ஈழநாதம், 03.02.1992 – 08.02.1992

பாகம் 1

ஜனாதிபதி பிரேமதாசா எப்படிப்பட்ட மனிதர்? அவரது அரசியற் பார்வையும், அணுகுமுறையும் எவ்வகையானது? தமிழரின் இனப்பிரச்சினை குறித்த அவரது கண்ணோட்டம் என்ன? அவரது ஆட்சிக்காலத்தில் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு ஏற்படுமா? தமிழ் மக்களின் மனதை உறுத்திவரும் கேள்விகள் இவை.

பிரேமதாசாவின் அந்தரங்க மனோ உலகத்தை இனங்கண்டு விமர்சிப்பது கடினம்.

ஏனென்றால் அவர் ஒரு முகமூடி மனிதர். காலத்திற்குக் காலம், தேவைகளுக்கேற்ப முகமூடிகளை அணிந்து நடிப்பவர். மிகவும் திறமையாக நடிப்பவர். இளம்பராயத்தில் ஒரு கவிஞனாக, எழுத்தாளனாக, சிறந்த பேச்சாளராக, அரசியல் களம் புகுந்து கொழும்பு நகர சபை உறுப்பினராக, எம்.பியாக, அமைச்சராக, பிரதமராக, ஜனாதிபதியாகச் சிம்மாசனம் ஏறும் வரை அவர் ஏற்று நடித்த பாத்திரங்கள் பலவகையானவை. இந்த நீண்ட அரசியல் யாத்திரையில் எங்குமே இடர்பட்டு விழாமல் மிகவும் சாணக்கியத்துடன், மிகவும் நுட்பமாகக் காய்களை நகர்த்தி அரசியல் சதுரங்க விளையாட்டில் வெற்றிகண்டவர். ஒரே சமயத்தில் ஒன்றுக்கொன்று முரண்பட்ட பாத்திரங்களை ஏற்று நடிப்பதில் வித்தகர். ஒரு புறத்தில் ஆட்கடத்தல் அதிரடிப் படையின் தளபதியாகவும், மறுபுறத்தில் அன்புமார்க்கத்தின் போதிசத்துவராகவும் வேடங்கள் பூணுவதில் விற்பன்னர். அவர் அணிந்த முகமூடிகளைக் கண்டு ஏமாந்தவர்கள் பலர். நம்பி நடந்து நட்டாற்றில் கைவிடப்பட்டவர்கள் பலர். அரசியல் வாழ்விலிருந்து வேரோடு பிடுங்கி எறியப்பட்டவர்கள் பலர்.

சூறாவளிகள் சதா சீற்றமெடுத்தாடும் அரசியற் கடலில் நெடுங்காலமாக படகேறியவர் என்பதால் எதார்த்த அரசியலின் கோரமான சுழிவு நெளிவுகளைப் பிரேமதாசா நன்கறிவார். அரசியல் என்பதே ஈவிரக்கமற்ற அதிகாரப் போட்டி என்பதும், குத்துவெட்டுக்கள் நிறைந்த போர்க்களம் என்பதும் அவருக்குத் தெரியாதது அல்ல. ஆபத்துக்கள் நிறைந்த இந்த நீரோட்டத்தில் நிலைத்து நின்று நீச்சல் அடிப்பது என்றால் எதிரிகளைக் கையாளும் அபார திறன் இருக்க வேண்டும். பிரேமதாசாவிற்கு இது கைவந்த கலை. ஒரு சாதாரண நாடக ஆசிரியரிலிருந்து பெரும் புரட்சி மன்னர்கள் வரை பிரேமதாசாவை எதிர்த்தவர்கள் மிகவும் மர்மமான சூழ்நிலையில் மரணத்தைச் சந்தித்திருக்கிறார்கள். இந்த வரிசையில் தடயம் எதுவும் இல்லாமலே பரிநிர்வாணம் பெற்றவர்கள் பலர். பிரேமதாசாவின் வாழ்க்கை வரலாற்றில் புதிர்கள் நிறைந்த, துப்புத் துலக்க முடியாத பல இருண்ட அத்தியாயங்கள் உண்டு.

நண்பன் என்றால் நண்பன், எதிரி என்றால் எதிரி என்ற வைராக்கியத்துடன் வாழ்க்கையை நடத்தும் பிரேமதாசாவிற்கு மிகவும் நெருங்கிய நண்பர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இவர்களில் பலர் தமிழர்கள். குறிப்புப் பார்க்கும் சோதிடர்களில் இருந்து, கணக்குப் பார்க்கும் பணமுதலைகள் வரை பல கொழும்புத் தமிழர்கள் பிரேமதாசாவின் நெருங்கிய வட்டத்து நண்பர்களாக இருந்து வருகிறார்கள். பிரேமதாசா சோதிட சாஸ்திரத்தில் நம்பிக்கை கொண்டவர். சகுனங்களுக்கும், சனித் தோசத்திற்கும், சூனியத்திற்கும் அஞ்சி நடப்பவர். திருமதி பண்டாரநாயக்காவை ஒரு சூன்யக்காரி என எண்ணுபவர். பிசாசுகளுக்கும், பில்லி சூன்யத்திற்கும், சனி பகவானின் சதிச் செயலுக்கும் அஞ்சி வாழும் பிரேமதாசாவிற்கு மந்திரவாதிகள் தேவைப்பட்டனர். மிகவும் அந்தரங்கமான மனக்குகை இரகசியங்களைப் பகிர்ந்து கொள்ளும் நம்பிக்கைக்குரிய ஆட்கள் தேவைப்பட்டார்கள். இந்த அந்தப்புரத்து விவகாரங்கள் அரசியல் உலகிற்கு அம்பலமாகக் கூடாது என்பதற்காகப் பிரேமதாசா தமிழர்களைத் தேர்ந்தெடுத்தார். சோதிட உலகத்து விவகாரத்தில் மட்டுமல்லாமல் கறுப்புப் பண விசயத்திலும் தமிழர்களே பிரேமதாசாவின் அந்தரங்கக் காரியதரிசிகளாகச் செயற்பட்டு வருகிறார்கள். முதலாளித்துவ பாதாள உலகில் கைமாறப்படும் பண முடிச்சுக்களில் இருந்து, திறைசேரி நிதி நிர்ணய விவகாரம் வரை தமிழர்களே பிரேமதாசாவின் கையாட்களாகக் கடமை செய்கிறார்கள். இவ்வாறு தமிழர்களைத் தனது அந்தரங்க கருமங்களுக்குப் பயன்படுத்தி வரும் பிரேமதாசா, தமிழரின் இனப்பிரச்சினையில் கொண்டிருக்கும் நிலைப்பாடு முற்றிலும் வித்தியாசமானது.

1983 யூலைக்கு முந்திய காலகட்டத்தில் தமிழர் இனப்பிரச்சினை தொடர்பாக பிரேமதாசா தனிப்பட்ட ரீதியில் குறிப்பிட்டுச் சொல்லும் அளவுக்குத் தலையிடவில்லை. கிழட்டு நரி ஜே.ஆரின் நிழலுக்குள் மறைந்து நின்று கட்சியின் முடிவுகளுக்குக் கட்டுப்பட்டு இயங்கி வந்தார். யூலைக் கலவரத்தின் போது பிரேமதாசாவின் குண்டர் படையும் களத்தில் குதித்துக் கொழும்பில் தமிழர்களைத் தாக்கியதாகச் சொல்லப்படுகிறது. இதில் ஓரளவுக்கு உண்மை இருக்கலாம். ஏனென்றால் யூலைக் கலவரத்தைத் திட்டமிட்டதும், செயற்படுத்தியதும் பச்சைச் சேட்டுக் கட்சிக்காரர்களே.

