ஈழநாதம், 04.06.1993
இரண்டாவது கட்ட ஈழப்போரின் பிரதான இராணுவ-கேந்திர இலக்கு, யாழ்ப்பாணக் குடாநாட்டின் முற்றுகையாகும். இந்த இலக்கு வெற்றி கண்டால், விடுதலைப் புலிகளின் அசைவியக்க ஆற்றலைத் துண்டித்து, புலிப்படை வீரர்களைக் குடாநாட்டுக்குள் முடக்கி, போரைத் தமக்குச் சாதகமான முறையில் நகர்த்திச் செல்லலாமென சிங்கள இராணுவத் தலைமை திட்டம் தீட்டியது.
ஆனையிறவுச் சமரைத் தொடர்ந்து இந்தத் திட்டம் செயல்வடிவம் பெறத் தொடங்கியது. வெற்றிலைக்கேணி இராணுவ முகாம் விஸ்தரிக்கப்பட்டது. வெற்றிலைக்கேணியில் இருந்து ஆனையிறவுத் தளம் வரை, கிட்டத்தட்ட எட்டு மைல் தூரத்திற்கு நீண்டதொரு இராணுவ வேலி அமைக்கப்பட்டது. பல கோடி செலவில், பல ஆயிரம் இராணுவத்தினரைக் குடியமர்த்தி, பிரமாண்டமான இராணுவ முற்றுகை வலயம் நிறுவப்பட்டது. இதன் உடன் விளைவாக ஊரியான் பாதைக்கு மூடுவிழா நடந்தது.
இது ஒருபுறமிருக்க, சிங்கள இராணுவம் பூநகரிப் பிரதேசத்தை ஆக்கிரமித்து, சங்குப்பிட்டி-கேரதீவுப் பாதையை மூடியது. நாகதேவன்துறையிலிருந்து கல்முனை வரை, கிட்டத்தட்ட 10 மைல் வரை இன்னுமொரு இராணுவ வேலி நிறுவப்பட்டது. அத்துடன், நீரேரிப் பிரதேசத்தில் போக்குவரத்தை முறியடிப்பதற்காக நாகதேவன்துறையில் ஒரு சிறிய கடற்படைத் தளமும் அமைக்கப்பட்டது. கடற்பரப்பு நகர்வுகளைக் கண்காணிக்க ராடர் நிலையமும், பீரங்கித் தளமும் நிறுவப்பட்டதுடன், கடல் ரோந்திற்காகப் பல நீருந்து விசைப் படகுகளும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டன.
யாழ்ப்பாணத்தின் கழுத்தைச் சுற்றி முள்வேலி இறுக்கப்பட்டது. முற்றுகை வலயம் முழுமைபெற்று விட்டதாக இராணுவத் தலைமை எண்ணிக் கொண்டது. வெற்றிலைக்கேணியிலிருந்து கல்முனைவரை யாழ்ப்பாணத்திற்கு விலங்கிடப்பட்டு விட்டதாகச் சிங்களப் பேரினவாதம் திமிர்கொண்டது. இந்த நீண்ட நெடுந்தூர முற்றுகையில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட துருப்புக்கள் முடக்கப்பட்டன. போராளிகளின் நடமாட்டமும், பொதுமக்களின் போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டு விடுமென கொழும்பு எதிர்பார்த்தது. போருக்கு ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் கேந்திர நுட்பம் வாய்ந்த ஒரு பாரிய திட்டத்தை செயற்படுத்தி விட்டதாக முப்படைத் தலைமையகம் திருப்தி கொண்டது.
ஆனால் நடந்ததோ வேறு. முற்றுகை முறியடிக்கப்பட்டதுடன், கிளாலிக் கடற்பரப்பில் புலிகள் இயக்கம் புதிய பாதையைத் திறந்து விட்டது.
கிளாலிக் கடலில் கடற்புலிகள் தமது கடலாதிக்கத்தை நிலைநாட்டினர். வரலாற்றில் முதற்தடவையாகத் தமிழீழ விடுதலைப் போரில் எமது கடற்பிரதேசத்தின் ஒரு பகுதியில், அதுவும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த யாழ் கடல் நீரேரியில், கடற்புலிகளின் மேலாதிக்கம் நிலைநாட்டப்பட்டுள்ளது.
இந்த அதிசயம் எப்படி நிகழ்ந்தது? புலிகளின் போராட்டப் படிநிலை வளர்ச்சிப் போக்கில் ஒரு முக்கிய வரலாற்றுத் திருப்பமாக இந்த நிகழ்வு எப்படி இடம்பெற்றது?
