முன்னுரை
ஒடுக்கப்பட்ட மக்களின் தேசிய விடுதலைப் போராட்டங்களே இன்றைய உலக வரலாற்றின் போக்கை நிர்ணயிக்கும் மாபெரும் போராட்ட சக்தியாக முக்கியம் பெறுகின்றன. ஏகாதிபத்தியம், நவகாலனித்துவம், இனவாதம் போன்ற ஒடுக்குமுறை அட்டூழியங்களுக்கு எதிராக இன்று உலகின் பல அரங்குகளில் ஒடுக்கப்பட்ட சமூகங்களும், தேசிய இனங்களும் கிளர்ந்தெழுந்து புரட்சிகர சுதந்திரப் போராட்டங்களை நடத்தி வருகின்றன. இந்தத் தேசிய சுதந்திரப் போராட்டங்கள் ஒவ்வொன்றும் தமக்கே உரித்தான யதார்த்த புறநிலைகளையும், தனித்தன்மைகளையும் கொண்டுள்ளன என்பது உண்மையே. ஆயினும் இப் போராட்டங்கள் அனைத்தும் உலக வரலாற்று இயங்கு நியதிக்கு உட்பட்டே செயல்படுகின்றன. இந்த வரலாற்று இயக்கமானது ஒடுக்குவோருக்கும், ஒடுக்கப்படும் மக்களுக்கும் மத்தியில் எழும் போராட்டமாகவே வெடிக்கிறது. ஆகவே தேசிய விடுதலைப் போராட்டங்கள் சாராம்சத்தில் முற்போக்கானவை; புரட்சிகரமானவை. ஏனெனில் அவை மனித குலத்தின் வரலாற்று ஆன்மாவாகிய சுதந்திர வேட்கையை வெளிப்படுத்துகின்றன.
தேசிய சுயநிர்ணய உரிமை என்ற மூலாதாரக் கோட்பாட்டின் அடிபப்டையில்தான் இன்றைய தேசிய சுதந்திரப் போராட்டங்கள் அனைத்தும் முன்னெடுக்கப்படுகின்றன. தனது அரசியல் தலைவிதியை நிர்ணயிக்கும் உரிமை ஒரு தேசிய இனத்திற்கு உண்டு என்ற மகத்தான சுதந்திரப் பிரகடனமாக இது அமைகிறது. சர்வதேச சட்ட மரபுகளும், ஐ.நா. சாசனமும் இந்த உரிமையை அங்கீகரித்துள்ளன. இந்தத் தேசிய சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில்தான் தமிழீழ மக்களும் தமது தேசிய சுதந்திரப் போராட்டத்தை நெறிப்படுத்தி முன்னெடுத்து வருகின்றனர்.
தமிழீழ மக்களின் தேசிய சுயநிர்ணயப் போராட்டமானது நாற்பது ஆண்டு காலமான, நீண்ட பரிணாம வரலாற்றைக் கொண்டது. அரச ஒடுக்குமுறையும், அதற்கு எதிரான எழுச்சிப் போராட்டமுமாக இந்த வரலாறு விரிகிறது. ஈழத்தமிழர் சுதந்திர இயக்கம் ஆரம்ப காலகட்டத்தில் அமைதிவழிப் போராட்டமாகவும், பின்னர் ஆயுதப் போராட்டமாகவும் முதிர்ச்சியடைந்து உயர்வடிவம் பெற்றது. அரச ஒடுக்குமுறை இனப்படுகொலையாகத் தீவிரமடைந்ததன் எதிர்விளைவாகவே, தமிழரின் எழுச்சிப் போராட்டம் ஆயுதம் தாங்கிய யுத்தமாக விரிவாக்கம் அடைந்து முனைப்புப் பெற்றது.
தமிழீழ மக்களின் உண்மையான பிரதிநிதிகளாகவும், அவர்களது தேசிய விடுதலை இயக்கமாகவும் திகழ்வது விடுதலைப் புலிகள் அமைப்பாகும். ஈழத்தமிழ் இனத்தின் விடிவிற்காகவும், தமிழீழ தாயகத்தின் பூரண சுதந்திரத்திற்காகவும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் நீண்ட, தொடர்ச்சியான, தீர்க்கமான போராட்டத்தை நடத்தி வருகிறது. புரட்சிகர ஆயுதப் போராகவும், எழுச்சிமிகு வெகுசனப் போராட்டமாகவும் எமது இயக்கம் தேசிய விடுதலைப் போரை முன்னெடுத்து வருகிறது. தமிழீழ மக்களைத் தேசிய ரீதியாக அணிதிரட்டி, தேசாபிமான உணர்வைத் தட்டி எழுப்பி, தமிழீழ தேசிய எழுச்சியின் சின்னமாகவும், தேச சுதந்திரப் போராட்ட சக்தியாகவும் எமது இயக்கம் உருப்பெற்றிருக்கிறது. எமது இயக்கத்தின் போராட்ட சாதனையால் தமிழீழ மக்களின் தேசிய சுதந்திரப் போராட்டம் இன்று உலகப் பிரசித்தி பெற்ற விடுதலைப் போராகச் சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
இந்த ஆவணம் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் வேலைத் திட்டத்தையும், கொள்கை விளக்கத்தையும் தெளிவுபடுத்துகிறது. முதற் பகுதியில் தமிழீழ மக்களின் தேசிய சுயநிர்ணய உரிமைக்கான போராட்ட வரலாறும், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தோற்றம், வளர்ச்சி, முதிர்ச்சி பற்றிய வரலாற்றுப் பின்னணியும், எமது இயக்கத்தின் சாதனைகளும் சுருக்கமாக விளக்கப்படுகிறன.
விடுதலைப் புலிகள் இயக்கமும் தேசிய விடுதலைப் போராட்டமும்
வரலாற்றுப் பின்னணி: அரச ஒடுக்குமுறை
1948ஆம் ஆண்டு ஆங்கில ஏகாதிபத்தியம் சிங்கள ஆளும் வர்க்கத்திடம் அரசியல் அதிகாரத்தை ஒப்படைத்து இலங்கைத் தீவுக்கு ‘சுதந்திரம்’ வழங்கியதைத் தொடர்ந்து, சிங்களப் பேரினவாத ஒடுக்குமுறையானது மிகவும் கோரமான முறையில் தமிழீழ மக்களைத் தாக்கியது. இந்த ஒடுக்குமுறையானது வெறும் இனவெறியின் வெளிப்பாடாக அமையவில்லை. தமிழ்த் தேசிய அமைப்பின் அத்திவாரங்களைத் தகர்த்தெறிந்து, இன ரீதியாகத் தமிழரை அழிக்கும் ஒரு திட்டமிட்ட இனப்படுகொலை வடிவமாகவே அது அமையப் பெற்றது. தமிழ்த் தேசியத்திற்கு மூலாதாரமான மொழி, கலாச்சாரம், கல்வி, பொருளாதார வாழ்வு, பாரம்பரியப் பூமி என்ற ரீதியில் பல துருவங்களில் இந்த ஒடுக்குமுறை தமிழ் பேசும் மக்களைத் தீண்டி, அவர்களது தேசிய தனித்துவத்தையும் ஜீவாதார வாழ்வையும் சீர்குலைக்க முனைந்தது.
சிங்கள அரச ஒடுக்குமுறையின் அட்டூழியத்திற்கு முதன்முதலாகப் பலிக்கடா ஆனவர்கள், மலையகத் தமிழ்ப் பாட்டாளி மக்களாவர். 1948, 1949ஆம் ஆண்டுகளில் அதர்மமான குடியுரிமைச் சட்டங்களை நிறைவேற்றி, சிங்கள அரசானது 10 லட்சம் தோட்டத் தொழிலாளரின் வாக்குரிமையைப் பறித்தெடுத்தது. இந்த அக்கிரமமான செயல் மூலம், இலங்கையின் பொருளாதாரத்திற்கு முதுகெலும்பாக விளங்கிய இந்த உழைக்கும் மக்கள், நாடற்றவர் என்ற இழிநிலைக்குத் தள்ளப்பட்டதுடன், அடிப்படை மனித உரிமைகளையும் இழந்தனர்.
தமிழ்த் தேசியத்தைச் சீர்குலைக்கும் நாசகார நோக்குடன் சிங்களப் பேரினவாத அரசுகள் தமிழ்ப் பிரதேசங்களில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை ஆரம்பித்தன. இலங்கை ‘சுதந்திரம்’ அடைந்ததை அடுத்து ஆரம்பிக்கப்பட்ட இந்தக் குடியேற்ற ஆக்கிரமிப்பு, இதுவரை கிட்டத்தட்ட இரண்டாயிரம் சதுர மைல் அளவிலான தமிழ் மண்ணை விழுங்கியுள்ளது. இந்தக் குடியேற்றங்கள் தமிழ்த் தாயகத்தின் பூகோள அமைப்பைப் படிப்படியாகக் கபளீகரம் செய்து, தமிழ் பேசும் மக்களைச் சொந்த மண்ணிலேயே சிறுபான்மையினராக்கும் ஆபத்தான அம்சங்களைக் கொண்டவை.
