ஈழநாதம், 27.01.1992

புத்தபெருமான் காருண்யத்தைப் போதித்தார். கொல்லாமையைப் போதித்தார். அன்பையும், அறத்தையும், தர்மத்தையும் போதித்தார். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இந்துமத ஞானியாகிய புத்தரின் போதனைகள் சிங்கள தேசத்தின் வேதமாக மாறியது. அரச மரம் அங்கு வேர்விட்டு வளர்ந்தது. புனித மதமாகப் பௌத்தம் அங்கு நிலைகொண்டது.

மனுநீதியின் தத்துவப் பொக்கிசமான பௌத்த மதத்தில் காலப்போக்கில் பேரினவாத விசம் கலக்கப்பட்டது. மகாவம்ச காலத்தில் இருந்தே தமிழ்த் துவேசம் சிங்கள-பௌத்த வரலாற்று ஏடுகளில் புகுத்தப்பட்டது. புத்தரின் அறநெறித் தத்துவங்களுக்கு வியாக்கியானம் செய்ய விளைந்த மதகுருக்கள் அதில் புராணக் கதைகளைப் புகுத்தினர். இனவாதக் கருத்துருவங்களைத் திணித்தனர். தமிழர் விரோத எண்ணங்களைக் கற்பித்தனர்.

இலங்கைத் தீவு பௌத்தத்திற்கெனப் படைக்கப்பட்ட புனித பூமி: சிங்களவரின் தாயகம். தமிழர்கள் அந்நியர்கள்: சிங்களவரின் புனித பூமியை ஆக்கிரமித்து நிற்பவர்கள். சிங்களவர்கள் அதி உயர்ந்த ஆரிய குலத்தவர்; தமிழர்கள் தாழ்ந்த திராவிடர்கள். சிங்களவர்கள் நாகரீகமானவர்கள்; தமிழர்கள் காட்டுமிராண்டிகள். சிங்களவர்கள் ஆளப் பிறந்தவர்கள்; தமிழர்கள் அழிக்கப்பட வேண்டியவர்கள். இப்படியான சிங்களப் பேரினவாதக் கருத்துக்கள் பௌத்த வேதாகமங்களில் புகுத்தப்பட்டது. பௌத்தம் சிங்களப் பேரினவாதத்துடன் கலந்து களங்கமடைந்தது. புத்தரின் தர்மக் கோவிலுக்குள் அதர்மப் பிசாசு புகுந்து கொண்டது.

காலனித்துவ சகாப்தத்தில், குறிப்பாக ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், சிங்கள-பௌத்த பேரினவாதம் அரசியல் களத்தில் பிரவேசித்தது; பிரித்தானிய ஏகாதிபத்தியப் பூதமும், திராவிடக் காட்டுமிராண்டிகளுமாகச் சேர்ந்து சிங்கள இனத்தை அடக்கி ஆளுவதாகக் குரல் எழுப்பியது. அந்நியரின் ஆதிக்கத்தால் சிங்களவரின் புனித பூமி அழுக்குப் படிந்துவிட்டதாக ஆத்திரப்பட்டது. ஆங்கிலேயரின் வெளியேற்றத்தின் பின் இலங்கையின் அரசியல் வாழ்வை ஆட்டிப் படைக்கும் ஆதிக்க சக்தியாகச் சிங்களப் பேரினவாதம் வளர்ச்சி கண்டது. மதபீடங்களில் இருந்து, கல்விக் கூடங்களிலும், கட்சி அரசியலிலும் ஊடுருவி வளர்ந்தது. சிந்தனை உலகிலிருந்து, சித்தாந்த உலகிலிருந்து, திண்ணியமான நிறுவனமயம் பெற்றது. சிங்களப் பெரினவாதத்தின் பேயுருவங்களாக அரசியல் அமைப்புக்கள் வடிவம் எடுத்தன. அரசியல்வாதிகளும் இனவாதத்தால் ஆட்டப்படும் பொம்மைகளாக மாறினர். சிங்கள இனவாதத்தின் பேரெழுச்சி தமிழருக்கு எதிரான ஒடுக்குமுறையை வலுப்படுத்தியது. சிங்கள-தமிழ் தேசிய இனங்கள் மத்தியில் முரண்பாட்டை முற்றச் செய்தது. தமிழரின் தன்னாட்சி உரிமைப் போராட்டத்தை முனைப்புறச் செய்தது. தமிழீழ மக்களின் அரசியல் போராட்ட வரலாற்றில் காலத்திற்குக் காலம் சமரச முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போது, ஒப்பந்தங்கள், உடன்பாடுகள் காணப்பட்டபோது, சிங்கள-பௌத்த பேரினவாதம் தலைதூக்கி அதற்கெல்லாம் ஆப்புவைத்து விடுவது தொடர்ந்து நடைபெறும் சரித்திர நிகழ்வு. பண்டா-செல்வா ஒப்பந்தத்திலிருந்து, தொண்டமானின் சமரச முயற்சிவரை சிங்களப் பேரினவாதம் இந்தக் காரியத்தைத் தவறாது செய்து வருகிறது. எனவே இந்தக் கசப்பான வரலாற்று அனுபவத்தைப் பெற்றுக் கொண்ட எமது மக்களுக்கு இன்று தென்னிலங்கையில் தலைவிரித்தாடும் இனவாதம் ஆச்சரியத்தைக் கொடுக்கப் போவதில்லை.

