போர்க்கால சூழலில்தான் எதிரும் புதிருமான விசித்திர நிகழ்வுகள் இடம்பெறுவதுண்டு. வரலாற்றிலே கூட உருட்டுப் புரட்டுகள் நிகழ்வது இயல்பு. எனவே இலங்கைத் தீவில் இருந்து தப்பியோடிய நாம், இலங்கைக்கே இப்போது திரும்பி இருந்தோம் என்பதும், இந்தத் தடவை முற்றிலும் மாறான சூழ்நிலையில் நாம் திரும்பியிருந்தோம் என்பதும், எவருக்கும் ஆச்சரியம் தருவதாக இருக்கக் கூடாது. இப்போது எமது தளம் தமிழீழம் அல்ல. சிங்களத் தெற்கு ஆகும். ஒழுங்கைகளிலும் நெல்வயல்களிலும் நாம் வேட்டையாடப்படவில்லை. மாறாகக் கொழும்பில், ஐந்து நட்சத்திர உல்லாசப் பயணிகள் விடுதியின் சௌகரியங்களைச் சுகித்துக் கொண்டிருந்தோம். நண்பனாக இருந்து பகைவனாக மாறிய ஒருவருடனல்ல, பகைவனாக இருந்து நண்பனாக மாறிய ஒருவருடன் அலுவலில் ஈடுபட்டிருந்தோம். மேலும், போர் நோக்கத்துடனல்லாது, சமாதான நோக்கத்துடனேயே வந்திருந்தோம்.
கொழும்பிலே நடைபெற இருந்த அமைதிப் பேச்சுவார்த்தையில் பங்கெடுக்க இருந்த விடுதலைப் புலிப் பிரதிநிதிகளை வான் வழியாகக் கொழும்பிற்கு கொண்டு வருதற் பொருட்டுச் சீறிலங்கா விமானப் படை பெல் உலங்கு வானூர்தியில் 1989 மே 3ஆம் திகதி வன்னிக்குப் பறந்து கொண்டிருந்தபோது, இத்தகைய சிந்தனைகளே என் மனதில் நிழலாடிக் கொண்டிருந்தன. இந்திய ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியிருந்த தமிழீழத்தின் வான் எல்லைக்குள் கொழும்பிலிருந்து பறந்து கொண்டிருந்தோம். இன்னொரு உலங்குவானூர்தியில், தெரிவு செய்யப்பட்ட கொழும்பு ஊடகவியலாளர் அணி ஒன்று எம்மோடு கூட வந்து கொண்டிருந்தது.
இந்திய விமானப் படைக்குச் சொந்தமான இரண்டு இராட்சத MI-24 உலங்குவானூர்திப் போர்க்கலங்கள் எமது கலத்தை இடைமறித்து, பின்னர் ஓரளவு தூரத்தில் எம்மைப் பின்தொடர்ந்து வந்துகொண்டிருந்தன. இந்த முயற்சிக்காகச் சிறீலங்கா விமானப் படை இந்தியாவின் அனுமதியைக் கேட்கவில்லை என்பது எமக்குத் தெரியும். எனவே எமது பயணத்தின்போது வேண்டுமென்று அங்கு வந்து நேரடியாக அவமதிப்பதே இந்தியர்களின் எண்ணமாக இருந்தது. சிறீலங்கா விமானப் படையைப் பொறுத்த வரையிலே, தமது பிரதேசத்தின் மீது பறப்பது தமது இறைமை உரிமை என்று கருதியதால் அதன் தளபதிகள், தமிழீழ வான் எல்லைக்குள் தாம் செல்வதற்கு இந்தியரின் அனுமதியைப் பெறத் தேவையில்லை என்று முடிவெடுத்தனர். எனவே, கடுமையான ஆயுதம் தரித்த இந்திய உலங்குவானூர்திகளின் எதிர்பாராத திடீர் அச்சுறுத்தல் கிடைத்ததும், சிறீலங்கா அதிகாரிகள், திகைத்துப் போனார்கள். ஆனால், இந்த மிரட்டல் ஊடுருவலைப் பொருட்படுத்தாது சிங்கள விமானிகள் அமைதியாகத் தமது பயணத்தைத் தொடர்ந்தார்கள். வன்னி வரைபடத்தை நுணுக்கமாக உசாவிய வண்ணம் தங்கள் இலக்கை நோக்கி அவர்கள் பறந்து கொண்டிருந்தார்கள்.