அரச ஒடுக்குமுறையானது தமிழ் மக்களின் மொழி, கல்வி, தொழில் போன்ற மூலாதார வாழ்வு அம்சங்களைத் தீண்டியது. 1956ஆம் ஆண்டின் தனிச் சிங்களச் சட்டம், தமிழ் மொழியின் சம அந்தஸ்திற்குக் குழிபறித்துவிட்டுச் சிங்களத்தை அரச மொழியாக்கியது. இந்த இனவாத மொழிச்சட்டம், அந்நிய மொழியான சிங்களத்தைத் தமிழ் மக்கள் மீது திணிக்க முயன்றதுடன், தமிழர்களுக்கு வேலைவாய்ப்புக் கதவுகளை நிரந்தரமாக மூடியது.
கல்வித் துறையிலும் சிங்கள இனவாதம் ஊடுருவித் தமிழ் இளம் சமூகத்தினரின் உயர்கல்வி வாய்ப்புகளுக்கு ஆப்பு வைத்தது. 1972இல் தரப்படுத்தல் என்ற இனப் பாகுபாட்டுச் சட்டம் அமுலுக்குக் கொண்டு வரப்பட்டதால், பல்லாயிரக்கணக்கான தமிழ் இளைஞர்களின் உயர் கல்வி பெரிதும் பாதிக்கப்பட்டது.
இவ்விதம் அரச ஒடுக்குமுறையானது தமிழீழ மக்களின் மொழியுரிமை, கல்வியுரிமை, வேலைவாய்ப்பு உரிமை ஆகிய அடிப்படை உரிமைகளை நசுக்கியது. அத்தோடு தேசிய அபிவிருத்தித் திட்டங்களிலிருந்தும் தமிழ்த் தாயகம் திட்டமிட்ட முறையில் ஒதுக்கப்பட்டது. தமிழர் தாயகம் தேய, சிங்கள தேசம் வளர்ந்தது. இவ்வித திட்டமிட்ட நாசகார நடவடிக்கைகளினால், ஈழத்தமிழ் மக்கள் என்றுமில்லாத பொருளாதாரச் சீர்குலைவை எதிர்நோக்கினர்.
அப்பட்டமான இனப்படுகொலை
தமிழீழ மக்களுக்கு எதிராகச் சிங்கள இனவாத அரசு மேற்கொண்ட ஒடுக்குமுறையை ஒரு அப்பட்டமான இன ஒழிப்புத் திட்டம் என்றே கொள்ள வேண்டும். இந்த இன ஒழிப்புத் திட்டம் இரு அம்சங்களைக் கொண்டது. ஒன்று, தமிழ்த் தேசியத்தின் தூண்களாக விளங்கும் மொழி, கலாச்சாரம், பொருளாதாரம், பாரம்பரிய பூமி ஆகியனவற்றைப் படிப்படியாகத் தாக்கித் தமிழீழ மக்களின் தேசிய அமைப்பையும், தனித்துவத்தையும் அழிப்பது. இரண்டாவது தமிழ் மக்களைப் பெருந்தொகையில் படுகொலை செய்து அழிப்பது. இலங்கையில் தலைதூக்கிய இனக்கலவரங்கள் அனைத்தும் இந்த இரண்டாவது ரக இன ஒழிப்பின் கோர வெளிப்பாடுகளாகவே அமைந்தன. 1956, 1958, 1961, 1974, 1977, 1979, 1981, 1983ஆம் ஆண்டுகளில் வெடித்த இனப்பூகம்பங்கள், சிங்கள அரசின் மேற்பார்வையில் தமிழர்களை சங்காரம் செய்யும் நோக்குடன் கட்டவிழ்த்து விடப்பட்டன.
இந்த இனப் பிரளயங்களில் பல்லாயிரக்கணக்கான அப்பாவித் தமிழ் மக்கள் ஈவிரக்கமின்றிக் கொன்று குவிக்கப்பட்டனர். பல கோடிக்கணக்கில் தமிழரின் சொத்துக்கள் நாசமாக்கப்பட்டன. பல இலட்சம் மக்கள் வீடிழந்து அகதிகளாக்கப்பட்டனர். 1983 ஜுலை கலவரத்தை அடுத்து, தமிழ் இன அழிப்பு ஒரு புதிய, பயங்கரப் பரிமாணத்தை அடைந்தது. அதாவது, இன ஒழிப்பில் சிங்களப் படைகள் எவ்வித கட்டுப்பாடுமின்றி பகிரங்கமாக ஈடுபடத் தொடங்கின. விடுதலைப் புலிகளின் தாக்குதல்களுக்குப் பழிவாங்கும் ரீதியில், பொதுமக்களைப் பெரும்தொகையில் அழிக்கும் இனச் சங்காரத்தை நடத்தின. 1983 ஜுலையிலிருந்து இன்றுவரை சிங்கள அரசின் இனவொழிப்புப் பயங்கரவாதத்திற்கு இருபதுனாயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவிப் பொதுமக்கள் பலியாகியுள்ளனர்.
ஆயுதப் போராட்டத்தின் தோற்றம்
சாத்வீக ரீதியான, அமைதிவழிப் போராட்டங்கள் தொடர்ச்சியாக, மிருகத்தனமாக அடக்கி ஒடுக்கப்படும் பொழுது, ஒடுக்கப்படும் மக்களின் நியாயபூர்வமான கோரிக்கைகளை ஒடுக்குமுறையாளன் முற்றாக நிராகரித்து விடும் போது, நாகரீக அரசியல் மரபுகள் தழுவிய சட்டரீதியான கிளர்ச்சிகளுக்கு தடைவிதிக்கப்படும் பொழுது, அமைதிவழிப் போராட்டங்களில் இழையோடுகிற ஆன்மீக உணர்வுகளை ஒடுக்குமுறையாளன் நிர்தாட்சண்யமாக அசட்டை செய்யும்போது, அரசியல் கிளர்ச்சியானது புரட்சிகர ஆயுதப் போராட்ட வடிவில் வெடித்துக் குமுறுகிறது. இந்த யதார்த்த உண்மையை, உலகின் ஒடுக்கப்பட்ட மக்களினது சுதந்திரப் போராட்ட வரலாறுகள் எமக்கு எடுத்துக் காட்டுகின்றன. இத்தகைய ஒரு வரலாற்று ஓட்டத்திலேயே தமிழீழ தேசிய சுதந்திரப் போராட்டமும் வளர்ச்சியடைந்து வந்திருக்கிறது.
