சுயநிர்ணய உரிமையும், தனிநாட்டுக் கோரிக்கையும்
இன்று தமிழ்த் தேசிய இனமானது தனது சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தித் தமிழீழத் தனிநாடு கோருகிறது. ஒரு தேசிய இனத்தின் நிதர்சனமான, நெருக்கடியான அரசியல், சமூக, பொருளாதாரக் கொந்தளிப்பின் எதிரொலியாகவே இக் கோரிக்கை பிறந்தது என்பதனை யாராலும் மறுக்க முடியாது. அதாவது, ஒடுக்கப்பட்டு வந்த ஒரு தேசிய இனம், அந்த ஒடுக்குமுறையின் கொடூரம் தாங்காது, ஒன்றுபட்ட ஒரு இயக்கமாய் உருவெடுத்துத் தனியரசு அமைத்து விடுதலைபெற விரும்பியது. இரு தேசிய இனங்கள் மத்தியில் குமுறிய முரண்பாட்டு மோதலால் எழுந்த சரித்திர நிகழ்ச்சி இது. ஒடுக்குமுறைக்கெதிராக இனவிடுதலை கோரியெழுந்த இந்தத் தனிநாட்டுக் கோரிக்கையைத் தேசியவாதத் தீவிரமாதமென்றும், நாட்டைக் கூறுபோடவிழையும் நாசகாரச் சதியென்றும் சிங்கள முதலாளித்துவ ஆளும் வர்க்கமும், அதன் அடிவருடிகளும் அசட்டுத்தனமாகப் பிதற்றி வருகிறார்கள். இந்தப் பிற்போக்குவாதக் கும்பலின் பிதற்றல்கள் பற்றி நாம் கவலை கொள்ளத் தேவையில்லை. இவர்கள் சரித்திரம் புரியாத சர்வமுட்டாள்கள்.
ஒடுக்கப்படுவோருக்கும், ஒடுக்குவோருக்கும் மத்தியில் எழும் முரண்பாடுகள் முற்றி, அது போராட்டமாய்க் குமுறிப் புரட்சியாய் வெடிக்கும் பொழுது வரலாறு படைக்கப்படுகிறது. ஒடுக்கப்படும் இனத்திடம் அல்லது வர்க்கத்திடம்தான் விடுதலை வேட்கை பிறக்கும். ஆகவே, சரித்திரத்தின் சாராம்சமானது விடுதலையின் விசையன்றி வேறொன்றுமல்ல. விடுதலையின் மூச்சே சரித்திரமாக அசைகிறது. சரித்திரம் என்பது மனித சுதந்திர சக்தி. அது மனித சுதந்திர வேட்கை என்னும் எரிமலை. அது புரட்சியாகவும் வெடிக்கும்; போராகவும் வெடிக்கும். விடுதலை வேண்டி நிற்கும் மக்கள்தான் சரித்திரத்தின் படைப்பாளிகள். எங்கு மக்கள் நசுக்கப்படுகிறார்களோ, எங்கு முரண்பாடு தலைதூக்குகிறதோ, எங்கு விடுதலை வேட்கை பிறக்கிறதோ அங்குதான் வரலாறு படைக்கப்படுகிறது. ஒடுக்கப்படும் ஒரு இனம்தான், நசுக்கப்படும் ஒரு வர்க்கம்தான் சரித்திரத்தின் சக்கரத்தைச் சுழற்றும் சக்தியைப் பெறுகிறது. சிங்கள ஆளும் வர்க்கமானது தனது இன ஒதுக்கல் ஒடுக்குமுறை மூலம் தமிழ்பேசும் தேசிய இனத்தைச் சரித்திரம் பிறப்பிக்கும் ஒரு புரட்சிகரமான சகாப்தத்தில் தள்ளிக்கொண்டு இருக்கிறது. ஒடுக்குமினம் இதை உணர்ந்து கொள்வதில்லை.
ஒரு பெரிய தேசிய இனம், ஒரு சிறிய தேசிய இனத்தை நசுக்க விழையும்போது ஏற்படும் முரண்பாட்டால் வர்க்கப் போராட்டம் பாதிக்கப்படும்; அது சோசலிச சனநாயகத்திற்கும், சமதர்ம சமுதாய வளர்ச்சிக்கும் குந்தகமாக அமையும் என்பதனைக் கம்யூனிசத்தின் தந்தை கார்ல் மார்க்சு தெளிவாக உணர்ந்திருந்தான். அவன் ஒரு சமூக விஞ்ஞானி; சரித்திரத்தின் போக்கினைச் சரிவர உணர்ந்தவன். தேசிய இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணாது போனால், நசுக்கப்படும் மக்கள் மட்டுமன்றி, நசுக்கிவரும் இனமும் விடுதலை காணப் போவதில்லையென்பதனை மார்க்சு அடிக்கடி வலியுறுத்தி வந்திருக்கிறான். ‘‘ஒரு இனத்தை அடிமைகொள்ளும் இன்னொரு இனம் தனக்குத்தானே விலங்குகளைப் பிணைத்துக் கொள்கிறது’’ என்று ஒரு இடத்தில் அவன் குறிப்பிடுகின்றான்.
ஒரு தேசிய இனம் இன்னுமொரு தேசிய இனத்தை ஒடுக்க விழையும் பொழுது, அந்த ஒடுக்குமினத்தின் தொழிலாளி வர்க்கம் ஒன்றுபடாது பிரிந்து பலவீனமடையும் என்பதனைப் பல தடவைகளில் மார்க்சு சுட்டிக் காட்டியிருக்கிறான். அயர்லாந்து தேசத்து மக்களின் தனிநாட்டுக் கோரிக்கையை ஆதரித்த அவன், ‘‘அயர்லாந்து மக்களுக்கு எதிராகப் பிரிட்டன் மேற்கொண்டு வரும் ஒடுக்குமுறையே ஆங்கிலேயே தொழிலாளி வர்க்கத்தினது வீரியமின்மையின் இரகசியம். ஆங்கிலேயே முதலாளி வர்க்கம் தனது அதிகாரத்தை நீடித்து வருவதன் இரகசியமும் இதுவே” என்று எழுதியிருக்கின்றான்.
தேசிய இனங்களின் விடுதலையானது பாட்டாளி வர்க்கப் புரட்சியின் முன்னேற்றத்திற்கு முக்கியமானது; சரித்திர ரீதியில் தேசிய விடுதலை எழுச்சியானது பாட்டாளி வர்க்க சர்வதேசிய ஒருமைப்பாட்டிற்கு முன்னோடியானது என்பது மார்க்சின் கருத்து.
இலங்கையில் ‘மார்க்சிசவாதிகளின்’ குழம்பியநிலை
சுயநிர்ணய உரிமைக் கோட்பாடு பற்றியும், தமிழ்பேசும் மக்களின் தனிநாட்டுக் கோரிக்கை பற்றியும் இன்று இலங்கை அரசியல் அரங்கில் மிகவும் சூடான விவாதம் நடைபெற்று வருகிறது. சுயநிர்ணய உரிமையென்றால் என்னவென்பதில், பலர் பல வியாக்கியானங்களை அளிக்கிறார்கள். இதனால் குழப்பகரமான சர்ச்சைகள் எழுந்துள்ளன. துர்அதிட்டவசமாக இந்தச் சித்தாந்தப் பிணக்கில், சிந்தனைத் தெளிவற்ற குழப்பகரமான கருத்துக்களைக் கொண்டிருப்பது மார்க்சிசவாதிகளே. சோசலிச அரசியல் கொள்கைத் திட்டமானது சுயநிர்ணய உரிமைக் கோட்பாடு பற்றியும், தேசிய இனப் பிரச்சினை பற்றியும் தெள்ளத் தெளிவான, தீர்க்கமான விளக்கம் அளிக்கிறது.
அப்படியிருந்தும், முற்போக்குவாதிகள் என்று தமக்கு அரசியல் முத்திரையொட்டிக் கொள்வோர் மத்தியில் இந்தக் குழப்பம் நிலவுவதன் காரணம்தான் என்ன?
முதலில் நாம் கவனத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டியது யாதெனில், தேசிய சுயநிர்ணய உரிமையென்பது வரலாற்று ரீதியான அரசியற் கோட்பாடென்பதைத்தான். 18ஆம், 19ஆம் நூற்றாண்டு காலத்தில் மேற்கத்திய முதலாளித்துவம் முன்னேற்றம் கண்டு, முடியாட்சியை முறியடித்து, அரசாட்சியைக் கைப்பற்றித் தேசிய அரசுகள் (National States) நிறுவிய காலகட்டத்தின் போது, சுயநிர்ணய உரிமைக் கோட்பாடானது மக்களின் ஆட்சியுரிமையையும், இறைமையையும் குறித்து நிற்கும் ஒரு அடிப்படையான சனநாயக விதியாகக் கொள்ளப்பட்டது. முதிர்ச்சிகண்ட முதலாளித்துவமும், அதன் தீவிர தேசியவாதமும் காலனித்துவ, ஏகாதிபத்திய விசுவரூபம் கொண்டு, உலக தேசிய இனங்களை அடிமை கொண்டு சுரண்டத் தொடங்கிற்கு. காலப்போக்கில் காலனித்துவத்திலிருந்தும், ஏகாதிபத்திய ஒடுக்குமுறையிலிருந்தும் தேசிய இனங்கள் விடுதலைபெற விழைந்தபோது, முதலாளித்துவ சனநாயக விதியாகக் கொள்ளப்பட்ட சுயநிர்ணய உரிமைக் கோட்பாடானது, தேசிய விடுதலைப் போராட்டச் சுலோகத்தின்கீழ் முற்போக்கான அர்த்தத்தைப் பெற்று, சோசலிச அரசியற் சித்தாந்தத்தில் முக்கிய இடத்தைப் பெற்றது.
சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டிற்குத் தெளிவான வரைவிலக்கணம் அளித்து, சோசலிச அரசியற் சித்தாந்தத்தில் அதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பெருமை லெனினைச் சாரும். கம்யூனிச சித்தாந்தவாதிகளான றோசா லக்சம்பேர்க், புக்காரின், கோட்ஸ்கி, ஸ்டாலின் மற்றும் பலருடன் தர்க்கித்து, ஒரு தேசிய இனத்தின் அடிப்படையுரிமைகளுக்காக வாதாடி வந்த அரசியல் ஞானி அவன். லெனினின் கூர்மையான அரசியல் கண்ணோட்டத்தில் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையானது, பல அம்சங்களில், பலகோணங்களில், அதாவது சரித்திர காலகட்டம், பொருளாதார அமைப்பு, அரசியல் விழிப்புணர்ச்சி மற்றும் சமூக பூகோள ரீதியில் நுணுக்கமாக அணுகப்படுவதைக் காணலாம். முதலாளித்துவத்தின் வளர்ச்சி, ஏகாதிபத்தியத்தின் எழுச்சி, ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களின் சுதந்திரக் கிளர்ச்சி, தேசிய விடுதலைப் போராட்டத்தில் வர்க்க உறவுகளில் நிகழும் மாற்றங்கள், சோசலிசப் புரட்சிப் பாதையில் அதன் முக்கியத்துவம், தேசிய இனங்களின் ஒருமைப்பாடு, பாட்டாளி வர்க்கச் சர்வதேசியம் போன்ற நிலைகளும் ஆராயப்படுகின்றன.
உருசியப் புரட்சியை அடுத்து சோசலிச சமுதாய நிர்மாணத்திற்கான அரசியல் திட்டத்தை வகுக்கும் பெரும்பொறுப்பு லெனினின் தலையில் விழுந்தது. மாபெரும் உருசியப் பேரரசில், பெரிதும் சிறிதுமாய் பல தேசிய இனங்கள் அங்கம் வகித்தன. இந்தத் தேசிய இனங்களின் அடிப்படை உரிமைப் பிரச்சினையைத் தெளிவாக்கும் பொறுப்பு போல்சேவிக் கட்சியைச் சார்ந்திருந்தது. ஒரு பெரிய தேசிய இனம், ஒரு சிறிய தேசிய இனத்தை நசுக்க முற்படலாம்; இந்த ஒடுக்குமுறை தலைதூக்குவதை ஒழித்துக் கட்டாது போனால், தேசிய இனங்களின் அடிப்படை சனநாயக உரிமைகள் பேணப்படாது போனால், சரித்திரப் புதுமைவாய்ந்த சமதர்ம சமுதாயத்தைக் கட்டியெழுப்ப முடியாது என்பதனை லெனின் நன்கு உணர்ந்துகொண்டான். ஆகையால் லெனினின் சித்தாந்த விளக்கக் கட்டுரைகளிலும், கொள்கைத் திட்டப் பிரகடனங்களிலும் சுயநிர்ணய உரிமைக் கோட்பாடானது திரும்பத் திரும்ப விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டுத் திட்டவட்டமான விளக்கத்தைப் பெறுவதுடன், அது சோசலிச சனநாயகத்தின் ஆணிவேராக, அடிப்படை நியதியாகக் கொள்ளப்படுவதையும் காணலாம். அப்படி இருக்கும் பொழுது, மார்க்சிச தரிசனத்தின் மாமேதையென லெனினைத் தமது அரசியற் குருவாக வரித்துக் கொள்ளும் தோழர்கள், தமிழ்த் தேசிய இனப்பிரச்சினையிலும், சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டிலும் குழப்பமான நிலையைக் கொண்டிருப்பதேன்? மார்க்சிச-லெனினிச அரசியற் சித்தாந்தத்தைத் தெளிவாகப் புரிந்து கொள்ளும் அறிவாற்றல் இவர்களிடம் இருக்கவில்லையென்று எண்ணுவதா? அல்லது அரசியல் சுயநலத்திலும், சந்தர்ப்பவாதத்திலும் சிக்குண்டு இவர்கள் உண்மையைத் திரித்துப் பேசுகிறார்களா? காரணம் எதுவாக இருப்பினும் இவர்கள் கொண்டுள்ள நிலை, லெனினின் கொள்கைத் திட்டத்திற்கு முற்றிலும் முரணானது என்பதைத் தெளிவுபடுத்துவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
தேசிய இனப்பிரச்சினையிலும், சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டிலும் ‘மார்க்சிசவாதி’களிடையே நான்கு வகையான கருத்துக்கள் நிலவுகின்றன. இந்த நான்கு விதமான வியாக்கியானங்களும், இலங்கையிலுள்ள நான்கு ‘மார்க்சிச’ அரசியல் இயக்கங்களின் இன்றைய நிலையைக் குறித்து நிற்கின்றன. முதலில் இந்த நான்கு நிலைகளையும் பார்ப்போம்.
முதலாவது: சுயநிர்ணய உரிமையை ஆதரிக்கிறோம். ஆனால், பிரிந்து செல்லும் உரிமையை எதிர்க்கிறோம். அதாவது, ஒரு தேசிய இனம் என்ற ரீதியில் இலங்கைத் தமிழ் மக்களுக்குச் சுயநிர்ணய உரிமையுண்டு. ஆனால், தனிநாடு கோரும் உரிமை இல்லை. ஆகவே, தனிநாட்டுக் கோரிக்கையை எதிர்த்தே தீருவோம்.
