இனப் பிரச்சினையின் வரலாற்றுப் பின்னணி
இலங்கைத் தீவானது, தொன்மைவாய்ந்த இரு நாகரீகங்களின் வரலாற்றுத் தாயகமாகும். வேறுபட்ட மொழிகள், பாரம்பரியங்கள், பண்பாடுகள், வேறுபட்ட நிலப்பரப்புகள், வெவ்வேறான வரலாறுகளைக் கொண்ட இரு தனித்துவமான தேசிய இனங்களாக அது விளங்குகின்றது. இத் தீவில் வதியும் தமிழ் மக்களது வரலாறானது பண்டைய யுகம்வரை வேரோடிச் செல்கிறது. சிங்கள மக்களின் மூதாதையர், கி.மு. ஆறாம் நூற்றாண்டில் வங்காளத்திலிருந்து தமது இளவரசன் விஜயனுடன் இத் தீவை வந்தடைந்தபோது தொன்மை வாய்ந்த திராவிட (தமிழ்) குடியிருப்புகள் இங்கிருக்கக் கண்டார்கள். இலங்கைத் தீவில் சிங்களக் குடியேற்றம் நிகழ்வதற்கு முந்திய காலத்தில், நாகர் இயக்கர் என்ற திராவிடத் தமிழ் இராச்சியங்கள் நிலைபெற்றிருந்ததாக சிங்கள வரலாற்றுப் பதிவேடுகளான தீபவம்சமும் மகாவம்சமும் எடுத்தியம்புகின்றன. இந்த வரலாற்றுப் பதிவேடுகளை எழுதிய பௌத்த பிக்குகள் இலங்கையின் பூர்வீக குடிகளது வரலாற்றைத் திரித்துக்கூற முற்பட்டனர். புராதனத் தமிழர்களை மானிடரல்லாதோர் என்றும், அமானுஷ்ய சக்தி வாய்ந்த அரக்கர்கள் என்றும் வர்ணித்திருக்கிறார்கள். இலங்கைத் தீவின் பூர்வீகக் குடிகளது உண்மை வரலாறானது புராணங்கள் கட்டுக்கதைகளால் மூடிமறைக்கப்பட்டபோதும், காலத்தால் முந்திய ஆதிவாசிகள் தமிழர்களே என்று தற்கால ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். புவியமைப்பின்படி, இத்தீவானது தென்னிந்தியாவை அண்டியதாக அமையப்பெற்றிருப்பதை நோக்குமிடத்து, வட இந்தியப் பிரதேசமான வங்காளத்திலிருந்து விஜயனும் அவனது தோழர்களும் கடல்மார்க்கமாக வந்து இங்கு தரையிறங்கு முன்னர் இத் தீவின் பூர்வீகக் குடிகளாகத் திராவிடத் தமிழர்களே இருந்திருக்க வேண்டும் என்பது தெளிபு.
கி.மு. ஆறாம் நூற்றாண்டிலிருந்து இத் தீவில் நிகழ்ந்த கொந்தளிப்பான அரசியல் வரலாற்றை பௌத்த வரலாற்றுப் பதிவேடுகள் பொறித்திருக்கின்றன. தமிழ், சிங்கள மன்னர்களிடையே நிகழ்ந்த கொடும் போர்கள் பற்றியும், தென்னிந்திய தமிழ் சாம்ராஜ்யங்களின் படையெடுப்புகள் பற்றியும், மேலாண்மையை நிறுவுவதற்காக தமிழ் சிங்கள இராச்சியங்கள் மத்தியில் வெடித்த கோரமான யுத்தங்கள் பற்றியும் இவ் வரலாற்று ஏடுகள் விபரிக்கின்றன. வரலாற்று ரீதியாக, இலங்கைத் தீவானது வெவ்வேறு காலகட்டங்களில் சிங்கள மன்னர்களாலும் தமிழ் மன்னர்களாலும் ஆட்சி செய்யப்பட்டது. இடையிடையே, காலத்திற்குக் காலம் நிகழ்ந்த போர்கள் காரணமாக தமது தலைநகர்களை தெற்கு நோக்கி நகர்த்த சிங்கள அரசர்கள் நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். பதின்மூன்றாம் நூற்றாண்டிலிருந்து, இலங்கையில் அந்நிய குடியேற்ற ஆதிக்கம் தலையிடுவதற்கு இடைப்பட்ட காலத்தில், தமிழ் மக்கள் தமது சொந்த இராச்சியத்தில், வடகிழக்கு மாகாணங்கள் அடங்கியதான தமது சொந்தப் பாரம்பரிய நிலத்தில், ஒரு நிலைபெற்ற தேசிய இனக் கட்டமைப்பாக தமது சொந்த அரசர்களால் ஆளப்பட்டு வந்தனர்.
பிரபல கடல் யாத்திரீகனான மார்க்கோ போலோ இலங்கைத் தீவை இப் பூமியின் சுவர்க்கம் என வர்ணித்திருக்கிறார். ‘இந்துமாகடலின் முத்து’ எனப் புகழ்ந்துரைத்தனர் ஆங்கில குடியேற்ற ஆட்சியாளர். இந்தியாவின் தென்கரையிலிருந்து இருபத்தொரு மைல் நீர் இடைவெளியால் பிரிக்கப்பட்டிருக்கும் இலங்கைத் தீவு 25,332 சதுர மைல் பரப்புடையது. அந்நிய குடியேற்றம் ஊடுருவுவதற்கு முன்னர் பல நூற்றாண்டுகளாக தன்னிறைவுகொண்ட பொருளாதார வளம்பெற்றதாக இத் தீவு விளங்கியது. அத்தோடு, கீழைத் தேயக் களஞ்சியமாகவும் புகழீட்டியிருந்தது. அந்நிய குடியேற்ற ஆட்சிக்கு முற்பட்ட காலத்தில் இத் தீவின் பொருளாதார உற்பத்தி வடிவம் நிலமானிய சமூக அமைப்பைக் கொண்டதாக அமையப் பெற்றிருந்தது. தமிழர் தேசத்தின் பொருளாதார வடிவமானது நிலமானிய சமூகத்தன்மையைக் கொண்டிருந்தபோதும், தனக்கே உரித்தான தனிப் பண்புகளுடைய உற்பத்தி உறவுகளில் கட்டப்பட்டிருந்தது. பல்வேறு சமூகப் பணிகளின் அடிப்படையில், பல படிநிலைகளாக வகுக்கப்பட்ட சாதியக் கட்டமைப்பை அடித்தளமாகக் கொண்டு இப் பொருளாதார உற்பத்தி வடிவம் இயங்கியது. பெரும் குளங்களையும் கால்வாய்களையும் பரவலாகக் கொண்டமைந்த நீர்ப்பாசன விவசாய முறைமைக்காகவே மத்திய கால இலங்கை புகழ்பெற்று விளங்கியது. ஆயினும், காலப்போக்கில், வடக்கிலும் வட மத்திய மாநிலத்திலும் அமையப்பெற்றிருந்த இந் நீர்ப்பாசன உற்பத்தி வடிவம் பராமரிப்பற்று, பழுதடைந்து, படிப்படியாகச் சீரழிந்து அடர்ந்த காட்டினுள் அமுங்கியது. இக் காலகட்டத்தில், சிங்கள நிலமானிய பிரபுக்கள் மத்திய மலைப்பிரதேசங்களை நோக்கி நகர்ந்து, கண்டியை தலைநகராக வரித்துக் கொண்டனர்.
போர்த்துக்கேயர் 16ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலே இந்தத் தீவில் முதல் காலடி வைத்தபோது, இரண்டு புராதன அரசுகள் இங்கே அரசோச்சக் கண்டார்கள். வடக்குக் கிழக்குப் பிராந்தியத்தில் தமிழ் மக்களும் தெற்கே சிங்கள மக்களும் வாழ்ந்து கொண்டிருப்பதைக் கண்டனர். வெவ்வேறான பண்பாடுகளோடு, முற்றிலும் வேறுபட்ட இரண்டு சமூகங்களாக அவர்கள் இயங்குவதையும், தனித்தனி இனங்களாகத் தத்தமக்கென்ற தனியான அரசாட்சி அமைப்போடு பிரிந்து வாழ்வதையும் அவர்கள் கண்ணுற்றனர். முதலில் ஒப்பந்தங்களிலும் பின்னர் போர்களிலும் ஈடுபட்ட போர்த்துக்கேயர், 1619இல் இறுதிப் போர் நடத்தி, தமிழ் இராச்சியத்தைத் தோற்கடித்து, தமிழ் மன்னன் சங்கிலி குமாரனைத் தூக்கிலிட்டார்கள். ஆயினும் போர்த்துக்கேயரும் சரி, அவர்களுக்குப் பின் வந்த ஒல்லாந்தரும் சரி, தமிழர் தேசத்தை தனி இராச்சியமாக ஆண்டு, தமிழர் தாயகத்தினது பிரதேச ஒருமைப்பாட்டையும், தமிழ் மக்களின் இன அடையாளத்தையும் அங்கீகரித்தார்கள். 1799இல் ஆங்கிலக் குடியேற்ற சாம்ராச்சியம், தீவின் ஆட்சிக் கட்டுப்பாட்டை ஒல்லாந்தரிடமிருந்து பற்றிக் கொண்டது. இரண்டு இனங்களுக்கும் இடையில் வேறுபாடுகள் இருந்தபோதிலும் அவற்றைப் பொருட்படுத்தாத பிரித்தானியர், 1833இல் இரண்டு தேசங்களையும் ஒன்றாக்கி ஒற்றையாட்சி அமைப்பைத் திணித்தனர். இவ்வாறு அந்நிய குடியேற்றவாதம், இன்றைய தேசியப் போராட்டத்துக்கு அடித்தளமிட்டது. நிர்வாக நோக்கங்களுக்காக ஒற்றையாட்சி அரசைப் பிரித்தானியர் உருவாக்கியபோதும், இத் தீவு, வேறுபட்ட இரு இனங்களின் தாயகமாக விளங்கியது என்பதை அவர்கள் அங்கீகரித்தார்கள். குடியேற்ற ஆட்சியின் முதல் செயலதிபராக 1799இல் பதவியேற்ற சேர் கிளகோண் அவர்கள், தமது “கிளகோண் அறிக்கை” என்ற மிகப் பிரசித்தி பெற்ற குறிப்பேட்டில் பின்வருமாறு கூறுகிறார்: “இரு வேறுபட்ட தேசிய இனங்கள், மிகப் புராதன காலத்திலிருந்தே தீவின் வளங்களைத் தம்மிடையே பிரித்து வைத்திருக்கிறார்கள்: வளவை நதியிலிருந்து சிலாபம் நதி வரை, அதன் தெற்கிலும், மேற்கிலுமுள்ள உள்நாட்டுப் பகுதிகளைச் சிங்களவர் கொண்டிருக்க, மலபார்கள் (தமிழர்) வடக்குக் கிழக்கு மாவட்டங்களைத் தமதாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்த இரு தேசிய இனங்களும் தங்கள் சமயம், மொழி, பழக்க வழக்கங்கள் ஆகியவற்றில் முற்றாக வேறுபட்டவர்களாகக் காணப்படுகின்றனர்.”
சிங்கள மக்களும் தமிழ் மக்களும் கிறிஸ்துவுக்கு முந்திய காலம்வரை தொடர்ந்து செல்லும் தொன்மைமிக்க ஆழமான வரலாற்று வேரோடல்களைக் கொண்டுள்ளனர். தனித்தனி தேசிய இனங்களாகக் கணிக்கப்படும் தன்மைகளையும் கொண்டுள்ளனர். எனினும், வரலாற்று ஓட்டத்திலே இலங்கைத் தீவு, வேறு பல்லின பண்பாட்டு வடிவங்களையும் உருவாக்கிக் கொண்டது. இத் தீவில் வேறு இனக் குழுக்களும் வாழ்கின்றன. அவற்றுள் முஸ்லிம்களும் மலையகத் தமிழரும் தமக்கெனத் தனித்தனியான பண்பாட்டு வாழ்வுடையவர்களாக விளங்குகின்றனர்.
இலங்கை முஸ்லிம்களின் மூலத்தை, பத்தாம் நூற்றாண்டில் அரேபியாவிலிருந்து வர்த்தகர்களாக இத் தீவுக்கு வந்தவர்களுடன் பொருத்திப் பார்க்கலாம். தமிழைத் தம் தாய் மொழியாக வரித்துக் கொண்ட இந்த முஸ்லிம்கள், தீவின் கிழக்கேயும் தெற்கேயும் பெருமளவாகக் குடியமர்ந்தார்கள். தமிழைத் தாய் மொழியாகத் தழுவி, கிழக்கிலே தமிழ் மக்களோடு கூடிக் குடியமர்ந்து, விவசாயிகளாக வாழுகின்ற இவர்கள், தாம் ஒரு தனித்துவமான இனக் குழுவினர் என்ற கூட்டுப் பண்பாட்டு உணர்வைத் தமது மதமான இஸ்லாமிடமிருந்து பெற்றுக் கொள்கிறார்கள்.
பிரித்தானிய குடியேற்ற ஆட்சியும் தமிழ் மக்களும்
பிரித்தானிய குடியேற்ற ஆதிக்கத்தால் ஏற்பட்ட ஆழமான தாக்கங்களுடன் ஒப்புநோக்குகையில் போர்த்துக்கேய, ஒல்லாந்த குடியேற்ற ஆட்சிகளால் இலங்கையின் பொருளாதார கட்டமைப்பில் விளைந்த தாக்கம் குறைவானவை என்று சொல்லலாம். பிரித்தானிய குடியேற்ற ஆட்சியின் முக்கிய நிகழ்வாக, மக்களைச் சுரண்டும் பெருந்தோட்டப் பொருளாதாரத்தை ஆங்கிலேயர் இலங்கையில் திணித்தனர்.
பிரித்தானியரால் கண்டி இராச்சியம் தோற்கடிக்கப்பட்ட 1815இல் பெருந்தோட்டத் தமிழ்த் தொழிலாளரின் துயர வரலாறும் வித்தூன்றுகிறது. அந்த நாட்களிலேயே பெருந்தோட்டப் பொருளாதாரத்தை நாட்டிலே நடைமுறைப்படுத்த பிரித்தானிய குடியேற்ற ஆட்சியாளர் தீர்மானித்தனர். உயர்ந்த மலைகளிற் செழித்து வளரும் கோப்பிச் செடி, 1820ஐ அடுத்து வந்த ஆண்டுகளில் பெருந்தோட்டங்களாகப் பயிரிடப்பட்டது. முதலீட்டாளர்களும் தொழில் உரிமையாளர்களும் இங்கிலாந்திலிருந்து, இலங்கையில் புதிதாகக் கைப்பற்றப்பட்ட மலைப் பகுதிகளுக்கு விரைந்து வந்தனர். கண்டி விவசாயிகளிடமிருந்து பெருமளவு நிலங்களை ஏமாற்றி அபகரித்தனர். காலாகாலமாகத் தமக்கு வாழ்வளித்த தங்கள் நிலபுலன்களைக் கைநெகிழ்ந்து, புதிய முதலாளித்துவ பெருந்தோட்டங்களில் கூலிக்கு வேலை செய்யக் கண்டிய விவசாயிகள் மறுத்தனர். சுதேச சிங்கள விவசாயிகள் மத்தியிலிருந்து தமக்கு வேண்டிய தொழிலாளர் அணியைப் பெறக் குடியேற்ற ஆட்சியாளர் மேற்கொண்ட நெருக்குவார முயற்சி வெற்றியளிக்கவில்லை. எனவே, இந்தியாவிலே குவிந்து கிடந்த கூலித் தொழிலாளர் வர்க்கத்தைப் பயன்படுத்த பிரித்தானிய குடியேற்ற ஆட்சியாளர் நிர்ப்பந்திக்கப்பட்டனர். மிகவும் மலிவான கூலியாட்கள் அடங்கிய பெரும் பட்டாளம் ஒன்று தென்னிந்தியாவில் பணிக்கமர்த்தப்பட்டது. ஒருபுறம் தாங்கொணா வறுமையும், மறுபுறம் ஆட்சியாளரின் மிரட்டலுமாக இந்த ஏழைத் தொழிலாள மக்களைப் பணியவைத்தன. சுவர்க்க பூமியென ஆசைகாட்டி இத் தீவுக்கு கொண்டுவரப்பட்ட இம் மக்கள் மிகக் கொடூரமான அடிமை வாழ்விற்குள் நிரந்தரமாகத் தள்ளப்பட்டார்கள். அநீதியான, அறநெறிகளுக்கு விரோதமான தொழிலாளர் ஒப்பந்தம் ஒன்று செய்து கொள்ளப்பட்டது. இது பல்லாயிரக்கணக்கான தமிழகத் தொழிலாளர்களை இலங்கையின் பெருந்தோட்டங்களுக்கு இடம்பெயர நிர்ப்பந்தித்தது. 1840ஆம் ஆண்டிலிருந்து 1850 வரையிலான பத்து வருடங்களில் பத்து லட்சம் தமிழ்ப் பாட்டாளிகள் இலங்கையில் ‘இறக்குமதி’ செய்யப்பட்டார்கள். தமிழ் நாட்டின் திருநெல்வேலி, மதுரை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் வறுமையால் வாடிய தாழ்த்தப்பட்ட சமூகத்தினரே முதலில் வேலைக்கு அமர்த்தப்பட்டார்கள். இவர்கள் தத்தம் கிராமங்களிலிருந்து பல நூற்றுக்கணக்கான மைல்கள் தூரம் கால் நடையாக நடந்து ராமேஸ்வரம் சென்றடைந்தனர். பின்னர் சிறு மீன்பிடி வள்ளங்களில் மன்னார் கரையோரமாக இறக்கப்பட்டனர். அங்கிருந்த அடர்ந்த காடுகாடாக நடந்துசென்று மலையகப் பகுதிகளையடைந்தனர். பரிதாபத்துக்குரிய இந்த ஏழைப் பாட்டாளி மக்களிற் பல்லாயிரம் பேர், இந்தக் கொடூரமான நீண்ட பயணத்தின்போது, நோயினாலும், களைப்பினாலும் மன விரக்தியாலும் வழி வழியே மடிந்து போனார்கள். இந்த நீண்ட மரண யாத்திரையில் தாக்குப் பிடித்தவர்கள் சோர்ந்து, களைத்து, மிகவும் பலவீனம் அடைந்திருந்தார்கள். இவர்களில் பல்லாயிரக்கணக்கானோர், தோட்டப்பயிர்ச் செய்கைக்காகக் காடுகளை அழித்து, நிலத்தைப் பதப்படுத்தும் ஆரம்ப கால முயற்சியின்போது அங்கு நிலவிய பயங்கரமான சுகாதாரச் சீர்கேட்டு நிலைகளுக்குத் தாக்குப் பிடிக்க முடியாது இறந்து போயினர்.
பெருந்தோட்டக் கோப்பிப் பொருளாதாரம் 1840களில் வீழ்ச்சி அடைந்தது. கோப்பிச் செடியை இலை நோய்க் குருக்கனடித்ததே இந்த முறிவுக்கு காரணமாயிற்று. ஆயினும், கோப்பியினிடமாகத் தேயிலைப் பயிர் அறிமுகப்படுத்தப்பட்டதால், பொருளாதார அமைப்பு, பங்கமின்றித் தப்பிப் பிழைத்தது. தேயிலை, 1880களிலே மிகப் பரவலாகப் பயிரிடப்பட்டது. தேயிலைப் பெருந்தோட்டப் பொருளாதாரமும் விரிவடைந்தது. பிரித்தானிய தொழிற்துறை முதலீடுகளும் வெளிநாட்டுச் சந்தையும் உறுதியாக வடிவமைக்கப்பட்ட வர்த்தக நிறுவனங்களும் விரிவடைந்தன. இவை, உற்பத்தி அமைப்பையே மாற்றி அமைத்தன. இதனால், முன்னைய நிலமானிய சமுதாயத்தின் அடித்தளங்கள் நிலையான மாற்றம் பெற்று, முதலாளித்துவ பொருளாதாரக் கட்டமைப்பு உருவாவதற்கு அடித்தளம் நிறுவப்படலாயிற்று.
பெருந்தோட்டப் பொருளாதாரமானது உற்பத்தி வடிவத்தில் அடிப்படையான மாற்றத்தைக் கொண்டுவந்தபோதும், ஆண், பெண், சிறுவர்கள் அடங்கிய தமிழ்த் தோட்டத் தொழிலாள வர்க்கமானது வெள்ளை எஜமான்களுக்கும் உள்ளூர் முதலாளிகளுக்கும் உழைத்து மாளும் நிரந்தர அடிமை வாழ்வுக்குத் தள்ளப்பட்டது. இந்தியத் தமிழ்த் தொழிலாளர்களை மலையகத்திற்கு கொண்டுவந்த ஆங்கிலேய தோட்டத்துரைமார் வேண்டுமென்றே அவர்களை தோட்டங்களில் பிரித்து ஒதுக்கி வேறுபடுத்தி வரிசை அறைகளாகக் கட்டப்பட்ட குடியிருப்புக்களில் குடியமர்த்தினார்கள். மனிதர்களை வேறுபடுத்திப் பிரித்து ஒதுக்கும் இந்த அநீதியான நடைமுறையானது தமிழ் மக்களை நிரந்தரமாகவே குச்சறைக்குள் முடக்கி, இழிநிலையான வாழ்நிலைக்குள் தள்ளியது. சுதேசிய மக்களோடு கூடிவாழ முடியாது பிரித்தொதுக்கியது. சொந்தமாக நிலம் வாங்கவோ, தமக்கென வீடு கட்டவோ, சுதந்திரமான சமூக வாழ்வு வாழவோ இடமளிக்காது தடைசெய்தது. மலையகத் தமிழ்ச் சமூகத்தைக் கண்டிச் சிங்கள சமூகத்தின் மையப் பகுதிக்குள் தங்க வைத்த பிரித்தானிய குடியேற்ற ஆட்சியாளர், தங்கள் பிரித்தாளும் சூழ்ச்சிக் கொள்கைக்கு அமைவாக, இரண்டு சமூகங்களிடையேயும் பகைமை உணர்வு நிலவ வழி வகுத்தார்கள். குடியேற்ற ஆட்சி நிறுவிய அடிமை நிலையால் சிறுமைப்படுத்தப்பட்ட தமிழ்த் தோட்டத் தொழிலாளர் சொல்லொணாத் துயரை அனுபவித்தார்கள். அவர்களுடைய வியர்வையும் இரத்தமும் மிகக் கொடிய சுரண்டல் பொருளாதாரத்திற்கு முண்டு கொடுக்க, அதிலிருந்து சுவறிய பயனை வெள்ளைத்துரைமாரும் சிங்கள நிலவுடைமை வகுப்பினரும் சுகித்தார்கள்.
பிரித்தானிய குடியேற்ற ஆதிக்கத்தின் தாக்கமானது வடகிழக்கு மாநிலங்களில் வாழும் சுதேசியத் தமிழர்கள் மீது பாரதூரமான விளைவுகளைச் சுமத்தியது. அரசியல் மட்டத்தில், பிரித்தானிய ஆட்சியானது ஒன்றிணைக்கப்பட்ட அரச நிர்வாகத்தையும் மையப்படுத்தப்பட்ட நிறுவகங்களையும் ஒற்றையாட்சி வடிவமைப்புக் கட்டுமாணத்தையும் பளுவேற்றியது. இதனால், இரண்டு வேறுபட்ட இராச்சியங்கள் வல்வந்தமாக ஒன்றிணைக்கப்பட்டன. இரண்டு தேசிய இனங்களின் கடந்த கால வரலாற்று வாழ்நிலை, அவர்களுடைய சமூகப் பொருளாதாரத் தனித் தன்மைகள், அவர்களிடையே நிலவிய இன அடிப்படையிலான வேறுபாடுகள் ஆகியவை ஊதாசீனப்படுத்தப்பட்டன. இவையே, தமிழ் – சிங்கள இனப் பகைமையின் மூல வேர்களாக அமைந்தன.
தமிழ்ச் சமூக வடிவமைப்பானது, தனக்கே உரித்தான தனித்துவம் கொண்ட சமூகப் பொருளாதாரக் கட்டமைப்பைக் கொண்டதாக விளங்கிற்று. நிலமானிய சமுதாயக் கூறுகளும் சாதிய முறைமையும் ஒன்றோடொன்று இறுகப் பிணைக்கப்பட்டு, பல்முகத் தன்மைகொண்ட ஒரு சிக்கலான சமுதாய வடிவமாக அது இயங்கியது. சாதியப் பகுப்புமுறை என்ற அநீதியான அடக்குமுறை உயர்சாதித் தமிழர்களுக்கு பிறப்பின் அடிப்படையில் சலுகைகளையும் தகைமைகளையும் வழங்கியது. தாழ்த்தப்பட்ட சாதியினராகக் கொள்ளப்பட்ட மக்கள், சமூகத்தில் வெகுவாக ஒடுக்கப்பட்டு, நசுக்கப்பட்டு, சுரண்டப்பட்டனர். அடிமை நிலையிலிருந்த இம் மக்கள் அன்றாட சீவியத்திற்கே திண்டாடும் இழிநிலை வாழ்க்கையை வாழ்ந்தார்கள். சாதிய அமைப்பு வழங்கிய சலுகையாலும், வெளிநாட்டுச் சமய நிறுவனங்கள் நடத்திய கல்வி வசதிகளாலும் பயன்பெற்ற உயர்சாதித் தமிழரில் ஒரு பிரிவினர் ஆங்கிலக் கல்விமுறையைத் தழுவினர். இதனால் தொழிலறிஞர்களும் பணிமனை அலுவலர்களும் உருவாகி, அரச சேவையின் நிர்வாக அமைப்பைக் கொண்டு நடத்தும் ஆங்கிலக் கல்வி கற்ற ஒரு புதிய வர்க்கம் தோற்றம் பெற்றது. தமிழ் மக்களை இதில் ஈடுபடுமாறு ஊக்கப்படுத்திய ஆங்கிலேய குடியேற்ற ஆட்சியாளர்கள், தம்முடைய பிரித்தாளும் சூழ்ச்சியின் சூட்சுமத்தோடு அரச நிர்வாகத்திலும் கணிசமான பங்கைத் தமிழருக்கு அளித்தனர். இதன் காரணமாக பின்னைய நாளில், சிங்களப் பேரினவாதம் வீறுடன் கிளர்ந்தெழ வழிகோலினார்கள்.
அரச நிர்வாகக் கட்டமைப்பிலும் பெருந்தோட்டப் பொருளாதாரத் துறையிலும் தமிழரின் மேலாதிக்கம், ஆங்கிலக் கல்வி கற்ற வகுப்பினர் சுகித்த சலுகைகள், கிறிஸ்தவ மதப் பரம்பல் ஆகியவையே சிங்களத் தேசியவாதம் தோற்றம்பெறக் காலாயின. தொடக்க நிலையில், பௌத்த மறுமலர்ச்சியின் வடிவமாகவே சிங்கள தேசியவாதப்போக்கு காணப்பட்டது. இது பின்னர் படிப்படியாக வளர்ந்து அரசியலில் வலுமிக்க சக்தியாக ஆதிக்கம் பெற்றது. பௌத்த மத மறுமலர்ச்சி என்ற சுலோகத்தின் கீழ் ஒரு தேசிய மேலாண்மைக் கருத்தியல் எழுந்தது. அது தமிழர் மீதான காழ்ப்புணர்வைப் பலமாக வெளிப்படுத்தியது. பௌத்த தேசியத் தலைமை, தமிழரையும் ஐரோப்பிய குடியேற்றவாதிகளையும் கடுமையாகச் சாடியது. சிங்கள ஆரிய இனப் பெருமையைப் புகழ்ந்துரைத்தது.
அநாகாரிக்க தர்மபாலா என்ற பௌத்த சிந்தனையார் சிங்கள-பௌத்த தேசியவாதத்தின் பிதாவாகக் கருதப்பட்டார். ‘ஒரு பண்டைய நாகரீகத்தின் வரலாறு’ என்ற பிரபல்யம்பெற்ற அவரது நூலில் சிங்கள இனத்தவர் பற்றி அவர் குறிப்பிடுவதாவது:
“மனித இனப் பகுப்பியல் ஆய்வின்படி சிங்களவர் ஒரு தனித்துவம் வாய்ந்த இனத்தவர். வேறு இனக் கலப்பில்லாதவர். அடிமைகளின் இரத்தம் அவர்களிடம் கலபடவில்லை என்பதையிட்டு அவர்கள் பெருமை கொள்ளலாம். மூன்று நூற்றாண்டுகளாக எமது தாயக மண்ணை சீரழித்து, தொன்மைவாய்ந்த எமது தேவாலயங்களை இடித்தழித்து, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த எமது இனத்தை பூண்டோடு அழிக்க முற்படும் காண்டுமிராண்டித் தமிழராலோ ஐரோப்பிய காடையராலோ என்றும் வெற்றிகொள்ள முடியாதவர்கள் என்பதையிட்டு சிங்கள மக்கள் பெருமைகொள்ளலாம். நாகரீகமற்ற காடையரால் சீரழிக்கப்படுமுன்னர், ஒளிமயமான இந்த அழகிய தீவு ஆரிய சிங்களவர்களால் ஒரு சுவர்க்க பூமியாக உருவாக்கப்பட்டிருந்தது.”