தமிழ் மக்கள் காலங்காலமாக அமைதி வழியிலேயே தங்களது அரசியற் போராட்டங்களை மேற்கொண்டு வந்திருக்கிறார்கள். தங்களது அடிப்படை மனித உரிமைகளை வென்றெடுப்பதற்காகக் காந்திஜீயின் அகிம்சைக் கோட்பாட்டினைப் பின்பற்றிய தமிழ் மக்கள், சத்தியாக்கிரகப் போராட்டங்களை நடத்தினர். கால் நூற்றாண்டு காலமாக ஒற்றை ஆட்சி அமைப்பிற்குள் சமஸ்டி உரிமை கோரிப் போராடி வந்துள்ளனர். பெரும்பான்மைச் சிங்கள மக்களுடன் சமாதானத்துடனும், ஒற்றுமையுடனும் இணைந்து வாழ்வதற்குச் சாத்தியமான சகல முயற்சிகளையும் தமிழ் மக்கள் மேற்கொண்டனர். ஆனால் தமிழ் மக்களின் நியாயமான, சட்டபூர்வமான, நாகரீகமான கோரிக்கைகள் அனைத்தும் சிங்கள ஆட்சியாளர்களால் முற்றாகப் புறக்கணிக்கப்பட்டன. 1961ஆம் ஆண்டில் தமிழீழ அரசியல் அரங்கில் பிரவாகமெடுத்த சாத்வீகப் புரட்சி வெள்ளம், எமது விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஒரு மகத்தான வரலாற்று நிகழ்வாகும். சத்தியாக்கிரகமாக, ஒத்துழையா இயக்கமாக வெடித்த அரசியல் கிளர்ச்சி, மாபெரும் தேசிய எழுச்சியாக உருவம் எடுத்தது; ஒன்றுபட்ட மக்களின் எதிர்ப்பு இயக்கமாக வடிவம் பெற்றது. ஒடுக்கப்பட்ட தமிழ் இனத்தின் உரிமைப் போராட்டத்தினை மனிதாபிமான முறையில் தீர்த்து வைப்பதற்கு மாறாக, சிங்கள இனவாத அரசு இராணுவ அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டுத் தமிழ் மக்களின் அமைதிவழிப் போராட்டங்களை ஈவிரக்கமின்றி நசுக்கியது. இவ்வாறு தமிழர்களுக்கு எதிரான ஒடுக்குமுறையும், தொடர்ச்சியான இராணுவப் பயங்கர வெறியாட்டமும், சிங்களத் தலைமைப்பீடம் மாறி மாறி இழைத்து வந்த நம்பிக்கைத் துரோகங்களும், தமிழர்களுக்கு அமைதிவழிப் போராட்டங்களில் நம்பிக்கையைத் தகர்த்தது; சமாதான முறையில், சமரசப் பேச்சுக்கள் மூலம் தங்களது பிரச்சினைக்குத் தீர்வு காண்பது சாத்தியமில்லை என்பதை உணர்த்தியது. வரலாற்றின் இந்த நெருக்கடியான காலகட்டத்தில்தான் புரட்சிகர ஆயுத எதிர்ப்பியக்கம் தோற்றம் கண்டது. சிங்கள அரசு கட்டவிழ்த்து விட்ட காட்டுமிராண்டித்தனமான இன ஒழிப்பு ஒடுக்குமுறையிலிருந்து தமிழ் மக்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கு ஆயுதம் ஏந்திப் போராடுவதைத் தவிர வேறு எந்த வழியும் இருக்கவில்லை. தாங்கொணா ஒடுக்குமுறையை எதிர்த்துப் போராட வேண்டிய இறுதிக் கட்டத்திற்கு தள்ளப்பட்ட எமது மக்கள், வன்முறைப் போராட்டத்தை வரித்துக் கொண்டது தவிர்க்க முடியாதது. ஆகவே, ஆயுத வன்முறைப் போர் வடிவமானது தமிழீழ மக்களின் அரசியற் போராட்டத்தின் ஒரு புதுமுகத் தோற்றப்பாடாகவும், உயர்கட்ட வளர்ச்சியாகவுமே கொள்ளப்பட வேண்டும். அரச ஒடுக்குமுறை, சிங்கள-தமிழ் தேசிய இனங்கள் மத்தியில் முரண்பாட்டைக் கூர்மையடையச் செய்து, அப்பிரதான முரண்பாட்டின் வரலாற்றுக் குழந்தையாகவே ஆயுதப் போராட்டம் பிறப்பெடுத்தது. இவ்விதம் தமிழீழ மக்களின் தேசிய சுயநிர்ணய உரிமைப் போராட்டமானது அகிம்சை வடிவத்திலிருந்து புரட்சிகர ஆயுதப் போராட்ட வடிவமாக மாபெரும் வரலாற்றுத் திருப்பத்தை அடைந்தது.
புரட்சிகரத் தமிழ் இளைஞர்கள் மத்தியிலிருந்தே ஆயுதப் புரட்சிகர இயக்கம் கருக் கொண்டது. மாறி, மாறிப் பதவிக்கு வந்த சிங்கள அரசுகள் நடைமுறைப்படுத்திய இனவாதக் கொள்கைகளால், தமிழினத்தின் சமூக, பொருளாதார வாழ்வில் ஏற்பட்ட பாரதூரமான பாதிப்புக்களே, தமிழ் இளைஞர்களைப் புரட்சிகரப் போராட்டப் பாதையை முன்னெடுக்க நிர்ப்பந்தித்தன. சிங்கள அரசின் பாரபட்சமான, தமிழர்களுக்கு எதிரான ‘தரப்படுத்தல்’ கல்விக் கொள்கையும், ‘சிங்களம் மட்டும்’ என்ற மொழிக் கொள்கையும், உயர் கல்விக்கும், வேலை வாய்ப்பிற்குமான கதவுகளை முற்றாக மூடிவிட்டிருந்தது. இதன் விளைவாக, படித்த தமிழ் இளைஞர்கள் விரக்தியும், வெறுமையும் நிறைந்த இருள்மயமான எதிர்காலத்தை எதிர்கொண்டனர். மேலும் தமிழ் இளைஞர்களுக்கு எதிரான ஒடுக்குமுறையும் நாளாந்தம் தீவிரமடைந்து வந்தது. அரசின் அடக்குமுறைக் கருவிகளான ஆயுதப் படைகளும், காவற்துறையும் தமிழ் இளைஞர்களைக் காரணமின்றிக் கைதுசெய்தும், மிருகத்தனமாகச் சித்திரவதை செய்தும், படுகொலை செய்தும் அட்டூழியங்களைப் புரிந்தன. தமிழ் இளைஞர்களே அரச பயங்கரவாத அட்டூழியங்களுக்கு நேரடியாக இலக்காகி, மிகவும் கொடூரமான அடக்குமுறைக்கு ஆளாகினர்.
வேலையில்லாத் திண்டாட்டத்தால் ஏற்பட்ட விரக்தி, கல்வி வாய்ப்புகள் மறுக்கப்பட்டதால் எழுந்த வெறுப்பு, தொடர்ச்சியான பொலீஸ்-இராணுவ அட்டூழியங்களால் பிறந்த ஆத்திரம்; இவை, தீவிரவாத தமிழ் இளைஞர்களைப் புரட்சிப் பாதையில் ஈர்த்தது. தங்களது மோசமான வாழ்க்கை நிலையைப் பூரணமாக மாற்றியமைக்கத் தமிழ் இளம் சமுதாயம் உறுதிபூண்டது. ஒரு புரட்சிகர சோசலிசப் போராட்டம் மூலமே தங்களது தலைவிதியை மாற்றியமைக்க முடியும் என்பதை அரசியல் விழிப்புணர்வு பெற்ற தமிழ் இளைஞர்கள் உணர்ந்து கொண்டனர். இளைய தலைமுறையினர் சரியாக உணர்ந்து கொண்டதுபோல, கூர்மையடைந்து வந்த தேசிய ஒடுக்குமுறையின் யதார்த்த சூழலில், தேசிய விடுதலைக்கும், சோசலிச சமூக மாற்றத்திற்கும் ஆயுதப் போராட்டமே ஒரேயொரு வழியாக எஞ்சி நின்றது.
விடுதலைப் புலிகளின் தோற்றமும் ஆயுதப் போராட்ட வளர்ச்சியும்
1970களின் ஆரம்பத்தில், எதேச்சையாகக் கட்டுப்பாடற்ற முறையில் பிரவாகமெடுத்த தமிழ்த் தீவிரவாத இளைஞர்களின் அரசியல் வன்முறை எழுச்சிகள், புரட்சிகர அரசியற் சித்தாந்தத்தையும், செயற்பாட்டையும் அடிப்படையாகக் கொண்ட புரட்சிகர இயக்கமொன்றை நாடி நின்றன. பழமைவாத தமிழ் அரசியல் கட்சிகளோ, அன்றி மரபுவழி மார்க்சிய இடதுசாரிக் கட்சிகளோ எவ்வித புரட்சிகரப் பாதையையும் காட்டி நிற்கவில்லை. தமிழ்க் கட்சிகள், உணர்ச்சிவயமான தேசியவாதச் சுலோகங்களை எழுப்பினவே தவிர, தமிழ் மக்களின் சுபீட்சத்திற்கு உருப்படியான, நடைமுறை சாத்தியமான செயற்திட்டம் எதையும் முன்வைக்கவில்லை. இடதுசாரி இயக்கங்கள், தமிழர்களுக்கு எதிரான அரச ஒடுக்குமுறையின் கொடூர யதார்த்தத்தைக் கண்டும் காணாதது போல நடித்து, சிங்களப் பேரினவாத ஆளும் வர்க்கத்துடன் ஒத்துழைக்கும் பிற்போக்கான கொள்கையைத் தழுவி நின்றன. இப்படியான அரசியல் வெறுமையில், தமிழ் மக்களின் சுதந்திரப் போராட்டப் புறநிலைகள் ஒரு புரட்சிகர விடுதலை இயக்கத்தைத் தோற்றுவிக்கும் வரலாற்றுத் தேவையைப் பிறப்பித்தன. இந்தப் பிரத்தியேகமான அரசியற் சூழ்நிலையில், அதாவது 1972இல், விடுதலைப் புலிகள் இயக்கம் தனது வரலாற்று ரீதியான பிறப்பை எடுத்தது. எமது தலைவரும், பிரதம இராணுவத் தளபதியுமான வேலுப்பிள்ளை பிரபாகரனால் எமது விடுதலை இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. இயக்கம் தொடங்கப்பட்ட ஆரம்ப காலத்தில் புதிய தமிழ்ப் புலிகள் என்ற பெயரில் அழைக்கப்பட்டு, பின்பு 1976 மே மாதம் 5ஆம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற புதிய பெயரைச் சூடிக் கொண்டது.