எமது பார்வையில் எமது வான் பயணத்தோடு இந்தியர்கள் வந்து சொருகப் பார்த்தமை ஒரு பகைமையான செயலாகவே பட்டது. புலிகளுக்கும் பிரேமதாசாவுக்கும் இடையிலான இந்தத் தொடக்க நிலை உறவை இந்தியர்கள் அதிருப்தியோடும் ஐயுறவோடும் நோக்குவதை உணர்த்துவது போலவும் இருந்தது. பிரேமதாசாவுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே அரும்ப முற்படும் இந்தப் பேச்சுவார்த்தையைத் தான் வரவேற்பது போலப் பகிரங்கமாகக் காட்டிக்கொண்டாலும், இலங்கையின் குழப்பமான அரசியலில் தனக்குப் பெரும்பங்கு இருக்கும் என்பதையும், தான் ஒரு பிரதேச வல்லரசு என்ற நிலையை வலியுறுத்தும் என்பதையும் இரு தரப்பினருக்கும் தனிப்பட்ட முறையில் இந்தியா செய்தியனுப்புவது போல இந்தச் செயல் அமைந்தது.
இந்திய உலங்குவானூர்திகள் தங்கள் உள் நோக்கத்தைத் தெளிவாக உணர்த்திய பின், நீல வான வெப்ப மங்கலுக்குள் சென்று மறைந்தன. எமது பயணம் தொடர்ந்தது. வெய்யிலில் உலர்ந்த நெல் வயல்களைக் கடந்தும், வேயப்பட்ட மண் குடிசைகள் கொண்ட சிற்றூர்களைக் கடந்தும், நெடுங்கேணிக் காட்டில் உள்ள எம் இலக்கை நோக்கித் தொடர்ந்து பறந்தோம். வானத்தில் இருந்து பார்க்கும்போது, கீழே அடர்த்தியான பசுமைக்காடு, ஆங்காங்கே ஏரிகள், சதுப்பு நிலங்கள், திறந்த வெளிகள், இப்படிப் பலதும் சேர்ந்த ஒரு படுக்கை விரிப்பாகத் தரை காட்சியளித்தது. இந்த அடர்த்தியான பச்சைக் குடை விரிப்பின் கீழ், தங்கள் பதுங்கு குழிகளில் இருந்தபடி, நூற்றுக்கணக்கான எமது கெரில்லாப் போராளிகள் எமது உலங்குவானூர்திகள் மேலே வட்டம் அடிப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். எம்மவர்களை ஏற்ற வேண்டிய பகுதிக்குள் வந்துவிட்டோம்.