- சனதா விமுக்தியப் பெரமுனை
(மக்கள் விடுதலை முன்னணி)
இரண்டாவது: சுயநிர்ணய உரிமையை ஆதரிக்கிறோம். ஆனால், பிரிவினையை எதிர்க்கிறோம். ஏனெனில், லெனின் பிரிவினையை ஆதரிக்கவில்லை. பட்டாளிவர்க்கச் சர்வதேசியத்தையும், தேசிய இனங்களின் ஒருமைப்பாட்டையும், உலக சோசலிச சமுதாயத்தையுமே விரும்பினார்.
- பீக்கிங் சார்பு கம்யூனிசக் கட்சி
மூன்றாவது: தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்துகிறோம். சுயநிர்ணய உரிமையென்பது பிரிந்து செல்லும் உரிமைதான். கம்யூனிஸ்டுகள் என்ற ரீதியில் இந்த உரிமையை வலியுறுத்துகிறோம். ஆனால், தமிழர் என்ற ரீதியில் பிரிவினை தேவையில்லை என்கிறோம்.
- செந்தமிழர் இயக்கம்
நான்காவது: சுயநிர்ணய உரிமையென்பது பிரிந்து செல்லும் உரிமைதான். ஒடுக்கப்பட்டு வரும் தமிழினம் தனிநாடு கோருவது நியாயமானதே. ஆனால், இக்கோரிக்கை ஒரு பொழுதும் நிறைவேறப் போவதில்லை. சாத்தியமாகப் போகாத கோரிக்கைக்குப் போராடி என்ன பயன்? ஆகவே, பிரிவினையை நாம் ஆதரிக்கவில்லை.
- புரட்சிகர மார்க்சிசக் கட்சி
இந்த நான்கு வியாக்கியானங்களையும் ஊன்றிக் கவனித்தால் ஒன்று தெளிவாகும். அதாவது, எல்லோருமே சுயநிர்ணய உரிமையை ஏற்றுக் கொள்கிறார்கள். அதேவேளை எல்லோருமே பிரிவினையை எதிர்க்கிறார்கள் என்பதுதான். முதல் இரண்டு நிலைகளிலும் சுயநிர்ணய உரிமைக் கோட்பாடு என்றால் என்னவென்பதில் குழப்பம் நிலவுவதைக் காணலாம். மூன்றாம், நான்காம் நிலைகளில் தனிநாட்டுக் கோரிக்கையை அடைவதிலுள்ள இடையூறுகளைக் கருத்தில் கொண்டு, பிரிவினை தேவையில்லை என்ற கொள்கை கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்த நான்கு வாதங்களையும் ஒவ்வொன்றாக, லெனினின் கொள்கைத்திட்ட விளக்கத்துடன் ஆராய்ந்து பார்ப்போம். அப்பொழுதுதான் இவற்றிலுள்ள முரண்பாடு புலனாகும்.
சுயநிர்ணய உரிமையும், பிரிந்து செல்லும் உரிமையும்
முதலாவது வாதத்தில் இலங்கைத் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்படுகிறது. ஆனால், பிரிந்து செல்லும் உரிமை எதிர்க்கப்படுகிறது. இந்த நிலையைக் கடைப்பிடிக்கும் மார்க்சிசவாதிகள் லெனினின் கொள்கைத் திட்டத்தையோ, சித்தாந்த விளக்கத்தையோ சரிவரப் புரிந்து கொள்ளவில்லை என்பது தெளிவாகிறது. சுயநிர்ணய உரிமை என்றால் பிரிந்து சென்று தனியரசை அமைத்துக் கொள்ளும் உரிமைதான் என்பதை, லெனின் திட்டவட்டமாகப் பல தடவைகளில் எடுத்துக்கூறியிருக்கிறான். உதாரணமாக, தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையென்ற சித்தாந்த விளக்கக் கட்டுரையில் லெனின் எழுதுகிறான்:
‘‘தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை என்பதன் அர்த்தத்தை நாம் கிரகித்துக் கொள்வதாயின், சட்டச் சொற்பொருட்களைத் திரிக்காமல், அன்றிப் பூடகமான வரைவிலக்கணங்களைப் புனையாமல், தேசிய விடுதலை இயக்கங்களின் சரித்திர, பொருளாதார நிலைமைகளை ஆராய்ந்து பார்க்க வேண்டும். அப்படிப் பார்ப்போமானால், தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை என்பதன் அர்த்தமானது, அத்தேசிய இனங்கள் அந்நிய தேசிய ஆதிக்க அமைப்புகளிலிருந்து அரசியல் ரீதியாகப் பிரிந்து சென்று, சுதந்திரமான தேசிய அரசை நிறுவுவதுதான் என்ற தவிர்க்க முடியாத முடிவுக்கு வருவோம்.’’
அதே கட்டுரையில் இன்னொரு இடத்தில் பின்கண்ட விளக்கம் தரப்படுகிறது:
‘‘மார்க்சிச அரசியல் வேலைத்திட்டத்தில் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையென்றால், சரித்திரப் பொருளாதாரக் கண்ணோட்டத்தின்படி அரசியல் சுயநிர்ணய உரிமையை, சுதந்திரமான அரசை அமைப்பதைத் தவிர வேறெந்த அர்த்தத்தையும் அது குறிக்கவில்லை.’’
லெனினின் நிலை எமக்குத் தெளிவாகிறது. சுயநிர்ணய உரிமை என்பது பிரிந்து சென்று தனியரசு அமைக்கும் உரிமையே தவிர, வேறொன்றுமல்ல என்பது லெனின் அளிக்கும் திட்டவட்டமான விளக்கம். அக்டோபர் புரட்சிக்கு முன்னரும், புரட்சியை அடுத்தும், சாகும் வரைக்கும் இந்த நிலையிலிருந்து லெனின் ஒருபொழுதும் விலகவில்லை என்பது கவனிக்கத்தக்கது. புரட்சிக்குச் சில மாதங்களுக்கு முன்னர் (மே, 1917) தேசிய இனப்பிரச்சினை பற்றி லெனின் எழுதிய கட்டுரையில்:
‘‘உருசியாவில் அங்கத்துவம் வகிக்கும் சகல தேசிய இனங்களுக்கும் சுதந்திரமாகப் பிரிந்து சென்று, சுதந்திரமான தனியரசுகளை அமைக்கும் உரிமை உண்டென்பது அங்கீகரிக்கப்பட வேண்டும். இந்த உரிமையை மறுப்பதோ அல்லது இதனை நடைமுறைச் சாத்தியமாக்கும் உத்தரவாதங்களை அளிக்கத் தவறுவதோ, ஒரு பலவந்தமான இணைப்பு அல்லது ஆக்கிரமிப்புக் கொள்கைக்குச் சமனானது’’ என்று குறிப்பிடுகிறான்.
1922ஆம் ஆண்டு டிசம்பரில், லெனின் கடும் சுகவீனத்துடன் படுக்கையிலிருந்தபடி சொல்ல எழுதிய குறிப்பேட்டில், தேசிய இனங்களின் உரிமைப் பிரச்சினையே அவனது சிந்தனையிலிருந்ததை அவதானிக்கலாம்.
‘தேசியவாதம் பற்றிப் பொதுப்படையான, பூடகமான வியாக்கியானங்களை அளிப்பதில் எவ்வித பயனுமில்லை என்பதனை, தேசிய இனப்பிரச்சினை பற்றிய எனது எழுத்துக்களில் ஏற்கனவே சுட்டிக் காட்டியுள்ளேன். ஒடுக்கி வரும் ஒரு தேசிய இனத்தின் தேசியவாதத்திற்கும், ஒடுக்கப்பட்டு வரும் ஒரு தேசிய இனத்தின் தேசியவாதத்திற்கும் மத்தியிலும், ஒரு பெரிய தேசிய இனத்தின் தேசியவாதத்திற்கும், ஒரு சிறிய தேசிய இனத்தின் தேசியவாதத்திற்கும் மத்தியிலும் நாம் கட்டாயமாக ஒரு வேறுபாட்டைக் காணவேண்டும். சர்வதேசியம் என்ற போர்வையில், ஒரு பெரிய தேசிய இனம் ஒரு சிறிய தேசிய இனத்தை ஒடுக்குமுறையின் கீழ் வைத்திருந்து, எண்ணற்ற அநீதிகளைப் புரிக்கூடும்’’ என உருசிய வரலாற்று இன அட்டூழியங்களை உதாரணத்திற்கு எடுத்துக் காட்டும் லெனின், ‘‘ஒடுக்கப்படும் தேசிய இனங்களின் பேரில், அற்ப விசயங்களுக்காவது நாம் ஏகாதிபத்தியப் போக்கைக் கடைப்பிடிப்போமானால், அது எமது நேர்மையான, இலட்சியபூர்வமான கொள்கைக்குக் குந்தகம் விளைவிப்பதுடன், மேற்கத்திய ஏகாதிபத்தியத்திற்கு எதிரான எமது இலட்சியபூர்வமான போராட்டத்தையும் மாசுபடுத்திவிடும்’’ என்கிறான்.
லெனினின் இக்கூற்றுக்களில் இருந்து இரு முக்கிய விடயங்களை நாம் கருத்துக்கு எடுக்க வேண்டும். ஒன்று, பெரிய, சிறிய தேசிய இனங்களின் தேசியவாத வேறுபாட்டையும், அடுத்தது, ஒடுக்கும் இனம் தனது ஒடுக்குமுறையை மூடிமறைக்கப் பேசும் ஒருமைப்பாட்டுச் சித்தாந்தத்தையுமே. லெனின் சுட்டிக் காட்டுவது போல ஒடுக்கும் ஒரு பெரிய தேசிய இனத்தின் தேசியவாதமானது, ஒடுக்கப்படும் ஒரு சிறிய தேசிய இனத்தின் தேசியவாதத்திலும் வேறுபாடானது. ஒடுக்குவோரின் தேசியவாதமானது அதிதீவிர இனவாதமே தவிர வேறொன்றுமல்ல. அதே சமயம் ஒடுக்கப்படும் ஒரு தேசிய இனத்தின் தேசியவாதமானது, ஒடுக்குமுறையை எதிர்த்தெழும் தேசிய விடுதலைப் போராட்டமாதலால் அது முற்போக்கானது. அதனைத் தேசியவாதமெனக் குறிக்காமல் தேசிய விடுதலை எழுச்சியென்பதே மிகப் பொருத்தமானதாகும்.
அன்றொரு காலம், இலங்கை சுதந்திரம் அடைவதற்கு முன்னராக, பிரித்தானிய ஏகாதிப்பத்திய ஒடுக்குமுறைக்கு எதிராக இனப்பாகுபாடற்ற ஏகோபித்த தேசியவாதம் பிறந்தது. சிங்கள-தமிழ்த் தேசிய முதலாளி வர்க்கத் தலைமைப்பீடத்தின் கீழ் வர்க்கங்கள் ஒன்றிணைந்த விடுதலையெழுச்சியாகப் பிறந்த இத்தேசியவாதம், தேசிய சுதந்திரத்தையடுத்து இனவாரியாகப் பிளவடைந்து, அதிதீவிரச் சிங்களத் தேசியவாதமாக விசுவரூபம் கண்டது. இந்த அதிதீவிர தேசியவாத ஒடுக்குமுறையின் சரித்திர வெளியீடாகவே தமிழீழ மக்களின் தேசிய விடுதலைப் போராட்டம் பிறந்தது எனலாம். இன்றைய நிலையில் தமிழ் பேசும் மக்கள் ஒடுக்கப்பட்டு வரும் ஒரு சிறிய தேசியம். சிங்கள மக்களோ ஒரு பெரிய தேசிய இனம். அதாவது, சிறிய தேசிய இனமாகிய தமிழர்களை நசுக்கிவரும் ஒரு பெரிய தேசிய இனம். இந்த ரீதியில் சிங்கள தேசிய இனத்தின் தேசியவாதமோ, ஏகாதிபத்திய இறுமாப்புடைய அதிதீவிர இனவாதமாகும். ஒடுக்குமுறையில் இருந்து தம்மை விடுவித்துக் கொள்ள விழையும் தமிழ் மக்களின் தேசிய உணர்வு இனவாதமாகாது. அது ஒரு உன்னதமான, முற்போக்கான தேசிய விடுதலையெழுச்சியாகும்.
அடுத்ததாக நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால், ஒடுக்குமினத்தின் ஒருமைப்பாட்டுச் சித்தாந்தத்தையே. சிங்கள முதலாளித்துவப் பிற்போக்குவாதமும் தருமம், தார்மீகம், ஐக்கியம் என்றெல்லாம் பிதற்றி வருகிறது. இந்த நரிவாதம் எமக்கு நன்கு புரியும். நாம் இங்கு ஆராய விழைவது ஒடுக்கி வரும் பெரிய தேசிய இனத்தைச் சார்ந்த ‘முற்போக்குவாதிகளின்’ பிற்போக்கான திரிபுவாதத்தையே. லெனின் சுட்டிக் காட்டியது போல, ஒடுக்கும் பெரிய தேசிய இனத்தைச் சார்ந்த சோசலிசவாதிகளும் இனத்தேசியவாதத்தில் சிக்குண்டு, சிறிய இனத்தின் தேசியப் பிரச்சினையில் தவறுதலான கொள்கையைக் கடைப்பிடிக்கலாம் என்பதையே. நிதர்சனமாக, நேர்மையாகத் தேசிய இனப்பிரச்சினையை அணுகாமல், மார்க்சிச அரசியல் வேலைத்திட்டத்திற்கு முரணாக, சித்தாந்த தெளிவற்ற திரிபுவாதம் பேசி, சோசலிசத்தின் சுலோகத்திலும், பாட்டாளி வர்க்க ஒருமைப்பாட்டுப் போர்வையிலும் இவர்கள் இன ஒடுக்குமுறையை நீடிக்கலாமென லெனின் எண்ணினான். லெனின் இவ்விதம் சிந்தித்ததில் தவறில்லை. ஏனெனில் லெனின் இறந்ததும் ஆட்சிபீடம் ஏறிய ஸ்டாலின், சோசலிச நிர்மாணம், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்ற போர்வையின் கீழ் தேசிய இனங்களை நசுக்கத் தொடங்கினான். உதாரணத்திற்கு எடுத்துக் கொண்டால் கிறீமியன் டாட்டர்ஸ், வோல்கா ஜேர்மானியர், மஸ்கெட்டியன்ஸ் போன்ற தேசிய இனங்கள் ஐரோப்பிய எல்லைப் பிராந்தியங்களில் இருந்து இடம்பெயர்க்கப்பட்டுச் சைபீரியப் பனிப்படலப் பிரதேசத்திற்கும், மத்திய ஆசியப் பிராந்தியத்திற்கும் பலவந்தமாகக் கொண்டு செல்லப்பட்டுக் குடியேற்றப்பட்டார்கள் என்பதை மார்க்சிசவாதிகள் அறிவர். ஆகவே ஒரு பெரிய தேசிய இனத்தைச் சார்ந்த சோசலிசவாதிகளின் தேசியவாதம் படிந்த கொள்கைத் திட்டங்களிலும், சித்தாந்த விளக்கங்களிலும் ஒடுக்கப்படும் சிறிய தேசிய இனம் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும். இதன் அடிப்படையில் நாம் ஏற்கனவே குறிப்பிட்ட சுயநிர்ணய உரிமை சம்பந்தமான நான்கு வியாக்கியானங்களில் முதல் நிலையை எடுத்தக் கொள்வோம்.
