ஈழநாதம், 12.03.1993
‘‘இலங்கைத் தீவின் அரசியலை ஆட்டிப்படைக்கும் இரு சக்திவாய்ந்த மனிதர்கள் இருக்கிறார்கள். ஒருவர் பிரபாகரன். மற்றவர் பிரேமதாசா. இருவரும் இருவேறுபட்ட அரசியல் உலகங்களைப் பிரதிபலிக்கும் தலைவர்கள். இருவரிடமும் சில ஒருமைப்பாடுகளும், அதே சமயம் முரண்பாடுகளும் இருக்கத்தான் செய்கின்றன. இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதென்பது இவர்கள் இருவரின் கையில்தான் தங்கியிருக்கிறது.’’
இப்படியாக ஒரு வெளிநாட்டு அரசியல் விமர்சகர் இங்குள்ள அரசியல் யதார்த்தத்தைச் சித்தரிக்கிறார். இன்னொரு அரசியல் விமர்சகர் இன்னொரு பரிமாணத்தில் தமிழர் பிரச்சினையைப் பார்க்கிறார். பிரபல சிங்கள எழுத்தாளரான றோகன் குணரத்தினா சமீபத்தில் வெளியிட்ட தமது நூலின் (சிறீலங்காவில் இந்தியத் தலையீடு) முடிவுரையில் கீழ்க்கண்டவாறு எழுதியிருக்கிறார்.
‘‘சிறீலங்காவிலும் சரி, இந்தியாவிலும் சரி ஆட்சிபீடம் ஏறும் எவரும் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு முகம்கொடுத்துத்தான் ஆக வேண்டும். இராணுவ ரீதியாகப் போரில் நாம் வெற்றிகொள்ள முடியாது என்ற கசப்பான உண்மையை நாம் ஜீரணிக்க வேண்டும். ஆனால் அரசியல் ரீதியாக இப்போரில் நாம் வெற்றிகாண முடியும். ஒரு நியாயமான, நிரந்தரமான சமாதானத்தை நிலைநாட்ட வேண்டிய பாரிய பொறுப்பு இன்று சிறீலங்காவின் அதிகாரபீடத்தில் உள்ள பிரேமதாசாவைச் சார்ந்திருக்கிறது. பிரபாகரனுடன் அரசியல் பேச்சுக்களை நடத்தும் வாய்ப்பு என்றுமில்லாபடி இப்பொழுது அவருக்கு ஏற்பட்டிருக்கிறது…
விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் ஒரு சமாதான உடன்பாட்டைச் செய்துகொள்வதென்பது எந்த ஒரு தனிநபரோ, அரசியல் கட்சியோ, அரசாங்கமோ எதிர்கொள்ள வேண்டிய மிகக் கடினமான சவால் ஆகும். தற்போதைய நிலையில் இராணுவத் தீர்வு என்பது இதைவிட மிகவும் கடினமானதாகும். கடந்த நான்கு தசாப்தங்களாக மாறி மாறி ஆட்சிக்கு வந்த சிங்கள அரசுகள் தமிழர் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காண மேற்கொண்ட முயற்சிகளைப் புறநோக்காக ஆராய்ந்து பார்த்தால் இப்பிரச்சினை மிகவும் சிக்கல் வாய்ந்தது என்பது புலனாகும். இத்தகைய பாரிய முயற்சிகளின் பின்னரும் இன்றுவரை தனிநபர்களும் சரி, அமைப்புகளும் சரி இனப்பிரச்சினைக்கு நடைமுறைச்சாத்தியமான ஒரு தீர்வைக்காணத் தவறிவிட்டன. மிகவும் சிக்கலான பிரச்சினைகளுக்கு இலகுவான தீர்வுகளைக் காண முடியாது. மதிநுட்பம், விடாமுயற்சி, அரசியல் துணிவு, ராஜரீக விவேகம் ஆகிய பண்புகள்தான் ஒரு நிரந்தரத் தீர்வைக் காண்பதற்கு இன்றியமையாதவை. ஆனால் இத்தகைய பண்புகளை எமது சிங்களத் தலைவர்களிடம் காண்பது அரிது.