பௌத்த மத மறுமலர்ச்சியிலிருந்து தோற்றம் கொண்ட சிங்களப் பேரினவாதமானது அரச நிர்வாகக் கட்டமைப்பிலும், பெருந்தோட்டப் பொருளாதாரத்திலும் தமிழர்கள் ஆதிக்கம் பெற்றிருப்பதை ‘தேசிய அபிவிருத்திக்கு’ ஏற்பட்ட அச்சுறுத்தலாகக் கருதியது. 1948இல் இலங்கை சுதந்திரமடைந்தபோது அரச அதிகாரம் சிங்கள ஆளும் வர்க்கத்திடம் கைமாறியதை அடுத்து அதுகாலவரை கருத்துநிலையில் நிலவிய தமிழர் விரோத காழ்ப்புணர்வு திண்ணியமான சமூக, அரசியல், பொருளாதார ஒடுக்குமுறையாக வடிவமெடுத்தது.
தமிழருக்கு எதிரான அரச ஒடுக்குமுறை
சிங்களப் பெரும்பான்மையினரிடம் அரசியல் அதிகாரம் கைமாறியதை அடுத்து சிங்களப் பேரினவாதம் மேலாண்மை பெற்றது. இதனால் தமிழர்களுக்கு எதிரான அரச அடக்குமுறை குரூரமான வன்முறை வடிவம் எடுத்தது. இந்த அரச அடக்குமுறையானது அரை நூற்றாண்டு காலத்திற்கு மேலான நீண்ட வரலாற்றைக் கொண்டது. இலங்கை சுதந்திரமடைந்ததை அடுத்து மாறி மாறி ஆட்சி பீடம் ஏறிய சகல சிங்கள அரசுகளும் இந்த ஒடுக்குமுறைக் கொள்கையையே கடைப்பிடித்தன. இந்த ஒடுக்குமுறைக் கொள்கையில் தமிழின ஒழிப்புத் திட்டமும் அடங்கியுள்ளது. அதாவது, தமிழரின் தேசிய வாழ்விற்கு ஆதாரமான அத்தியாவசிய அடித்தளங்களை படிப்படியாகத் தகர்த்துவிடும் நாசகாரத் திட்டமாகவும் இந்த ஒடுக்குமுறை அமையப்பெற்றது. ஒன்றுபட்ட ஒரு தேசிய இனக் கட்டமைப்பாக தமிழ் மக்கள் தழைத்து நிற்பதற்கு என்னென்ன அவசியமோ அவற்றை எல்லாம் பல்வேறு மட்டங்களில் தாக்கியழிப்பதை இவ்வொடுக்குமுறை இலக்காகக் கொண்டது. எனவே, இந்த இனவழிப்பு அடக்குமுறை பல்முனைத் தாக்குதலாக வடிவெடுத்தது. தமிழரின் இருப்புக்கே ஆதாரமான மொழி உரிமை முதலில் பறித்தெடுக்கப்பட்டது. அதனையடுத்து கல்வி உரிமைக்கும், வேலைவாய்ப்பு உரிமைக்கும் ஆப்பு வைக்கப்பட்டது. அவர்களுடைய பாரம்பரிய நிலங்கள் மீதான சொத்துரிமையையும் இழக்கச்செய்தது. அவர்களது சமய, பண்பாட்டு வாழ்விற்கும் ஊறு விளைத்தது. இறுதியாக தமிழர்களது உயிர்வாழும் உரிமைக்கே பங்கம் ஏற்படுத்தும் வகையில் ஒடுக்குமுறையை ஏவிவிட்டது. தமிழ் மக்கள் ஓர் இனமாக ஒருங்கிணைந்து வாழ்வதற்கும், ஓர் இனமாகத் தம்மை அடையாளப்படுத்துவதற்கும் அவசியமான அடித்தளத்தையே அரச ஒடுக்குமுறை தாக்கியது. இத் தமிழின ஒழிப்புத் திட்டத்தின் முக்கிய அங்கமாக சிங்கள அரசால் திட்டமிட்டு செயல்படுத்தப்பட்ட இனக் கலவரங்கள் காலத்திற்குக் காலம் தலைதூக்கின. இதன் விளைவாகப் பெருந்தொகையான தமிழ் மக்கள் கொன்றொழிக்கப்பட்டார்கள். பெருந்தொகைத் தமிழ்ச் சொத்துக்கள் நிர்மூலமாக்கப்பட்டன. நாட்டுக்குச் சுதந்திரம் கிடைத்தவுடன் சிறீலங்கா நாடாளுமன்றம் பெரும்பான்மைக் கொடுங்கோன்மையின் கருவியாகியது. அங்கு இனவாதம் அரசோச்சியது. சிறுபான்மை இனங்களுக்கு எதிரான அடக்குமுறைச் சட்டங்கள் அங்கு யாக்கப்பட்டன. கொடிய சிங்கள இனவாதத் தாக்குதலில் மலையகத் தோட்டத் தொழிலாளர்களே முதல் பலியாகி வீழ்ந்தார்கள். இந்தத் தீவின் சுபீட்சத்துக்காக ஒரு நூற்றாண்டுக்கு மேலாகப் பாடுபட்ட பத்து லட்சம் தமிழ் மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டது. இலங்கை அரசியல் வரலாற்றில் மிகவும் அநீதியாகக் கருதப்படும் குடியுரிமைச் சட்டம் அந்தக் கொடுமையைப் புரிந்தது. இதன் மூலம், மலையகத் தமிழ் மக்களது அடிப்படை மனித உரிமை பறிக்கப்பட்டது. நாடற்றோர் என்ற இழி நிலைக்கு இவர்கள் தரம் இறக்கப்பட்டார்கள். அரசியலில் பங்கெடுக்கும் உரிமை பறிக்கப்பட்ட நிலையில், பெருந்தொகைத் தமிழ்த் தொழிலாளர்களுக்கு அரச நாடாளுமன்றக் கதவுகள் மூடப்பட்டன. குடியுரிமைச் சட்டம் நிறைவேற்றப்படுமுன், பெருந்தோட்டத் தமிழ்த் தொழிலாளரைப் பிரதிநிதித்துவப்படுத்த ஏழு உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் இருந்தார்கள். அடுத்து வந்த பொதுத் தேர்தல் 1952இல் நடந்தபோது இந்தக் குடியுரிமைச் சட்டத்தின் விளைவாக ஒரு நாடாளுமன்ற உறுப்பினரைக்கூட இந்த மக்களால் தெரிவு செய்ய இயலவில்லை.
குடியுரிமைச் சட்டம் 1948இலும் இந்திய-பாக்கிஸ்தானிச் சட்டம் 1949இலும் நிறைவேற்றப்பட்டன. வழித்தோன்றல்களும் குறித்த காலம் வசித்தவர்களும் பெறக்கூடிய குடியுரிமை தொடர்பாக, மிகக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பத்து லட்சத்திற்கு கூடுதலானோரிடையேயிருந்து ஏறத்தாழ 130,000 மக்கள் மட்டுமே குடியுரிமை பெறத்தக்க வகையில் இந்தச் சட்டங்கள் கடுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டன. கேடுகெட்ட இச் சட்டங்களின் மொத்த விளைவுகள் மிகப் பாதகமானவையாக அமைந்தன. அவை இத் தொழிலாள மக்களின் வாழ்க்கை நிலைமைகளை மோசமாக்கின. நாடற்ற நிலைக்குத் தள்ளப்பட்ட ஏறத்தாழ பத்து லட்சம் மக்கள், உள்ளூராட்சித் தேர்தலிலோ, தேசியத் தேர்தலிலோ பங்கெடுக்க முடியவில்லை. அரசுத் துறைகளிலும் தனியார் துறையிலும் இவர்களுக்கு வேலைவாய்ப்பு மறுக்கப்பட்டது. நிலம் வாங்கும் உரிமை மறுக்கப்பட்டது. எவ்வகை வர்த்தகத்தில் ஈடுபடும் உரிமையும் மறுக்கப்பட்டது. இத்தகைய நாடற்ற நிலை இந்தத் தொழிலாளர் சமுதாயத்தை, அதுவும் நாட்டின் முதன்மையான பாட்டாளி வர்க்கமாகத் திகழ்ந்த ஒரு சமுதாயத்தை, உரிமை பறிக்கப்பட்ட, மனிதம் சாகடிக்கப்பட்ட மக்களாக ஆக்கியது. இதனால் இம் மக்கள் இழிவுபடுத்தப்பட்டவர்களாக விரக்தியடைந்து, நம்பிக்கையிழந்து, தங்கள் பெருந்தோட்ட இருட்டறைக்குள் முடங்கிவாழ நிர்ப்பந்திக்கப்பட்டார்கள்.
தமிழ் மக்களின் இன அடையாளத்தை அழித்து ஒழிப்பதற்கு திட்டமிடப்பட்ட ஒடுக்குமுறையின் மிகக் கொடூர வடிவமாக, அரச உதவியோடு தீவிரமாக நடத்தப்பட்ட சிங்களக் குடியேற்றங்களைக் குறிப்பிடலாம். சுதந்திரம் வழங்கப்பட்டவுடன் தொடக்கப்பட்ட இந்த முயற்சி, தமிழ்ப் பிரதேசத்தில் ஏறத்தாழ மூவாயிரம் சதுர மைல் பரப்பை ஏற்கனவே விழுங்கிவிட்டது. நிலமற்ற பெருந்தொகைத் தமிழ் விவசாயிகள், தாம் பயிரிடுவதற்கென ஒரு துண்டு காணிக்காக ஏங்கி நிற்கும் அதே தமிழ்ப் பிரதேச நிலப் பகுதிகளில், அரசின் உதவியோடும் ஏவுதலோடும் ஆயிரமாயிரம் சிங்கள மக்கள் அடாத்தாகக் குடியமர்ந்தார்கள். தமிழ் மக்களை, அவர்களுடைய பாரம்பரிய நிலத்திலேயே சிறுபான்மையினராக்கி, சனத்தொகை விகிதாசாரத்தைச் சிதைப்பதாகவே இந்தக் குடியேற்ற முயற்சி அமைந்தது. மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட பகுதிகள் கிழக்கு மாநிலத்திலேயே உள்ளன. கல் ஓயா, மதுறு ஓயா என்ற நதிகள் தொடர்பான பாரிய திட்டங்கள், மட்டக்களப்பு மாவட்ட முஸ்லிம் மக்களின் பெருந்தொகைக் காணிகளைப் பிடுங்கிக் கொண்டன. அல்லை, கந்தளாய் சிங்களக் குடியேற்றத் திட்டங்களும் யன் ஓயா நதித் திட்டமும் திருகோணமலைப் பகுதியை விழுங்கின. தமிழ்ப் பாரம்பரிய நிலத்தை வல்வந்தமாகப் பறித்தெடுக்கும் இந்தத் தொடர்ச்சியான நடவடிக்கை, சிங்கள ஆளும் வர்க்கத்தினருடைய இனவெறிக் கொள்கையின் குரூரத் தன்மையை அம்பலப்படுத்துகிறது.
அரச ஒடுக்குமுறையானது, மொழி, கல்வி, வேலைவாய்ப்பு ஆகிய துறைகளுக்குள்ளும் ஊடுருவியது. பண்டாரநாயக்கா அவர்கள் தலைமை தாங்கிய “சிங்களம் மட்டும்” இயக்கம், 1956இல் அவரை அரசியல் அதிகாரத்துக்குக் கொண்டு வந்தது. நாடாளுமன்றத்தில் அவர் நிறைவேற்றிய முதல் சட்டம், தமிழ் மொழிக்கு இருந்த உத்தியோக தகைமையையும் சம அந்தஸ்து நிலையையும் முடிவுக்கு கொண்டுவந்து, நாட்டின் ஒரேயொரு உத்தியோக மொழியாகச் சிங்களத்தை நிலைப்படுத்தியது. அரச நிர்வாக சேவையில் பணிபுரிபவர்கள் சிங்களத்தில் தகைமை பெற்றிருக்க வேண்டும் என்று “சிங்களம் மட்டும் சட்டம்” நிர்ப்பந்தித்தது. தமிழ் அரச ஊழியர்களுக்கு ஊதிய உயர்வும் பதவி உயர்வும் மறுக்கப்பட்டு, சிங்கள மொழி கற்காவிட்டால் பதவியிலிருந்து விலக வேண்டும் என்பது விதியாயிற்று. அரச சேவை வேலைவாய்ப்பு வசதிகளுக்கான கதவுகள், தமிழரைப் பொறுத்தவரையில் அடைத்து மூடப்பட்டன.
அரச ஒடுக்குமுறை மிக ஆழமாகத் தாக்கியது கல்வித்துறையையே ஆகும். இளம் தமிழ்ச் சமுதாயத்தில் பெரும்பாலானோருக்கு உயர் கல்வி, வேலை வாய்ப்பு ஆகியவற்றுக்கான கதவுகள் அடைக்கப்பட்டன. தனியாகப் பிரித்து ஒதுக்கும் கொடிய “தரப்படுத்தல்” முறை 1970இல் அறிமுகப்படுத்தப்பட்டது. பல்கலைக்கழக அனுமதியைப் பெறுவதற்குச் சிங்கள மாணவரை விடத் தமிழ் மாணவர் கூடுதலான புள்ளிகளைப் பெறவேண்டிய நிர்பந்தத்துக்கு உள்ளாக்கப்பட்டனர். குறைவான தேர்வுத் தரங்களோடு சிங்கள மாணவர் எளிதாகப் பல்கலைக் கழகம் புகுந்தனர். இந்தப் பிரித்தொதுக்கும் முறை, பல்கலைக்கழகங்களுக்குச் செல்லும் தமிழ் மாணவர்களின் எண்ணிக்கையைப் பாரதூரமாகக் குறைத்தது. அவர்களுடைய உயர்கல்வி வாய்ப்புக்களையும் தடைப்படுத்தியது.
அரச ஒடுக்குமுறையின் இன்னொரு குரூரப் பரிமாணத்தைப் பொருளாதாரத் துறையில் காணலாம். தமிழ் மக்களின் பொருளாதார வளர்ச்சி குரல்வளையிலேயே நெரிக்கப்பட்டது. சுதந்திரத்தை உடனடுத்த காலங்களில் கட்டப்பட்ட அரசுக்குச் சொந்தமான சில தொழிற்சாலைகளைத் தவிர, ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகளாக தேசிய அபிவிருத்தித் திட்டங்களில் தமிழ்ப் பகுதிகள் முற்றாகப் புறக்கணிக்கப்பட்டன. பாரிய அபிவிருத்தித் திட்டங்களோடு சிங்கள தேசம் செழித்துக் கொழிக்க, “வேண்டா நிலமாக” தமிழ்த் தேசம் நிராகரிக்கப்பட்டு, பொருளாதாரப் புறக்கணிப்பால் வரண்டு கிடந்தது.
நாட்டிலே அவ்வப்போது தமிழ் மக்களுக்கு எதிராக வெடித்த இனக் கலவரங்களை, இரண்டு இனங்களுக்கும் இடையே நிலவிய இனப் பகைமை உணர்வால் தாமாகக் கிளர்ந்த வன்செயல்களாகக் கருதக்கூடாது. தமிழ் மக்களுக்கு எதிரான வன்செயல் தாக்குதல்களில் மிகக் கொடிய வெறியாட்டங்கள் அனைத்துமே சிங்கள ஆட்சியாளர்களால் இன அழிப்பு இலக்கின் அங்கமாகத் திட்டம் தீட்டப்பட்டு ஏவப்பட்டவையாகும். இலங்கையிலே தமிழ் மக்களுக்கு எதிரான வன்முறைக் கலவரங்கள் 1956, 1958, 1961, 1974, 1979, 1981 ஆகிய ஆண்டுகளிலும் 1983 ஜுலையிலும் நடத்தப்பட்டன. இவ் இனவெறித் தாண்டவங்களில் பெண்கள், பிள்ளைகள் அடங்கலாக ஆயிரமாயிரம் தமிழ் மக்கள் இரக்கமின்றி, மிகக் குரூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார்கள். அவர்களுடைய பல கோடி பெறுமதியான சொத்துக்கள் அழித்தொழிக்கப்பட்டன. ஆயிரமாயிரம் மக்கள் அகதிகள் ஆக்கப்பட்டார்கள். தீயிடல், பாலியல் வன்தாக்குதல், கும்பல் கும்பலாக மக்களைப் படுகொலை செய்தல் போன்ற வன்முறை அடாவடி வெறியாட்டங்களில் ஈடுபட்ட காடையருடனும் பாதகருடனும் அரச ஆயுதப் படையினரும் ஒன்றுசேர்ந்து கொடுமை புரிந்தனர்.
இந்தப் பல்பரிமாண அரச ஒடுக்குமுறையின் ஒட்டுமொத்தப் பாதிப்பு பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தியது. இது தமிழ் மக்களின் உயிர்வாழ்விற்கே அச்சுறுத்தலாக அமைந்தது. இன முரண்பாட்டை மேலும் கூர்மைப்படுத்தியது. இரு தேசங்கள் மத்தியில் நல்லிணக்கமும், சமரச சகவாழ்வும் ஏற்படுவதை சாத்தியமற்றதாக ஆக்கியது. தமிழ் மக்களிடையே தீவிரப் போக்கையும் போராட்ட உணர்வையும் வலுப்படுத்தியது. தமிழரின் ஆயுதம் தரித்த எதிர்ப்பு இயக்கம் தோற்றம் கொள்வதெற்கான புறநிலையையும் உருவாக்கியது. ஒட்டுமொத்தத்தில் அரச ஒடுக்குமுறையானது பிரிந்து சென்று தனியரசு அமைக்கும் தமிழரின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்திற்கு வழி சமைத்தது.
தமிழ்த் தேசிய இயக்கமும் சமஷ்டிக் கட்சியும்
சிங்களப் பேரினவாத அரச ஒடுக்குமுறையின் வரலாற்றுப் பெறுபேறாக பிறப்பெடுத்த தமிழ்த் தேசியமானது ஒருபுறம் கருத்தியலாகவும் மறுபுறம் திண்ணியமான அரசியல் இயக்கமாகவும் இரு பரிமாணங்களைக் கொண்டதாக விளங்கிற்று. ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களின் ஒன்றுபட்ட கூட்டுணர்வாகவும் அவர்களது தேசிய விழிப்புணர்வின் எழுச்சிக் கோலமாகவும் பிரவாகமெடுத்த தமிழ்த் தேசியமானது தன்னகத்தே முற்போக்கான புரட்சிகரமான இயல்புகளையும் கொண்டிருந்தது. ஒடுக்கப்பட்ட தமிழினமானது சுதந்திரம், தர்மம், கௌரவம் போன்ற ஆழமான அரசியல் அபிலாசைகளை வேண்டிநின்றதால் அது முற்போக்குத் தன்மைவாய்ந்தது எனலாம். தமிழ்த் தேசியமானது தமிழ் மக்களது சகல வகுப்பாரையும் ஒன்று திரளச்செய்து, தேச விடுதலை என்ற ஒரே இலட்சியத்தில் ஒருமுகப்படுத்தியதால் அது புரட்சிகரத் தன்மைவாய்ந்தது எனக் கருதலாம்.
தமிழர்களின் அரசியல் வரலாற்றுப் படிமுறை வளர்ச்சியின் ஆரம்ப கட்டத்தில், தமிழ்த் தேசிய உணர்வானது சமஷ்டிக் கட்சி வாயிலாகவே நிறுவன வடிவம் எடுத்தது (சமஷ்டிக் கட்சியானது தமிழில் இலங்கைத் தமிழரசுக் கட்சி என்று அழைக்கப்பட்டது. காலம் சென்ற எஸ்.ஜே.வீ செல்வநாயகம் 1949, டிசெம்பரில் அதை நிறுவினார்). பொதுத் தேர்தல் 1956இல் நடைபெற்றபோது, தமிழ்த் தேர்தல் தொகுதிகளில் சமஷ்டிக் கட்சி பெருவெற்றி பெற்றது. தமிழ்த் தேசிய இயக்கத்தை முன்னெடுத்துச் செல்ல வல்ல, பலம் மிக்க அரசியல் சக்தியாகவும் அது முகிழ்த்தது. தமிழினத்தின் அபிலாஷையைப் பிரதிபலிக்கும் தேசிய இயக்கமாக வடிவெடுத்த இக் கட்சி, முற்போக்குப் பண்புகளையும் மக்களாட்சிப் பண்புகளையும் தன்னகத்தே கொண்டிருந்தது. அத்துடன், வெவ்வேறு வர்க்கங்களையும் சாதிகளையும் ஒரு மாபெரும் மக்கள் சக்தியாக ஒன்றிணைத்து, வழிநடத்தக் கூடியதாகவும் அது வடிவெடுத்தது.
இடதுசாரி இயக்கம் தமிழ் மக்களிடையே ஒரு பலமான அடித்தளத்தை அமைக்கத் தவறிவிட்டது. தேசிய ஒடுக்குமுறையின் குரூர நிலைமைகளைப் புரிந்துகொண்டு, அவற்றைத் தங்கள் அடிநாதமாகக் கொள்ள வேண்டுமென்பதை உணர்ந்து கொள்ளும் அரசியல் தூரநோக்கு அவர்களிடம் இல்லாது போனதே அதன் தோல்விக்குக் காரணம் எனலாம். ஒடுக்கப்பட்ட ஓர் இனத்தின் தேசியப் போராட்டத்துக்கு மேலானதாக வர்க்கப் போராட்டத்திற்கு அவர்கள் முன்னுரிமை கொடுத்தார்கள். தமிழ் மக்களின் தேசப்பற்றுணர்வை தவறாக எடைபோட்டு, அதை வெறும் இனவாதத் தேசியத்தின் பிற்போக்கு வடிவமாக முலாம் பூசினார்கள். அந்தப் போராட்டத்தின் உட்கிடையாக அமைந்த முற்போக்குப் பண்புகளையும் புரட்சிகரத் தன்மையையும் அவர்களால் இனம் காண முடியவில்லை. இரண்டு இனங்களிடையே முக்கிய முரண்பாடாகத் தேசிய ஒடுக்குமுறை நிலவும்போது, தொழிலாள வர்க்க ஒன்றுபடுதல் நடைமுறையில் சாத்தியமற்றது என்ற அரசியல் உண்மையை உணராது அனைத்துலக தொழிலாள வர்க்க ஒருமைப்பாடு பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள். ஒடுக்கப்பட்ட ஓர் இனத்தின் தேசியப் போராட்டத்தின் புரட்சிகர உட்கிடைகளை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. இதற்கு மாறாக, சமஷ்டிக் கட்சி மக்களின் பேராதரவைப் பெற்று வெற்றி கண்டதற்குக் காரணம், தமிழ் இனத்தின் மீது சிங்கள அரசு தொடுத்த ஒடுக்குமுறைத் தாக்குதலின் உக்கிரத்தை அந்தக் கட்சி உணர்ந்து கொண்டதேயாகும். பன்முக ஒடுக்குமுறையின் வேகத்தில், தமிழ்த் தேசியத்தின் வடிவமும் அடையாளமும் பாதிக்கப்பட்டுவிடும் என்பதை அந்தத் தலைமை புரிந்து கொண்டது. இந்த ஆபத்தின் அச்சுறுத்தலை அவர்கள் மக்களிடம் தெரிவித்தார்கள். பல்வேறு மட்டங்களில் உள்ள தமிழ் மக்களின் தேசிய உணர்வைத் தட்டி எழுப்பினார்கள். தனித் தனி உதிரிகளாக வேறுபட்டு முரண்பட்டு நின்ற வர்க்கத்தினரையும் சாதியினரையும் அணிதிரட்டி, தொடர்ச்சியான வெகுசனப் போராட்டத்தில் களமிறங்கிய சமஷ்டிக் கட்சி ஒரு வலுவான தேசிய இயக்கமாக வடிவெடுத்தது.
இனவாத ‘சிங்களம் மட்டும்’ சட்டத்தை நடைமுறைப்படுத்த பண்டாரநாயக்கா அரசாங்கம் தீர்மானித்தபோது, சமஷ்டிக் கட்சிக்கு இந்த நடவடிக்கை ஒரு முக்கிய சவாலாக அமைந்தது. பொது மக்களைக் கவரக்கூடிய சத்தியாக்கிரகம் என்ற எதிர்ப்பு நடவடிக்கையை அது கைக்கொண்டது (வன்செயலற்ற, அமைதியான, அறவயப்பட்ட காந்திய வழி நிற்பதுமான குந்து மறியல் போராட்டங்களில் அது ஈடுபட்டது). சிங்களம் மட்டும் சட்டத்தை விவாதிப்பதற்காக 1956 ஜுன் 5 காலை நாடாளுமன்றம் கூடியபோது, சமஷ்டிக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும், கட்சி உறுப்பினர்களும், ஆதரவாளர்களும் கொழும்பு நாடாளுமன்றத்துக்கு எதிரே, காலி முகத்திடலில் நூற்றுக்கணக்கில் கூடி, சத்தியாக்கிரகம் புரிந்தார்கள். ஒரு சில மணிநேரத்தில், அங்கு குழுமிய சிங்களக் காடையர், அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கல்லால் அடித்தார்கள். நேரடியாகத் தாக்கினார்கள். நிலைமை மோசமாகி, ஆபத்துக் கட்டத்தை எட்டியதும் சமஷ்டிக் கட்சித் தலைவர்கள் தங்களது மறுப்புப் போராட்டத்தைக் கைவிட்டார்கள். சத்தியாக்கிரகிகளைத் துன்புறுத்தித் தாக்கிய கலகக்காரர், இரத்த வெறி கொண்ட வன்முறையில் இறங்கி, தலைநகரான கொழும்பில் தமிழ் மக்களைத் தாக்கி, அவர்களது சொத்துக்களைச் சூறையாடினார்கள். கலகம் நாட்டின் வேறு பாகங்களுக்குப் பரவ, கொலை, கொள்ளை, தீ வைப்பு, பாலியல் வன்தாக்குதல் ஆகிய வன்செயல்கள் பெருகின. அம்பாறையில் நூற்றுக்கும் அதிகமான தமிழர் படுகொலை செய்யப்பட்டார்கள். இனக் கலவரம் பரவுவதையும், தமிழ் மக்கள் எதிர்ப்புத் தெரிவிப்பதையும் பொருட்படுத்தாது சிங்களம் மட்டும் சட்டம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்மொழி தனது உத்தியோகத் தகைமையை பறிகொடுத்தது. சிங்களம் மட்டும் சட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டதை அடுத்து, சமஷ்டிக் கட்சி, தமிழ் இனம் தன்னாட்சியுடன் இயங்கக் கூடிய சமஷ்டி ஆட்சி வடிவம் கோரி, வெகுசனப் போராட்டங்களைப் பரவலாக ஏற்பாடு செய்தது. பொதுத் தேர்தல் 1956இல் நடந்தபோது, அதில் சமஷ்டிக் கட்சிக்கு ஏகோபித்த வெற்றி கிடைத்தது. தமிழ் மக்களின் தன்னாட்சி சமஷ்டி வடிவத்துக்கான தெளிவான வாக்களிப்பாக அது காணப்பட்டது. தனது கோரிக்கைகளைச் சாதிக்கும் நோக்கத்தோடு சமஷ்டிக் கட்சி தனது சத்தியாக்கிரகப் போராட்டத்தைத் தீவிரப்படுத்தத் தீர்மானித்தது. தமிழினத்தின் அரசியல் தன்னாட்சிக்கான கோரிக்கையும், தமிழ்த் தேசிய எழுச்சி உணர்வலையும் சிங்கள ஆட்சி பீடத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கின. வேகம் பெறும் வெகுசனப் போராட்டத்திற்கு அரண் கட்ட வேண்டும் என்ற தவிப்போடு தமிழருக்குச் சலுகைகளை வழங்க பண்டாரநாயக்கா இணங்கினார். அவருக்கும் சமஷ்டிக் கட்சித் தலைவர் எஸ்.ஜே.வீ செல்வநாயகம் அவர்களுக்கும் இடையே உடன்படிக்கை ஒன்று கைச்சாத்தாகியது. பிரதேச மன்றங்கள் ஊடாக ஓரளவு தன்னாட்சி அதிகாரம் வழங்கப்பட்டது. தமிழ்ப் பகுதிகளில் சிங்களக் குடியேற்றங்களை நிறுத்தவும் உறுதி அளிக்கப்பட்டது. உடன்படிக்கை, சிங்கள இனவாத சக்திகள் மத்தியில் சந்தேகத்துக்கும் எதிர்ப்புக்கும் தூபமிட்டது. இந்த நிலைமையைத் தமக்கு வாய்ப்பாக அந்தத் தருணத்தில் பயன்படுத்தியவர் ஜே.ஆர். ஜெயவர்த்தனா ஆவார். உடன்படிக்கை கைவிடப்பட வேண்டும் என்ற எதிர்ப்புக் கோரிக்கையை முன்வைத்து, பௌத்த பிக்குகளின் ஆதரவுடன் கண்டியை நோக்கிக் கால்நடை ஊர்வலம் ஒன்றுக்கு அவர் ஏற்பாடு செய்தார். இதனால் தூண்டப்பெற்ற சிங்களப் பேரினவாத அலை, அரச அமைச்சரவை உறுப்பினர் சிலருக்கும் உருவேற்ற, அவர்களும் உடன்படிக்கைக்கு எதிரான ஊர்வலம் ஒன்றை ஏற்பாடு செய்தார்கள். இவர்கள் தலைமையில் பெருந்திரளான பிக்குகளும் அவர்களுடைய இனவெறி ஆதரவாளர்களும் பண்டாரநாயக்காவின் உத்தியோக இல்லத்தை நோக்கி ஒப்பந்தப் பிரதி தாங்கிய சவப்பெட்டி ஊர்வலம் ஒன்றை நடத்தினார்கள். தலைமை அமைச்சரது இல்லத்தின் முன் தேங்கிய இந்த ஊர்வலம் சவப்பெட்டித் தகனத்தை உணர்ச்சி ஆரவாரத்துடன் நிறைவேற்றியது. இந்த இனவாதப் பித்தலாட்டத்திற்கு அடிபணிந்த பண்டாரநாயக்கா, ஆர்ப்பாட்டக்காரர் முன்பாகவே ஒப்பந்தத்தைக் கைவிடுவதாக பகிரங்கப் பிரகடனம் செய்தார்.