பெரும்பான்மை இனத்தைச் சார்ந்த இடதுசாரி இயக்கம் ஒன்றின் தெளிவற்ற சித்தாந்தக் குளறுபடி இது. அதாவது, தமிழ்த் தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமையை ஆதரிக்கும் இவர்கள், பிரிந்து செல்லும் உரிமையை, அதாவது பிரிந்து சென்று தனியரசு அமைக்கும் உரிமையை எதிர்க்கிறார்கள். சுயநிர்ணய உரிமை என்பது பிரிந்து சென்று தனியரசு அமைக்கும் உரிமையைத் தவிர வேறொன்றுமல்ல என்பது லெனினின் திட்டவட்டமான விளக்கம் என்பதைப் பார்த்தோம். ஆகவே தமிழ்த் தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமையை ஆதரிப்பதாக இவர்கள் கூறிக் கொண்டாலும், பிரிந்து சென்று தனியரசு அமைக்கும் உரிமையை எதிர்ப்பதனால், இவர்கள் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை மறுக்கிறார்கள் என்பதுதான் அர்த்தம். இவர்களது நிலையானது, லெனினின் புரட்சிப் பாதைக்கு முற்றிலும் முரணானது; மார்க்சிச-லெனினிச அரசியல் வேலைத் திட்டத்திற்கு மாறானது. இவர்கள் உண்மையில் மார்க்சிசவாதிகளுமல்ல, சோசலிசவாதிகளுமல்ல. இப்படியான சந்தர்ப்பவாதக் கும்பலை அதிதீவிர தேசியவாதிகள் என்கிறான் லெனின்.
‘‘ஒடுக்கிவரும் தேசிய இனத்தைச் சார்ந்த எந்தவொரு சோசலிசவாதியாவது, ஒடுக்கப்பட்டு வரும் தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமையை, அதாவது பிரிந்து செல்லும் உரிமையை ஆதரித்து அந்த உரிமைக்காகப் போராடத் தவறினால், அவன் ஒரு சோசலிசவாதியாக இருக்க முடியாது. அவன் உண்மையில் ஒரு அதிதீவிர தேசியவாதி’’ என்கிறான் லெனின்.
லெனினைத் தமது அரசியற் குருவாக வரித்துக் கொள்ளும் இவர்கள், லெனினின் சோசலிச சனநாயக இலட்சியத்திலிருந்து மாறுபட்டு நிற்பதன் காரணமென்ன? ஒரு பெரிய தேசிய இனத்தால் சிறிய தேசிய இனமொன்று நசுக்கப்பட்டு வருவதை நிதர்சனமாக நேரில் கண்டபோதிலும், ஒடுக்கப்படும் மக்களின் உரிமையில் கண்மூடித்தனமாக நடந்து கொள்வதேன்? இதற்குக் காரணம் நாம் கண்டுபிடிக்கத் தேவையில்லை. இவர்களின் பிற்போக்குவாதத்தை லெனினே பிட்டுக்காட்டியிருக்கிறான். இவர்கள் ஒடுக்கி வரும் பெரிய தேசிய இனத்தைச் சார்ந்திருப்பதால், அப்பெரிய இனத்தின் அதிதீவிர தேசியவாதத்தில் சிக்குண்ட சந்தர்ப்பவாதிகள். இவர்கள் தம்மை மார்க்சிச-லெனினிசவாதிகள் என்று அழைக்கத் தகுதியற்றவர்கள்.
தனிநாட்டுக் கோரிக்கையும், பாட்டாளி வர்க்க ஒருமைப்பாடும்
இனி, மார்க்சிசவாதிகளின் இரண்டாவது நிலையை எடுத்துக் கொள்வோம். இவர்கள் என்ன சொல்கிறார்கள்?
‘‘தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை ஆதரிக்கிறோம். ஆனால் பிரிவினையை எதிர்க்கிறோம். ஏனென்றால் லெனின் பிரிவினையை ஆதரிக்கவில்லை. பாட்டாளி வர்க்க சர்வதேசியத்தையும், தேசிய இனங்களின் ஒருமைப்பாட்டையும், உலக சோசலிச சமுதாயத்தையுமே விரும்பினான்’’ என்பது இவர்களது வாதம்.
தேசிய இனப்பிரச்சினை சம்பந்தமாக மார்க்சிச அரசியல் தரிசனத்தில் இந்த நிலை மிகவும் சிக்கலானதாக, குழப்பகரமானதாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. லெனினின் மேற்கோள்களைத் திரித்துக்காட்டி, சுயநிர்ணய உரிமைக்கு மாறாக ஒருமைப்பாட்டுச் சித்தாந்தத்தை வலியுறுத்தி, மார்க்சிசவாதிகள் சிலர் மக்களைக் குழப்பி வருகிறார்கள். ஒரு தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமை பற்றியும், பாட்டாளி வர்க்க ஒருமைப்பாடு பற்றியும் லெனின் உண்மையில் எவ்வித நிலையைக் கொண்டிருந்தான் என்பதைத் தெளிவுற விளங்கிக் கொள்வோமானால், இந்தக் குழப்பத்தை நாம் தவிர்த்துக் கொள்ளலாம். அதாவது இந்தக் குழப்பத்தை உண்டு பண்ணும் சோசலிசப் போர்வையின் கீழ் உள்ள சந்தர்ப்பவாதத்தைக் கண்டு கொள்ளலாம்.
ஒரு தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமையும், அதாவது பிரிந்து செல்லும் உரிமையும், பாட்டாளி வர்க்க சர்வதேசியமும், அதாவது தேசிய இனங்களின் ஒருமைப்பாடும், ஒன்றுக்கொன்று முரணான நிலைகள் எனக் கொள்வது தவறு. தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்படாமல், தேசிய இனங்களின் சமத்துவம் நிலைநாட்டப்படாமல், உண்மையான பாட்டாளி வர்க்க சர்வதேசியம், அதாவது தேசிய இனங்களின் உண்மையான ஒருமைப்பாடு உருப்பெறாது என்பது லெனினின் கொள்கைத் திட்டமாகும்.
தேசிய இனப்பிரச்சினை உள்ளவரை, அதாவது ஒரு தேசிய இனம் ஒடுக்குமுறையின் கீழ் உள்ளவரை, பாட்டாளி வர்க்கச் சர்வதேசியம் பேசிப் பயனில்லை. தேசிய இனச்சமத்துவம்தான் சர்வதேசியத்தின் பாதை. பின்னதற்கு முன்னது அத்திவாரம்.
தேசிய இனச்சமத்துவ அத்திவாரமின்றிப் பாட்டாளி வர்க்க ஒருமைப்பாடெனும் வீட்டைக் கட்டியெழுப்ப முடியாது. இது லெனினின் தீர்க்கமான விளக்கம்.
தேசிய இனங்களின் பிரிந்து செல்லும் உரிமை அங்கீகரிக்கப்பட்டு, இனங்கள் மத்தியில் உருப்படியான, உண்மையான சமத்துவம் நிலைநாட்டப்பட்டு, தேசியவாத, இனவாத ஒடுக்குமுறை முற்றாக ஒழிக்கப்பட்டால், அதாவது கொள்கையளவில் மாத்திரமல்ல, நடைமுறையில் கடைப்பிடிக்கப்பட்டால், சிறிய தேசிய இனங்களின் அச்சங்கள், ஐயப்பாடுகள் அகன்று அவை தாமாக, தன்னிச்சையாக, தமது சமூக பொருளாதார நலன்கள் கருதி, ஒரு சம தர்ம அரசின் கீழ் ஒற்றுமைப்பட்டு, ஒத்திசைவாக வாழ விரும்புவது சாத்தியமாகும் என்கிறான் லெனின். ஆகவே, தேசிய இனங்களின் ஐக்கியப்பாட்டிற்குப் பிரிந்து செல்லும் உரிமையின் அங்கீகாரம் அவசியமாகும். பிரிவதற்குச் சுதந்திரம் வழங்கப்பட்டால்தான், அது ஒற்றுமைக்கு வழிவகுக்கும் என்ற தர்க்கீக உண்மையை லெனின் திரும்பத் திரும்ப வலியுறுத்துகின்றான்.
தேசிய இனங்களின் பிரிந்து செல்லும் உரிமை அங்கீகரிக்கப்படுமாயின், அது நாட்டைப் பிளவுபடுத்திச் சிதறடித்துவிடுமென்று சில உருசிய மார்க்சிச சித்தாந்தவாதிகள் லெனினிற்கெதிராக வாதாடி வந்தனர். இவர்களின் குழம்பிய நிலைக்கு மாறாக லெனின் திட்டவட்டமான, தெளிவான கருத்தை வலியுறுத்தி வந்தான். அதாவது தேசிய இனங்களுக்குப் பிரிந்து செல்லும் உரிமை அளிக்கப்பட்டால்தான் நாடு பிரிந்து, சிதைந்து போகும் அபாயத்தைத் தவிர்த்துக் கொள்ளலாம் என்பதையே. இந்த உண்மையை உறுதிப்படுத்த லெனின் விவாகரத்துச் சட்டத்தை உதாரணத்துக்கு எடுத்துக் காட்டுகிறான். விவாகரத்துக் கோரும், அதாவது பிரியும் உரிமைகோரும் சட்டம் நடைமுறையில் இருப்பதால் தாம்பத்திய உறவு சிதைந்து விடுவதில்லை. அதற்கு மாறாக சனநாயக அடிப்படையில் குடும்ப உறவு மேலும் பலப்படுவதற்கு வழிவகுக்கும் என்பது லெனினின் வாதம்.
‘‘சுயநிர்ணய உரிமையை, அதாவது பிரிந்து செல்லும் உரிமையை ஆதரிப்பவர்களைப் பிரிவினைக்கு ஊக்குவிப்பதாகக் குற்றம் சாட்டுவது, விவாகரத்துச் சுதந்திரத்தை ஆதரிப்பதால் குடும்பத்தைக் குலைக்க ஊக்குவிப்பதற்கு சமன் என்னும் முட்டாள்தனமான, பாசாங்கான குற்றச்சாட்டாகும்’’ என்று லெனின் சுட்டிக் காட்டுகிறான்.
பிரிந்து செல்லும் உரிமையை வழங்காது தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண விழைவது, அதாவது இன்னொரு விதத்தில் சொல்லப் போனால் தேசிய இனங்களின் அடிப்படையான சனநாயக உரிமையை உதாசீனம் செய்து, பாட்டாளி வர்க்க ஒருமைப்பாட்டை வலியுறுத்தித் தேசிய இனங்களை இணைக்க முயல்வது, பலவந்தமான, ஆக்கிரமிப்பான பிணைப்பாக முடியும் என்பது லெனினின் வாதம். இப்படியான பலவந்தமான, பலாத்காரமான இணைப்பானது, பாட்டாளி வர்க்க ஒருமைப்பாட்டிற்குக் குந்தகமானது. பாட்டாளி வர்க்கப் பிளவுக்கு அது வழிகோலும். உதாரணமாக, ஒரு சிறிய தேசிய இனம் பலவந்தமான முறையில் ஒரு பெரிய தேசிய இனத்துடன் இணைக்கப்படுமாயின், இப்படியான ஒடுக்குமுறைக்கு ஆளாகும் ஒரு சிறிய தேசிய இனத்தைச் சார்ந்த பாட்டாளி வர்க்கமானது, முதலாளி வர்க்கத்திற்கு ஆதரவாக மாறுவதுடன், ஒடுக்கி வரும் பெரிய தேசிய இனத்தின் பாட்டாளி வர்க்கத்தைத் தனது எதிரியாகவும் எண்ணக்கூடும். இதை லெனின் நன்கு உணர்ந்திருந்தான். ஆகவேதான் தொழிலாளி வர்க்க ஐக்கியத்திற்கு முதலில் தேசிய இனங்களின் சமத்துவம் நிலைநாட்டப்பட வேண்டுமென்பதை வலியுறுத்தினான்.
‘‘முதலாளி வர்க்கத்தை ஆட்சியிலிருந்து கவிழ்த்து, ஒரு சோசலிசப் புரட்சியை நிறைவேற்றச் செய்யும் பலர் எமக்குத் தேவையாயின், தொழிலாளி வர்க்கம் நெருக்கமாக ஐக்கியப்பட வேண்டும். இந்த ஐக்கியத்தை வளர்ப்பதாயின் சுயநிர்ணய உரிமக்கு ஆதரவாகவும், பலவந்தமான இணைப்புக்கு எதிராகவும் நாம் போராட வேண்டும்’’ என்கிறான் லெனின். ஆகவே பலவந்தமான, அதாவது மக்களின் இசைவில்லாத இணைப்பானது தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையை மீறும் நடவடிக்கை மாத்திரமன்றி, அது மிகவும் பாரதுரமான இன ஒடுக்குமுறை என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வெண்டும்.
கார்ல் மார்க்சு உலகப் பாட்டாளி வர்க்கத்தின் ஒருமைப்பாட்டை வலியுறுத்தினான்; உலக சோசலிச சமுதாயத்தை விரும்பினான்; அகிலப் பாட்டாளி வர்க்கமே ஐக்கியப்படு என்று முழங்கினான். லெனினும் ஒரு சர்வதேசியவாதி. ‘‘முதலாளித்துவம் ஒரு சர்வதேச சக்தி. அதனை வெற்றி கொள்வதாயின் சர்வதேசத் தொழிலாளர்களின் கூட்டணி அவசியம். சர்வதேசத் தொழிலாளர்களின் சகோதரத்துவம் அவசியம்’’ என்று முழங்கி வந்தவன். ஆகவே மார்க்சிச-லெனினிச அரசியல் திட்டத்தைத் தழுவும் ஒரு பொதுவுடமைவாதி, பாட்டாளி வர்க்க ஒருமைப்பாட்டிற்குப் பாடுபடத்தான் வேண்டும். ஆனால் இந்த ஒருமைப்பாட்டிற்கு அடித்தளமாக விளங்குவது தேசிய இனங்களின் ஒருமைப்பாடு என்பதை எந்தவொரு பொதுவுடமைவாதியும் மறந்துவிடக் கூடாது. ஒரு தேசிய இனம் ஒடுக்குமுறையில் இருக்கும் பொழுது, அத்தேசிய இனத்தின் விடுதலைக்காகப் போராடாமல் சர்வதேசியம் பேசுவதோ, பாட்டாளி வர்க்க ஒருமைப்பாட்டை வலியுறுத்துவதோ உண்மையான மார்க்சிச கொள்கைத் திட்டம் ஆகாது. அது சோசலிசப் புரட்சிக்கும் வழிவகுக்காது. தேசிய இனங்களின் மத்தியில் பரிபூரண நம்பிக்கையும், பரஸ்பர சகோதரத்துவமும் முதலில் நிலைநாட்டப்பட வேண்டும். இது அப்படி இலகுவான செயல் அல்ல. காலம் காலமாகத் தேசியவாத, இனவாத ஒடுக்குமுறையின் கீழ் நசுக்கப்பட்டு வந்த ஒரு தேசிய இனத்தின் நல்லெண்ணத்தைப் பெறுவது கடினமான செயல்.