தலைமறைவான கெரில்லாக் குழுவாக உதயமான புலிகள் இயக்கம், காலக்கிரமத்தில் மிகவும் கட்டுப்பாடான ஆயுத எதிர்ப்பு இயக்கமாகப் பரிணமித்து, அரச பயங்கரவாதத்திற்கு ஒரு பெரும் சவாலாகச் செயற்படத் தொடங்கியது. இனவொழிப்பு ஒடுக்குமுறையின் தீவிரம் ஒருபுறமும், அரசின் ஈவிரக்கமற்ற எதிர்ப்புரட்சி நடவடிக்கைகள் மறுபுறமுமாக, ஆபத்தான சூழ்நிலையை சந்திக்க வேண்டி நிர்ப்பந்திக்கப்பட்டதால், எமது விடுதலை இயக்கம் தனது கெரில்லாப் போர் அமைப்புக்களை சதா விஸ்தரித்து, பலப்படுத்தி அரச படைகளுக்கு எதிராகத் தீர்க்கமான, வீராவேசப் போராட்டத்தில் குதித்தது. விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டமானது, பதின்மூன்று ஆண்டுகளுக்கு மேலான வரலாற்றைக் கொண்டது. உன்னதமான தியாகங்களும், அற்புதமான அர்ப்பணிப்புகளும், திகைப்பூட்டும் வீர சாதனைகளும் நிறைந்த ஒரு புரட்சிக் காவியமாக விடுதலைப் புலிகளின் வரலாறு படைக்கப்பட்டிருக்கிறது. இந்த நீண்ட தியாகப் பயணத்தில் மக்களோடு ஒன்றிக்கலந்த எமது இயக்கம், இன்று பரந்துபட்ட மக்களின் அபிமானத்திற்கும், ஆதரவுக்குமுரிய தேசிய விடுதலை இயக்கமாக வளர்ச்சி பெற்றிருக்கிறது.
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தோற்றமானது தமிழ்த் தேசிய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு புதிய சகாப்தத்தைக் குறிக்கிறது. தமிழ் மக்களின் அரசியல் போராட்டத்தை ஆயுதப் போராட்ட வடிவமாக விஸ்தரித்து, உயர்கட்டத்திற்கு முன்னெடுத்துச் சென்று, இந்தப் புதிய சகாப்தத்தைப் புலிகள் படைத்தனர். எமது போராட்டத்தின் தனித்தன்மை, புறநிலைகள், யதார்த்த வரலாற்றுச் சூழ்நிலைகள் ஆகியவற்றை நுணுக்கமாகப் பரிசீலனை செய்தே, ஆயுதப் போராட்டத்தை வெகுசனப் போராட்ட வடிவமாக நாம் வரித்துக் கொண்டோம். எமது தேசிய விடுதலைப் போராட்டத்தை முன்னெடுப்பதற்கு, ஆயுதப் போராட்டத்தைத் தவிர தமிழ் மக்களுக்கு வேறு மார்க்கம் எதுவுமேயில்லை என்ற யதார்த்த உண்மையை முழுமையாக உணர்ந்த பின்னரே, எமது இயக்கம் ஆயுதப் போர்முறையைத் தழுவிக் கொண்டது. ஆயுதப் போராட்ட வடிவமாக நாம் வரித்துக் கொண்ட கெரில்லாப் போர்முறையானது, எமது தேசியப் போராட்டத்திற்கு மிகவும் பொருத்தமான போர் வடிவமாகும்.
நிராயுதபாணிகளான, வலிமை குறைந்த தமிழ் மக்கள், சிங்கள இனவாத அரசின் பாரிய இராணுவ வலிமைக்கு எதிராகப் போராடுவதற்கு நீண்டகால கெரில்லா யுத்தப் பாதையே மிகவும் பொருத்தமானது என்பதால்தான் இந்தப் போர்முறையை நாம் கைக்கொண்டோம். ஆரம்ப காலத்தில் எமது ஆயுதப் போராட்டம் அரச ஒடுக்குமுறையை எதிர்க்கும் பாதுகாப்பு நடவடிக்கையாகவே அமைந்தது. மிருகத்தனமான ஒடுக்குமுறைக்கு இலக்காகியுள்ள ஒரு மக்கள் சமூகம் என்ற ரீதியில், ஆயுதம் ஏந்தி எம்மைப் பாதுகாத்துக் கொள்ளும் உரிமை எமக்குண்டு. காலப் போக்கில் அரச பயங்கரவாதம் கூர்மையடைந்து, அப்பாவிப் பொதுமக்கள் பெருமளவில் பலியாகி வந்ததால், இந்த வெறியாட்டத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் எமது போராட்ட நடவடிக்கைகள் புரட்சிகர எதிர்த் தாக்குதல்களாக அமைந்தன.
விடுதலைப் புலிகளின் சாதனைகள்
1980களின் நடுப்பகுதியிலும், அதனையடுத்த கால கட்டத்திலும் எமது ஆயுதப் போர் நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டதுடன், எமது கெரில்லா போர் வடிவமும் மரபுவழி யுத்தமுறையாக விஸ்தரிப்படைந்து, முன்னேற்றம் கண்டது. ஆயுதப் போராட்டத்தைத் தீவிரப்படுத்தி, பல வெற்றிகரமான போர்ச் சாதனைகளை ஈட்டியதன் விளைவாகச் சிங்கள ஆயுதப் படைகளின் கொட்டத்தை அடக்கி, அவர்களை முகாம்களுக்கு உள்ளே முற்றுகையிட்டு முடக்கி வைக்க எம்மால் முடிந்தது. எமது ஆயுதப் போராட்டச் சாதனைகளின் விளைவாக, யாழ்ப்பாணக் குடாநாடு உட்பட எமது தாயகத்தின் பல பகுதிகளை விடுவித்து, எமது இயக்க நிர்வாகத்தின் கீழ் கொண்டு வந்தோம்.
எமது தாயகத்தின் விடுதலையை வென்றெடுத்து, தனியரசு அமைத்து, சமதர்ம சமுதாயத்தை நிர்மாணிக்கும் எமது அரசியற் குறிக்கோளை அடையும் வழிமுறையாகவே நாம் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுக்கிறோம். ஆகவே எமது இயக்கம் அரசியலுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. அரசியல் இலட்சியமே, ஆயுதப் பாதையை வழிநடத்த வேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கிறோம்.
ஆரம்ப காலத்திலிருந்தே எமது இயக்கம் அரசியல் பிரிவிலிருந்து இராணுவ அமைப்பை வேறுபடுத்தவில்லை. பதிலாக இரு பிரிவுகளும் ஒன்றிணைக்கப்பட்ட அரசியல்-இராணுவ வேலைத்திட்டத்தின் அடிப்படையில் எமது இயக்கம் செயற்பட்டு வருகிறது. இந்த வேலைத்திட்டம், ஆயுதப் போராட்டத்தை ஒரு அதியுயர்ந்த அரசியற் போராட்ட வடிவமாகவே கொள்கிறது.
தேசிய விடுதலை என்ற இலட்சியத்தில் பரந்துபட்ட வெகுசனத்தை அணிதிரட்டி, அவர்களுக்கு அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் அரசியற் பணியில் எமது இயக்கம் அன்றுதொட்டு இன்றுவரை அயராது உழைத்து வருகிறது. 1978ஆம் ஆண்டிலேயே இனவாத அரசு எமது இயக்கத்தைத் தடைசெய்த போதும், தமிழீழம் அடங்கிலும் இரகசிய அரசியல் தளங்களை அமைத்துத் தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர்கள் மற்றும் தேசாபிமானச் சக்திகளை அணிதிரட்டி, ஒரு வெகுசன தேசிய இயக்கத்திற்கான அத்திவாரத்தை எமது இயக்கம் கட்டி எழுப்பியது. நீண்ட காலமாக உறுதியுடன், ஆயுதப் போராட்டத்தையும், அரசியற் போராட்டத்தையும் தீவிரப்படுத்தி முன்னெடுத்து வந்ததால், மக்களின் போராட்ட முன்னணிப் படை என்பதோடு மட்டுமல்லாமல், மக்களின் உண்மையான பிரதிநிதிகள் என்ற அந்தஸ்தையும் நாம் பெற்றுக் கொண்டோம்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் சாதனைகளைக் கீழ்கண்டவாறு சுருக்கிச் சொல்லலாம்:
• தமிழீழ மக்களின் தேசிய விடுதலை இயக்கமாக விடுதலைப் புலிகள் இயக்கம் உருப்பெற்றுள்ளது.
• ஒடுக்கப்பட்ட தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளை, நம்பிக்கைகளை, அபிலாசைகளைப் பிரதிநிதப்படுத்தும் அரசியல் முன்னணி அமைப்பாக எமது இயக்கம் உருவாகியுள்ளது.