கொழும்பிலிருந்து நாம் புறப்படுமுன், சிறீலங்கா இராணுவ அமைப்புடன் செய்து கொண்ட ஏற்பாட்டின்படி, காட்டுக்குள் ஒரு வெட்ட வெளியில், எமது போராளிகள் ஒரு பெரிய வெள்ளைச் சிலுவை அடையாளம் தரையில் வரைய வேண்டும் என்றும், உலங்குவானூர்தி ஓட்டிகளுக்கு, பாதுகாப்பான இறங்கு தளத்தை அது சுட்டிக்காட்டும் என்றும் ஏற்பாடாகியிருந்தது. உலங்குவானூர்திகள் மீண்டும் சுற்றிச் சுற்றி வந்தன. ஆனால் வெள்ளைச் சிலுவை அடையாளம் மட்டும் தெரியவில்லை. ஒரு பகுதியிலிருந்து அடுத்த பகுதிக்குச் சென்று, இறங்கு தளத்துக்கான அடையாளத்தைக் கீழேயுள்ள காட்டில் தேடிக் கொண்டிருக்கும் போது, எரிபொருள் செலவாகிக் கொண்டிருந்தது. தேடல் தொடரத் தொடர போராளிகளைச் சந்திக்கப்போகிறோம் என்ற எமது துடிப்பு, வரவர மங்கத் தொடங்கியது. பரந்திருக்கும் காட்டுப் பரப்பைத் தேடிக் கொண்டே இந்ததால், எரிபொருள் தீர்ந்துவிடப் போகிறதே என்ற ஆதங்கம்! விமானிகள் தங்கள் இலக்கைத் தவற விட்டுவிட்டார்களா? எமது போராளிகள் தவறு இழைத்து விட்டார்களா? எதுவாக இருந்தாலும் பரவாயில்லை. எரிபொருள் இருக்கும்போது தரையிறங்கும் தளத்தைக் கண்டுபிடித்து விடவேண்டும் என்று தவித்தோம். முயற்சியை இனிக் கைவிட வேண்டும் என்று விமானி யோசிக்கும்போது, எட்டத்தில் ஒரு சிவப்புப் புள்ளியைக் கண்டோம். பெல் உலங்குவானூர்தி அதை நோக்கிச் செல்லும்போது, எமது கவனத்தை ஈர்க்க அதீத பிரயத்தனத்தோடு செங்கொடி ஒன்றை ஆட்டிக் கொண்டிருக்கும் ஓர் இளைஞராக அந்தச் செம்புள்ளி விரிந்தது. விரைவில், பச்சை மரங்களூடாக வெள்ளைச் சிலுவைக் குறியும் தெரிந்தது. குறுகிய எல்லைக்குள் செயற்படும் வாக்கி – ரோக்கியை பாலா எடுத்து எண்களை அழுத்தினார். “ஹலோ, பாலா அண்ணா, நீங்கள் பேசுவது கேட்கிறது” என்று குரல் அதில் கேட்டதும் பாலாவின் முகம் மலர்ந்தது.
உலங்குவானூர்திகள் இரண்டும் மெதுவாகக் கீழே இறங்கத் தொடங்க, திறந்த இறங்கு தளத்தைச் சூழவுள்ள மரங்கள் பற்றைகளுக்குப் பின்னே நிற்கும் எமது போராளிகளின் முகங்கள் தெளிவாகத் தெரியத் தொடங்கின. அந்தப் பகுதியை மேலோட்டமாகச் சுற்றிப் பார்த்ததும், இன்னமும் நாம் இந்தியாவுடனும் சிறீலங்காவுடனும் போராடிக் கொண்டிருப்பது நினைவுக்கு வந்தது. திடீர் இராணுவ நடவடிக்கையில் இந்தியப் படைகள் ஈடுபடலாம் என்ற எதிர்பார்ப்பில், அந்தப் பகுதியைப் பாதுகாப்பதற்காக நூற்றுக்கணக்கான