விடுதலைப் புலிகள் பத்திரிகை, ஜுலை 1984
ஒரு அரசியற் போராட்டத்தின் அதியுச்ச கட்டமாக, அப்போராட்டத்தின் வளர்ச்சியும், முதிர்ச்சியும் அடைந்த நிலையில் புரட்சிகர ஆயுதப் போராட்டம் தோற்றம் கொள்கிறது. இது உலகளாவிய வரலாற்று உண்மை. உலக சோசலிசப் புரட்சிகளும், தேசிய விடுதலைப் போராட்டங்களும் ஆயுதம் தரித்த புரட்சிகரப் பரிணாமம் பெற்றவையே.
ஒடுக்குமுறையாளன் தனது அடக்குமுறைச் சாதனமாக ஆயுத பலாத்காரத்தையே பிரயோகிக்கிறான். இந்த அநீதியான ஆயுத பலாத்கார அடக்குமுறைக்கு எதிராகக் கிளர்ந்தெழும் மக்கள், ஆரம்பத்தில் அமைதிவழிப் போராட்டங்களை நடத்துகின்றனர். ஆனால் இந்த அமைதி வழி மென்முறைப் போராட்டங்களை நசுக்க ஒடுக்குமுறையாளன் ஆயுத வன்முறையை அதிதீவிரப்படுத்துகிறான். இதனால் சட்ட ரீதியான, சமாதான, சனநாயகப் போராட்ட முறைகளில் மக்கள் நம்பிக்கை இழக்கின்றனர். அதே சமயம் ஒடுக்குமுறையோ நீடிக்கிறது; சாதாரண வாழ்க்கையின் சகல பரிமாணங்களிலும் ஊடுருவிச் செல்கிறது. மனித உரிமைகள் இழந்த அடிமைத்தனத்திற்கு மக்கள் தள்ளப்படுகின்றனர். அடக்குமுறையின் அழுத்தம் அதிகரிக்க, மக்களிடம் ஆவேசம் பிறக்கிறது. விடுதலை வேட்கை எழுகிறது. ஆயுதப் பலாத்கார அடக்குமுறையை ஆயுதம் தாங்கி எதிர்கொள்ள மக்கள் தயாராகின்றனர். இந்தப் புரட்சிகர வரலாற்றுச் சூழ்நிலையிலேயே ஆயுதம் தரித்த எதிர்ப்பு இயக்கம் (armed resistance movement) ஒரு வெகுசனப் போராட்ட வடிவத்தை எடுக்கிறது. எனவே, அடக்குமுறைக்கு எதிராகச் சகல விதமான சமாதான வழி தழுவிய போர்முறைகளையும் கையாண்டு தோல்விகண்ட மக்கள், வேறெந்த வழியுமற்ற சூழ்நிலையில், ஆயுதம் தாங்கிய புரட்சிகரப் போராட்டத்தில் குதிப்பது தவிர்க்க முடியாத வரலாற்று நியதியாகிவிடுகிறது. தமிழீழத் தேசிய சுதந்திரப் போராட்ட வரலாற்றை எடுத்துக் கொண்டால் இந்த உண்மை புலனாகும்.
எமது போராட்டம் 35 வருட கால வரலாற்றைக் கொண்டது. இந்த வரலாற்றுக் காலத்தில் எமது விடுதலைப் போராட்டம் பல திருப்புமுனைகளை அடைந்திருக்கிறது; புதிய வடிவங்களைப் பெற்றிருக்கிறது; புதிய பரிமாணங்களை உள்ளடக்கியதாக விரிவுபெற்றிருக்கிறது. சம உரிமை கோரி, சமஸ்டி ஆட்சி கோரி, ஈற்றில் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தனியாட்சி கோரும் அளவிற்கு எமது போராட்டம் முதிர்ச்சியும், வளர்ச்சியும் கண்டது. ஆரம்பத்திலிருந்து கால் நூற்றாண்டு காலத்திற்கு மேலாக நாம் அகிம்சைத் தத்துவத்தின் அடிப்படையில் அமைதிவழிப் போராட்டங்களை நடத்தினோம். வர்க்க, சாதி வேறுபாடற்ற ரீதியில் முழுத் தமிழீழச் சமூகமுமே இந்தத் தேசியப் போராட்டத்தில் எழுச்சி கொண்டது. சகல விதமான சமாதான, சனநாயக மார்க்கங்களிலும் மக்கள் தமது விடுதலையுணர்வுக்கு வெளிப்பாடு கண்டனர். தமிழ்த் தேசாபிமான எழுச்சியைக் கண்டு மிரண்ட சிங்கள இனவாத அரசு தனது பாசிச அடக்குமுறை இயந்திரத்தை முடுக்கிவிட்டது. அகிம்சை வழி மென்முறைக்கு எதிராக ஆயுத வன்முறை விஸ்வரூபம் எடுத்தது. அடக்குமுறையாளனின் ஆயுத பலத்திற்கு அகிம்சைப் போரின் தார்மீக பலத்தால் ஈடுகொடுக்க முடியவில்லை. தமிழீழச் சுதந்திரப் போராட்ட வரலாற்றின் ஒரு சகாப்தம் முடிவுற்றது. அகிம்சைப் போராட்டத்திலும், அப்போராட்ட யுக்தியைக் கையாண்ட தலைமையிலும் தமிழ் பேசும் மக்கள் நம்பிக்கையை இழந்தனர். எழுபதின் ஆரம்பத்தில் ஒரு புதிய யுகம் பிறக்கிறது. இது புதிய பரம்பரையின் சகாப்தம். புரட்சிகர ஆயுத வன்முறைப் போராட்டம் வரலாற்று ரீதியாகப் பிறப்பெடுத்த காலகட்டம்.