• தமிழீழ மக்களின் தேசியப் பிரக்ஞையை விழிப்புறச் செய்து, தேசிய சுதந்திரம், சமூக சுபீட்சம் ஆகிய இலட்சியங்களின் அடிப்படையில் தமிழீழ விடுதலை விரும்பிகளையும், தேசாபிமான சக்திகளையும் ஒரே அணியில் ஒன்றுபடுத்திய பெருமை எமது இயக்கத்தையே சாரும்.
• தொடர்ச்சியான, தீர்க்கமான போராட்டம் மூலம் தமிழீழ மக்களின் தேசிய சுயநிர்ணய உரிமைப் பிரச்சினையைச் சர்வதேச அரங்கில் பிரபல்யப்படுத்தியது எமது இயக்கமேயாகும்.
அரசியல் வேலைத்திட்டமும் கொள்கை விளக்கமும்
அடிப்படை அரசியல் இலட்சியங்கள்
தேசிய விடுதலை, சோசலிச சமூகப் புரட்சி ஆகிய இரு குறிக்கோள்களுமே தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அடிப்படையான அரசியல் இலட்சியங்களாகும்.
1. தேசிய விடுதலை எனும் பொழுது, எமது தாயகத்தின் பரிபூரண சுதந்திரத்தையும், ஒடுக்கப்பட்ட எமது மக்களின் அரசியல் விடுதலையையும், சுதந்திர சோசலிச தமிழீழ அரச நிர்மாணத்தையுமே குறிப்பிடுகிறோம்.
தமிழீழ மக்கள் ஒரு தேசிய இனமாக அமையப் பெற்றுள்ளனர். ஒரு தனித்துவமான தேசிய இன அமைப்பிற்கு அத்தியாவசியமான சகல குணாதியங்களையும் எமது மக்கள் பெற்றுள்ளனர்.
எமக்கு ஒரு தாயகமுண்டு. வரலாற்று ரீதியாக அமையப் பெற்ற இத் தாயகப் பூமி, வடக்குக் கிழக்கு மாகாணங்கள் இணைந்த, வரையறுக்கப்பட்ட பிரதேசமாக அமையப் பெற்றிருக்கிறது. எமக்கு ஒரு மகத்துவமான மொழியுண்டு. தனிச் சிறப்புடைய கலாச்சாரம் உண்டு. தனித்துவமான பொருளாதார வாழ்வுண்டு. மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேல் நீண்டு செல்லும் வரலாறு உண்டு.
ஒரு தேசிய இனம் என்ற ரீதியில், எமது மக்கள் தேசிய சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள். இந்தத் தேசிய சுயநிர்ணய உரிமை எனப்படுவது, எமது அரசியல் தலைவிதியை நாமே நிர்ணயிக்கும் உரிமை; அந்நிய ஆதிபத்தியத்திலிருந்து எம்மை விடுவித்துக் கொண்டு தனியரசை அமைக்கும் உரிமை. சர்வசன வாக்கெடுப்பாக நிகழ்ந்த 1977ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில், எமது மக்கள் சுயநிர்ணய உரிமையை உறுதிப்பாடு செய்து, அந்த உரிமையின் அடிப்படையில் பிரிந்து சென்று தனியரசு அமைக்கத் தீர்மானித்தனர். சுயநிர்ணய உரிமையை ஊர்ஜிதம் செய்து எமது மக்கள் வழங்கிய ஆணையை ஆதாரமாகக் கொண்டே தமிழீழ விடுதலைப் புலிகள் தேசிய விடுதலைக்காகப் போராடி வருகின்றனர்.
விடுதலைப் புலிகள் உருவாக்கவிருக்கும் சுதந்திரத் தமிழீழம் ஒரு மக்கள் அரசாகத் திகழும். மத சார்பற்ற, சனநாயக சோசலிச அரசாக அமையும். மக்களால் தெரிவு செய்யப்பட்டு, மக்களால் நிர்வகிக்கப்படும் ஆட்சியாக இருக்கும். சகல பிரஜைகளும் சமத்துவத்துடனும், சனநாயக சுதந்திரங்களுடனும் வாழ வகைசெய்யும் புதுமை ஆட்சியமைப்பாகத் தமிழீழம் இயங்கும்.
2. சோசலிசப் புரட்சி எனும் பொழுது, எமது சமூகத்தில் நிலவும் சகல விதமான சமூக அநீதிகளும் ஒழிந்த, ஒடுக்கல் முறைகளும், சுரண்டல் முறைகளும் அகன்ற, ஒரு புதிய புரட்சிகர சமதர்ம சமுதாய நிர்மாணத்தையே குறிக்கிறோம்.
தமிழீழ சமூக வடிவமானது, ஒரு முதிர்ச்சி கண்ட முதலாளித்துவ உற்பத்தி முறையைக் கொண்டிருக்கவில்லை. முதலாளி வர்க்கம், தொழிலாளி வர்க்கம் என்ற பிரதான வர்க்க முரண்பாட்டின் அடிப்படையில் பொருள் உற்பத்திமுறை இயங்கவில்லை. அதே சமயம் எமது சமூகத்தைப் பிரபுத்துவச் சமூக வடிவமாகவும் சித்தரிக்க முடியாது. தமிழீழ சமூக அமைப்பானது, தனக்கேயுரிய ஒரு தனித்துவமான பொருளுற்பத்தி வடிவமாகத் திகழ்கிறது. வளரும் முதலாளித்துவ அம்சங்களும், பிரபுத்துவ எச்ச சொச்சங்களும், சாதியத் தொழில் பிரிவு உறவுகளும் ஒன்றுகலந்த, ஒரு சிக்கலான பொருளாதார அத்திவாரத்தில் எமது சமுதாயம் கட்டப்படிருக்கிறது. ஒட்டுமொத்தத்தில் எமது சமுதாயத்திற்கு அத்திவாரமாக விளங்கும் பொருளாதார அமைப்பானது, சமூக அநீதிகள் மலிந்த ஒடுக்குமுறைகளையும், சுரண்டல் முறைகளையும் கொண்டுள்ளது.
எமது சமூகத்தில் ஊடுருவியுள்ள சகல விதமான சமூக ஒடுக்குமுறைகளையும் ஒழித்துக் கட்டி, வர்க்க வேறுபாடற்ற சமதர்ம சமுதாயத்தைக் கட்டி எழுப்புவதே தமிழீழ விடுதலைப் புலிகளின் இலட்சியமாகும். இவ்விதம் ஒரு சமதர்ம சமுதாயத்தைக் கட்டி எழுப்புவதாயின், பொருளாதார அமைப்பில் அடிப்படையான மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும்; பொருளாதார உற்பத்தி உறவு புனரமைக்கப்பட வேண்டும்; சமூக அதர்மத்தையும், மனிதனை மனிதன் சுரண்டும் அநீதியையும் கொண்ட உற்பத்தி உறவுகள் ஒழிக்கப்பட வேண்டும். இப்படியான புரட்சிகர சமூக மாற்றத்தை ஏற்படுத்த எமது விடுதலை இயக்கம் உறுதிபூண்டுள்ளது.
எமது சமுதாய மேம்பாட்டிற்கு ஒரு சாபக்கேடாகவும், சமூக சமத்துவத்திற்கு ஒரு முட்டுக்கட்டையாகவும் இருந்து வருவது சாதியக் கொடுமையாகும். சாதிய அமைப்பு எமது கிராமிய, பொருளாதார வாழ்வுடன் ஒன்றிக் கலந்திருக்கிறது. வர்க்க அமைப்புடன் இணையப் பெற்றிருக்கிறது. தொழிற் பிரிவுகளை அடிப்படையாகக் கொண்ட பொருள் உற்பத்தி உறவுகளுடன் பின்னிப் பிணைந்திருக்கிறது. மத சித்தாந்த உலகிலிருந்து வேரூன்றி வளர்ந்திருக்கிறது.
தொழிலின் மகத்துவத்தை இழிவுபடுத்தி, மனிதனை மனிதன் வேறுபடுத்தும் இந்த மூட வழக்குமுறையை முற்றாக ஒழித்துக் கட்ட, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் திடசங்கற்பம் பூண்டிருக்கிறது. சாதியத்தின் பெயரால், சமூகத்தின் அடிமட்டத்திலிருந்து நசுக்கப்பட்டு வரும் தமிழீழப் பாட்டாளி வர்க்கத்தின் விடிவிற்காக எமது இயக்கம் அயராது உழைக்கும். உழைப்பின் சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட சோசலிச பொருளாதாரத் திட்டத்தை அமுலாக்குவதன் மூலமும், புரட்சிகரமான கல்விமுறை வாயிலாகவும், இந்த சமூகத் தீமையை எமது இயக்கம் ஒழித்துக் கட்டும்.
