விடுதலைப் புலிகள், மாசி 1994

நீண்ட காலமாகவே தமிழீழத்தின் சமாதானக் கதவுகள் திறந்து வைக்கப்பட்டிருக்கின்றன. சமாதானத் தூதுவர்கள் எவராக இருப்பினும், எந்த நேரத்திலும், எந்தச் சூழ்நிலையிலும் இங்கு வந்து செல்ல வாய்ப்பளிக்கும் வகையில் அமைதியான பாதையை அகலத் திறந்து விட்டிருக்கிறார் தலைவர் பிரபாகரன்.

இந்தச் சமாதானக் கதவுகள் ஊடாகப் பலர், பல தடவைகள் இங்கு வந்து சென்றிருக்கிறார்கள்; புலிகளின் சமாதானச் செய்தியை தென்னிலங்கைக்குக் கொண்டு சென்றிருக்கிறார்கள். ஆனால் சிங்கள தேசம் இதுவரை சமாதானத்தின் கதவுகளைத் திறந்துவிட மறுத்து வருகிறது; சண்டையை நிறுத்தி, சமாதானச் சூழ்நிலையை உருவாக்கப் பின்னடித்து வருகிறது.

புலிகளின் சமாதானக் கதவுகள் ஊடாக முதன் முதலாக நுழைந்தது நோர்வே அரசாங்கமாகும். 1990ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் நோர்வே வெளிவிவகார அமைச்சைச் சேர்ந்த ஒரு உயர் அதிகாரி யாழ்ப்பாணம் வந்தார்; எம்முடன் பேச்சுக்களை நடத்தினார்; சர்வதேச சமூகம் சமாதானப் பேச்சுக்களை விரும்புவதாகக் கூறினார். நோர்வே மத்தியத்துவம் வகிக்க விரும்புகிறது; நோர்வேயின் தலைநகரான ஒஸ்லோவில் பேச்சுக்களை ஒழுங்கு செய்யலாம்; சமாதானப் பேச்சுக்களுக்கு முதற்படியாக இரு தரப்பினரும் போர்நிறுத்தம் செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். நாம் அதற்கு இணக்கம் தெரிவித்தோம். ‘‘உண்மையில் நீங்கள் சமாதானத்தை விரும்புவதாக உலகிற்கு நிரூபித்துக் காட்ட வேண்டும் என்றால் நீங்கள்தான் முதலில் போர்நிறுத்தம் செய்ய வேண்டும். ஒருதலைப்பட்சமாகப் பிரகடனப்படுத்த வேண்டும். நீங்கள் அப்படிச் செய்தால் சிறீலங்கா அரசு மீது நாம் அழுத்தத்தைப் பிரயோகித்து அவர்களையும் போர்நிறுத்தத்திற்கு இணங்க வைக்கலாம்’’ என்றார். நாம் அதற்கும் இணக்கம் தெரிவித்தோம்.

1991ஆம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதியிலிருந்து போர்நிறுத்தம் கடைப்பிடிப்பதாக விடுதலைப் புலிகள் இயக்கம் ஒருதலைப்பட்சமாக அறிவித்தது. ஆனால் சிங்கள அரசு போர்நிறுத்தத்தை நிராகரித்தது; யுத்தத்தை மேலும் தீவிரமாகத் தொடர்ந்தது. ஒன்றும் தெரியாதது போல நோர்வே அரசாங்கம் மௌனம் சாதித்தது. அந்த ஆண்டு மேற்குலகம் அதிகப்படியான உதவியை சிறீலங்காவுக்கு வாரி வழங்கியது.

