விடுதலைப் புலிகள் பத்திரிகை, மே 1985
கெரில்லா வடிவமான ஆயுதப் போராட்டத்தை மக்கள் யுத்தம் என முதலில் வர்ணித்தவர் மாவோ. வெகுசன அரங்கில், வெகுசனப் பங்களிப்போடு நடத்தப்படும் போர் என்பதால், இப்போராட்ட முறை மக்கள் யுத்தமெனக் கொள்ளப்படுகிறது. ஆசிய, ஆபிரிக்க, லத்தீன் அமெரிக்க விடுதலைப் போராட்ட அனுபவங்களை நாம் பரிசீலிக்குமிடத்து, கெரில்லாப் போர்முறைத் திட்டத்தின் வெற்றிக்கு மக்களின் பங்களிப்புத்தான் மூலமாக இருந்தது என்பதை அறிந்து கொள்ளலாம். போராட்ட களத்தில் மக்கள் நேரடியாகக் குதிக்கும் பொழுதே கெரில்லா வடிவ ஆயுதப் போராட்டம் மக்கள் யுத்தமாகப் பரிணமிக்கிறது.
கெரில்லாப் போரின் ஆரம்ப கட்டங்களில் மக்கள் வெறும் பார்வையாளர்களாக, அவதானிகளாக மட்டும் இருந்து வருவர். காலப் போக்கில் அவதானிகள் என்ற நிலையிலிருந்து அனுதாபிகளாக, ஆதரவாளர்களாக மக்களின் நிலைப்பாடு மாறுகிறது. ஆனால் இந்த அனுதாபமும், ஆதரவும் நேரடிப் பங்களிப்பாக மாற்றம் கொள்ளும் பொழுதுதான் போராட்டத்தில் ஒரு புதிய திருப்பம் ஏற்படுகிறது; உண்மையான மக்கள் போராட்டம் உதயமாகிறது.
ஆதரவு நல்கும் நிலையிலுள்ள வெகுசனத்தை ஆயுதப் போராட்டத்தில் நேரடிப் பங்குதாரர்களாக மாற்றுவதென்பது இலகுவான காரியமல்ல. இந்தக் கைங்கரியத்தை எந்த ஒரு விடுதலை இயக்கமும் உடனடியாக, எடுத்த எடுப்பில் சாதித்துவிட முடியாது. இது நீண்ட காலக் கடின உழைப்பின் மூலம் படிப்படியாகச் சாதிக்க வேண்டிய விசயம். இது மக்களின் அரசியல் விழிப்புணர்வை, தேசாபிமானவுணர்வை தட்டி எழுப்புவதில் தங்கியிருக்கிறது. இங்குதான் ஒரு புரட்சிகர விடுதலைச் சித்தாந்தத்தின் பங்கு முக்கியமானது.
புரட்சிகர சித்தாந்தம் என்பது வெறும் கற்பனாவாதத்திலிருந்து பிறப்பதல்ல. ஏற்கனவே எழுதி வைக்கப்பட்ட தத்துவார்த்த நூல்களிலிருந்து பெறப்படுவதல்ல. புரட்சிகர சித்தாந்தமானது வாழ்வனுபவத்திலிருந்து பிறப்பெடுக்கிறது. வாழ்வோட்டத்தின் நிதர்சனத்திலிருந்து கருக்கொள்கிறது. நாளாந்த நடைமுறைப் பிரச்சினைகளிலிருந்து பிரசவம் கொள்கிறது. புரட்சிகர சித்தாந்தமானது புரட்சியின் மையத்திலிருந்து, புரட்சியின் யதார்த்த களத்திலிருந்து பிரவாகமெடுக்கிறது.
