(விடுதலைப் புலிகளின் போராட்ட வரலாறு என்ற நூலிற்கு எழுதிய முன்னுரை)

வெளியீடு: 1985

தமிழீழப் புரட்சிகர ஆயுதப் போராட்டத்தின் வரலாறு தமிழீழ விடுதலைப் புலிகளின் வரலாறுதான். ஏனெனில் எமது விடுதலை இயக்கமே தமிழீழ மண்ணில் ஆயுதப் போராட்டத்திற்கான உறுதியான அடித்தளத்தை அமைத்து நீண்ட காலமாகத் தொடர்ச்சியான, நிலையான ஆயுதப் போராட்டத்தினை முன்னெடுத்திருக்கிறது. விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டமானது பத்து ஆண்டுகளுக்கு மேலான வரலாற்றைக் கொண்டது. உருக்குப் போன்ற உறுதியுடனும், உன்னத தியாக உணர்வுடனும் வீர காவியங்கள் படைத்த வீர மறவர்களின் வரலாறு இது. புரட்சிகர வரலாற்றுச் சூழ்நிலையால் பிறப்பெடுத்த விடுதலைப் புலிகள் இயக்கம், தலைமறைவு கெரில்லா அணியாகத் தோன்றி இன்று பரந்துபட்ட மக்களின் அபிமானத்திற்கும், ஆதரவிற்குமுரிய தேசிய விடுதலை இயக்கமாகப் பரிணாமம் பெற்றிருக்கிறது. விடுதலைப் புலிகளின் போராட்ட வரலாற்றைச் சித்தரிக்கும்போது, தமிழீழத்தின் புரட்சிகர ஆயுதப் போராட்டத்தின் தோற்றத்தையும், வளர்ச்சியையும் பற்றிய வரலாற்றுப் பின்னணியைக் குறிப்பிடுவது இன்றியமையாததாகும்.

அஹிம்சா ரீதியாக – சாத்வீக-சட்டரீதியான – மென்முறை வடிவில் மேற்கொள்ளப்படும் அரசியல் கிளர்ச்சிகள் தொடர்ச்சியாக அடக்கி ஒடுக்கப்படும் போது, சாத்வீக அஹிம்சைப் போராட்டங்களில் இழையோடுகிற ஆத்மீக உணர்வுகளை ஒடுக்குமுறையாளன் நிர்த்தாட்சண்யமாக அசட்டை செய்யும்போது, அரசியல் கிளர்ச்சியானது புரட்சிகர ஆயுதப் போராட்டத்தின் வடிவத்திலேயே வெடித்துக் குமுறுகிறது. இதையே உலகின் ஒடுக்கப்பட்ட மக்களினது சுதந்திரப் போராட்ட வரலாறுகள் நமக்கு எடுத்துக் காட்டுகின்றன. இத்தகைய ஒரு வரலாற்று நியதியிலேயே தமிழ்த் தேசியச் சுதந்திரப் போராட்டமும் நெறிப்படுத்தப்பட்டு, வளர்ச்சியடைந்து வந்திருக்கிறது.

தமிழ் மக்கள் காலங்காலமாக அகிம்சை வழியிலேயே தங்களது அரசியற் போராட்டத்தினை மேற்கொண்டு வந்திருக்கிறார்கள். தங்களது அடிப்படை மனித உரிமைகளை வென்றெடுப்பதற்காக, காந்திஜீயின் அகிம்சை வழிக் கோட்பாட்டினைப் பின்பற்றியே தமிழ் மக்கள் சத்தியாக்கிரகப் போராட்டங்களில் ஈடுபட்டனர். கால் நூற்றாண்டு காலமாக ஒற்றை ஆட்சி அமைப்பிற்குள் சமஸ்டி உரிமை கோரியே தமிழ் மக்கள் போராடி வந்துள்ளனர். பெரும்பான்மைச் சிங்கள மக்களுடன் சமாதானத்துடனும், ஒற்றுமையுடனும் இணைந்து வாழ்வதற்கு சாத்தியமான சகல நடவடிக்கைகளையும் தமிழர்கள் மேற்கொண்டிருந்தனர். ஆனால் தமிழ் மக்களின் நியாயமான – சட்டபூர்வமான – நாகரீகமான கோரிக்கைகள் அனைத்தும் சிங்கள ஆட்சியாளர்களால் முழுமையாகப் புறக்கணிக்கப்பட்டன. ஒடுக்கப்பட்ட தமிழ் இனத்தின் உரிமைகளுக்கான போராட்டத்தினை மனிதாபிமான முறையில் தீர்த்து வைப்பதற்கு மாறாக, சிங்கள இனவாத அரசு இராணுவ அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டுத் தமிழ் மக்களின் அஹிம்சா ரீதியிலான சத்தியாக்கிரகப் போராட்டங்களை ஈவிரக்கமின்றி நசுக்கியது. இத்தகைய காட்டுமிராண்டித்தனமான ஒரு ஒடுக்குமுறையானது, தமிழினத்தின் சமூக அமைப்பின் அடித்தளத்தையே தாக்கியது.

