வரைவிலக்கணமும், தமிழர் தேசியப் பிரச்சினையில் அவை பெறும் முக்கியத்துவமும் விளக்கப்பட்டன. திம்புவில் இந்தச் சுதந்திர சாசனம் தமிழர் விடுதலைக் கூட்டணி உட்பட எல்லாத் தமிழ் அமைப்புகளுக்கும் கொடுக்கப்பட்டது. சில தமிழ் அமைப்புக்கள் இந்தச் சுதந்திர சாசனத்தை ஏற்றுக் கொள்ள முன்வந்தபோதும், கூட்டணித் தலைவர்கள் இதைக் கடுமையாக எதிர்த்தார்கள். இந்த எதிர்ப்பும், அதன் பின்புலத்தில் தலைதூக்கிய இந்திய அழுத்தமும் காரணமாகப் புலிகளின் இந்தச் சுதந்திர சாசனம் கைவிடப்பட்டது. எனினும் புலிகளின் வற்புறுத்தல் காரணமாக இந்தச் சாசனத்தின் அடிப்படைக் கோட்பாடுகளை ஏற்றுக் கொள்ள சகல அமைப்புகளும் முன்வந்தன. இப்படியாகத்தான் திம்புக் கோட்பாடுகள் வரலாற்றுப் பதிவைப் பெற்றதே தவிர, கலாநிதி சிற்றம்பலம் கற்பிதம் செய்வது போல 1949இல் கருப்பெற்று, 1985இல் உருப்பெறவில்லை.
இந்திய அரசின் தெற்கு நோக்கிய வல்லாதிக்க அகர்ச்சியின் வெளிப்பாடாக உருவகம்பெற்ற இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை அதன் ஆழத்திலும், அகலத்திலும் பார்க்காமல் ஏதோ ஈழத்தமிழரின் நலனுக்கும், நல்வாழ்விற்குமாக ராஜீவும், ஜே.ஆரும் கூட்டுச்சேர்ந்து கொடுத்த நன்கொடையாகக் கருதுகிறார் பதிப்பாசிரியர். இரு அரசுகள் கைச்சாத்திட்டுள்ளதால், ஒன்றின் ஒப்புதல் இன்றி மற்றது கிழித்தெறிய முடியாததாயும் வலிமை பெற்றிருப்பதோடு, நடைமுறைச் செயலாக்க சக்தி பெற்றிருப்பதாகவும் ஒப்பந்தம் பற்றி அவர் புகழ்பாடுவது நகைப்புக்கிடமாக இருக்கிறது.
இந்திய-இலங்கை ஒப்பந்தம் செத்துப் பொய் நீண்டகாலம் ஆகிறது. அதன் சாவுக்கு அதுவே காரணமாய் இருந்தது. அது கிழிக்கப்படாமலே உக்கிப் போன தாளாகி உருக்குலைந்து போனது. அதன் ஈமக்கிரியைகளுக்காக பிரேமதாசா டில்லி சென்று வந்ததும் பதிப்பாசிரியருக்குத் தெரியவில்லை போலும். நிலைமை அப்படியிருக்க அதன் வலிமை பற்றியும், வீரியம் பற்றியும் பேசுவது அபத்தமானது.
இந்திய-இலங்கை ஒப்பந்தம் வடக்குக் கிழக்கு மாகாணங்களைத் தமிழ் பேசும் மக்களின் வரலாற்று குடிநிலமென குறிப்பிட்ட போதும், இலங்கைத் தீவின் பூகோள முழுமையையும், இறைமையையும், ஐக்கியப்பாட்டையும் வலியுறுத்தத் தவறவில்லை. அத்துடன் இலங்கையின் பல்லினப் பன்மைக் கோட்பாட்டை அங்கீகரித்து, தமிழரின் தேசியத் தனித்துவத்தை நிராகரித்து விடுகிறது. இந்த ஒப்பந்தம் வடக்குக் கிழக்கு மாகாணங்களைத் தற்காலிகமாக இணைத்தபோதும், கிழக்கில் சர்வசன வாக்கெடுப்பிற்கு இடமளித்துத் தமிழர் தாயகத்தை நிரந்தரமாகப் பிரித்துவிடும் ஆபத்தான விதியையும் கொண்டிருந்தது. இந்தப் பாரதூரமான குறைபாட்டினைக் கருத்தில் கொள்ளாமல், தற்காலிக இணைப்பைத் தமிழர் தாயகத்திற்குக் கிடைத்த அங்கீகாரம் எனப் பதிப்பாசிரியர் பெருமிதம் கொள்வதில் அர்த்தமில்லை.