உலக விடுதலை இயக்கங்கள் பல மார்க்சீய-லெனினியத்தைத் தமது தத்துவார்த்த வழிகாட்டியாகத் தழுவிக் கொண்ட போதும், போராட்ட களத்தில் பெறப்பட்ட அனுபவத்தின் அடிப்படையிலேயே தமது புரட்சிகர சித்தாந்தத்தை நெறிப்படுத்திக் கொண்டன. மொசாம்பிக் விடுதலை இயக்கத் தலைவர் சமோரா மாசேல் சொல்கிறார்:
‘‘செயலில் இருந்தே சிந்தனை தோன்றுகிறது. நாம் ஆரம்பத்தில் மக்களுக்கு விடுதலை பெற்றுக் கொடுக்க விழைந்தோம். ஆனால், மக்களே தங்களை விடுவித்துக் கொள்ள வேண்டும் என்பதைப் பின்புதான் அனுபவ வாயிலாக அறிந்து கொண்டோம். விடுதலைப் போராட்ட களத்தில் நேரடியாகப் பங்களிக்காமல் மக்கள் தங்களை விடுவித்துக் கொள்ள முடியாது என்பதை நாம் உணர்ந்து கொண்டோம். நாம் அனுபவ வாயிலாக நிறையக் கற்றறிந்தோம். நாம் தவறுகள் இழைப்பதுண்டு. ஆனால் அந்தத் தவறுகளிலிருந்து நாம் எம்மைத் திருத்திக் கொண்டோம். நாம் வெற்றிகளும் ஈட்டுவதுண்டு. அந்த வெற்றி அனுபவங்களிலிருந்து எம்மை மேலும் செழுமைப்படுத்திக் கொண்டோம். இவ்விதம் செயற்பாட்டு அனுபவங்களிலிருந்தே எமது விடுதலைச் சித்தாந்தம் பரிணாமம் பெற்றது. இவ்விதம் நாம் வரித்துக் கொண்ட எமது புரட்சிகர சித்தாந்தம், ஏற்கனவே வேறொரு சூழ்நிலையில், வேறொரு காலத்தில், வேறொரு இடத்தில் செயற்பாட்டுத் தத்துவமாக நெறிப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை நாம் பின்பு அறிய முடிந்தது. அந்தத் தத்துவம்தான் மார்க்சீய-லெனினியம்.’’
புரட்சிகர செயற்பாட்டிற்கு ஒரு பொதுவான சித்தாந்த வழிகாட்டியாகவே மார்க்சீய-லெனினியத்தைப் புரட்சிகர இயக்கங்கள் தழுவிக் கொள்கின்றன. ஆயினும் தமது பிரத்தியேக வரலாற்றுச் சூழ்நிலைக்கேற்ப தமது தனித்துவ யதார்த்த வாழ்வனுபவங்களின் அடிப்படையிலேயே ஒவ்வொரு விடுதலை இயக்கமும் தனது புரட்சிகர சித்தாந்தத்தை உருவாக்கிக் கொள்கிறது.
மார்க்சீயம் ஒரு சமூக, வரலாற்று விஞ்ஞானம் என்ற ரீதியில் சமுதாயக் கட்டமைப்புப் பற்றியும், மனித வரலாற்றின் போக்குப் பற்றியும் உலகளாவிய விஞ்ஞான விதிகளை எடுத்தியம்புகிறது. இந்த விஞ்ஞானக் கோட்பாடுகள் சமூகப் புரட்சிவாதிகளுக்கு இன்றியமையாத தத்துவ வழிகாட்டியாக விளங்குகின்றன. பொருள் உற்பத்தி வடிவத்தினை நிச்சயிக்கவும், சமூக, வர்க்க முரண்பாடுகளை ஆய்வு செய்யவும், சமுதாயப் புரட்சிக்கான செயற்திட்டத்தை வகிக்கவும் மார்க்சீய சமூகவியல் அடிப்படை அறிவியல் கோட்பாடுகளைத் தந்துதவுகிறது. ஆயினும், அதேவேளை ஒவ்வொரு புரட்சிகரச் சூழ்நிலையும் தனித்துவமான விசேட குணாம்சங்களையும், அதற்கேயுரிய சிக்கலான பரிமாணங்களையும் கொண்டிருப்பதை நாம் காணலாம். ஒரு சமூக தத்துவத்தின் பொது விதிகளை மட்டும் கொண்டு ஒரு புரட்சிகர சூழலின் முழுமையை நாம் தரிசித்துக் கொள்வது கடினம். அந்தச் சூழலில் செயற்பட்டு, அந்தச் செயற்பாட்டுப் பரிசோதனை அனுபவங்களின் அடிப்படையில் ஒரு புரட்சிகர கொள்கைத் திட்டத்தை நெறிப்படுத்துவது அவசியமாகிறது. ஆசிய, ஆபிரிக்க, லத்தீன் அமெரிக்க புரட்சிகள் இந்த உண்மையைப் பகர்கின்றன. மார்க்சீயத்தை அடிப்படை வழிகாட்டியாகக் கொண்ட போதும், ஒவ்வொரு புரட்சியும் அதற்கான சிறப்பு வரலாற்றை, அதற்கான புதிய புரட்சி அனுபவத்தை, அதற்கான புரட்சிகர சித்தாந்தத்தை சிருஸ்டிக்கத் தவறவில்லை.