தமிழ் மக்கள் மீதான வன்முறைகள் அலை அலையாகத் தொடர்ச்சியாகக் கட்டவிழ்த்து விடப்பட்டன. தமிழ் பேசும் மக்களின் உயிருக்கும், உடமைக்கும் அழிவுகள் ஏற்படுத்தப்பட்டன. தமிழ் மக்களை அழித்தொழிக்கும் நாசகார இனப்படுகொலைத் திட்டத்தைச் சிங்களப் பேரினவாத அரசே திட்டமிட்டு மேற்கொண்டது. தமிழ்ப் பிரதேசங்களில் பெருமளவில் ஆயுதப் படைகள் குவிக்கப்பட்டன. இறுதியாக, தமிழ்ப் பிரதேசம் பூரண இராணுவக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டது. இவ்வாறு தமிழருக்கெதிரான ஒடுக்குமுறையும், தொடர்ச்சியான இராணுவப் பயங்கர வெறியாட்டமும், சிங்களத் தலைவர்கள் நிரந்தரமாக இழைத்து வந்த நம்பிக்கைத் துரோகங்களும், சமாதானமான முறையில் தங்களின் பிரச்சினைக்குத் தீர்வு காணுவதில் தமிழருக்கிருந்த சகல நம்பிக்கைகளையும் அழித்து விட்டன. அரசியல் அரங்கில் தமிழர்கள் நிராதரவாக்கப்பட்டார்கள்.

வரலாற்றின் இந்த நெருக்கடியான காலகட்டத்தில்தான் புரட்சிகர ஆயுத எதிர்ப்பு இயக்கம் (revolutionary armed resistance movement) தோற்றம் கண்டது. அரசு கட்டவிழ்த்து விட்ட காட்டுமிராண்டித்தனமான, இன அழிவு தழுவிய ஒடுக்குமுறையிலிருந்து தமிழ் மக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கு ஆயுதம் ஏந்துவதைத் தவிர வேறெந்த வழியும் இருக்கவில்லை. எனவே 1970களின் ஆரம்பத்தில் தமிழ் மண்ணில் தோற்றம் கண்ட ஆயுத எதிர்ப்பு இயக்கத்தை வளர்ச்சியும், விரிவாக்கமும் அடைந்த தமிழரின் அரசியற் போராட்ட வடிவமாகவே நாம் கொள்ள வேண்டும். தாங்கொணா ஒடுக்குமுறையை எதிர்த்துப் போராட வேண்டிய இறுதிக் கட்டத்திற்குத் தள்ளப்படும் மக்கள், வன்முறைப் போராட்டத்தை வரித்துக் கொள்வது தவிர்க்க முடியாததாகிறது. எனவே இந்த வன்முறைப் போர் வடிவமானது எமது அரசியற் போராட்டத்தின் ஒரு புதுமுகத் தோற்றப்பாடன்றி வேறொன்றுமல்ல. இரு தேசிய இனங்கள் மத்தியில் முரண்பாடு முற்றி, அப்பிரதான முரண்பாட்டின் வரலாற்றுக் குழந்தையாகவே ஆயுதப் போராட்டம் பிறப்பெடுத்தது. இந்த முரண்பாடானது காலப்போக்கில் அடக்குமுறையையும், அதற்கு எதிரான ஆயுத எழுச்சியையும் படிப்படியாகக் கூர்மையடையச் செய்தது.