மாகாண சபைத் திட்டமானது தமிழரின் தேசியப் பிரச்சினையின் அடிப்படைகள் எதையும் தொட்டு நிற்கவில்லை என்பதாலும், தமிழரின் அரசியல் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் அதிகாரப் பகிர்வு அமையவில்லை என்பதாலும் விடுதலைப் புலிகள் இயக்கம் இதனை ஏற்க மறுத்தது. இத்திட்டத்தை சட்டமாக்கிய பதின்மூன்றாவது யாப்புத் திருத்தத்தின் அதிகார வெறுமை பற்றி விடுதலைப் புலிகள் இயக்கம் நிறைய எழுதியிருக்கிறது.
மாகாண சபையின் சட்டவாக்கம், நிறைவேற்று அதிகாரங்கள் மிகவும் வரையறுக்கப்பட்டவை என்பதைச் சுட்டிக் காட்டியிருக்கிறது. மைய அரசிடம், குறிப்பாக ஜனாதிபதியிடம், ஏகபோக அதிகாரங்கள் குவிக்கப்பட்டிருப்பதால் மாகாண சுயாட்சிக்கு அது வழிகோலப் போவதில்லை என்பதையும் எடுத்துக் காட்டியிருக்கிறது. நீண்ட காலமாய் இரத்தம் சிந்திப் போராடி, எலும்பும் சதையுமற்ற வெறும் ஓடாக ஒரு தீர்வுத் திட்டத்தை ஏற்பது அர்த்தமில்லை என்பதையும் எடுத்து விளக்கியிருக்கிறது. எனவே இந்தியாவின் அழுத்தத்திற்குப் பணிந்து, தமிழரின் தேசிய நலனை மறுதலிக்கப் புலிகள் இயக்கம் விரும்பவில்லை. சிங்களப் பேரினவாதம் தமிழர் தாயகத்திற்குச் சுயாட்சி கொடுத்துத் தமிழருக்கு நீதி வழங்கும் எனப் புலிகள் நம்பவில்லை.
‘‘விடுதலைப் புலிகள் ஆதரவுடன் பரீட்சார்த்தமாகவேனும் இதனைச் சிறிது காலம் அமுல்நடாத்தித் தமிழ் மக்களின் நியாயபூர்வமான அபிலாசைகளை இது எவ்வாறு பூர்த்தி செய்யவில்லை என்பதை எடுத்துக் காட்டும் வாய்ப்பையும் இது இழந்து விட்டது’’ எனக் கவலைப்படுகிறார் பதிப்பாசிரியர். புலிகள் அப்படிச் செய்திருந்தால், மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்கியவன் கதைபோல அது முடிந்திருக்கும். இந்தியாவின் ஒரு இலட்சம் இராணுவத்தின் பக்கபலத்தோடு இரு அரசுகள் உடன்பாட்டு வலிமையோடும், எட்டப்பர் குழுக்களின் ஒத்துழைப்போடும் இந்த ஒப்பந்தம் ஒரு வருடத்திற்கு மேலாகப் பரீட்சார்த்தச் செயலாக்கம் பெற்றும், தமிழரின் அபிலாசைகள் எதையும் அது பூர்த்தி செய்யவில்லை. இதனை வரதராஜப் பெருமாள் மட்டுமன்றி ஒப்பந்தத்தின் சிருஸ்டிகர்த்தாவான ராஜீவ் காந்தியுமே ஒப்புக் கொண்டிருக்கிறார். நிலைமை அப்படியிருக்கப் பதிப்பாசிரியர் இப்படி ஒரு கற்பிதக் கனவு காண்பது விந்தையாக இருக்கிறது.