‘‘நாம் விரும்புவது தேசிய இனங்களின் தன்னிச்சையான ஒருமைப்பாட்டையே; ஒரு தேசிய இனம், இன்னொரு தேசிய இனத்தைப் பலவந்தம் செய்யாத ஒருமைப்பாட்டையே; பரிபூரண நம்பிக்கையில், பரஸ்பர சகோதரத்துவ அங்கீகாரத்தில், பரிபூரண தன்னிச்சையான இணக்கத்தில் கட்டப்படும் ஒருமைப்பாட்டையே. திடீரென, ஒரே தடவையில் இந்த ஒருமைப்பாட்டை உருவாக்க முடியாது. பெரும் பொறுமையுடன் சகல சூழ்நிலைகளையும் கருத்திற் கொண்டு, இந்த இலட்சியத்தை நோக்கி நாம் செயற்பட வேண்டும்’’ என்று லெனின் சொல்கிறான்.
இன்னுமொரு கட்டுரையில் ‘‘ஒடுக்கும் தேசிய இனத்தின் அல்லது பெரிய தேசிய இனத்தின் சர்வதேசியவாதமானது, தேசிய இனங்களின் சமத்துவத்தைப் பேணுவதில் மாத்திரம் நின்றுவிடாது, தான் புரிந்த அநீதிகளுக்குப் பரிகாரமாகத் தனது சமத்துவத்தையே விட்டுக் கொடுக்கக் கூடியதாக அமைய வேண்டும்’’ என்கிறான் லெனின். ‘‘இதனைப் புரிந்து கொள்ளாதவன், தேசிய இனப்பிரச்சினையில் உண்மையான பாட்டாளி வர்க்க நோக்கினை அறியாதவன். ஆகையால் இவனது பார்வை உண்மையில் குட்டி பூர்சுவா நோக்காகும்’’ எனக் குறிப்பிடுகிறான்.
இந்தச் சந்தர்ப்பத்தில் நாம் முன்பு கூறிய சுயநிர்ணய உரிமை சம்பந்தமாக சில மார்க்சிசவாதிகளின் இரண்டாவது நிலையை எடுத்துக் கொள்வோம். தமிழ்த் தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமையை ஆதரிக்கும் இவர்கள், பிரிந்து செல்வதை எதிர்க்கிறார்களாம். ஏனெனில், லெனின் பாட்டாளி வர்க்க சர்வதேசியத்தை வலியுறுத்தினான் என்பதற்காக. இந்தத் திரிபுவாதம் இப்பொழுது எமக்குத் தெளிவாகிறது. லெனின் பாட்டாளி வர்க்க ஒருமைப்பாட்டை வலியுறுத்தினான் என்பது உண்மைதான். ஆனால் தேசிய இனப்பிரச்சினை தீராமல், ஒடுக்குமுறை ஒழியாமல், தேசிய இனங்களின் சமத்துவம் நிலைநாட்டப்படாமல் ஒருமைப்பாட்டுச் சித்தாந்தம் பேசுவது சந்தர்ப்பவாதம் ஆகும் என்பது லெபனினின் திட்டவட்டமான கொள்கை. ஆனால் இந்த மார்க்சிசவாதிகளோ சர்வதேசியம், உலக சோசலிசம் என்ற மார்க்சிசக் கோட்பாடுகளின் உண்மையான அர்த்தத்தை அறியாது, அவற்றை நடைமுறையில் சாத்தியப்படுத்தும் வழிவகைகளை ஆராயாது, ஒருமைப்பாட்டு வேதாந்தம் பேசுகிறார்கள்.
ஒடுக்கப்பட்டு வந்த தமிழ்த் தேசிய இனம், அந்த ஒடுக்குமுறையின் உக்கிரம் தாங்காமல் தனது சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தித் தனிநாடாக விடுதலை பெற விழைந்தது. ஒடுக்குமுறைக்கெதிரான எந்த விடுதலைப் போராட்டத்தையும், அது இலட்சியத்தில் முற்போக்கானது என்பதால், அதைப் பொதுவுடமைவாதிகள் ஆதரிக்கக் கடமைப்பட்டவர்கள். இங்கு ஒற்றுமையை அல்ல, ஒடுக்குமுறையையே நாம் கருத்திற் கொள்ள வேண்டும். ஏனெனில் ஒடுக்குமுறையின் கீழ் ஒற்றுமை ஒரு பொழுதும் சாத்தியமாவதில்லை. கணவனின் கொடூரமான ஒடுக்குமுறை தாங்காது விவாகரத்துக் கோரும் பெண்ணிடம், பிரிவினை வேண்டாம், தாம்பத்திய ஒத்துறவே சிறந்தது என்று சொல்வது முழுமுட்டாள்தனமானது.
ஒடுக்குமுறை நீங்காமல், ஒற்றுமை ஏற்படப் போவதில்லை என்பதால்தான், லெனின் போன்ற அரசியல் மேதைகள் தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தினார்கள். ஒரு தேசிய இனத்திற்குப் பிரிந்து செல்லும் உரிமையுண்டு. ஒடுக்குமுறை தாங்காது போனால், அத்தேசிய இனம் பிரிவினைப் போராட்டத்தில் குதிக்கலாம். ஆகவே, இந்தப் பிரிவினையைத் தவிர்த்து ஒற்றுமையை நிலைநாட்டுவதானால், ஒடுக்குமுறை அகல வேண்டும்; தேசிய இனச் சமத்துவம் நிலைநாட்டப்பட வேண்டும்; இதுவே பாட்டாளி வர்க்க சர்வதேசியத்திற்கும், உலக சோசலிச சமுதாயத்திற்கும் வழிகோலும் உன்னதமான பாதையென்பது லெனினின் உறுதியான கொள்கையாகும்.
ஆகவே, லெனினின் தெளிவான அரசியல் கொள்கைத் திட்டத்தைத் திரித்து, சர்வதேசியம் பேசும் ‘சோசலிசவாதிகள்’ என்போரின் சந்தர்ப்பவாதத்தின் மீது தமிழினம் விழிப்பாக இருக்க வேண்டும்.
பிரியும் உரிமை வேண்டும்; பிரிவினை தேவையில்லை
இனி பொதுவுடமைவாதிகள் சிலர் மேற்கொண்டுள்ள மூன்றாவது நிலையை விசாரணைக்கு எடுத்துக் கொள்வோம். இவர்கள் கூறுவது என்ன?
‘‘தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்துகிறோம். சுயநிர்ணய உரிமையென்பது பிரிந்து சென்று தனியரசு அமைக்கும் உரிமைதான். கம்யூனிஸ்டுகள் என்ற ரீதியில் இந்த உரிமையை வலியுறுத்துகிறோம்; ஆனால் தமிழர் என்ற ரீதியில் பிரிவினை தேவையில்லையென்கிறோம்’’ என்பது இவர்களது வாதம். இவர்களும் லெனினை உதாரணத்திற்கு எடுத்துக் காட்டி, தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கு சோசலிச அரசியல் வேலைத் திட்டத்தின்படி தீர்வுகாணப்பட வேண்டுமென வாதிடுகிறார்கள். மார்க்சிச சித்தாந்தத்தின்படி, இவர்களது நிலை சரியானதா? தமிழ் பேசும் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு இவர்கள் காட்டும் பாதை விமோசனம் அளிக்குமா? லெனினின் கொள்கைத் திட்டத்திலிருந்து இவர்கள் அளிக்கும் விளக்கம் சரியானதா?
இந்த வினாக்களுக்கு விடையளிப்பதற்கு முன்பாக, நாம் கவனத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டியது என்னவென்றால் தமிழீழ மக்கள் எதற்காகத் தனியரசு கோருகிறார்கள், இந்தக் கோரிக்கை பிறந்ததன் காரணமென்ன, ஒரு தேசிய இனம் ஒடுக்குமுறைக்கெதிராகப் போராடுகையில் ஒரு பொதுவுடமைவாதியானவன் (தமிழனோ அன்றிச் சிங்களவனோ) கடைப்பிடிக்க வேண்டிய கொள்கையென்ன, தேசிய விடுதலைப் போராட்டத்திற்கும் வர்க்கப் போராட்டத்திற்குமுள்ள தொடர்பினை ஆராய்ந்து சோசலிசப் புரட்சியை நோக்கி நாம் கடைப்பிடிக்க வேண்டிய பாதையென்ன, என்பவற்றைத்தான். முதலில் தமிழ் மக்களின் தனிநாட்டுக் கோரிக்கை ஏன் எழுந்தது என்பதைப் பார்ப்போம்.
சிங்கள – தமிழ் தேசிய முதலாளிகளின் ஒன்றிணைந்த தலைமையின் கீழ் வர்க்கங்கள் ஒன்றுசேர்ந்த தேசிய விடுதலை இயக்கம் பிரித்தானிய ஏகாதிபத்தியத்திலிருந்து 1948இல் அரசியல் விடுதலை பெற்றது. தேசிய சுதந்திரம் கிடைத்ததையடுத்து அரசியல் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ளும் விவகாரத்தில் சிங்கள – தமிழ் முதலாளித்துவ ஆளும் கும்பலிடையே பூசலும், பிணக்கும் ஏற்படத் தொடங்கின. இனவாதமும், மதவாதமும் கலந்த அதிதீவிர தேசியவாதத்தால் தூண்டப்பட்ட சிங்கள ஆளும் வர்க்கம், தமிழ் முதலாளி வர்க்கத்தின் அரசியல் அபிலாசைகளை நிராகரித்தது மட்டுமன்றி தமிழ் பேசும் மக்களின் உரிமகளைப் பறித்து அவர்களை இனவாரியாக நசுக்கத் தொடங்கியது. முதலில் மலையகத் தமிழ்த் தொழிலாளி வர்க்கத்தின் குடியுரிமை பறிபோயிற்று. பின் தமிழ்பேசும் மக்களின் மொழியுரிமை பறிபோயிற்று; பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த பாரம்பரிய நிலங்களும் பறிபோகத் தொடங்கின. தமிழினமானது ஒரு திட்டமிட்ட பொருளாதார, சமூக, கலாச்சார ஒடுக்குமுறைக்கு ஆளாக்கப்பட்டது. இந்த ஒடுக்குமுறைக்கு எதிராகக் கிளர்ந்த தமிழ்த் தேசிய இயக்கத் தலைமைப்பீடம், மக்களை அணிதிரட்டிப் பிரதேச சுயாட்சி வேண்டி அமைதிவழிப் போராட்டங்களை நடாத்தியது. போராட்டத்தின் பின்திரையில் சிங்கள ஆளும் வர்க்கத்துடன் பேரம் பேசி ஒப்பந்தங்கள் செய்யவும் விழைந்தது. ஆனால் தீவிர சிங்கள இனவாதமும், தேசியவாதமும் அதற்கு இடமளிக்கவில்லை.
1970ஆம் ஆண்டிலிருந்து தமிழ்த் தேசிய இனத்திற்கெதிரான ஒடுக்குமுறை தீவிரமடையத் தொடங்கியது. தீவிர சிங்கள இனவாதத்தின் திருவுருவமான சுதந்திரக் கட்சியும், சோசலிச விரோதிகளான பழைய இடதுசாரிகளும் கூட்டுச் சேர்ந்த ஆளும் வர்க்கமானது, இந்த அநீதியான ஒடுக்குமுறைக்கு அரசியல் அமைப்பு மூலம் சட்டரீதியான அங்கீகாரம் வழங்கியது. இந்த இனவாதக் கும்பலின் ஏழாண்டு ஆட்சிக் காலம், இன ஒடுக்குமுறையின் உச்சகட்டமாக அமைந்தது. முப்பதாண்டு காலமாக தமிழீழம் அனுபவித்து வந்த தேசிய ஒடுக்குமுறை, இந்த ஏழாண்டு காலத்தில் உக்கிரமடைந்து, தமிழரின் வயிற்றில் உதைக்கத் தொடங்கியது. இந்த ஒடுக்குமுறையின் அதிதீவிர அழுத்தம் காரணமாக விடிவில்லை என்ற விரக்தியின் விளிம்பிற்குத் தள்ளப்பட்ட தமிழ் இளைஞர் சமுதாயம், தேசிய இன விடுதலைக்குப் புரட்சிகரமான பாதையை விரும்பியது. ஒடுக்குமுறைக்கெதிராக வர்க்கங்கள் ஒன்றுபட்டன. தனிநாட்டுக் கோரிக்கை, அதாவது பிரிந்து சென்று தனியரசு அமைக்கும் கோரிக்கை தவிர்க்க முடியாததாய் உருப்பெற்றதால், ஒடுக்கப்பட்ட இனத்தின் ஒன்றிணைந்த கோரிக்கையாக விசுவரூபம் கொண்டதால், இத்தேசிய விடுதலையியக்கத்தைத் தலைமை தாங்கும் பெரும் பொறுப்பு கூட்டணித் தலைமைப்பீடத்தின் தலையில் வைக்கப்பட்டது.
தனிநாட்டுக் கோரிக்கையானது எந்தவொரு அரசியல் கட்சியினதும் கண்டுபிடிப்பல்ல. இது ஒரு வரலாற்று நிகழ்ச்சி; ஒடுக்கப்பட்டு வந்த ஒரு தேசிய இனத்தின் விடுதலையெழுச்சி; நெருக்கடியான பொருளாதார, சமூக, முரண்பாடுகளால் எழுந்த தவிர்க்க முடியாத அரசியல் கிளர்ச்சி.
இந்தத் தனிநாட்டுக் கோரிக்கையானது இலங்கையின் அரசியல் வரலாற்றில், குறிப்பாகத் தமிழ் அரசியலில், புரட்சிகரமான ஒரு புதிய சகாப்தத்தைத் தொடக்கி வைத்தது. அதாவது கால் நூற்றாண்டு காலமாக மொழிப் பிரச்சினையாக, சிறுபான்மை இனப்பிரச்சினையாக இழுபட்டு வந்த தமிழர் பிரச்சினை, ஒரு தேசிய இனப்பிரச்சினையாக உருவம் பெற்றது; சுயநிர்ணய உரிமைப் பிரச்சினையாகத் திருப்பம் பெற்றது; ஒரு தேசிய இனத்தின் தேசிய விடுதலைப் போராட்டமான அமைப்பைப் பெற்றது.