யூலைக் கலவரத்தை அடுத்து தமிழரின் இனப்பிரச்சினையில் இந்தியா தலையிட்டது. கிழட்டு நரியின் கொட்டத்தை அடக்க இந்திரா காந்தி அம்மையார் திட்டம் தீட்டினார். தமிழ்ப் போராளிகளுக்கு ஆயுதப் பயிற்சி கொடுக்க முடிவெடுக்கப்பட்டது. தமிழர் பிரச்சினையில் இந்தியா குறுக்கிட்டதை பிரேமதாசாவால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இந்திரா காந்தி அம்மையாரைப் பாராளுமன்றத்தில் வைத்துப் பகிரங்கமாகத் திட்டினார். அம்மையாருக்கு இது பிடிக்கவில்லை. பிரேமதாசாவின் இந்தியத் துவேசம் இரு நாடுகள் மத்தியிலான உறவைப் பாதிக்கும் என எச்சரித்து ஜே.ஆருக்கு ஒரு காத்திரமான கடிதத்தை எழுதினார். இந்த மறைமுக மிரட்டலுக்கு பிரேமதாசா பணிந்து விடவில்லை. தொடர்ந்து இந்திய எதிர்ப்புக் கோசங்களை எழுப்பினார். குடும்பச் சண்டையில் அயல்வீட்டுக்காரன் தலையிடக் கூடாதென இந்தியாவைச் சாடினார். இந்தியாவுக்கு எதிரான பிரேமதாசாவின் துணிச்சலான பிரகடனங்கள் அவரை ஒரு தீவிர சிங்களத் தேசாபிமானி என்ற அந்தஸ்திற்கு உயர்த்தியது. சிங்கள-பௌத்த பேரினவாத சக்திகள் பிரேமதாசாவிற்குப் பின்னால் அணிதிரண்டனர். ஜே.ஆரின் வாரிசுக்கான அதிகாரப் போட்டியில் பிரேமதாசா முதலிடத்தைப் பிடித்துக் கொண்டார். இந்தியாவின் ஆசியைப் பெற்றால் ஆட்சிபீடம் ஏறலாமென எண்ணியிருந்த கண்டியப் பிரபுத்துவ வர்க்கத்திருக்கு பிரேமதாசாவின் நுட்பமான காய்நகர்த்தல்கள் புரியவில்லை போலும்.

1987 யூலை கொழும்பில் டிக்சிட்டின் இராசதந்திர சாணக்கியம் கொடிகட்டிப் பறந்த காலம். வடக்கில் கரும்புலி மில்லர் எரிமலையாய் வெடித்ததால் ஒபரேசன் லிபரேசன் ஆட்டம் கண்டது. கிடுகிடுத்துப் போன கிழட்டு நரி, டிக்சிட்டின் பொறிக்குள் விழுந்தது. தமிழ், சிங்கள மக்களின் இறைமைக்குச் சாவுமணி அடிக்கும் அடிமைச் சாசனமாக ஒரு ஒப்பந்தம் தயாராகிறது. இந்த ஒப்பந்தம் மூலம் இலங்கையின் இறைமைக்குப் பங்கம் ஏற்பட்டாலும் பரவாயில்லை, தமிழரின் சுதந்திர இயக்கத்திற்கு முடிவுகட்டி விடலாம் எனத் திருப்தி கொள்கிறது ஜெயவர்த்தனா அரசு. ஆனால் பிரேமதாசா மட்டும் டிக்சிட்டின் இராசதந்திர சூன்யத்திற்குப் பலிக்கடா ஆக விரும்பவில்லை. பூனைகளுக்கு அப்பத்தைப் பிரித்துக் காட்டிய குரங்கு போல இந்தியா இலங்கையின் உள்நாட்டுச் சண்டையில் தலையிடப் போவதாக எண்ணினார். ரஜீவ் காந்தி ஒரு புனிதமான பசு அல்ல என்பதைப் பிரேமதாசா அறிந்திருந்தார். இதனால் இந்த ஒப்பந்த விவகாரத்தில் இருந்து ஒதுங்கிக் கொள்ள விரும்பினார். இந்திய நல்லுறவுக்கு மேலாகச் சிங்கள தேசாபிமானத்தில் அரசியல் அனுகூலங்கள் நிறைய உண்டு என்பதைச் சரியாக எடை போட்டார் போலும்.

பெரிய அரசியல் கொந்தளிப்புகள் மத்தியில் கொழும்பில் ஜே.ஆர்-ரஜீவ் ஒப்பந்தம் கைச்சாத்திட்ட போது பிரேமதாசா அங்கிருக்கவில்லை. சிங்களத் தீவிரவாத இயக்கங்கள் ஜெயவர்த்தனாவை தேசத்துரோகி என வசைபாடி ஆர்ப்பரித்த போது தேசாபிமானி பிரேமதாசா யப்பானில் சுற்றுப் பயணம் செய்து கொண்டிருந்தார்.

பிரேமதாசாவின் அரசியல் சதுரங்க ஆட்டத்தைப் புதுடில்லிப் பிராமணர்களால் சரியாகப் புரிந்து கொள்ள முடியவில்லை. பிரேமதாசா ஒரு இந்திய எதிர்ப்பாளர் என்பதை மட்டும் உணர்ந்திருந்தனர். ஆனால் பிரேமதாசா ஜனாதிபதி ஆசனத்தைக் குறிவைத்துச் செயல்படுகிறார் என்பதையும், அதற்கேற்றால் போல காய்களை நகர்த்தி வருகிறார் என்பதையும் இந்திய இராசதந்திரத்தால் கணிப்பிட முடியவில்லை. கண்டியப் பிரபுத்துவ ஆளும் வர்க்கத்தில் இருந்து ஆட்சி மாறப் போவதில்லை என இந்தியா கருதியது. இந்த வர்க்கத்தின் ஏகபோகப் பிரதிநிதியாகவும், ஜே.ஆரின் வாரிசாகவும் காமினி பதவியேறலாம் என புதுடில்லி தப்புக் கணக்குப் போட்டது. இந்த மதிப்பீட்டுக்கு அமைய டில்லி ஆட்சிப்பீடம் காமினியுடன் நட்புறவை வளர்த்து, பிரேமதாசாவை ஒதுக்கியது. இந்தியாவைப் பகைத்துக் கொள்வதையிட்டு பிரேமதாசா கவலைப்படவில்லை. இலங்கையின் அரசியல் சக்கரத்தைச் சுழற்றுவது இந்தியப் பிராமணிய தந்திரம் அல்ல, சிங்கள தேசியவாத மந்திரம்தான் என்பதைப் பிரேமதாசா நன்கறிவார். இதனால் காமினி டில்லியின் அதிகார மாளிகைக்குச் சென்று ரஜீவின் ஆசிபெற்ற போது பிரேமதாசா கண்டியில் தலதா மாளிகைக்குச் சென்று மகாதேரர்களை வழிபட்டார். பௌத்த பீடத்தின் ஆசிபெற்ற சிங்கள தேச பக்தர் என்ற பாத்திரத்தை சிறப்பாக நடித்ததால் சிங்கள முதலாளியத்தின் முதுகெலும்பான ஐக்கிய தேசியக் கட்சி தனது நீண்ட கால வரலாற்றில் முதன் முதலாக ஒரு பாட்டாளி மகனைத் தலைவனாகத் தெரிவு செய்தது. இந்த நிகழ்வு பிரேமதாசாவின் சூத்திரதார அரசியலுக்கு மகுடம் வைப்பதாக அமைந்தது. அடுத்த கட்டமாக பிரேமதாசா ஜனாதிபதியாகப் பதவியேறினார். தீவிர இந்திய எதிர்ப்பாளர் ஒருவரோடு அரசியல் வர்த்தகம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்துக்குள் இந்தியா தள்ளப்பட்டது.

பாகம் 2

பிரேமதாசா ஜனாதிபதியாகச் சிம்மாசனம் ஏறியபொழுது இலங்கைத் தீவு வன்முறைச் சுவாலைகளால் எரிந்து கொண்டிருந்தது. வடகிழக்கில் அமைதி கலைக்க வந்த அனுமார் படை, புலிகளுடன் போரிட்டுக் கொண்டிருந்தது. தெற்கில் விஜயவீராவின் செம்படை இரத்தக் களரியை ஏற்படுத்தி வந்தது. புதிதாகப் பதவியேற்ற பிரேமதாசா இந்த வன்முறைப் புயலுக்குள் சிக்கித் தத்தளித்தார்.