சட்ட ரீதியான, சனநாயகப் போராட்ட வடிவங்கள் படுதோல்வி கண்ட சூழ்நிலையில், இன அழிப்பு அட்டூழியங்களிலிருந்து எமது மக்களைப் பாதுகாக்க வேறெந்த வழியுமற்ற சூழ்நிலையில்தான் புரட்சிகர ஆயுத எதிர்ப்பு இயக்கம் தமிழீழத்தில் தலைதூக்கியது. இந்த ஆயுதப் புரட்சி இயக்கத்திற்கு அன்று முன்னோடியாக விளங்கியதும், இன்று முன்னணி வகித்து வருவதும் விடுதலைப் புலிகள் இயக்கம் என்பதை யாராலும் மறுக்க முடியாது. ஆயுதப் போராட்டத்தை ஒரு புரட்சிகர இலட்சியத்தின் அடிப்படையில் வரித்து, ஒரு கட்டுக்கோப்பான இரகசிய இயக்க அமைப்பை உருவாக்கி, கெரில்லாப் போர் முறையை மக்கள் போராட்ட வடிவமாகத் தமிழீழத்தில் அறிமுகம் செய்த பெருமை எமது இயக்கத் தலைவரான பிரபாகரனையே சாரும். இவர் கட்டி வளர்த்த புலிகள் இயக்கத்தின் தோற்றமும், வளர்ச்சியும் தமிழீழ சுதந்திரப் போராட்டத்தை ஒரு புரட்சிகரமான புதிய சகாப்தத்தில் பிரவேசிக்கச் செய்தது. திசை தெரியாது தடுமாறிய தமிழரின் அரசியல் போராட்டம், ஆயுதப் போர் வடிவப் பரிணாமம் பெற்று ஒரு உயர்ந்த நிலைக்கு முன்னேற்றம் கண்டது.
உலகெங்கும் கெரில்லாப் போர்முறையானது ஒரு விடுதலைப் போராட்ட வடிவமாக வலுப்பெற்று வருகிறது. இரண்டாவது உலக யுத்தத்தை அடுத்து இன்று வரை கிட்டத்தட்ட 50 நாடுகளில் கெரில்லாப் பாணியிலான ஆயுதப் புரட்சிப் போராட்டங்கள் தலைதூக்கியிருக்கிறது. காலனிய, ஏகாதிபத்திய சக்திகளின் அடக்குமுறையை உடைத்தெறிய கெரில்லாப் போர்முறையைக் கையாண்டு எத்தனையோ நாடுகள் வீரசுதந்திரம் பெற்றுள்ளன. சீனா, வியட்னாம், கியூபா, அல்ஜீரியா, அங்கோலா, மொசாம்பீக், கினி, சிம்பாவே, நிகராக்குவா போன்ற நாடுகள் கெரில்லாப் போர்முறைத் திட்டத்தைக் கையாண்டே வெற்றிகளை ஈட்டின. இன்னும் எத்தனையோ நாடுகளில் கெரில்லாப் போர்முறை தழுவிய விடுதலைப் போராட்டங்கள் வெற்றிப் பாதையில் வீறுநடை போடுகின்றன. புரட்சிகர ஆயுதப் போராட்ட யுக்திகளில் கெரில்லாப் போர்முறையானது ஒரு தலைசிறந்த போர்க்கலை. ஒரு பலம் வாய்ந்த அடக்குமுறை அமைப்புக்கு எதிராக, பலம் குன்றிய மக்களால் தொடுக்கப்படும் மிகச் சக்தி வாய்ந்த போராயுதம். எந்தவொரு பிரமாண்டமான இராணுவ இயந்திரத்தையும் நிலைகுலைந்து நடுங்க வைக்கும் போர்த் தந்திரோபாயம். இந்தக் கெரில்லாப் போர்முறையானது உலகளாவிய ரீதியில் ஒடுக்கப்படும் மக்களிடத்தில் பிரபல்யம் பெற்றிருப்பினும், இப்போர்முறையை அதன் திட்ப நுட்பங்களுடன் தமிழீழ அரசியல் போர் அரங்கில் அறிமுகம் செய்து, அதனை முன்னெடுத்துச் செல்வது எமது விடுதலை இயக்கமாகும்.