முதலாளித்துவத்தின் அதிகார அமைப்பான பாராளுமன்றமும், அதன் பிற்போக்கான சனநாயகக் கோட்பாடும், தேசிய இனப்பிரச்சினை பற்றியோ அல்லது சுயநிர்ணய உரிமை பற்றியோ தெளிவான நிலையைக் கொண்டிருக்கவில்லை. முதலாளித்துவத்தின் வெறியாட்டத்திலிருந்தே தேசிய இன ஒடுக்குமுறை பிறப்பதால், முதலாளித்துவ ஆளும் வர்க்கமானது ஒடுக்கப்படும் இனத்தின் சமூக, பொருளாதார, அரசியல் கொந்தளிப்பின் யதார்த்த நிலையை நிதர்சனமாக, நீதியாக அணுகும் அக்கறையோ, ஆற்றலோ அற்றது. ஆகவே தமிழ் பேசும் இனத்தின் தேசியப் பிரச்சினையை பாராளுமன்றச் சனநாயகம் மூலம் அணுகவோ அன்றித் தீர்த்துவைக்கவோ முடியாது.
தேசிய இனப்பிரச்சினையும், தேசிய விடுதலைப் போராட்டமான அதன் எழுச்சியும், ஒடுக்கப்படும் மக்களின் விடுதலைக் குமுறல் என்பதால், மார்க்சிச-லெனினிசச் சித்தாந்தத்தில் அதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. சோசலிச சனநாயக அரசியல் வேலைத் திட்டத்தில் இது ஆணிவேரான அம்சமாகக் கொள்ளப்படுகிறது. ஆகையால் இன ஒடுக்குமுறையின் அழுத்தம் காரணமாய் விடுதலை வேண்டும் ஒரு சமுதாயம், மார்க்சிச-லெனினிச கொள்கைத் திட்டத்தின் அடிப்படையில், அதாவது விஞ்ஞான சோசலிசத்தின் அடிப்படையில், தனது அரசியல் சித்தாந்தத்தையும், போராட்டச் செயல்திட்டத்தையும் அமைப்பதே சிறந்த வழியாகும்.
விடுதலை இயக்கமும், வர்க்கப் போராட்டமும்
தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தை மக்கள் எழுச்சி இயக்கமாக மாற்றுவதில் முக்கிய பங்கெடுத்த தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைமைப்பீடம், பழமைவாத, நடுத்தர வர்க்கத்தைச் சார்ந்தது; அவ்வர்க்கத்தின் அபிலாசைகளையும், கருத்துக்களையும் பிரதிபலிக்கிறது; பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் முண்டுகளான பாராளுமன்ற அரசமைப்பிலும், அதன் அரசியல் சித்தாந்தத்திலும் நம்பிக்கை கொண்டது. இந்தக் கட்சி சம்பந்தப்பட்ட மட்டில் ஒரு புரட்சிவாதியான பொதுவுடமைவாதி எவ்வித நிலையைக் கடைப்பிடிக்க வேண்டும்? இது சம்பந்தமாக லெனின் எமக்கு வரித்துக் காட்டும் வர்க்கப் போராட்ட வழிதான் என்ன?
மார்க்சிச சித்தாந்தம் ஒன்றைமட்டும் திடமாக வலியுறுத்துகிறது. அதாவது ஒடுக்குமுறைக்கெதிராக ஒரு விடுதலை இயக்கம் போராடி வருமானால், அவ்வியக்கம் முதலாளித்துவ அல்லது நடுத்தர வர்க்க தலைமையில் இயங்கினாலும், அதனை ஆதரிப்பது முற்போக்குவாதிகளின் கடமை.
‘‘ஒடுக்கப்படும் ஓர் இனத்தின் பூர்சுவாக்கள் ஒடுக்குவோருக்கு எதிராகப் போராடினால், நாம் எப்பொழுதும், எந்தச் சந்தர்ப்பத்திலும் மற்றவர்களைவிட அதைப் பலமாக ஆதரிப்போம். ஏனெனில் நாம் ஒடுக்குமுறையின் தீவிரமான உறுதிகொண்ட எதிரிகள்’’ என்று லெனின் சொல்கிறான்.
பொதுமக்கள் ஆதரவு பெற்ற ஒரு தேசிய விடுதலை இயக்கம் என்ற ரீதியிலும், ஒடுக்குமுறைக்கு எதிராகக் குரல் எழுப்பி வருவதாலும், கூட்டணித் தலைமைப்பீடம் பழமைவாத, நடுத்தர வர்க்கத்தைச் சார்ந்திருப்பினும், அதன் கட்சி அமைப்பில் முற்போக்கான, சனநாயக உள்ளடக்கம் இருக்கத்தான் செய்கிறது. ஆகவே தமிழர் விடுதலைக் கூட்டணி ஒடுக்குமுறைக்கெதிராகத் தொடர்ந்து போராடி வருமானால் அதற்கு ஆதரவளிக்கப் பொதுவுடமைவாதிகள் கடமைப்பட்டவர்கள்.
ஆனால் இந்த ஆதரவு நிபந்தனைக்குட்பட்டது; வரையறுக்கப்பட்டது. ‘‘ஒரு சில அம்சங்களில் மட்டும்தான் பொதுவுடமைவாதிகள் முதலாளித்துவம் அல்லது நடுத்தர வர்க்கம் தலைமை தாங்கும் விடுதலை இயக்கத்திற்கு ஆதரவளிக்கலாம். நிபந்தனையற்ற பூரண ஆதரவு அளித்தால், அது பாட்டாளி வர்க்கத்தைப் பூர்சுவா கொள்கைத் திட்டத்திற்கு அடிபணியச் செய்து, வர்க்கப் போராட்டத்திற்கு குந்தகம் விளைவிக்கும்’’ என்பது லெனினின் வாதம்.
ஒரு தேசிய விடுதலை இயக்கம் முற்போக்கான அம்சங்களையுடையது. ஆனால் ஒடுக்கப்படும் இனத்தின் வர்க்கங்கள் ஒன்று சேர்ந்த இந்த மாபெரும் மக்கள் சக்தியை சோசலிசப் புரட்சிப் பாதையில் இட்டுச் சென்று, தேசிய விடுதலைக்கும், வர்க்கப் போராட்டத்திற்கும் வழிவகுக்கும் புரட்சிகரமான கொள்கைத் திட்டம் பூர்சுவா அல்லது குட்டி பூர்சுவா தலைமைப்பீடத்திற்கு இருப்பதில்லை.
பூர்சுவாக்களும், குட்டி பூர்சுவாக்களும் விடுதலைப் போராட்ட சுலோகங்களை எழுப்பி, தமது வர்க்க நலன்களையும், சொந்த அபிலாசைகளையும் பூர்த்தி செய்ய விழைவதுடன், ஒடுக்கும் பெரிய தேசிய இனத்தின் முதலாளித்துவ ஆளும் வர்க்கத்துடன் ஒப்பந்தங்களைச் செய்து, விடுதலை இயக்கத்தைப் பிற்போக்கான பாதையில் தள்ளிவிடக்கூடும்.
‘‘ஒடுக்கப்படும் இனத்தின் பூர்சுவாக்கள், தொழிலாளி வர்க்கத்தை ஏமாற்றும் நோக்கத்துடன் தேசிய விடுதலைச் சுலோகத்தை மாத்திரம் திரும்பத் திரும்ப முழங்கி வருகிறார்கள். இவர்கள் இந்தச் சுலோகத்தை எழுப்புவதன் காரணம், ஒடுக்கும் தேசிய இனத்தின் பூர்சுவாக்களுடன் பிற்போக்கான ஒப்பந்தங்களைச் செய்து கொள்வதற்கே’’ என்று லெனின் சொல்கிறான்.
முதலாளி வர்க்கமானது முற்போக்கான சுலோகங்களை எழுப்பித் தனது வர்க்க அபிலாசைகளைப் பூர்த்தி செய்ய விழைவது திண்ணம். ஒடுக்கப்படும் தனது இனத்தின் விடிவுக்கு விழையாது, ஒடுக்கும் பேரின ஆளும் வர்க்கத்துடன் பேரம் பேசித் தனக்குச் சாதகமான சலுகைகளைப் பெறுவதே இதன் நோக்கமாதலால், இந்தப் பூர்சுவாக் கொள்கையானது தேசிய இன விடுதலையையும், பாட்டாளி வர்க்கப் புரட்சியையும் படுகுழியில் தள்ளிவிடும் என்பது லெனினின் வாதம்.
தமிழ்த் தேசிய இனப் பாட்டாளி வர்க்கமோ இன்றும் இழிநிலையில் இம்சைப்பட்டு வருகிறது; சிங்களத் தேசியவாத ஒடுக்குமுறை ஒருபுறமும், தன்னின முதலாளித்துவ ஒடுக்குமுறை மறுபுறமுமாக இருதுருவ முரண்பாடுகளால் சிக்குண்டு கிடக்கிறது; பூதாகரமாக வளர்ந்துவிட்ட பொருளாதார, சமூக அழுக்கத்தங்களால் நசுக்கப்பட்டு வருகிறது. கடந்த முப்பதாண்டு காலமாகத் தமிழ் பூர்சுவா அரசியல் இயக்கங்கள் பேரினத் தேசியவாத ஒடுக்குமுறையைப் பிரதான பிரச்சினையாகச் சித்தரித்து வருகின்றனவே தவிர, தமிழ் பேசும் பாட்டாளி வர்க்கத்தின் சமூக, பொருளாதார சுபீட்சத்திற்கு உருப்படியான நடவடிக்கைகள் எதையும் மேற்கொள்ளவில்லை.
எமது தேசிய விடுதலைப் போராட்டமானது, வர்க்கப் போராட்டத்தை ஒன்றிணைத்த புரட்சிகர அரசியல் திட்டமாக அமைய வேண்டும். ஒடுக்கப்படும் எமது தேசிய இனத்தின் அரசியல் விடுதலைக்காக மட்டுமன்றி, நசுக்கப்படும் வர்க்கங்களினதும், சாதியென்ற பெயரால் சுரண்டப்படும் எமது மக்களினதும் சுபீட்சத்திற்காகவும் நாம் போராட வேண்டும். அதாவது, எமது தேசிய விடுதலைப் போராட்டமானது சோசலிசப் புரட்சியைக் இலக்காகக் கொண்ட கொள்கைத் திட்டத்தில் கட்டியெழுப்பப்பட வேண்டும். எமது மக்கள் அரசியல் ரீதியாக மட்டுமன்றி, பொருளாதார, சமூக ஒடுக்குமுறையில் இருந்தும் விடுதலை பெற வேண்டும். ஆகவே, தமிழீழத் தேசிய விடுதலை இயக்கங்களில் பங்கேற்கும் பழமைவாத நடுத்தர வர்க்கக் கட்சிகளுக்கு நிபந்தனையற்ற பரிபூரண ஆதரவளிப்பது தமிழ்ப் பாட்டாளி வர்க்கத்தின் விடிவிற்கும், சோசலிசப் புரட்சிக்கும் வழிகோலப் போவதில்லை.
‘‘ஒரு குறிப்பிட்ட கோரிக்கை எந்தளவிற்கு ‘சாத்தியமாகும்’ என்பதில்தான் பூர்சுவாக்கள் மிகவும் அக்கறை கொண்டிருப்பார்கள். ஏனெனில் பாட்டாளி வர்க்கத்திற்குப் பாதகமான முறையில், மற்றைய தேசிய இனத்தைச் சேர்ந்த முதலாளி வர்க்கத்துடன் உடன்பாடு செய்துகொள்ளும் மாற்ற முடியாத கொள்கையை இவர்கள் கடைப்பிடித்து வருகிறார்கள். பாட்டாளி வர்க்கத்தைப் பொறுத்த வரையில் முக்கியமானது என்னவெனின், பூர்சுவாக்களுக்கெதிராகத் தனது வர்க்கத்தைப் பலப்படுத்தி, உறுதியான சனநாயகத்தையும், சோசலிசத்தையும், மக்களுக்குப் புகட்டிக் கொடுப்பதுதான்’’ என்று லெனின் சொல்கிறான்.
ஒடுக்கப்பட்டு வரும் தமிழ்த் தேசிய இனத்தின் தேசிய விடுதலை; தமிழ் விவசாயப் பாட்டாளிகளின் சமூக, பொருளாதார சுபீட்சத்திற்கு வழிகோலும் சோசலிசப் புரட்சி; இவ்விரண்டும், ஒன்றோடொன்று இணைந்த இலக்குகளாகும். ஒரு புரட்சிகரமான அரசியல் திட்டமானது, இவ்விரு அம்சங்களையும் இணைத்த செயல்திட்டமாக அமைய வேண்டும்.
தனிநாட்டுக் கோசத்தையும், விடுதலைச் சுலோகத்தையும் எழுப்பிக் கொண்டிருந்தால் மட்டும் எமது மக்கள் விடுதலை அடையப் போவதில்லை. மனிதனை மனிதன் சுரண்டும் அநீதியான, முதலாளிய அமைப்பு ஒழிக்கப்பட வேண்டும். உற்பத்திச் சாதனங்கள் உழைப்பாளியின் உடமையாக்கப்பட்ட, ஒரு உன்னத சமதர்ம சமுதாயம் உதயமானால்தான் எமது மக்கள் உண்மையில் விடுதலை பெறுவார்கள். ஆகவே, சோசலிசப் புரட்சியை அடிப்படையாகக் கொண்ட செயற்திட்டத்தின் மூலமே எமது தேசிய இனத்தின் விடுதலைக்கு, அதாவது உண்மையான அரசியல், சமூக, பொருளாதார விடுதலைக்கு, வழிகாண முடியும். தமிழர் விடுதலைக் கூட்டணியோ தனிநாட்டுக் கோசத்தை மட்டும் எழுப்புகிறதே தவிர, பாட்டாளி வர்க்கத்தின் சுபீட்சத்திற்கு வழிகோலும் சோசலிசப் புரட்சி பற்றித் தீர்க்கமான கொள்கைத் திட்டம் எதையும் மக்கள் முன் வைக்கவில்லை.
தமிழீழ விடுதலை எழுச்சி முற்போக்கானது என்பதால், ஒடுக்குமுறைக்கெதிரான கிளர்ச்சி என்பதால், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமைப்பீடம் பழமைவாத, நடுத்தர வர்க்கத்தின் விருப்புகளைக் கொண்டதாயினும், அதற்குக் காலவரம்புக்குட்பட்ட ஆதரவளிக்கப் பொதுவுடமை விடுதலைவாதிகளான நாம் கடமைப்பட்டுள்ளோம். காலவரம்புக்குட்பட்டு ஆதரவளிக்கும் அதே வேளையில், தமிழ் பேசும் பாட்டாளி வர்க்கத்தின் ஒருமைப்பாட்டை உறுதிப்படுத்தி, முதலாளி வர்க்கத்திற்கெதிராக அதனைப் பலப்படுத்தி, தேசிய விடுதலைப் போராட்டத்தைப் பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகரத் தலைமைப்பீடத்திற்கு கொண்டு வருவதே பொதுவுடமை விடுதலைவாதிகளான எமது வேலைத்திட்டமாகும்.
எமக்குப் பாராளுமன்ற அரசியல் இயக்கங்களில் அக்கறையில்லை. தமிழ் பேசும் இனத்தின் தேசிய விடுதலைப் போராட்டத்தை வெற்றிப் பாதையில் கொண்டு செல்வதற்கு, பாராளுமன்றத்திற்குப் புறம்பான, பலம்வாய்ந்த ஒரு புரட்சிவாத தேசிய விடுதலை இயக்கமாக இயங்கும் எம்முடன் பொதுவுடமைவாதிகள் இணைய முன்வர வேண்டும்.
