ஈழநாதம், 16.07.1993

தனது குடிமக்கள் எனக் கூறிக்கொள்ளும் ஒரு மக்கள் சமூகம் மீது ஒரு அரசானது அநீதியான யுத்தம் ஒன்றைத் தொடர்ந்து நடாத்தி வருவதும், பொருளாதாரத் தடைகளை விதிப்பதும், போக்குவரத்துச் சுதந்திரத்தை மறுப்பதும் ஐ.நா. சாசனத்திற்கும், சர்வதேச மனித உரிமை நியமங்களுக்கும் மாறானது. மனித உரிமை, ஜனநாயகம் என்ற கோட்பாடுகளுக்கு முதன்மை கொடுத்து, அதனைப் பொருளாதார உதவியுடன் தொடர்புபடுத்தி, மூன்றாம் உலகைக் கட்டுபடுத்த முனையும் மேற்குலகிற்கு சிறீலங்காவில் என்ன நடந்து கொண்டு இருக்கிறது என்பது தெரியாததல்ல.

தமிழ் மக்கள் தமது சொந்த மண்ணில் சுதந்திரமாக நடமாடுவதற்கு சிறீலங்கா விதித்துள்ள தடையும், கிளாலி நீரேரியில் கடற்படை நிகழ்த்திய படுகொலைகளும், மேற்குலக மனித உரிமை அரங்குகளில் கண்டனத்திற்கு உள்ளாகின. இதனைத் தொடர்ந்து போக்குவரத்துத் தடைகளைத் தளர்த்தி, மக்கள் சுதந்திரமாக நடமாடுவதற்கு வழியமைத்துக் கொடுக்குமாறு சில மேற்குலக நாடுகள் சிறீலங்கா அரசு மீது அழுத்தத்தைப் பிரயோகிக்கத் தொடங்கின. இதன் பெறுபேறாக அகதிகளுக்கான ஐ.நா. உயர் ஸ்தானிகர் காரியலம் இப்பிரச்சினையில் தலையிட்டு உதவிபுரிய முன்வந்தது. சிறீலங்கா அரசுடனும், விடுதலைப் புலிகள் இயக்கத்துடனும் பேச்சுக்களை நடாத்தி, இரு தரப்பினரதும் ஒப்புதலுடன் தனது நேரடியான கண்காணிப்பின் கீழ் பூநகரிப் பாதையைப் போக்குவரத்திற்குத் திறந்து விடுவதற்கு ஐ.நா. தூதரகம் முயன்றது. இது சம்பந்தமான பேச்சுவார்த்தைகள் கடந்த ஜனவரியில் ஆரம்பமாகி யூன் வரை தொடர்ந்தன.