சிங்கள அரசியல் தலைமைபுரிந்த இந்த மாபெரும் நம்பிக்கைத் துரோகமானது இன ஒருமைப்பாட்டிற்கான நம்பிக்கைகள் அனைத்தையும் தகர்த்தெறிந்ததுடன் இரு தேசங்கள் மத்தியிலான உறவிலும் பகைமையைத் தீவிரப்படுத்தியது. இந்த பகைமை உணர்வு படிப்படியாகக் கூர்மையடைந்து 1958இல் தமிழர்களுக்கு எதிரான இனத்துவேசக் கலவரமாக வெடித்தது. சிங்கள தேசம் பூராகவும் தலைவிரித்தாடிய இனக் கலவரக் கொடூரம் இலங்கை வரலாற்றின் பக்கங்களை இரத்தத்தால் கறைபடுத்தியது. அப்பாவிகளான தமிழ் மக்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்ட கொடுமையும் குரூரமும் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதவை. பல நூற்றுக்கணக்கானோர் கண்டதுண்டமாக வெட்டிக் கொல்லப்பட்டார்கள். கர்ப்பிணித் தாய்மார் பாலியல் வன்தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்கள். தமிழ்ப் பாலர்கள் வெட்டிக் கொல்லப்பட்டார்கள். பாணந்துறையில் இந்துக் குருக்கள் ஒருவர் உயிரோடு எரிக்கப்பட்டார். மகா ஓயா என்ற ஊரிலே, கிணறு ஒன்றில் இருந்து காயம்பட்ட வடுக்களோடு சடலங்கள் பல மீட்கப்பட்டன. களுத்துறையில், கிணற்றுக்குள் இறங்கிப் பதுங்க முயன்ற ஒரு தமிழ்க் குடும்பம் மீது இனவெறிக் காடையர்கள் பெற்றோல் ஊற்றி உயிருக்காகக் கெஞ்சிய அவர்கள் மீது நெருப்பு வைத்தார்கள். தீச் சுவாலைகளால் உயிரோடு பொசுங்கி அவர்கள் துடி துடித்துக் கதறி ஓலமிட்டபோது, இனவெறிக் காடையர் கெக்கொலி கொட்டி, நடனமாடி மகிழ்ந்தார்கள். ஆயிரமாயிரம் பேர் தங்கள் வீடு வாசல்களை இழந்தார்கள். பல கோடி பெறுமதி வாய்ந்த தமிழ்ச் சொத்துக்கள் ஒன்றில் சூறையாடப்பட்டன அல்லது தீயிட்டுச் சாம்பலாக்கப்பட்டன. பயங்கர இனவெறி நாடு பூராவும் கொழுந்து விட்டெரிந்து கொண்டிருக்கும்போது, இந்தப் பயங்கர வெறியாட்டத்தை பண்டாரநாயக்கா வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். தமிழ் மக்கள், ‘பட்டுப் பழகட்டும்’ என்று தாம் விட்டுக் கொண்டிருந்ததாக, அவரை மேற்கோள்காட்டி பின்னர் எடுத்தாளப்பட்டது. வேண்டுமென்றே இருபத்து நான்கு மணிநேரம் தாமதித்த பின்னர், அவசரகால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டது. நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டபோது, பத்தாயிரம் தமிழ் மக்கள் அகதிகள் என்ற நிலைக்கு ஆளானார்கள். இவர்களில் பலர், அரச ஊழியர். பலர் உயர்தொழில் வல்லுநர். மேலும் பலர், கொழும்பு வர்த்தகர்கள். பாதுகாப்புக் கருதி இவர்கள் வடக்குக்கும் கிழக்குக்கும் கப்பலில் ஏற்றி அனுப்பப்பட்டார்கள்.
சத்தியாக்கிரகப் போராட்டம்
1958ல் நிகழ்ந்த இனக் கலவர வெறியாட்டம் தமிழ் சிங்கள தேசிய இனங்கள் மத்தியிலான உறவில் ஆழமான பிளவை ஏற்படுத்தியது. தமிழ்த் தேசிய உணர்வு எழுச்சிப் பிரவாகம் எடுத்தது. தமிழ் அரசியல் களத்தில் மாபெரும் வெகுசனப் போராட்டங்களாக அது வடிவெடுத்தது. வடக்கு கிழக்கு மாகாணங்களிலுள்ள அரசாங்கச் செயலகங்கள் முன்பாக சத்தியாக்கிரகப் போராட்டங்களை நிகழ்த்தி நேரடி நடவடிக்கையில் குதிக்க 1961 முற்பகுதியில் சமஷ்டிக் கட்சி தீர்மானித்தது. தமிழரின் தாயக மண்ணில் அரச நிர்வாகத்தை நிலைகுலையச் செய்து, ஆட்சியைச் சீர்குலைத்துத் தமிழ் மக்களின் சமஷ்டித் தன்னாட்சிக்கான கோரிக்கையை அரசு ஏற்கும்படி செய்வதே இவ்வெகுசனப் போராட்டத்தின் குறிக்கோளாக இருந்தது.
1961ஆம் ஆண்டு நடைபெற்ற சத்தியாக்கிரகப் போராட்டமானது தமிழரின் தேசியப் போராட்ட வரலாற்றில் ஒரு மகத்தான நிகழ்வு என்றே கூறவேண்டும். மாபெரும் வெகுசனப் பொங்குணர்வாகவும், அரச ஒடுக்குமுறைக் கொள்கைக்கு எதிரான தேசியப் பேரெழுச்சியாகவும் இப் போராட்டம் அமையப்பெற்றது. 1961 பெப்ரவரி 20 ஆரம்பித்து வைக்கப்பட்ட ஒத்துழையாமை இயக்கம் ஏறத்தாழ மூன்று மாத காலம் வரை நீடித்தது. அடக்குமுறை அரசுக்கு எதிராக தமது ஆத்திரத்தை வெளிக்காட்டும் வகையில் பல்லாயிரம் தமிழ் மக்கள் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டங்களில் பங்குகொண்டனர். வடக்கு கிழக்கு மாநிலத்தில் இயங்கிய அரச நிர்வாக இயந்திரம் இரண்டு வாரங்களுக்குச் செயலிழந்து முடங்கியது. தமிழர் தாயகத்தின் சகல பகுதிகளிலும் மத்திய அரசின் ஆணை ஆற்றலிழந்தது. வரலாறு கண்டிராத இம் மகத்தான போராட்ட நிகழ்வு தமிழ் மக்களிடையே மிக வேகமாக வளர்ந்து வரும் தேசிய ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தியது. தமிழ் மக்கள் தமது அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்கு ஒன்றிணைந்து போராட உறுதிபூண்டுள்ளார்கள் என்பதற்கும் இது கட்டியம் கூறியது.
யாழ்ப்பாணத்தில் உள்ள அரசாங்கப் பிரதான நிர்வாகப் பணிமனையின் முன், பெருந்திரளான மக்களின் குந்து மறியல் போராட்டம் முதலில் தொடங்கியது. விரைவில் வவுனியா, முல்லைத்தீவு, மன்னார், திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய களங்களுக்கும் வேறு நகரங்களுக்கும் போராட்டம் வேகமாகப் பரவியது. தமிழ் பேசும் மக்களில் அனைத்துப் பிரிவினரும், சாதி சமய வேறுபாடின்றி இந்த அமைதிப் பொதுப் போராட்டத்தில் உற்சாகத்தோடு கலந்து கொண்டார்கள். மலையகத் தோட்டத் தொழிலாளரும், ஆயிரமாயிரம் பேர் தங்கள் உரிமைப் போராட்ட ஒற்றுமை உணர்வை வெளிப்படுத்த வடக்கிலும் கிழக்கிலும் ஒன்று கூடினார்கள். இந்த மாபெரும் தேசிய எழுச்சி ஊட்டிய உற்சாகத்தில் 1961 ஏப்ரல் 14இல், அஞ்சல் சேவை ஒன்றை சமஷ்டிக் கட்சி தொடக்கியது. தமிழ்த் தேசிய அஞ்சல் தலைகள் ஆயிரமாயிரம் வெளியிடப்பட்டன. அரச அதிகாரத்தை மீறுவதாக இந்தச் செயல் அமைந்தது.
தமிழ்த் தேசிய வளர்ச்சியின் வேக அலையும் சட்ட மறுப்புப் போராட்டமும் அரசை ஆட்டம் காணச் செய்தது. அரசின் ஒடுக்குமுறை யந்திரம் துரிதமாக முடுக்கிவிடப்பட்டது. அடக்குமுறை நடவடிக்கையில் இராணும் ஈடுபடுத்தப்பட்டது. அவசர கால அதிகாரங்களுக்கு அமைவான ‘சிறப்புப் பணிப்புரைகளோடு’ பெரும் படையணிகளாக ஆயுதப் படைகள் தமிழ்ப் பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. யாழ்ப்பாணச் சத்தியாக்கிரகிகள் மீது 1961 ஏப்ரல் 18 வைகறைப் பொழுதில் அரச படையினர் திடீரெனப் பாய்ந்தனர். துப்பாக்கி முனையாலும் குண்டாந் தடியாலும் குரூரமாகத் தாக்கினர். மண்டைகள் உடைந்தன. அவயங்கள் முறிந்தன. சாத்வீகப் போராளிகள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட அரச இராணுவக் காடைத்தனத்தின் விளைவாக நூற்றுக்கணக்கானோருக்குக் கடுங்காயம் ஏற்பட்டது. அவசர காலச்சட்டம், ஊரடங்கு என்ற போர்வையில் தமிழர் தாயகம் முழுவதிலும் இராணுவ பயங்கரவாதம் ஏவப்பட்டது. கடுமையான வன்முறையால் அமைதிப் போராட்டம் அடக்கப்பட்டது. தமிழ்த் தலைவர்கள் கைது செய்யப்பட்டார்கள். சமஷ்டிக் கட்சிப் பணிமனைகள் அடித்து நொருக்கப்பட்டன. அரசின் பார்வையில் ‘நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது’. இவ்வாறு ஒடுக்குமுறையாளரின் வன்முறை ஒடுக்கப்பட்டவரின் சாத்வீகத்தை அடக்கி ஒடுக்கியது. சிங்களப் பேரினவாதத்தின் ஆயுத பலம் நீதி வேண்டிய தமிழ் மக்களின் ‘அகிம்சையை’ நொருக்கியது. இந்த வரலாற்று நிகழ்வு தமிழ்த் தேசியப் போராட்டத்தின் அரசியல் அனுபவத்துக்கு ஒரு தோற்றுவாயாகப் படிந்தது. மனிதநேயப் பண்புகளினதும் நாகரிக நடைமுறைகளினதும் ஒழுக்க சீலங்கள் அனைத்தையும் நிராகரித்து, இனக் காழ்ப்புணர்வில் ஊறிப் போயிருக்கும் கொடிய ஒடுக்குமுறையாளரின் இராணுவ அதிகாரத்தின் முன்னே, தமிழ் மக்கள் வெறுமே சாத்வீக அணுகுமுறையின் தார்மீக பலத்தோடு எதிர்த்து நிற்க முடியாது என்ற பாடத்தைக் கற்பித்தது. ஒடுக்குமுறையாளரைப் பொறுத்த வரையிலே இந்த நிகழ்வு அவர்களுக்கு நம்பிக்கையை ஊட்டியது. தமிழரின் அரசியல் போராட்டத்துக்கு இராணுவ பயங்கரவாதமே ஒற்றைப் பதிலாகும் என்று அவர்கள் கருதினார்கள். துப்பாக்கி முனையின் முன்னே, தமிழ் மக்களுடைய அரசியல் போராட்டத்தின் சாத்வீக அடித்தளம் பலமற்றது என்று ஆட்சியாளர்கள் முடிவு செய்தார்கள்.
ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க) 1965இல் ஆட்சிக்கு வந்தது. பெயரளவில் ‘தேசிய அரசு’ என்று பெயர் சூட்டப்பட்ட இந்த அரசுடன் கூட்டுச்சேர சமஷ்டிக் கட்சி தீர்மானித்தது. சில சலுகைகளைத் தமிழ் மக்களுக்காகப் பெற்று எடுக்க முடியும் என்று அது எதிர்பார்த்தது. தமிழ் மக்களின் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் இணக்கம் காண இந்தக் கூட்டுச் சேரல் வழிகோலும் என்று தமிழ்த் தலைமை வீணாக நம்பியது. தமிழ்த் தேசியவாதிகளைக் குளிர்மைப்படுத்தற் பொருட்டு சமஷ்டிக் கட்சயின் மூத்த உறுப்பினர் ஒருவரை அமைச்சரவையில் கபடத்தனமாக நியமித்த ஐ.தே.க, அடுத்த ஆண்டில் குறித்த சில அரச அலுவல்களில் தமிழ் மொழியைப் பயன்படுத்தும் சில ஒழுங்குப் பிரமாணங்களை நிறைவேற்றியது. மாவட்ட மன்றங்களை நிறுவும் ஏற்பாடுகள் தொடர்பாக சமஷ்டிக் கட்சித் தலைவர் எஸ்.ஜே.வீ செல்வநாயகம் அவர்களுக்கும் ஐ.தே.க. தலைவர் டட்லி சேனநாயக்க அவர்களுக்கும் இடையே ஓர் இரகசிய ஒப்பந்தமும் செய்யப்பட்டது.
தமிழ்மொழி அமுலாக்கத்திற்கான ஒழுங்குப் பிரமாணங்களோ, பிரதேச மன்றங்களுக்கான அரசியலதிகாரப் பரவலாக்கமோ நிறைவுசெய்யப்படவில்லை. பேச்சுவார்த்தை மூலம் இணக்கப்பாடு காணும் வழிமுறைக்கு சிங்கள அரசியல் தலைவர்களின் இனவெறிப் போக்குடைய அரசியல் அணுகுமுறை இடமளிக்கவில்லை. சிங்கள தேசத்தின் இனவாத அரசியல் அணுகுமுறையில் மாறி மாறி நிகழும் ஒரு வரலாற்றுப் பாங்காக, மாற்றமுடியாத ஒரு நடைமுறையாக ஒரு உண்மையைக் கண்டுகொள்ளலாம். அதாவது, ஆட்சிபீடம் ஏறும் கட்சி, தமிழர் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண முற்படும்பொழுது, எதிர்க்கட்சியாக விளங்கும் கட்சி அம்முயற்சியை முறியடிக்கும் வகையில் தமிழ் விரோத உணர்வைத் தூண்டிவிடும். இதன்படி, சிங்கள தேசப்பற்றாளர்களாக தம்மை இனம்காட்டி, எதிராளிக் கட்சிக்காரரைக் காட்டிலும் தாம் கெட்டிக்காரர் என உயர்த்திக் காட்டி அரசியல் லாபம் தேடும் ஒரு கீழ்த்தரமான அரசியல் நடைமுறையை சிங்கள அரசியல் கட்சிகள் மாறி மாறி கடைப்பிடிப்பது ஒரு வரலாற்று நியதியாகிவிட்டது. இத்தகைய அரசியல் பம்மாத்தில் சிக்குண்ட ஐக்கிய தேசியக் கட்சி எதிர்க்கட்சியின் அழுத்தங்களுக்கு வளைந்துகொடுத்து உடன்படிக்கையைக் கைவிட்டது. ஒத்துழைத்து உரிமை பெறலாம் என்ற சமஷ்டிக் கட்சியின் முயற்சி மீண்டும் ஏமாற்றுப் படலத்தைச் சந்தித்தது. தலைகுனிவோடு சமஷ்டிக் கட்சி, அரசுக்கு வழங்கிய ஆதரவை 1968இல் நிறுத்திக்கொண்டது.
ஜே.வி.பியினரின் ஆயுதக் கிளர்ச்சி
இலங்கை அரசியல் வரலாற்றிலேயே பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்திய முக்கிய நிகழ்வுகள் 1970-77 க்கும் இடைப்பட்ட காலத்தில் அரங்கேறின எனலாம். ‘சனநாயக சோசலிசம்’ என்ற சுலோகத்துடன் இடதுசாரி அரசியல்வாதிகளைக் கொண்ட கூட்டணி அரசு இந்த வரலாற்றுக் காலகட்டத்தில் ஆட்சிபீடம் ஏறி, நாடு முழுவதற்கும் பேரிடரையும் சீர்குலைவையும் கொண்டு வந்தது. இந்தக் காலகட்டத்திலேயே தெற்கில் புரட்சிவாத இளைஞரின் ஆயுதக் கிளர்ச்சியும் வடக்கில் தீவிரமடைந்த அரசியல் வன்முறையும் தலைதூக்கின. அடக்குமுறை அரசுக்கு எதிரான இளைஞர் சமூகத்தின் விரக்தியினதும் ஆவேசத்தினதும் வெளிப்பாடாகவே இவ் வன்முறைச் செயற்பாடுகள் நிகழ்ந்தன. இக் காலகட்டத்திலேயே தமிழ் சிங்கள இனங்கள் மத்தியிலான தேசிய முரண்பாடு கூர்மையடைந்தது. சிங்கள-பௌத்த மேலாண்மைக்கு சட்ட அதிகாரம் வழங்கிய புதிய குடியரசுக்கான அரசியல் யாப்பு நடைமுறைக்கு வந்ததையடுத்தே தமிழ்-சிங்கள தேசிய முரண்பாடு முற்றியது. இந்த வரலாற்றுக் கால கட்டத்திலேயே விடுதலைப் புலிகள் இயக்கம் பிறப்பெடுத்து, தமிழரின் ஆயுதம் தரித்த எதிர்ப்புப் போராட்டம் வலுப்பெற்றது. இக்கால கட்டத்திலேயே தமிழரின் தேசிய இயக்கமானது சுயநிர்ணய உரிமையைப் பிரகடனம் செய்து அரசியல் சுதந்திரத்திற்கான புரட்சிப் பாதையில் செல்வதற்கு முடிவெடுத்தது.
சிறீலங்கா சுதரந்திரக் கட்சி, லங்கா சம சமாஜக் கட்சி, இலங்கை கொம்யூனிஸ்ட் கட்சி ஆகிய கட்சிகள் இணைந்து உருவான அரசியல் கூட்டு 1971இல் “மக்கள் முன்னணி அரசு” என்ற பெயரில் ஆட்சிக்கு வந்தது. புதிய அரசு ஆட்சிக்கு வந்த மறுகணமே சிங்கள இளைஞரின் ஆயுதக் கிளர்ச்சிக்கு அது முகம்கொடுக்க நேர்ந்தது. நன்கு திட்டமிடப்படாது, அசட்டுத் துணிச்சலுடன் நடத்தப்பட்ட இந்த முயற்சி அரசிடமிருந்து ஆட்சியைப் பலவந்தமாக பறித்து எடுப்பதையே நேக்கமாகக் கொண்டிருந்தது. புதிதாக உருவாக்கப்பட்ட ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி) என்ற மாக்சிய தீவிரவாத அமைப்பே, தெற்கில் கிளர்ச்சியைத் தொடக்கியது. இந்தக் கிளர்ச்சியை ஜே.வி.பி செவ்வையாகத் திட்டமிடவில்லை. அதனிடம் ஒரு ஆணைப்பீடத் தலைமையோ, நெறிப்படுத்தும் நிர்வாகமோ, தெளிவான கொள்கையோ, தந்திரோபாயமோ இருக்கவில்லை. புரட்சியின் தலைமை வெகுவாகச் சீர்குலைந்திருந்தது. ஆயுதப் புரட்சிப் போராட்டத்தை ஜே.வி.பி புரிந்து கொள்ளவில்லை. அது தொடர்பான நடைமுறைப் பட்டறிவுகூட அதனிடம் இருக்கவில்லை. ஆயுதப் போராட்டத்தைப் பொறுத்த வரையில், ஜே.வி.பி தலைவர் றோகண விஜயவீரா புரட்சிப் போரில் தேர்ச்சி பெற்றவரல்ல. ஆனாலும் ரஷ்ய ஒக்ரோபர் புரட்சி, மாவோ சே துங்கின் இராணுவச் சிந்தனைகள், சே குவேராவின் கெரில்லாப் போர் முறைக் குறிப்புகள் ஆகிய ‘புத்தகப் படிப்பால்’ பெற்ற அரைகுறை அறிவோடு பெரிதொரு புரட்சிக்கு அடிகோலும் பேரவா அவரிடம் இருந்தது. ஒரு புரட்சிச் சூழலுக்கான இலக்கையோ நடைமுறைச் சாத்தியக் கூறுகளையோ கருத்துக்கு எடுக்காது, வேலை வாய்ப்பு இழந்து விரக்தியடைந்த இளைஞர் சமுதாயத்தையும் காணி நிலம் இல்லாத விவசாயிகளின் ஒரு பிரிவினரையும் இந்த இயக்கம் ஒன்று திரட்டி கிளர்ச்சி செய்யத் தூண்டியது. இந்த ஆயுதக் கிளர்ச்சி 1971 ஏப்ரல் 5இல் திடீரென ஆரம்பமாகி உள்ளூர்க் காவல் நிலையங்கள் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டது. சில நாட்களுக்குள் தொண்ணூற்று மூன்று காவல்நிலையங்களை ஜே.வி.பியினர் தாக்கி அழித்தனர். தெற்கிலுள்ள பல நிர்வாக மாவட்டங்களும் இவர்கள் வசமாகின. இந்தத் திடீர் ஆயுத எழுச்சி அரசைத் திகைக்க வைத்தாலும் அரசு தன்னைச் சுதாரித்துக் கொண்டு துரிதமான கிளர்ச்சி முறியடிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அவசர காலநிலையும் ஊரடங்குகளும் பிறப்பிக்கப்பட்டன. வெளிநாட்டு இராணுவ உதவிகோரி, அரசு வேண்டுகோள் விடுத்தது. இந்தியா, பாகிஸ்தான், சீனா, பிரித்தானியா ஆகிய நாடுகள் இராணுவ தளவாடங்களுடன் உதவிக்கு விரைந்தன. தலைநகர் கொழும்புக்கு பாதுகாப்பு வழங்க அவசர நிலை அதிரடிப் படையணி ஒன்றை இந்தியா வழங்கியது. வெளிநாட்டு இராணுவ உதவியால் கிடைத்த நிறைவான ஆயுதங்களும் மிகக் கொடிய அவசரகாலச் சட்டமும் துணைவர, சிறீலங்கா அரச படையினர், வயதில் இளைய, அனுபவமற்ற புரட்சியாளர்கள் மீது குரூரமான பதில் தாக்குதலை மேற்கொண்டனர். இலங்கை வரலாற்றில் மிகக் கொடூரமான இராணுவ அடக்குமுறையாக இது அமைந்தது. நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக பத்தாயிரத்துக்கும் அதிகமான சிங்கள இளைஞர்கள் இரக்கமின்றி கொல்லப்பட்டார்கள். மேலும் பதினையாயிரம் பேர் சிறையில் அடைக்கப்பட்டார்கள். புரட்சிகர சிங்கள இளைஞர் பரம்பரை ஒன்றை இந்த எதிர்த்தாக்குதல் பூண்டோடு அழித்தொழித்தது. வேலை இல்லாத் திண்டாட்டத்தால் துயருறும் விரக்தியடைந்த இவ் இளைஞர்கள், புரட்சிகர கிளர்ச்சி மூலம் தமக்கு மீட்சி கிடைக்கும் என்று மனப்பூர்வமாக நம்பினர். இந்த அப்பாவி இளைஞர்களின் உடல்களில் இருந்து வழிந்து ஓடிய இரத்த ஆறு, காருண்யம் மிக்க பௌத்தத்தின் புனித பூமியாகப் பூசிக்கப்படும் சிங்கள தேசத்தின் மண்ணை கறைப்படுத்தியது. இந்த மாபெரும் இளைஞர் படுகொலையை திட்டமிட்டு நடத்தி தமது அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ள தமது சொந்தப் பிள்ளைகளை பல்லாயிரக்கணக்கில் துவம்சம் செய்தவர்கள் மீது வரலாற்றின் பழி படிந்தது. ஒடுக்கப்பட்ட தரப்பினரிடமிருந்து மேலும் கிளர்ச்சிகள் தோன்றினால் அவற்றை மிருகத்தனமாக நசுக்கிவிடும் நோக்குடன் சிங்கள ஆளும் வர்க்கமானது அவசரகாலச் சட்டங்களையும் வேறு அடக்குமுறைச் சட்டங்களையும் உருவாக்கி அரச அதிகாரம் மீதான தனது இரும்புப் பிடியை மேலும் இறுக்கியது.
சிங்கள தீவிரவாத இளைஞர்களை அரச பயங்கரவாதம் வாயிலாக நசுக்கிய பின்னர், புதிய அரசு தனது அடக்குமுறை நடவடிக்கைகளை தமிழ் மக்கள் மீது திருப்பியது. முதலில், அரச ஒடுக்குமுறைக்கு சட்டரீதியான ஒப்புதலும் நியாயப்பாடும் கொடுப்பதற்கான முயற்சிகளை எடுத்தது. இதன் முக்கிய நடவடிக்கையாக புதிய குடியரசு யாப்பு நிறைவேற்றப்பட்டது. இப் புதிய அரசியல் யாப்பு சிங்களத்திற்கு அரச மொழி என்ற ஏகத்தகைமையையும் பௌத்த மதத்திற்கு முதன்மையான சிறப்புரிமையையும் வழங்கியது. முன்னர் வழக்கில் இருந்த சோல்பரி அரசியல் யாப்பின் இருபத்தொன்பதாவது விதியின் அடிப்படையில் சிறுபான்மையினருக்கு வழங்கப்பட்டிருந்த அடிப்படை உரிமைகள், சலுகைகள் ஆகியவற்றைப் புதிய அரசியல் யாப்பு இல்லாதொழித்தது. அத்தோடு மொழி, மதம் ஆகியவை தொடர்பாக பண்டாரநாயக்கா வகுத்த இனவாதச் சட்டங்களை நாட்டின் அதியுயர் சட்டங்களாகப் பிரகடனம் செய்தது. தமிழ் பேசும் மக்கள் சார்பாக முன்வைக்கப்பட்ட அனைத்துத் திருத்தங்களையும் தீர்மானங்களையும் யாப்பமைப்பு மன்றம் திட்டவட்டமாக நிராகரித்தது. பொருத்தமான கூட்டாட்சித் திட்டத்தை சமஷ்டிக் கட்சி முன்வைத்தது. விவாதத்துக்கு எடுக்கப்படாமலேயே அது நிராகரிக்கப்பட்டது. புதிய அரசியல் யாப்பில், தமிழ் மொழி உபயோகத்துக்காக மேற்கொள்ளப்பட்ட அனைத்து முயற்சிகளும் தோல்வி கண்டன. மன்றத்தின் நடவடிக்கைகளில் சிங்கள தேசிய மேலாண்மைவாதம் மமதையோடு அரசோச்சியது. இதனால் பெரும்பாலான தமிழ் உறுப்பினர்கள் நம்பிக்கை இழந்து விரக்தியோடு வெளிநடப்புச் செய்தார்கள். இகழ்ச்சிக்குரிய இந்த அரசியல் யாப்பு 1972 மே 22இல் நிறைவேற்றப்பட்டது. இதன் விளைவாக, அரச அதிகாரத்தை பகிர்ந்து கொள்வதற்கான வாய்ப்புக்கள் அனைத்துமே தமிழருக்கு மறுக்கப்பட்டது. தேசிய இனப் பண்புகளைக் கொண்ட ஒரு மக்கள் சமுதாயம் அரசியல் வாழ்விலிருந்து முற்றாக அந்நியப்படுத்தப்பட்டது.