ஒரு புரட்சிகர சித்தாந்தமானது வெகுஜனத்தின் நடைமுறை வாழ்வைத் தழுவி நிற்க வேண்டும். மக்களின் அபிலாசைகளை, தேவைகளை, எதிர்பார்ப்புகளை நிறைவெய்தும் இலக்குகளைக் கொண்டிருக்க வேண்டும். மக்களின் வாழ்க்கைப் பிரச்சினைகளின் நிதர்சனத்தில் வார்க்கப்படும் சிந்தனைகளே மக்களைக் கவர்கின்றன. ஒரு புரட்சிகர சித்தாந்தமானது செயலின் மூச்சாக, மக்களை ஈர்க்கும் சக்தியாக, மக்களை இயக்கும் சக்தியாக உருவெடுக்கும் பொழுதே விடுதலைப் போராட்டத்தில் வெகுசனப் பங்களிப்பு சாத்தியமாகிறது. சாதாரண வாழ்க்கை ஓட்டத்திற்குப் புறம்பான, மக்களின் ஜீவாதாரப் பிரச்சினைகளைத் தொட்டு நிற்காத, பூடகமான, புதிரான சிந்தனைகள் மக்களைத் தீண்டப் போவதில்லை. புரட்சிச் சிந்தனையாளர் கப்ரால் இதுபற்றிக் குறிப்பிடுகையில், ‘வெறுமையான கருத்துக்களுக்காகவோ அல்லது யாரோ ஒருவனின் மண்டைக்குள் வெடிக்கும் எண்ணங்களுக்காகவோ மக்கள் ஒரு பொழுதும் போராடப் போவதில்லை. மக்கள் வேண்டுவதெல்லாம், உருப்படியான, பயன்தரும் நலன்களையே. தமது வாழ்க்கை நிலை மாறும், மேம்பட்டதாக அமையும் என்பதற்காகவும், தமது வாழ்க்கை நிம்மதியாகக் கஸ்டமின்றி முன்னேற்றப் பாதையில் செல்லும் என்பதற்காகவும், தமது பிள்ளைகளின் எதிர்காலம் சுபீட்சமாக அமையும் என்பதற்காகவுமே மக்கள் போராட முன்வருவார்கள்’ என்கிறார்.
தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டம் இன்று மக்கள் யுத்தமாக விஸ்தரிக்கப்படும் புரட்சிகர வரலாற்றுக் காலகட்டத்தை அண்மித்துள்ளது. இதுவரை காலமும் அனுதாபிகளாக, ஆதரவாளர்களாக இருந்து வந்த எமது மக்கள், இனி நேரடிப் பங்குதாரர்களாக மாறும் பொழுதே இந்த மக்கள் யுத்தம் சாத்தியமாகும். ஆனால் புரட்சிகர விழிப்புணர்வு தோன்றாமல் மக்கள் போராளிகளாக மாறப் போவதில்லை. இந்த விழிப்புணர்வைத் தட்டியெழுப்பக் கூடிய ஒரு புரட்சிகர விடுதலைச் சித்தாந்தம் எவ்வாறு அமையப் பெற்றிருக்க வேண்டும்?