இலங்கைத் தீவு ரண களமாய் மாறியதற்கு இந்தியத் தலையீடே காரணம் எனப் பிரேமதாசா எண்ணினார். இருட்டில் கறுப்புப் பூனையைத் தேடிய குருடன் போல ரஜீவின் இராணுவம் பிரபாகரனைத் தேடி அலைகிறது. தெற்கில் இந்திய ஆக்கிரமிப்புக்கு எதிராகக் கிளர்ந்த இயக்கம் சிங்களவர் மத்தியில் ஒரு சகோதர யுத்தத்தைத் தோற்றுவித்திருக்கிறது. இப்படியாக வடகிழக்கிலும், தெற்கிலும் வன்முறைப் பேய் நர்த்தனமாடுவதற்கு இந்திய இராணுவ ஊடுருவல்தான் காரணமெனப் பிரேமதாசா ஊகித்தார்.

போர்க்கலையில் மேதையான பிரபாகரனை ரஜீவின் அதிரடிப் படைகளாலும் அணுகிவிட முடியவில்லை. புலிவேட்டையில் இறங்கிய இராணுவத்தைப் புலிகள்தான் வேட்டியாடி அழிக்கின்றனர். இந்த யுத்தம் முடிவில்லாமல் தொடர்ந்தால் இந்திய இராணுவம் இலங்கையில் நிரந்தரமாகக் குந்திவிடும். இதனால் தென்னிலங்கையிலும் கலகக்காரர்களின் கை ஓங்கிவிடும். இந்த நெருக்கடியில் இருந்து மீளுவதானால் இந்திய இராணுவத்தை வெளியேற்ற வேண்டும். இந்திய இராணுவத்தை வெளியேற்றுவதானால் பிரபாகரனுக்கு நேசக்கரம் நீட்ட வேண்டும். இப்படியாகச் சிந்தித்த பிரேமதாசா விடுதலைப் புலிகளைப் பேச்சுக்கு அழைத்தார். ஜனாதிபதி ஆசனத்தைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ள பிரேமதாசாவுக்கு வேறு மார்க்கம் இருக்கவில்லை.

இலங்கைத் தீவை இந்தியா ஆக்கிரமித்துள்ளது என்றும், இறைமையை விழுங்கிவிட்டது என்றும் போர்முரசு கொட்டி வந்த ஜே.வி.பி இயக்கம், இந்தியாவுக்கு எதிராக ஒரு கல்லை வீசவும் துணியவில்லை. சிங்கள இராணுவமும் பெட்டிப் பாம்பு போல அடங்கிக் கிடந்தது. தென்னிலங்கைத் தேச பக்தர்கள் இந்திய இராணுவப் பூதத்திற்கு நடுங்கி நிற்க, பிரபாகரன் மட்டும் துணிந்து நின்று பாரதப் போரை நடத்தியது பிரேமதாசாவை வியக்க வைத்தது. இதனால் உண்மையான தேசாபிமானி யார் என்பதை அவர் உணரத் தவறவில்லை. அது மட்டுமன்றி ஆணவம் பிடித்த பிராமணிய சாம்ராஜ்யத்தை எதிர்த்து நிற்பதனால் அவருக்கு ஒரு பலமான, திடமான ஊன்றுகோல் தேவைப்பட்டது. எனவே பிரபாகரனுடன் சமரசம் செய்யப் பிரேமதாசா விரும்பினார்.

இந்திய அரக்கர் படையைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்டியடிக்க விரும்பிய புலிகளுக்கு, நல்லெண்ணக் கைநீட்டல் நழுவிட முடியாத நல்லதொரு சந்தர்ப்பமாக அமைந்தது. இலங்கைத் தீவின் இரு வரலாற்று எதிரிகளும் கொழும்பில் கைகோர்த்துக் கொண்டிருந்தபோது, இந்து சமுத்திரத் தென்பிராந்தியத்தில் ரஜீவ் கட்டிய இராஜதந்திரக் கோட்டை தளர்ந்து விழுந்தது. வன்னிக் காட்டில் கெரில்லாப் போரையும், கொழும்பு நகரில் இராஜதந்திரப் போரையும் ஒரே சமயத்தில் புலிகள் முடுக்கிவிட்டதால் இந்தியா செய்வதறியாது திணறியது. எதற்காக இங்கே வந்தோம் என்பது புரியாது இந்திய அமைதிப் படைத் தளபதிகள் அங்கலாய்த்தனர். புளியங்கொப்பைப் பிடித்த துணிவில் பிரேமதாசா இந்திய வல்லாதிக்கத்திற்குச் சவால்விடத் தொடங்கினார். இந்திய துருப்புக்கள் வெளியேற வேண்டுமென காலக்கெடுக்களை விதித்தார். தனது படைகளை வெளியேற்றிக் கொள்வதைத் தவிர இந்தியாவுக்கு வேறு வழியிருக்கவில்லை.

ஆரம்பத்தில் கொழும்புப் பேச்சுக்கள் அமைதியான சுமூகச் சூழலில், அந்தரங்கமாக நடந்தன. இந்திய இராணுவத்தை வெளியேற்ற வேண்டும் என்ற பொதுநோக்கில் ஈர்க்கப்பட்டதால், இரு தரப்பினரும் முரண்பாட்டுக் களத்தில் பிரவேசிக்க விரும்பவில்லை. தமிழீழத்தில் இந்திய இராணுவம் புரிந்து கொண்ட அட்டூழியங்களைக் கொழும்புத் தகவல் தொடர்பு சாதனங்கள் வாயிலாக உலகிற்கு அம்பலப்படுத்துவதில் புலிகள் அக்கறை காட்டினர். இதற்கு வலுவூட்டும் வகையில் அரசு-புலிகள் கூட்டறிக்கைகளும் வெளிவந்தன. பிரேமதாசா புலிகளைச் சந்திக்கும் பொழுதெல்லாம் தனது கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தைத் திருப்பித் திருப்பி வாசித்துக் காட்டினாரே தவி, தமிழர் பிரச்சினையின் அடிப்படைகள் எதையும் தொடவில்லை. இரு தரப்பினரும் மிகவும் சாதுரியமாகத் தத்தமது நலன்களைப் பேணுவதில் கவனத்தைச் செலுத்தினர்.

ஒருபுறம் புலிகளுடன் சமாதானப் பேச்சுக்களை நடத்திக் கொண்டு, மறுபுறம் ஜே.வி.பி இயக்கத்திற்கு எதிராக ஈவிரக்கமற்ற யுத்தமொன்றை ஏவிவிட்டிருந்தார் பிரேமதாசா. ஆயுதப் போர்க்கலையில் அனுபவமற்ற, வலதுகுறைந்த இடதுசாரியான ரோகண விஜயவீரா, தவறான போர்முறைத் திட்டங்களைப் பகிரங்கமாக அறிவித்து வந்தார். சிங்களப் பொலிஸ்-இராணுவக் குடும்பங்கள் மீது அவர் பிரகடனம் செய்த விபரீதப் போர் அவரது வீழ்ச்சிக்கு வழிகோலியது. விஜயவீரா உயிரோடு பிடிபட்ட போது அரசிடமிருந்து கருணை பெறும் நோக்கில் தனது தோழர்களின் இருப்பிடங்களை எல்லாம் காட்டிக் கொடுத்தார். இறுதியில் பிரேமதாசாவை நேரில் சந்தித்து மன்னிப்புக் கேட்க விரும்பினார். ஆனால் பிரேமதாசா இவரைச் சந்திக்கவுமில்லை, மன்னிப்பு வழங்கவுமில்லை. இரவோடிரவாக நடந்த இந்த மர்மக் கதை வெளியுலகிற்கு இருட்டடிப்புச் செய்யப்பட்டது.

விஜயவீராவின் அகால மரணத்தோடு அவரது இயக்கமும், இயக்க ஆதரவாளர்களும், ஆதரவாளர்களின் ஆதரவாளர்களும் ஈவிரக்கமின்றி அழித்தொழிக்கப்பட்டனர். புனித பௌத்த பூமியில் இரத்தப் பிரளயம் எடுத்தது. இந்தக் கொடுமைகளையெல்லாம் கண்டும் கணாதது போல போதிசத்துவர் புலிகளுக்குத் தர்மம் போதித்தார். சாந்தி, சமாதானம், சத்தியம் பற்றிப் பேசினார். இன ஐக்கிய பற்றிக் கூறினார்.