கெரில்லாப் போராட்டம் பற்றியோ, அல்லது உலக விடுதலை இயக்கங்களின் போர்முறைகள் பற்றியோ எவ்விதமான விளக்கத் தெளிவற்ற அரசியல்வாதிகளும், பழைய மார்க்சீயவாதிகளும், ரொட்சியவாதிகளும் எமது புரட்சிகர ஆயுதப் போராட்டத்தைத் ‘தனிநபர் பயங்கரவாதம்’ என்னும் கோட்பாட்டில் விமர்சித்து வருகிறார்கள். கெரில்லாப் போர்முறையைக் கண்டிக்கும் வேறு சிலர், தாம் மக்கள் போராட்டம் நடத்தப் போவதாகப் பிதற்றி வருகிறார்கள். இவர்கள் எல்லோரினதும் குழப்பத்திற்குப் பிரதான காரணம் கெரில்லாப் போராட்டம் பற்றிய விளக்கக் குறைவாகும். இவர்கள் இன்னும் பழைய மரபு மார்க்சியக் கோட்பாடுகளில் சிறையுண்டு கிடப்பதால், நவயுகப் புரட்சிப் போராட்ட வரலாறுகளையும், அப் போராட்ட அனுபவங்களை அடிப்படையாகக் கொண்ட புதிய மார்க்சியப் புரட்சிச் சிந்தனைகளையும் கிரகித்துக் கொண்டதாகத் தெரியவில்லை.
ஒவ்வொரு தேசிய விடுதலைப் போராட்டமும் தனக்கே உரித்தான வரலாற்று வளர்ச்சியையும், தனித்துவமான எதார்த்த சூழ்நிலைகளையும், இவற்றை எல்லாம் அனுசரித்து வரிக்கப்பட்ட போராட்ட வடிவத்தினையும் கொண்டிருக்கிறது. எமது விடுதலைப் போராட்டமும் அதற்குரிய தனித்துவமான புறநிலைகளையும், வரலாற்றையும் கொண்டது. இந்தச் சூழ்நிலைகளின் நிதர்சனத்திற்கு ஏற்பவே எமது போராட்ட வடிவமும் நெறிப்படுத்தப்பட்டிருக்கிறது. எமது பூகோளச் சூழ்நிலைகள், எமது எதிரியின் நிலைப்பாடு, சதா புதிய திருப்பங்களை அடைந்து வரும் அரசியல் சூழ்நிலை, இவற்றையெல்லாம் ஆய்வு செய்தே எமது போர்முறை முன்னெடுத்துச் செல்லப்படுகிறது. இதன் காரணமாகவே எமது ஆயுதப் போராட்டமானது வெற்றிப் பாதையில் விரிவடைந்து முன்னேறியிருக்கிறது. இதன் காரணமாகவே மக்கள் எமக்குப் பக்க பலமாக நிற்கிறார்கள். மக்களின் ஆதரவின்றி, மக்களின் நேரடிப் பங்களிப்பின்றி ஆயுதப் போராட்டம் நிலைத்து நிற்காது என்பது எமக்கு நன்கு தெரியும். கெரில்லாப் போர் என்பதே ஒரு வெகுசனப் போராட்டம். தேசிய விடுதலைப் பரிணாமம் பெற்ற எமது ஆயுதப் போராட்டத்தில் மக்களை அணிதிரட்டி, ஒரு வெகுசன ஆயுதப் புரட்சிப் போர்மூலம் விடுதலையை வென்றெடுப்பதே எமது அரசியல்-இராணுவத் திட்டமாகும்.
புரட்சிகர ஆயுதப் போரின் ஒரு வடிவமான கெரில்லாப் போராட்டம் பற்றிச் சோசலிசத் தத்துவார்த்த விளக்கங்களைக் கொண்ட படைப்புக்கள் நிறையவுண்டு. கெரில்லாப் போரின் தன்மை, போர்முறைத் திட்டம், போராட்ட யுக்திகள், பொதுமக்களுக்கும், போராளிகளுக்கும் மத்தியில் நிலவ வேண்டிய உறவுகள், இராணுவப் போரின் அரசியல் முக்கியத்துவம் ஆகியன பற்றிப் புரட்சித் தலைவர்கள் தமது போராட்ட அனுபவங்களின் அடிப்படையில் ஆழமான கருத்துக்களை முன்வைத்திருக்கிறார்கள். இக் கருத்துக்களும், கோட்பாடுகளும் அந்தந்த நாடுகளின் வரலாற்றுச் சூழ்நிலைக்குப் பொருந்துவன. ஆயினும் உலகப் புரட்சி அனுபவங்களைப் படித்தறிவதன் மூலம் தமிழீழப் போராளிகளின் பார்வைகள் கூர்மையடையும்.