சிங்கள தேசத்தை பிரதிநிதித்துவம் செய்த பிரதான அரசியல் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியும் சிறீலங்கா சுதந்திரக் கட்சியும் தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் உரிமைகளை வேண்டுமென்றே தொடர்ச்சியாக மறுத்து வந்தன. இடதுசாரிகளான சமசமாசக் கட்சியும், கம்யூனிஸ்ட் கட்சியும் ஐம்பதுகளிலே தமிழரின் உரிமைகளுக்காக ஆதரவுக் குரல் கொடுத்து வந்தன. ஆனால் அறுபதுகளின் தொடக்கத்திலேயே அரசியல் சந்தர்ப்பவாதத்திற்கு வளைந்து கொடுத்து சிங்கள-பௌத்த பேரினவாத அரசியலை அரவணைத்துக் கொண்டன. தமிழ் மக்களின் உரிமைகளை மறுப்பதில் அனைத்து முக்கிய சிங்கள அரசியல் கட்சிகளும் முரட்டுப் பிடிவாதத்தோடும் உறுதியோடும் தொடர்ந்து நிற்பதைக் கண்டு இன நல்லிணக்கத்துக்காகப் பாடுபடுவதில் அர்த்தமில்லை என்ற உண்மையை தமிழ் மக்கள் கசப்போடு உணர்ந்து கொண்டார்கள். சிங்கள தேசிய அரசியல் சக்திகள், தமிழருடன் ஒத்து வாழ்வதைக் காட்டிலும், எதிர்த்து நிற்பதற்காகவே தமக்குள் உடன்பாடு கண்டன. இதைக் கண்ணுற்ற தமிழ் மக்கள் தங்கள் சொந்த அரசியல் தலைவிதியை தாமே தீர்மானிக்க நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். ஒரு பொது இலட்சியத்திற்காகப் போராடும் ஒன்றுபட்ட தேசிய இயக்கமாகத் தமிழ் அரசியல் சக்திகள் ஒன்றுதிரள, இந்த யதார்த்த புறநிலை காரணமாக அமைந்தது. இந்த இலக்கை நோக்கிய முக்கிய நிகழ்வாக அனைத்துக் கட்சி மாநாடு ஒன்று திருகோணமலையில் 1972 மே 14இல் கூட்டப்பட்டது. இங்கு, சமஷ்டிக் கட்சி, தமிழ்க் காங்கிரஸ் கட்சி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆகியவை ஒன்றிணைந்து தமிழர் ஐக்கிய முன்னணியாக வடிவெடுத்தன. இதற்கு முன் இடம்பெற்றிராத ஓர் இணைப்பு இது. தமிழ் மக்கள் தங்கள் தேசிய அடையாளத்தையும் அரசியல் சுதந்திரத்தையும் காப்பாற்றத் தாம் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்ற அவர்களது இலட்சிய உறுதியையும் இது எடுத்துக் காட்டியது.
தமிழ் இளைஞரின் அரசியல் வன்முறை
நடைமுறைச் சாத்தியமான ஒரு வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஒன்றுபட்டுச் செயற்படவேண்டிய அவசியத்தை தமிழர் ஐக்கிய முன்னணியின் தலைமைப்பீடம் உணர்ந்திருந்தது. ஆனால் தலைவர்களிடையே நிலவிய கருத்து பேதம், நடைமுறைச் செயற்திட்டம் ஒன்றை உருவாக்குவதற்கு தடையாக நின்றது. தமிழினத்தின் சார்பாக யாப்பமைப்பு மன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட விதப்புரைகள் எடுத்த எடுப்பிலேயே தூக்கி வீசப்பட்டமை, தமிழ்த் தலைவர்கள் மத்தியில் ஆழமான ஏமாற்றத்தை தோற்றுவித்தது. அரச ஆட்சியில் தமிழ் மக்கள் அர்த்தபூர்வமாகப் பங்கெடுப்பதற்கு முற்றுமுழுதான தடை ஒன்று உருவாகி இருப்பதை இது அவர்களுக்கு தெளிவாக எடுத்துக் காட்டியது. அரசியலில் தமிழர் முற்று முழுதாக ஓரம் கட்டப்படுவதையும் அது முகத்தில் அறைந்தாற் போல் உணர்த்தியது. எனவே தமிழினத்தின் அரசியல் எதிர்காலம் பேராபத்துக்கு உள்ளாகி இருப்பதைத் தமிழ்த் தலைவர்கள் உணரவே செய்தார்கள். ஆனால் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லவல்ல நடைமுறைச் செயற்திட்டம் ஒன்றை வகுக்க அவர்களால் இயலவில்லை. திருகோணமலை மாநாட்டிலே ஆறு அம்சத் திட்டம் ஒன்றை அவர்கள் வகுத்தார்கள். ஆனால் தமிழர் ஐக்கிய முன்னணி தலைமைப் பீடத்தினரிடம் அரசியல் தூரநோக்கு வரண்டுபோய் விட்டதையே அந்த ஆறு அம்சத் திட்டம் அம்பலப்படுத்தியது:
1) தமிழ் மொழிக்கு உரிய திட்டவட்டமான இடம்
2) சிறீலங்கா ஒரு மதசார்பற்ற அரசாக இருத்தல்
3) சிறுபான்மை இனத்தவரின் அடிப்படை உரிமைகள் அரசியல் யாப்பில் உள்ளடக்கப்படுவதோடு, சட்டமூலம் செயற்படுத்தப்படுவதற்கான உறுதிப்பாடு.
4) மனுப் பண்ணும் அனைவருக்கும் குடியுரிமை
5) நிர்வாகப் பரவலாக்கம்
6) சாதி முறை ஒழிப்பு
ஒரு புறம் சிங்கள அரசியல் கட்சிகள் தமது கொள்கை வேறுபாடுகளை மறந்து, ஒரே அணியில் ஒன்றிணைந்து ஒரு கட்டிறுக்கமான சிங்கள-பௌத்த ஏதேச்சாதிகார அரச வடிவமைப்பை உருவாக்கிக் கொண்டிருக்க, மறுபுறம் தமிழ்த் தலைவர்கள், தமது ஆரம்ப கால அரசியல் இலட்சியத்தைக் கைவிட்டு, தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளைப் பிரதிபலிக்காத, அர்த்தமற்ற பூடகமான கோரிக்கைகளை முன்வைக்க முனைந்து கொண்டிருந்தனர்.
தெளிவான அரசியல் தரிசனமும் உருப்படியான செயற்திட்டமும் இல்லாத காரணத்தினால் தமிழ்த் தலைவர்கள் மீது தீவிரவாதத் தமிழ் இளம் சமுதாயம் நம்பிக்கை இழந்தது. எவ்வித பயனுமின்றி, முப்பது ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழ்த் தலைவர்கள் கடைப்பிடித்து வந்த சாத்வீக அரசியல் அணுகுமுறை மீது, அரசியல் விழிப்புணர்வு பெற்ற இளைஞர் சமூகத்திற்கு நம்பிக்கை இடிந்தது. தமிழரின் தேசிய இனப் பிரச்சினைக்கு விரைவான தீர்வு காணும் வகையில் நடைமுறைச் செயற்திட்டங்களைக் கொண்ட புரட்சிகரமான அரசியல் அணுகுமுறையையே இளைய தலைமுறை விரும்பியது. ஒருபுறம் ஆயுதப் படைகளின் அடக்குமுறையும் மறுபுறம் அரச இனவாத ஒடுக்குமுறையுமாக ஒரு புரட்சிகரமான புறநிலையை எதிர்கொண்டு நின்ற இளைஞர் சமூகம், காந்திய தத்துவத்தில் நெறிக்கப்பட்ட சாத்வீக அரசியல் வழிமுறையை கைவிட நிர்ப்பந்திக்கப்பட்டது. தாம் எதிர்கொண்டு நிற்கும் யதார்த்த சூழ்நிலைக்கு சாத்வீகம் நடைமுறைச் சாத்தியமற்றது என்பதோடு புரட்சிகரமான அரசியல் அணுகுமுறைக்கு ஏற்றதாக அமையாது என்பதையும் இளைஞர்கள் உணர்ந்து கொண்டார்கள். எழுபதுகளின் முற்பகுதியில் தமிழ் அரசியல் அரங்கில் வெடித்த தமிழ் இளைஞர்களின் அரசியல் வன்முறை, பின்பு காலப்போக்கில் ஒழுங்கமைவான எதிர்ப்பு இயக்கமாக வடிவெடுத்தது. தீவிரவாத இளைஞரின் இந்த அரசியல் வன்முறையானது பழமைபேண் தமிழ்த் தலைமைக்கும் சரி, சிங்கள ஒடுக்குமுறை ஆட்சியாளருக்கும் சரி சிம்ம சொப்பன அரசியல் யதார்த்தமாக தோற்றம் எடுத்தது.
மாறி மாறி ஆட்சிபீடம் அமர்ந்த சிங்கள அரசுகளின் ஒடுக்குமுறைக் கொள்கைகளுக்கு நேரடியாகப் பலிக்கடாவாக ஆக்கப்பட்ட காரணத்தாலேயே தமிழ் இளைஞர்களிடையே தீவிரவாதக் கடும் போக்கும், வளைந்து கொடாத எதிர்ப்புணர்வும், வன்முறையும் தலைதூக்கின. படித்த தமிழ் இளைஞர்களிடையே நிலவிய வேலையில்லாத் திண்டாட்டம் காரணமாக நிரந்தரமான விரக்தியையும் சூன்யமான எதிர்காலத்தையும் அவர்கள் எதிர்கொண்டு நின்றார்கள். அரசாங்கம் வகுத்த பாகுபாடான ‘தரப்படுத்தல்’ திட்டமும் தனிச் சிங்களச் சட்டமும் தமிழ் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பையும் உயர்கல்விக்கான வாயில்களையும் நிரந்தரமாகவே மூடிவிட்டன.
ஒருபுறம் வேலைவாய்ப்பின்மையால் ஏற்பட்ட விரக்தி, மறுபுறம் உயர்கல்வி வாய்ப்பின்மையால் ஏற்பட்ட அங்கலாய்ப்பு, இன்னொரு புறம் அந்நிய மொழித் திணிப்பால் ஏற்பட்ட ஆத்திரம் ஆகியன தமிழ் இளம் சமூகத்திற்கு ஒரு புதிய விழிப்புணர்வை ஏற்படுத்தியது. இந்தப் பாழான நிலையிலிருந்து மீட்சி பெறுவதானால் தமது வாழ்க்கையை முற்றாக மாற்றியமைக்கக் கூடிய ஒரு புரட்சிகரமான அரசியல் நடைமுறையை தாம் தழுவ வேண்டுமென அவர்கள் உணர்ந்து கொண்டார்கள். அரச ஒடுக்குமுறை தீவிரமடைந்து வந்த அந்நெருக்கடியான காலகட்டத்தில் ஆயுதப் போராட்டம் வாயிலாக தமிழ்த் தேசத்தின் சுதந்திரத்தை வென்றெடுப்பதே தமிழ் மக்களுக்கு எஞ்சியிருந்த ஒரே வழியென அவர்கள் புரிந்து கொண்டார்கள். எனவே, சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தமிழர் தாயகம் பிரிந்து சென்று தனியரசை நிறுவவேண்டும் என்ற கோரிக்கையை தமிழர் ஐக்கிய முன்னணித் தலைவர்கள் முன்வைக்க வேண்டுமென அவர்களுக்கு நெருக்குவாரம் கொடுத்த புரட்சிகரத் தமிழ் இளைஞர்கள், தமது தீவிரவாதப் போராட்ட உணர்வை வெளிப்படுத்தும் வகையில் அரசியல் வன்முறையில் குதித்தார்கள். எழுபதுகளின் முற்பகுதியில் வெளிப்பாடு கண்ட தமிழ் இளைஞரின் அரசியல் வன்முறையை அரச ஒடுக்குமுறைப் பயங்கரவாதத்திற்கு எதிரான தீவிரவாதக் கிளர்ச்சியாகவும், தமிழரின் அரசியல் போராட்ட வடிவங்களில் ஒன்றாகவும் பார்க்க வேண்டும். தமிழ் இளம் சமூகத்தினரிடையே வளர்ச்சி கண்ட தீவிரவாதமும், பொறுமையிழந்த ஆவேசமும், கிளர்ச்சிப் போக்குமே தமிழர் விடுதலை முன்னணியின் அரசியல் சுதந்திரம் என்ற இலட்சியப் பயணத்தை துரிதப்படுத்தியது எனலாம்.
தமிழ் அரசியல் வானில் தலைதூக்கிய இளைஞர் வன்முறையின் வரலாற்று மூலத்தை பதிவுசெய்யும் போது போராட்ட உணர்வுடைய பெரும்பாலான தீவிரவாத இளைஞர்களை ஊக்குவித்து வளர்த்து, தமிழரின் ஆயுத எதிர்ப்பு இயக்கம் தோன்றுவதற்கான புறநிலையை உருவாக்கிக் கொடுத்த ஒரு அமைப்பைப் பாராட்டியாக வேண்டும். தமிழ் மாணவர் பேரவையே இந்த அமைப்பாகும். மிகவும் உறுதிப்பாடும் அர்ப்பணிப்புமுடைய புரட்சிவாத இளைஞர்களை அது உருவாக்கியது. தேச விடுதலை என்ற இலட்சியத்தில் இந்த இளைஞர்கள் கொண்டிருந்த உருக்கையொத்த உறுதிப்பாடு ஏனையோருக்கும் ஊக்கத்தைக் கொடுத்து முன்மாதிரியாக அமைந்தது. இந்தப் புரட்சிகரமான மரபிலே தோன்றி, ஒப்பற்ற விடுதலை வீரனாக திகழ்ந்து, இறுதியில் தனது உயிரையே தியாகம் செய்த இளைஞர் சிவகுமாரன் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவர். சிங்கள அரசின் அதிகாரத்திற்கு அடிபணிய மறுத்து, அரச அடக்குமுறையின் இயந்திரமாகச் செயற்பட்ட காவற்துறையை துணிச்சலோடு எதிர்த்துப் போராடிய இந்த இளைஞன் ஒரு வீரகாவியத்தைப் படைத்தான். புரட்சிகர வன்முறை மூலம் சிவகுமாரன் ஏற்றிவைத்த சுதந்திர தீபம் தமிழீழம் எங்கும் அணையாத தீயாகப் பரவியது.
குண்டு வீச்சு, துப்பாக்கிச் சூடு, வங்கிக் கொள்ளை, அரசுச் சொத்துடமை மீது தாக்குதல் போன்ற அரசியல் வன்முறைகள் தமிழ்ப் பகுதிகளில் பரவின. வடக்கே வருகை புரிந்த சிங்கள அமைச்சர் ஒருவரின் வாகனம் மீது குண்டு வீசப்பட்டது. குடியரசு அரசியல் யாப்புக்கு ஆதரவு வழங்கி, தமிழ் மக்களின் அபிலாசைக்கு விரோதமாகச் செயற்பட்ட தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரான ஆர்.தியாகராஜா மீது படுகொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அரசுக்கு பேராதரவு வழங்கிக் கொண்டிருந்த குமாரகுலசிங்கம் சுட்டுக் கொல்லப்பட்டார். புதிய அரசியல் யாப்பு நிறைவேற்றப்பட்ட அன்று, தமிழீழம் எங்கும் வன்செயல் சம்பவங்கள் வெடித்தன. பேருந்துகள் தீக்கிரையாக்கப்பட்டன. அரச கட்டடங்கள் மீது குண்டுகள் வீசப்பட்டன. சிங்கள தேசியக் கொடிகள் எரிக்கப்பட்டன.
அடக்குமுறைக்கு எதிரான கிளர்ச்சியாக எழுந்த வன்முறை அலைகளை நசுக்கிவிட முனைந்த அரசாங்கம் காவற்துறையினருக்கு மேலதிக அதிகாரங்களை வழங்கி பயங்கரவாத ஒடுக்குமுறையை கட்டவிழ்த்து விட்டது. சட்டம் வழங்கிய அதிகாரத்தாலும் அரசு வழங்கிய உற்சாகத்தாலும் வீறு கொண்ட காவல்துறையினர், அப்பாவிகளான பொதுமக்கள் மீதும், குறிப்பாக தமிழ் இளைஞர் மீதும் கொடூரமான வன்செயலைக் கட்டவிழ்த்து விட்டனர். சித்திரவதை, சிறை, படுகொலை ஆகிய பயங்கரங்களில் காவல்துறைக் கொடுங்கோன்மை தாண்டவமாடியது. யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டின் இறுதி நாளன்று (1974 ஜனவரி 10 அன்று) இரவு, காவல்துறையினர் நடத்திய மிருகத்தனமான தாக்குதலே மிகவும் அருவருப்பான ஆத்திரமூட்டும் செயல் எனக் குறிப்பிடலாம். இந்த மாபெரும் கலாச்சார நிகழ்வின்போது, தென்னிந்தியாவிலிருந்து வருகை புரிந்த பெருங்கல்விமான் பேராசிரியர் நைனா முகம்மது அவர்களுடைய பேருரையை ஏறத்தாழ ஒரு லட்சம் தமிழ் மக்கள் வாய் பிளந்து கேட்டிருக்கும் தருணத்தில், இந்தக் கொடுமை நிகழ்த்தப்பட்டது. நன்கு ஆயுதம் தரித்த நூற்றுக்கணக்கான சிங்கள காவல்துறையினர், நன்கு வகுக்கப்பட்ட தாக்குதல் திட்டத்தோடு, கண்ணீர்ப் புகைக் குண்டு, குண்டாந்தடி, துப்பாக்கிக் கூர்முனை ஆகியவை சகிதம், பார்வையாளர் மீது திடீர் தாக்குதல் நடத்தினார்கள். சிதறியோடிய மக்களிடையே ஏற்பட்ட குழப்பத்தில், எட்டு உயிர்கள் பலியாகின. பெண்கள், பிள்ளைகள் அடங்குவதாக, நூற்றுக்கணக்கானோர் கடும் காயமடைந்தனர். இந் நிகழ்வு தமிழ் இனத்தின் இதயத்தில் ஆழமான வடுவை ஏற்படுத்தியது. மக்களின் தேசியப் பெருமைக்குப் பெரும் தலைகுனிவை உண்டுபண்ணியது. காவல்துறையின் இழிமையான பண்பை இந்த நிகழ்ச்சி வெளிப்படுத்தியது. அரச ஒடுக்குமுறையின் பயங்கரவாதக் கருவியாகவே காவல்துறையினர் தமிழ் மக்களின் கண்ணில் படிந்தனர்.
சிங்கள இனவாத அரசின் இந்தப் பயங்கரவாத வன்முறைக்கு எதிராக தமிழ் இளைஞரின் வன்முறைச் செயற்பாடுகள் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தோற்றம் வளர்ச்சியுடன் ஒழுங்கமைவான ஆயுத எதிர்ப்பு இயக்கமாக பரிமாணம் பெற்றது.
விடுதலைப் புலிகளின் தோற்றமும் வளர்ச்சியும்
எழுபதுகளின் ஆரம்ப காலத்தில், சிங்கள இனவாத அடக்குமுறை அரசுக்கு எதிராகத் தமிழ்த் தீவிரவாத இளைஞர்கள் முன்னெடுத்த வன்முறையானது செம்மையாகத் திட்டமிடப்படாத, ஒன்றோடொன்று தொடர்பற்ற, ஒழுங்கமைவற்ற வன்செயல்களாக அங்குமிங்கும் வெடித்தன. இத்தகைய வன்முறைப் போராட்டத்தில் அதிருப்தியடைந்த இளைஞர்கள், புரட்சிகரமான அரசியல் கோட்பாட்டையும் செயற்பாட்டையும் ஆதாரமாகக் கொண்ட ஒரு விடுதலை அமைப்பைத் தேடி அலைந்தார்கள். போராட்ட உணர்வால் குமுறி நிற்கும் தீவிரவாதத் தமிழ் இளைஞர்களின் அரசியல் அபிலாசைகளுக்கு வெளிப்பாடு காணும் வகையில் உருப்படியான, புரட்சிகரமான திட்டம் எதுவும் தமிழர் ஐக்கிய முன்னணியிடமோ அன்றி இடதுசாரி இயக்கங்களிடமோ இருக்கவில்லை.
தமிழர் ஐக்கிய முன்னணியைப் பொறுத்தவரையிலே, அதன் அரசியல் கட்டமைப்பு, பழமைவாதக் கருத்தியலைத் தளமாகக் கொண்டது. எனவே, புரட்சிகர அரசியல் செயற்படுவதற்கான தளத்தை வழங்க அதனால் இயலவில்லை. தமிழ் தேசியத் தலைவர்கள் தமிழரின் இலட்சியத்திற்காக பாடுபடுவதாக உரத்துக் குரல் எழுப்பிக் கொண்டிருந்த போதிலும், ஒடுக்கப்படும் தமிழினம் விடுதலை பெறுவதற்காக உருப்படியான அரசியல் திட்டம் எதையும் வகுக்கத் தவறிவிட்டார்கள். இந்த உண்மையை தமிழ் மக்கள், குறிப்பாக போராட்ட உணர்வுடைய தீவிரவாத தமிழ் இளைஞர் ஐயந்திரிபறக் கண்டுகொண்டனர். முடிவடைந்த மூன்று தசாப்தங்களாக, தமிழ் அரசியல்வாதிகள் தாம் அறிந்த அனைத்து வெகுசனப் போராட்ட வடிவங்களை நடத்திப் பார்த்து சலித்துப் போனார்கள். சிங்கள அரச அதிகாரக் கட்டமைப்பிலிருந்தும் அவர்கள் ஒதுக்கப்பட்டிருந்தனர். அப்படியிருந்தும் அவர்கள் நாடாளுமன்ற நாற்காலிகளில் ஒட்டிக் கொண்டிருந்து அவ்வப்போது தமது குமைச்சலை வெளிப்படுத்திக் கொண்டிருந்தனர். பாலைவனத்தில் ஒலித்த சப்தமாக அவர்களது குரலுக்கு எவரும் செவிமடுக்கவில்லை. வெற்றுச் சுவருக்கு வேதாந்தம் ஓதும் நிலையில் அவர்கள் இருந்தார்கள்.
பாரம்பரிய இடதுசாரிக் கட்சிகளைப் பொறுத்தவரை அவர்கள் தங்கள் அரசியல் இலட்சியங்களையும் அணுகுமுறைகளையும் தலைகீழாக மாற்றிக் கொண்டார்கள். அவர்களது அரசியல் சிந்தனை ஆளும் வர்க்கத்தின் கருத்தியலால், அதாவது சிங்கள-பௌத்த பேரினவாதத்தால் மழுங்கடிக்கப்பட்டிருந்தது. கூட்டுச் சேர்ந்து விட்டுக் கொடுக்கும் சந்தர்ப்பவாத அரசியலைத் தழுவிக் கொண்ட இடதுசாரிகள், தமிழர்களுக்கு எதிராக அரச ஒடுக்குமுறை தீவிரமடைந்தபோது அக் கொடுமையான மெய்நிலையை கண்டும் காணாதது போல பார்த்துக் கொண்டிருந்தார்கள். தமிழ்த் தேசியப் போராட்டத்தினது புரட்சிகரமான வரலாற்றுப் புறநிலையை அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. தமிழ்த் தீவிரவாத இளைஞர்களது அரசியல் அபிலாசைகளின் தார்ப்பரியத்தையும் அவர்களால் உணர்ந்து கொள்ள முடியவில்லை.
தமிழ் மாணவர் பேரவை, 1970இல் உருவாகியது. புரட்சிகர அரசியலை அது பரிந்துரைத்தது. மாணவத் தலைவர்கள் போராட்ட வழியைக் கடைப்பிடிக்க வேண்டும் என விதந்துரைத்தது. அரசின், ‘தரப்படுத்தல்’ என்ற பிரித்து ஒதுக்கும் கல்விக் கொள்கைக்கு எதிராக, மாணவ எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை பிரமாண்டமான அளவில் ஏற்பாடு செய்தது. கருத்தரங்குகள், மாநாடுகளை ஒழுங்கு செய்து, எதிர்ப்புக் குரல்களுக்கான மேடைகளை வழங்கியது. அரச ஒடுக்குமுறைக்கு எதிராக, நடைமுறைச் சாத்தியமானதும் புரட்சிகரமானதுமான ஆயுத எதிர்ப்புப் போராட்ட வடிவத்தையே மாணவர் பேரவைத் தலைவர்கள் மறைமுகமாகத் தூண்டினார்கள். தாயக விடுதலை உணர்வால் உந்தப்பட்ட இளைஞர்கள் மாணவர் பேரவையின் வழிகாட்டலையும் தலைமையையும் நாடினார்கள்.
மாணவ பேரவையின் தலைவர்கள் வெறும் வார்த்தை வழிகாட்டலுக்கே லாயக்கானவர்களாக இருந்தார்கள். காரிய சாத்தியமான செயற்திட்டம் ஒன்றை செயலளவில் நடைமுறைப் படுத்துவதற்கான தலைமையையோ வழிகாட்டலையோ வழங்க அவர்கள் தயாராக இல்லை. அடக்குமுறை அரசுக்கு எதிராக ஆயுதப் போராட்டம் ஒன்றை ஒழுங்குபடுத்தி வழி நடத்துவதற்கு வேண்டிய அறிவோ துணிச்சலோ அவர்களிடம் இருக்கவில்லை. மாணவர் பேரவைத் தலைமைப் பீடத்தின் கையாலாகாத் தன்மையால் ஏமாற்றமடைந்த தீவிரவாத இளைஞர்கள் வன்முறைப் போராட்டங்களைத் தனித்தும் குழுக்களாகவும் தாமே தொடுக்கத் தீர்மானம் பூண்டார்கள். இதன் விளைவாக, அங்கிங்கென, தாறுமாறான வன்தாக்குதல்கள் இடம்பெற்றன. அரசியல் படுகொலைகள், குண்டு வீச்சு, துப்பாக்கிச் சூடு, அரச சொத்துடமைகளுக்கு தீ வைத்தல், அரச வங்கிக் கொள்ளை போன்ற சம்பவங்கள் நிகழ்ந்தன. அரச ஆயுதப் படையினர், குறிப்பாக காவல்துறையினர் பதிலடியாக தமிழ் இளைஞர்கள் மீது எல்லையற்ற வன்முறையைப் பிரயோகித்தார்கள். பெரும் அளவில் கைது, வழக்கின்றிச் சிறை, சித்திரவதை, கொலை ஆகியவை நாள் தோறும் நடந்தேறின. தீவிரவாத இளைஞர்களுக்கு உற்சாகமும் தார்மீக அதரவும் வழங்கியவர்கள் தமிழ் மாணவர் பேரவையினர் என்பது தெரிந்ததும், பேரவைப் பணிமனை மீது காவல்துறையினர் சோதனை நடத்தி, அதன் தலைவர் சத்தியசீலன் உட்பட ஏனைய தலைவர்களையும் கைது செய்தனர். தாங்கவொணாச் சித்திரவதைக்கு உள்ளான பேரவைத் தலைவர்கள், அரசியல் வன்முறையில் ஈடுபட்டிருக்கும் இளைஞர்களில் முதன்மையானவர்களின் பெயர்களை ஒப்புவித்திருக்கிறார்கள். காவல்துறையினரின் வேட்டைக்கு தாம் ஆளாகலாம் என்பது கண்டு, முதல்நிலைத் தீவிரவாதிகளில் முக்கியமானவர்கள் தலைமறைவானார்கள்.