நீண்ட கடற்பரப்பும், நீரிணையும், நீரேரிகளும் கொண்ட எமது பிரத்தியேகமான பூகோள சூழலில் கடலாதிக்கத்தின் முக்கியத்துவத்தைத் தலைவர் பிரபாகரன் நன்கு உணர்ந்திருந்தார். போராட்டம் முதிர்ச்சி பெற்று இறுதிக் கட்டத்தை நெருங்கும் பொழுது, யுத்தத்தின் போக்கை நிர்ணயிப்பது கடலாதிக்கப் போர் என்பதையும் அவர் அறிந்திருந்தார். இந்த மதிநுட்பமான தூரநோக்குப் பார்வையின் பெறுபேறாகக் கடற்புலி அமைப்பு உருவாக்கம் பெற்றது. போராட்ட நிர்ப்பந்தங்களுக்கு ஏற்ப துரித வளர்ச்சியும் கண்டது. கடற்போர்க் கலையில் அனுபவமும் பெற்றது. தரை யுத்தங்களின் வேகம் தணிந்து போக, குடாநாட்டு முற்றுகை இறுக, கிளாலிக் கடற்பரப்பு போர்க்களமாக மாறியது. கடற்புலிகளின் வரலாற்றுச் சிறப்பு மிக்க யுத்தகாண்டம் தொடங்கியது.
கடந்த பத்து மாதங்களாகத் தமிழீழப் போர் கிளாலிக் கடலில் மையம் கொண்டிருக்கிறது. அங்கு உக்கிரமான கடற்சண்டை நிகழ்ந்து வருகிறது. 5 கடல் மைல் அகலமும், 15 கடல் மைல் நீளமும் கொண்ட விரிந்த கடற்பரப்பில், சிங்களக் கடற்படையும், தமிழ்க் கடற்படையும் மாறிமாறித் தொடர்ச்சியாக மோதி வருகின்றன. இரவில் வாண வேடிக்கை போன்று நடைபெறும் இந்தக் கடற்சமர்களை எமது மக்கள் கண்டு களிப்பதும் உண்டு.
கிளாலிக் கடற்சண்டைகளில் சிங்களக் கடற்படைக்குக் கணிசமான இழப்பு ஏற்பட்டிருக்கிறது. இரண்டு மிக நவீனமான நீருந்து விசைப் படகுகள் கடற்புலிகளால் நாசமாக்கப்பட்டுள்ளன. 25 அடி நீளமான ரோந்துப் படகு ஒன்றும் அழிக்கப்பட்டிருக்கிறது. கடற்படையிடமிருந்து ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டிருக்கின்றன. கடற்படையினருக்குப் பலத்த உயிர்ச் சேதமும் ஏற்பட்டிருக்கிறது. உயிர்ச் சேத விபரத்தைக் கடற்படைத் தலைமையலுவலகம் வெளியிட மறுத்து வருகிறது. கடற்படையினரின் மனவுறுதி தளர்ந்துவிடும் என்ற அச்சத்தினாலோ தெரியவில்லை.
இந்த இழப்புக்களால் கடற்படை ஆட்டங்கண்டிருக்கிறது. இதனால் கடற்புலிகளுடன் நேரடி மோதலைத் தவிர்த்துக் கொள்வதிலேயே கடற்படையினர் தீவிர அக்கறை காட்டி வருகின்றனர்.
‘‘கடற்சண்டை பெரும்பாலும் பத்து அல்லது பதினைந்து நிமிடங்கள் வரைதான் நீடிக்கும். அதுவும் தூரத்திலிருந்தே சண்டை பிடிப்பார்கள். எமது சண்டைப் படகுகள் நெருங்கியதும் தப்பினோம், பிழைத்தோம் என்று ஓட்டம் பிடிக்கிறார்கள். நாங்கள் கலைத்து அடிப்பதும், அவர்கள் ஓடுவதுமாக கடற்சண்டை இடம்பெறுவது வழக்கம்,’’ என்று பெருமிதத்துடன் கூறினார் ஒரு கடற்புலிவீரன்.
‘‘கடற்புலிகள் எந்த ஆபத்தையும் பொருட்படுத்தாது துணிந்து, முன்னோக்கி எம்மை நெருங்கி வருகிறார்கள். இது எமக்குப் பெரும் அச்சுறுத்தலாக இருக்கின்றது.’’ இவ்வாறு சமீபத்தில் ஒரு கடற்படை அதிகாரி கூறியிருப்பது கடற்புலிகளின் அபாரமான துணிவை எடுத்துக் காட்டுவதாக இருக்கிறது.