இந்தியப் படைகள் வெளியேறியது. தென்னிலங்கையில் அமைதி தோன்றியது. பிரேமதாசாவின் சகுனங்கள் நீங்கியது. இனித் தமிழர் பிரச்சினைதான் எஞ்சி நின்றது.

தமிழர் பிரச்சினையை எவ்வாறு அணுகுவது? புலிகளிடம் எது பற்றிப் பேசுவது? புலிகள் இயக்கத்தை எப்படிக் கையாள்வது? பிரேமதாசாவுக்கு ஒரு புதிய சவால் எழுந்தது.

பாகம் 3

தமிழீழ மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கு எந்தவொரு உருப்படியான தீர்வுத் திட்டத்தையும் பிரேமதாசா முன்வைக்கப் போவதில்லை என்பதைப் புலிகள் நன்கறிவார்கள். கொழும்பு மாளிகாவத்தை வாசஸ்தலத்தில் இரவிரவாகப் பிரேமதாசா நடத்திய அரசியல் பிரித் ஓதுதல்களிலிருந்து இதை அவர்கள் உணர்ந்து கொண்டார்கள். ஒற்றையாட்சியின் மகத்துவம் பற்றியும், விட்டுக்கொடுப்பின் முக்கியத்துவம் பற்றியும், ஆயுத வன்முறையின் அர்த்தவீனம் பற்றியும், அமைதியான மென்முறையின் ஆத்மீகச் சிறப்புப் பற்றியும் தொடர்ந்து நடந்த போதனைகள் புலிகளின் சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தியது. பிரபாகரன் ஒரு தேசிய வீரர். அவர் இலங்கை இராணுவத்தின் பிரதம தளபதியாக பதவியில் அமர்த்தப்பட வேண்டியவர். புலிப்படை சிங்கள இராணுவத்துடன் சங்கமமானால் இந்திய வல்லாதிக்கப் பூதம் இலங்கையை அச்சுறுத்த முடியாது என்று பிரேமதாசா பொறிகள் வைத்துப் பேசியதன் அர்த்தத்தையும் புலிகள் உணராமல் இல்லை.

கலந்தாலோசனை, கருத்தொற்றுமை எனப்படும் போதிசத்துவரின் தத்துவப் பாதையால் சென்று, விட்டுக் கொடுப்பு எனும் சமாதானப் பொறியில் விழுந்துவிடப் புலிகள் தயாராக இல்லை. பிரேமதாசா தத்துவம் பேசிக் காலத்தைக் கடத்தி வருகிறார் என்பதையும் அவர்கள் உணர்ந்து கொள்ளத் தவறவில்லை. தமிழரின் அடிப்படைப் பிரச்சினைகள் பற்றிப் பிரேமதாசாவுடன் பேச்சுக்களை நடத்தி ஒரு நியாயமான, நிரந்தரத் தீர்வைக் காண முடியாது என்பதை நன்கு புரிந்துகொண்ட புலிகள் ஒரு இடைக்காலத் தீர்வுக்காவது முயற்சி செய்யலாமென்ற முடிவுக்கு வந்தனர். இந்த நோக்கில் இரண்டு கோரிக்கைகளைப் பிரேமதாசாவிடம் முன்வைத்தனர். அரசியல் யாப்பின் ஆறாவது திருத்தச் சட்டத்தை நீக்கி, மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு பிரேமதாசாவைக் கேட்டுக் கொண்டனர். தற்காலிகமான முறையில் வடக்குக் கிழக்கு மாகாண ஆட்சிப் பொறுப்பை ஏற்று, புனர்வாழ்வு, புனர்நிர்மாண வேலைகளில் இறங்கி மக்களின் மேம்பாட்டிற்கு உருப்படியான சில கருமங்களைச் செய்யலாமெனப் புலிகள் எண்ணினர்.

புலிகளின் யோசனையைப் பிரேமதாசாவால் நிராகரிக்க முடியவில்லை. புலிகளும் சாதுரியமாகக் காய்களை நகர்த்துகிறார்கள் என்பதை உணர்ந்து கொண்ட அவர் இந்தச் சிக்கலில் இருந்து நழுவிவிட வேறு உபாயங்களைப் பற்றிச் சிந்தித்தார். ஆறாவது திருத்தச் சட்டத்தை நீக்க யாப்பு திருத்தப்பட வேண்டும். அதற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகள் தேவை. இது கலந்தாலோசனை, கருத்தொற்றுமைப்பாட்டின் அடிப்படையில் சகல கட்சிகளினதும் அனுசரணையுடன் மேற்கொள்ளப்பட வேண்டிய விவகாரம் என்ற ரீதியில் புலிகளுக்கு நழுவல் கதை சொல்லிவந்த பிரேமதாசா, சர்வகட்சி மாநாடு ஒன்றைக் கூட்டினார்.

கட்சி என்ற பெயரில் அரசியல் விபச்சாரம் செய்துவந்த தனிமனிதத் தலைவர்கள், குழுக்கள் எல்லோருக்கும் சர்வகட்சி மாநாடு என்ற மேடை அமைத்துக் கொடுக்கப்பட்டது. அரசியல் அஞ்ஞாதவாசத்தில் ஒதுக்கப்பட்டிருந்த அநாமதேயக் குழுக்களும் மக்கள் பிரதிநிதிகளாக இம்மாநாட்டில் கலந்து கொண்டன. கலந்தாலோசனை என்ற போர்வையின் கீழ் ஒன்றுக்கொன்று முரண்பட்ட, பலதரப்பட்ட கருத்துக்களையுடைய ஒரு ‘சாம்பார்’ மாநாட்டில் கருத்தொற்றுமை ஒருபொழுதும் ஏற்படாது என்பதைப் போதிசத்துவர் நன்று அறிவார். தமிழர் பிரச்சினையை முடிவில்லாமல் இழுப்பதற்கும், புலிகளின் தனித்துவத்தையும், முக்கியத்துவத்தையும் குறைத்து விடுவதற்கும் இது ஒரு சிறந்த ‘சனநாயக வழி’ எனப் பிரேமதாசா எண்ணினார். இந்த நோக்கில் சர்வகட்சி மாநாட்டிற்கு முதல் உரிமை வழங்கிய பிரேமதாசா, புலிகளையும் இம்மாநாட்டில் பங்குபற்றுமாறு அழுத்தம் போட்டார். இந்தப் பொறிக்கிடங்கில் விழுந்துவிடப் புலிகள் விரும்பவில்லை. அத்துடன் இதனைப் பிரச்சினைக்குள்ளாக்கிப் பேச்சுக்களை முறித்துக் கொள்ளவும் விரும்பவில்லை. இதனால் சர்வகட்சி மாநாட்டில் அவதானிகளாக மட்டும் பங்குகொள்ளப் புலிகள் இணங்கினர். அவதானிகள் என்ற அந்தஸ்துடன் புலிகள் வெறும் பார்வையாளர்களாக ஒதுங்கிக் கொண்டது பிரேமதாசாவுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கவில்லை. அத்துடன் நேரடிப் பேச்சுக்களை நடத்தித் தமது கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு நெருக்குதல் போட்டு வந்ததும் பிரேமதாசாவுக்குத் தலையிடியைக் கொடுத்தது.

மெல்ல மெல்லப் புலிகளுக்கும், பிரேமதாசாவுக்கு மத்தியில் முரண்பாடு தலைதூக்கத் தொடங்கியது. அரசியல் பிரச்சினைகளைக் கைவிட்டு ஆயுதக் களைவுப் பிரச்சினைக்குப் பிரேமதாசா முதலிடம் கொடுத்த போது முரண்பாடு மேலும் இறுகியது. புலிகளைப் புண்படுத்திவிடக் கூடிய ஆயுதக் களைவுப் பிரச்சினையைப் பிரேமதாசா நேரடியாகப் புலிகளுடன் பேசவில்லை. தனது ஊதுகுழல்களாக அமைச்சர் ஹமீத்தையும், ரஞ்சனையும் பாவித்தார்.

