விடுதலைப் புலிகள் பத்திரிகை, ஆகஸ்ட் 1984

தமிழீழ தேசிய விடுதலைப் போராட்ட வரலாற்றையும், எமது புரட்சி இயக்கத்தின் ஆயுதப் போராட்ட வடிவத்தையும் புரிந்து கொள்ள முடியாமல் குழம்பும் பழைய மரபு மார்க்சியவாதிகளும், எமது போராட்டத்தை ‘சேகுவாராயிசம்’ என்று விமர்சிக்க முனைகிறார்கள். நாம் வரித்துக் கொண்ட கெரில்லாப் போராட்ட வடிவம் எந்தவொரு தனிமனிதரினதோ, அன்றி ஒரு நாட்டினதோ கோட்பாட்டினைத் தழுவியதாக நெறிப்படுத்தப்படவில்லை. உலகளாவிய ரீதியில் குமுறி வரும் விடுதலைப் போராட்டங்களையும், புரட்சிகளையும் நாம் உன்னிப்பாகக் கற்றறிந்து, இந்த உலகானுபவத்திலிருந்து எமது பார்வையைக் கூர்மைப்படுத்தி வருகிறோம். உலகத்தின் பல முனைகளில் ஒடுக்கப்படும் மக்களால் தொடுக்கப்படும் புரட்சிகரப் போர்முறைகளிலிருந்து நாம் கற்றுக்கொள்வதற்கு நிறையவுண்டு. எனினும் எமது போராட்டத்தின் தனித்துவத்தை உணர்ந்து, எமது வரலாறு மற்றும் யதார்த்தப் புறநிலைகளுக்கு ஏற்ப எமது ஆயுதப் போர் வடிவத்தை நிர்மாணித்திருக்கிறோம். ஆயுதப் போராட்ட வடிவங்களில் ஒன்றான கெரில்லாப் போர்முறை கியூபா புரட்சியில் மட்டும் பரீட்சிக்கப்படவில்லை. அன்றி சேகுவாரா மட்டும் அதனைச் செழுமைப்படுத்தவில்லை. உலகளாவிய ரீதியில் ஒடுக்கப்பட்ட மக்கள் கையாண்டு வரும் போர்வடிவம் அது. உலக ஏகாதிபத்தியமானது இன்று அப்பட்டமான பலாத்காரம் மூலமாகவே தனது ஆதிக்கத்தை மூன்றாம் உலகில் நிலைநிறுத்தி வருகிறது. சர்வாதிகார இராணுவ அரசுகளை உருவாக்கி, அடக்குமுறையை அதிதீவிரப்படுத்திச் சுரண்டப்படும் மக்களினத்தின் புரட்சிகர எழுச்சிகளை நசுக்கி வருகிறது. இந்த வன்முறையான அரச இயந்திரத்தையும், அதன் பலாத்கார ஒடுக்குமுறையையும் சமாதான, சாத்வீக மார்க்கங்களால் எதிர்கொண்டு போராட முடியாதென உணர்ந்து கொள்ளும் மக்கள், வன்முறையை வன்முறையாலேயே எதிர்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். ஒரு பலம் பொருந்திய இராணுவ சக்திக்கு எதிராக நிராயுதபாணிகளாக நிற்கும் மக்கள், தமது வன்முறைப் போரைத் தொடங்குவதற்கு கெரில்லாப் போர்த் தந்திரோபாயம் இன்றியமையாததாக அமைந்து விடுகிறது. இந்த வகையில் கெரில்லாப் போர்வடிவமானது ஒடுக்கப்படும் மக்களின் புரட்சிகர வன்முறைப் போராக மாறிவிடுகிறது. ஒரு தேசிய விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு இன்றியமையாததான இப் போர்வடிவம், தென் ஆசிய, ஆபிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளில் வெற்றியைப் பெற்றிருக்கிறது. வெற்றிப் பாதையில் வீறுநடை போட்டு வருகிறது.