முதற்கட்டப் பேச்சுக்களின் போது ஐ.நா. கண்காணிப்பின் கீழ் பூநகரிப் பாதையைத் திறந்து விடுவதற்குக் கொள்கையளவில் விடுதலைப் புலிகள் இயக்கம் இணங்கியது. எனினும் பூநகரியில் நிலைகொண்டுள்ள இராணுவம் அகற்றப்பட்டு, ஐ.நா. அதிகாரிகளின் கண்காணிப்பின் கீழ் மக்கள் சுதந்திரமாகப் போக்குவரத்து நடாத்துவதற்கு வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியது. விடுதலைப் புலிகளின் இந்த நிபந்தனையை அரசாங்கம் ஏற்றுக் கொள்ள மறுத்தது. பூநகரியில் உள்ள முகாமை அகற்றுவதற்கு இராணுவம் தயாராக இல்லையென ஐ.நா. உயர்ஸ்தானிகராலயப் பாதுகாப்பு அதிகாரியான டாக்டர் நிக்கலஸ் விடுதலைப் புலிகளுக்குத் தெரிவித்தார். இதனையடுத்துப் புலிகள் இயக்கம் மாற்று யோசனை ஒன்றைத் தெரிவித்தது. சங்குப்பிட்டிப் பகுதியில் இருந்து ஒரு மைல் தூரத்திற்காவது இராணுவம் விலகி நின்று ஒரு மனிதப் போக்குவரத்து வழியை உருவாக்கி, தடையின்றி, சோதனையின்றி மக்கள் சுதந்திரமாகப் பயணம் செய்ய ஒழுங்குகள் செய்யப்பட வேண்டும் எனப் புலிகள் ஒரு திட்டத்தைக் கொடுத்தனர். இராணுவத் தலைமையுடன் பேசிவிட்டு மீண்டும் யாழ்ப்பாணம் வந்த ஐ.நா. பிரதிநிதிகள், இராணுவம் ஓர் அங்குலத்திற்கும் நகரத் தயாராக இல்லை என்றும், பூநகரியால் போக்குவரத்தை மேற்கொள்ளும் பொதுமக்கள் சகலரும் இராணுவப் பரிசோதனைக்கு ஆளாக வேண்டும் என இராணுவத்தினர் நிர்ப்பந்திப்பதாகவும் கூறினர். இராணுவத்தின் இந்தக் கடும்போக்குக் காரணமாகப் பேச்சுக்களில் இழுபறி ஏற்பட்டது. இந்த நிலையில் புலிகள் இயக்கம் இன்னொரு யோசனையை ஐ.நா.விடம் தெரிவித்தது. கேரதீவு-சங்குப்பிட்டிப் பாதையூடாக ஐ.நா.வின் கண்காணிப்பின் கீழ் உணவு வாகனங்களை அனுமதிக்குமாறு புலிகள் கேட்டுக் கொண்டனர். வாகனங்களை இராணுவ சோதனைக்குட்படுத்தவும் இணங்கினர். ஆனால் இராணுவம் உணவுப் பொருட்களை சூறையாடாது பார்த்துக் கொள்வது ஐ.நா. தூதரகத்தின் பொறுப்பு எனவும் வலியுறுத்தினர். உணவு வாகனங்கள் மட்டுமன்றி, நோயாளிகளும் இப்பாதையூடாகப் பயணம் செய்ய அனுமதிக்கப்பட வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டனர். முதற்கட்டமாக யாழ்ப்பாணத்தின் மீதான பொருளாதாரச் சுமையை இறக்குவதற்கு உணவு வாகனங்களை அனுமதித்து, இப்போக்குவரத்து சீராக நடைபெறுகிறதா எனக் கண்காணித்து, அடுத்த கட்டமாக மக்களின் போக்குவரத்துப் பற்றிப் பேசலாமெனப் புலிகளின் பிரதிநிதிகள் எடுத்து விளக்கினர். இந்த யோசனை நடைமுறைச் சாத்தியமானது என ஐ.நா. அதிகாரிகள் ஏற்றுக் கொண்டனர்.

ஆனால் இந்த யோசனையைச் சிறீலங்கா அரசு வரவேற்றது போலத் தெரியவில்லை. கிளாலிப் பாதையை மூடிவிட்டு, பூநகரிப் பாதையால் இராணுவ சோதனையுடன் பொதுமக்களை அனுப்புவதில்தான் அரசு அக்கறை காட்டியது. புலிகளையும், மக்களையும் பிரித்துப் புலிகளின் நடமாட்டத்தைத் தடுத்து நிறுத்துவதில்தான் இராணுவமும் சிரத்தை காட்டியது. இந்த நிர்ப்பந்தங்கள் காரணமாக ஐ.நா. தூதரகத்தின் நிலைப்பாட்டிலும் மாற்றம் தெரிந்தது. இராணுவச் சோதனையுடன் மக்கள் போக்குவரத்தை மேற்கொள்ளலாம் என்ற நிலைப்பாட்டை ஐ.நா. தூதரகம் வலியுறுத்தத் தொடங்கியது.