தேசிய விடுதலைப் போராட்டத்தையும், வர்க்கப் போராட்டத்தையும் ஒன்று சேர்த்ததாக, தேச சுதந்திரத்தையும், சமூகப் புரட்சியையும் ஒன்றிணைத்ததாக அமையப் பெற்றிருக்கும் எமது புரட்சிகர அரசியல் இலட்சியங்கள் எமது தாயகத்தின் சுதந்திரத்தை வென்றெடுப்பதோடு மட்டும் அல்லாமல், எமது சமூகத்தில் நிலவும் ஒடுக்குமுறைகளிலிருந்தும் எமது மக்களுக்கு சுபீட்சமளிப்பதைக் குறிக்கோளாகக் கொண்டிருகின்றன. இந்த அரசியல் இலட்சியங்களை அடைவதற்காக எமது இயக்கம் கீழ்க்கண்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தீர்மானித்திருக்கிறது.
• தேசிய-சமூக விடுதலை என்ற பொது இலட்சியத்தில் தமிழீழ மக்கள் அனைவரையும் ஒன்றுபடுத்தி, அவர்களை ஒருங்கிணைத்த தேசிய மக்கள் சக்தியாக அணிதிரட்டுவது.
• தேசிய-சமூக விடுதலை என்ற இலட்சியத்தை முனைப்புறச் செய்து, துரிதப்படுத்தும் நோக்குடன், மக்கள் மத்தியில் தேசியப் பற்றுணர்வையும், பாட்டாளி வர்க்கப் பிரக்ஞையையும் தட்டி எழுப்பிக் கட்டி வளர்ப்பது.
• வெகுசன அரசியல் போராட்டத்தையும், ஆயுதப் போராட்டத்தையும் வலுப்படுத்தித் தீவிரப்படுத்துவதுடன், பரந்துபட்ட பொதுமக்களை தேசிய விடுதலைப் போராட்டத்தில் நேரடி பங்குதாரர்களாக மாற்றுவது.
விடுதலைப் புலிகளின் வெளிவிவகாரக் கொள்கை
உலக எதேச்சாதிகார அடக்குமுறைச் சக்திகளுக்கு எதிராக ஒடுக்கப்படும் மக்கள் சமூகங்களும், தேசிய இனங்களும் நிகழ்த்தி வரும் சர்வதேசப் போரில், எமது தேசிய சுதந்திரப் போராட்டமும் ஒரு இணைபிரியாத அங்கமாக உள்ளது. இந்த வகையில், ஒடுக்கப்படும் உலக மக்களின் பொது எதிரியான ஏகாதிபத்தியம், காலனித்துவம், நவ-காலனித்துவம், இனவாதம் ஆகிய சக்திகளுக்கு எதிராகப் போராடுவதற்குத் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் உறுதிபூண்டிருக்கிறது.
ஏகாதிபத்தியத்திற்கு எதிரான ஒரு புரட்சிகர சக்தி என்ற ரீதியில், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கமானது உலக தேசிய விடுதலைப் போராட்டங்கள் அனைத்திற்கும் தனது பரிபூரண ஆதரவைத் தெரிவிக்கிறது. உலக விடுதலை இயக்கங்கள், முற்போக்கான நாடுகள், புரட்சிகர அரசியல் இயக்கங்கள், தொழிலாளர் ஸ்தாபனங்கள் மற்றும் சமாதானத்தை விரும்பும் சக்திகள் ஆகியனவற்றுடன் நேச உறவுகளை வளர்த்து, வலுப்படுத்துவதே எமது இயக்கத்தின் வெளியுறவுக் கொள்கையாகும்.
சர்வதேச உறவுகளில் எமது இயக்கம் அணிசேராக் கொள்கையைக் கடைப்பிடிக்கும். எமது சூழல் சார்ந்த பூகோள-அரசியல் அரங்கைப் பொறுத்தமட்டில், இந்து மா சமுத்திரத்தைச் சமாதானப் பிரதேசமாகப் பிரகடனப்படுத்தும் கொள்கையை எமது இயக்கம் ஆதரிக்கும்.
சிங்கள மக்களை நோக்கி
சிறீலங்காவின் பாசிச அரசானது தமிழ் பேசும் மக்களது விரோதி மட்டுமன்றி, ஒடுக்கப்பட்டு, சுரண்டப்படும் சிங்களப் பாட்டாளி மக்களதும் பிரதான எதிரியாகும். இந்தப் பாசிச அரச இயந்திரத்தை இயக்கி வரும் ஆளும் வர்க்கமானது, தமிழருக்கு எதிராக இனவெறியைக் கிளறிவிட்டுத் தனது ஆட்சி அதிகாரத்தை நீடித்து வருகிறது. பேரினவாத சித்தாந்தத்தைப் பரப்பித் தமிழ்-சிங்கள பாட்டாளி வர்க்க ஒருமைப்பாட்டையும் சிதறடித்து வருகிறது. இந்தப் பேரினவாதப் பாசிச அரசையே விடுதலைப் புலிகள் இயக்கம் தனது எதிரியாகக் கருதுகிறதே தவிர சிங்களப் பொதுமக்களை அல்ல. சிங்கள மக்களை நாம் எமது நண்பர்களாகவே கருதுகிறோம். ஒடுக்கப்பட்டு, சுரண்டப்படும் சிங்கள பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகரத் தோழமைச் சக்தியாகவே எமது இயக்கம் செயற்படும். சிங்களப் பேரினவாத அரசுக்கு எதிராக நாம் முன்னெடுக்கும் சுதந்திரப் போராட்டம், சிங்களப் பாட்டாளி வர்க்கத்தின் சுபீட்சத்திற்கும் வழிவகுக்கும் என்பது திண்ணம்.
தேசிய ஒடுக்குமுறையானது வர்க்கப் போராட்டத்தின் எதிரி. வர்க்க ஒற்றுமையினதும், வர்க்க விழிப்புணர்வினதும் விரோதி. தமிழருக்கு எதிரான தேசிய ஒடுக்குமுறை நீடிக்கும் வரையில், ஒடுக்கப்படும் தமிழ்த் தேசிய இனம் விடுதலை அடையாத சூழ்நிலையில், சிங்கள-தமிழ் தொழிலாளர் மத்தியில் பாட்டாளி வர்க்க ஒருமைப்பாடு தோன்றுவது கடினம். ஆகவே, பாட்டாளி வர்க்க ஒருமைப்பாட்டை விரும்பும் முற்போக்குச் சக்திகள், இனவாதத்திற்கு எதிராகப் போராடுவதுடன், ஈழத்தமிழ் மக்களின் தேசிய சுயநிர்ணய உரிமையையும் ஆதரிக்க வேண்டும். ஒடுக்கப்படும் தமிழினம் முதலில் தனது தேசிய சுதந்திரத்தை வென்றெடுக்க வேண்டும். அப்பொழுதுதான் சிங்களப் பாட்டாளி வர்க்கம் இனவாத சித்தாந்த மாயையிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளவும், ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொள்ளவும் வாய்ப்பு ஏற்படும்.
தமிழர் தாயகத்தைக் கபளீகரம் செய்யும் நோக்குடன் சிங்கள அரசு மேற்கொண்டு வரும் குடியேற்றக் கொள்கையைத் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் வன்மையாக எதிர்க்கிறது. எமது தாயகத்தை மீட்டெடுக்க நாம் நடத்தும் நியாயபூர்வமான போராட்டம் சிங்கள மக்களுக்கு எதிரானது அல்ல.
சுதந்திர தமிழீழத்தில் தமிழ் பேசும் மக்களோடு ஐக்கியமாக வாழ விரும்பும் சிங்கள மக்களைத் தமிழீழப் பிரஜைகளாக ஏற்று, அவர்களுக்கு சகல சனநாயக சுதந்திரங்களையும், உரிமைகளையும் வழங்க எமது விடுதலை இயக்கம் முடிவு செய்திருக்கிறது.
முஸ்லிம் மக்கள் குறித்து
இலங்கையில் வாழும் தமிழ்பேசும் முஸ்லிம் மக்கள், தனிச்சிறப்புடைய மத, கலாச்சாரப் பண்புகளைக் கொண்ட ஒரு இனக்குழு என்பதையும், தமிழ்த் தேசிய அமைப்பில் அவர்கள் இணைபிரியாத அங்கமாக அமையப் பெற்றுள்ளனர் என்பதையும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் அங்கீகரிக்கிறது. தமிழரின் பாரம்பரியப் பூமியாகிய வடக்கு, கிழக்கு மாகாணங்களைக் கொண்ட தமிழீழம், முஸ்லிம் மக்களது தாயகம் என்பதையும் எமது இயக்கம் ஏற்றுக் கொள்கிறது.