எமது மக்களின் நிதர்சன வாழ்க்கை நிலைகளைப் பிரதிபலிக்காத, அவர்களது ஜீவாதாரப் பிரச்சினைகளைத் தொட்டு நிற்காத வரண்ட கருத்துக்கள், அந்நிய சிந்தனைகள், புதிரான கோட்பாடுகள் மக்களை ஒரு பொழுதும் போராட்ட களத்திற்கு ஈர்க்கப் போவதில்லை. எமது மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளின் சிக்கலான பரிமாணங்களும், அதற்கான வரலாற்றுக் காரணிகளும் தனித்தன்மை வாய்ந்தவை. எமது மக்கள் அந்தக் காலத்து ரஸ்யாவிலோ, சீனாவிலோ, கியூபாவிலோ வாழ்ந்து கொண்டிருக்கவில்லை. பழைய மரபு மார்க்சீயவாதிகள் அப்படித்தான் நினைத்தார்கள். அதனால் அந்நிய புரட்சி வடிவங்களையும், அவற்றின் தத்துவார்த்தக் கோட்பாடுகளையும் அளவு கோலாக வைத்து எமது மக்களின் பிரச்சினைகளை அளந்து பார்க்க முனைந்தார்கள். அதனால் மக்களிடமிருந்து அந்நியப்பட்டார்கள். இந்தப் பழமைவாத மார்க்சீயவாதிகள் சிலர் இன்று ‘விடுதலை இயக்கம்’ என்ற போர்வையில் எமது புரட்சிகர சூழ்நிலைக்கு ஒவ்வாத புராதன மார்க்சீயக் கருத்துக்களை விதைத்து வருகிறார்கள். மக்கள் கிரகித்துக் கொள்ள முடியாத, மக்களுக்கு அனாவசியமான, அரூபமான, அந்நியக் கருத்துக்களை மக்களுக்குத் திணித்துவிட்டால், மக்கள் புரட்சிவாதிகளாக மாறிவிடுவார்கள் என்று எண்ணுகிறார்கள் போலும்.
எமது மக்கள் வாழும் உலகம் வேறு. அவர்களது சமூக நிதர்சனம் வேறு. அவர்களது வரலாற்றுச் சூழ்நிலைகள் வேறு. நாம் எமது மக்கள் வாழும் உலகத்தில் பிரவேசிக்க வேண்டும். அந்த நிதர்சனத்தை நேரடியாகக் கிரகித்துக் கொள்ள வேண்டும். அதன் வரலாற்று ஓட்டத்தைக் கண்டுகொள்ள வேண்டும். இந்த முழுமையான தரிசனத்திலிருந்துதான், அந்தப் புரட்சிகரப் பிரக்ஞையிலிருந்துதான் நாம் எமது விடுதலைப் பாதையை நெறிப்படுத்த முடியும். ஒரு புரட்சிகர சித்தாந்தத்தைச் சிருஸ்டிக்க முடியும்.
அரச பயங்கரவாதப் பூகம்பத்தால் எமது சமூகக் கட்டுமாணம் ஆட்டம் காண ஆரம்பித்திருக்கிறது. சமூகப் பிரச்சினைகள் சிக்கலடைந்து, முரண்பாடுகள் கூர்மையடைந்துள்ளன. எமது மக்களின் சாதாரண வாழ்க்கைப் பிரச்சினைகள் ஜீவமரணப் போராட்டமாகப் பேருருவம் பெற்றுள்ளன. முழுச் சமுதாயமுமே ஒரு கொந்தளிப்பான, நெருக்கடியான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. இன்னொரு விதத்தில் சொல்லப் போனால், எமது சமூகத்தில் புரட்சிகரப் போருக்கான புறநிலைகள் முற்றி வருகின்றன. இந்தப் புரட்சிகரமான வரலாற்றுக் காலகட்டத்தில் நிற்கும் எமது மக்கள், ஒரு புரட்சிகர விடுதலைப் போரில், அதுவும் ஆயுதம் தரித்த போராட்டத்தில் நேரடிப் பங்குகொள்ளும் தயார்நிலையில் இருக்கிறார்களா? அப்படி இல்லாத பட்சத்தில் அவர்களைத் தயார் நிலைப்படுத்துவது எங்ஙனம்?