பலத்த ஆயுதம் தரித்த போராளிகள் நிலைப்படுத்தப்பட்டிருந்தார்கள். உலங்கு வானூர்திகளில் வந்திறங்குபவர்கள், தாம் எதிர்பார்த்த உண்மையான பயணிகளே என்று கவனமாக உறுதி செய்துகொண்ட எம் போராளிகள், காட்டு மறைவிலிருந்து, தட்டுகளில் கேக், பிஸ்கற், ஆகியவை ஏந்திக் கொண்டு வரவேற்க ஓடிவந்தார்கள். தூரக் காட்டின் நடுவிலும், தமிழ் மக்களின் காலாகால விருந்தோம்பல் பண்போடு, ஊடகவியலாளருக்கும் விமானிகளுக்கும் சிற்றுண்டிகளும் குளிர்பானமும் இளநீரும் பரிமாறினார்கள். அதே சமயம், புதிதாக வந்தவர்களைப் பற்றி அறிய ஆர்வம் உடையவர்களாகவும் இருந்தார்கள். என்ன இருந்தாலும் பதினெட்டு மாதங்களாக, காட்டு மறைவிடங்களில் இருந்த பின், முதல் தடவையாக நட்புறவோடு வருபவர்களை இவர்கள் சந்திக்கிறார்கள். சிறீலங்கா உலங்குவானூர்திகளையும் விமானிகளையும் பார்ப்பதிலும் அவர்கள் ஆர்வமாக இருந்தார்கள். தமிழ்ப் பிரதேசத்துக்கு மேலாக நட்புறவான நோக்கத்தோடு இந்த வான் கலம் வருவதும் அவர்களுக்கு விசித்திரமாகவே பட்டது. இந்த பெல் உலங்குவானூர்திகள் பயங்கரத்தையும், மரணத்தையும் தமிழ் மக்களிடையே தோற்றுவிப்பன. எனவே அதன் மட்டில் போராளிகள் கவனமாகவே இருக்க வேண்டும். இந்த உலங்குவானூர்தியில் பொருத்தப்பட்டிருந்த ஐம்பது கலிபர் யந்திரத் துப்பாக்கிகளும் றொக்கெற் ஏவிகளும் பெருந்தொகையில் தமிழ் மக்களை வானிலிருந்து கொன்றும், ஊனமடையச் செய்தும் இருக்கின்றன. நூற்றுக்கணக்கான கட்டிடங்களை வெறும் கற்குவியல் ஆக்கியிருக்கின்றன. இன்னொரு விசித்திரம் என்ன என்றால், சிங்கள விமானிகளும் விடுதலைப் புலிப் போராளிகளும் தம்மிடையே நடந்ததை மறந்து ஒருவரை ஒருவர் குசலம் விசாரித்தமையாகும். இதற்கு நேர்மாறாக, அண்மையிலே கூட ஒருவரை ஒருவர் கொல்லும் பொருட்டு, துப்பாக்கி வேட்டுப் பரிமாற்றம் நடத்திய சம்பவங்களே இடம்பெற்றன.
கொழும்புப் பேச்சுவார்த்தைகளில் பாலாவுக்கு உதவியாக நியமிக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் அரசியற் பிரிவைச் சேர்ந்த மூத்த உறுப்பினர்களான திரு. யோகரெத்தினம் யோகி, திரு. பரம மூர்த்தி ஆகியோரும் அவர்களது மெய்ப் பாதுகாவலரும் தொலைத்தொடர்புக்குப் பொறுப்பாக திரு. ஜுட்டும் வரிப் புலிச் சீருடைகளுடன் காட்டு மறைவிடங்களில் இருந்து வெளியே வந்தனர். இவர்களை அழைத்துச் செல்லவே இந்த உலங்குவானூர்திப் பயணம் மேற்கொள்ளப்பட்டது.