அன்று தலைமறைவாகிய இளம் தீவிரவாதப் போராளிகளில் ஒரு அற்புதமான இளைஞரும் இருந்தார். இவர், தமிழ் மக்களின் விடுதலைக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்திருந்த ஒரு இளம் மாவீரன். காவல் துறையினரின் தீவிர வேட்டைக்கு இலக்காகியிருந்த அந்த இளம் புரட்சிவாதிக்கு அப்பொழுது வயது பதினாறு. அன்றைய காலத்து விடுதலைப் போராளிகளின் வரிசையில் இவரே வயதில் மிக இளையவராவார். இவரே வேலுப்பிள்ளை பிரபாகரன். தமிழரின் தேச சுதந்திர இயக்கமாக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைக் கட்டியெழுப்பி, ஒப்பற்ற ஆயுதப் போரியல் பாதைக்கு அத்திவாரமிட்ட வரலாற்று நாயகன்.
யாழ்ப்பாண தீபகற்பத்தின் வடகடலோரப் பட்டினமாகிய வல்வெட்டித்துறையில் 1954 நவம்பர் 26ஆம் நாள் பிரபாகரன் பிறந்தார். வரலாற்றின்படி பார்த்தால், தீரமிகு கப்பலோட்டிகளும், துணிச்சல் மிகுந்த கடத்தல் வேட்டைக்காரரும் வாழ்ந்த இடமாக வல்வெட்டித்துறை கருதப்படுகிறது. சிங்கள இனவாத அடக்குமுறை அரசுக்கு எதிராக தீவிரவாத எதிர்ப்புணர்வை காட்டுவதிலும் வல்வெட்டித்துறை புகழ்பெற்றது. தாயகப் பற்றும், தேசிய விடுதலை உணர்வும் மிக்க நிகரற்ற சுதந்திரப் போராளிகளை பெற்றெடுத்த புனித மண்ணாக இது விளங்குகிறது.
திருவேங்கடம் வேலுப்பிள்ளை, வல்லிபுரம் பார்வதி தம்பதியாரின் கடைசிப் பிள்ளை பிரபாகரன். இவருக்கு இரண்டு சகோதரிகள். ஒரு சகோதரன். அப்பா ஓர் அரசாங்க ஊழியர். மாவட்ட காணி அதிகாரி. அப்பழுக்கற்ற நடத்தை. இனிமையான சுபாவம். மென்மையான போக்கு. அவதிப்பட்டோருக்கு ஓடிச் சென்று உதவும் பாங்கு. ஊரிலும் உலகிலும் பிரபாகரனின் அப்பாவுக்கு நல்ல மதிப்பு.
இளம்பிராயத்தில் மிகுந்த நுண்ணறிவும் விழிப்புணர்வும் கொண்டிருந்த பிரபாகரன், தனது மக்கள் வாழ்ந்த அடக்குமுறையான சூழ்நிலையையும் அவர்கள் அனுபவித்து வந்த ஆழமான துன்ப துயரங்களையும் உணர்ந்து கொண்டார். இன ஒடுக்குமுறையின் கோரமான தன்மையையும் தமிழ் மக்கள் எதிர்கொண்ட மிருகத்தனமான அட்டூழியங்களையும் சிறுபிராயத்திலிருந்தே, பல வழிகளில் – தனது குடும்பத்தினர், நண்பர்கள், பாடசாலை ஆசிரியர்கள், கிராமத்து முதியவர்கள் – ஆகியோரிடமிருந்து அறிந்து கொண்டார். அப்பாவித் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட வதைகளையும் கொடுமைகளையும் கேட்டறிந்தபோது இளம் பிரபாகரனின் இதயத்தில் வெஞ்சினம் பொங்கியது. ஒடுக்கப்பட்ட தனது மக்கள் வாய்மூடி மௌனிகளாக தொடர்ந்தும் இக் கொடுமைகளை அனுபவிக்காது, அடக்குமுறை ஆட்சியாளருக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்து போராடவேண்டுமென்று பிரபாகரன் எண்ணினார். மனிதர்கள் தமது விருப்புகள், அபிலாசைகளுக்கு அமைவாக சுயாதீனமாக வாழும் உரிமைதான் சுதந்திரமென அவர் கருதினார். வெளி அழுத்தங்களிலிருந்தும் அடிமைத்தனத்திலிருந்தும் விடுதலை பெறும்பொழுதுதான் உண்மையான சுதந்திரத்தை மனிதர்கள் சுகிக்க முடியும் என்றும் பிரபாகரன் நம்பினார். சுதந்திரம் என்ற இந்த உன்னதமான வாழ்வியல் விழுமியத்தை அடைவதற்கு, சில சூழ்நிலைகளில் பெரும் தியாகங்கள் புரிந்து, அர்ப்பணிப்புகள் செய்து போராடுவது அவசியம் என்றும் அவர் சிந்தித்தார். இளம் புரட்சிவாதியான பிரபாகரனுக்கு சுதந்திரம் என்பது இதய பாசமாயிற்று. சுதந்திரத்திற்காகப் போராடுவது என்பது தணியாத தாகமாயிற்று. பள்ளிப் படிப்பு பிரபாகரனை வெகுவாகக் கவரவில்லை. மானிட சுதந்திரம் பற்றியும், சுந்திரத்தை அடைய மனிதர்கள் தொடுத்த போராட்ட வரலாறு பற்றியும் நிறையக் கற்றறியவேண்டும் என்பதே இளம் பிரபாகரனின் வேட்கையாக இருந்தது.
இந்திய சுதந்திரப் போராட்டத்தின் கொந்தளிப்பான வரலாறு பிரபாகரனை வெகுவாகக் கவர்ந்தது. அக்காலத் தமிழ் அரசியல்வாதிகள் மகாத்மா காந்தியை வழிபட்டனர். காந்திஜியின் அகிம்சைத் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட சாத்வீகப் போராட்ட முறையைத் தழுவினர். பிரித்தானிய குடியேற்ற ஆட்சிக்கு எதிராக வன்முறைப் போர்தொடுத்த சுபாஷ் சந்திரபோஸ், பகத் சிங் ஆகிய கிளர்ச்சியாளரே பிரபாகரனை வெகுவாகக் கவர்ந்தனர். ஆங்கில ஆட்சியாளருக்கு எதிராகத் தலைமறைவுத் தாக்குதல்களை நடத்திவந்த சீக்கிய இளம் புரட்சிவாதியான பகத் சிங்கை விட சுபாஸின் விடுதலைப் போராட்ட வரலாறே பிரபாகரனை வெகுவாக ஈர்த்தது. பிரித்தானியருக்கு எதிராக இந்திய தேசிய விடுதலையை வென்றெடுக்க ஆயுதப் போராட்டமே உகந்த வழியெனக் கருதி, ஒரு தேசிய விடுதலை இராணுவத்தைக் கட்டியெழுப்பிய சுபாஸின் துணிச்சலை பெரிதும் மதித்த இளம் பிரபாகரன், அந்த இந்திய சுதந்திர வீரனின் வாழ்க்கை பற்றியும் சிந்தனை பற்றியும் நிறைய வாசித்தார். சுபாஸின் பிரசித்தி பெற்ற உரைகள் இவருக்கு ஊக்கத்தையும் புத்துணர்ச்சியையும் அளித்தன. மகாத்மா காந்தியின் சிந்தனைகளையும் பிரபாகரன் படிக்கத் தவறவில்லை. காந்திஜியின் அகிம்சைத் தத்துவத்தின் அடிநாதமாக விளங்கிய ஆன்மீக அறநெறிப் பண்புகளுக்கு அவர் மதிப்பளித்தபோதும், அவை தமிழரின் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு பொருத்தமாக அமையுமா என்பதில் பிரபாகரனுக்கு ஆழமான ஐயப்பாடு இருந்தது. சிங்கள இனவாத அரசின் ஈவிரக்கமற்ற அடக்குமுறைப் போக்கு அகிம்சைவாத அறநெறிப் பண்புகளுக்கு மதிப்பளிக்கப் போவதில்லை என்பதை தமிழரின் அரசியல் வரலாற்றிலிருந்து பிரபாகரன் ஏற்கனவே அறிந்து கொண்டார். இந்தியக் காவியமான மகாபாரதம் இளம் புரட்சிவாதியான பிரபாகரனை மிகவும் கவர்ந்தது. மகாபாரதத்தை தீய சக்திகளுக்கு எதிரான ஒரு தர்ம யுத்தமாகக் கண்ட பிரபாகரன், ஈற்றில் தர்மமும் சத்தியமுமே வெற்றிகொள்ளும் என்ற மெய்யுண்மையை இக்காவியம் வாயிலாகத் தெளிந்து கொண்டார். வரலாறு படைத்த தமிழ்ப் பேரரசுகள் பற்றியும், தமிழ்ச் சக்கரவர்த்திகளின் வீரம்செறிந்த வரலாறுகள், படையெடுப்புகள், போர்கள் பற்றியும் பிரபாகரன் நிறைய வாசித்தார். தமிழரின் பெருமை மிக்க வரலாறுகள் அவருக்குப் புத்துணர்வை அளித்தன.
அந்நிய குடியேற்ற ஆட்சிக்கு எதிராக துணிச்சலுடன் ஆயுத வன்முறைப் போரில் குதித்த இந்திய விடுதலை வீரர்களது வாழ்வும் புரட்சிகர சிந்தனையும் இளம் பிரபாகரனை ஆழமாகப் பாதித்தது. பண்டைத் தமிழ் இனத்தின் பழம்பெரும் நாகரீகமும், வீரம்செறிந்த வரலாறும் அவருக்குப் பெருமிதம் அளித்தன. இளம்வயதிலேயே இவற்றையெல்லாம் படித்தறிந்த பிரபாகரன், ஒடுக்கப்பட்டு வாழும் தனது மக்களின் விடுதலைக்காக தனது வாழ்வை முழுமையாக அர்ப்பணித்துப் போராட உறுதிபூண்டார். கொடூரமான ஒரு அடக்குமுறை ஆட்சிக்கு எதிராகப் போர்தொடுக்கும் ஒரு புரட்சிவாதி எதிர்கொள்ளவேண்டிய பேராபத்துகள் பற்றி பிரபாகரன் உணர்ந்து கொள்ளத் தவறவில்லை. ஆயினும் தேச விடுதலை என்ற பொதுவான தர்மத்திற்காகச் சாவைத் தழுவவும் அவர் தயாராக இருந்தார்.
பதினாறு வயதிலேயே அரசினால் தேடப்பட்டு, தப்பி ஓடித் திரியும் தலைமறைவு வாழ்வை வரித்துக் கொள்ளவேண்டிய அவல நிலை பிரபாகரனுக்கு ஏற்பட்டது. அதுவும், இரகசிய காவல்துறையினரின் கண்துஞ்சாக் கண்காணிப்பு இவரது சொந்தக் கிராமம் மீது திருப்பப்பட்டு, நள்ளிரவுகளில் இவரது வீடு சுற்றிவளைப்புகளுக்கு இலக்காகியதைத் தொடர்ந்து, தலைமறைவு வாழ்வும் நெருக்கடியானதாக மாறியது. கைதுசெய்யப்படுவதைத் தடுக்க குடும்பத்திலிருந்து பிரிந்து தனித்து வாழவேண்டிய நிர்ப்பந்தமும் ஏற்பட்டது. தங்குவதற்கு வதிவிடமின்றி, நாளுக்கு நாள் அங்குமிங்குமாக அலைந்து திரிவதும், பகலில் பதுங்கி ஒளிந்திருந்து இரவில் மட்டும் நடமாடுவதுமான ஒரு நாடோடி வாழ்க்கை. நிம்மதியாகத் தூங்குவதற்கு வாய்ப்புமில்லை வழியுமில்லை. இந்துக் கோவிலுள்ள மடங்கள், தேர்கள், கூரைகள், அனாதரவாக விடப்பட்ட பாழடைந்த வீடுகள், காய்கறித் தோட்டங்கள் – இப்படியாக அந்தந்த வேளைக்கு கிட்டும் இடங்களில், அதுவும் சில மணிநேரம் மட்டும் தூங்குவதற்கு வாய்ப்புக் கிடைக்கும் என்று என்னிடம் ஒருதடவை தனது நாடோடி வாழ்க்கைபற்றி விபரிக்கும்போது பிரபாகரன் சொன்னார்.
பசிவதை அவரை சதா உறுத்தியது. சில சமயங்களில், முழு நாளாகப் பட்டினி கிடந்து துன்புற வேண்டியிருந்தது. பசி தாங்க முடியாமல், சில இரவுகளில், காய்கறித் தோட்டங்களுக்குள் நுழைந்து மரவள்ளிச் செடியைப் பிடுங்கி, கிழங்குகளை தோண்டியெடுத்து, பச்சையாகப் பச்சை மிளகாயுடன் சேர்த்து உண்ணும்போது அமிர்தமாக இருக்குமென என்னிடம் சொன்னார். இளம் போராளியாக விடுதலைப் பாதையில் காலடி வைத்த காலத்திலிருந்தே பசியின் உபாதைக்குப் பழகிக் கொண்டார் பிரபாகரன். தணியாத இலட்சியப் பசி பிரபாகரனின் வயிற்றுப் பசிக்கு தீனி போட்டது. இளம்பிராயத்தில் அனுபவித்த இடர்கள், துன்பங்கள், அவர் எதிர்கொண்ட சோதனைகள், சவால்கள், ஆபத்துக்கள் எல்லாமே அவரது இலட்சிய உறுதிக்கு உரமூட்டின.
தனி மனிதனாக நின்று, தலைமறைவு வாழ்க்கையை வரித்துக் கொண்டு பிரமாண்டமான அரச அடக்குமுறை யந்திரத்தை எதிர்த்து நின்ற இளம் புரட்சிவாதியான பிரபாகரனுக்கு, செம்மையாகத் திட்டமிடப்படாது தனித் தனிச் சம்பவங்களாக அங்கொன்றும் இங்கொன்றுமாக நிகழ்ந்து வந்த அரசியல் வன்முறைச் செயல்கள் அர்த்தமற்றவையாகப் புலப்பட்டது. இவை, தமிழரின் அரசியல் போராட்டத்தை முன்நகர்த்தப் போவதில்லை என்பதையும் உணர்ந்து கொண்டார். இவரோடு சமகாலத்தில் அரசியலில் ஈடுபட்டவர்கள் ஒருவர்பின் ஒருவராக காவல்துறையினரால் கைதாகி சிறையில் வாடிக் கொண்டிருந்தார்கள். தனி நபர்களால் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட வன்முறை நடவடிக்கைகளும் செம்மையாக ஒழுங்கமைக்கப்படாமல் தேர்ச்சியின்றிக் கையாளப்பட்டதால் அவை பிசுபிசுத்துப் போனதையும் இவர் கண்டறிந்து கொண்டார். தீவிரவாத இளைஞரின் அரசியல் வன்முறைப் போராட்ட நடவடிக்கைகளை ஆழமாகப் பார்த்தபோது, அவை ஏற்படுத்திய எதிர்மறையான அரசியல் விளைவுகளையும், அதனால் தீவிரப்படுத்தப்பட்ட அரச ஒடுக்குமுறையின் பாதிப்புகளையும் அவர் உணர்ந்து கொண்டார். இவற்றிலிருந்து பிரபாகரனுக்கு ஒரு உண்மை தெட்டத் தெளிவாகப் புரிந்தது. ஒழுங்கமைவான ஆயுதப் போராட்ட வழிமுறை வாயிலாக, தேசிய விடுதலையை முன்னெடுத்துச் செல்வதற்கு ஒரு புரட்சிகர அரசியல் அமைப்பு அவசியமானதும் வரலாற்றுத் தேவையானதும் என்பதை அவர் புரிந்து கொண்டார். ஆயுதப் போராட்டத்திற்கு அத்தியாவசியமான ஒரு தலைமை, வழிகாட்டல், ஒழுங்கமைவான கட்டமைப்பு ஆகியவற்றை மாணவர் பேரவைத் தலைவர்கள் வழங்குவார்கள் என்று பிரபாகரன் நம்பியிருந்தார். ஆனால் இப் புரட்சிகரப் பணியை மேற்கொள்வதில் இந்தத் தலைவர்கள் ஈடுபாடு காட்டாததால் இவருடைய எதிர்பார்ப்பு தவிடுபொடியாயிற்று. பேரவைத் தலைவர்கள் கைதாகிச் சிறைப்படுத்தப்பட, பேரவையும் செயலிழந்து செத்துப் போனது. இதனால் உருவாகிய அரசியல் வெற்றிடத்தையும் அதேவேளை தீவிரமாகிச் செல்லும் அரச ஒடுக்குமுறைச் சூழலையும் எதிர்கொள்வதற்கு, புரட்சிகர அமைப்பு ஒன்றை நிறுவ வேண்டிய அவசியத் தேவை நிலவியது. இங்கே ஒரு முக்கிய தீர்மானத்துக்கு வரவேண்டிய நிர்ப்பந்தம் பிரபாகரனுக்கு ஏற்பட்டது. தனது தலைமையின் கீழ் ஆயுதம் தரித்த அமைப்பு ஒன்றை நிறுவுவதென, இறுதியில் அவர் தீர்மானித்தார். இத்தகைய வரலாற்றுச் சூழலிலேயே 1972இல் தமிழ்ப் புலிகள் இயக்கம் வரலாற்று ரீதியாக பிறப்பு எடுத்தது. இதன் ஆரம்பத்தின்போது புதிய தமிழ்ப் புலிகள் என்று அவ்வமைப்பு தன்னை அழைத்துக் கொண்டது. பின்னர், 1976 மே 5 அன்று, அதன் உறுப்பினர்கள் தம் அமைப்பின் பெயரை தமிழீழ விடுதலைப் புலிகள் என்று மீளப் பெயர் சூட்டிக்கொண்டார்கள்.
ஆரம்பத்தில் புலிகள் இயக்கம், ஒரு நகரப்புற கெரில்லா அலகாக தனது கட்டமைப்பை நிறுவிக் கொண்டது. மிக உயர்ந்த அர்ப்பணிப்பும், இலட்சிய உறுதிப்பாடும் கொண்ட இளம் போராளிகளை பிரபாகரன் தனது அணியில் அரவணைத்துக் கொண்டார். தலைமைக்கு விசுவாசமானவர்களாகவும், தமிழ் மக்களின் விடுதலைக்காக தமது உயிரையே ஈகம் செய்யத் தயாரானவர்களாகவும் புலி உறுப்பினர்கள் விளங்கினர். தேச விடுதலை என்ற அரசியல் இலட்சியத்திற்கு விசுவாசமாக சத்தியப் பிரமாணம் செய்து, மிகக் கண்டிப்பான ஒழுக்கக் கட்டுப்பாட்டுக் கோவையைக் கடைப்பிடித்த விடுதலைப் புலிகள் ஆரம்ப காலத்தில் ஒரு தலைமறைவு அமைப்பாகவே விளங்கினர்.
தொடக்கத்தில், கெரில்லாப் போரியல் முறையிலான ஆயுதப் போராட்ட வடிவத்தையே பிரபாகரன் தேர்ந்தெடுத்தார். தமிழீழ மண்ணின் களநிலை யதார்த்த சூழலுக்கு கெரில்லாப் போராட்ட முறையே சாலச் சிறந்த ஆயுதப் போர்வடிவம் என்பது அவரது கணிப்பு. ஆபிரிக்காவிலும் லத்தீன் அமெரிக்காவிலும் குடியேற்ற வல்லரசுகளின் அடக்குமுறைக்கு எதிராக நிகழ்த்தப்பெற்ற ஆயுதப் போராட்ட வரலாற்று அனுபவங்களிலிருந்து கற்றுத்தேறியவற்றை ஆதாரமாகக் கொண்டே கெரில்லாப் போரியல் வடிவத்தை தேர்ந்தெடுத்தார் பிரபாகரன். ஒரு நவீன அரசின் ஒழுங்கமைவான இராணுவ பலத்தை, பலம்குறைந்த ஒரு சிறிய ஒடுக்கப்படும் இனம் எதிர்கொண்டு போராடுவதாயின் கெரில்லா வடிவப் போரியல் முறையே மிகப் பொருத்தமானது என அவர் முடிவு செய்தார்.
தென்னிலங்கையில் ஜே.வி.பி இயக்கத்தின் ஆயுதக் கிளர்ச்சி சந்தித்த படுதோல்வியானது புரட்சிக் கலை சம்பந்தமாக ஒப்பற்ற பாடங்களை பிரபாகரனுக்குப் புகட்டியிருந்தது. உலகத்தின் வேறு பகுதிகளில் வெற்றியீட்டிய விடுதலைப் போராட்டங்களையும் அவற்றின் போரனுபவத்திலிருந்து வகுக்கப்பட்ட போரியல் கோட்பாடுகளையும் உத்திகளையும் கண்மூடித்தனமாக இலங்கையின் புறநிலைகளுக்கு நடைமுறைப்படுத்த முடியாதென்பதை அவர் நன்கு அறிந்திருந்தார். எமது சூழ்நிலையில் நிலவும் உள்ளூர் கள யதார்த்தம் மற்றும் அரசியல் வரலாற்றுப் புறநிலைகள் கவனத்திற்கு கொள்ளப்பட வேண்டும். ஆயுதங்களைக் கையாள்வதற்கான பயிற்சியும் மற்றும் போரியல் முறைகளும் தெரிந்திருப்பதன் அவசியத்தையும் அவர் உணர்ந்திருந்தார். எழுபதுகளின் ஆரம்பத்தில் புலிகள் இயக்கம் உருவாக்கப்பட்டபோதும் தமது போராளிகளுக்கு தகுந்த பயிற்சி அளிப்பதிலும் தமிழ்ப் பகுதிகளில் தலைமறைவு அலகுகளை அமைப்பதிலும் பிரபாகரன் நீண்ட காலத்தை ஒதுக்கினார். வெளிநாடுகளில் ஆயுதப் பயிற்சி பெறுவதை அவர் விரும்பவில்லை. லெபனானில் பாலஸ்தீன விடுதலை அமைப்பின் ஆதரவின் கீழ் ஆயுதப் பயிற்சிக்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டபோது அதனைப் பிரபாகரன் நிராகரித்து விட்டார். உள்ளூர் களத்திலேயே போராட்டத்திற்கு முகம்கொடுக்க வேண்டும் என்பதால் அக் களத்திலேயே பயிற்சியை அளிப்பது சாலச்சிறந்தது என அவர் கருதினார். பொருத்தமான உத்திகளையும் நன்கு சிந்தித்து, செம்மையாகத் திட்டமிடப்பட்ட தந்திரோபாயப் போர் நடவடிக்கைகளையே பிரபாகரன் வலியுறுத்துவார். உணர்ச்சிவசப்பட்டு, முரட்டுத் துணிச்சலோடு சாதனை புரிந்து காட்ட வேண்டுமென அவசரப்பட்டுச் செயற்படுவதை அவர் அறவே விரும்பவில்லை. புலிகள் இயக்கம் தோன்றிய ஆரம்ப காலத்திலிருந்தே போராளிகளதும் அமைப்பினதும் பாதுகாப்பில் அவர் மிகவும் அக்கறை கொண்டிருந்தார். அரச காவல்துறையினர், உளவாளிகள், காட்டிக் கொடுக்கும் துரோகிகள் ஆகியோருக்கு எதிராக ஆரம்பத்திலிருந்தே ஆயுத வன்முறைத் தாக்குதல்களை நடத்தியபோதும் இயக்கத்தின் இருப்பை பல வருடங்களாக இரகசியமாகவே வைத்திருந்தார் பிரபாகரன். தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்ட சில ஆயுத வன்முறை நடவடிக்கைகளுக்கு 1978 ஏப்ரல் 25 அன்றே விடுதலைப் புலிகள் இயக்கம் உரிமை கோரியது.
விடுதலைப் புலிகளது கெரில்லா முறையிலான ஆயுதப் போராட்டத்தின் தோற்றமானது, தமிழரது தேசியப் போராட்டத்தில் ஒரு புதிய வரலாற்றுத் திருப்பத்தை ஏற்படுத்தியது. மக்கள் ஆதரவுபெற்ற ஆயுதப் போராட்டமாக அதன் பரிமாணம் விரிவடைந்தது. அரசியல் இராணுவக் கட்டமைப்புகளைக் கொண்ட விடுதலை இயக்கமாக விரைவில் புலிகள் இயக்கம் உருவகம் பெற்றது. சாத்வீக அரசியல் போராட்டங்களில் நம்பிக்கை தளர்ந்து, ஆயுதப் போராட்டம் வாயிலாக அரச அடக்குமுறையை எதிர்க்க வேண்டுமென விரும்பிய தமிழ் இளம் புரட்சிவாதிகளின் அபிலாசைகளுக்கு புத்துயிரூட்டும் வகையில் புலிகள் இயக்கத்தின் கட்டமைப்பும் செயற்பாடும் அமையப் பெற்றன. மிகவும் நுட்பமான முறையில் போர்த் திட்டங்களையும் தந்திரோபாயங்களையும் வகுத்து, எதிரியை வியக்கச் செய்யும் வகையில் அவற்றை நடைமுறைப்படுத்திய பிரபாகரன், விரைவிலே தமிழரின் ஆயுதம் தரித்த விடுதலைப் போரின் நம்பிக்கை நட்சத்திரமாக மாறினார். அவர் கட்டியெழுப்பிய விடுதலைப் புலிகள் அமைப்பும் தமிழரின் தேச சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் புரட்சி இயக்கமாக முகிழ்ந்தது.
தனியரசு நிறுவ தமிழ் மக்கள் கொடுத்த ஆணை
விடுதலைப் புலிகள் இயக்கம் தமது அரசியல் இராணுவக் கட்டமைப்பை நிறுவி, அவற்றை வலுப்படுத்தி விரிவாக்கம் செய்வதில் ஒருபுறம் ஈடுபட்டிருக்க மறுபுறம் தமிழ் அரசியல் அரங்கில் முன்னெப்பொழுதும் நிகழாத மாபெரும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகள் இடம்பெற்றன.
தமிழர்களுக்கு எதிராக ஒடுக்குமுறை தாங்கொணா அளவிற்கு உக்கிரமடைந்த காலகட்டம் அது. தமிழ் சிங்கள தேசங்கள் மத்தியில் முரண்பாடு முற்றி, இன இணக்கப்பாடும் சகவாழ்வும் சாத்தியமற்றது என்ற நிலைமை உருவாகியிருந்தது. இக் காலகட்டத்தில்தான் தமிழீழ விடுதலைப் புலிகள் வலுமிக்க இயக்கமாக உருவாகி, உருப்படியான செயற் திட்டத்தை முன்வைக்குமாறு தமிழ் அரசியல் கட்சிகள் மீது அழுத்தம் செலுத்தியது. இப்படியான வரலாற்றுச் சூழ்நிலையில், 1976 மே மாதம் தமிழர் ஐக்கிய முன்னணி யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் தேசிய மாநாடு ஒன்றைக் கூட்டியது. அம் மாநாட்டில் தமிழினத்திற்கு தேசிய விடுதலை கோரும் வரலாற்றுத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த முக்கிய கூட்ட அமர்விற்கு, எஸ்.ஜே.வி செல்வநாயகம் தலைமை தாங்கினார். தமிழர் ஐக்கிய முன்னணி என்ற பெயரை மாற்றி தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி என்று அழைக்கும் தீர்மானமும் இம்மாநாட்டில் நிறைவேறியது. தமிழீழத் தனியரசை நிறுவும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானமும் இங்கு நிறைவேறியது. அந்தத் தீர்மானம் வருமாறு:
“தமிழர் விடுதலை முன்னணியின் முதலாவது தேசிய மாநாடு, வட்டுக்கோட்டை தொகுதியிலுள்ள பண்ணாகத்தில் 1976 மே 14ஆம் நாள் நடைபெற்ற போது கீழ்கண்ட பிரகடனம் செய்யப்பட்டது. இலங்கைத் தமிழ் மக்கள், ஐரோப்பிய ஆக்கிரமிப்பாளர்களின் ஆயுத பலத்தால் வெற்றி கொள்ளப்படும் வரை, சிறப்பு வாய்ந்த பழம்பெரும் மொழி, மதங்கள், தனித்துவமான பண்பாடு, பாரம்பரியம் ஆகியனவற்றைக் கொண்டிருந்ததோடு, பல நூற்றாண்டுகளாக ஒரு தனித்துவமான பிரதேசத்தில் தனியரசை அமைத்து சுதந்திரமாக வாழ்ந்த வரலாறும் உடையவர்கள். இவற்றிற்கு மேலாக, தங்களது சொந்த மண்ணில் தனி இனமாக தங்களைத் தாங்களே ஆட்சிபுரிந்து வாழவேண்டும் என்ற உறுதிப்பாடும் உடையவர்கள். இத்தகைய பண்புகளைப் பெற்றவர்கள் என்பதால் தமிழர்கள் சிங்களவர்களிடமிருந்து வேறுபட்ட தனித்துவமான தேச அமைப்பைக் கொண்டவர்கள். இலங்கையின் 1972ஆம் ஆண்டின் குடியரசுக்கான அரசியல் யாப்பு, புதிய குடியேற்ற எஜமான்களாகிய சிங்களவர்களின் ஆட்சியின் கீழ் தமிழர்களை ஓர் அடிமை இனமாக மாற்றியுள்ளது. தவறான வழியில் பெற்றெடுத்த ஆட்சியதிகாரத்தைக் கொண்டு சிங்களவர்கள் தமிழ் மக்களின் நிலவுரிமை, மொழியுரிமை, குடியுரிமை, பொருளாதார வாழ்வுரிமை, கல்வியுரிமை, வேலைவாய்ப்புரிமை ஆகியனவற்றை மறுத்து, அவர்களது தேசியக் கட்டமைப்பின் அடிப்படைகளையே அழித்துள்ளனர். ஆகவே, தமிழீழத் தனியரசு நிறுவுவது குறித்து வடகிழக்கிற்கு வெளியே வாழும் பெருந்தோட்டத் தொழிற் சங்கமாகிய இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தெரிவித்த தயக்கத்தை கருத்தில் எடுக்கும் அதேவேளை, தமிழர் தேசத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொருட்டு, ஒவ்வொரு தேசத்திற்கும் உரித்தான சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில், சுதந்திரமான இறையாண்மையுடைய, மத சார்பற்ற, சோஷலிச தமிழீழ அரசு மீளப்பட்டு மீள்நிர்மாணம் செய்யப்படவேண்டுமென இம்மாநாடு தீர்மானிக்கிறது.”
தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியினர் முன்வைத்த தனியரசுக் கோரிக்கையின் பரீட்சார்த்த களமாக 1977 ஜுலை பொதுத் தேர்தல் அமைந்தது. அரசியல் சுதந்திரம் கோரி தேசியப் போராட்டம் ஒன்றைத் தொடுப்பதற்கு தெளிவான மனு ஒன்றைத் தமிழ் மக்களிடம் கேட்டு கூட்டணியினர் தேர்தலில் போட்டியிட்டனர். அதற்கேற்ப அவர்களது தேர்தல் விஞ்ஞாபனமும் பின்வருமாறு அமைந்தது.
“தமிழ் இனம் சுயநிர்ணய அடிப்படையில் தனது தாயக பூமியில் இறையாண்மையை நிறுவத் தீர்மானம் எடுத்தாக வேண்டும். சிங்கள அரசுக்கும் உலகத்துக்கும் இந்தத் தீர்மானத்தைப் பிரகடனம் செய்வதற்கு ஒரே வழி, தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணிக்கு வாக்களிப்பதேயாகும். இவ் வாக்குகளால் தேர்ந்தெடுக்கப்படும் தமிழ் பேசும் பிரதிநிதிகள், இலங்கைத் தேசிய அரச மன்ற உறுப்பினர்களாக இயங்கும் அதேவேளை, தமிழீழத் தேசிய மன்றமாகவும் தம்மை வரித்துக் கொண்டு தமிழீழ அரசுக்கான அரசியல் யாப்பு ஒன்றை வரைந்து, அந்த யாப்பை அமைதி வழிகளாலோ, நேரடி நடவடிக்கையாலோ, போராட்டத்தாலோ நடைமுறைக்குக் கொண்டுவந்து தமிழீழத்தின் சுதந்திரத்தை நிறுவவேண்டும்.”
தமிழரின் தேசிய இனப்பிரச்சினையைப் பொறுத்தவரையில் இப் பொதுத் தேர்தலின் தீர்ப்பு மிகவும் முக்கியமானதாக அமைந்தது. சுதந்திரமான தமிழ் அரசை நிறுவுவதற்கான மக்கள் ஆணை கோரியே இத் தேர்தல் நடைபெற்றது. கூட்டணியினர் கோரிய மனுவுக்கு அமோக ஆதரவு தெரிவித்து தமிழ் மக்கள் வாக்களித்தனர். இத் தேர்தல் வாயிலாக வடகிழக்கில் கூட்டணியினர் 17 ஆசனங்களில் வெற்றி பெற்றனர். உருப்படியான நடவடிக்கைகளை மேற்கொண்டு தனித் தமிழ் அரசை நிறுவும் பெரும் பொறுப்பு, இத் தேர்தலின் தீர்ப்பு மூலம் கூட்டணித் தலைமையிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் தாம் எதற்காகத் தெரிவு செய்யப்பட்டார்களோ அந்த இலட்சியத்தை அடைவதற்கான அரசியல் தூர நோக்கோ, நடைமுறைச் சாத்தியமான செயற்திட்டமோ தமிழ் நாடாளுமன்றத் தலைவர்களிடம் இருக்கவில்லை. அரசியல் சுதந்திரம் நோக்கிய பாதையில் உருப்படியான நடவடிக்கைகள் எதையுமே எடுக்கத் தவறிய அவர்கள் பாராளுமன்ற இருக்கைகளில் ஒட்டிக் கொண்டிருந்தார்கள்.
ஜே.ஆர்.ஜெயவர்த்தனா தலைமையில் இயங்கிய வலதுசாரி ஐக்கிய தேசியக் கட்சி, 1977 பொதுத் தேர்தலில் மிகப் பெரும் வெற்றியீட்டி 85 விழுக்காடு இருக்கைகளை நாடாளுமன்றத்தில் கைப்பற்றியது. பாரம்பரிய இடதுசாரிக் கட்சிகள், ஓர் இருக்கையையேனும் பெறாது முற்றாக தோற்கடிக்கப்பட்டன. வரலாற்றில் முதல் தடவையாக நாடாளுமன்றத்தின் முதல்நிலை எதிர்க்கட்சியாக தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி இடம்வகித்தது. இறையாண்மையுடைய தனித் தமிழ் அரசாக திகழ்வதற்கான கோரிக்கையோடு தமிழர் ஒரு புறமும், சுதந்திரமாக வாழ விரும்பும் தமிழினத்தை அடிமைப்படுத்தி, மேலாண்மை செலுத்துவதற்கு முற்றுமுழுதான அரசதிகாரம் கொண்ட சிங்களக் கட்சி மறுபுறமுமாக பாராளுமன்றம் மோதலுக்கான களமாகியது. தேர்தல் முடிந்த கையோடு, இன முரண்பாடு கூர்மை அடைந்தது. தமிழருக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட இனக் கலவரம் முன்பைவிட குரூரம் மிகுந்ததாக தோற்றம் எடுத்தது.
நாடெங்கும் பரவிய இனவெறிக் கலவரத்தில் நூற்றுக்கணக்கான தமிழர் படுகொலை செய்யப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் அகதிகளாயினர். பல கோடி பெறுமதியான தமிழர் சொத்துக்கள் அழிக்கப்பட்டன. அரச காவல்துறையினரும், ஆயுதப் படையினரும் பகிரங்கமாக காடையருடன் இணைந்து தீ வைத்தல், கொள்ளையடித்தல், பாலியல் வல்லுறவாடல், கொலை புரிதல் ஆகியவற்றில் ஈடுபட்டனர். நாடு முழுவதையும் உலுப்பிக் கொண்டிருந்த இனவெறி வன்செயல்களைக் கட்டுப்படுத்துவதற்குப் பதிலாக, அரசாங்கத் தலைவர்கள் இனவெறியை மேலும் தூண்டும் அறிக்கைகளை வெளியிட்டுக் கொண்டிருந்தனர்.
இந்த இனவெறிக் கலவரம் தமிழ் அரசியல் களத்தில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியது. தனியரசை நிறுவும் தேசிய சுதந்திரத்திற்காகப் போராட வேண்டும் என்ற தீவிரவாத இளைஞரின் உறுதிப்பாட்டிற்கு இந் நிகழ்வானது மேலும் உரமேற்றியது. தமிழ்ப் பாராளுமன்றத் தலைமையின் கையாலாகாத்தனத்தையும் இது அம்பலப்படுத்தியது. தமிழ் மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றத் தவறிய தமிழ் அரசியல் தலைவர்கள், தங்களது அரசியல் வாழ்வை நியாயப்படுத்த அரசுடன் இணைந்து போகவும் வழி தேடினார்கள். அரச அதிபர் ஜே.ஆர்.ஜெயவர்த்தனா தனக்கேயுரிய சாணக்கிய தந்திரத்தோடு செயற்பட்டார். சுதந்திரத் தனித் தமிழ் அரசை நிறுவும் கொள்கையில் தமிழ்த் தலைவர்கள் உறுதியாக இருக்கவில்லை என்பதையும் மாற்று அரசியற் தீர்வுக்கு வழிதேடிக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் ஜெயவர்த்தனா அறிந்து கொண்டார். ஆகவே, சிங்கள அரசுக்கு உண்மையான அச்சுறுத்தல், போராளி இளைஞரின் புரட்சிகர அரசியலே என்று அவர் உணர்ந்து கொண்டார். எனவே, விடுதலைக்கான போரொலி எந்தத் தளத்திலிருந்து வருகிறதோ, அந்தப் புரட்சிகர இளைஞர் தளத்தை நசுக்குவதற்கு அனைத்து அடக்குமுறை வழிகளையும் புதிய அரசு கையாண்டது. ஈவிரக்கமற்ற ஒடுக்குமுறையைக் கைகொண்ட சிங்கள அரசு, தமிழ் இளைஞர்களை ஒடுக்குவதற்கு மேலதிக அதிகாரங்களை காவல்துறைக்கும் இராணுவத்தினருக்கும் வழங்கியது. அரச அடக்குமுறை ஒரு புறமும் அதற்கு சவாலாக ஆயுத எதிர்ப்புமுறை மறுபுறமுமாக, ஆயுதப் போராட்டம் அனல் கக்கும் உக்கிரத்தில் தமிழர் தாயகம் எங்கும் பரவியது.
விடுதலைப் புலிகளின் போராட்ட களம்
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புரட்சிகர ஆயுதப் போராட்டத்தின் அரசியல் இராணுவ முக்கியத்துவத்தை புரிந்து கொள்ள வேண்டுமாயின், பல்வேறு கால கட்டங்களில் அது பெற்ற வரலாற்று ரீதியான வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் புரிந்து கொள்வது அவசியம். தமிழரின் விடுதலைப் போராட்டத்தை நசுக்கி அழிக்கும் நோக்கத்தோடு மிகவும் நுட்பமான கட்டமைப்பைக் கொண்ட அரச புலனாய்வுத்துறை இயங்கி வந்தது. அதில் தமிழ் இரகசியக் காவல்துறை அதிகாரிகள் முக்கிய பங்கை வகித்தார்கள். பணத்திற்காக காட்டிக் கொடுக்கின்ற குடிமக்கள் சிலரும் உளவாளிகளாகச் செயற்பட்டனர். இந்தப் புலனாய்வுக் கட்டமைப்பானது தமிழரின் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு, குறிப்பாக புதிதாகத் தோற்றமெடுத்து வளர்ந்து வரும் விடுதலை அமைப்பான புலிகள் இயக்கத்திற்கும் பெரும் அச்சுறுத்தலாக விளங்கியது. சிங்கள அரசின் கிளர்ச்சி முறியடிப்பு இயக்கத்தை முன்னின்று நடத்தி வந்த புலனாய்வுத் துறையினர் நூற்றுக்கணக்கான தீவிரவாதத் தமிழ் இளைஞர்களையும் அரசியற் செயற்பாட்டில் ஈடுபட்ட மாணவர்களையும் வேட்டையாடிச் சிறைபிடித்து தாங்கொணாச் சித்திரவதைக்கு ஆளாக்கி வந்தனர். இதனால் புதிதாக ஆயுதமேந்திப் போர்க் களத்தில் புகுந்த புலி வீரர்களுக்கு அரச புலனாய்வுப் பிரிவு ஒரு ஆபத்தான சவாலாக அமைந்தது. ஆகவே, இந்தச் சவாலை எதிர்கொண்டு போராட நிர்ப்பந்திக்கப்பட்ட விடுதலைப் புலிகள் புலனாய்வுத் துறையின் கட்டமைப்புக்கு எதிராக தமது ஆயுதப் போரை முடுக்கிவிட்டனர். வெற்றிகரமாகப் புலிகள் நிகழ்த்திய தாக்குதல்கள் காரணமாக அரச புலனாய்வுத் துறையின் கட்டமைப்பும் செயற்பாடும் தமிழர் தாயகத்தில் செயலிழந்து சிதைவுற்றது.
விடுதலைப் புலிகளின் ஆரம்பகால கெரில்லாத் தாக்குதல்களின் விளைவாக பல காவல்துறைப் புலனாய்வு அதிகாரிகளும், உளவாளிகளும், காட்டிக் கொடுக்கும் துரோகிகளும் கொன்றழிக்கப்பட்டனர். ஆயினும், ஒரு குறிப்பிட்ட அதிரடித் தாக்குதலே சிங்கள ஆட்சிபீடத்தை அதிர்ச்சிக்கு ஆளாக்கியது. இச் சம்பவம் 1978 ஏப்ரல் 7 அன்று நிகழ்ந்தது.
வன்னியில், முருங்கனுக்கு அருகாமையிலுள்ள அடர்ந்த காட்டினுள் விடுதலைப் புலிகளின் ஒரு சிறிய பயிற்சிப் பாசறை இருந்தது. இங்கு சில போராளிகள் ஆயுதப் பயிற்சி எடுத்து வந்தனர். இந்தப் பயிற்சிப் பாசறை அமைந்துள்ள தளம் பற்றிய தகவல், ஒரு உளவாளி வாயிலாக புலனாய்வுத் துறையினருக்குத் தெரிய வந்தது. அதனைச் சுற்றி வளைத்து தாக்கியழிக்கும் நோக்குடன் காவல்துறை அதிகாரி பஸ்தியாம்பிள்ளை தலைமையிலான அணி ஒன்று முருங்கன் காட்டினுள் புலிகளின் தளம் நோக்கி நகர்ந்தது. ஒரு சில போராளிகளே, அவ்வேளை அம் முகாமில் தரித்திருந்தனர். துப்பாக்கி முனையில் காவல்துறையினரால் திடீரென சுற்றி வளைக்கப்பட்ட பொழுது எமது போராளிகள் பதட்டமடையாது அமைதியாக இருந்தனர். அவ்வேளை புலிகளின் தாக்குதல் தளபதிகளில் ஒருவரான லெப்.செல்லக்கிளி அம்மான் மிக லாவகமாக காவல்துறை அதிகாரி ஒருவர் மீது பாய்ந்து, அவருடைய சிறிய யந்திரத் துப்பாக்கியைப் பறித்தெடுத்து, கண்மூடித் திறப்பதற்குள் சுற்றிவளைத்த காவல்துறைக் குழுவினரை சுட்டு வீழ்த்தினார். இந்தச் சம்பவத்தில் காவல்துறைப் புலனாய்வு அதிகாரிகளான பஸ்தியாம்பிள்ளை, பேரம்பலம், பாலசிங்கம் ஆகியோரும், வண்டிச் சாரதியான சிறிவர்த்தனாவும் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டனர்.
காவல்துறை அதிகாரி பஸ்தியாம்பிள்ளை சிங்கள ஆட்சியாளரின் கையாள். மிகக் கொடுமையான மனிதர். தமிழ் இளைஞரின் புரட்சி அரசியலை பூண்டோடு அழிக்கச் சபதமெடுத்தவர். ஈவிரக்கமற்ற சித்திரவதைக்கு புகழ்போனவர். தீவிரவாத இளைஞருக்கு அவர் சிம்ம சொப்பனம். புலிகள் இயக்கப் போராளிகளால் இவர் கொன்றழிக்கப்பட்டது தமிழ் இளம் சமூகம் மத்தியில் ஒரு புத்துணர்வை ஏற்படுத்தியது. ஆயுதப் போராட்டத்தின் ஆரம்ப காலத்தில் அரச புலனாய்வுத் துறையினருக்கு விழுந்த பலத்த அடியாக இந் நிகழ்வைக் கொள்ளலாம். இதனால் அரசாங்கம் கலங்கிப் போயிருந்தது.
பஸ்தியாம்பிள்ளையின் காவல்துறை அணி அழிக்கப்பட்டதற்கும், அதற்கு முன்னராக பல புலனாய்வுக் காவல்துறை அதிகாரிகள், காட்டிக் கொடுத்த துரோகிகள் கொன்று ஒழிக்கப்பட்டதற்கும், முதற்தடவையாக அதிகார பூர்வமாக உரிமைகோரி, 1978 ஏப்ரல் 25 அன்று விடுதலைப் புலிகள் இயக்கம் அறிக்கை வெளியிட்டது. விடுதலைப் புலிகளின் அறிக்கையை ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்துப் பிரசுரித்தன. ஆயுதப் போராட்டம் மூலமாக தமிழரின் தேசிய விடுதலையை வென்றெடுக்கும் புரட்சிகரப் பாதையில் இறங்கியுள்ளதை விடுதலைப் புலிகள் இயக்கம் இந்த உரிமைகோரும் அறிக்கை வெளியிட்டு உலக அரங்கில் தன்னைப் பகிரங்கப்படுத்தியது. உரிமை கோரும் புலிகளின் பட்டியலில், யாழ்ப்பாண நகர முதல்வரும் சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் வடபிராந்திய ஏற்பாட்டாளருமான அல்பிரட் துரையப்பா, பொத்துவில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.கனகரெத்தினம் வேறும் பல பிரபல்யம் பெற்ற காவல்துறை, புலனாய்வு அதிகாரிகளும் அடங்கியிருந்தனர்.
தமிழர்களின் ஆயுதம் தரித்த எதிர்ப்பியக்கம் ஒன்று தலைமறைவாக இயங்கி வருவதை அறிந்து அதிர்வடைந்த சிங்கள அரசு, உடனடியாகவே, 1978 மே மாதத்தில் பாராளுமன்றச் சட்டமூலமாக புலிகள் இயக்கத்தை தடைசெய்தது. தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான இத் தடைச் சட்டம் தமிழரின் ஆயுதக் கிளர்ச்சியை முற்றாக நசுக்கிவிடும் நோக்குடன் அரச ஆயுதப் படைகளுக்கு சர்வ அதிகாரங்களை வழங்கியது. எவரையும் கைது செய்தல். நீதிமன்ற விசாரணையின்றி நீண்ட காலம் சிறை வைத்தல், சித்திரவதை செய்தல், சட்ட விரோதமாக கொலை செய்தல் போன்ற கொடும் செயல்கள் புரிய இச் சட்டம் படையினருக்கு அதிகாரமளித்தது. இக் கொடிய தடைச் சட்டத்தை நிறைவேற்றியதை அடுத்து, பெருமளவிலான படை அணிகளை புலி வேட்டையில் இறக்கி தமிழர் தாயகத்தை முழுமையான இராணுவ ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்தது சிங்கள அரசு.
தமிழ்ப் பகுதிகளில் சிங்கள இராணுவ அடக்குமுறையை தீவிரப்படுத்தியதை அடுத்து, 1978 செப்டெம்பர் 7 அன்று, புதிய அரசியல் யாப்பு ஒன்றை ஜெயவர்த்தனா நடைமுறைப்படுத்தினார். இந்தப் புதிய யாப்பு ஜெயவர்த்தனாவுக்கு முழுமையான சர்வாதிகார அதிகாரங்களை வழங்கியது. அத்துடன் சிங்கள மொழிக்கும் பௌத்த மதத்திற்கும் சிறப்புரிமைகளையும் உயர் தகமைகளையும் வழங்கியதோடு, தமிழ் மொழியை இரண்டாந்தர நிலைக்கு தரம் இறக்கியது. புதிய யாப்பானது ஜனாதிபதியை ‘அரச அதிபராகவும், நிறைவேற்று அதிகாரமுடைய அரசாங்கத் தலைவராகவும், முப்படைகளதும் பிரதம தளபதியாகவும்’ பதவி ஏற்றியது. அமைச்சரவை உறுப்பினர்களை நியமிக்கவும், பதவி நீக்கவும், நாடாளுமன்றத்தைக் கலைக்கவும் அவருக்கு அதிகாரம் பொறுப்பித்தது. சிங்கள அரசின் ஒற்றையாட்சித் தன்மையை உறுதிப்படுத்திய புதிய யாப்பிலே திருத்தம் கொண்டு வருவதானால், அல்லது அதைக் கைவிடுவதானால் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு அதிகப் பெரும்பான்மை வாக்குகளும், வாக்காளர்களின் கருத்துக் கணிப்பு ஆதரவும் பெற்றாக வேண்டும் என்று விதித்தது. தமிழ்ப் பிரதிநிதிகள் 1978இன் புதிய யாப்பை அல்லது அதற்கு முந்திய 1972ஆம் ஆண்டு யாப்பைத் தயாரிப்பதிலோ பிரகடனப்படுத்துவதிலோ பங்குபற்றவில்லை. புதிய யாப்புக்கு எதிராக தமிழ் நாடாளுமன்றக் கட்சி, தமிழ் மக்களை அணி திரட்டி பெரும் எதிர்ப்பைத் தெரிவிக்கத் தவறிவிட்டது. ஆனால், தமிழ் மக்களின் அதிருப்தியை அனைத்துலக சமுதாயத்தின் கவனத்திற்கு கொண்டுவர விரும்பிய விடுதலைப் புலிகள், புதிய அரசியல் யாப்பு நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட அன்று, இலங்கை பயணி விமானத்துறைக்குச் சொந்தமாக ஒரேயொரு ‘அவ்ரோ’ விமானத்தை குண்டு வைத்துத் தகர்த்தது.
விரிவாக்கம் கண்டுவரும் ஆயுதப் போராட்டத்தைப் பூண்டோடு அழிப்பதற்காக அடக்குமுறை வழிகளை அரசு கைக்கொண்டது. விடுதலைப் புலிகள் மீதான தடைச் சட்டத்தை 1979 ஜுலை 20 அன்று நீக்கிவிட்டு, அதனிடமாகப் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை அரசு அமுலாக்கியது. இதில் அடங்கிய விதிகள், சட்ட ஆட்சியின் நீதி நியமங்களை உதாசீனப்படுத்துவனவாக அமைந்தன. பதினெட்டு மாத காலம் எவரையும் தடுப்புக் காவலில் வைக்க இடமளித்தது. சித்திரவதை மூலம் பெறப்படும் ஒப்புதல்களை வழக்கில் வாக்குமூலமாக ஏற்க அனுமதித்தது. இந்தச் சட்டம் நிறைவேறியதும் வடபுல தலைநகரான யாழ்ப்பாணத்தில் அவசர காலச் சட்டத்தை அரசு நடைமுறைப்படுத்தியது. பிரிகேடியர் வீரத்துங்கவின் தலைமையில் கூடுதலான இராணுவப் படையணிகளைத் தமிழ்ப் பகுதிகளுக்கு அனுப்பியது. ஆறு மாதத்தில் ‘பயங்கரவாதத்தை’ வேரோடு சாய்க்க வேண்டும் என்றும் அவருக்குக் காலக்கெடு விதித்தது. சட்டம் தந்த அதிகாரமும் அரசு கொடுத்த உற்சாகமும் கூடி வர, வன்முறையின் உச்ச கட்டமாக இராணுவ பயங்கரவாதத்தைத் தமிழ் மக்கள் மீது பிரிகேடியர் வீரதுங்க ஏவி விட்டார். நூற்றுக்கணக்கான இளைஞர்கள் கைது செய்யப்பட்டு மிருகத்தனமான சித்திரவதைக்கு ஆளானார்கள். பலர் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். அவர்களுடைய உடலங்கள் வீதியோரம் வீசப்பட்டன. இந்த ஒடுக்குமுறை நடவடிக்கைகள் உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் இதயங்களில் பலத்த குமுறலைத் தோற்றுவித்தது. அனைத்துலகச் சட்ட வல்லுநர் ஆணைக் குழுவும், அனைத்துலக மன்னிப்பு சபையும் பயங்கரவாதச் சட்டம் தொடர்பாக பலத்த கண்டனங்களைத் தெரிவித்தன. பிரிகேடியர் வீரத்துங்கவுக்கு வழங்கப்பட்ட ஆறுமாத காலக் கெடு முடிவடைந்த போது, அரச பயங்கரவாதத்தின் பெறுபேறாக விடுதலைப் புலிகளின் படைபலம் வெகுவாகப் பெருகியது. கொதிப்படைந்த தமிழ் மக்களின் தேசிய விடுதலை உணர்வும் வெகுவாகப் பொங்கி எழுந்தது.
தமிழ்த் தாயக மண்ணிலே சிறீலங்கா அரசு தனது இராணுவ மேலாண்மையையும் ஒடுக்குமுறையையும் தீவிரப்படுத்திக் கொண்டிருக்க, விடுதலைப் புலிகளின் தலைமை, தனது இயக்கத்தை விரிவுபடுத்திப் பலப்படுத்தும் நடவடிக்கைத் திட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது. கிளர்ச்சியை நசுக்கும் அரசின் திட்டத்தை முறியடிப்பதற்கு, மாற்று நடவடிக்கையாக தமது கெரில்லாப் படைக் கட்டமைப்பைப் பலப்படுத்தவும் தமது அரசியல் பிரிவை விரிவுபடுத்தவும் புலிகள் இயக்க தலைமை தீர்மானித்தது. ஆகவே, அரசுக்கு எதிரான ஆயுதம் தரித்த இராணுவ நடவடிக்கைகள் அனைத்தையும் 1979-1980 காலப் பகுதியில் தவிர்த்துக் கொண்டு, விடுதலை அமைப்பைப் பலப்படுத்துவதில் முழுமையாகக் கவனம் செலுத்தியது. இந்தக் கால கட்டத்திலேயே சாதாரண மக்களுக்கு அரசியல் அறிவையும் தேசிய விழிப்புணர்வையும் ஊட்டி வளர்த்து, அவர்களை இயக்க அமைப்புடன் அணிசேர்த்து ஒழுங்கமைத்து, தேச விடுதலைப் போராட்டத்தை வெகுசன அரங்கில் முன்னெடுக்கும் நோக்குடன் ஒரு செயற்திட்டம் வகுத்து நடைமுறைப்படுத்தப்பட்டது. இக் கால கட்டத்தில்தான் புலம்பெயர்ந்து ஈழத் தமிழ் மக்கள் வாழும் வெளிநாடுகளில் கிளை அமைப்புக்களை நிறுவி, அனைத்துலகக் கட்டமைப்பை விரிவுபடுத்திப் பலப்படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. எழுபதுகளின் இறுதிக் கட்டத்தில்தான் லண்டனிலிருந்து இயக்க அரசியல் பரப்புரை வேலைகளில் பங்களிக்க எனக்கும் வாய்ப்புக் கிட்டியது.
1978இன் ஆரம்பத்தில், லண்டனில் கலாநிதி பட்டப் படிப்புக்கான ஆய்வில் நான் ஈடுபட்டிருந்த காலகட்டத்தில், முதன் முதலாக விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் எனக்குத் தொடர்பு ஏற்பட்டது. அவ்வேளை விடுதலைப் புலிகளின் லண்டன் கிளைப் பிரதிநிதிகளுடன் சேர்ந்து பரப்புரைப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தேன். இயக்கத்தின் அரசியல் வேலைத் திட்டத்திற்கு அமைவாக, கொள்கை பரப்புரை எழுத்துகளாக பிரசுரங்களையும் சிறு நூல்களையும் எழுதினேன். ‘அரச பயங்கரவாதமும் ஆயுதப் புரட்சியும்’, ‘சோசலிச தத்துவமும் கெரில்லா யுத்தமும்’, ‘சோசலிசத் தமிழீழம் நோக்கி’, ‘தமிழர் தேசிய இனப்பிரச்சினை’ (ஆங்கிலம்), ஆகிய சிறு நூல்களும் இவற்றில் அடங்கும். தலைவர் பிரபாகரனின் வேண்டுகோளுக்கு அமைய, சே குவாரா, மாசே துங், ஆகியோரது போரியல் அனுபவப் படைப்புகளில் இருந்து முக்கிய பகுதிகளை தமிழில் மொழிபெயர்த்து அனுப்பி வைத்தேன். 1979இல் முதன்முதலாக பிரபாகரனை சென்னையில் சந்தித்தது, இயக்கப் போராளிகளுக்கு அரசியல் வகுப்புகளை நடத்தியது போன்ற எமது ஆரம்ப கால இயக்க ஈடுபாடுகளை எனது மனைவி திருமதி. அடேல் பாலசிங்கம் ‘சுதந்திர வேட்கை’ என்ற தனது நூலில் விபரமாக விளக்கியிருக்கிறார்.