மக்கள் விடுதலையை விரும்புகிறார்கள். தேசிய ரீதியில், இன ரீதியில் அடக்குமுறை தாண்டவமாடுவதால், முழுத் தேசிய இனத்தின் ஒட்டுமொத்தமான ஏகோபித்த விளைச்சலாக இந்தச் சுதந்திர தாகம் பிறக்கிறது. ஆனால் இந்த விடுதலையை வென்றெடுப்பது எப்படி? இந்த விடுதலையின் தன்மை எப்படியாக இருக்க வேண்டும்? என்ற விசயத்தில் மக்களிடையே வேறுபட்ட அபிலாசைகளும், கண்ணோட்டங்களும் இருப்பதைக் காணலாம். இங்கு வேறுபட்ட பார்வைகளுக்கும், அபிலாசைகளுக்கும் சாதிய நலன்களே பிரதான காரணிகளாக விளங்குகின்றன. இந்தக் குழப்பத்திலிருந்து மக்களை விடுவித்து, அவர்களது சுயநல அபிலாசைகளுக்கு மேலான பொதுநல சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தி, அவர்களின் விடுதலை எழுச்சியைப் புரட்சிகரப் போராட்டப் பாதையில் இட்டுச் செல்வதற்கு ஒரு புரட்சிகர சித்தாந்தத்தின் பங்கு முக்கியமாகிறது.
பல நூற்றாண்டுகால அந்நிய காலனித்துவ ஆதிக்கத்தால் ஊறிய அடிமைத்தனமும், அதைத் தொடர்ந்து சிங்கள அரச அடக்குமுறையால் ஊட்டப்பட்ட பயங்களும் எமது மக்களிடையே போர் உணர்ச்சியை மழுங்கச் செய்தன. ஆயினும் அண்மைக் காலத்தில் எழுந்த ஆயுத எதிர்ப்பியக்கம், புதிய பரம்பரையைப் போர்க்குணம் கொள்ளச் செய்தது. இளைஞரின் ஆயுத எதிர்ப்பியக்கத்திற்கு மக்கள் ஆதரவு நல்கிய போதும், போராட்டத்தில் தமது பங்களிப்பின் முக்கியத்துவம் பற்றி அவர்கள் உணர்ந்து கொண்டதாகத் தெரியவில்லை. ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்து, விடுதலையை வென்றெடுப்பது இளைஞரின் பொறுப்பு, இயக்கங்களின் பொறுப்பு என்ற எதிர்பார்ப்பில் தமது பங்களிப்பிலிருந்து, தமது தேசியக் கடமையிலிருந்து மக்கள் விலகி நிற்கின்றனர். விடுதலை என்பது மற்றவர்கள் பெற்றுத் தரும் விவகாரம் என்ற ரீதியில் மக்களிடையே தவறான கருத்தோட்டம் வலுப்பெற்றது. இந்தப் போலி நம்பிக்கை விதைக்கப்பட்டதற்கு எமது பழைய பாராளுமன்றப் பிற்போக்குத் தலைமையும் காரணமாக இருந்தது. இந்திய உதவிக்கு இவர்கள் மண்டியிட்டு, மக்களின் சுயநம்பிக்கையைக் கொன்றனர்.