அமைச்சர் ஹமீத் மிகவும் மென்மையாக, பக்குவமாக, நிதானமாக, இராஜதந்திர மதிநுட்பத்துடன் சிக்கலான பிரச்சினைகளையும் இலகுவாகக் கையாளும் அரசியல் வித்தகர். இதற்கு முற்றிலும் மாறான ஆளுமை படைத்தவர் அமைச்சர் ரஞ்சன். பண்பான கடிவாளங்கள் எதுவுமின்றிக் காத்திரமாகப் பேசுபவர். மூர்க்கமாக மோதுபவர். எண்ணத்தைச் சொல்லாடைகளால் அலங்கரிக்காமல் நிர்வாணமாக வெளிக்காட்டுபவர். இந்த இரண்டு எதிரும் புதிருமான நாக்குகளால் பிரேமதாசா பேசினார்.

அமைச்சர் ஹமீத் மிகவும் சாதுரியமாக ஆயுதப் பிரச்சினையைத் தொட்டார். ஆயுதப் போராளிகளின் எதிர்காலம் பற்றித் தொடங்கி, ஆயுதபாணிகளாகப் புலிகள் நடமாடினால் நிராயுதபாணிகளான ஏனைய குழுக்கள் சுதந்திரமாகத் தேர்தலில் பங்குகொள்ள முடியாது எனச் சுட்டிக் காட்டி, சிறீலங்கா இராணுவத்தில் புலிப்படை இணைந்து கொள்ள வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார். மாகாண சபைத் தேர்தல் நடத்துவதென்றால் விடுதலைப் புலிகள் இயக்கம் ஆயுதங்களை ஒப்படைத்து, இராணுவ அமைப்பைக் கலைத்துவிட வேண்டுமென்பதைச் சுற்றிவளைத்துச் சொற்சிலம்பம் ஆடிப் பக்குவமாகப் போட்டார் ஹமீத். பிரேமதாசா என்ற அரசனை நம்பி, ஆயுதம் என்ற கணவனைக் கைவிடுவதால் ஏற்படக் கூடிய ஆபத்துக்களைப் புலிகள் விளக்கினர். கல்லில் நார் உரித்தாலும் புலிகளிடமிருந்து ஆயுதங்களைக் களைவது சாத்தியமில்லை என்பதை அமைச்சர் ஹமீத் நன்கு உணர்ந்து கொண்டார்.

அமைச்சர் ரஞ்சனின் அணுகுமுறை வித்தியாசமானது. ஆயுதப் பிரச்சினை பற்றி அவர் புலிகளுடன் நேரடியாகப் பேசவில்லை. பத்திரிகையாளர் மாநாடுகளில் புலிகள் இயக்கத்தைப் பகிரங்கமாக மிரட்டினார். புலிகள் ஆயுதங்களைக் கையளிக்க வேண்டும், அல்லாது போனால் ஆயுதங்களைப் பறிக்க வேண்டிய நிர்ப்பந்தம் எழும் என்ற ரீதியில் பேசினார். ரஞ்சனின் இந்த ஆத்திரமூட்டும் அறிக்கைகள் பற்றிப் புலிகள் பிரேமதாசாவிடம் முறையிட்டனர். ‘‘அவர் கரடுமுரடாகத்தான் பேசுவார். ஆனால் மென்மையான உள்ளம் படைத்தவர். அவர் கூறுவதைப் பற்றி வீணாக அலட்டிக் கொள்ள வேண்டாம்’’ என்று பிரேமதாசா புலிகளைச் சாந்தப்படுத்தினார். யாருடைய கருத்துக்கள், யாரால், எந்த நாக்கினால், எதற்காகச் சொல்லப்படுகிறது என்பதைப் புலிகள் புரிந்து கொண்டதால் அவர்கள் இதுபற்றிப் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.

இது இவ்வாறிருக்க கொழும்பு அரசியல் அரங்கில் இன்னொரு புதிய திருப்பம் ஏற்பட்டது. இத்தனை காலமும் இந்திய அரசின் கைப்பொம்மைகளாகச் செயற்பட்டு, வடகிழக்கு மாகாண ஆட்சிபீடம் ஏறி, திருமலை நகரில் அரை மைல் விஸ்தீரணமுடைய முள்ளுக்கம்பி வேலிக்குள் ஆட்சியை நடத்தி விரக்தி கண்ட ஈ.பி.ஆர்.எல்.எவ். இயக்கம் பிரேமதாசாவின் காலடியில் விழுந்தது. ஈ.பி. தலைவர்களுடன் பிரேமதாசா இரகசியப் பேச்சுக்களை நடத்தியது புலிகளுக்குச் சினத்தை ஊட்டியது.

சர்வகட்சி மாநாட்டில் அவதானியர் என்ற அந்தஸ்தில் இருந்து விடுதலைப் புலிகள் விலகிக் கொண்டனர். புலிகளுக்கு எதிரான தமிழ் விரோதக் குழுக்கள் பிரேமதாசாவின் மாய வலைக்குள் சிக்குப்பட்டன.

பாகம் 4

கருத்தொற்றுமை என்ற நடைமுறைக்கு ஒவ்வாத அரசியல் தத்துவத்தின் கீழ் அனைத்துக் கட்சிகளுக்கும் மேடை அமைத்துக் கொடுத்து, புலிகளை அந்நியமாக்கிவிட பிரேமதாசா மேற்கொண்ட சூத்திரதார முயற்சிகள் கொழும்புப் பேச்சுக்களை முடக்கியது. ஒரு குறைந்தபட்ச இடைக்கால தீர்வைத்தானும் வழங்குவதற்குப் பிரேமதாசா தயாரில்லை என்பதைப் புலிகள் உணர்ந்து கொண்டனர்.

இது ஒருபுறமிருக்க வடகிழக்கில் சிங்கள ஆயுதப் படைகளின் அடாவடித்தனங்களும் அதிகரித்தன. தென்னிலங்கையில் விஜயவீராவின் செம்படைகளை வேரோடு வெட்டி வீழ்த்திய இறுமாப்பில் சிங்கள இராணுவம் புலிகளுடன் சீண்டத் தொடங்கியது. பனிப்போர் தீவிரமடைந்து நிஜப்போர் வெடிக்கும் ஆபத்து எழுந்தது. கிழக்கிலங்கையில் நிலைமை மோசமடைந்தது. மட்டக்களப்பு மாவட்டத்தில் சிங்கள காவல்துறையின் எண்ணிக்கையைக் குறைக்குமாறு புலிகள் கேட்டுக் கொண்டனர். ஆனால் அதற்கு மாறாகச் சிங்களப் பொலிஸாரின் எண்ணிக்கை கூட்டப்பட்டது. சிங்கள காவல்துறையினர் தமிழர் மீது தாக்குதல்களை நடத்த, முஸ்லிம் தீவிரவாத ஜிகாத் இயக்கம் புலிகளின் ஆதரவாளர்களைக் கொன்று குவிக்க, இராணுவம் புலிகளுடன் மோத, வன்முறை கட்டுக்கடங்காமல் வெடித்துப் பரவிப் போர்வடிவம் எடுத்தது. இராணுவம் ஒத்துழைக்கத் தவறியதால் போரை நிறுத்த எடுக்கப்பட்ட முயற்சிகள் தோல்விகண்டன.

இராணுவம் யுத்தத்தை விரும்பியது. இந்தியத் தலையீட்டினால் ஏற்பட்ட இடைவெளியில் ஆட்பலம், ஆயுத பலத்தால் கொழுத்துப் பருத்துத் திமிர்பிடித்த சிங்கள இராணுவம் முகாம்களுக்குள் முடங்கிக் கிடக்க விரும்பவில்லை. புலிப்படை பற்றியும் தவறாக மதிப்பிட்டது. இரண்டரை ஆண்டுகளாக உலகின் மிகப்பெரிய இராணுவத்துடன் கொடும் யுத்தம் புரிந்ததால் புலிகள் பலவீனமடைந்திருக்கலாமெனக் கணிப்பிட்டது. விஜயவீராவின் பகுதிநேர புரட்சிவாதிகளுடன் வீரவேங்கைகளை ஒப்பிட்டது. இந்தப் பிழையான கணிப்பீடுகளுடன் இராணுவம் போரில் குதித்தது.