செயலாக்க விவகாரத்தில் இந்திய அரசு கொழும்பு மீதும் அழுத்தம் பிரயோகிக்கப் பின்னின்றது எனக்கூறும் கலாநிதி சிற்றம்பலம், ‘‘புலிகளுடன் கொண்டிருந்த முரண்பாடும், தொடர்ந்து கொண்டிருந்த இராணுவ நடவடிக்கைகளும், இந்திய அரசின் அணுகுமுறைக்கு ஒரு காரணமாயும் இருக்கலாம்’’ என்கிறார். மிகவும் நுட்பமாகச் செதுக்கிய வார்த்தைகளில் இங்கு புலிகள் மீது மறைமுகமாகப் பழிசுமத்தப்படுகிறது. அதாவது இந்தியாவின் அசமந்தப் போக்கிற்கும், ஒப்பந்தச் செயலாக்கத் தோல்விக்கும் புலிகளே காரணகர்த்தாக்கள் என்பதுபோல அவரது கருத்து அமைகிறது.
இந்தியாவின் இதயத்தில் இன்னும் காந்திய ஆன்மாவைக் கண்டுகொள்ளும் பாரத பக்தர் ஒருவரின் அங்கலாய்ப்பு இங்கு தெரிகிறது. நவ இந்தியாவின் நரசிம்மக் கோலத்தைப் புரிந்து கொள்ள முடியாது பழமையில் புதைந்து போன வரலாற்று ஆசிரியர்களால் சமகால அரசியலின் சுழிவுநெளிவுகளைத் துல்லியமாகக் கிரகித்தறிவது சிரமம். ஈழத்தமிழரின் தேசிய விமோசனத்திற்கு இந்தியாவை நம்பி ஏமாந்துபோன விரக்தியில் பதிப்பாசிரியர் புலிகளைச் சாடுகிறார். ஆனால் ஒப்பந்தத்தின் சாவுக்குப் புலிகள் காரணமல்ல. ஒப்பந்தத்தைப் பீடித்திருந்த நோயே காரணம். ஒப்பந்தத்தை எழுதியவர்களே ஒப்பந்தத்தின் சமாதியையும் கட்டிவிட்டார்கள்.
இலங்கையில் இந்தியாவின் தலையீடு தோல்வியடைந்தமைக்கு இந்திய விமர்சகர்கள் கூட இந்தியா மீதே பழியைச் சுமத்துகிறார்கள். புலிகளின் தாயக நேசத்தை இந்தியா புரிந்து கொள்ளவில்லை எனச் சாடுகிறார்கள். ஒப்பந்தத்தில் உள்ள ஓட்டைகளும், இந்தியாவின் விவேகமற்ற அணுகுமுறையும், சிங்களப் பேரினவாதத்தின் சூழ்ச்சிகளுமே இந்தியத் தலையீட்டின் தோல்விக்குக் காரணிகளாக இருந்ததாக விமர்சிக்கிறார்கள். இந்திய புத்திஜீவிகளின் ஆய்வுகளைக்கூட கலாநிதி சிற்றம்பலம் கருத்தில் எடுத்துக் கொண்டதாகத் தெரியவில்லை.
தமிழர் ஒருவர் முதலமைச்சராகக் கொலுவீற்றிருக்கும் வாய்ப்பை ஒப்பந்தம் அளித்ததாகப் பேராசிரியர் பெருமைப்படுகிறார்.
தமிழர் ஒருவருக்கு அந்த வாய்ப்புக் கிடைத்தது. அந்தப் பெருமாளுக்கு முதலமைச்சராக நீடிக்கும் அரசியல் பசி இருந்த போதும், மாகாண சபைக்கு அதிகார வறுமை இருந்ததால் அது சாத்தியமாகவில்லை. அதற்குப் புலிகளைக் குறைகூறிப் பிரயோசனமில்லை.