வடகிழக்குப் பிரதேசத்தில் வாழும் தமிழர்களும், முஸ்லிம்களும் பொதுவான தாயகத்தையும், பொதுவான மொழியையும், பொதுவான பொருளாதார வாழ்வையும், பொதுவான நலன்களையும் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்விதம் ஒன்றிணைந்த சமூகப் பொருளாதார வாழ்வு காரணமாக ஒருவர் மீது ஒருவர் பரஸ்பரம் தங்கியிருப்பதால், தமிழரும், முஸ்லிம் மக்களும் ஒன்றுபட்ட சக்தியாக ஒருங்குசேர்ந்து தமது உரிமைக்காகப் போராடுவது அத்தியாவசியமானதாகும். முஸ்லிம் மக்கள் தமது அரசியல் உரிமைகளை வென்றெடுக்க வேண்டுமென்றால், தமது நலன்களை அடைந்து நல்வாழ்வு காண வேண்டுமென்றால், முக்கியமாகத் தமது இன, மத, கலாச்சாரத் தனித்துவத்தைப் பேணிப் பாதுகாக்க வேண்டுமென்றால், தமிழருடன் ஒன்றுபட்டு வாழ்ந்து, தமிழருடன் ஒருங்கிணைந்து போராடுவதே சாலச்சிறந்ததாகும்.
தமிழ் பேசும் மக்களின் ஐக்கியத்தைக் குலைத்து, தமிழ்த் தேசிய ஒன்றியத்தினைச் சிதறடிக்கும் நோக்கத்துடன் சிங்கள இனவாத அரசானது தமிழர்-முஸ்லிம் மக்கள் மத்தியில் கலவரத்தைத் தூண்டிவிடும் நாசகார முயற்சிகளில் ஈடுபட்டு வருவதோடு, எமது பொதுத் தாயகப் பூமியையும் படிப்படியாக விழுங்கி வருகிறது. பொதுவான எதிரியையும், பொதுவான இலட்சியங்களையும் எதிர்கொள்ளும் தமிழர்-முஸ்லிம் மக்கள், தமது தனித்துவத்தையும், சுதந்திரத்தையும் நிலைநாட்ட ஒன்றுபட்டுப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை.
எமது தாயகத்தின் சுதந்திரத்தை வென்றெடுத்துத் தமிழீழத் தனியரசை அமைப்பதுதான் தமிழர்-முஸ்லிம் மக்களின் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வாக அமையுமென எமது விடுதலை இயக்கம் உறுதியாக நம்புகிறது. அமையவிருக்கும் சுதந்திரத் தமிழீழத்தில், முஸ்லிம் மக்களின் பாதுகாப்பிற்கும், சம உரிமைகளுக்கும், நல்வாழ்விற்கும், பொருளாதார சுபீட்சத்திற்கும் நாம் உத்தரவாதம் அளிப்பதோடு, முஸ்லிம்களின் மத, கலாச்சாரத் தனித்துவம் பேணிப் பாதுகாக்கப்படுமெனவும் உறுதியளிக்கிறோம்.
மலையகத் தமிழ் மக்கள் பற்றி
இலங்கையில் மிகவும் மோசமான பொருளாதாரச் சுரண்டல் முறைக்கு ஆளாகி, அடிப்படையான மனித உரிமைகளையும், அரசியல் சுதந்திரங்களையும் இழந்து, மிகவும் கேவலமான வாழ்க்கை முறைக்குத் தள்ளப்பட்டுள்ளவர்கள் மலையகத் தமிழ்த் தொழிலாளி வர்க்கத்தினர். இம்மக்கள் எதிர்கொள்ளும் விசேச பிரச்சினைகளில் மிகவும் பாரதூரமானது பிரஜாவுரிமைப் பிரச்சினையாகும்.
மலையகத் தமிழ் மக்களின் அடிப்படை உரிமை மீளப்பெறவும், அவர்களது அரசியல் சுதந்திரத்திற்கும், பொருளாதார மேம்பாட்டிற்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் போராடும். இலங்கைத் தீவைத் தாயகமாகத் தழுவ விரும்பும் மலையகத் தமிழர்களுக்குப் பிரஜா உரிமையும், மற்றும் சுதந்திரங்களும் வழங்கப்பட வேண்டுமென எமது இயக்கம் குரல் கொடுத்து வந்திருக்கிறது.
மலையகத் தோட்டத் தொழிலாளர்களை அவர்களது விருப்பத்திற்கு மாறாக, பலாத்காரமாக இந்தியாவுக்கு குடிபெயர்க்கும் கொள்கையை எமது இயக்கம் வன்மையாக எதிர்க்கிறது. இந்தப் பலாத்காரக் குடிபெயர்ப்பு நடவடிக்கையானது, மனித உரிமையை மீறும் அநாகரீகச் செயலென எமது இயக்கம் கருதுகிறது.
தனிநாடு அமைக்கப்பட்டதும் சுதந்திரத் தமிழீழத்தில் வந்து குடியேறுமாறு மலையகத் தமிழ் மக்களை எமது இயக்கம் ஊக்குவிக்கும். தமிழீழத்தில் குடியேறும் மக்களைச் சுதந்திரப் பிரஜைகளாக ஏற்று, அவர்களுக்கு சகல சனநாயக உரிமைகளும் வழங்கி, அம்மக்களுக்குச் சுதந்திரமான, கௌரவமான வாழ்வளிக்க விடுதலைப் புலிகள் இயக்கம் முடிவு செய்திருக்கிறது. தமிழீழத் தாயகத்தில் ஏற்கனவே குடியேறியுள்ள மலையக மக்கள், ஏனைய தமிழ் பேசும் மக்களுடன் சமத்துவமாக இணைந்துவாழ வழிசெய்வதோடு, அவர்களது சமூகப் பொருளாதார சுபீட்சத்திற்கான திட்டங்களையும் எமது இயக்கம் அமுல்நடத்தும்.
பெண் விடுதலை
தமிழீழச் சனத் தொகையில் பெரும்பான்மையினராக விளங்கும் தமிழ்ப் பெண்கள், அரச ஒடுக்குமுறை ஒரு புறமும், சமூக ஒடுக்குமுறை மறுபுறமுமாக, இரு துருவ அழுத்தங்களால் நசுக்கப்படுகிறார்கள். தேசிய ஒடுக்குமுறையின் நேரடியான தாக்கத்தை எதிர்கொள்ளும் எமது பெண்கள், அரச பயங்கரவாதிகளின் கையினால் மிகவும் கொடூரமான அட்டூழியங்களுக்கு ஆளாகி வருகிறார்கள். ஈழத்தின் பெண் குலம் மௌனமாக அனுபவித்து வரும் துன்பங்களும், அவர்கள் புரிந்து வரும் அற்புதமான தியாகங்களும், எமது விடுதலைப் போராட்ட வரலாற்றின் மகத்தான சிறப்பம்சமாகும். அரச பயங்கரவாதம் மாத்திரமின்றி, எமது சமூகத்தில் நிலவும் ஒடுக்குமுறைகளும் பெண்ணினத்தைத் துன்புறுத்துகிறது. சீதன முறை, ஆணாதிக்கம் மற்றும் பிற்போக்கான சமூகப் பண்பாட்டு முறைகள் எமது பெண் குலத்தை இழிமைப்படுத்துகிறது; அவர்களது சமத்துவ உரிமைக்குச் சவாலாக அமைகிறது; அவர்களது கௌரவத்திற்கு மாசு கற்பிக்கிறது.
அரச ஒடுக்குமுறையிலிருந்தும், சமூக அடக்குமுறையிலிருந்தும் தமிழீழப் பெண்ணினத்திற்கு விடுதலையைப் பெற்றுக் கொடுப்பதோடு, அவர்களது மேம்பாட்டிற்காக உழைப்பதே எமது விடுதலை இயக்கத்தின் குறிக்கோளாகும்.
நாம் அமைக்கவிருக்கும் சுதந்திர தமிழீழத்தில், சீதன ஒடுக்குமுறை சட்ட ரீதியாக ஒழிக்கப்பட்டு, பெண்களின் சம உரிமைகளும், சம சந்தர்ப்பங்களும் அரசியல் அமைப்பு வாயிலாக உத்தரவாதமளிக்கப்படும். தேசிய வாழ்விலும், அரச நிர்வாகத்திலும், சமூகப் பொருளாதார கட்டுமாணப் பணிகளிலும் சரிசமப் பங்கேற்று உழைக்கப் பெண்களுக்கு வாய்ப்பளிக்கப்படுமென நாம் உறுதி கூறுகிறோம். பெண் பிள்ளைகளுக்குக் கல்வி கட்டாயமாக்கப்படுவதுடன், தொழிற் துறையில் பாலின வேறுபாடுகள் நீக்கப்படுமெனவும் உறுதியளிக்கிறோம்.