வணக்கமும், வாழ்த்தும் மாறி மாறிப் பரிமாறிக் கொள்ளப்பட்டன. நிழற்படங்கள் பிடிக்கப்பட்டன. ஆனால், எரிபொருள் தீர்ந்து போவதற்கு முன்னர், உலங்குவானூர்திகளை தமது பகுதிக்குள் கொண்டு போய்விட வேண்டும் என விமானிகள் பதறியபடியே இருந்தார்கள். எனவே நெடுங்கேணிக் காட்டில் இறங்கிய அரைமணி நேரத்தில், மீண்டும் பறந்த உலங்குவானூர்தியில் யோகியும், மூர்த்தியும் ஏனைய போராளிகளும் எம்மோடு சேர்ந்து சிங்களத்தின் தலைநகரான கொழும்பு நோக்கிப் பறந்து கொண்டிருந்தார்கள். விடுதலைப் புலிகளுக்கும் சிங்கள, அரசுக்கும் இடையே நடைபெற்ற கொடிய யுத்த வரலாற்றில் பிரமிக்கத்தக்க புதியதொரு அத்தியாயம் திறந்தது. இரண்டு மணி நேரம் கழித்து, தலைநகரின் நடுவில், கொழும்பு விமானப் படைத் தலைமைப் பணிமனை மைதானத்தில் உலங்குவானூர்தி தரை இறங்கியது. விமானப் படை மைதானத்தில் ஊடகவியலாளருடன் உரையாடிய பின், சிறப்பு அதிரடிப் படையினரின் கடும் பாதுகாப்பு ஏற்பாட்டோடு, ஏற்கனவே ஒழுங்கு செய்யப்பட்ட கொழும்பு ஹில்டன் உல்லாசப் பயணிகள் விடுதிக்கு நாம் கொண்டு செல்லப்பட்டோம். அங்கிருந்து, விடுதலைப் புலிகளுக்கும், பிரேமதாசா அரசுக்கும் இடையே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முதல் பேச்சுவார்த்தைக்கு ஆயத்தம் செய்வதே திட்டமாக இருந்தது.
வடக்கிலும் தெற்கிலும் கொந்தளிப்பு
அதிசயிக்கத்தக்க வகையில், யாழ்ப்பாணத்தில் இருந்து நாம் தப்பி, மேற்குலகம் திரும்பியபின், பாலாவும் நானும் பல நாடுகளுக்குப் பயணம் புரிந்திருந்தோம். அங்கெல்லாம், புலம்பெயர்ந்த தமிழ் மக்களையும், வெவ்வேறு அரசுகளின் அதிகாரிகளையும் அரச சார்பற்ற அமைப்புக்களின் அதிகாரிகளையும் சந்தித்து, இந்தியத் தலையீட்டால் ஏற்பட்ட பிரச்சினைகளையும், அதனால் விளைந்த கொடிய சம்பவங்களையும், இவை அனைத்தும் விடுதலைப் புலிகளுக்கும், இந்திய ‘அமைதி காக்கும் படைக்கும்’ இடையே எதிர்பாராத வகையில் பகைமைப் போராக மாறியதையும், எல்லோருக்கும் விளக்கிக் கூறினோம். வெளிநாடுகளில் இந்தப் பரப்புரைச் சுற்றுலாவை நாம் புரிந்து கொண்டிருக்கும் காலத்திலே இலங்கையிலே நிலைமை சீரழிந்தது. நீடித்துச் செல்லும் வன்செயல், மற்றும் அரசியல் உறுதியின்மை என்ற சகதியில், நாடு கீழே கீழே புதைந்து கொண்டிருந்தது. இலங்கை இனப் பிரச்சினைக்குள் இந்தியா தனது மூக்கை நுழைத்திருந்தது. தமிழர் தாயகத்தை இந்தியப் படைகள் ஆக்கிரமித்து நின்றன. இவை காரணமாக வடக்குக் கிழக்கில் தமிழ் மக்களின் ஆயுத எதிர்ப்புப் போராட்டம் தீவிரமாகியது. தெற்கில், இந்தியத் தலையீட்டுக்கு எதிராக கடுப்படைந்த சிங்கள இளைஞர்கள் வெளிப்படையாகக் கிளர்ச்சி செய்தார்கள். ரஜீவ் காந்தியின் நிர்வாகம், இந்த நாட்டின் இரண்டு இனங்களினதும் தேசிய உணர்வின் ஆழத்தையும், அரசியல் விழிப்புணர்வையும் முற்றாகக் குறைத்து எடை போட்டிருந்தது, இந்திய-இலங்கை ஒப்பந்த நிபந்தனைகளுக்கு அமைவாக இந்திய இராணுவத்தை ‘அமைதி காக்கும் படை’ என்ற பெயரில் புகுத்தியமை, ரஜீவ் நிர்வாகத்தின் மிக மோசமான அரசியல், இராஜதந்திரக் குளறுபடி என்று கூறலாம். துரதிர்ஷ்டவசமாக, இந்தியப் படையின் வருகையால் வடக்கிலும் தெற்கிலும் கொடிய வன்செயல்கள் தாண்டவமாடின. அத்துடன் இந்திய இராணுவம், அமைதிப்படை என்ற தனது தகைமையை இழந்து அடக்குமுறைப் படையாகவும் வன்முறைப் பூதமாகவும் உருவெடுத்தது. தமிழரதும், சிங்களவரதும் உள்நாட்டு விவகாரங்களில் இந்தியா தலையிட்டுள்ளதால், வடக்கிலும் தெற்கிலும், இரு முனைகளிலும் இந்தியாவுக்கு எதிராக எதிர்ப்பியக்கம் கிளர்ந்தது.