சந்தர்ப்பவாதத்தில் சறுக்கிவிட்டார்கள்
தமிழ்த் தேசிய இனப்பிரச்சினையில் நாம் ஏற்கனவே பிரித்துக் காட்டிய மூன்றாவது நிலையைக் கொண்டுள்ள தமிழ்ப் பொதுவுடமைவாதிகளின் கொள்கையை இந்தச் சந்தர்ப்பத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்வோம். நாம் மேலே விபரித்த கருத்துக்களில் இருந்து, இந்தச் சிவப்புத் தமிழர்கள் மார்க்சிச-லெனினிசக் கொள்கைத் திட்டத்திலிருந்து நழுவி, அரசியல் சந்தர்ப்பவாதத்தில் சறுக்கிவிட்டார்கள் என்பதை வாசகர்கள் ஊகித்துக் கொள்ளலாம்.
இவர்களின் நிலைதான் என்ன? தேசிய இனப்பிரச்சினையில் இவர்களது கொள்கைத் திட்டத்தை ஐந்து கருத்துக்களாகச் சுருக்கிவிடலாம்.
- ஈழத்தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம் என்பதால் தம்மைத் தாமே ஆளும் உரிமையுடையவர்கள்.
- சுயநிர்ணய உரிமை என்பது பிரிந்து சென்று தனியரசு அமைக்கும் உரிமைதான். செந்தமிழர் என்பதால் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்துகிறோம். ஆனால் தமிழர் என்பதால் பிரிவினை தேவையில்லை என்கிறோம்.
- சமத்துவத்தின் அடிப்படையில் ஐக்கியத்தையே விரும்புகிறோம். சமத்துவம் சாத்தியமாகாத நிலையில், பிரிவினை தவிர்க்க முடியாதது. அத்தகைய சந்தர்ப்பம் எழுந்தால், நாம் பிரிவினையை ஆதரிப்போம்.
- சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்படாத நிலையில் பிரிந்து செல்ல முயற்சிப்பது போராட்டமாக அமையும். இது இன அழிவிற்கு வழிவகுப்பதாகும்.
- தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை முற்போக்கு சக்திகளும், அரசாங்கமும் அங்கீகரிக்கப் போராட வேண்டும்.
இந்த ஐந்து கருத்துக்களையும் இனி ஆழமாக ஆராய்வோம்.
முதலாவது:-
இலங்கைத் தமிழ் பேசும் மக்கள் சரித்திர ரீதியாக, மொழி, கலாச்சார ரீதியாக, பூகோள ரீதியாக ஒரு தேசிய இன அமைப்பை உடையவர்கள் என்பது யாவரும் அறிந்ததே. தம்மைத் தாமே ஆளும் உரிமையும் உடையவர்கள் என்பதும் அவர்களுக்குத் தெரியாதது அல்ல. உண்மையான நிலை என்னவென்றால் தம்மைத் தாமே ஆண்டு வந்த இம்மக்கள், இன்று அடிமை வாழ்வு வாழ்கிறார்கள் என்பதுதான். ஆளும் உரிமை எமக்குண்டென நாம் அரசியல் பேசிக்கொண்டு, அடிமை வாழ்வில் அங்கலாய்ப்பது அசட்டுத்தனம். நாம் ஒரு தேசிய இனம் என்பதல்ல, நாம் நசுக்கப்பட்டு வரும் ஒரு தேசிய இனம் என்பதுதான் இங்கு முக்கியம். தென் இந்தியாவிலும் தமிழ் மக்கள் ஒரு தேசிய இனமாக வாழ்கிறார்கள். அவர்களது நிலையோ வேறு. நாமோ ஒடுக்குமுறை விலங்குகளால் பிணைக்கப்பட்டிருக்கிறோம். எம்மைச் சிறைப்படுத்திச் சிதைக்க விழையும் ஒரு பெரிய தேசிய இனத்தின் தேசிய ஒடுக்குமுறையிலிருந்து விடுதலை பெற விழைந்து கொண்டிருக்கிறோம். ஆகவே, சட்டரீதியாக, சரித்திர ரீதியாக, சர்வதேச சமுதாயம் அங்கீகரிக்கும் உரிமை எமக்கு உண்டா என்பதல்ல, இந்த உரிமையை நாம் அனுபவித்து வருகிறோமா என்பதுதான் முக்கியமானது. ஆகவே, இந்தத் தோழர்களுக்கு நாம் ஒன்றை நினைவுபடுத்த வேண்டும். அதாவது, எமக்கு என்ன உரிமைகள் உண்டென்ற சித்தாந்தவாதங்களை விடுத்து, இந்த உரிமைகளைப் பெறும் உருப்படியான அரசியல் திட்டங்களை வகுத்து, செயலில் குதிப்பதன் அவசியத்தைத்தான்.
இரண்டாவது:-
பொதுவுடமைவாதிகள் என்பதால் சுயநிர்ணய உரிமையை, அதாவது பிரிந்து செல்லும் உரிமையை வலியுறுத்தும் இவர்கள் தமிழர் என்பதால் பிரிவினை தேவை இல்லை என்கிறார்கள். இதன் அர்த்தம்தான் என்ன? பொதுவுடமைவாதி என்பதால் ஒரு கொள்கையும், தமிழர் என்பதால் இன்னொரு கொள்கையும் கடைப்பிடிக்க வேண்டுமென்ற இரட்டை நாக்குவாதம் இது. பொதுவுடமைவாதியானவன், தமிழனோ, சிங்களவனோ, வேறெந்த இனத்தை அல்லது நாட்டைச் சேர்ந்தவனாக இருந்தாலும், ஒடுக்கப்படும் ஒரு தேசிய இனத்தின் விடுதலைப் போராட்டத்தை ஆதரித்தே தீர வேண்டும். அந்த இனமானது பிரிந்து செல்வதே ஒரே வழியெனக் கங்கணம் கட்டினால், அதை ஒரு பொதுவுடமைவாதியானவன் ஆதரித்தேயாக வேண்டும். மார்க்சிசம் அதைத்தான் வலியுறுத்துகிறது. மார்க்சிசமானது மக்கள் சித்தாந்தம். மக்களின் முடிவிற்கு மார்க்சிசவாதிகள் கட்டுப்பட்டவர்கள். ஏனென்றால், மக்கள்தான் புரட்சியின் சக்தி. மக்கள்தான் சரித்திரத்தைச் சமைப்பவர்கள்.
பிரிவினை தேவையில்லை என்பதற்கு இவர்கள் இரண்டு காரணங்கள் கூறுகிறார்கள். ஒன்று தமிழர்களில் பாதிப்பேர் (மலையகத் தமிழர்கள்) தென்னிலங்கையில் செறிந்து வாழ்கிறார்கள். அடுத்தது தமிழீழப் பொருளாதாரம் பாதிக்கப்படும்.
தமிழ்த் தேசிய இனம் என்னும் பொழுது, வடக்குக் கிழக்கு மாகாணங்களைத் தமது பாரம்பரிய, மரபுரிமை மண்ணாகக் கொண்டுள்ள தமிழ்பேசும் மக்களை மட்டுமல்ல, தென்னிலங்கையில் வதியும் சகல தமிழ்பேசும் மக்களையும், குறிப்பாக மலையகத்தில் வாழ்ந்துவரும் தமிழ்த் தோட்;டப் பாட்டாளி மக்களையுமே குறிக்கிறோம். தமிழ்த் தேசிய அமைப்பில் மலையகத் தமிழரும், இசுலாமிய, கிறித்தவ, சைவ மதங்களைச் சார்ந்தவரும், மதசார்பு அற்றோருமான தமிழ்பேசும் மக்கள் அனைவரும் அடங்குவர். தமிழீழம் எனும் பொழுது, தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழ் மக்களின் ஒட்டுமொத்தமான தேசிய இன அமைப்பையே குறிக்கிறோம்.
தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில், தமிழீழ சோசலிசப் புரட்சியில், மலையகத் தமிழ்ப் பாட்டாளி வர்க்கமும் இணையாத அங்கமாய் அமைந்துள்ளது என்பதே எமது நிலையாகும். தமிழருக்கெதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்ட தேசிய ஒடுக்குமுறையில் மிகவும் கொடூரமாக நசுக்கப்பட்டு வந்த மக்கள் இவர்களே. மொழிவாரியாக, தொழில்வாரியாக, கல்விவாரியாக, பொருளாதார ரீதியாக, இப்படிப் பல்வேறு வடிவங்களில் தலைவரித்தாடிய ஒடுக்குமுறையில் படுமோசமாக நசுக்கப்பட்டது மட்டுமன்றி, குடியுரிமையில்லாத கொடூர நிலைக்கும் இவர்கள் ஆளாக்கப்பட்டார்கள். தமிழருக்கெதிராகக் குமுறி வெடித்த இனக்கலவரங்களில் மிகவும் கொடூரமாகத் தாக்கப்பட்டு, அகதிகள் என்ற அனாதரவான நிலைக்குத் தள்ளப்பட்டவர்கள் இம்மக்களே.
மலையகத் தமிழ்ப் பாட்டாளி வர்க்கமானது இலங்கையின் பொருளாதார உற்பத்தி இயந்திரத்தை இயக்கி வரும் மாபெரும் தொழிலாக்க சக்தியாக அமைந்திருப்பது, தமிழ்த் தேசிய இனத்திற்கு அரசியல் முக்கியத்துவத்தை அளிக்கிறது. தமிழரின் தேசிய விடுதலைக்கும், சோசலிசப் புரட்சிக்கும் இத்தொழிலாளி வர்க்கத்தின் பங்கு அதிமுக்கியமானதாகும். சோசலிசப் புரட்சியின் மையமாக விளங்கும் இப்பாட்டாளிகளை அணிதிரட்டும் ஒரு புரட்சிகரமான செயல்திட்டமே, சிங்கள முதலாளித்துவ அரசை முறியடிக்கும் வலுவைக் கொண்டிருக்கும். இதனை விடுத்து அதனைத்துத் தமிழரின் நலனை முன்னிட்டு எமக்குப் ‘பிரிவினை தேவையில்லை’ என்பது அரசியல் சாணக்கியம் ஆகாது. முற்போக்கான, புரட்சிகரத் தன்மையுடைய ஒரு தேசிய இனத்தின் விடுதலையெழுச்சியை, சோசலிசப் புரட்சிப் பாதையில் இட்டுச் செல்ல வழி தெரியாதவர்களின் வரட்டுச் சித்தாந்தம் இது.
தனிநாடு அமைத்துக் கொண்டால் எமது பொருளாதாரம் பாதிக்கப்படும் என்பதும் தவறான வாதமாகும். ஏனெனில், பொருளாதாரம் பாதிக்கப்பட்டதால்தான் தனிநாட்டுக் கோரிக்கையே எழுந்தது. தமிழ்த் தேசிய இனம் தனிநாடு கோருவதன் பிரதான காரணம், தமிழ்ப் பிரதேசப் பொருளாதாரப் புறக்கணிப்பாகும். பொருளாதார ஒடுக்குமுறையால் பிரதேச வளர்ச்சி குன்றி, வாழ்வே வளமற்றுப் போனதால்தான், மக்கள் பிரிந்து சென்று தனியரசு அமைக்க விரும்பினார்கள். இந்த நிலையில் பிரிந்து செல்வதால் பொருளாதாரம் பாதிக்கப்படும் என்பது முரணான வாதம். திட்டமிட்ட சோசலிசப் பொருளாதார நிர்மாணத்தில், உற்பத்திச் சக்திகளை விரிவுபடுத்திச் சுபீட்சமான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பலாம் என்பதை, சோசலிச உற்பத்தி வளத்தை நன்கறிந்த பொதுவுடமைவாதி எவனும் மறுக்க மாட்டான். இதை விடுத்து, சிங்களவர்கள் எம்மிடம் சுருட்டு வாங்க மாட்டார்கள் என்பதற்காக சுயநிர்ணய உரிமையைப் பிரயோகிக்கத் தேவையில்லை என்பது அசட்டுத்தனமான அரசியல்.
மூன்றாவது:-
சமத்துவத்தின் அடிப்படையில் தேசிய ஐக்கியத்தை நிலைநாட்டுவதுதான் தமது பிரதான குறிக்கோள் என்கிறார்கள் இவர்கள். பிற்போக்குவாதத்தின் தந்தையான ஜே.ஆரும் இந்தச் சமத்துவத் தத்துவத்தையே போதித்து வருகிறார். ஆனால் தமிழ் பேசும் இனத்தைப் பொறுத்தவரை சமத்துவம் எந்த அளவிற்குத் தலைகீழாகத் தொங்குகிறது என்பதை நாம் நன்கு அறிவோம். ‘‘சமத்துவம் சாத்தியமாகாத நிலையில் பிரிவினை தவிர்க்க முடியாதது. அத்தகைய சந்தர்ப்பம் எழுந்தால், நாம் பிரிவினையை ஆதரிப்போம்’’ என்பது இவர்களது வாதம்.
சமத்துவம் சாத்தியமாகாத நிலையில், பிரிந்து செல்வது தவிர்க்க முடியாதது என்ற நெருக்கடியான சூழ்நிலை எழுந்ததால்தான் தமிழ்த் தேசிய இனம் பிரிந்து சென்று தனியரசை அமைக்க விரும்பியது என்பதை எவரும் மறுக்க மாட்டார்கள். முப்பதாண்டு காலமாகப் பெரிய தேசிய இனத்தின் அதிதீவிர தேசிவாதத்தால், இனவாதத்தால், மதவாதத்தால், இன அழிப்புக் கொள்கையால் படிப்படியாக நசுக்கப்பட்டு வந்த தமிழ்த் தேசிய இனம், ஒடுக்குமுறை உச்ச கட்டத்தை அடைந்ததும் இனிமேல் சமத்துவமாய் வாழ்வது சாத்தியமாகாது, ஒன்றுபட்ட வாழ்க்கை இனிமேல் ஒத்துவராது என்பதையுணர்ந்து கடந்த தேர்தலின் போது ஒடுக்கி வந்த பெரிய தேசிய இனத்திடமிருந்து அரசியல் விவாகரத்துக் கோரியது. மார்க்சிச சித்தாந்தத்தின்படி தமிழ் மக்களின் இம்முடிவு சரியானதே.
ஒரு தேசிய இனமானது எந்தவிதமான சூழ்நிலையில் பிரிந்து சென்று தனியரசை அமைக்க விழையும் என்பது பற்றி லெனின் பின்கண்டவாறு சொல்கிறான்.
‘‘ஒரு பெரிய நாட்டினதும், பெரிதான சந்தையினதும் அனுகூலங்கள் பற்றியும், பூகோள, பொருளாதாரத் தொடர்புகளின் நன்மைகள் பற்றியும் தமது நாளாந்த அனுபவத்திலிருந்து பொதுமக்கள் அறிவார்கள். ஆனால் தேசிய ஒடுக்குமுறையும், தேசிய விரோதங்களும் கூட்டுறவான வாழ்க்கையை முற்றாகச் சகிக்க முடியாததாக்கிப் பொருளாதார உறவுகள் எதற்குமோ அன்றி முழுவதற்குமே குந்தகம் விளைவிக்குமாயின் மக்கள் பிரிந்து சென்று தனியரசு அமைக்க விழைவார்கள்.