பிரேமதாசா புலிகளுக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தினார். பேச்சுவார்த்தைகளை முறித்துக் கொண்டதாகப் பழிசுமத்தினார். முதுகில் குத்திவிட்டதாக முறைப்பட்டுக் கொண்டார். பிரேமதாசாவின் வசைபாடலுக்குப் பக்கவாத்தியம் வாசிப்பது போல தென்னிலங்கைப் பத்திரிகைகளும் புலிகளைச் சாடின. தூங்கிக் கிடந்த சிங்கள தேசத்தைப் பேரினவாதப் போர்ப்பறை தட்டியெழுப்பியது. புலிகளுடன் எழுந்த முரண்பாடு தமிழினத்திற்கெதிரான யுத்தமாக விஸ்வரூபம் எடுத்தது.

தொலைபேசித் தொடர்புகள் அறுக்கப்பட்டு வடக்கு துண்டிக்கப்பட்டதால் புலிகளின் ஆட்சேபக் குரல் தென்னிலங்கைக்குக் கேட்கவில்லை. போதாக்குறைக்கு இந்தியாவும் புலிகளின் தொலைத்தொடர்பு ‘செட்டு’க்களை மௌனமாக்கியது. இதனால் வெளியுலகிற்கு அரசின் அபசுரங்கள் மட்டும் கேட்டது. பிரேமதாசாவுக்கு பிரசாரம் கைவந்த கலை. கருத்து உற்பத்திச் சாதனங்களைக் கையாள்வதில் அவர் ஒரு வித்தகர். யாருக்கு, எந்த நேரத்தில், எப்படி மகுடி ஊத வேண்டும் என்பது அவருக்கு நன்கு தெரியும். அத்துடன் சிங்கள சமூகப் பிரக்ஞையின் அடிமனக் கோலங்களையும் அவர் அறிவார்.

போதிசத்துவர் போதித்தார். நன்மை, தீமை என்ற இரு சக்திகளின் போராட்டமாகவே இந்த யுத்தம் நடக்கிறது. நன்மையின் திருவடிவமாக இராணுவமும், தீமையின் பேயுருவமாகப் புலிகளும் இந்த யுத்தத்தில் சமரிடுகின்றனர். இது ஒரு தர்ம யுத்தம். அதர்மத்திற்கு எதிரான இந்த யுத்தத்தில் தர்மத்தின் காவலனாக அரசு செயற்படும். இப்படியான ஒரு தத்துவ விளக்கம் சிங்கள மக்களுக்குக் கொடுக்கப்பட்டது. இந்தத் தத்துவார்த்தப் பார்வையில் தீமையின் குறியீடு ஒருபுறம் புலிகளையும், மறுபுறம் தமிழர்களையும் குறித்து நின்றது. சிங்கள இனத்தின் இரண்டாயிரம் ஆண்டுகால ‘தர்ம யுத்தத்தின்’ ஒரு தொடர்ச்சியான வெளிப்பாடாகவும் இந்தப் போர் சித்தரிக்கப்பட்டது.

பிரேமதாசா ஒரு யுத்தத்தை விரும்பினார். தமிழ்த் தேசத்திலும், சிங்கள தேசத்திலும் பெருவெள்ளம் போல பிரவாகம் எடுத்த பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க முடியாது திணறிய அவருக்கு ஒரு யுத்தம் தேவைப்பட்டது. தென்னிலங்கையில் ஓடிய இரத்த ஆறு காய்ந்துவிடவில்லை. ஜே.வி.பியின் கல்லறைகளுக்குள் புரட்சியின் துடிப்புகள் அடங்கிவிடவில்லை. மண்டையோடுகளைத் தேடி மக்கள் ஆவேசம் கொண்டு அலைந்தனர். நீறுபூத்த நெருப்பாகத் தென்னிலங்கை வெந்தது. வடக்கே தமிழர் தன்னாட்சி கோரி ஆயுதமேந்தி நின்றனர். இரு முனைகளிலும் எழுந்த நெருக்குதல்களைச் சமாளிப்பதற்கு யுத்தம் தேவைப்பட்டது. சிங்கள – தமிழ் தேசங்கள் மத்தியிலான ஒரு யுத்தம் அவசியமாகியது. சிங்கள மக்களின் ஆவேசத்தைத் திசைதிருப்பவும், தமிழரின் சுதந்திர எழுச்சியை நசுக்கவும் யுத்தம் ஒரு சிறந்த மார்க்கமாக அமைந்தது. சிங்கள தேச பக்தர் என்ற முகமூடியை அணிந்து கொண்டு தர்மத்தின் தளபதியாக யுத்தத்தைத் தொடர்ந்தார் பிரேமதாசா.

விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியில் வென்றுவிடுவது சாத்தியமில்லை என்ற எதார்த்த உண்மையைப் பிரேமதாசா நன்கறிவார். இந்திய அனுபவம் இந்தப் பாடத்தை அவருக்குப் புகட்டியிருக்கும். இந்திய இராணுவ பூதம் சாதிக்க முடியாததொன்றைச் சிங்கள இராணுவம் சாதித்து விடுமென அவர் எண்ணிவிடவில்லை. புலிப்படையின் இராணுவ சாணக்கியம் பற்றியும் அவருக்கு நன்கு தெரியும். பிரபாகரன் மீது அவருக்கு ஒரு அலாதியான மதிப்பு. அதேவேளை அச்சமும் இருக்கத்தான் செய்தது. சிங்கள இராணுவம் ஒரு கட்டுப்பாடான அமைப்பாக இயங்கவில்லை என்பதைப் புலிகளுடன் நடத்திய அந்தரங்கப் பேச்சுக்களின் போது பிரேமதாசா ஒப்புக் கொண்டிருக்கிறார். தலைசிறந்த கட்டமைப்பும், கட்டுக்கோப்புமுடைய ஒரு விடுதலை இராணுவத்தைப் பிரபாகரன் எப்படி உருவாக்கினார்? எப்படி அதனைத் தலைமை தாங்கி வழிநடத்துகிறார்? என்பது பற்றியெல்லாம் பிரேமதாசா வியப்புடன் விசாரிப்பார்.

விடுதலைப் புலிகளின் தலைமை, அதன் இராணுவக் கட்டமைப்பு, புலிகளின் போராட்டத் திறன், இலட்சியப் பற்று, இவை பற்றியெல்லாம் பிரேமதாசா நன்கறிவார். இதனால் ஒரு யுத்தத்தில் புலிகளை அழிப்பதோ, அல்லது புலிகளின் தலைமையைப் பணிய வைப்பதோ முடியாத காரியமென்பது அவருக்கு நன்கு தெரியும். ஆனால் அவருக்கு யுத்தம் தேவைப்பட்டது. தமிழரின் இனப்பிரச்சினையைத் தட்டிக் கழிக்கவும், தனது பதவியைக் கெட்டியாகப் பற்றிக் கொள்ளவும், தென்னிலங்கையின் புரட்சிகர எழுச்சிகளைத் திசைதிருப்பவும் பிரேமதாசாவுக்கு யுத்தம் ஒரு நிர்ப்பந்தமாக, ஒரு மாற்று வழியாக, ஒரு தேவையாக எழுந்தது.