அடுத்ததாகப் புலிகளின் சமாதானக் கதவுகள் ஊடாக குவேக்கர்ஸ் நல்லெண்ணக் குழு பிரவேசித்தது. பல தடவைகள் வந்து சென்றது. பிரிட்டனின் ஆசியுடன் லண்டனில் பேச்சுக்களை நடத்தலாம் என்று சொன்னது. கிட்டுவுடன் சேர்ந்து ஒரு விரிவான சமாதானத் திட்டத்தைத் தயாரிப்பதாகக் கூறியது. உபகண்டம் ஊடாகப் போக்குவரத்துச் செய்ய இந்தியாவும் இணங்குவதாகத் தெரிவித்தது. எல்லா வகையிலும் ஒத்துழைப்பு வழங்க நாமும் ஒப்புதல் கொடுத்தோம். இறுதியில் என்ன நடந்தது? குவேக்கர்ஸின் சமாதான முயற்சி முடிவில் கிட்டுவின் உயிரை அநியாயமாகப் பலிகொண்டது. இந்தத் துயரமான கதைபற்றி நாம் ஏற்கனவே விளக்கியிருக்கிறோம். வங்கக் கடலில் வைத்துப் புலிகளின் சமாதானப் படகு இந்தியாவால் மூழ்கடிக்கப்பட்ட போது, பிரிட்டனோ அல்லது மேற்குலகமோ வாய்திறக்கவில்லை. சமாதானத் தூதுவனாகவே கிட்டு தமிழீழம் நோக்கிப் பயணம் செய்தார் என குவேக்கர்ஸ் நிறுவனம் வெளியிட்ட ஆட்சேப அறிக்கையையும் உலகம் இருட்டடிப்புச் செய்தது.

இது ஒருபுறமிருக்க 1992ஆம் ஆண்டு ஏப்ரல் 22ஆம் திகதி பௌத்த பிக்குகள் அடங்கிய சமாதானக் குழுவொன்று யாழ்ப்பாணம் வந்தது. இக்குழுவிற்கு அமரபுர பௌத்த பீடத்தைச் சேர்ந்த வண.சித்தாதிய மகாநாயக்க தேரர் தலைமை வகித்தார். இவர்கள் புலிகளின் பாதுகாப்புடன் யாழ். குடாநாடு முழுவதும் சுற்றிப் பார்த்தனர். தமிழ் மக்களின் அபிலாசைகளைக் கேட்டறிந்தனர். யுத்த அனர்த்தங்களைக் கண்டறிந்தனர். மக்களின் அவலநிலை கண்டு அதிர்ந்து போன இவர்கள், போருக்கு முடிவுகட்டி, சமாதானச் சூழலை உருவாக்கத் தம்மாலான முயற்சி செய்வோம் என வாக்குறுதிகள் அளித்தனர். இந்தப் பௌத்த சமாதானக் குழுவினர் சில யோசனைகள் அடங்கிய திட்டத்தோடு வந்திருந்தனர். இத்திட்டத்தில் தமிழர் தாயகக் கோட்பாடு நிராகரிக்கப்பட்டிருந்தது. நாம் இவர்களைச் சந்தித்துப் பேசினோம். எந்தத் தீர்வுக்கும் ‘தமிழர் தாயகம்’ அடிப்படையானது என வலியுறுத்தினோம். பேச்சுக்களுக்கு சமாதானச் சூழ்நிலை உருவாக்கப்படுவது அவசியம் எனவும் எடுத்துரைத்தோம். சிங்கள அரசியல் தலைமையுடன் பேச்சுக்களை நடத்தி, சமாதானச் சூழலை உருவாக்குவோம்; புதிய தீர்வுத் திட்டதோடு யாழ்ப்பாணம் வருவோம் என்று சொன்னார்கள். ஆனால் போனவர்கள் வரவில்லை. கொழும்பு திரும்பிய இவர்களை ஆட்சிபீடத்திலிருந்த சிங்களத் தலைவர்கள் எவரும் சந்திக்க விரும்பவில்லை. இதனால் இவர்களது சமாதான முயற்சி பிசுபிசுத்துப் போனது.

இந்த நிகழ்வுகளுக்கு அப்புறமும் சமாதானக் கதவுகளைப் புலிகள் சாத்திவிடவில்லை.

அடுத்ததாக சென்ற ஆண்டு முற்பகுதியில் அங்கிளிக்கன் ஆயர் கெனத் பெர்னாண்டோ யாழ்ப்பாணம் வந்தார். சமாதானத்தின் பருவகாலம் வந்துவிட்டது என்றார். புலிகளின் தலைவரை நேரில் சந்திக்க வேண்டும்; அவரது வாயால் அவர் என்ன சொல்கிறார் என்பதைக் கேட்டறியவே சிங்கள தேசம் விரும்புகிறது; ஏனையோரைச் சந்திப்பதில் அர்த்தமுமில்லை, அவசியமுமில்லை என்றார். ஆயரின் அபிலாசையையும், வற்புறுத்தலையும் நாம் தலைவரிடம் எடுத்துரைத்தோம். ஆயரைச் சந்திக்கத் தலைவர் இசைந்தார். 1993 ஜனவரி 10ஆம் திகதி சந்திப்பு நிகழ்ந்தது. இரண்டரை மணி நேரமாகத் தலைவர் பிரபாகரன் ஆயருடன் கலந்துரையாடல் நிகழ்த்தினார்; எல்லா விடயங்கள் பற்றியும் மனம் திறந்து பேசினார்.