1981ஆம் ஆண்டிலிருந்து தமிழீழ தாயகத்தில் சிங்கள இராணுவத்தினதும் காவல்துறையினதும் அடக்குமுறை தீவிரமாகியது. அதற்கு எதிர்விளைவாக விடுதலைப் புலிகளது கெரில்லாத் தாக்குதல்களும் முனைப்புற்றன.
1981 மே 31 அன்று நள்ளிரவில் சிங்களக் காவல்துறையினர் வெறியாட்டமாடி யாழ்ப்பாண நகரை தீ வைத்துக் கொழுத்தினர். தீ வைத்தல், கொள்ளையடித்தல், கொலைபுரிதலாக அரச பயங்கரவாதம் யாழ்ப்பாணத்தில் தலை விரித்தாடியது. நூற்றுக்கணக்கான கடைகள் தீப்பற்றி எரிந்து சாம்பலாகின. யாழ்ப்பாணச் சந்தைச் சதுக்கம் தீயிடப்பட்டது. தமிழ்ப் பத்திரிகைப் பணிமனை ஒன்றும், யாழ்ப்பாணப் பாராளுமன்ற உறுப்பினரது வீடும் தீக்கிரையாக்கப்பட்டன. இந்த இனவாத வன்செயல் வெறியாட்டத்தில் என்றுமே மன்னிக்க முடியாத படுபாதக நிகழ்வொன்றும் இடம்பெற்றது. தமிழினத்திற்கு எதிரான கொடூரப் பண்பாட்டுப் படுகொலையாக யாழ்ப்பாணப் பொதுநூல் நிலையம் தீமூட்டி அழிக்கப்பட்டது. 90,000 க்கும் அதிகமான, விலை மதிக்க முடியாத இலக்கிய, வரலாற்றுப் பதிவேடுகள் தீயில் எரிந்து நாசமாகின. இந்தக் கொடூரமான நிகழ்வானது உலகத் தமிழ் மக்களின் இதயங்களைக் கொதிப்புறச் செய்தது. ஜெயவர்த்தனாவின் ஆட்சிபீடத்திலிருந்த இரு அமைச்சர்களான, சிறில் மத்தியூவும், காமினி திசநாயக்காவும் அவ்வேளை யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து சிங்களக் காவல்துறைக் காடையரின் இப் பயங்கரவாதச் செயல்களை நெறிப்படுத்தி வழிநடத்திக் கொண்டிருந்தார்கள்.
யாழ்ப்பாணம் தீயிடப்பட்டதை அடுத்து, மூன்று மாதங்களில், நாடளாவிய இனவெறிக் கலவரம் மீண்டும் தலைவிரித்து ஆடியது. அரசின் முன்னணி உறுப்பினர்கள் திட்டமிட, ஆயுத படைகள் உதவி புரிய, சிங்களக் காடையரும் அடாவடிக்காரரும் கலவரத்தில் ஈடுபட்டனர். இக் கொடிய சிங்கள இனவெறிக் காட்டுமிராண்டித்தனத்துக்கு தமிழ் மக்கள் மீண்டும் பலிக்கடா ஆனார்கள். இக் கலவரத்தில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் கொலை செய்யப்பட்டார்கள். ஆயிரமாயிரம் பேர் வீடு வாசல்களை இழந்தார்கள். பல கோடி பெறுமதியான சொத்துக்களை அழிவிலே பறி கொடுத்தார்கள். திட்டமிட்ட வன்செயல் மீண்டும் மீண்டும் தலை தூக்குவதும், தமிழ் மக்களின் உயிருக்கும் உடமைக்கும் அழிவு இழைக்கப்படுவதும், ஒரு திட்டமிட்ட இனப் படுகொலையின் குரூர முகத்தையே அது புலப்படுத்திக் காட்டியது.
தமிழ் மக்களுக்கு எதிரான அரச பயங்கரவாதம் தீவிரம் அடைந்து செல்ல விடுதலைப் புலிகளின் கெரில்லாத் தாக்குதல்களும் முனைப்படைந்து தமிழ்ப் பிரதேசத்து அரச நிர்வாகக் கட்டமைப்பை நிலைகுலையச் செய்தன. அரச காவல்துறையின் நிர்வாகத்தை சீர்குலைப்பதே அக்கால கட்டத்தில் விடுதலைப் புலிகளின் போர்த் தந்திரோபாயமாக அமைந்திருந்தது. காவல்துறை நிலையங்கள் மீதும் சுற்றுக் காவல் அணிகள் மீதும் நுட்பமாகத் திட்டமிடப்பட்டு விடுதலைப் புலிகள் நிகழ்த்திய வெற்றிகரமான தாக்குதல்களின் விளைவாக அரச பயங்கரவாதத்தின் சக்திவாய்ந்த கருவியாகச் செயற்பட்ட சட்ட ஒழுங்கு அமைப்பானது படிப்படியாகச் சீர்குலைந்து சிதைவுற்றது.
1982 ஜுலை 2 அன்று யாழ்ப்பாண நகரிலிருந்து 16 மைல் தொலைவிலுள்ள நெல்லியடி பட்டினத்தில் காவல்துறையினரின் சுற்றுக் காவல் அணி ஒன்றின் மீது விடுதலைப் புலிப் போராளிகள் அதிரடித் தாக்குதலை நடத்தினார்கள். இந்த மின்னல் வேகத் தாக்குதலில் நான்கு காவல்துறை அதிகாரிகள் தலத்திலேயே கொல்லப்பட்டனர். மூன்று பேர் கடும் காயமடைந்தார்கள். காவல்துறையினரின் ஆயுதங்கள் அனைத்தையும் கைப்பற்றிய புலி வீரர்கள் காயம் எதுவுமின்றித் தப்பிச் சென்றனர். வெற்றிகரமாக நிகழ்ந்த இவ்வதிரடித் தாக்குதலுக்கு தலைமை வகித்த போராளி லெப்ரினன்ட் சத்தியநாதன் (சங்கர்) ஆவார்.
1982 அக்டோபர் 27 அன்று சாவகச்சேரி காவல் நிலையம் விடுதலைப் புலிகளின் கெரில்லாத் தாக்குதலுக்கு இலக்காகியது. அரண்காப்புகளால் வலுப்படுத்தப்பட்டிருந்த இம் முக்கிய காவல் நிலையம் வெற்றிகரமாகத் தாக்கி அழிக்கப்பட்டு அங்கிருந்த பெரும் தொகையான ஆயுதங்கள் புலி வீரர்களால் கைப்பற்றப்பட்டமை ஜெயவர்த்தனா ஆட்சி பீடத்திற்கு கிலியைக் கொடுத்தது.
அன்றைய தினம் அதிகாலை விடுதலைப் புலிகளின் கெரில்லா அணி, கடத்தப்பட்ட பேரூந்து வண்டி ஒன்றில் காவல் நிலையத்திற்கு அருகாமையில் வந்தடைந்தது. அதிலிருந்து இறங்கிய புலிப் போராளிகள் சிலர், பொதுமக்களின் பாதுகாப்புக்காகக் கண்டி – யாழ்ப்பாணம் வீதியில் போக்குவரத்தைத் தடைசெய்து, நிலையெடுத்தனர்.
இதனையடுத்து, நன்கு ஆயுதம் தரித்த தாக்குதல் அணியொன்று மிகவும் கவனமாகவும் நிதானமாகவும் காவல் நிலைய வளாகத்திற்குள் நுழைந்து, தாக்கும் நிலை எடுத்தது. காப்பரணில் கடமையிலிருந்த காவல்துறையினர் தமது நகர்வை கண்ணுற்றனர் எனத் தெரிந்து கொண்ட மறுகணமே, புலிப் படையினரின் இயந்திரத் துப்பாக்கிகள் அனல் கக்கத் தொடங்கியது. காப்பரணில் பதுங்கியிருந்த ஒருவர் அதிலேயே இறந்து விழ, ஏனையோர் காயங்களுடன் தப்பியோடினர். இதனையடுத்து, புலிகளின் அதிரடிப் படை வீரர்கள் சரமாரியாகச் சுட்டப்படியே பிரதான கட்டடத்துக்குள் புயலென நுழைந்தனர். முதலில் ஆயுத தளபாடங்கள் வைக்கப்பட்டிருந்த அறை தாக்குதலுக்கு இலக்காகியது. அங்கே, பணியிலிருந்த இரு காவல்துறை அதிகாரிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஆயுதக் களஞ்சியம் உடைத்து திறக்கப்பட்டது. அங்கிருந்து 28 துப்பாக்கிகள், 2 உப-இயந்திரத் துப்பாக்கிகள், 1 ரிவோல்வர், ஏராளமான ரவைகள் புலி வீரர்களிடம் சிக்கியது. ஒரு கெரில்லா அணி கீழ்மாடியிலிருந்த ஆயுத அறையை சூறையாடிய வேளை, இன்னொரு அணி துப்பாக்கிக் குண்டுகளைப் பொழிந்தவாறு மேல் மாடிக்குள் பாய்ந்து சென்றது. அங்கு நிகழ்ந்த துப்பாக்கிச் சண்டையில் இரு காவல்துறை அதிகாரிகள் கொல்லப்பட ஒருவர் மாடியிலிருந்து குதித்து தப்பியோடினார்.
சாவகச்சேரி காவல் நிலையம் மீதான தாக்குதலை தலைமை வகித்து நடத்தியவர் லெப்டினன்ட் சார்ள்ஸ் அன்ரனி (ஆசிர், சீலன்). இவர் ஆயுதப் போராட்டத்தின் ஆரம்ப காலத்தில் ஒரு தலை சிறந்த தாக்குதல் தளபதியாக விளங்கியவர். துணிச்சலும் நிகரற்ற திறமையுமுடைய இவர் பிரபாகரனது நெருங்கிய நண்பர். இத் தாக்குதலின் போது, சீலன், புலேந்திரன், ரகு ஆகியோர் காயமடைந்தனர். இவர்கள் மூவரும் தமிழகம் அனுப்பப்பட்டு, அங்கு சிகிச்சை பெற்று தேறினார்கள்.
சாவகச்சேரி காவல்நிலையத் தாக்கி அழிப்பில் சங்கர் (சத்தியநாதன்) முக்கிய பங்குவகித்தார். சண்டையில் தனது துணிச்சலையும் திறனாற்றலையும் காண்பித்தது மட்டுமன்றி, காயமடைந்த போராளிகளையும் கைப்பற்றப்பட்ட ஆயுத தளபாடங்களையும் பாதுகாப்பாக குறிப்பிட்ட இடத்திற்கு கொண்டு சேர்த்தவர் சங்கர். காயமடைந்த புலிவீரர்கள் மூவரையும் சிங்கள ஆயுதப் படையினரின் கெடுபிடிகள் சோதனைகளுக்கும் மத்தியில், தமிழகத்திற்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தவனும் அவனே.
ஆயுதமேந்திய எதிர்ப்பு இயக்கத்தின் ஆரம்ப கால வளர்ச்சிக் கட்டத்தில் தலைசிறந்த தாக்குதற் தளபதியாக விளங்கிய சங்கர் சிங்கள ஆயுதப் படையினரின் தீவிர வேட்டைக்கு இலக்காகியிருந்தான். விடுதலைப் புலிகளின் தங்குமிடம் பற்றி கிடைத்த தகவலை அடுத்து, 1982 நவம்பர் 20 அன்று, யாழ்ப்பாணம் நாவலர் வீதியிலுள்ள வீடொன்றை இராணுவத்தினர் சுற்றி வளைத்தனர். அவ்வேளை அங்கிருந்த சங்கர், முற்றுகையிட்ட இராணுவத்தினரை தனது கைத்துப்பாக்கியால் சுட்டவாறு தப்பியோட முயற்சிக்கிறான். வீட்டு மதிலை தாண்டிக் குதிக்க முயற்சித்த பொழுது, இராணுவத்தினர் அவன் மீது சரமாரியாக வேட்டுக்களைத் தீர்த்தனர். வயிற்றில் குண்டு பாய்ந்து காயமடைந்தபோதும், சுற்றிவளைப்பை உடைத்துக் கொண்டு அவன் தப்பி ஓடினான். காயமடைந்த சங்கரை சிகிச்சைக்காக தமிழகம் அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்ட போதும் இராணுவ சோதனைகள் தீவிரமாகியிருந்ததால் தாமதம் ஏற்படுகிறது. இறுதியாக, 5 நாட்களின் பின்பு, கடல் மார்க்கமாக அவன் வேதாரணியம் கொண்டு செல்லப்பட்டு, பின்பு அங்கிருந்து மதுரை சென்றடைய சங்கரின் உடல்நிலை மோசமடைகிறது. தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை அளிக்கப்பட்டபோதும் ஆபத்தான கட்டத்தை அடைந்தான். அப்பொழுது தலைவரை சந்திக்க வேண்டும் என்ற தனது இறுதி ஆசையை வெளியிட்டான். அதிர்ஷ்டவசமாக, அவ்வேளை பிரபாகரன் மதுரையில் இருந்தார். பாண்டி பஜார் துப்பாக்கி மோதல் சம்பவத்தை அடுத்து, நிபந்தனைப் பிணையில் தங்கியிருந்த பிரபாகரன் சங்கர் சிகிச்சை பெற்ற மருத்துவமனைக்கு விரைந்தார். உயிர் பிரிகின்ற இறுதி நேரம். தலைவனின் மடியில் தலைசாய்ந்தவாறு சாவைத் தழுவிக் கொள்கின்றான் சங்கர். 1982 நவம்பர் 27 அன்று, விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முதலாவது மாவீரன் என்ற வரலாற்று முக்கியத்துவம் பெற்று அவன் மரணித்தான். சங்கர் வீரச்சாவடைந்த அன்றைய நாள், மாவீரர் நாளாக, தமிழரின் தேசிய எழுச்சி நாளாக, ஒரு புனித நாளாகக் கொண்டாடப்படுகிறது.
தமிழ் மக்களுக்கு எதிரான அரச ஒடுக்குமுறை 1982 பிற்பகுதியில் ஒரு குரூர வடிவம் பெற்றது. பயங்கரவாதத் தடைச்சட்டத்தை தமிழ் அறிவுஜீவிகளுக்கும், மத குருமாருக்கும் எதிராக அரசு திருப்பியது. விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டத்தை ஆதரித்தார்கள் என்ற குற்றச்சாட்டோடு, பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், மருத்துவர்கள், பெயர் பெற்ற கத்தோலிக்க குருமார் போன்றோர் கைது செய்யப்பட்டார்கள். திரு. மு. நித்தியானந்தன், அவர் மனைவி நிர்மலா ஆகிய இருவரும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள். இவர்களோடு கலாநிதி ஜெயக்குலராஜா, அவர் சகோதாரர் அருட்திரு ஜெயதிலகராஜா ஆகியோரும் அவர்களுடன் மதிப்புப் பெற்ற இரண்டு கத்தோலிக்க குருமாரான பி.சின்னராஜா, ஏ.சிங்கராயர் ஆகியோரும் கைது செய்யப்பட்டு வெலிக்கடை சிறையில் அடைக்கப்பட்டார்கள். இந்தச் சம்பவத்தை ஆட்சேபித்து விடுதலைப் புலிகள் உலக அரங்கில் ஒரு, பரப்புரைப் போராட்டம் நடத்தினர். இந்த மனச்சாட்சிக் கைதிகளை விடுவிக்கும்படி உலக முன்றலில் கோரிக்கை விடுக்குமாறு தங்கள் அனைத்துலகக் கிளைகளைப் பணித்தனர்.
அணிசாரா நாடுகளின் ஏழாவது உச்சி மாநாடு புதுடில்லியில் 1983 மார்ச் 7-15 தேதிகளில் நடைபெற்ற வேளை, விடுதலைப் புலிகள் இயக்கம் மகஜர் ஒன்றை இம்மாநாட்டில் சமர்ப்பித்தது. தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டத்தை முன்னின்று நடத்தும் இயக்கமாக விடுதலைப் புலிகள் முதற் தடவையாக அனைத்துலக அரங்கில் தம்மைக் காத்திரமாக அடையாளப்படுத்தினர். ‘தேசிய விடுதலைக்கான தமிழரின் போராட்டம்’ என்ற தலைப்பில் இந்த அறிக்கை வரையப்பட்டிருந்தது. ஆயுதப் போர் தோற்றம்பெற்றதன் வரலாற்றுப் பின்னணியை விடுதலைப் புலிகளின் இந்த அறிக்கை, பின்வரும் கருத்தோட்டத்தில் விளக்கியது.
“எழுபதுகளின் முற்பகுதியில் தமிழீழ மக்களின் ஆயுதம் தரித்த எதிர்ப்புப் போராட்டம் வரலாற்றுப் பிறப்பை எடுத்தது. சனநாயக வழிதழுவிய வெகுசனப் போராட்ட வடிவமாக மேற்கொள்ளப்பட்ட தேசிய விடுதலை இயக்கம் தோல்விகளைச் சந்தித்ததோடு, சமாதான வழியில் மக்களை அணிதிரட்டும் தார்மீக வலுவையும் இழந்து போனது. இந் நிலையே, ஆயுதப் போராட்டத்திற்கு வழிகோலியது. அரச பயங்கரவாதத்தின் மிருகத்தனமான ஒடுக்குமுறைக்கு எதிராக, தமிழ் மக்கள் தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கு வேறுவழி இல்லாததால் புரட்சிகர ஆயுதப் போர் வடிவத்தை தேர்ந்தெடுக்க அவர்கள் நிர்ப்பந்திக்கப்பட்டனர். ஆகவே, தமிழரின் ஆயுதப் போராட்டமானது, தாங்கொணா அரச ஒடுக்குமுறையின் வரலாற்றுக் குழந்தையாகப் பிறப்பெடுத்தது. ஒடுக்கப்பட்டு வரும் எமது மக்களின் அரசியற் போராட்டத்தினது தொடர்ச்சியாகவும், நீட்சியாகவும், முன்னெடுப்பாகவுமே ஆயுதப் போராட்டத்தைப் பார்க்க வேண்டும். தமிழீழத்தில் புரட்சிகர ஆயுதப் போரை முன்னெடுத்து வரும் எமது விடுதலை அமைப்பானது, எமது தேசியப் போராட்டத்தின் முன்னணிப் படையாக இயங்குகின்றது. எமது போராட்டத்தின் யதார்த்த புறநிலையை மிகக் கவனமாகக் கணிப்பிட்டு, தேச சுதந்திரத்தை முன்னெடுப்பதற்கு தீவிரமாகப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை என்ற வரலாற்று உண்மையை உணர்ந்த பின்னரே ஆயுதப் போராட்ட வடிவத்தை வகுத்தோம். எமது விடுதலை இயக்கத்தின் ஆயுதப் போராட்டத்திற்கு தமிழ் மக்களின் பரந்துபட்ட ஆதரவுண்டு. சிங்கள அரசின் ஏதேச்சாதிகார ஆதிக்கத்தையும் அடக்குமுறையையும் எதிர்த்து நின்று அரசியல் சுதந்திரத்தை வென்றெடுக்க வேண்டும் என்ற எமது மக்களின் ஆழமான அபிலாசையை எமது போராட்ட இலட்சியம் வெளிப்படுத்தி நிற்பதால் மக்கள் சக்தி எமது இயக்கத்தின் பின்னால் அணிதிரண்டு நிற்கிறது.”
சிறீலங்கா அரசின் இன அழிப்பு ஒடுக்குமுறைக் கொள்கையைக் கண்டித்து, தமிழீழ மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவு வழங்க வேண்டும் என்று விடுதலைப் புலிகள் இயக்கம், தனது மகஜரில், இந்திய அரசையும் அணிசாரா நாடுகளின் தலைவர்களையும் வேண்டிக் கொண்டது.
வன்முறைப் புயல் வீசிய ‘கறுப்பு ஜுலை’
கொந்தளிப்பு மிக்க இனப் போராட்ட வரலாற்றிலே 1983ஆம் ஆண்டானது வன்முறைப் புயல் தாண்டவமாடிய ஒரு கால கட்டம் எனலாம். ஒருபுறம் அரச அடக்குமுறை தீவிரமடைய, மறுபுறம் போராளிகளின் எதிர்த் தாக்குதல்களும் உக்கிரமடைந்தன. வன்முறையும் அதற்கு எதிரான வன்முறையுமாக வன்செயல்கள் சுழல் வேகம் பெற்று ஈற்றில் பிரளயம் போன்ற இனக் கலவரம் வெடித்தது. இந்தக் கொடு நிகழ்வை ‘கறுப்பு ஜுலை’ என வரலாற்று ஆசிரியர்கள் வர்ணிக்கிறார்கள். பல ஆயிரம் தமிழர்கள் ஈவிரக்கமின்றி கொன்றொழிக்கப்பட்ட கொடிய மாதம் இது.
1983ஆம் ஆண்டின் முற்பகுதியில் சிங்கள அரசை அச்சுறுத்தும் சவாலாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தனது இராணுவ அரசியல் நடவடிக்கைகளை முடுக்கி விட்டது. வடக்கில் தரித்திருந்த சிங்கள காவல்துறையினர் மீதும் ஆயுதப் படையினர் மீதும் தொடர்ச்சியான பல கெரில்லாத் தாக்குதல்கள் ஏவிவிடப்பட்டன. பெப்ரவரி 18ஆம் நாள், காவல்துறை ரோந்து அணி ஒன்று மீது பருத்தித்துறையில் நிகழ்ந்த பதுங்குத் தாக்குதலில் காவல்துறை அதிகாரி விஜேவர்த்தனாவும் அவரது வாகனச் சாரதியான ராஜபக்ஷவும் கொல்லப்பட்டனர். பரந்தன் உமையாள்புரத்தில், மார்ச் 4 அன்று இராணுவத் தொடர் வண்டிகள் மீது விடுதலைப் புலிப் போராளிகள் நடத்திய கெரில்லாத் தாக்குதலில் கவசப் பீரங்கி வண்டி ஒன்று சிதைத்து அழிக்கப்பட்டது. இத் தாக்குதலில் இராணுவத்தினர் ஐந்து பேர் படுகாயமடைந்தனர்.
இதே சமயம் அரசியல் அரங்கில் விடுதலைப் புலிகள் ஒரு சிறப்பான பரப்புரை முயற்சியை முடுக்கி விட்டனர். அரசின் ஒடுக்குமுறைக் கொள்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், மே 18 அன்று நடைபெறவிருந்த உள்ளூராட்சித் தேர்தலைத் தமிழ் மக்கள் புறக்கணிக்கவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர். புலிகளின் தலைவர் பிரபாகரனும் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். சிறீலங்கா அரசின் நிர்வாகத்தைத் தமிழ் மக்கள் நிராகரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். தேசிய விடுதலைக்காகத் தமிழ்ப் புலிகள் நடத்தும் ஆயுதப் போராட்டத்தை மக்கள் ஆதரிக்க வேண்டும் என்றும் வேண்டி நின்றார். விடுதலைப் புலிகள் மேற்கொண்ட பரப்புரைக்கு இசைந்து வடக்கிலுள்ள பெரும்பாலான தமிழ் மக்கள் தேர்தலைப் புறக்கணித்தார்கள். தமிழ் மக்களின் அரசியல் வரலாற்றில் இதுவரை இடம்பெறாத தேர்தல் புறக்கணிப்பாக இது அமைந்தது. விடுதலைப் புலிகளுக்கு இது மிகப் பெரும் அரசியல் வெற்றியை ஈட்டிக் கொடுத்தது. விடுதலைப் புலிகளின் வேண்டுகோளைப் புறக்கணித்து தேர்தலில் நின்ற தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி அவமானத்தை சந்தித்தது. 95 விழுக்காடு வாக்காளர்கள் தேர்தலைப் புறக்கணித்ததால் கட்சியின் நம்பகத்தன்மை வெகுவாகப் பாதிக்கப்பட்டது.
தேர்தல் நாளன்று, வாக்களிப்பு முடிய ஒரு மணிநேரம் இருக்கும்போது, யாழ்ப்பாணம் நல்லூரில் தேர்தல் வாக்களிப்பு நிலையம் ஒன்றைக் காவல் புரிந்த இராணுவத்தினர், காவல்துறையினர் மீது விடுதலைப் புலிப் போராளிகள் தாக்குதலை நடத்தினார்கள். அங்கு நடந்த துப்பாக்கிச் சமரில் சிங்களப் படையினர் ஒருவர் கொல்லப்பட்டார். இன்னொருவருக்குக் கடுங் காயம் ஏற்பட்டது. வேறு இரண்டு காவல்துறையினர் கடும்காயம் அடைந்தார்கள். அன்று, தேர்தல் தொடர்பாகவும் புலிகள் வெற்றியீட்டினர். வாக்களிப்பு நிலையம் மீதும் வெற்றிகரத் தாக்குதல் நடத்தினர். இதனால் சீற்றமடைந்த அரசு புதிய அவசரகால ஒழுங்குப் பிரமாணங்களை நடைமுறைப்படுத்தியது. தமிழ்ப் போராளிகளுக்கு எதிராக மேலும் நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆயுதப் படைகளின் கரங்களைப் புதிய சட்டங்கள் வலுப்படுத்தின. அன்றிரவு யாழ்ப்பாண நகர எல்லைக்குள் பணியில் இருந்த 600 இராணுவத்தினர், வன்முறை வெறியாட்டத்தில் இறங்கினர். கடைகள், வீடுகள், எரிபொருள் நிலையங்கள், வாகனங்கள் ஆகியவை தீயில் எரிக்கப்பட்டன. பொதுச் சொத்துக்கள் சூறையாடப்பட்டன. பொதுமக்கள் கடுமையாகத் தாக்கப்பட்டார்கள். இரண்டு ஆண்டுக்குள் இரண்டாவது தடவையாக, தமிழ் மக்களுக்கு எதிரான அரச பயங்கரவாதத்துக்கு இலக்கான யாழ்ப்பாண நகரம் தீப்பற்றி எரிந்தது.
அரச பயங்கரவாத வன்முறை உச்சத்தை தொட்ட காலப்பகுதியாக 1983 ஜுன் மாதப் பகுதியைக் குறிப்பிடலாம். அவசர காலச் சட்டங்கள் வழங்கிய அதிகாரத்தோடு சிங்கள ஆயுதப் படையினர், வவுனியா, திருகோணமலை நகரங்களில் கண்மூடித்தனமான வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட்டனர். தமிழ்ப் பொதுமக்களைச் சுட்டுக் கொன்றதுடன், கடைகள், வீடுகள், பள்ளிகள், கோவில்கள் ஆகியவற்றுக்குத் தீ வைத்தனர். திருகோணமலையில் ஆயுதப் படையினருடன் சிங்களக் காடையரும் கூட்டுச் சேர்ந்து புரிந்த கலவரத்தில் 19 தமிழர் வெட்டிச் சரிக்கப்பட்டார்கள். அங்கு 200 வீடுகள், 24 கடைகள், 8 இந்துக் கோவில்கள் எரித்துச் சாம்பல் ஆக்கப்பட்டன. யாழ்ப்பாணத்தில் பல இளைஞர்கள் இராணுவத்தினரால் சுற்றி வளைக்கப்பட்டுச் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். அரசின் உந்துதலோடு, தமிழ் மக்கள் மீதான திட்டமிட்ட இனப் படுகொலை ஆரம்பமானது. அரசுத் தலைவர் ஜெயவர்த்தனா வெளியிட்டிருந்த அறிக்கை ஒன்று, அதை உறுதிப்படுத்தியது.
“யாழ்ப்பாண மக்களின் கருத்து என்ன என்பது பற்றி எனக்கு அக்கறை இல்லை. அவர்களைப் பற்றி நாம் இப்போது சிந்திக்க முடியாது. அவர்களுடைய உயிர்களைப் பற்றியோ அவர்கள் எம்மைப் பற்றி எத்தகைய கருத்து வைத்திருக்கிறார்கள் என்பது பற்றியோ சிந்திக்க முடியாது.” என்று ஜெயவர்த்தனா பிரித்தானிய நாளிதழான ‘டெய்லி டெலிகிராப்’ பத்திரிகைக்கு 1983 ஜுலை 11ஆம் நாள் அன்று பேட்டி அளித்திருந்தார். சிங்கள ஆயுதப் படைகள் திட்டமிட்டுத் தமிழ் மக்களை அழித்தொழிப்பதற்கு சிறீலங்கா அரசு ஆதரவு வழங்கிக் கொண்டிருக்கிறது என்பதை ஜெயவர்த்தனாவின் கூற்று, ஐயந்திரிபற உறுதிப்படுத்தியது.