இந்தச் சூழ்நிலையில்தான் கடந்த யூன் 01ஆம் திகதி பூநகரிப் பாதையைத் திறப்பது சம்பந்தமாக ஒரு நகல் ஒப்பந்தத்தை ஐ.நா. உயர்ஸ்தானிகர் காரியாலயம் எம்மிடம் கையளித்தது. இந்த ஒப்பந்தத்தில் பல சிக்கல்கள் இருந்தன. இதுபற்றிப் புலிகள் இயக்கத்தின் மத்திய குழு நன்கு பரிசீலனை செய்து முடிவு எடுக்குமென ஐ.நா. அதிகாரிகளிடம் நாம் கூறினோம். எனினும் இந்த ஒப்பந்தத்தில் உள்ள சில விதிகள் தமிழ் மக்களின் நலனுக்குப் பாதகமாகவும், புலிகளின் போராட்டத்திற்குக் குந்தகமாகவும் அமைந்திருப்பதை ஐ.நா. அதிகாரிகளுக்கு நாம் சுட்டிக் காட்டினோம்.

முதலாவதாக, இந்த ஒப்பந்தம் முத்தரப்பு உடன்பாடாக அமையவில்லை. அதாவது சிறீலங்கா அரசு, விடுதலைப் புலிகள் இயக்கம், ஐ.நா. உயர்ஸ்தானிகர் காரியாலயம் ஆகிய மூன்று தரப்பினர் மத்தியில் ஆன ஒப்பந்தமாக வரையப்படவில்லை. விடுதலைப் புலிகளுக்கும், ஐ.நா. தூதரகத்திற்கும் மத்தியில் ஆன ஒரு ஒப்பந்தமும், அரசுக்கும், ஐ.நா.வுக்கும் மத்தியிலான இன்னுமொரு ஒப்பந்தமுமாக இரு ஒப்பந்தங்கள் தனித்தனியே அவரவருக்குரிய கடப்பாடுகளுடன் நெறிப்படுத்தப்பட்டிருக்கிறது. இதுபற்றி நான் வினவிய பொழுது முத்தரப்பு ஒப்பந்தமாக இந்த உடன்பாட்டைச் செய்துகொள்ள அரசு விரும்பவில்லையென ஐக்கிய நாடுகள் அதிகாரிகள் தெரிவித்தனர். அப்படியாக ஒரு உடன்பாடு செய்துகொள்வதாயின், ஆட்சி அதிகாரம் படைத்த ஒரு சக்தியாக விடுதலைப் புலிகள் இயக்கத்தை அங்கீகரிக்க முடியும் என்றும், இதனால் புலிகளுக்குச் சர்வதேச சட்ட அங்கீகாரம் வழங்குவதாக அமையும் என்றும் சிறீலங்கா அரசு அஞ்சுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தின் ஒரு பகுதியை, அதுவும் தமிழர் தாயகத்தின் நிலத்துண்டை ஆக்கிரமித்து நிற்கும் அரசு, புலிகளின் ஆட்சி அதிகாரத்தை ஏற்க மறுப்பதும், அதன் காரணமாக முத்தரப்பு ஒப்பந்தத்தை நிராகரிப்பதும், புலிகளின் சர்வதேச அங்கீகாரம் பற்றிக் கவலைப்படுவதும் எமக்கு நியாயமாகத் தெரியவில்லை. அரசின் இந்த நிலைப்பாட்டை ஐ.நா. தூதரகமும் ஏற்றுக் கொண்டமை எமக்கு ஏமாற்றத்தைக் கொடுத்தது.

அடுத்து, இந்த ஒப்பந்தத்தின் மையப்பகுதியாக இராணுவச் சோதனைகள் பற்றிய விதிகள் அமைகின்றன.

இந்தப் பாதையால் பயணம் செய்யும் சகல குடிமக்களும் தமது அடையாளத்தை நிரூபிக்கும் சான்றிதழ்களைக் காண்பிக்க வேண்டும்.

சகல மக்களையும், அவர்களது மூட்டை முடிச்சுக்களையும், வாகனங்களையும் சோதனையிடும் பிரத்தியேக அதிகாரம் பாதுகாப்பு படைகளுக்கு உண்டு.

தடைசெய்யப்பட்ட பொருள்களோ, ஆயுதங்களோ கொண்டு செல்லும் நபர்களை இராணுவம் கைது செய்யும்.