புரட்சிகரத் தமிழ் இளைஞர்கள் மத்தியிலிருந்தே ஆயுதப் புரட்சிகர இயக்கம் கருக்கொண்டது. தொடர்ச்சியாக ஆட்சிக்கு வந்த சிங்கள அரசுகள் கையாண்ட ஒடுக்குமுறை இனவாதக் கொள்கைகளால் தமிழினத்தின் அரசியல், சமூக, பொருளாதார, கலாச்சார வாழ்வில் ஏற்பட்ட பாரதூரமான பாதிப்புக்களே தமிழ் இளைஞர்களைப் புரட்சிகரப் போராட்டப் பாதையை முன்னெடுக்க நிர்ப்பந்தித்தன. படித்த தமிழ் இளைஞர்களுக்கு அரசாங்கத் துறையில் வேலைவாய்ப்புக்கள் பூரணமாக நிராகரிக்கப்பட்ட போது, அவர்களுக்கு இருள்மயமான எதிர்காலம் மாத்திரமே மிஞ்சிக்கிடந்தது. சிங்கள அரசாங்கத்தின் பாரபட்சமான – தமிழர்களுக்கு எதிரான – ‘தரப்படுத்தல்’ கல்விக் கொள்கையும், ‘சிங்களம் மட்டும்’ என்ற மொழிக் கொள்கையும் தமிழ் மக்களின் உயர்கல்வி பெறுவதற்கான வாய்ப்பினையும், வேலை வாய்ப்பினையும் இல்லாமல் செய்துவிட்டது. மேலும் தமிழ் இளைஞர்களுக்கு எதிரான ஒடுக்குமுறையும் நாளாந்தம் மோசமாகிக் கொண்டிருந்தது. பொலீசும், இராணுவமும் தமிழ் இளைஞர்களைக் காரணம் ஏதுமில்லாமலேயே கைது செய்தும், மோசமாகச் சித்திரவதை செய்தும், கொன்றும் அட்டூழியங்கள் இழைத்தன. வேறு வார்த்தைகளில் சொல்வதானால் தமிழ் இளைஞர்களே அரச பயங்கரவாதத்திற்கு நேரடியாக இலக்காகிக் கொடூரமான – மனிதாபிமானமற்ற சித்திரவதைகளை அனுபவித்தனர்.

தொழில் வாய்ப்புகளும், உயர் கல்வி வாய்ப்புகளும் மறுக்கப்பட்ட நிலையில் ஏற்பட்ட விரக்தியும், தொடர்ச்சியான பொலிஸ், இராணுவ அட்டூழியங்களால் சினமும் கொண்ட தீவிரவாதத் தமிழ் இளைஞர்கள், தங்களின் இந்த மோசமான வாழ்நிலைமைகளைப் பூரணமாக மாற்றியமைக்கும் ஒரு புரட்சிகர சோசலிசப் போராட்டத்தின் மூலமே தங்களின் தலைவிதியை மாற்றியமைக்க முடியும் என்பதை உணர்ந்து கொண்டனர். இளைய தலைமுறையினர் சரியாக உணர்ந்து கொண்டதைப் போல, மோசமாகிக் கொண்டிருந்த தேசிய ஒடுக்குமுறையின் மத்தியில் புரட்சிகர ஆயுதப் போராட்டம் மாத்திரமே ஒரேயோரு தீர்வாக எஞ்சி நின்றது. 1970களின் ஆரம்பத்தில் எதேச்சையாகக் கட்டுப்பாடற்ற முறையில் பிரவாகமெடுத்த தமிழ்த் தீவிரவாத இளைஞர்களின் அரசியல் வன்முறை எழுச்சிகள், புரட்சிகர அமைப்பொன்றை நாடி நின்றன. இந்தப் பிரத்தியேகமான அரசியற் சூழ்நிலையில்தான், அதாவது 1972இல், விடுதலைப் புலிகள் இயக்கம் தனது வரலாற்று ரீதியான பிறப்பை எடுத்தது. எமது இந்தப் புரட்சி இயக்கம் இன்றைய தலைவரும், இராணுவத் தளபதியுமான வேலுப்பிள்ளை பிரபாகரனால் ஆரம்பிக்கப்பட்டது.