சிறீலங்கா அரசாங்கமும், சிங்கள அரசியல் உலகமும் தமிழர்களுடன் ஒரு சமரசமான அரசியல் உடன்பாட்டைச் செய்து கொள்வதில்தான் இந்திய-இலங்கை உறவுகளின் எதிர்காலம் தங்கியிருக்கிறது. நாம் விரும்பினாலும், விரும்பாத போதும் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனே இலங்கைத் தமிழர்களின் உண்மையான தலைவராவார். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முக்கியத்துவத்தை நாம் நிராகரிக்க முடியாது. தமிழ்நாட்டின் 6 கோடித் தமிழர்கள் இலங்கைத் தமிழர்கள் மீது கொண்டுள்ள தார்மீத இரத்த உறவையும், வரலாற்றுப் பற்றுணர்வையும் பார்க்குமிடத்து விடுதலைப் புலிகள் அல்லது அவர்களது எதிர்கால வாரிசுகள் இந்திய-இலங்கை உறவில் பிரதான பாத்திரத்தை வகிப்பார்கள் என்பது திண்ணம்.’’
இந்த அரசியல் விமர்சனங்கள் சிங்களப் பேரினவாத உலகத்திற்கும் ஒரு செய்தியைச் சொல்கிறது. அழுத்தம் திருத்தமாக ஒரு உண்மையைச் சொல்கிறது. அதாவது தமிழ்த் தேசத்தின் தலைவர் பிரபாகரன் என்பதையும், அவரையும் அவரது இயக்கத்தையும் ஒதுக்கிவிட்டுத் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வுகாண முடியாது என்பதையும் தெட்டத்தெளிவாக எடுத்துச் சொல்கிறது. சிங்களப் பேரினவாதம் இந்த எதார்த்த உண்மையை ஜீரணிக்க மறுத்து வருவதால்தான் இந்த யுத்தம் முடிவில்லாமல் தொடர்கிறது. தமிழரின் தேசியப் பிரச்சினை தீர்வில்லாமல் இழுபடுகிறது. சமாதானத்தின் கதவுகள் மூடப்பட்டுக் கிடக்கிறது.
தமிழீழ மக்களின் போராட்ட சக்தியாக எழுச்சி பெற்றுள்ள விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உண்மையான வரலாற்றுப் பங்கை இந்தியா மறுதலித்தது. இந்த இமாலயத் தவறினால் தமிழர் பிரச்சினைக்கு இந்தியாவினால் தீர்வு காண முடியவில்லை. இந்தக் குருட்டுத்தனமான அரசியல் போக்கைத்தான் பிரேமதாசா அரசும் கடைப்பிடித்து வருகிறது. தமிழர் பிரச்சினையிலும், தமிழரின் தேசியப் போராட்டத்திலும் எவ்வித தொடர்பும் இன்றி, பங்கும் இன்றி அந்நியமாகி நிற்கும் தமிழ் குழுக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துவிடுவதால் புலிகளின் முக்கியத்துவத்தைக் குறைத்துவிடலாம் எனப் பிரேமதாசா எண்ணுகிறார். இந்தியாவும் இந்த மண்குதிரைகளை நம்பித்தான் அரசியல் ஆற்றில் இறங்கி அவமானப்பட்டது. இது பிரேமதாசாவுக்கு தெரியாதது அல்ல. ஆனால் பிரேமதாசாவுக்கு எட்டப்பர்கள் தேவைப்படுகிறார்கள். வன்முறையைத் துறந்து, ஜனநாயக நீரோட்டத்தில் தீட்சை பெற்ற புனிதவாளர்களாக இவர்களுக்குப் புதுமுலாம் பூசிக்காட்டுவதன் மூலம் புலிகளின் ஆயுதப் போராட்டத்தை அர்த்தமற்ற பயங்கரவாதமாகச் சித்தரித்துப் புலிகள் இயக்கத்திற்குக் களங்கம் ஏற்படுத்திவிடலாம் எனப் பிரேமதாசா நினைக்கிறார் போலும். ஆனால் வன்னி எல்லையிலும், தீவகத்திலும், கிழக்கிலும் ஆயுதங்களைத் தாங்கி நின்ற அரச படைகளுக்கு சேவகம் புரிந்து வரும் இந்தக் குழுக்களின் ஜனநாயக அரசியல் பற்றி இன்று உலகம் நன்கறியும்.
தமிழர் பிரச்சினைக்கு ஒரு நியாயமான தீர்வைக் காணும் விடயத்தில் சிங்களத் தலைவர்களுக்குத் துணிவும், ஆற்றலும், நேர்மையும், அரசியல் விவேகமும் இல்லையென றோகன் குணரட்ண முன்வைக்கும் விமர்சனம் ஒரு உண்மையான கணிப்பு. பண்டாரநாயக்கா தொடக்கம் பிரேமதாசா வரை இந்த மதிப்பீடு பொருந்தும்.