திரு.தொண்டமானின் தீர்வுத் திட்டம் பகிரங்கப்படுத்தப்பட்டதுமே சிங்கள-பௌத்த பீடம் போர்க்கொடியை உயர்த்தியது. சிங்கள இனவாத சக்திகள் தமிழ்த் துவேசத்தைக் கக்கின. சிங்கள அரசியல்வாதிகள் கூச்சல் போட்டனர். ஜனாதிபதி பிரேமதாசா, திருமதி பண்டாரநாயக்கா, அனுரா, தினேஸ் குணவர்த்தனா, மற்றும் ஆளும் கட்சியின் மூத்த உறுப்பினர்கள், எதிர்க்கட்சி தலைவர்களாகியோருடன் கலந்தாலோசித்துக் கருத்துப் பரிமாறி, அவர்களது ஆலோசனை கேட்டு, அனுசரணையைப் பெற்று, எல்லோரது கருத்து ஒத்திசைவுக்கும் ஏற்ப இந்தத் தீர்வுத் திட்டத்தை உருவாக்குவதாகத் திரு.தொண்டமான் எமக்கு எழுதியிருந்தார். அப்படியிருந்தும் அவர் வகுத்த திட்டத்திற்குச் சிங்கள அரசியல்வாதிகளிடமிருந்து இத்தகைய கடும் எதிர்ப்பு எழுந்தது ஏன்?

தமிழரின் இனப்பிரச்சினையின் தீர்வுக்குத் திரு.தொண்டமான தமிழீழத் தனியரசைப் பரிந்துரைக்கவில்லை. ஒற்றையாட்சியை மாற்றியமைக்க வேண்டும் எனக் கேட்கவில்லை. சமஸ்டி அமைப்பைத்தானும் கோரவில்லை. யுகம் யுகமாகத் தமிழர்கள் வாழ்ந்து வந்த வரலாற்றுப் பிரதேசத்தில் அவர்களுக்கு ஓரளவு சுயாட்சி உரிமை கொடுக்கப்பட வேண்டும் என்ற கருத்தில் ஒரு தீர்வுத் திட்டத்தை முன்வைத்தார். இதற்குத்தான் இத்தகைய எதிர்ப்புக் கிளம்பியிருக்கிறது.

பௌத்த மதபீடம் போர்க்கொடி உயர்த்திவிட்டது. அதனால் தாங்களும் அந்தப் போர்க்களத்தில் குதித்தாக வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தில் ஆளும் கட்சியும், எதிர்க்கட்சிகளும் திரு.தொண்டமானின் திட்டத்தை எதிர்க்கின்றன. தமிழரின் இரத்தத்தில் வேரூன்றி வளர்ந்த பேரினவாதம், கட்சி வேறுபாடின்றி சிங்கள அரசியலில் ஆழமாக வேரூன்றி விட்டதையும், மதம், அரசியல் என்ற எல்லைக்கோடுகளை மீறி இனவாதம் பரவலாக நிறுவனமயப்பட்டிருக்கிறது என்பதையுமே சிங்கள அரசியல்வாதிகளின் இந்தப் போக்கு சித்தரித்துக் காட்டுகிறது.

திரு.தொண்டமானின் சமரச முயற்சிக்கும், அவரது தீர்வுத் திட்டத்திற்கும் பிரேமதாசாவின் ஆசீர்வாதம் கிடைத்திருக்கலாமெனக் கருதுவது தவறு. பிரேமதாசாவினதும், ஆளும் கட்சியினதும் அனுசரணை பெற்ற தீர்வுத் திட்டத்திற்குப் பௌத்த பீடம் இத்தகைய எதிர்ப்பைக் கிளப்பியிராது.