இயக்கம் தொடங்கப்பட்ட அதன் ஆரம்ப காலத்தில் புதிய தமிழ்ப் புலிகள் என்ற பெயரில் அழைக்கப்பட்டு, பின் 1976 மே ஐந்தாம் தேதி தமிழீழ விடுதலைப் புலிகள் என்று இயக்கம் புதிய பெயரைச் சூட்டிக் கொண்டது. விடுதலைப் புலிகள் இயக்கம் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்தே உறுதியும், அர்ப்பணிப்பும் பேரார்வமும் கொண்ட இளம் புரட்சிவாதிகளை அது பெருமளவில் ஈர்த்துக் கொண்டது. நகர்ப்புறக் கெரில்லா அமைப்பாக உருவாக்கப்பட்டு, தேசிய விடுதலைக்கான நீண்டகால மக்கள் யுத்தம் என்ற இலட்சியத்தில் தோய்ந்த விடுதலைப் புலிகள் இயக்கம், வெகு விரைவிலேயே தமிழ் மக்களின் புரட்சிகர ஆயுதப் போராட்ட இயக்கமாகப் பரிணமித்தது. விஞ்ஞான சோசலிசக் கோட்பாட்டை வரித்துக் கொண்ட புரட்சிகர விடுதலை இயக்கம் என்ற வகையில், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தேசியப் போராட்டத்தின் முன்னணி ஆயுதப் படையாகத் தன்னை விரைவிலேயே ஸ்தாபித்துக் கொண்டது.

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தோற்றமானது, தமிழ்த் தேசியச் சுதந்திரப் போராட்டத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு புதிய சகாப்தத்தைக் குறிக்கிறது. விடுதலைப் புலிகள் இயக்கமானது, இதுகாலம் வரை நடைபெற்று வந்த தமிழ் மக்களின் அரசியல் போராட்டத்தினைப் பரந்துபட்ட மக்களின் ஆயுதப் போராட்டம் என்ற எல்லைக்கு விஸ்தரித்தது. எமது யதார்த்த வரலாற்றுச் சூழ்நிலைகள் அனைத்தையும் பற்றிய நுணுக்கமான பரிசீலனையின் அடிப்படையிலேயே பரந்த வெகுசனப் போராட்டத்தின் வடிவமாக ஆயுதப் போராட்டத்தை நாம் வரித்துக் கொண்டோம். எங்களின் தேசியப் போராட்டத்தை முன்னெடுப்பதற்குப் புரட்சிகரமான எதிர்ப்பியக்கத்தைத் தவிர தமிழ் மக்களுக்கு வேறு மார்க்கம் எதுவுமேயில்லை என்ற யதார்த்த நிலைமையை முழுமையாகக் கிரகித்த பின்னரே நாம் ஆயுதப் போர்முறையைத் தழுவிக் கொண்டோம். ஆயுதப் போராட்ட வடிவமாக நாம் வரித்துக் கொண்ட கெரில்லாப் போர் முறையானது, எமது தேசியப் போராட்டத்திற்கு மிகவும் பொருத்தமான போர் வடிவமாகும். நிராயுதபாணிகளான வலிமை குறைந்த தமிழ் மக்கள், சிங்கள இனவாத அரசின் பாரிய இராணுவ வலிமைக்கு எதிராகப் போராடுவதற்கு நீண்டகால கெரில்லா யுத்தப் பாதையே மிகவும் பொருத்தமானது என்பதால்தான் இப்போர் யுக்தியை நாம் கைக்கொண்டோம்.