கார்ல் மார்க்ஸ், லெனின் ஆகியோரது மறைவுக்குப் பின்னராகவே தேசிய விடுதலைப் போராட்டங்கள் பரந்த அளவில் உலக அரங்கில் குமுறி வெடித்தன. தேசிய விடுதலை இயக்கங்கள் தத்தம் நாடுகளின் வரலாறு, புறநிலைகளுக்கு ஏற்ப போராட்டப் பாதையை நெறிப்படுத்திக் கொண்டன. இந்தப் போராட்ட நடைமுறைகள் பழைய மரபு மார்க்சீய-லெனினிய கோட்பாடுகளுக்குச் சவால் விடுவதாகவும் அமைந்தன. வெகுசன அமைப்பை (கட்சியை) உருவாக்கி, வெகுசனங்களை ஸ்தாபன ரீதியில் அணிதிரட்டி, அவர்களைப் புரட்சிக்குத் தயார்படுத்தி, அதன் பின்னர் ஒரு புரட்சிகர இராணுவத்தைக் கட்டி எழுப்பி, அதற்கப்புறம் போராட்டத்தை நடத்துவது என்ற பழைய மரபுக் கோட்பாடு நடைமுறைச் சாத்தியமற்றது எனப் பல புரட்சி அனுபவங்களிலிருந்து தெளிவாகியிருக்கிறது. அடக்குமுறை ஆட்சியதிகாரம் அதிகொடூரமாகத் தாண்டவமாடும் சூழ்நிலைகளில், அரசுக்கு எதிரான ஒரு புரட்சி இயக்கம் வெகுசன அமைப்புகளைக் கட்டி எழுப்புவதென்பது இலகுவான காரியமல்ல. கட்சி அமைப்பிற்குப் பதில், தலைமறைவான ஒரு கெரில்லா இயக்கம் தோற்றுவிக்கப்பட்டு, அவ்வியக்கம் படிப்படியாக வெகுசன அரங்கில் ஆயுதப் போரை விரிவுபடுத்தி, மக்கள் சமூகத்தில் வேரூன்றி வளர்ந்து, மக்கள் இயக்கமாகப் பரிணாமம் பெறுவது என்பது சில புரட்சி அனுபவங்கள் மூலம் நிரூபணமாகியிருக்கிறது. கியூபா புரட்சியிலும் இந்த வழிமுறையே கடைப்பிடிக்கப்பட்டது. ஒரு கெரில்லா அணி, மக்கள் விடுதலை இராணுவமாக, மக்கள் விடுதலை இயக்கமாக மாறலாம்; புரட்சிவாதிகளும், மக்களுமாக ஒரு புரட்சியைத் தோற்றுவிக்கலாம் என்பது சேகுவாரா, காஸ்ட்ரோ போன்றோரின் நிலைப்பாடு. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு புரட்சி அனுபவத்தில் எழுந்த இந்தப் புதிய அணுகுமுறையைப் பழைய மரபு மார்க்சியவாதிகளும், ரொட்சியவாதிகளும் ஜீரணித்துக் கொள்ள மறுக்கின்றனர். இந்தப் போராட்ட அணுகுமுறையை சேகுவாராயிசம், இராணுவவாதம், மார்க்சீய விரோதத் தத்துவம் என்று எல்லாம் வாய்க்கு வந்தபடி பிதற்றி வருகிறார்கள். எமது விடுதலை இயக்கத்தின் கெரில்லாப் போராட்டமும் இந்தப் பிழையான தத்துவத்தில் நெறிப்படுத்தப்பட்டிருக்கிறது என்பது இவர்களது வாதம்.