தமிழீழம் சமாதானத்தை வரவேற்கிறது. அமைதி வழியில் பிரச்சினையைத் தீர்க்க நாம் தயார். சிங்கள தேசத்திற்கு நாம் நேசக்கரம் நீட்டி நிற்கிறோம். ஆனால் அதைப் பற்றிக்கொள்ள சிங்கள அரசு மறுக்கிறது. சண்டையை நிறுத்தி, பொருளாதாரத் தடைகளை நீக்கி, சகஜ நிலையைத் தோற்றுவித்தால் சமாதானப் பேச்சுக்களை ஆரம்பிக்கலாம். இப்படிச் சொன்னார் தலைவர்.

தமிழர் தாயகத்தைத் துண்டாடிவிடும் சிங்கள அரசின் முயற்சியையும் தலைவர் கண்டித்தார். தமிழர் தாயகம் என்பது எமது அடிப்படையான கோரிக்கை. அதனைச் சிங்கள தேசம் ஏற்றுக் கொள்ளாத பட்சத்தில் தமிழரின் தேசியப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண முடியாது என்பதனையும் தலைவர் ஆணித்தரமாக வலியுறுத்தினார்.

‘‘நீங்கள் உண்மையில் சமாதானத்தை விரும்புவதாக இருந்தால், உங்கள் நல்லெண்ணத்திற்குச் சான்றாக இரு போர்க் கைதிகளை விடுதலை செய்து என்னிடம் ஒப்படைப்பீர்களா?’’ என்று கேட்டார் ஆயர். எவ்வித தயக்கமுமின்றித் தலைவர் பிரபாகரன் அதற்கு இணங்கினார். ஆச்சரியத்தால் ஆயரின் முகம் மலர்ந்தது.

போருக்கு ஒரு முடிவு கொண்டுவர முயற்சிப்பேன். பொருளாதாரத் தடையால் தமிழ் மக்கள் படும் தாங்கொணாத் துயரைத் தென்னிலங்கையில் எடுத்து விளக்குவேன். சமாதானச் சூழலை உருவாக்கும்படி அரசிடம் வற்புறுத்துவேன். இவ்விதம் வாக்குறுதி அளித்தார் ஆயர்.

தலைவர் பிரபாகரனின் நேர்மைக்கு அறிகுறியாகவும், புலிகளின் சமாதானத் தேடுதலுக்குச் சாட்சியாகவும் விடுதலை பெற்ற இரு போர்க்கைதிகளை அழைத்துக் கொண்டு ஆயர் கெனத் பெர்னாண்டோ கொழும்பு திரும்பினார். கொழும்பில் பத்திரிகையாரிடம் பேசும் பொழுது, ‘‘பிரபாகரனிடம் மனிதத்தின் முகத்தைக் கண்டேன்’’ என்று கூறினார். அவ்வளவுதான், சிங்களப் பேரினவாதம் கொதித்து எழுந்தது; ஆயர் மீதும், புலிகள் மீதும் சேற்றை வாரி வீசியது. ‘‘ஆயரிற்குப் பைத்தியம் பிடித்துவிட்டது. அதனால்தான் பிரபாகரனை மனிதனாகக் கண்டார்’’ என ஒரு பத்திரிகை எழுதியது.

ஆயர் எவ்வளவோ முயற்சித்தும் அன்றைய ஜனாதிபதி பிரேமதாசா அவரைச் சந்திக்க மறுத்துவிட்டார்.

சிங்களப் பேரினவாதம் சமாதானத்தை விரும்பாததால் மீண்டும் ஓராண்டு யுத்தத்தில் கழிந்தது. என்றுமில்லாதவாறு இராணுவத்திற்கு அடிமேல் அடிவிழுந்து, பூநகரியில் பேரடி விழுந்தது. ‘‘அடிமேல் அடிவிழுந்தால் அம்மியும் நகரும்’’ என்பார்கள். ஆனால் சிங்களப் பேரினவாத அம்மி சிறிதேனும் நகரவில்லை.