பிரேமதாசா பௌத்த பீடத்தின் தீவிர ஆதரவாளர்; பௌத்த சாசனத்தின் பாதுகாவலர். பௌத்த கோட்பாடுகளை அரசியல் பிரமாணங்களாக மாற்ற முயல்பவர். தினமும் பௌத்த ஆலயங்களுக்குச் சென்று பிரித் ஓதுபவர். பௌத்த குருமாரின் காலடியைப் பூசிப்பவர். மதமும், அரசியலும் சங்கமமாகிய நீரோட்டத்தில் குளிப்பவர். அடிப்படியான சிங்கள-பௌத்தத் தலைவரின் ஆசிபெற்ற ஒரு தீர்வுத் திட்டத்தைப் பௌத்த பீடம் இப்படியொரு வெறிகொண்டு எதிர்த்திராது. திரு.தொண்டமானின் சமரச முயற்சிக்குப் பிரேமதாசாவின் ஆசீர்வாதம் கிடைக்கவில்லை என்பதுதான் உண்மை. பௌத்த பீடத்தின் எதிர்ப்புக்குப் பிரேமதாசா ஆசி வழங்கியிருக்கலாம் எனத்தான் நம்ப வேண்டியிருக்கிறது. மல்வத்தை மகாநாயக்கரைப் பலாலிக்கு அனுப்பி இராணுவத்தினருக்கு ஆசி வழங்கக் கேட்டுக் கொண்ட பிரேமதாசா, தொண்டமானின் சமாதான முயற்சிக்கு எப்படி ஆசி வழங்குவது? கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களாக விடுதலைப் புலிகளுக்கும், அரசுக்கும் மத்தியில் கொழும்பில் பேச்சுவார்த்தை நடைபெற்ற பொழுது எந்த உருப்படியான தீர்வுத் திட்டத்தையும் முன்வைக்காமல் பிரேமதாசா காலத்தைத் தட்டிக் கழித்து வந்தார். கலந்தாலோசனை, கருத்தொற்றுமை, விட்டுக்கொடுப்பு என்ற தத்துவத்தைப் பேசி வந்தாரே தவிர, தமிழரின் பிரச்சினைகளைப் பேசவில்லை. அந்த நேரத்தில் புலிகளின் கோரிக்கைக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்தக்கூட அவர் முன்வரவில்லை.

மற்றவர்கள் மூலமாகத் தனது கருத்துக்களைத் தெரிவிப்பதில் பிரேமதாசா ஒரு வித்தகர். அப்பொழுது அமைச்சர் ரஞ்சனும், இப்பொழுது மகாநாயக்க தேரர்களும் பிரேமதாசாவின் மொழியில் பேசுகிறார்கள்.

அமைச்சர் தொண்டமானின் தீர்வுத் திட்டம் அமைச்சரவையில் விவாதிக்கப்படவில்லை. ஆளும் கட்சியின் பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில் பேசப்படவில்லை. தனிநபரின் முயற்சிகளுக்குத் தடை விதித்துவிட்டுப் பல தரப்பினரின் கருத்தொற்றுமை மூலமே இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டுமென ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

இனப்பிரச்சினை பற்றிய தீர்வுகளை ஆராயும் பாராளுமன்றத் தெரிவுக் குழுவிலும் ஆளும் கட்சியே ஆட்சி புரிகிறது. இங்குதான் திரு.தொண்டமானின் தீர்வுத் திட்டத்திற்கு இறுதியான ஆப்பு வைக்கப்பட்டது. பாராளுமன்றத் தெரிவுக் குழுவிற்குச் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைகள் வெளியே பேசப்படக் கூடாது; பகிரங்க விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளக் கூடாதென நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொண்டமானின் சமாதான முயற்சிகளுக்கான கதவுகளை மூடிவிட்டது. எனவே இந்தச் சமரச முயற்சிக்கு முட்டுக்கட்டை போட்டதற்கு பிரேமதாசா அரசே காரணகர்த்தா என்று திடமாகச் சொல்லலாம். தமிழீழ மக்களுக்கு மிகக் குறைந்தபட்ச சுயாட்சியை வழங்கத்தானும் சிங்கள தேசம் தயாராக இல்லை. திரு.தொண்டமானின் சமரச முயற்சியும், அதற்கெதிராக வெடித்த சிங்களப் பேரினவாத எழுச்சியும் இந்த அரசியல் உண்மையையே எடுத்தியம்புகிறது.

நீண்ட நெடுங்காலமாகத் தமிழ் மக்கள் சிந்திய இரத்தமும், கண்ணீரும், அவர்கள் அனுபவித்த தாங்கொணாத் துயரும் சிங்களப் பேரினவாதிகளின் மனதிலும், உணர்விலும் எவ்வித மாற்றத்தையும் கொண்டு வரவில்லை என்பது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.