‘‘மக்களின் பாதுகாப்பு அரணாகவே நாம் கிளாலிக் கடற்பரப்பில் செயற்படுகிறோம். எதிரியின் பிரதான நோக்கம் மக்களைத் தாக்கி அழிப்பதுதான். மக்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதுதான் எமது முக்கிய நோக்கம். மக்களின் பயணப் படகுகளுக்கும், எதிரியின் கொலைப் படகுகளுக்கும் மத்தியில் நாம் நடுவே நின்று போராடுகின்றோம். இந்தக் கடற்போரில் நாமும் இழப்புக்களை சந்திக்கிறோம். எமது போராளிகள் தமது உயிரைப் பணயம் வைத்தே மக்களுக்குப் பாதுகாப்பு அளிக்கிறார்கள்’’ என்று கூறினார் கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசை. கிளாலிக் கடற்போரில் இதுவரை 8 கடற்புலி வீரர்கள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்கள். சமீபத்தில் கூட 24.05.1993இல் சாஜகான், சேகர், மணியரசன் ஆகிய வீரர்கள் மக்களுக்காக மடிந்திருக்கிறார்கள். தமது உயிரைப் பணயம் வைத்துப் புலிகள் மக்களுக்குப் பாதுகாப்பு அளித்து வருகிறார்கள் என்ற சூசையின் கூற்றை இந்தத் தற்கொடைச்சாவுகள் நிரூபித்து நிற்கின்றன. இந்தக் கடற்போர் ஆபத்து நிறைந்தது. எதிரியின் விசைப்படகுகள் வேகம் மிகுந்தவை. 50 கலிபர் கனரக இயந்திரத் துப்பாக்கிகள் பொருத்தப்பட்டவை. கடற்படைக்குப் பின்தள வசதிகள் உண்டு. ஆகாயப் படையின் பக்கபலமும் உண்டு. கடற்புலிகளின் தாக்குதலுக்கு இலக்காகி நிலைகுலையும் போதெல்லாம், விமானப் படையின் உதவியைப் பெற்றுக் கொள்ளலாம். தேவையேற்படும் பொழுது தரைத்தளப் பீரங்கிகளும் கைகொடுத்துதவும். இந்தக் கடற்போரில் படையாற்றல் சம பலம் எதிரிக்குச் சாதகமாகவே அமைந்திருக்கிறது. பல நெருக்கடிகள் மிகுந்த போர்ச் சூழலில், வசதிகள் எதுவுமற்ற நிலையில், வரையறுக்கப்பட்ட வளத்தில் கட்டப்பட்ட தொழில்நுட்ப பலத்தில், ஒரு சக்தி வாய்ந்த எதிரிக்குச் சவாலாகக் கடற்புலிகள் வளர்ந்து நிற்பதும், இக் கடற்பிரதேசத்தை எமது கட்டுப்பாட்டு ஆதிக்கத்தின் கீழ் வைத்திருப்பதும் வியக்கத்தக்க விடயமாகும்.
இது எப்படிச் சாத்தியமானது என்று சூசையிடம் கேட்டபொழுது, ‘‘விடா முயற்சி, துணிவு, தன்னம்பிக்கை, போர்த்திறன், எல்லாவற்றிற்கும் மேலாக மக்களுக்காகத் தம் உயிரை ஈர்க்கும் அலாதியான அர்ப்பணிப்பு’’ என்று உறுதியான பதலிறுத்தார்.
கடற்புலிகளின் பாதுகாப்புக் கவசம் இருப்பதால் கிளாலிப் பயணம் தொடர்கிறது. யாழ் குடா முற்றுகையின் முதுகெலும்பு கடற்புலிகளால் முறியடிக்கப்பட்டு விட்டது.
கிளாலிக் கடற்பயணத்தில் பொதுமக்கள் கொலையுண்ட சம்பவங்கள் பற்றி சூசையிடம் கேட்டேன். ‘‘கடற்புலிகளின் பாதுகாப்பு இல்லாத சமயத்தில் இந்தப் படுகொலைகள் நடந்திருக்கின்றன. எமது பாதுகாப்பு இருக்கும் வேளையில் எந்தவித அசம்பாவிதங்களும் நிகழவில்லை. இப்பொழுது மிகவும் கட்டுப்பாடான ஒழுங்கமைப்பில் பயணிகள் போக்குவரத்து நடக்கிறது’’ என்று விளக்கினார் கடற்புலிகளின் சிறப்புத் தளபதி.