வழமைபோல வருட ஆரம்பத்தில் சமாதானப் பருவகாலம் பிறந்ததைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்தை நோக்கிய ஆன்மீக யாத்திரைகளும் தொடங்கின. இம்முறை கிறீஸ்தவத்தின் மூன்று முக்கிய மதபீடத் தலைமைகளும் இங்கு வந்து, நிலைமையைக் கண்டறிந்து சென்றன. இவர்களைத் தொடர்ந்து பௌத்த மகா சங்கத்தின் பிக்குகள் குழு ஒன்றும் யுத்தத்தால் சிதைந்த யாழ்ப்பாணத்தின் முகத்தைத் தரிசித்துச் செல்ல இருக்கிறது.

கத்தோலிக்க, மெதடிஸ்த், அங்கிலிக்கன் திருச்சபைத் தலைவர்களை நாம் சந்தித்து எமது நிலைப்பாட்டை விளக்கினோம்.

சமாதானப் பேச்சுக்கள் சமாதானச் சூழ்நிலையில் நிகழ்வதுதான் நியாயம். அப்பொழுதுதான் அது வலுக்கட்டாயமற்ற, சுதந்திரமான பேச்சாக அமையும். இராணுவ, பொருளாதார அழுத்தங்களைப் போட்டவாறு, தமிழரின் தொண்டையை நெரித்துக் கொண்டு பேசச் சொல்வது நியாயம் ஆகாது. நெருக்குவாரத்தின் பிடிக்குள் நின்றுகொண்டு, நட்புறவுடன், நல்லெண்ணத்துடன், நம்பிக்கையுடன் பேச முடியாது. எனவே, அழுத்தம் போட்டு, மிரட்டிப் பயமுறுத்தி, தமிழர் மீது ஏதோ தீர்வு ஒன்றைத் திணித்துவிடலாம் என்று அரசு எண்ணுவது அடிப்படையிலேயே தவறானது. முதற்படியாகச் சமாதானச் சூழ்நிலை உருவாக வேண்டும். இதற்குப் போர்நிறுத்தம் அவசியம்; பொருளாதார நெருக்குதல் நீக்கப்படுவது அவசியம். தமிழர் மீது தனது நல்லெண்ணத்தைக் காண்பிக்கும் வகையில் அரசு இவற்றைச் செய்யலாம். இப்படியாக ஒரு சமாதானச் சூழ்நிலை பிறப்பிக்கப்பட்டால் நாம் பேச்சுக்களுக்குத் தயார். இவ்வாறு நாம் எமது நிலைப்பாட்டை எடுத்து விளக்கினோம். எமது யோசனைகளில் நியாயம் இருப்பதை ஆயர்களும் உணர்ந்து கொண்டனர்.

அங்கிலிக்கன் ஆயர் தலைவர் பிரபாகரனை மீண்டும் சந்திக்க விருப்பம் தெரிவித்தார். ஆனால் வற்புறுத்தவில்லை. ஏற்கனவே ஒரு தடவை தலைவரைச் சந்தித்தாகிவிட்டது. நேரில் வந்து, நேசக்கரம் நீட்டி, சமாதானத்திற்கு சமிக்ஞையும் காட்டியிருக்கிறார் தலைவர். அப்படியிருந்தும் சிங்கள தேசம்தான் சமாதானக் கதவுகளை இறுகப் பூட்டி வைத்திருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் மீண்டும் மீண்டும் சந்தித்து, மீண்டும் சொன்னதையே சொல்லிக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. கொழும்பிலுள்ள அரசியல் செவிடர்களுக்கு இங்கிருந்து எத்தனை தடவைகள் சங்கை ஊதினாற்போலும் கேட்கவா போகிறது? ஆயர் விசயமறிந்தவர். அதனால் அவர் மீண்டும் சந்திப்பை வற்புறுத்தவில்லை.