அரச ஒடுக்குமுறையை எதிர்க்கும் பாதுகாப்பு நடவடிக்கையாகவே எமது ஆயுதப் போராட்டம் ஆரம்பத்தில் அமைந்தது. காட்டுமிராண்டித்தனமான ஒடுக்குமுறைக்கு இலக்கான ஒரு சமூகம் என்ற வகையில், ஆயுதம் ஏந்தி எம்மைப் பாதுகாத்துக் கொள்ளும் உரிமை எமக்குண்டு. காலப்போக்கில் அரச பயங்கரவாதம் கூர்மையடைந்து அப்பாவிப் பொதுமக்கள் பலியாகி வந்ததால், இந்த வெறியாட்டத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் எமது போராட்ட நடவடிக்கைகள் புரட்சிகர எதிர்த் தாக்குதல்களாக அமைந்தன. எமது கெரில்லாப் போர் யுக்தியை வெறுமனவே ‘தாக்கிவிட்டு ஓடி மறையும்’ தந்திரோபாயம் என விமர்சிப்பவர்கள், கடந்த பத்தாண்டு காலமாக விட்டுக் கொடுக்காது, தொடர்ச்சியாக, தீர்க்கமாக நாம் நடத்திய கெரில்லாத் தாக்குதல்கள், அரசியல் ரீதியாகவும், இராணுவ ரீதியாகவும் கணிசமான அளவு எமது போராட்டத்தை முன்னெடுத்திருக்கிறதென்ற உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டும். அரச ஆயுதப் படைகளைக் கிலிகொள்ளச் செய்து, அவர்களது மனோவுறுதியையும், கட்டுப்பாட்டையும் குலைத்துவிட்ட எமது கெரில்லாப் போர்முறையானது, சிறீலங்கா அரச அமைப்பையே ஆட்டம் காணச் செய்திருப்பதுடன், தமிழர் பிரச்சினையை சர்வதேசமயப்படுத்தவும் உதவியுள்ளது. கெரில்லாப் போராட்டம் என்பது ஒரு வெகுசனப் போராட்ட வடிவம். கெரில்லாப் போர்முறை மக்கள் போராட்டத்திற்கு முரண்பட்டதல்ல. மக்கள் போராட்டத்தின் ஒரு உன்னத வடிவமாகவே அதனைக் கொள்ள வேண்டும். மக்கள் மத்தியில் கருக்கொண்டு, மக்களது அபிலாசைகளின் வெளிப்பாடாக உருவகம் கொள்ளும் பொழுதே கெரில்லாப் போர் வெகுசனப் போராட்ட வடிவத்தைப் பெறுகிறது. இதனைப் புரிந்துகொள்ளாத சிலர், கெரில்லாப் போர் வேறு, மக்கள் போர் வேறு எனத் தவறாக விமர்சிக்கின்றனர். கெரில்லாப் போராட்டத்தை மக்கள் மத்தியில் நிலைகொள்ளச் செய்து, அப்போரில் மக்களை நேரடியாகப் பங்களிக்கச் செய்து, இப்போர் முறையைப் பரந்துபட்ட மக்கள் போராக விஸ்தரிப்பதே எமது நோக்கமாகும்.

ஒடுக்குமுறை மோசமாகிக் கொண்டு போகும்போது, எதிர்ப்பு முறையும் மேலும் உரங்கொண்டு தீவிரம் பெறுவது இயற்கை. சகல புரட்சிகரப் போராட்டங்களிலும் இதுவே சரித்திர நியதியாக இருந்து வந்திருக்கிறது. சூழ்நிலைகளையும், சந்தர்ப்பங்களையும் கைவிட்டுத் திட்டவட்டமாகச் சொல்ல முடியாத – எப்போதோ வருமென்று கூறப்படுகிற எதிர்காலத்தில் – சிறந்த சந்தர்ப்பத்திற்காகக் காத்துக் கொண்டிருப்பதை விட்டுவிட்டு, ஒடுக்குமுறைக்கு மாறாக எதிர்ப்புமுறைகளைத் துரிதப்படுத்துவதன் மூலமே இந்த முரண்பாட்டினைச் சரியாகக் கையாளுவது சாத்தியமாகும். இதுவே எமது திட்டவட்டமான அரசியல், இராணுவக் குறிக்கோளாகும்.

எமது புரட்சிகர ஆயுதப் போராட்டத்தின் வளர்ச்சிப் போக்கின் பல்வேறு கட்டங்களையும் நுணுகி ஆராய்வதன் மூலமே அதன் அரசியல், இராணுவ முக்கியத்துவத்தினை விளங்கிக் கொள்ள முடியும். இவற்றைத் தனித்த நிகழ்ச்சிகளாக – ‘தனிநபர் பயங்கரவாதம் என்று – முத்திரை குத்துவதை விடுத்து, இவற்றை அதன் வரலாற்றுப் பின்னணியிலேயே பரிசீலனை செய்ய வேண்டும்.