சிங்கள அரசியல்வாதி தனது பதவி ஆசனத்தையே காதலிக்கிறான். இந்தப் பதவி ஆசனம் சிங்கள-பௌத்த பேரினவாதத்தின் நன்கொடையாக அவனுக்குக் கிட்டுகிறது. ஆகவே இந்த இருக்கையில் நீடித்திருப்பதென்றால், பேரினவாதத்திற்கு மண்டியிட்டுக் கிடக்க வேண்டும். ஜனாதிபதி என்ற அதியுயர் ஆசனத்தில் அமர்ந்திருக்கும் பிரேமதாசாவும் இதற்கு விதிவிலக்கானவர் அல்லர். தமிழருக்குக் காருண்யம் காட்டி அவர் தமது பதவி ஆசனத்தை இழக்கத் தயாராக இல்லை. அதுவும் அடுத்த தேர்தலில் கண்ணாயிருக்கும் அவர் பேரினவாதத்திற்கு காவடி எடுப்பதில்தான் காலத்தையோட்டுகிறார்.
தலைவர் பிரபாகரன் சமாதானத்தின் கதவுகளைத் திறந்து வைத்திருக்கிறார். போரை ஒரு முடிவுக்குக் கொண்டு வரத் தயாராக இருக்கிறார். பேச்சுவார்த்தைக்கு இணங்கியிருக்கிறார். அரசியல் தீர்வுக்கு வழிகோலும் ஒரு யோசனையையும் தெரிவித்திருக்கிறார். இதற்கு மேலாக சிங்கள தேசமும், உலகமும் அவரிடமிருந்து எதையும் எதிர்பார்க்க முடியாது.
பிரித்தானிய ஒலிபரப்பு நிறுவனம் (பி.பி.சி) என்றும் இல்லாதவாறு ஒரு நல்ல காரியத்தைச் செய்திருக்கிறது. இலங்கையின் அரசியலை ஆட்டிப் படைக்கும் இரு தலைவர்களையும் உலகத்தின் முன்னிலையில் நிறுத்தி விசாரணை செய்திருக்கிறது. பிரபாகரன் தனது நிலைப்பாட்டை நேர்மையாக, தெட்டத்தெளிவாக எடுத்துக் கூறியிருக்கிறார். அரசியல் தீர்வை நோக்கி நகரக்கூடிய ஒரு இடைவெளியையும் காட்டியிருக்கிறார். ஆனால் பிரேமதாசா இழுவல் மொழியில் நழுவியிருக்கிறார். அரசியல் கண்ணாம்பூச்சி விளையாடியிருக்கிறார். இரு தலைவர்களது நேர்மையையும், துணிவையும், விவேகத்தையும் உலகம் எடைபோட்டுக் கொள்வதற்கு பி.பி.சி இப்படியானதொரு கருத்து மேடையை அமைத்துக் கொடுத்தது பாராட்ட வேண்டிய விடயம்.
எந்தவொரு பிரச்சினைக்கும் முகம்கொடுக்காமல் தட்டிக் கழிக்க விரும்பினால் ஒரு விசாரணைக் கமிசன் அல்லது ஒரு சர்வகட்சி மாநாடு அல்லது ஒரு வட்டமேசைக் கூட்டம் அல்லது ஒரு பாராளுமன்றத் தெரிவுக் குழு இப்படியாக எதையோ ஆரம்பித்துவிட்டு, அதனை முடிவில்லாமல் இழுத்தடிப்பது சிங்கள ஆட்சியாளரின் அரசியல் தந்திரோபாயம். பிரேமதாசாவும் இந்தச் சிங்கள அரசியல் மரபுக்கு அமைய அதே தந்திரோபாயத்தைக் கடைப்பிடித்து வருகிறார். இரண்டு வருடத்திற்கு மேலாகச் சர்வகட்சி மாநாட்டிற்குள் ஒழிந்திருந்து, அது செயலிழந்து, செத்துப் போக, இப்பொழுது பாராளுமன்றத் தெரிவுக்குழுவிற்குள் பதுங்கி நிற்கிறார். இருட்டிற்குள் கறுப்புப் பூனையைத் தேடியவன் போல் இந்தத் தெரிவுக்குழு இன்னமும் தமிழர் பிரச்சினையைத் தேடியலைந்து கொண்டிருக்கிறது. பிரேமதாசாவே அல்லது சிறீமாவோ அம்மையாரோ இன்னும் இந்தத் தெரிவுக்குழுவிடம் தமது தீர்வுத் திட்டத்தை முன்வைப்பதற்குத் துணியவில்லை. இந்த இலட்சணத்தில் தெரிவுக்குழுவிடம் யோசனையைச் சமர்ப்பிக்குமாறு தலைவர் பிரபாகரனுக்கு ஆலோசனை கூறுகிறார் பிரேமதாசா.