ஒரு தனிநபர் இந்தப் பாதையைப் பாவிக்கும் உரிமை உள்ளவரா? இல்லை? என்பதை இராணுவத்தினரே தீர்மானிப்பர்.

ஒரு தனிநபர் இந்தப் பாதையைப் பாவிப்பதற்குத் தகுதியற்றவர் எனப் படையினர் தீர்மானிக்கும் பட்சத்தில் அவரைத் திருப்பி அனுப்பிவிடும் அதிகாரம் படையினருக்கு உண்டு.

இப்படியாக இராணுவத்தினருக்கு விசேட அதிகாரங்களை வழங்கும் விதிகள் இந்த ஒப்பந்தத்தில் உள்ளன. இதுபற்றி நாம் கடும் ஆட்சேபம் தெரிவித்தோம். இந்த விதிகளின்படி படையினருக்கு ஏகபோக அதிகாரங்கள் வழங்கப்பட்டிருக்கிறது. ‘தகுதியற்றவர்’ என இராணுவம் கருதும் எவரும் திருப்பி அனுப்பப்படலாம். தடைசெய்யப்பட்ட பொருள்கள் என்ற போர்வையில் மக்கள் கைதாகலாம். பாதையைப் பாவிக்கும் சுதந்திரம் மக்களுக்கு உண்டு என்று சொல்லிவிட்டு, பாதையைப் பாவிக்கும் உரிமை ஒருவருக்கு உண்டா? இல்லையா? என இராணுவம் தீர்மானிக்கும் எனக்கூறுவது கேலிக்கூத்தானது. இந்தக் கட்டுப்பாட்டுப் பிரமாணங்கள் மக்களின் பாதுகாப்பான, சுதந்திரமான போக்குவரத்துக்குக் குந்தமாக அமையும். இப்படியான அதிகாரங்கள் இராணுவத்திற்கு வழங்கப்படும் பட்சத்தில், ஐ.நா. கண்காணிப்பு அர்த்தமற்றதாகிவிடும் என நாம் எடுத்து விளக்கினோம்.

வவுனியா எல்லைப் பிரதேசத்தில் தமிழர்கள் இராணுவச் சோதனைக்கு ஆளாகி வருகின்றனர். இது சிங்கள தேசத்தின் எல்லை என்பதால் இதுபற்றி நாம் ஆட்சேபிக்க முடியாது. ஆனால் பூநகரிப் பிரதேசம் தமிழர் மாநிலத்தின் ஒரு பகுதி. தமது சொந்த மண்ணாகிய ஒரு நிலப்பரப்பைச் சுதந்திரமாகக் கடந்து செல்லும் உரிமை தமிழர்களுக்கு உண்டு அல்லவா? இப்பகுதியை இப்பொழுது ஆக்கிரமித்து நிற்கும் இராணுவம் இதன் ஊடாகச் செல்ல விரும்பும் மக்களை சோதனை செய்வதோ, தடுத்து வைப்பதோ, கைது செய்வதோ நியாயமானதல்ல. விடுதலைப் புலிப் போராளிகள் இந்தப் பாதையைப் பயன்படுத்தப் போவது இல்லை. ஆயுதங்களைக் கடத்திச் செல்லப் போவதில்லை. அவர்கள் போக்குவரத்துச் செய்ய ஏராளமான பாதைகள் இருக்கின்றன. பொதுமக்கள் ஆயுதங்களைக் கடத்திச் செல்வார்களென இராணுவம் அஞ்சினால், ஐ.நா. அதிகாரிகள் இதனைக் கண்காணிக்கலாம் அல்லவா? உதாரணமாக, யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு புறப்படும் ஒரு பயணி, பூநகரியில் இராணுவச் சோதனைக்கு உள்ளாகி, மீண்டும் வவுனியாவில் இராணுவ சோதனைக்கு ஆளாகி, அதுவும் போதாமல் கொழும்பிலும் சிங்களப் பொலிசாரின் சோதனைக்கும், கெடுபிடிகளுக்கும் ஆளாக வேண்டிய பரிதாப நிலை ஏற்படும் அல்லவா? தமிழர்களின் போக்குவரத்துக் கஸ்டங்களை நீக்கப் போவதாகக் கூறிக் கொள்ளும் ஒரு உலக நிறுவனம், அதுவும் மனித உரிமைகள் பற்றி அக்கறை காட்டும் ஒரு அமைப்பு, இதற்கு இடமளிப்பது நியாயமா? என நாம் தெரிவித்தோம். ஆனால் ஐ.நா. அதிகாரிகள் எமது நிலைப்பாட்டை ஏற்றுக் கொண்டதுபோலத் தெரியவில்லை. ஒரு அரசு என்ற ரீதியில் சிறீலங்காவுக்கு இலங்கை பூராகவும் இறைமையும், நில ஆட்சி உரிமையும் உண்டு என்பதை அவர்கள் மறைமுகமாக எடுத்துக்கூற விளைந்தனர். அத்துடன் தமிழர் தாயகம் என்பதையோ, புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசம் என்பதையோ தாம் அங்கீகரிக்க முடியாது என்பதையும் சூசகமாக எடுத்துக்கூறினர். அப்படியானால் சிங்கள இராணுவம் தனக்குச் சொந்தமெனக் கருதும் தமிழர் மண்ணில், தமிழரை விரட்டிவிட்டு நில ஆக்கிரமிப்புச் செய்வதை அரசின் உரிமைப்பாடு என இவர்கள் எண்ணுகிறார்கள் போலும். இந்த நிலைப்பாட்டை நாம் எப்படி ஏற்றுக் கொள்வது?