எமது தேசிய விடுதலைப் போராட்டமும், அதனை முன்னெடுக்க நாம் வரித்துக் கொண்ட ஆயுதப் போர்வடிவமும், எமது வரலாற்றுச் சூழ்நிலைகள், யதார்த்தப் புறநிலைகள் ஆகியனவற்றை அனுசரித்தே நெறிப்படுத்தப்பட்டிருக்கிறது. நாம் குருட்டுத்தனமாக எந்த அந்நியப் புரட்சி வடிவங்களையோ, புரட்சித் தத்துவத்தையோ, அன்றிப் போர்த் தந்திரோபாயங்களையோ பின்பற்றவில்லை. அதேபோல பழைய மரபு மார்க்சீயக் கோட்பாடுகளை, அதாவது லெனின், ரொட்ஸ்கி காலத்து ரஸ்ய சூழ்நிலையில் வார்க்கப்பட்ட தத்துவார்த்தக் கருத்துக்களைப் புதிய சூழ்நிலையில் அப்படியே திணித்து விடலாம் என நம்பவும் இல்லை. ஒவ்வொரு புரட்சியும் அதற்கேயுரிய வரலாற்றைக் கொண்டிருக்கிறது. அதற்கேயுரிய தனித் தன்மைகளைப் பெற்றிருக்கிறது; அந்தந்த வரலாற்றுச் சூழ்நிலைகளை அனுசரித்தே அந்தந்தப் புரட்சியை முன்னெடுக்க கொள்கைத் திட்டம், செயற்திட்டம் வகுக்கப்பட வேண்டும் என்பது எமது கருத்து. இந்த வகையில் தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டமும், எமது இயக்கத்தின் போராட்டப் பாதையும் எமக்கே உரித்தான வரலாற்றுச் சூழ்நிலைகளால் பிரசவமான தனித்தன்மைகளைக் கொண்டது.

லெனினின் கட்சியமைப்புக் கோட்பாட்டின் அடிப்படையில் நாம் ஒரு மக்கள் இயக்கத்தைக் கட்டி எழுப்புவது என்பது எமது சூழ்நிலைக்குச் சாத்தியமாகாத காரியம். சிங்கள இனவாதப் பாசிச அரசின் அடக்குமுறையின் கீழ் ஒரு புரட்சிகரக் கட்சியை, அதுவும் தேசிய விடுதலையையும், சோசலிசப் புரட்சியையும் இலக்காகக் கொண்ட ஒரு கட்சியைக் கட்டி எழுப்புவதென்பது இலகுவான காரியமல்ல. தேசிய விடுதலைக் கோரிக்கையைத் தேசத்துரோகம் எனக் கொள்ளும் இந்தச் சர்வாதிகார அரசு, தேசிய விடுதலையை இலட்சியமாகப் பூணும் எந்தவொரு மார்க்சீயக் கட்சியையும் ‘சட்ட ரீதியான’ வெகுசன அமைப்புகளைக் கொண்ட மக்கள் இயக்கமாக வளரவிடப் போவதில்லை. தேசிய விடுதலைக்கு ஆதரவளித்து வந்த தமிழ் அகதிகள் புனர்வாழ்வு இயக்கம், காந்தீயம், ஈழ மாணவர் மன்றம் ஆகிய அமைப்புக்கள் செயலிழந்த கதையை யாவரும் அறிவர்.

அடுத்ததாக, தமிழீழமானது முதலாளித்தும் முதிர்ச்சி கண்ட ஒரு முன்னேறிய பிரதேசம் அல்ல. முதலாளித்துவ பொருள் உற்பத்தி உறவுகளின் முரண்பாட்டால் தோற்றம் கொள்ளும் புரட்சிகரப் பாட்டாளி வர்க்கம் என்ற ஒரு வர்க்கம் வடக்குக் கிழக்கில் இன்னும் வளர்ந்து விடவில்லை. மலையகத் தோட்டப் பாட்டாளி வர்க்கத்தை எடுத்துக் கொண்டால், அவர்களோ இன்னும் தொண்டமானின் தொழிற்சங்க அமைப்பில் சிறைபட்டுக் கிடக்கிறார்கள். இந்த நிலையில், தமிழீழத்தில் தொழிற் சங்க அமைப்புகளை உருவாக்கி, பாட்டாளி வர்க்கப் புரட்சியைச் செய்துவிடலாம் என்ற ரொட்சியவாதிகளின் கற்பனாவாதத்தை ஏற்றுக் கொள்ள நாம் தயாராக இல்லை.