நாடு எப்படித்தான் சீரழிந்து போனாலும் தனது பதவி ஆசனத்தைக் கட்டிக் காக்க வேண்டும் என்பதுதான் பிரேமதாசாவின் இன்றைய அங்கலாய்ப்பு. புலிகளுடன் சமாதானம் செய்து கொள்வதோ, சமரசப் பேச்சுக்களை நடத்துவதோ, அல்லது பிரபாகரனின் ஆக்கபூர்வமான யோசனைக்கு அனுகூலமான பதிலைச் சொல்வதோ சிங்களப் பேரினவாதத்தைத் தீண்டுவதாக முடியும். எனவே பிரேமதாசா இதுவொன்றையும் செய்யப் போவதில்லை. தெரிவுக் குழுவை சாகாமல் வைத்திருப்பதிலும், யுத்தத்தைத் தொடர்வதிலுமே அவர் அக்கறை காட்டுவார். தமிழருக்குச் சார்பான தீர்வும், சமாதானமும் அவரது ஆசனத்திற்கு ஆபத்தைத் தேடிக் கொடுத்துவிடலாம் என அவர் அஞ்சுகிறார்.
தலைவர் பிரபாகரனைப் பொறுத்தவரை தமிழர் தாயகம் அடிப்படையானது; அந்த அடிப்படையில்தான் தமிழர் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்பது அவரது நிலைப்பாடு. அதனால்தான் தமிழர் தாயகத்தின் பூகோள முழுமையை அவர் வலியுறுத்துகிறார். இது இலங்கையின் நில ஒருமைப்பாட்டையும், பெரும்பான்மைச் சமூகத்தினரின் இறைமையையும், பௌத்தத்தின் முதன்மைப்பாட்டையும் இறுக்கமாக வலியுறுத்தி நிற்கும் ஒற்றையாட்சி அரசியல் அமைப்பின் கீழ் சாத்தியமாகாது என்பது அவருக்குத் தெரியும். எனவேதான் அவர் சமஸ்டி ஆட்சிமுறை முன்மொழியப்பட்டால் அதனைப் பரிசீலனை செய்யத் தயாராக இருப்பதாகச் சொல்லியிருக்கிறார்.
சமீப காலமாகச் சமஸ்டி என்ற பதம் கொழும்பு அரசியல் அரங்கில் அடிபட்டு வருகிறது. யாழ்ப்பாண மக்கள் என்றும் அறிந்திராத யாழ்ப்பாண எம்.பி. என்பவர் மூலம் அரசாங்கம் இந்தச் சொற்பதத்தை அறிமுகம் செய்திருக்கிறது. இந்தத் தனிமாகாண சமஸ்டி யோசனை வடக்கையும், கிழக்கையும் துண்டாடும் சதித்திட்டம் என அமைச்சர் தொண்டமான் தலைவர் பிரபாகரனுக்கு எழுதியிருக்கிறார். இந்தச் சதியை மூடிமறைத்து, சமஸ்டித் தத்துவத்தின் மகிமை பற்றிப் பறைசாற்றி வந்த கொழும்பு அரசியல் உலகில் பிரபாகரன் போட்ட சமஸ்டிக் குண்டு எல்லோரையும் திணறடித்துவிட்டது. அத்துடன் சிங்களப் பேரினவாதத்தின் முகமூடியையும் அது கிழித்து விட்டது. பிரேமதாசா தடுமாறி நொண்டிச்சாட்டு சொல்கிறார். அரசியல் அமைப்பை மாற்றியமைப்பது நடைமுறைச் சாத்தியம் அல்ல என்பதுபோல ஒப்பாரி வைக்கிறார்.
ஒற்றையாட்சியை மேலும் இறுக்குவதற்காக சர்வசன வாக்கெடுப்புப்பின்றி புதிய புதிய அரசியலமைப்புக்களையும், ஏராளமான திருத்தங்களையும் காலத்திற்குக் காலம் கொண்டுவந்த சிங்களப் பேரினவாதிகள், இன்று உலகத்தை ஏமாற்றக் கட்டுக்கதைகள் புனைகிறார்கள்.
வடக்குக் கிழக்கு இணைந்த தமிழர் தாயகத் தன்னாட்சியை ஏற்றுக் கொள்ளச் சிங்களப் பேரினவாதம் தயாராக இல்லை. இதனைத் தெளிவாக, வார்த்தைகளில் உலகத்திற்கு எடுத்துச் சொல்லத் துணிவற்ற பிரேமதாசா, சொற்சிலம்பாடிச் சுற்றிவளைத்து மழுப்புகிறார்.
சிங்களத் தலைவர்களிடம் நேர்மையும், நெஞ்சுரமும் இல்லையென்பதற்குப் பிரேமதாசாவின் இந்த மழுப்பல் ஒரு நல்ல உதாரணம்.