பாகம் 5

சிறீலங்காவின் அரசியல் யாப்பின் பிரகாரம் பிரேமதாசாவே சிங்கள ஆயுதப் படைகளின் பிரதம தளகர்த்தா ஆவார். எனினும் படையினரை அவர் முழுமையாக நம்பிவிடவில்லை. அவர் இயல்பாகவே ஒரு சந்தேகப் பிராணி. நிலத்தைப் பார்த்து நிதானமாக நடப்பார். விலங்குகளும், விச ஜந்துக்களும் வாழும் அரசியல் காட்டினுள் அவதானமாக அடியெடுத்து வைக்க வேண்டும் என்பது அவருக்குத் தெரியும். நீண்ட காலமாகவே கண்டிய ஆளும் வர்க்கத்தின் கைப்பொம்மையாக இராணுவம் செயற்பட்டு வந்திருக்கிறது. வெளிநாட்டு, உள்நாட்டு ஊடுருவல்களின் தளமாகத் திகழ்ந்த இராணுவ அமைப்பிலிருந்து ஆபத்துக்கள் எழலாமெனப் பிரேமதாசா அஞ்சினார். தனது அரசியல் எதிரிகளான லலித், காமினி போன்றோரின் ஊடுருவல் இராணுவத்திற்குள் இருந்ததை அவர் அறிவார். சுதந்திரக் கட்சியின் ஆதிக்கமும் இராணுவத்தின் அடிமட்டத்திலிருந்தது. விஜயவீராவின் ஆட்களும் முகம்தெரியாத மனிதர்களாக இயங்கி வந்தனர். அத்துடன் இந்திய உளவுப்படையான ‘றோ’வினது அரூப கரமும் இராணுவத்திற்குள் ஊடுருவி இருந்தது.

ஆரம்ப காலத்தில் ஜெனரல் ஆட்டிகலையும், ரஞ்சன் விஜயவர்த்தனாவும் பிரேமதாசாவின் நம்பிக்கைக்குரிய பிரதிநிதிகளாக இராணுவத்தின் கடிவாளத்தைக் கெட்டியாகப் பிடித்திருந்தனர். அவர்களுக்குப் பின்னர் ஜெனரல் ரணதுங்காவிடமும், ஹமில்டன் வணசிங்காவிடமும் இந்தப் பொறுப்புக்கள் ஒப்படைக்கப்பட்டன. ஜெனரல் ரணதுங்கா பிரேமதாசாவின் மனைவியின் நெருங்கிய உறவினர். ஹமில்டன் பிரேமதாசாவின் விசுவாசி. இவர்கள் இருவர் மூலம் இராணுவ இயந்திரத்தை இயக்கி வந்த பிரேமதாசா தனது சொந்தப் பாதுகாப்புப் போன்ற அந்தரங்க விவாகரங்களில் இராணுவத்தை நெருங்க விடுவதில்லை. ஜனாதிபதி பதவியில் ஏறிய காலத்தில் இருந்து இன்று வரை விசேட பொலிஸ் அதிரடிப் படையினரே பிரேமதாசாவின் மெய்ப்பாதுகாவலர்களாக செயற்பட்டு வருகின்றனர்.

லலித், காமினி கோஸ்டியினர் இந்திய உளவுப் படையுடனும், இராணுவ அதிகாரிகள் சிலருடன் சேர்ந்து தமக்கெதிராகச் சதிசெய்து வந்ததைப் பிரேமதாசா நீண்ட காலத்திற்கு முன்னரே மோப்பம் பிடித்தார். இதனால் காமினியைப் பதவியிலிருந்து ஒதுக்கி வைத்த பிரேமதாசா, லலித் மீது விழிப்பாக இருந்தார். ஆனால் சதிகாரர்கள் நல்லதொரு சந்தர்ப்பத்திற்காகக் காத்திருந்தனர்.

கொழும்புப் பேச்சுவார்த்தைக் காலத்தில் பிரேமதாசா புலிகளுக்கு ஆயுதம் வழங்கினார் என்ற தகவல் லலித்திற்கு எட்டியது. இந்த விவகாரத்தைப் பூதாகரமாக்கிப் பிரேமதாசாவுக்குக் குழிபறித்து விடலாமென லலித் கோஸ்டி திட்டம் தீட்டியது. கொழும்பில் உள்ள இந்தியத் தூதுவரின் வாசஸ்தலத்தில் சதி ஆலோசனைகள் நடைபெற்றன. தேசத்துரோகக் குற்றப்பத்திரிகை சபாநாயகரிடம் தாக்கல் செய்யப்பட்டது. கொழும்பில் ஒரு அரசியல் சூறாவளி எழுந்து பிரேமதாசாவின் ஆட்சிப் படகை ஆட்டம் காணச் செய்தது. புற்றிலிருந்த பாம்புகள் எல்லாம் ஒரே நேரத்தில் படமெடுத்து ஆடியதால் பிரேமதாசா அதிர்ந்து போனார். என்றாலும் மிகவும் சாணக்கியத்துடன் அவர் காய்களை நகர்த்தினார்.

புலிகளுக்கு ஆயுதம் வழங்கியதைப் பிரேமதாசா மறுக்கவில்லை. தமிழ்த் தேசிய இராணுவத்துடன் சமர் புரிவதற்குப் புலிகளுடன் ஆயுதங்களைப் பகிர்ந்து கொண்டதாக அறிக்கை வெளியிட்டார். இராணுவத் தலைமையும் பிரேமதாசாவின் கூற்றை மறுக்கவில்லை. ஏதோ தமிழனைத் தமிழன் அழிக்க ஆயுதங்கள் கைமாறப்பட்டதாக நினைத்துச் சிங்கள வெகுசனம் திருப்தி அடைந்தது. அமைதிப் படையை அழிக்கவே ஆயுதம் வழங்கப்பட்டது என இந்தியத் தரப்பிலிருந்து எழுந்த ஆட்சேபக் குரலும் பிசுபிசுத்துப் போயிற்று.

இந்த ஆயுத விவகாரச் சர்ச்சைக்குள் தலையிட்டுக் குட்டையைக் குழப்பப் புலிகள் விரும்பவில்லை. எப்பொழுது, எதற்காக, எவ்விதம், எந்தளவு ஆயுதங்கள் பிரேமதாசாவிடமிருந்து அள்ளப்பட்டது என்பது பற்றிப் புலிகள் எதுவுமே கூறவில்லை. பெருந்தன்மையுடன் மௌனத்தைக் கடைப்பிடித்தார்கள் போலும். எனவே எல்லோரையும் மிஞ்சிய சாணக்கியர்கள் என்பதைப் புலிகள் நிரூபித்துவிடத் தவறவில்லை.

பிரேமதாசாவின் ஆயுதங்களைக் கொண்டோ அல்லது சிங்கள இராணுவத்தின் உதவியுடனோ தமிழ்த் தேசிய இராணுவத்தை நிராயுதபாணிகளாக்கவில்லை என விளக்கிப் புலிகளின் சர்வதேசப் பிரிவு வெளியிட்ட அறிக்கை கொழும்பில் இருட்டடிப்புச் செய்யப்பட்டது.

இது இவ்வாறிருக்க பிரேமதாசாவுக்குச் சார்பாக சபாநாயகர் திடீரெனக் குத்துக்கரணம் அடித்ததால் நம்பிக்கையில்லாப் பிரேரணை செத்துப் போனது. அரசியல் சூறாவளியை எழுப்பியவர்கள் அந்தப் புயற்காற்றிலேயே அடித்துச் செல்லப்பட்டனர்.

தென்னிலங்கையில் அரசியல் கொந்தளிப்புத் தணிய வடகிழக்கில் யுத்தம் உக்கிரமடைந்தது.

சிங்கள இராணுவம் வெற்றிப் பாதையில் வீறுநடைபோடுவதாக எண்ணியதால் சமாதானத்தின் கதவுகளைத் திறந்துவிடப் பிரேமதாசா விரும்பவில்லை. தொண்டமான் விடுத்த சமாதானப் புறாவையும் சிங்களப் பேரினவாதக் கழுகு இடைமறித்து வீழ்த்தியது.

நீண்ட காலப் போரினால் புலிகள் இயக்கம் பலவீனமடைந்திருக்கிறது என்ற தப்பான மதிப்பீடும், இந்திய – தமிழ்நாடு அரசுகளின் அடக்குமுறை நடவடிக்கைகளால் புலிகளின் பின்தளமும், கடற்பாதையும் மூடப்பட்டு விட்டது என்ற நம்பிக்கையும் தமிழீழ மக்கள் மத்தியில் புலிகள் இயக்கம் ஆதரவை இழந்து விட்டது என்ற பொய்யான கணிப்பும் இராணுவவாதிகளை ஊக்குவித்து வருகிறது.