தமிழர் தேசியப் பிரச்சினையின் வரலாற்று நிர்ப்பந்தங்கள் காரணமாக ஆயுத எதிர்ப்பு இயக்கம் தோன்றியது. ‘சட்ட ரீதியான’, சமாதான வழி தழுவிய போராட்டங்கள் நசுக்கப்பட்டதாலும், அரசியல் போராட்டத்தை முன்னெடுக்க எமது மக்களுக்கு வேறெந்த மார்க்கங்களும் இல்லாததாலும், அரச பயங்கரவாத வன்முறையை எதிர்கொண்டு போராட வேண்டிய நிர்ப்பந்தம் எழுந்ததாலும், புரட்சிகர ஆயுத எதிர்ப்பு இயக்கம் (revolutionary armed resistance movement) பிறப்பெடுத்தது. இந்த ஆயுத எதிர்ப்பு இயக்கத்திற்கு முன்னோடியாகத் தோன்றிய விடுதலைப் புலிகள் இயக்கம், தலைமறைவு இயக்கமாகவே அன்றும், இன்றும் இயங்கி வருகிறது. தலைமறைவான ஒரு ஆயுத எதிர்ப்பு இயக்கமாக இயங்கிய எமக்கு, நகர்ப்புற கெரில்லாப் பாணியிலான போர்வடிவம் எமது பிரத்தியேகச் சூழ்நிலைக்கு இன்றியமையாததாக விளங்கியது. நீண்டகால கெரில்லாப் போர்முறைத் திட்டத்தை வகுத்துக் கொண்ட நாம், மறைமுகமான மைய நிலையங்களை மக்கள் மத்தியில் உருவாக்கினோம். இம் மைய நிலையங்கள் தலைமறைவான மக்கள் அமைப்புகளன்றி வேறொன்றுமல்ல. விவசாயிகள், தொழிலாளர்கள், இளைஞர்கள், மாணவர்கள், புத்திஜீவிகள் ஆகிய அனைவர் மத்தியிலும் எமது இயக்க அமைப்புகள் வேரூன்றி வருகின்றன.

சோசலிசப் புரட்சி என்ற இலக்கில் தேசிய விடுதலையை முன்னெடுத்துச் செல்லும் ஒரு புரட்சி இயக்கம் என்ற ரீதியில் மக்கள் போராட்டத்தையும், வர்க்கப் போராட்டத்தையும் ஒன்றிணைத்த வேலைத்திட்டத்தில் எமது இயக்கம் செயல்பட்டு வருகிறது. தேசிய விடுதலை எனும் பொழுது அது மக்கள் போராட்டத்தையும் (mass struggle) சோசலிசப் புரட்சி எனும் பொழுது அது வர்க்கப் போராட்டத்தையும் (class struggle) தழுவி நிற்கிறது. முன்னதில் பரந்துபட்ட மக்கள், வர்க்க, ஜாதி வேறுபாடற்ற முறையில், ஒரு தேசிய மக்கள் கூட்டமாக அணி திரட்டப்படுதல் அவசியமாகிறது. பின்னதில் புரட்சிகர வர்க்கத்தின் தலைமை முக்கியமாகிறது.