எமது இயக்கத்தின் ஆரம்பகால நடவடிக்கைகள், பொலிஸ் உளவுப்படையின் அமைப்பினைச் சிதைப்பதையே மையமாகக் கொண்டிருந்தன. தமிழ் மக்களின் கிளர்ச்சிகரமான எழுச்சிகளை நசுக்குவதையே முக்கிய நோக்கமாகக் கொண்ட தமிழ் பொலீஸ் அதிகாரிகளை அழைத்து, வடக்கில் பொலீஸ் உளவுப்படையை சிறீலங்கா அரசு ஏற்படுத்தியிருந்தது. இந்தப் பொலீஸ் உளவுப்படையில் பொலீஸ் அதிகாரிகள் மட்டுமல்ல, எமது இயக்க நடவடிக்கைகளைப் பற்றித் தகவல்கள் வழங்குவோரும், துரோகிகளும் இடம்பெற்றிருந்தனர். இவர்கள் எமது இயக்க நடவடிக்கையைப் பற்றிக் கூறுகிற தகவல்களுக்கு அரசு பெருந்தொகைச் சன்மானங்களை இரகசியமாக வழங்குகிறது. இத்தகைய பொலீஸ் உளவு அமைப்பானது, விசேடமாக அப்போதுதான் அரும்பிக் கொண்டிருந்த விடுதலை இயக்கத்திற்கும், பொதுவாகத் தமிழர்களின் தேசியப் போராட்டத்திற்கும் பெரும் அச்சுறுத்தலாக அமைந்தது. ஆகவே எமது ஆரம்பகால கெரில்லாப் போராட்ட நடவடிக்கைகள், எமது தமிழீழ மண்ணில் நிலைகொள்ள முயன்ற பொலீஸ் உளவு அமைப்பைச் சிதைப்பதையே நோக்காகக் கொண்டிருந்தன. ஆகவே இந்தக் கட்டத்தில் ஒடுக்குமுறை அரசின் ஏஜண்டுகளாக எம்மக்கள் மத்தியிலேயே இருந்து கொண்டு இயக்கத்தைக் காட்டிக் கொடுக்கும் கயவர்களை ஒழிக்கும் நடவடிக்கையில் எமது இயக்கம் ஈடுபட்டது. காலகதியில் இத்தகைய பொலீஸ் உளவுப்படை அமைப்பைச் சிதைப்பதிலே நாங்கள் வெற்றி கண்டோம். இதனால் எமது இயக்க அங்கத்தவர்கள், மக்கள் மத்தியில் அரசியற் பணிகளில் ஈடுபடுவதும், கெரில்லாத் தளங்களை அமைப்பதும் இலகுவானதாக இருந்தது.

எமது ஆயுதப் போராட்டத்தின் இரண்டாவது நடவடிக்கை தமிழீழத்தின் பொலீஸ் நிர்வாக அமைப்பை நிலைகுலையச் செய்வதை மையமாகக் கொண்டிருந்தது. அரச பயங்கரவாதத்தின் கோட்டையாகத் தமிழீழ மண்ணில் செயற்பட்டுக் கொண்டிருந்த – தீவிர உசார் நிலையில் வைக்கப்பட்டிருந்த – பொலீஸ் நிலையங்கள் மீது கெரில்லாத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன.