இது இவ்வாறிருக்க, ஜுலை மாதம் நடுப்பகுதியில் நிகழ்ந்த சோக சம்பவம் ஒன்று விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு பேரிடியாக அமைந்தது. 1983 ஜுலை 15 அன்று மாலை, யாழ்ப்பாண நகரிலிருந்து 15 மைல் தொலைவிலுள்ள மீசாலைக் கிராமத்தில் இந்தத் துன்பியல் சம்பவம் நிகழ்ந்தது.
ஒரு மினி பஸ், இரண்டு ஜீப் வண்டிகள் ஒரு இராணுவ ட்ரக் ஆகியனவற்றில் மீசாலை கிராமத்திற்குள் நுழைந்த நூற்றுக்கும் மேற்பட்ட இராணுவத்தினர் அங்கிருந்த விடுதலைப் புலிப் போராளிகளின் இருப்பிடத்தை நோக்கி விரைந்தனர். இராணுவத்தினரின் இந்த சுற்றிவளைப்பில் விடுதலைப் புலிகளின் தாக்குதற் தளபதியான சார்ள்ஸ் அன்ரனி (சீலன்) மற்றும் மூன்று போராளிகளும் மாட்டிக் கொள்கின்றனர். சுற்றி வளைத்த படையினருடன் புலி வீரர்கள் துப்பாக்கிச் சமரில் குதிக்கின்றனர். இராணுவத்தினர் பனைமரங்கள் சூழந்த பாதுகாப்பான இடங்களில் நிலையெடுத்து நின்று சரமாரியாகச் சுட, பொட்டல் வெளியில் மாட்டிக் கொண்ட போராளிகள் திருப்பித் தாக்குகின்றனர். இராணுவத்தினரின் துப்பாக்கி ரவைகள் மார்பைத் துளைக்க, இரத்தம் சிந்தியவாறு நிலத்தில் சரிகிறான் சீலன். தப்ப முடியாத நிலை. எனினும் உயிருடன் எதிரியிடம் சிக்கக் கூடாது என்ற உறுதிப்பாடு உந்த தன்னைச் சுட்டுக் கொன்றுவிடுமாறு சக போராளியிடம் பணிக்கிறான் சீலன். தனது தளபதியை சுடத் தயங்குகிறான் தோழன். அப்பொழுது கண்டிப்பான கட்டளையிடுகிறான் சீலன். வேறு வழி தெரியாது கதறி அழுதபடி சீலனின் கட்டளையை நிறைவேற்றுகிறான் அந்தப் போராளி. அவ்வேளை ஆனந் என்ற மற்றொரு போராளியும் எதிரியின் சூட்டுக்கு இலக்காகி படுகாயங்களுடன் சாய்கிறான். தன்னையும் சுட்டுக் கொன்றுவிடும்படி மன்றாடுகிறான் ஆனந். அவனது வேண்டுகோளும் நிறைவேற்றப்படுகிறது. உயிருக்கும் மேலாக நேசித்த சக போராளிகளை உயிருடன் எதிரியிடம் விட்டுவிடாது செய்து, அவர்களது ஆயுதங்களையும் எடுத்துக் கொண்டு, முற்றுகையிலிருந்து தப்பிச் சென்றனர் மற்றும் இரு போராளிகள்.
மாவீரன் சீலனின் சாவு எமது விடுதலை இயக்கத்திற்கு ஒரு பேரிழப்பாக அமைந்தது. அபாரமான துணிவும், தமிழீழ இலட்சியப் பற்றுறுதியும் மிக்க சீலன் பல களங்களைக் கண்ட வீரன். ஆற்றல் படைத்த கட்டளைத் தளபதி. தலைவர் பிரபாகரனின் மிகவும் நெருங்கிய தோழன். அந்த மாவீரனின் மறைவு பிரபாகரனின் ஆன்மாவை உலுப்பியது. ஒருபுறம் கடும் துயரும், மறுபுறம் கடும் சீற்றமும் அடைந்த பிரபாகரன் சிங்களப் படையினருக்கு தகுந்த பதிலடி கொடுக்கத் தீர்மானித்தார். அதற்கான தாக்குதல் திட்டத்தையும் அவரே வகுத்தார். விடுதலைப் புலிகள் மீதும் பொதுமக்கள் மீதும் அரச பயங்கரவாத வன்செயல்களை ஏவிவிடும் ஆயுதப் படையினர் நிச்சயமாகத் தண்டிக்கப்படுவர் என்பதை எதிரிக்கு உணர்த்த வேண்டும் எனவும் பிரபாகரன் எண்ணினார். யாழ்ப்பாண நகரப் பகுதிக்குள் இராணுவ வண்டித் தொடர்கள் இரவிலே கிரமமாக நடமாடும் வழித் தடங்கள் பற்றிய விபரங்களைப் புலனாய்வு மூலம் திரட்டி, பிரசித்தி பெற்ற திருநெல்வேலிக் கெரில்லாத் தாக்குதலைப் புலிகளின் தலைவர் திட்டமிட்டார். இந்தத் தாக்குதலுக்குச் செல்லக்கிளி அம்மான் பொறுப்பாக நியமிக்கப்பட்டார். ஆனாலும் தாக்குதல் நடவடிக்கை முழுவதையும் பிரபாகரனே நெறிப்படுத்தினார்.
ஜுலை மாதம் 23ஆம் நாள், நள்ளிரவு. தலைவர் பிரபாகரனுடன் அன்றைய மூத்த தாக்குதற் தளபதிகளான செல்லக்கிளி, கிட்டு, புலேந்திரன், விக்டர், சந்தோசம் ஆகியோருடன் பதினான்கு விடுதலைப் புலி அதிரடி வீரர்கள், ஆயுத பாணிகளாக இயக்கச் சீருடை அணிந்து, யாழ்ப்பாண நகரிலிருந்து இரண்டு மைல் தொலைவிலுள்ள திருநெல்வேலியில் பலாலி – யாழ்ப்பாணம் வீதியோரமாக தாக்குதலுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். பொது வாகனங்களும் பாதசாரிகளும் வீதியில் செல்லாதபடி தடை ஒழுங்குகள் செய்து கேந்திர நிலைகளில் கண்ணி வெடிகளை புதைத்துவிட்டு, புலி வீரர்கள் நிலையெடுத்துக் காத்து நிற்கின்றனர்.
மாதகல் இராணுவ முகாமிலிருந்து சிறீலங்காவின் முதலாவது காலாட் படைப் பிரிவைச் சேர்ந்த பதினைந்து பேர்கொண்ட அணி ஒன்று இராணுவ வண்டித் தொடராக திருநெல்வேலி நோக்கி வந்து கொண்டிருந்தது. முதலில் ஒரு ஜீப் வண்டி, அதற்குப் பின்னால் ஒரு இராணுவ ட்றக் வண்டியாக, படையினர் பதுங்கி நிற்கும் புலி வீரர்களின் நிலையை அண்மிக்கின்றனர். புலிகளின் பதுங்கு காவல் நிலையை இராணுவ வாகனங்கள் கடந்தபோது, நிலக் கண்ணித் தகர்ப்பி அமுக்கப்படுகிறது. திருநெல்வேலியை அதிரவைத்த பயங்கர வெடியோசை. இராணுவ ஜீப் வண்டி காற்றில் உயர எகிறி, துண்டம் துண்டமாகச் சிதறி தரையிலே விழுகிறது. பின்னே வந்த ட்றக் வண்டி திடீரென நிற்கிறது. பீதியடைந்த படையினர் அச்சத்தோடு வெளியே பாய, புலிகளின் துப்பாக்கிச் சல்லடை அவர்களைப் பதம் பார்க்கிறது. ட்றக் வண்டியால் அவர்கள் வெளியே வர வர, அச்செட்டாகக் சுடுவதில் பெயர் பெற்ற பிரபாகரனின் துப்பாக்கி அவர்களிற் பலரை அடுத்தடுத்து வீழ்த்துகிறது. சில இராணுவத்தினர் வாகனத்துக்குக் கீழே தவழ்ந்து சென்று படுத்திருந்தபடி சிலாவிச் சுடுகிறார்கள். ஆனால் புலிகளின் எறிகுண்டுகள், அவர்களைச் செயலிழக்கச் செய்கின்றன.
துல்லியமான, இசையும் பிசகாத புலிகளின் போரியல் தேர்ச்சியை இத் தாக்குதல் பறைசாற்றியது. பதின்மூன்று சிங்களப் படையினர் அதே இடத்தில் கொல்லப்பட்டார்கள். இரண்டு பேருக்குப் படுகாயம். அந்த நாட்களில், சிங்கள இராணுவத்துக்கு இது ஒரு பெரும் உயிரிழப்பாக அமைந்தது. விடுதலைப் புலிகளின் தரப்பில் லெப்டினன்ட் செல்லக்கிளி இத் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.
செல்லக்கிளி அம்மான் (செல்வநாயகம்) அஞ்சா நெஞ்சம் படைத்த ஒரு வீரன். தலைசிறந்த தாக்குதற் தளபதி. தலைவர் பிரபாகரனின் இயம்பராயத் தோழன். ஆரம்ப காலப் போராட்ட வரலாற்றில் பல சாதனைகளைப் படைத்தவன். அந் நாளில் சிங்கள தேசத்தையே கிலிகொள்ளச் செய்த ஒரு வெற்றிகரமான கெரில்லாத் தாக்குதலுக்கு தலைமை தாங்கி, அத் தாக்குதலிலேயே களப் பலியாகிய அந்த வீரனின் மறைவு எமது இயக்கத்திற்கு ஒரு பேரிழப்பாகியது.
தமிழரின் இனப் பிரச்சினைக்கு இராணுவத் தீர்வே ஒரே வழி என்று உறுதியாக நம்பியிருந்த ஆட்சியாளருக்குத் தமிழ்ப் புலிகளின் கெரில்லா படையினரால் பதின்மூன்று சிங்கள இராணுவத்தினர் கொல்லப்பட்டமை, ஒரு பலத்த அடியாகப் பட்டது. ஜனாதிபதி ஜெயவர்த்தனா ஒரு கொடுங்கோலர். இரும்புப் பிடியோடு நாட்டை ஆண்டு கொண்டிருந்தார். அவருடைய மூத்த அமைச்சர்களான லலித் அத்துலத் முதலி, பிலிப் குணவர்த்தனா, சிறில் மத்தியூ, காமினி திஸநாயக்கா ஆகியோர், பெயர் பெற்ற இனவாதிகளாவர். தமிழர் போராட்டத்தை இராணுவ அடக்குமுறையால் நசுக்க வேண்டும் என்ற கொடிய கொள்கையைப் பலமாகப் பற்றிக் கொண்டிருந்தவர்கள். இத்தகைய தலைமையைக் கொண்டிருந்த ஆட்சி பீடத்துக்கு, தமிழருடைய ஆயுதக் கிளர்ச்சி வளர்ந்து சிங்களப் படையினரின் உயிர்களைப் பறிப்பது தாங்க முடியாத அவமானமாகப்பட்டது. இராணுவத்திடம் இருந்து கடுமையான பழிவாங்கல் நடவடிக்கை மின்னல் வேகத்தில் வரலாம் என்ற பதற்ற அங்கலாய்ப்போடு யாழ்ப்பாண மக்கள் எதிர்பார்த்து நின்றார்கள். எதிர்பார்த்தபடியே, மறுநாள், திருநெல்வேலியிலும் கந்தர்மடத்திலும் சீற்றச் சன்னதம் ஆடிய அரச படையினரால் 60 தமிழ்ப் பொதுமக்கள் ஈவிரக்கம் இன்றிப் படுகொலை செய்யப்பட்டார்கள். ஆனால் தலைநகர் கொழும்பில் இடம்பெற்ற இனக் கலவரத் தாக்குதல்களோடு ஒப்பிடும்போது, யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இராணுவ வெறியாட்டம் சிறு அளவிலானது என்றே கூறலாம். தலைநகரில் தொடங்கிய இனக்கலவரத் தாக்குதல்கள் நாடு முழுவதும் பரவி, இதுகாறும் நடைபெறாத அளவுக்குத் தமிழ் உயிர்களையும் உடமைகளையும் அழித்து ஒழித்தன.
கடந்த காலங்களிற்கூட, இனக்கலவர வன்முறைத் தாக்குதல்களுக்குத் தமிழ் மக்கள் அவ்வப்போது முகம் கொடுத்திருக்கிறார்கள். ஆனால், 83 ஜுலையில் இடம்பெற்ற இன அழிவு முன்பு நிகழ்ந்த எதனுடனும் ஒப்பிட முடியாத அளவுக்கு கொடுமையானதாக, குரூரமானதாக, மிகப் பெரியதாக அமைந்தது. விடுதலைப் புலிகளால் சிங்களப் படையினர் கொல்லப்பட்டதை ஒட்டி, திடீரென எழுந்த பழிவாங்கும் உணர்ச்சியாக இந்த இனக் கலவரம் காணப்படவில்லை. மாறாக, இனக்கொலை என்று வர்ணிக்கும் அளவுக்கு, அரசினால் ஏற்கனவே திட்டம் வகுக்கப்பட்டு, தருணம் பார்த்து நடத்தப்பட்ட கொடுந் தாக்குதலாக 83 ஜுலை வெறியாட்டம் காணப்பட்டது.
திருநெல்வேலித் தாக்குதலுக்குப் பின்பு உருவான பதற்ற நிலையை அரசு முடிச்சுப் போட்டுக் கையாண்ட விதம், அதன் விஷமப் போக்கை கோடிட்டுக் காட்டியது. இன வெறியைத் தூண்டும் செய்தி அறிக்கைகள் மறுநாள் பத்திரிகைகளில் தலைப்புச் செய்திகளாக தடித்த எழுத்தில் வெளிவந்தன. இவை சிங்கள மக்களிடையே கொதிப்புணர்வைக் கிளறி விட்டன. ‘வீழ்ந்த வீரர்கள்’ பதின்மூன்று பேரும், கொழும்பு பிரதான மயானமான கனத்தையில் பூரண இராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்படுவர் என்று அரசு அறிவித்தது. எண்ணுக்கணக்கற்ற சிங்களவர், தலைநகருக்குத் திரண்டு வர இது வழிவகுத்தது. ஆனாலும், அறிவித்தபடி மரணச் சடங்குகள் நடக்கவில்லை. இறந்த இராணுவத்தினரின் உடலங்கள் மயானத்துக்கு வந்துசேர்வது தாமதம் ஆயிற்று. இதன் பின், சம்பந்தப்பட்ட படையினரின் உடலங்களை உறவினர்களிடம் ஒப்படைக்கப் போவதாக அரசு அறிவித்தது. அடக்கத்துக்கு வந்து சேர்ந்த மக்களிடையே இது மனக் குழப்பத்தையும் பொறுமையின்மையையும் தோற்றுவித்தது. நேரம் செல்லச் செல்ல, பொறுமை எல்லை மீறத் தொடங்கியது. மாலையில் இருளத் தொடங்கியதும் சனக் கும்பல் கொதித்தெழுந்து வன்செயலில் இறங்கியது. கலவரம் இரத்தப் பிரளயமாக வளர்ந்தது. தமிழர்களைப் படுகொலை செய்வதும், சொத்துக்களை நிர்மூலமாக்குவதுமாக கொடும் செயல்கள் தொடர்ந்தன. இன வெறியாட்டம் தட்டிக் கேட்பாரின்றி நாள் கணக்கில் இழுபட்டது. தலைநகரில் தொடங்கிய இந்தக் குரூர வெறியாட்டம் அதே வடிவங்களில் தென்னிலங்கை மாவட்ட நகரங்களுக்கும் அலையாகப் பரவியது. தமிழர் மரணமும் தமிழர் சொத்துடமை அழிப்பும் எங்கும் தலைவிரித்தாடியது. பாதுகாப்பு எதுவுமற்ற நிலையில் மூவாயிரம் தமிழ் மக்கள் காட்டுமிராண்டித்தனமாகப் படுகொலை செய்யப்பட்டார்கள். பெரும்பாலான தமிழர்கள் சிங்களக் காடையர் கும்பல்களினால் கண்டதுண்டமாக வெட்டிக் கொல்லப்பட்டார்கள். அல்லது அடித்துக் கொல்லப்பட்டார்கள். பல தமிழ்க் குடும்பங்கள் உயிரோடு எரிக்கப்பட்டன. தமிழருக்குச் சொந்தமாயிருந்த ஆயிரக்கணக்கான வீடுகள், கடைகள், கட்டிடங்கள், கைத்தொழில் வளாகங்கள், சினிமாக்கள், எரிபொருள் நிலையங்கள் – எரித்து தரைமட்டம் ஆக்கப்பட்டன. கொழும்பு நகரில் 150,000 தமிழர்கள் இரவோடிரவாக வீடு வாசல் இழந்து அகதிகள் ஆனார்கள்.
கலகக்காரர்கள், கண்மூடித்தனமாகவோ தறிகெட்டோ தாக்கவில்லை. அவர்களது தாக்குதல்கள் நன்கு திட்டமிடப்பட்டு, நெறிப்படுத்தப்பட்டவையாக அமையப் பெற்றிருந்ததாக பார்வையாளர்கள் தெரிவித்தனர். கலவரக் கும்பல்களுக்குத் தமிழரின் வதிவிடங்கள், சொத்துக்கள், உடமைகள் தொடர்பான அச்செட்டான விபரங்கள் வழங்கப்பட்டிருந்தன. இந்த இனக் கலவரத்தில் அரச அதிகாரிகளின் கறைபட்ட கை கலந்திருந்தது என்பது தெட்டத் தெளிவாகியது. தலைநகரில் மட்டும் நூற்றுக்கும் அதிகமான தமிழரின் தொழிற்சாலைகளும் வர்த்தக நிலையங்களும் சாம்பல் மேடாக்கப்பட்டிருந்தன.
கொழும்பில் இனவெறிக் கலவரத்தை நேரில் கண்காணித்த, பிரித்தானிய ‘பைனான்சியல் டைம்ஸ்’ பத்திரிகையாளர் நிலைமையைப் பின்வருமாறு வர்ணித்தார்.
“வன்செயல், கொடியதாகவும் இரத்தக் களரியாகவும் தோற்றமளித்தது. ஏனைய ஆசிய நாடுகளின் கலவரங்களில் இருந்து இந்தக் கலவரத்தில் காணப்பட்ட தெளிவான வேறுபாடு என்னவென்றால், குறித்த வர்த்தகத் தலங்களை, கலகக் கும்பல்கள் அச்செட்டாகக் கண்டு பிடித்தமையே. கொழும்பிலே வீதிக்கு வீதி சென்ற கலகக் கும்பல்கள், தமிழருக்குச் சொந்தமான தொழிற்சாலைகளையும் வீடுகளையும் மட்டுமே தாக்கியமையாகும். அவர்கள் கவனமாக தேடித் தேடித் திரிந்தது ஏனென்றும் இப்போது புரிகிறது. ஒவ்வொரு வீதியிலும் குறித்த வர்த்தக வளாகம் தீ மூட்டப்பட்டிருக்கும். அடுத்து அமைந்திருக்கும் வளாகம் எந்தப் பாதிப்பும் இன்றி அப்படியே பத்திரமாக இருக்கும். அரச படைகளும் காவல்துறையினரும் ஒன்றில் கலகக்காரருடன் சேர்ந்து கொண்டார்கள். அல்லது பராக்குப் பார்த்த வண்ணம் வாளா நின்றார்கள்.” (பைனான்சியல் டைம்ஸ், 1983 ஆகஸ்ட் 12).
கொழும்புத் தலைநகரில் தமிழர்களது பொருளாதார அடித்தளத்தை நாசம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட செயற்பாடாகவே இந்த இனக் கலவரம் அமைந்தது எனலாம். இக் கலவரம் தமிழின அழிப்பையும் இலக்காகக் கொண்டிருந்தது. ஏனென்றால், தமிழர் என்ற தேசிய இன அடையாளத்தைக் குறிவைத்தே தமிழர்களின் உயிர், உடமைகள் அவர்களது பொருளாதார வாழ்வு ஆகியன அழிக்கப்பட்டன.
நாடு அடங்கிலும் தலைவிரித்தாடிய இனக் கலவர வன்செயல்கள் ஆறு நாட்கள் வரை தொடர்ச்சியாக நீடித்தன. ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்ட போதும் அதனைச் செயற்படுத்த சிங்கள ஆயுதப் படைகள் மறுப்புத் தெரிவித்தன.
தமிழர் வரலாற்றின் இந்த இருள் படிந்த காலத்தில், மிகவும் அருவருக்கத் தக்க சம்பவம் ஒன்று ஜுலை 25 அன்று வெலிக்கடைச் சிறையில் இடம்பெற்றது. சிங்களக் கைதிகள் சிறை அதிகாரிகளுடனும், சிறைக் காவலருடனும் கூட்டுச் சேர்ந்து, சிறைக் கூண்டுகளைத் தாக்கி உடைத்து 35 தமிழ்க் கைதிகளைக் கண்டதுண்டமாக வெட்டிக் கொன்றனர். சிங்களச் சிறைக் குற்றவாளிகளால் குத்திக் கிழிக்கப்பட்டு, அடித்து நொருக்கப்பட்டு மிருகத்தனமாக கொலை செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளில் நால்வர் முக்கியமானவர்கள். தங்கத்துரை, குட்டிமணி, ஜெகன் ஆகியோர் ஒப்பற்ற விடுதலைப் போராளிகள். மாவீரர்கள். தமிழீழ விடுதலை அமைப்பின் (ரெலோ) மூல பிதாக்கள். இன்னொருவர் கலாநிதி ராஜசுந்தரம். காந்தியம் அமைப்பை உருவாக்கியவர் இவர்.
இனக் கலவரம் ஒருவாறு ஓய்ந்து அடங்கியது. பாரிய குண்டுவீச்சினால் சிதைந்து போய், தீயினால் எரிந்து கருகிய நகரமாகக் கொழும்பு கோரக் காட்சியளித்தது. எலும்புக்கூடு போல கருகிய கட்டிடங்களின் மீதங்களில் இருந்து புகை மண்டலம் எழுந்து கொண்டிருந்தது. கலவர காலத்தில் வாய்மூடி மௌனிகளாக இருந்த சிங்கள அரசியல்வாதிகள் வாய் திறக்கத் தொடங்கியபோது, பாதிக்கப்பட்ட அப்பாவித் தமிழர்களுக்காக அனுதாபமான ஒரு வார்த்தை கூடத் தெரிவிக்கவில்லை. நேர்மாறாக, அரச அதிபர் ஜெயவர்த்தனா சிங்கள தேசத்திற்கு விடுத்த செய்தியில், திருநெல்வேலியில் வீழ்த்தப்பட்ட சிங்கள வீரர்களுக்காகக் கொடுக்கப்பட்ட நியாயபூர்வமான நஷ்ட ஈடாக தமிழருக்கு எதிரான கலவரக் கொடுமையை நியாயப்படுத்த முனைந்தார். தமிழ்த் தேசிய ஆன்மாவில் ஆழமான வடுவை ஏற்படுத்திய மாபெரும் துன்பியல் நிகழ்வாக இனக் கலவரம் முடிவுற்றது. என்றுமே சீர்செய்ய முடியாத அளவுக்கு இரு இனங்கள் மத்தியிலான உறவை, இக் கலவரம் நிரந்தரமாகப் பாதித்தது.
சிங்கள இனவாத அரசு அனைத்துலக சமூகத்தின் கண்டனத்திற்கு இலக்காகியது. காருண்ய மகான் புத்தரின் புண்ணிய பூமியில் மனிதத்துவமற்ற மிருகத்தனமான கொடுமைகள் எவ்வாறு சாத்தியமாயிற்று என உலகத்தின் மனச்சாட்சி திகைத்து நின்றது. இந்திய அரசு கடும் சினம் கொண்டது. இந்திரா காந்தி அம்மையார் தனது ஆழ்ந்த அங்கலாய்ப்பைத் தெரிவித்ததுடன், புதுடில்லி அரசின் ஆழ்ந்த அதிருப்தியை நேரில் எடுத்துக் கூறும் பொருட்டு வெளிவிவகார அமைச்சர் நரசிம்ம ராவோ அவர்களையும் கொழும்புக்கு அனுப்பி வைத்தார். தமிழ்நாடு உணர்ச்சி வசப்பட்டு கொதித்து வெடித்தது. சென்னையிலும் தமிழ் நாட்டின் ஏனைய நகரங்களிலும் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் குதித்தனர். இலங்கையிலுள்ள தங்களது தமிழ்ச் சகோதரர்களைக் காப்பாற்ற மத்திய அரசு இந்தியப் படைகளை அங்கு அனுப்ப வேண்டும் என தமிழ் நாட்டுத் தலைவர்கள் கோரிக்கை விடுத்தார்கள்.
1983 ஜுலை மாத இனக் கலவரப் பேரழிவானது, மடைவாயை உடைத்தோடிய பெருவெள்ளம் போல, தமிழ் தேசிய உணர்வை எங்கும் பிரவாகம் எடுக்கச் செய்தது. நாடுகள், கண்டங்களின் எல்லைகள் கடந்து இன உணர்வு ஈழத் தமிழர்கள் அனைவரையும் பற்றிக் கொண்டது. தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட தாங்கொணாக் கொடுமைகளை அறிந்து இரத்தம் கொதித்த தமிழ் இளம் சமூகம், ஆயுதம் தரித்த விடுதலைப் போரில் இணைந்து கொள்ள பல்லாயிரக்கணக்கில் அணி திரண்டனர். விடுதலைப் புலிகளின் படையணியில் நூற்றுக்கணக்கில் இளைஞர்கள் இணைந்தனர். புலிகளின் தலைமையின் கீழ் ஆயுதப் போராட்டத்தில் பங்குபற்ற பல்லாயிரம் பேர் துடித்தார்கள். பிரபாகரன் இந்த நிலைமையை மிகச் சாதுரியமாகக் கையாண்டார். தமது அமைப்பின் நிதி வளத்தின் வரம்புக்கு அப்பால் தனது கெரில்லாப் படையின் எண்ணிக்கையைப் பெருப்பிக்கக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார். அதேவேளை, தமிழ் நாட்டில் தலைமறைவாக செயலிழந்து ஒதுங்கியிருந்த போராளி அமைப்புகள், தங்கள் அணிக்கு ஆள் சேர்ப்பதற்கு இதை ஒரு பொன்னான வாய்ப்பாகக் கண்டன. செயற்படாதிருந்த இந்த அமைப்புகள் வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழ்ந்த ஈழத் தமிழ் மக்களிடமிருந்து பெற்ற நிதி உதவியுடனும் புதிதாகச் சேர்ந்த உறுப்பினரோடும், திடீரெனப் புனர்வாழ்வு பெற்று செயற்பட ஆரம்பித்தன.
கறுப்பு ஜுலை இனக் கலவரத்தை கட்டவிழ்த்து விட்டதன் மூலம் சிங்கள இனவாத சக்திகள், தமிழ்த் தேசிய மறுமலர்ச்சியைத் தோற்றுவித்ததுடன், தனியரசுப் போராட்டத்திற்கான அக – புற சூழ்நிலையையும் உருவாக்கிக் கொடுத்தன. இந்த இனக் கலவரம் தமிழீழ மக்களது அரசியல் வரலாற்றுப் பாதையை மாற்றி அமைத்தது மட்டுமன்றி, இந்தியத் தலையீட்டுக்கு வழி சமைக்கும் புறநிலையையும் ஏற்படுத்தியது.
உசாத்துணை
Arasaratnam. S. ‘Ceylon: The Modern Nation in Historical Perspective,’ New Jersey, 1964.
Basham. AL. ‘Prince Vijaya: Ariyanisation of Ceylon’, Ceylon Historical Journal Vol. No.3. January 1952.
De Silva. KM ‘A History of Sri Lanka’, Delhi 1981.
Dharmapala, A. ‘History of an Ancient Civilization’. Colombo, 1902.
Mendis. GC. ‘The Early History of Ceylon’. Colombo 1946.
Pathmanathan. S. ‘The Kingdom of Jaffna’. Colombo 1978.
Ponnambalam. S. ‘Sri Lanka: National Question and the Tamil Liberation Struggle’. Zed Books, London 1983.
Thambiah. HW. ‘Sinhala Laws and Customs’, Colombo 1946.