இப்படியான சூழ்நிலையெழும்போது, ஒரு தேசிய இனத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும், வர்க்க விடுதலைக்கும் பிரிந்து செல்வதே உத்தமமான வழி’’ என்கிறான் லெனின்.
இப்படியான சூழ்நிலை இலங்கைத் தமிழ் மக்களுக்கும் எழத்தான் செய்தது. இனவாதம் பூதாகரமாய் வளர்ந்து, கூட்டுறவான வாழ்க்கை சகிக்க முடியாத கட்டத்தை அடைந்தது. பொருளாதார ரீதியாகத் தமிழீழம் திருகப்பட்டது. மொழிப் புறக்கணிப்பில் தொடங்கி, பின் கல்விப் புறக்கணிப்பாய், கலாச்சாரப் புறக்கணிப்பாய், தொழில் புறக்கணிப்பாய், பொருளாதாரப் புறக்கணிப்பாய் விசுவரூபம் பெற்ற தேசிய இனவாதப் பூதமானது, தமிழ் மக்களின் பாரம்பரிய நிலங்களை விழுங்கி வந்தது மட்டுமன்றி, அவர்களை இனவாரியாக ஒழித்துக் கட்டவும் விழைந்தது.
சமத்துவம் இழந்த, தன்மானமிழந்த, சகிப்புத்தன்மையிழந்த சந்தர்ப்பம் தோன்றியபோதுதான் தனிநாட்டுக் கோரிக்கை பிறந்தது. தமிழ்த் தேசிய இனத்தின் சரித்திர, சமூக, பொருளாதார சூழ்நிலையை நன்கு புரிந்து கொண்டால், மார்க்சிச-லெனினிச வேலைத் திட்டத்தின்படி தமிழ் மக்களின் தனிநாட்டுக் கோரிக்கை சரியானதென்பதை எந்த மார்க்சிசவாதியும் மறுக்க மாட்டான். ஆனால் சிவப்புச் சித்தாந்தத்தில் சிறிதும் பரீட்சயமற்ற செந்தமிழர்கள், ‘சமத்துவம் தோன்றாத சந்தர்ப்பம் எழுந்தால்தான் பிரிந்து செல்வதை ஆதரிப்போம்’ என்று சொல்கிறார்கள். இவர்களைப் பொறுத்தவரை இன்னும் அந்தச் சந்தர்ப்பம் எழவில்லை போலும்.
இந்தக் குருட்டுத்தனமான அரசியல் பார்வையில், ஒடுக்குமுறையின் கொடூரமும், அந்த ஒடுக்குமுறைக்கெதிரான ஒரு தேசிய இனத்தின் விடுதலையெழுச்சியும், அதன் புரட்சிகரமான தன்மையும் நிதர்சனமாக அணுகப்படவில்லை. ஒடுக்குமுறை உண்டென்பதை ஒத்துக் கொள்ளும் இவர்கள், ஒடுக்குமுறையின் அழுத்தம் இன்னும் போதாது, பொறுத்திருந்து இன்னும் நசுக்கப்படுவோம் என்கிறார்கள் போலும். தமிழினம் இனவாரியாக ஒழிந்த பின்னர், பிரிந்து செல்வதை ஆதரித்து என்ன பயன்? அப்போது பிரிவதற்கு ஒன்றும் இராது. குட்டக் குட்டப் பொறுக்கும் மட்டிவாதம் இது. மார்க்சிசமானது ஒடுக்கப்படும் மக்களின் விடுதலையை வேண்டும் ஒரு புரட்சிகரமான சித்தாந்தம். இந்தப் புரட்சிகரப் பாதையைத் தழுவும் பொதுவுடமைவாதியெவனும் அடிமைவாதச் சித்தாந்தம் பேசினால், அவன் உண்மையில் ஒரு மார்க்சிசவாதியல்ல. அவன் ஒரு பிற்போக்குவாத சந்தர்ப்பவாதியாவான்.
நான்காவது:-
சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்படாத நிலையில் பிரிந்து செல்ல முயற்சிப்பது போராட்டமாக அமையும். இது இன அழிவிற்கு வழிவகுக்கும். ஆகவே பிரிவினை தேவையில்லை. இப்படியும் தமிழ் மக்களைப் பூச்சாண்டி காட்டி, பிரிந்து செல்லும் போராட்டத்தைக் கைவிடுமாறு கேட்கிறது செந்தமிழர் இயக்கம். ஒரு சிறிய தேசிய இனம், ஒடுக்கும் தேசிய இனத்திலிருந்து பிரிந்து செல்ல விழைவது போராட்டமாக அமையும் என்பது யாவரும் அறிந்ததே. புரட்சி செய்யாமல், போராடாமல், எந்த இனமோ, வர்க்கமோ ஒடுக்குமுறையிலிருந்து விடுதலை பெறப் போவதில்லை. இன, வர்க்க முரண்பாடுகள் புரட்சியாக, போராட்டமாக வெடித்துச் சமுதாய மாற்றத்திற்கும், விடிவிற்கும் வழிகுக்கும் என்பது வரலாற்று ரீதியாக நாம் காணும் உண்மை.
ஒடுக்கப்படும் ஒரு தேசிய இனம், ஒடுக்குமுறைக்கெதிராகப் போராடத் தவறினால் அது நிச்சயம் இன அழிவிற்கு வழிவகுக்கும். எத்தனையோ தேசிய இனங்கள், அப்படி இனவாரியாக அழிக்கப்பட்டிருக்கின்றன என்பதனை உலக வரலாறு படித்தவர்கள் அறிவார்கள். அதேவேளை, ஒடுக்குமுறையை உடைத்தெறிந்த, உறுதியான மக்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். காலனித்துவத்திற்கெதிராக, ஏகாதிபத்தியத்திற்கெதிராக, கொடுங்கோலாட்சிக்கெதிராக, தேசிய ஒடுக்குமுறைக்கெதிராக விடுதலை வேண்டிப் போராடி, வீர வரலாறு படைத்த தேசிய இனங்களும் இருக்கத்தான் செய்கின்றன. மாபெரும் வல்லரசையே நடுங்கச் செய்த வியட்நாமிய விடுதலைப் போராட்டம் எமக்கு ஒரு உண்மையைப் பகருகிறது. அதாவது, உறுதிபூண்ட, உணர்வுபூண்ட மக்களை, அம்மக்களின் விடுதலையெழுச்சியை, எந்தவொரு சக்தியாலும் நசுக்கிவிட முடியாது என்பதைத்தான்.
நாமோ, நசுக்கப்பட்டு வரும் ஒரு தேசிய இனம். உரிமையிழந்த அடிமை வாழ்வில், கால் நூற்றாண்டு காலத்திற்கு மேல் கழித்துவிட்டோம். சிங்கள தேசியவாதத்திற்குச் சிறைப்பட்டு, பாதுகாப்புப் படையினரின் பயங்கரவாதத்தின் மத்தியில் நாம் ஏன் இன்னும் தலைகுனிந்து வாழ வேண்டும்? நாம் பிறந்த மண், எமது மூதாதையர் பிறந்த மண். பண்டைக் காலம் தொட்டுப் பரம்பரை பரம்பரையாக நாம் வாழ்ந்து வரும் மண், எமக்குச் சொந்தமான மண் எம்மிடமிருந்து பறிக்கப்படுவதை நாம் ஏன் பார்த்துக் கொண்டு இருக்க வேண்டும்? பழமையும், பெருமையும் வாய்ந்த மொழியொன்று எமக்குண்டு. மேம்பாடு மிக்க கலாச்சாரமும், மேன்மைவாய்ந்த பண்பாடும் எமக்குண்டு.
நாம் கல்வியில் கரைகண்ட மக்கள்; கலைகளில் கைதேர்ந்தவர்கள்; கடும் உழைப்பில் களிப்பைக் காண்பவர்கள். இப்படியான ஒரு உன்னத தேசிய இனமாய், உருப்படியான வரலாற்று வாழ்வையுடைய நாம், இன்னுமொரு தேசிய இனத்திற்கு ஏன் அடிமைப்பட்டு வாழ வேண்டும்? எமது அடிப்படையுரிமைகளை, எமது ஆளும் உரிமையை நாமாக நிச்சயித்துக் கொள்ளப் போராட்டம் அவசியப்படுமானால், நாம் பின்நிற்கக் கூடாது. ஆயுதப் படைகளை எதிர்க்கும் போராட்டமென்றாலும் நாம் அஞ்சக்கூடாது. ஆயுதங்களை ஏந்திப் போராடுவது அவசியமாயின், அதற்கு நாமே நம்மை ஆயத்தப்படுத்த வேண்டும். போருக்குப் பயப்படும் போலிப் புரட்சிவாதிகள், ஆயுதப் போராட்டத்திற்குப் பயப்படும் அகிம்சைவாதிகள், சமத்துவம் பேசும் சந்தர்ப்பவாதிகள் ஆகியோரின் தலைமையின் கீழ் தமிழினம் ஒரு போதும் தேசிய விடுதலைப் போராட்டத்தில் வெற்றி காணப் போவதில்லை.
ஐந்தாவது:-
‘தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அரசாங்கமும், முற்போக்குச் சக்திகளும் அங்கீகரிக்கப் போராட வேண்டும்’. இதுதான் தேசிய இனப்பிரச்சினைக்கு செந்தமிழர் இயக்கம் கூறும் தீர்வு. சிங்கள ஆளும் வர்க்கமானது அதிதீவிர தேசியவாதத்திலும், இனவாதத்திலும் தோய்ந்து கிடக்கிறது. மாறி மாறி ஆட்சிப் பீடத்தில் அமர்ந்து வரும் பிற்போக்குவாத பூர்சுவா அரசியல் இயக்கங்களான ஐக்கிய தேசியக் கட்சியும், சுதந்திரக் கட்சியும் தமிழ்த் தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமையை, அதாவது பிரிந்து சென்று தனியரசு அமைக்கும் உரிமையை, அங்கீகரிக்கப் போவதில்லை. முற்போக்கான சோசலிசக் கோட்பாட்டை, பிற்போக்கான முதலாளித்துவம் ஒரு பொழுதும் ஏற்றுக் கொள்ளாது. அப்படி எதிர்பார்ப்பது, கல்லில் நார் உரிக்க முயன்ற கதையாக முடியும்.
முற்போக்குவாத இயக்கங்கள் சில தமிழ்த் தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமையை ஆதரிக்கத்தான் செய்கின்றன. ஆனால் சுயநிர்ணய உரிமைக்கு இவர்கள் அளிக்கும் திரிபுவாத வியாக்கியானங்கள் பற்றி நாம் ஏற்கனவே சுட்டிக் காட்டினோம்.
சிங்கள இடதுசாரி இயக்கங்களைப் பொறுத்தவரை, தேசிய சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டில் தெளிவான நிலையைக் கொண்டிருக்கும் ஒரேயோரு இயக்கம் புரட்சிக் கம்யூனிசக் கழகமாகும். மற்றைய சிங்கள இடதுசாரிகள், தெளிவற்ற நிலையில் நின்று கொண்டு சுயநிர்ணய உரிமையை ஆதரிப்பதால் மட்டும் தமிழினத்திற்கு விடிவு பிறந்து விடாது. தமிழ் முற்போக்கு இயக்கங்களே குழம்பி நிற்கும் பொழுது, பெரிய தேசிய இனத்தைச் சேர்ந்த சோசலிசவாதிகளிடம் நேர்மையான நிலையை எதிர்பார்ப்பது எப்படி?
ஒரு தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமையென்பது, மற்றவர்கள் அங்கீகரிப்பதற்காக மட்டும் ஆக்கப்படவில்லை. தேவை ஏற்படும் பொழுது பிரயோகிப்பதற்காகவே அவ்வுரிமையுள்ளது. விவாகரத்துரிமை இருப்பதால், பிரிந்து செல்ல வேண்டிய அவசியம் இல்லைதான். ஆனால், அவ்வுரிமை ஆக்கப்பட்டதன் காரணம், தேவை ஏற்படும் பொழுது, தவிர்க்க முடியாத அவசியம் ஏற்படும் பொழுது, விவாகரத்துச் செய்து கொள்வதற்காகவே அப்படியான தேவை எழுந்த பொழுது, அதனைப் பாவிக்க மறுப்பது முட்டாள்தனம். இந்த முட்டாள்தனமான அரசியலையே செந்தமிழர் இயக்கம் முற்போக்குவாதம் என்ற போர்வையில் போதித்து வருகிறது. மார்க்சிச சித்தாந்தத்தை மழுப்பிப் பேசுபவர்களிடம் மக்கள் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும். இவர்கள் முற்போக்குப் பாதையில் இருந்து நழுவி பிற்போக்குக் கிடங்குக்குள் விழுந்துவிட்ட ‘மார்க்சிசவாதிகள்’.
தனித்தமிழீழம் சாத்தியமாகுமா?
சுயநிர்ணய உரிமை பற்றி நாம் முன்பு சுட்டிக் காட்டிய நான்காவது நிலையைக் கொண்டுள்ள பொதுவுடமைவாதிகளின் வியாக்கியானத்தை எடுத்துக் கொள்வோம். ‘சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தி, ஒடுக்கப்படும் தமிழினம் தனிநாடு கோருவது நியாயமானதே. மார்க்சிச சித்தாந்தத்தின்படி இக் கோரிக்கை சரியானதே. ஆனால் இந்தக் கோரிக்கை சாத்தியமடையப் போவதில்லை. சாத்தியமாகாத கோரிக்கைக்குப் போராடிக் கண்ட பயன் என்ன? ஆகவே பிரிந்து செல்வதை நாம் ஆதரிக்கவில்லை’ என்று இவர்கள் சொல்கிறார்கள்.
தமிழீழம் ஏன் அடைய முடியாதது, ஏன் அது சாத்தியமாகாது, என்று கேட்டால், ‘சிங்கள ஆளும் வர்க்கம் அதற்கிடமளிக்கப் போவதில்லை. சிங்கள ஆயுதப் படைகளை எதிர்கொண்டு போராடும் வல்லமையும் தமிழ் மக்களிடம் இல்லை’ என்பது இவர்களின் பதில். அப்படியானால் தமிழினத்தின் விடிவிற்கு இவர்கள் சொல்லும் வழி என்ன?
‘இன ஒடுக்குமுறையானது நாட்டின் பல்வேறு பிரச்சினைகளில் ஒன்று. ஒடுக்குமுறைக்காகப் பிரிவினை கேட்பது குறுகிய தேசியவாதம். ஆகவே தனிநாட்டுக் கோரிக்கையைக் கைவிட்டு, பாட்டாளி வர்க்க ஒருமைப்பாட்டிற்குப் பாடுபடுவோம். அனைத்து இலங்கைச் சோசலிசப் புரட்சிதான் அனைவரினதும் பிரச்சினைகளைத் தீர்க்கும்’ என்பதுதான் இவர்கள் கூறும் பாதை.
சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தமிழ்த் தேசிய இனம் பிரிந்து சென்று தனியரசு அமைப்பதற்குச் சிங்கள ஆளும் வர்க்கம் இடமளிக்கப் போவதில்லை என்பது உண்மைதான். அப்படி நாம் முயற்சித்தால், ஆளும் வர்க்கமானது சிங்கள ஆயுதப் படைகளைக் கட்டவிழ்த்துவிட்டு, தேசிய விடுதலைப் போராட்டத்தை முறியடிக்க விழையலாம் என்பதும் உண்மைதான். ஆனால் ஆயுதப் படைகளை எதிர்கொண்டு போராடும் வல்லமை தமிழ் மக்களிடம் இல்லையென்பதும், தமிழினம் விடுதலை காண்பது சாத்தியமாகாது என்பதும் இந்தப் போலி மார்க்சிசவாதிகளின் குருட்டுத்தனமான கண்ணோட்டமாகும். ஆயுதப் படைகளுக்கு அஞ்சி, அநீதிக்கும், அதர்மத்திற்குமெதிரான ஒரு நியாயமான கோரிக்கையைக் கைவிடக் கோருவது மார்க்சிசமாகாது. முற்போக்கான ஒரு தேசிய விடுதலைப் போராட்டத்தை புரட்சிப் பாதையில் இட்டுச் செல்ல வழி தெரியாதவர்களின் அடிமைவாதம் இது. இந்த அடிமைவாத சித்தாந்தம் பேசுபவர்கள், தம்மைச் சாதாரண பொதுவுடமைவாதிகள் என்று சொல்லாமல், ‘புரட்சிவாத’ மார்க்சிசவாதிகள் என்று அழைத்துக் கொள்கிறார்கள். இவர்களது மார்க்சிசத்தில் புரட்சிவாதம் எள்ளளவும் இல்லை.
தமிழீழ மக்களின் பிரச்சினை ஒரு தேசிய இனப்பிரச்சினை. இரு தேசிய இனங்களுக்கு மத்தியில் எழுந்த முரண்பாட்டால் உருப்பெற்ற பிரச்சினை. ஒரு சிறிய தேசிய இனத்தை, ஒரு பெரிய தேசிய இனம் நசுக்க விழைந்ததால் எழுந்த பிரச்சினை. பெரிய தேசிய இனத்தின் அதிதீவிர தேசியவாதத்தால் விளைந்த பிரச்சினை. மார்க்சிசக் கண்ணோட்டத்தின்படி தமிழரின் பிரச்சினையை முதலில் ஒரு தேசிய இனப்பிரச்சினையாகவே நாம் அணுக வேண்டும். அடுத்ததாக இந்தப் பிரச்சினைக்கு அத் தேசிய இனம் எவ்வித தீர்வை விரும்புகிறது என்பதை நாம் பார்க்க வேண்டும். பிரிந்து சென்று தனியரசு அமைப்பதையே அம்மக்கள் விரும்பினால், அந்தத் தீர்வை ஆதரிக்க நாம் தயங்கக் கூடாது. ஒரு தேசிய இனத்தின் ஒன்றுபட்ட விடுதலை எழுச்சியையும், வர்க்கங்களின் ஒன்றுபட்ட கிளர்ச்சியையும், அதன் புரட்சிகரமான தன்மையையும் நாம் கௌரவிக்க வேண்டும். அதனைக் கட்டி வளர்க்கவும் வேண்டும். ஏனெனில், ஒரு தேசிய இனத்தின் விடுதலையெழுச்சியானது, சமுதாயப் புரட்சிக்கும், சோசலிச நிர்மாணத்திற்கும் இன்றியமையாதது.
காந்தீயத்திலும், சத்தியாக்கிரகத்திலும் எமது மக்கள் நம்பிக்கையை இழந்து விட்டனர். இந்த அகிம்சைப் போராட்ட யுக்திகளைக் கையாண்டால், தமிழீழ விடுதலை ஒரு பொழுதும் சாத்தியமாகாது. ஏனெனில் புத்த தர்மத்தில் ஒழுகுவதாகக் கூறிக்கொள்ளும் சிங்கள ஆளும் வர்க்கமானது அகிம்சையிலோ, அறவழிப் போராட்டத்திலோ நம்பிக்கை கொண்டதல்ல. அது ஆயுத பலத்தைக் கொண்டு ஆட்சி புரிகிறது; ஆயுதப் படைகளைக் கொண்டு எமது அகிம்சைப் போராட்டங்களை நசுக்கி விடும்.
பலாத்காரத்தையோ, பயங்கரவாதத்தையோ தமிழ் மக்கள் விரும்பவில்லை. ஆனால், பலாத்காரம் எம்மீது பிரயோகிக்கப்படும் பொழுது, ஆயுதப் பிரயோகத்தால் நாம் அடிமையாக்கப்படும் பொழுது, அந்தப் பலாத்காரத்தை, பலாத்காரத்தின் மூலம்தான் முறியடிக்க வேண்டிய, தவிர்க்க முடியாத நிலைக்கு நாம் தள்ளப்படுவோமானால், நாம் பலாத்காரத்தைப் பிரயோகிப்பது நியாயமானது; தர்மமானது. அநீதிக்கும், அதர்மத்திற்குமெதிராக, அடிமை வாழ்விற்கெதிராக, பலாத்காரத்திற்கெதிராகப் புரியும் பலாத்காரமானது உண்மையில் பலாத்காரமல்ல. அது விடுதலை வேட்கையின் விளைவு; புரட்சியின் குமுறல்; மனித சுதந்திர எழுச்சி. இந்த ரீதியில் ஒடுக்கும் இனத்தின் பலாத்காரத்திற்கும், ஒடுக்கப்படும் இனத்தின் பலாத்காரத்திற்கும் மத்தியில் ஒரு தார்மீக வேறுபாடு இருக்கிறது. ஒடுக்கப்படுவோர் அந்த பலாத்கார ஒடுக்குமுறைக்கெதிராகப் போராடுவது பலாத்காரமான போராட்டமாயினும், மனித விடுதலை எழுச்சியைக் குறித்து நிற்பதால் அது தர்மமானது. அநீதிக்கும், அதர்மத்திற்குமெதிராகப் புரட்சி செய்வது அதர்மம் ஆகாது. அது புனிதமான செயல்.
ஆளும் வர்க்கத்தின் ஆயுத பலாத்காரத்தை அகிம்சையால் முறியடிக்க முடியாது; ஆயுதம் தாங்கிய புரட்சிப் போராட்டத்தால்தான் முடியும். அமைதிவழிப் போராட்டத்தில் நம்பிக்கை கொண்டுள்ளதால் கூட்டணித் தலைமைப்பீடம் இப்படியான பாதைக்கு மக்களைத் தயார் செய்யவில்லை. இந்த நிலையை நன்குணர்ந்த ‘புரட்சிவாத’ மார்க்சிசவாதிகள், தமிழினத்தின் தனிநாட்டுக் கோரிக்கையை ஏளனம் செய்து, அது சாத்தியமாகாதது என்கிறார்கள். தமிழீழத் தனிநாட்டுக் கோரிக்கையை அடைவது அவ்வளவு சுலபமானதல்ல என்பது எமக்குத் தெரியாததல்ல. இராணுவப் போர் நுணுக்கங்கள் அடங்கிய பிரமாண்டமான செயல் திட்டத்தை வகுத்து, மிகவும் சாணக்கியமான முறையில் அதனை அமுல்நடத்துவதால்தான் தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தை வெற்றிப் பாதையில் கொண்டு செல்லலாம். இதில் பலவிதமான இடையூறுகள் இருக்கலாம். ஆனால் அது சாத்தியமாகாது என்று சொல்ல முடியாது.
நான்கு ஆண்டு காலத்திற்கு முன்னர்தான் தமிழ் மக்களின் பிரச்சினை ஒரு தேசிய இனப் பிரச்சினையாக உருவெடுத்தது என்பதை நாம் மறந்து விடக்கூடாது. 1977இல் தலைவிரித்தாடிய இனக்கலவரத்தின் பயங்கரமும், தமிழ் மக்களுக்குத் தனியரசின் கீழ் தனித்து வாழும் அவசியத்தை நன்கு உணர்த்தியிருக்கிறது.
கடந்த கால் நூற்றாண்டு காலமாக நாம் நடத்தி வந்த போராட்ட யுக்திகள் இனிப் பயன் அளிக்கப் போவதில்லை. இனி நாம் மேற்கொள்ளவிருப்பது ஒரு தேசிய விடுதலைப் போராட்டம். புரட்சிகரமான வன்முறைப் போராட்ட யுக்திகளை நாம் கையாள வேண்டும்; சரியான முறையில் திட்டமிட்டு நடத்த வேண்டும்.
பாட்டாளி வர்க்க ஒருமைப்பாடு, அனைத்து இலங்கைச் சோசலிசம் என்பதெல்லாம், தமிழ் பேசும் மக்களுக்குப் புளித்துப் போன சித்தாந்தம். பேரின ஒடுக்குமுறையில் சிக்குப்பட்டிருக்கும் ஒரு தேசிய இனம், முதலில் அந்த ஒடுக்குமுறையை உடைத்தெறிந்து தனது சுதந்திரத்தை நிலைநாட்டப் போராட வேண்டும். அந்தச் சுதந்திரப் போராட்டம் குறுகிய தேசியவாதமாகாது.
முற்போக்கான தேசாபிமானம் வேறு. குறுகிய தேசியவாதம் வேறு. முற்போக்கான தேசாபிமானம் சோசலிசத்திற்கு முரணானது அல்ல. ஒரு தேசிய இனம் தனது பழமையும், பெருமையும் வாய்ந்த வரலாற்றில், தனது மொழி, கலாச்சாரத்தில், தனது பண்பாட்டில், தனது பாரம்பரிய பூமியில் பற்றும் பாசமும் கொண்டிருப்பதை நாம் தேசாபிமான உணர்வு என்கிறோம். இவ்வித முற்போக்கான தேசாபிமானத்தை, தேசியப் பற்றுணர்வை உதறிவிட்டுச் சர்வதேசியம் பேசுபவன், உண்மையில் ஒரு சோசலிசவாதியல்ல. இப்படியான சித்தாந்தவாதிகளை பூர்சுவா சர்வதேசியவாதிகள் என்று கார்ல் மார்க்சே கிண்டல் செய்திருக்கிறான் (முதலாவது அகிலப் பொதுச் சபைக் கூட்டத்தில் லாபர்க்கைக் கண்டித்து மார்க்சு ஆற்றிய உரையை நோக்குக).
தேசாபிமான உணர்வு முற்போக்கானது. ஒரு இனத்தின், ஒரு தேசத்தின் கலாச்சார, சமூக சூழ்நிலையானது வர்க்கப் போராட்டத்திற்கு முக்கியமானது.
”பாட்டாளி வர்க்கமானது, தனது வர்க்கப் போராட்டத்தின் அரசியல், சமூக, கலாச்சார சூழ்நிலைகளை அலட்சியம் செய்ய முடியாது. இதன் காரணமாக, தனது தேசத்தின் தலைவிதியையும் அது அலட்சியம் செய்ய முடியாது’’ என்கிறான் லெனின்.
முடிவுரை
சுயநிர்ணய உரிமை பற்றியும், இக்கோட்பாடு பற்றி மார்க்சிசவாதிகளிடையே நிலவுந் தெளிவற்ற வியாக்கியானங்கள் பற்றியும் விரிவாகப் பார்த்தோம். சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டிற்குப் பூடகமான வரைவிலக்கணம் வரையாமல், அதனைத் திரித்துக் காட்டாமல், ஒரு தேசிய இனத்தின் நிதர்சனமான சமூக, பொருளாதார, அரசியல் சூழ்நிலை, வரலாற்றுப் பின்னணி ஆகிய நிலைகளை ஆராய்ந்து, இக் கோட்பாட்டிற்கு மார்க்சிச-லெனினிச கொள்கைத் திட்டத்தின் அடிப்படையில், தெளிவான விளக்கம் அளிப்பதே இக்கட்டுரையின் நோக்கமாக இருந்தது. இந்த ரீதியில் தமிழ்த் தேசிய இனம் தனது சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தி, தனியரசை அமைக்க விழையும் கோரிக்கை நியாயமானது என்பதனைச் சுட்டிக் காட்டினோம். ஆகவே, தனிநாட்டுக் கோரிக்கையை அங்கீகரித்துத் தமிழ் பேசும் இனத்தின் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவளிப்பது மார்க்சிசவாதிகளின் கடன். ஒடுக்கப்பட்டு வரும் ஒரு தேசிய இனத்தின் விடுதலை எழுச்சியை எக்காரணங்களையாவது காட்டி ஆதரிக்க மறுக்கும் மார்க்சிசவாதிகள் மீதும், மார்க்சிய இயக்கங்கள் மீதும், தமிழ்பேசும் மக்கள், குறிப்பாக இளைஞர் சமுதாயம், விழிப்பாக இருக்க வேண்டும்.
இந்தக் கட்டுரையில் பிரதானமாக லெனினின் கொள்கைத் திட்டத்தையே மேற்கோளாக எடுத்து, சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டிற்கு விளக்கம் அளிக்கப்பட்டிருப்பதை வாசகர்கள் அவதானிக்கலாம். இதற்குக் காரணம் இல்லாமலில்லை. முதலாவதாக, லெனினின் சித்தாந்த விளக்கப் படைப்புக்களே தேசிய இனப் பிரச்சினைக்குத் தெளிவான வரைவிலக்கணம் அளித்து, சனநாயக சோசலிச நியதிகளுக்கு அமைய, நிலைமையை யதார்த்தமாக, சமூக, பொருளாதார, அரசியல் அம்சங்களில் அணுகுகின்றன. மார்க்சிசத்தின் மூல கர்த்தாக்களான மார்க்சினதும், எங்கல்சினதும் எழுத்துக்களில் தேசிய இனப் பிரச்சினையோ, சுயநிர்ணய உரிமைக் கோட்பாடோ செம்மையாக ஆராயப்படவில்லை. அது மட்டுமன்றி றோசா லக்சம்பேர்க், கோட்ஸ்கி, ஸ்டாலின், றொட்ஸ்கி போன்ற மார்க்சிச சித்தாந்தவாதிகளும் தேசிய இனப் பிரச்சினைக்குத் தெளிவற்ற பூடகமான வியாக்கியானங்களையே அளித்திருக்கிறார்கள். இரண்டாவதாக, சித்தாந்த ரீதியிலும், செயல் திட்டத்திலும் லெனினையே சகல மார்க்கிசிசவாதிகளும், சோசலிச இயக்கங்களும் தமது அரசியல் குருவாகக் கொள்கின்றன. ஆகவேதான் புரட்சிவாத அரசியலின் மாமேதையான லெனினின் எழுத்துக்களை உசாத்துணையாகக் கொண்டு, தமிழ்த் தேசிய இனப்பிரச்சினையில் சில மார்க்சிசவாதிகள் கொண்டுள்ள சந்தர்ப்பவாதப் போக்கை அம்பலப்படுத்தியுள்ளோம்.