விடுதலையின் அர்த்தமென்ன? விடுதலையின் பயனாய் சமூக மாற்றத்தால் கிட்டும் அளப்பரிய பயன்கள் என்ன? என்ற ரீதியில் மக்களுக்கு விழிப்புணர்வும், தெளிவும் ஏற்படாத பட்சத்தில், அவர்களை அமைப்பு ரீதியாக அணிதிரட்டிப் போராட்டக் களத்தில் இயக்குவது இலகுவான காரியமல்ல. வெறும் அரசியல் சுதந்திரத்தைக் குறித்து நிற்கும் தமிழீழக் கோசத்தை எழுப்பி வந்தால் மட்டும் சமூகத்தின் அடித்தளத்திலிருந்து சதா நசுக்கப்பட்டுச் சுரண்டப்படும் உழைக்கும் மக்களை விடுதலைப் போராளிகளாக மாற்றிவிட முடியாது. தமிழீழத் தனியரசை அமைத்து, அரசியல் சுதந்திரம் பெறுவதை உயர்சாதி, மேற்தட்டு வர்க்கப் பிரிவினர் விரும்பலாம். இப்படியான குறுகிய வரையறுக்கப்பட்ட விடுதலையானது இவ்வர்க்கப் பிரிவினரின் அபிலாசைகளைப் பூர்த்தி செய்வதாக அமையும். தமது அரசியல் அதிகாரத்தை நிலைநாட்டவும், பொருளாதார ஆதிக்கத்தை வலுப்பெறச் செய்யவும், சாதிய சுரண்டலை நீடிக்கவும் இவ்வகையான விடுதலை இவர்களுக்கு வாய்ப்பை அளிக்கும். இம்மாதிரியான அரசியற் சுதந்திரம், இவ்வர்க்கப் பிரிவினரின் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யலாம் என்றாலும், இவர்கள் இந்த இலட்சியத்தை அடைவதற்குப் போர்க்களத்தில் குதிக்கப் போவதில்லை. ஏனெனில் இவர்கள் போராடும் புரட்சிகர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் அல்லர். இவர்கள் தம்மை ஆளும் வர்க்கம் எனக் கருதுபவர்கள். மற்றவர்கள் போராடி விடுதலையை அடைய வேண்டும்; தாம் ஆள வேண்டும் என எண்ணுபவர்கள்.
உழைக்கும் பாட்டாளி வர்க்கமே புரட்சிகர வர்க்கம். சமூகத்தின் கீழ்மட்டத்திலிருந்து திணறிக் கொண்டிருக்கும் இந்த ஏழைப் பாட்டாளிகளின் அபிலாசைகளோ வேறு. இவர்களது நாளாந்த வாழ்க்கையில் எதுவித மாற்றத்தையும் விளைவிக்காத அரச அதிகார மாற்றங்களில் இவர்களுக்கு அக்கறை இருக்கப் போவதில்லை. இவர்கள் நாடும் விடுதலை வேறு. இந்த விடுதலையானது அரசியற் சுதந்திரத்தோடு நில்லாது, சமூகப் பொருளாதார வாழ்க்கை நிலைகளிலும், புரட்சிகரமான அடிப்படை மாற்றங்களை ஏற்படுத்தி, உழைக்கும் மக்களின் விடிவுக்கு வழிகோலும் பரந்த இலட்சியங்களைக் கொண்டதாக இருக்க வேண்டும். இந்த விடுதலை முழுமையான மனித விடுதலையைக் குறித்து நிற்க வேண்டும். சுரண்டல், ஒடுக்குதல் போன்ற சமூக அநீதிகளால் விலங்கிடப்பட்டுக் கிடக்கும் சாதாரண மனிதன், உழைக்கும் மனிதன், இந்தப் புறநிலை அழுத்தங்களிலிருந்து பூரணமாகச் சுதந்திரம் பெறுவதே உண்மையான, முழுமையான விடுதலையைக் குறிக்கும். இப்படியான முழு மனித விடுதலையைத் தழுவி நிற்கும் புரட்சிகர விடுதலை இலட்சியமே பரந்துபட்ட வெகுசனத்தைக் கவரும்.