புரட்சிகரமான பெண் இயக்கம் உருவாக்கப்பட்டு, தேசிய ரீதியில் ஈழ மாதர் சமூகம் தமது வாழ்க்கை நிலையை மேம்படுத்த எமது இயக்கம் ஊக்கமளிக்கும். எமது இயக்கம் முன்னெடுக்கும் ஆயுதப் போராட்டத்திலும், வெகுசன அரசியல் போராட்டங்களிலும் பெண்கள் பங்குபற்றி வருகிறார்கள். தமிழீழப் பெண்ணினமும் எமது விடுதலை இயக்கத்திற்குப் பின்னால் அணிதிரண்டு, முழுமையாகத் தங்களது பங்களிப்பைச் செலுத்தும் போதுதான் எமது தேசிய விடுதலைப் போராட்டம் முழுமை பெற்று வெற்றிப் பாதையில் வீறுநடைபோடும்.
பொருளாதாரப் புனர்நிர்மாணம்
நீண்ட தொடர்ச்சியான தேசிய ஒடுக்குமுறையின் அழுத்தங்கள், தமிழீழ மக்களின் பொருளாதார வாழ்வில் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தியது. கடந்த நாற்பது ஆண்டுகாலமாக மாறி மாறிப் பதவி ஏறிய சிங்களப் பேரினவாத அரசுகள், தேசிய அபிவிருத்தித் திட்டங்களிலிருந்து தமிழர் தாயகத்தை முற்றாகப் புறக்கணித்தன. தேசிய வருமானத்தால், தேசிய பொருளாதார அபிவிருத்தித் திட்டங்களால், கடனுதவிகளால் சிங்களப் பிரதேசம் செழிப்புற்று வளர, தமிழீழம் கவனிப்பாரற்ற காலனிப் பிரதேசமாக ஒதுக்கப்பட்டு, வளர்ச்சி குன்றி, சீர்குலைந்தது. தேசிய அபிவிருத்தியிலிருந்து தமிழீழத்தைப் புறக்கணித்தது மாத்திரமின்றி, இனக் கலவரங்களைத் தூண்டிவிட்டும், ஆயுதப் படைகளை ஏவிவிட்டும், சிங்கள அரசுகள் தமிழ் பேசும் மக்களின் சொத்துடமைகளுக்குப் பேரழிவு ஏற்படுத்தின. இவ்விதம் திட்டமிட்ட முறையில் ஈழத்தமிழ் மக்களின் பொருளாதார வாழ்வு சீரழிக்கப்பட்டதால், தமிழீழப் பொருளாதாரப் புனர்நிர்மாணப் பணியானது பெரும் முக்கியத்துவத்தைப் பெறுகிறது.
சுதந்திரத் தமிழீழத்தில்தான் எமது தேசிய பொருளாதாரப் புனர்நிர்மாணத்தை வெற்றிகரமாகச் சாதிக்க முடியும். எமது எதிர்காலத்தை நாமே நிர்ணயிக்கக்கூடிய அரசியல் அதிகாரம் எம்வசமிருந்தால்தான், நாம் எமது தாயகத்தை செல்வம் கொழிக்கும் நாடாக மாற்றியமைப்பது சாத்தியம். விவசாயத் துறையையும், தொழிற்துறையையும் செம்மையாக விருத்தி செய்து, சுயபூர்த்தியுள்ள பொருளாதாரத்தில் முன்னேற்றமடைந்த நாடாகத் தமிழீழத்தைக் கட்டியமைக்க முடியும் என்பதில் எமக்குச் சிறிதளவும் சந்தேகமில்லை.
தமிழீழ விடுதலைப் புலிகளின் சோசலிசப் பொருளாதாரத் திட்டமானது, பொருளாதாரச் சுரண்டல்முறை அகன்ற, ஏற்றத்தாழ்வுகள் ஒழிந்த சமத்துவச் சமுதாயத்தைக் கட்டி எழுப்புவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. எமது தேசத்தின் பிரதான உற்பத்திச் சாதனங்கள் அனைத்தையும் உழைக்கும் மக்களின் சொத்துடமையாக்க, சமதர்ம சமூக மாற்றத்தை முன்னெடுக்க எமது இயக்கம் உறுதிபூண்டிருக்கிறது.
உணவு உற்பத்தியில் சுதந்திரத் தமிழீழத்தை சுயபூர்த்தி அடையச் செய்யும் நோக்கில், விவசாய, அபிவிருத்தித் திட்டங்களுக்கு நாம் முக்கியத்துவம் அளிப்போம். அதேவேளை, எமது தேசிய வளங்களை செம்மையாகப் பயன்படுத்தி, எமது மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் தொழிற்துறையையும் விருத்தி செய்வோம். புரட்சிகரமான விவசாயத் திட்டங்களை அமுலுக்குக் கொண்டு வந்து, காணி நிலமற்றவர்களுக்குக் காணி வழங்கவும், மக்கள் கூட்டுறவு அமைப்புக்களை உருவாக்கவும் எமது இயக்கம் முடிவு செய்திருக்கிறது.
மத்திய அரசின் குறுகிய வட்டத்திற்குள் அல்லாது, சனநாயக ரீதியில், சுயாதீனமான முறையில் தேசிய பொருளாதாரத் திட்டம் வகுக்கப்படுவதையும், செயற்படுத்தப்படுவதையும் விடுதலைப் புலிகள் இயக்கம் ஊக்குவிக்கும். தமிழீழத்தின் சமூக-பொருளாதாரப் புனரமைப்பில், பொதுமக்கள் சகல மட்டத்திலும் பங்கு கொள்ள எமது விடுதலை இயக்கம் வாய்ப்பளிக்கும். தேசிய செல்வம் சமத்துவமாக மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் என்பதை உறுதியளிக்கும் அதேவேளை, தேசிய பொருளாதாரத்தைக் கட்டி எழுப்பும் முயற்சிகளில் வெளிநாடுகளில் வதியும் தமிழீழத் தேசாபிமானிகளுக்கு சகல சந்தர்ப்பங்களும் அளிக்க எமது இயக்கம் தீர்மானித்திருக்கிறது. நாட்டின் வளத்தை விருத்தி செய்து, பலம்வாய்ந்த ஒரு பொருளாதார அடித்தளத்தை அமைப்பதாயின், எமது நாடு தன்னில்தானே தங்கியிருக்க வேண்டும். இந்தக் கோட்பாட்டை செயற்படுத்தும் வகையில் எமது பொருளுற்பத்தி வடிவம் நெறிப்படுத்தப்படும்.
கல்வியும், கலாச்சாரமும், மத வாழிபாடும்
அரச ஒடுக்குமுறையின் கொடூரத்தால் மிகவும் சீரழிவுக்கு உள்ளாகியிருப்பது எமது கல்வித்துறையாகும். ஆகவே, கல்வித்துறையை வளர்த்து, விரிவுபடுத்தி, முன்னேற்றம் அடையச் செய்யும் பணிக்கும் எமது விடுதலை இயக்கம் மிகவும் முக்கியத்துவம் அளிக்கும். தமிழீழத்தின் சகல பிராந்தியங்களிலும் சர்வகலாசாலைகள், தொழில்நுட்பக் கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்களை அமைத்து, இளம் பரம்பரைக்கு விஞ்ஞான, தொழில்நுட்ப, தொழில்சார்ந்த கல்விபுகட்ட எமது இயக்கம் திட்டமிட்டிருக்கிறது. சிறுவர்களுக்குக் கல்வி கட்டாயமாக்கப்படும். தேசிய பொருளாதார வளர்ச்சிக்கு ஏதுவான நிபுணத்துவத்தையும், அறிவுத்துறைகளையும் உருவாக்கும் வகையில் புரட்சிகரக் கல்வித் திட்டம் ஒன்றை எமது இயக்கம் செயற்படுத்தும். விஞ்ஞான உலகப் பார்வையையும், சமூகப் பிரக்ஞையையும், சமத்துவ உணர்வையும் வளர்க்கும் நோக்கில் பாடத்திட்டங்கள் அமைக்கப்படும்.
தமிழீழ தேசியக் கலாச்சாரத்தைப் பாதுகாத்து, கட்டிவளர்த்து, மேம்பாடு செய்வதே எமது இயக்கத்தின் நோக்கமாகும். கலைத்துவ வெளிப்பாடுகளுக்கும், கலாசிருஸ்டித்தன்மைக்கும் ஊக்கமளித்து, கலைகளை வளர்த்து, எமது மக்களின் கலாச்சார வாழ்வைச் சிறப்புறச் செய்ய எமது இயக்கம் உழைக்கும்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மத சார்பு அற்ற நிலைப்பாட்டைக் கடைப்பிடிக்கும். அதேவேளை சகல மதங்களைச் சார்ந்த மக்களினதும் அடிப்படை உரிமையான வழிபாட்டுச் சுதந்திரத்திற்கு எமது இயக்கம் உத்தரவாதமளிக்கும். சகல மதத்தவர்களும் தமது ஆன்மீக அபிலாசைகளைப் பூர்த்தி செய்யவும், மத-கலாச்சாரப் பண்புகளைப் பேணி வளர்க்கவும் எமது இயக்கம் ஊக்கமளிக்கும்.