இரண்டாவது தடவையும் ஜனாதிபதியாகச் சிம்மாசனம் ஏற வேண்டும் என்பது பிரேமதாசாவின் அந்தரங்க ஆசை. தமிழருக்கு உருப்படியான சுயாட்சி அதிகாரங்கள் வழங்கி இனப்பிரச்சினையைத் தீர்க்க முயற்சித்தால் சிங்கள-பௌத்த பேரினவாத சக்திகளின் பகைமையைத் தேடிக் கொள்ள நேரிடும். இதனால் அடுத்த தடவையாக ஆட்சிபீடம் ஏறும் அரிய சந்தர்ப்பங்கள் கெட்டுவிடும். ஆகவே போரைத் தொடர்ந்து பிரச்சினையை இழுத்தடிப்பதே சாலச் சிறந்த வழியெனப் பிரேமதாசா எண்ணுகிறார். இரண்டரை ஆண்டுகளாக எதுவித கருத்தொற்றுமையும் இல்லாமல் இழுபட்டு வந்த அனைத்துக் கட்சி மாநாட்டிலிருந்து அதே கட்டமைப்புடைய இன்னொரு கூட்டுக் குழுவிடம் (பாராளுமன்றத் தெரிவுக் குழுவிடம்) தமிழர் பிரச்சினையை ஒப்படைத்துவிட்டதால் இன்னும் இரண்டரை வருடங்களுக்கு இவ்விவகாரத்தை இழுத்தடிக்கலாம் என்பது பிரேமதாசாவின் திட்டம்.

தொண்டமானின் சமாதான முயற்சிக்கு பிரேமதாசாவின் ஆசீர்வாதம் இருப்பதாகப் பலர் எண்ணியதுண்டு. ஆனால் உண்மையில் தொண்டமானின் தீர்வுத் திட்டமும், அவர் யாழ்ப்பாணம் வந்து புலிகளுடன் கலந்தாலோசிக்க மேற்கொண்ட முயற்சிகளும் பிரேமதாசாவுக்குப் பெரும் சங்கடத்தையே ஏற்படுத்தியது. புலிகளுடன் போரைத் தொடர்ந்து, புலிகளைத் தமிழ் மக்களிடமிருந்து அந்நியப்படுத்தி அழிக்க வேண்டுமென பிரேமதாசா கங்கணம் கட்டிநிற்க, புலிகளைத் தமிழர்களின் பிரதிநிதிகளாக அங்கீகரித்துப் புலிகளுடன் நேரடிப் பேச்சுக்களை நடாத்தத் தொண்டமான் முனைந்தது பிரேமதாசாவுக்குப் பெரிய சிக்கலை ஏற்படுத்தியது. எனினும் மலையகத்தின் முடிசூடா மன்னரை, தோட்டப் பாட்டாளி வர்க்கத்தின் பெரும் தலைவரை நேரடியாகப் பகைத்துக் கொள்ளும் துணிவு பிரேமதாசாவுக்கு ஏற்படவில்லை. அதுமட்டுமன்றி வடக்குக் கிழக்கு நிரந்தரமாக இணைந்த தமிழர் தாயகத்தை அங்கீகரிக்கும் தொண்டமானின் முற்போக்கான தீர்வுத் திட்டத்தையும் பிரேமதாசாவால் ஜீரணிக்க முடியவில்லை. எனவே பௌத்த பீடத்தை முடுக்கிவிட்டுத் தொண்டமானுக்கு எதிராகச் சிங்களப் பேரினவாதப் பூதத்தை ஏவிவிட்டதில் போதிசத்துவருக்கு நிறையப் பங்குண்டு. இறுதியில் பாராளுமன்றத் தெரிவுக் குழுவின் அதிகாரத்தைப் பயன்படுத்தித் தொண்டமானுக்கு வாய்ப்பூட்டுப் போட்டதும் அவரது திருவிளையாடல்களில் ஒன்றுதான்.

தமிழர் பிரச்சினை குறித்துப் பிரேமதாசா தொடர்ச்சியாக நிகழ்த்தி வரும் கதாகலாச்சேபங்களில் இருந்து அவர் எதைச் சொல்ல வருகிறார் என்பதைக் கிரகித்தறிவது மகா சிரமம். சொற்களின் அர்த்த பரிமாணங்களில் இருந்து அவரது செயற்பாடுகளை ஊகித்துக் கொள்ள முடியாது.

‘‘யுத்தம் அர்த்தமற்றது. அசட்டுத்தனமானது. யுத்தத்தில் எவருமே வெற்றி கொள்வதில்லை’’ என்று அவர் உயிர்க்கும் தத்துவ முத்துக்களில் முரண்பாடான அர்த்தத்தைத்தான் நாம் இனங்கண்டு கொள்ளலாம். சமாதானம், ஐக்கியம், இன ஒருமைப்பாடு என அவர் மீட்டும் இராகங்கள் கேட்டுக் கேட்டுப் புளித்துப் போன சினிமா பாட்டுப் போல சுவையிழந்து போய்விட்டன.

பிரேமதாசாவின் உண்மையான கருத்துக்களை அறிய வேண்டுமென்றால் அவர் சொற்சிலம்பாடும் வில்லுப் பாட்டுக்களைக் கேட்காது, அவரது ‘ஆவி’ எழுத்தாளர்களின் ஆக்கங்களை நுணுக்கமாகப் பார்க்க வேண்டும். ‘டெய்லி நியூஸ்’, ‘ஒப்சேவர்’ பத்திரிகை ஆசிரியர்களான ஜெகான் பெரேரா, தயான் ஜெயதிலகா போன்றோரின் எழுத்துக்களில் இருந்து பிரேமதாசாவின் எண்ணவோட்டத்தை இனங்கண்டு கொள்ளலாம். இனப்பிரச்சினை குறித்து இவர்கள் என்ன சொல்கிறார்கள்? பிரேமதாசாவின் அந்தரங்க ஆவி என்ன சொல்கிறது?

‘‘யுத்தத்தால் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது. யுத்தத்தால் நாட்டின் செல்வம் நாசமாகிப் போகிறது. ஆனால் யுத்தம் அவசியம். புலிகளுக்கு எதிரான யுத்தம் தவிர்க்க முடியாதது. ஏனென்றால் பாசிசப் புலிகளின் பயங்கரவாதத்திலிருந்து தமிழ் மக்களைக் காப்பாற்ற வேண்டும். தாயகத்தை விடுவிக்க வேண்டும். புலிகளை ஒழித்துக் கட்டும் யுத்தத்தைத் தொடர்ந்து நடத்தும் அதேவேளை இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும் வழிவகைகள் ஆராயப்பட வேண்டும். சனநாயகச் சக்திகளாக ஒற்றையாட்சியை ஏற்று அரசாங்கத்தை அரவணைத்து நிற்கும் தமிழ்க் குழுக்களுடன் கலந்தாலோசித்து ஒரு தீர்வுத் திட்டத்தை வகுக்க வேண்டும். நாட்டில் சனநாயகம் தழைத்தோங்க, இன ஐக்கியம் வளர இதுவே சிறந்த வழி.’’

பிரேமதாசாவின் குருட்டுத்தனமான அணுகுமுறை இதிலிருந்து தெட்டத் தெளிவாகத் தெரிகிறது. இராணுவ அடக்குமுறை மூலம் புலிகளை அழித்து, தமிழர்களைப் பாதுகாத்து, எட்டப்பர் கோஸ்டிகளுக்கு ஆட்சியதிகாரம் கொடுத்துத் தமிழர் பிரச்சினையைத் தீர்த்துவிட இந்திய அரசு கையாண்ட அதே அணுகுமுறையைத்தான் பிரேமதாசாவும் கடைப்பிடிப்பது போலத் தெரிகிறது.

அமைதியென்று, பாதுகாப்பென்று, ஐக்கியமென்று அன்புக்கரங்களை நீட்டும் ஆக்கிரமிப்பாளர்கள் பற்றித் தமிழ் மக்கள் நன்கறிவார்கள். பிரேமதாசாவின் முகமூடி நடனங்கள் தமிழீழத்தில் அரங்கேறப் போவதில்லை.