இப்பொழுது கிளாலிப் பயண நாட்களை நிதித்துறையினர் முற்கூட்டியே அறிவித்து விடுகின்றனர். அந்த நாட்களில் கடற்புலிப் படகுகள் வியூகம் அமைத்துக் காவல்புரிய, கிளாலிப் பயணம் நிகழும். அந்த நாட்கள் எந்த நாட்கள் என்று கடற்படைக்குத் தெரியும். நூற்றுக்கணக்கான படகுகள் நகர்வதும் ராடர் திரையில் வெண்ணிறப் புள்ளிகளாக அசையும். பகிரங்கப் பிரகடனம் செய்து புலிகள் இயக்கம் கடல் முற்றுகையை உடைப்பதைக் காண சிங்களக் கடற்படைக்கு சினம் எழும். நாகதேவன் துறையில் இருந்து நீருந்து விசைப்படகுகள் புறப்படும். அவற்றின் வரவை எதிர்பார்த்துப் புலிகளின் கடற்குருவிகள் காத்து நிற்கும். கடற்போராளிகளுடன் மோதுவதைத் தவிர்த்துக் கடற்பயணிகளைத் தாக்குவதற்குக் கடற்படை முயற்சிக்கும். அந்த நகர்வுகளை இனங்கண்டு கடற்குருவிகள் கடுகதி வேகத்தில் பறக்கும். கால் மணிநேரம் கடற்சண்டை நடக்கும். அதன் பின்னர் ஓட்டப் போட்டி நிகழும். புலிகள் விரட்ட, நீருந்துப் படகுகள் பின்வாங்கி ஓட, பூநகரி முகாமில் இருந்து பீரங்கிகள் முழங்க, கிளாலிக் கடல் விழாக் கோலம் கொள்ளும்.
தரையுத்தம் போல அல்லாது கடற்போர் வித்தியாசமானது. தரையின் பொருண்மியப் புறநிலைகளைக் கண்டறிந்து செயற்படலாம். இயற்கையின் கோடுகளைக் கண்டு கொள்ளலாம். பாதைகளை வரித்துக் கொள்ளலாம். விழுப்புண் ஏற்பட்டு விழும்பொழுது நிலம் தாங்கிக் கொள்ளும். கடல் அப்படியல்ல. எல்லையற்றதாக விரிந்து கிடக்கும். குறிப்புகள் புலப்படாது. இருள் கவிந்து கொண்டதும் பாதைகள் தெரியாது. சதா அசைந்து கொண்டிருக்கும் அதன் முதுகில் சவாரி செய்து கொண்டு சண்டை பிடிப்பது சிரமம். உலுக்கித் தூக்கி எறிந்தபடி படகு கடுகதியில் விரைந்து செல்லும்பொழுது குறிபார்த்துச் சுடுவது இலகுவான காரியம் அல்ல. படகு தீப்பற்றி எரிந்து வெடித்தால் காயம் அடைந்தவர்களைக் கடல் விழுங்கிக் கொள்ளும்.
கடற்போர்க்கலை மிகவும் நுட்பமானது. அதற்கு நிறையப் பயிற்சியும், அனுபவமும் தேவை. மீன்போலக் கடலோடு வாழப் பழகிக் கொள்ள வேண்டும். அத்துடன் கடற்போருக்கு அபாரமான நெஞ்சுரமும் வேண்டும். எந்த நேரமும் தயார் நிலையில் இருக்க வேண்டும். எல்லையற்றதாக விரிந்து கிடக்கும் கடற்பரப்பில், எந்த நேரத்தில், எந்த மூலையிலிருந்து எதிரி தலையெடுப்பான் என்று அனுமானிப்பது கடினம்.
‘‘எமது போராளிகள் கடற்போர்க்கலையில் வல்லவர்கள். அபாரமான துணிச்சல் கொண்டவர்கள். எமது துணிவிற்கே எதிரி பயப்படுகின்றான்’’ என்றார் சூசை.
கடற்புலிகளின் வளர்ச்சி பற்றியும், கிளாலிக் கடற்பரப்பில் அவர்கள் நிலைநாட்டியுள்ள கடலாதிக்கத்தின் முக்கியம் பற்றியும் எமது மக்கள் உணராமல் இருக்கலாம். ஆனால் எதிரி நன்கு உணர்ந்திருக்கிறான். கடற்புலிகளின் வளர்ச்சியும், எழுச்சியும் சிங்கள ஆதிபத்தியத்திற்குப் பெரியதொரு அச்சுறுத்தலாக எழுந்திருப்பது எதிரிக்குக் கலக்கத்தைக் கொடுத்திருக்கிறது.
யாழ்ப்பாணக் குடாநாட்டு முற்றுகை என்ற எதிரியின் போருபாயத் திட்டம், கடற்புலிகளால் உடைக்கப்பட்டு இருக்கிறது. இதனால் இரண்டாவது கட்ட ஈழப்போரைக் குறித்த இலக்கில் நகர்த்த முடியாது எதிரி திணறிப்போய் நிற்கிறான்.