மூன்றாவது கட்டத்தில், எமது கெரில்லாப் போராளிகள் இராணுவப் படைகள் மீது தாக்குதல்களை மேற்கொண்டனர். ஆங்காங்கே இராணுவப் படையினர் மீது எமது கெரில்லாப் போராளிகள் மறைந்திருந்து தாக்கியும், நேர் நின்று போரிட்டும் பலத்த சேதங்களை ஏற்படுத்தினர். அந்தப் படையினர் மத்தியில் பீதியும், மரண பயமும், ஒழுங்கீனமும், கட்டுபாடின்மையும் உருவாகின் கூலிப் பட்டாளத்திற்கேயுரிய கோழைத்தனமும், தப்பி ஓடும் மனோபாவமும் வேரூன்றின் பலர் இராணுவச் சேவையை விட்டே விலகினர். வடக்கே சேவையில் ஈடுபடும் இராணுவப் படையினருக்குக் கூடிய சம்பளமும், மேலதிக ஊதியமும் அரசு வழங்கியது. அரசியல் ரீதியாக மக்கள் மத்தியில் இயக்கத்தைக் கட்டி எழுப்பும் பணியும், மக்களை அரசியல்மயப்படுத்தும் பணியும் தீவிரமுற்றன. எமது அரசியல் அணியின் தொடர்ச்சியான, கடின உழைப்பால் தமிழீழமெங்கும் தலைமறைவுக் கெரில்லாத் தளங்களை அமைப்பது விரைவிலேயே சாத்தியமானது. மேலும் எமது இயக்கத்தில் தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர்கள், புரட்சிகர புத்திஜீவிகள் ஆகியோர் இணைந்து செயற்படத் தொடங்கினர்.

மக்களுடன் வாழ்ந்து, நாளாந்தம் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தாமும் முகம்கொடுத்து, அவர்களின் சுக, துக்கங்களில் பங்குகொண்டு, தேசியப் போராட்டத்தில் அவர்களுடன் சேர்ந்த உழைப்பதில் எமது இயக்க அணியினர் பெரும் அக்கறை கொண்டு செயற்பட்டனர்.

தமிழீழ விடுதலைப் புலிகள் முன்னெடுத்த ஆயுதப் போராட்டம், சிங்களப் பேரினவாத அரசின் மீதும், இலங்கையின் பொருளாதாரத்தின் மீதும் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தியது. தமிழீழ மண்ணில் சிங்கள அரசின் சிவில் நிர்வாகம் பூரணமாக நிலைகுலைந்தது; அரசியல் ஸ்தாபனங்கள் அனைத்தும் செயலிழந்தன; வங்கிகள் மூடப்பட்டன் பொலீஸ் நிலையங்கள் மூடப்பட்டன; அரச அமைப்பே முழுமையாகச் சீர்குலைந்தது. சிறீலங்கா மோசமான அரசியல், சமூக நெருக்கடியை எதிர்நோக்கியது. தொடர்ச்சியாக நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களால் சிறீலங்காவின் பொருளாதாரம் சீரழிந்தது. ஆக எமது விடுதலைப் போர் சிங்கள ஆளும் வர்க்கத்தையும், சர்வாதிகார அரசினையும் ஆட்டங்காணச் செய்தது. சிறீலங்கா அரசு உலகிற்கு ‘பயங்கரவாதம்’ என்று காட்ட முயன்ற போலி நாடகம் அரங்கேறவில்லை. எமது தொடர்ச்சியான ஆயுதப் போராட்டம், யதார்த்த நிலையை உலகிற்குத் தெளிவாக எடுத்துக் காட்டியது. எமது புரட்சிகர ஆயுதப் போராட்டமே, தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்டத்தை சர்வதேச அரங்கில் முன்வைத்தது.

எமது கெரில்லா அணிகளை புரட்சிகர மக்கள் இராணுவமாக விஸ்தரித்து, ஆயுதப் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தும் அடுத்த கட்டத்தில் நாம் நின்று கொண்டிருக்கிறோம். பரந்துபட்ட பொதுமக்களும் இணைந்து பங்குகொள்ளும் வெகுஜனத் தேசிய விடுதலைப் போராட்டத்தை இனங்காட்டும் ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த காலகட்டம் இது. எமது பொது எதிரியான சிங்களப் பேரினவாத அரசுக்கும், அதன் பயங்கரவாத அமைப்புக்கும் எதிராக எம்மோடு தோளோடு தோள் நின்று போராட மற்ற விடுதலை இயக்கங்களும் வந்திணையும் நாள் வெகுதூரத்தில் இல்லை. எமது புரட்சிகரப் போராட்டச் சூழ்நிலைகள் அத்தகைய ஒற்றுமையைச் சாத்தியமாக்கும் என்றே நாம் நம்புகிறோம்.