ஆயர்கள் இங்கு வந்தபோது சர்வோதயத் தலைவர் ஆரியரத்தினாவும் இங்கு வந்தார். அவரைப் புலிகளின் சார்பில் அரசியல் துணைப் பொறுப்பாளர் கரிகாலன் சந்தித்தார். ஆயருக்குச் சொல்லப்பட்டதே அவருக்கும் சொல்லப்பட்டது.

வந்தவர்கள் திரும்பிவிட்டார்கள். அவர்கள் எதையுமே புதிதாகக் கொண்டு வரவில்லை; எதையுமே புதிதாகக் கொண்டு செல்லவுமில்லை. தமிழ் மக்கள் சமாதானத்தை விரும்புகிறார்கள்; புலிகளும் சமாதானத்தையே விரும்புகிறார்கள். இந்தப் பழைய செய்தியைத்தான் கொண்டு சென்றிருக்கிறார்கள். இதைத்தான் கொழும்பிலும் சொல்லப் போகிறார்கள். கொழும்பிலும் புதிதாக எவ்வித திருப்பமும் ஏற்படப் போவதில்லை.

போரை முடிவுக்குக் கொண்டுவர அரசாங்கம் விரும்பவில்லை; பொருளாதார நெருக்குதலைத் தளர்த்தவும் விரும்பவில்லை. போரையும், பொருளாதார நெருக்குதலையும் அரசியல் அழுத்தமாகவே அரசு கணிக்கிறது. இந்த அழுத்தங்களோடு பேச்சு என்ற பொறியை வைக்க அரசு விரும்புகிறது. புலிகள் எந்த அளவிற்கு விட்டுக் கொடுப்பார்கள், எந்த அளவிற்கு இறங்கி வருவார்கள் என்பதை நாடிபிடித்துப் பார்ப்பதே அரசாங்கத்தின் நோக்கம். இந்த நோக்கில்தான் சமாதானத் தூதுவர்களையும் அரசாங்கம் ஊக்குவிப்பதுபோலத் தெரிகிறது.

இனி வருவது தேர்தல் யுகம். இந்தக் காலகட்டத்தில் கவனமாகக் காய்களை நகர்த்த வேண்டும் என்பது ஆட்சிபீடத்தில் அமர்ந்திருப்பவர்களுக்கு நன்கு தெரியும். இந்தக் காலத்தில், சிங்கள பேரினவாதத்திற்குத் தீனி போடுவதையே அரசியல்வாதிகள் விரும்புவார்கள். தமிழர்களுக்கு நீதி வழங்குவது என்பது அரசியற் தற்கொலையாக முடியும். எனவே இந்தக் கட்டத்தில் புலிகளுடன் பேச்சுக்களை நடத்தி, தமிழர் பிரச்சினையைத் தீர்க்க உருப்படியான தீர்வுத் திட்டம் ஒன்றை முன்வைப்பது அரசாங்கத்தின் நோக்கமல்ல.

போருக்கு ஓய்வு கொடுப்பதை அரசு விரும்பாததற்குப் பல காரணங்கள் உண்டு. இராணுவம் இன்னும் மேலாதிக்க நிலையை எட்டிவிடவில்லை. தோல்விக்கு மேல் தோல்வியைச் சந்தித்துப் படையினரின் மனவுறுதி தளர்ந்திருக்கிறது. இன்றைய சூழலில் இராணுவச் சமபலம் புலிகளுக்குச் சார்பாக இருக்கிறது. இந்த நிலைமையில் போரை நிறுத்திக் கொள்வது புலிகளுக்கே அனுகூலமாக அமையும் என அரசு அஞ்சுகிறது. பலத்தின் ஆசனத்தில் அமர்ந்து கொண்டு, ஆதிக்க வலிமையுடன் – அதிகார தோரணையில் – பேசுவதையே அரசு விரும்புகிறது. அதற்கு இன்னும் சந்தர்ப்பமும், சூழ்நிலையும் சரியாக வரவில்லை. அதற்கு வெற்றிகள் வேண்டும்; போர்ச் சாதனைகள் புரிய வேண்டும்; ஆக்கிரமிப்பு வேலைகளைச் செய்ய வேண்டும்; புலிகளை இராணுவ ரீதியில் பலவீனப்படுத்த வேண்டும். இதை எல்லாம் செய்துகாட்டலாம் என இராணுவத் தலைமை நம்புகிறது; அதற்கான தயாரிப்புக்களையும் செய்கிறது. ஆகவே போருக்கு ஓய்வு கொடுப்பதை இராணுவம் விரும்பவில்லை. போரைத் தொடர்வதால் தேர்தல் அனுகூலங்கள் இருப்பதாகவும் அரசு நினைக்கிறது. தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காணாது தட்டிக் கழிக்கலாம்; ‘தமிழரின் பயங்கரவாதம்’ என்ற கோசத்தின் கீழ் சிங்களவரின் தேசியவாதத்தில் குளிர் காயலாம்; பேரினவாதச் சக்திகளைத் தனக்குச் சார்பாக அணிதிரட்டிக் கொள்ளலாம்; சமூக, பொருளாதாரப் பிரச்சினைகளையும் திசை திருப்பிவிடலாம். இதனால் போரைத் தொடர அரசு விரும்புகிறது.