ஒரு பரந்துபட்ட வெகுசனப் போராட்டமான தேசிய விடுதலைப் போராட்டத்தில், தமிழ்த் தேசிய முதலாளி வர்க்கத்தின் பங்களிப்பும் அவசியமாயினும், விடுதலைப் போராட்டத்திற்குத் தலைமை தாங்கி, போராட்டத்தை முன்னெடுக்கும் தகைமையோ, தகுதியோ இவ் வர்க்கத்திடம் இல்லை என்பதை எமது விடுதலை வரலாறு நிரூபணமாக்கியுள்ளது. இவர்கள் சிங்கள தரகு முதலாளி வர்க்கத்துடன் பேரம் பேசி, தமிழினத்தின் விடுதலையை விற்றுவிடவே சதா முனைந்து வந்தனர். உலக முதலாளித்துவ, ஏகாதிபத்திய சக்திகளின் ஊடுருவல்களுக்கு இடமளித்து வரும் இன்றைய தேசிய முதலாளித்துவ வர்க்கத்தை ஒரு சனநாயக சக்தியாகக் கொள்ள முடியாது. இவர்கள் தமது அரசியல் ஆதிக்கத்தை நிலைநாட்டி வரத் தேசிய விடுதலைக் கோசம் எழுப்பிய போதும், சமுதாயப் புரட்சியின் விரோதிகளாகவே விளங்குவர். சமூகத்தின் அடித்தளத்திலிருந்து சதா சுரண்டப்பட்டு, ஒடுக்கப்படும் மக்களின் சமூக, பொருளாதார சுபீட்சத்திற்கு இவர்கள் ஒரு போதும் இடமளிக்கப் போவதில்லை. எனவே சோசலிசப் புரட்சியை இலக்காகக் கொண்ட ஒரு தேசிய விடுதலைப் போராட்டத்தில் முதலாளி வர்க்கத் தலைமைக்கு இடமேயில்லை. புரட்சிகரப் பாட்டாளி வர்க்கத் தலைமையைக் கொண்ட ஒரு விடுதலை இயக்கமே சோசலிசப் புரட்சியை முன்னெடுக்கும் தகைமையைக் கொண்டது. தமிழீழத்தில் புரட்சிகர வர்க்கம் எனும் பொழுது, முதலாளிய சுரண்டலுக்கும், சாதியமைப்பு ஒடுக்குமுறைக்கும் ஆளாகியிருக்கும் சமூகத்தின் கீழ்மட்டத்து மக்களையே குறிக்கிறோம். சமூக ரீதியாக, பொருளாதார ரீதியாகத் தாழ்ந்த நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும் தொழிலாள, விவசாயப் பாட்டாளி வர்க்கங்களின் அபிலாசைகளையே எமது இயக்கத் தலைமை பிரதிபலிக்கிறது.

தேசிய விடுதலை என்ற இலக்கை அடைவதற்கு நாம் வரித்துக் கொண்ட ஆயுதப் போராட்டப் பாதையானது எமது அறிவியல் போராட்டத்தின் முன்னேற்றமான ஒரு விரிவாக்கமேயாகும். தேசிய முரண்பாட்டால் எழுந்த அரசியல் நெருக்கடியானது, வன்முறை வடிவத்தில் வளர்ச்சியும், முதிர்ச்சியும் கண்டிருக்கிறது. பிற்போக்கான வன்முறைக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட புரட்சிகர வன்முறையாக, தர்மத்தையும், சமாதானத்தையும் வேண்டி ஒடுக்கப்படும் மக்கள் நடாத்தும் புரட்சிகர விடுதலைப் போராகவுமே எமது ஆயுதப் போராட்டம் அமையப் பெற்றது எனலாம். சிங்கள இனவாத அடக்குமுறையின் அதர்மத்திற்கு எதிராக வரித்துக் கொள்ளப்பட்ட கெரில்லா வடிவத்திலான எமது ஆயுதப் போராட்டம், படிப்படியாக ஒரு மக்கள் யுத்தமாக, பரந்துபட்ட வெகுசன ஆயுதப் போராக மாற்றப்படும். உறுதியான, கட்டுப்பாடான அரசியல் – இராணுவ அமைப்பையும், புரட்சிகரத் தலைமையையும், தெளிவான சித்தாந்த தரிசனத்தையும் கொண்ட முன்னணிப் படையாக விளங்கும் எமது இயக்கம், இந்த மக்கள் யுத்தத்தை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்லும் என்பதில் ஐயமில்லை.