இந்த ஒப்பந்தத்தில் வேறு பல சிக்கலான விதிகளும் இருக்கத்தான் செய்கின்றன. இவை இப்பிரதேசத்தில் இராணுவ நடவடிக்கைகள் சம்பந்தப்பட்டவை. இப்பிரச்சினைகள் பற்றி நான் இங்கு விபரிக்க விரும்பவில்லை.

இந்த ஒப்பந்தத்தில் இன்னும் ஒரு அம்சம் எமக்கு ஏற்புடையதாக அமையவில்லை. இது ஐ.நா. கண்காணிப்புப் பங்கு பற்றியது. இழப்பீட்டு நடைமுறை சம்பந்தமானது. அதாவது இப்பாதையைப் பாவிக்கும் பயணிகளுக்கு சேதம் ஏற்பட்டாலோ, மரணம் நேர்ந்தாலோ, அல்லது வேறு எத்தகைய இழப்புக்கள் ஏற்பட்டாலோ ஐ.நா. தூதரகம் அதற்குப் பொறுப்பாளியாக இராது என்றும், நஸ்ட ஈடுகளும் வழங்காது என்றும் ஒரு விதி தெட்டத் தெளிவாக எடுத்துக் கூறுகிறது.

அப்படியானால் பாதிக்கப்படும் மக்களுக்கு யார் பொறுப்பு? பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுக் காணாமல் போனால், அல்லது சுடுபட்டு மரணித்தால், அல்லது பொருட்கள் சூறையாடப்பட்டால் அவருக்காகக் குரல்கொடுப்பது யார்? அவரது அல்லது அவரது குடும்பத்துக்கு நஸ்ட ஈடு கொடுப்பது யார்? இந்த முக்கியமான விவகாரத்தில் எந்தவொரு பொறுப்பையும் தான் எடுப்பதற்குத் தயாராக இல்லையென ஐக்கிய நாடுகள் கைவிரித்து நின்றால் தமிழ் மக்கள் யாரிடம் சென்று முறையீடு செய்வது? அப்படியாயின் ஐ.நா.வின் கண்காணிப்பு எதற்கு? கண்களை மூடிக் கொண்டு, கைகளைக் கட்டிக் கொண்டு கண்காணிப்பு நடத்துவதாயின் ஐக்கிய நாடுகள் இதில் தலையிடுவதில் என்ன அர்த்த இருக்கிறது?

இந்தக் கேள்வியை நாம் எழுப்பவதை நியாயமற்றது என யாராவது சொல்லலாமா?