படைகளுக்கு ஏற்பட்டு வரும் பேரிழப்புக்கள் காரணமாக யுத்தத்திற்கு எதிரான குரல் ஒன்றும் தென்னிலங்கையில் எழுகிறது. இது பாமர மக்கள் மட்டத்திலிருந்து எழும் அங்கலாய்ப்பு; பணத்திற்காகப் பிள்ளைகளை இராணுவத்திற்கு அனுப்பி, பிணத்தைக்கூட பார்க்க முடியாத பெற்றோரின் அவலக் குரல். இது மெல்ல மெல்லப் பலம் பெற்று வருகிறது. அத்துடன் உதவி வழங்கும் நாடுகளும் ஓரளவு அழுத்தம் போடுகின்றன. புலிகளை வெல்ல முடியாத ஒரு போரில் பெருந்தொகைப் பணம் விரயமாகிறது. யுத்தமும் முடிவில்லாத கதையாகத் தொடர்கிறது. அரசின் வலுவுக்கு இது அச்சுறுத்தலாக அமைகிறது. இலங்கையில் பெருமளவு முதலீடு செய்வதற்கோ, அன்றி இத்தீவை உலக முதலாளியத்தின் ஒரு வர்த்தக வலயமாக மாற்றுவதற்கோ, முடிவில்லாமல் தொடரும் இப்போர் ஒரு முட்டுக்கட்டையாக இருக்கிறது. இதனால் சமாதான வழியில் பிரச்சினையைத் தீர்க்க முயலுமாறு மேற்குலகம் சிறீலங்காவுக்கு அழுத்தம் போடுகிறது. போருக்கு எதிராக எழும் இந்த ஆட்சேபக் குரல்களைத் திருப்திப்படுத்துவதற்காக, சமாதானப் பேச்சில் அக்கறை காட்டுவது போல அரசாங்கம் நடிக்கிறது. சமாதானப் பேச்சுக்களுக்கு அரசு தயாராக இருக்கிறது; ஆனால் புலிகள் பேச்சை விரும்பவில்லை என்ற பொய்ப் பிரச்சாரத்தையும் மேற்கொண்டு வருகிறது. எந்தச் சூழ்நிலையிலும் தலைவர் பிரபாகரன் கொழும்பிற்கு வரமாட்டார் என்பதை நன்கு தெரிந்திருந்தும், அவர் கொழும்பு வந்து தன்னுடன் பேசலாம் என ஜனாதிபதி அழைப்பு விடுவதும், ‘‘அழைத்தாலும் அவர் வருகிறார் இல்லையே’’ எனப் பின்பு புலம்புவதும், விசமத்தனமான பிரச்சாரமன்றி வேறொன்றுமல்ல.

உலகத்திடமிருந்து கடன் வாங்கும் பருவகாலம் நெருங்கி விட்டது. இந்தப் பருவகாலத்தில்தான் சமாதானத் தூதுக்களை ஊக்குவிப்பதும், சமாதானத்திற்கான பொய்ச் சமிக்ஞைகளைக் காட்டுவதும் வருடா வருடம் சிறீலங்கா அரசு மேடையேற்றும் அரசியல் நாடகமாகும். புளித்துப்போன இந்த நாடகத்தை மேற்குலகத் தனவந்தர்கள் சலிப்புறாமல் ரசித்துக் கொண்டிருப்பதுதான் எமக்கு வியப்பாக இருக்கிறது.