தமிழ் மக்களின் அபிலாசைகளைப் புறக்கணித்த நிலையில், சிங்கள அரசாங்கமானது இந்திய இராணுவப் படைகளோடு கூட்டுச் சேர்ந்து, இந்திய – இலங்கை ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த முற்பட்டது; வடகிழக்கின் குடியியல் நிர்வாகத்துக்கான மாகாண சபையை நிறுவவும் முற்பட்டது. மாகாண சபைத் தேர்தல்கள் 1988, நவம்பர் 19ஆம் திகதியன்று, இந்திய இராணுவ நிர்வாகத்தின் ஏவலிலும் மேற்பார்வையிலும் நிகழ்ந்தன. போரும் பீதியும், மிரட்டலும் தாண்டவமாடிய சூழலில் நடத்தப்பட்ட இந்தத் தேர்தல், ஜனநாயக நடைமுறையையே நையாண்டி செய்தது. வாக்கு மோசடி, வாக்குப் பெட்டித் திணிப்பு, ஆகியவையோடு வேறும் தில்லுமுல்லுகளோடும் இந்திய ஆதரவில் செயற்பட்ட ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பீ.ஆர்.எல்.எஃப்) தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்தது. வடக்குக் கிழக்கு மாகாண சபையிலே இந்தியச் சார்புடைய அரசியல் கட்சி ஒன்று ஆட்சியில் அமர்த்தப்பட்டு, அதன் தலைவராக கைப்பொம்மை அரசியல்வாதி ஒருவர் பொறுப்பேற்றார். அது சந்தேகத்தைத் தீர்த்து, திருப்தியை உண்டுபண்ணுவதற்கு பதிலாக, தமிழ் மக்களிடையே இந்தியா மட்டில், கோபத்தையும், கண்டனத்தையும் தோற்றுவித்தது. தமிழர் தாயகத்தில் இந்திய இராணுவ ஆக்கிரமிப்பின் ஒரு அரசியல் விரிவாக்கமாகவே ஈ.பீ.ஆர்.எல்.எஃப் இன் மாகாண நிர்வாகம் செயற்பட்டது. இந்திய நலன்களுக்கே அது முதலில் சேவகம் புரிந்தது. அமைதிப் படையின் இராணுவ ஒடுக்குமுறையையும் சித்திரவதையையும் மறைக்கும் மூடு திரையாக அது செயற்பட்டது. இன்று பரிகசிப்புக்கு உள்ளாகியிருக்கும் இந்திய – இலங்கை ஒப்பந்தத்துக்கு சட்ட அங்கீகாரம் வழங்கும் முறையிலும் அந்த ஆட்சி செயற்பட்டது. ஆயுதம் தரித்த ஈ.பீ.ஆர்.எல்.எஃப் அணியினர் இந்திய இராணுவத்தின் கூலிப் படையாகவும் விடுதலைப் புலிகளை நசுக்கும் முயற்சியில் இந்தியரின் கூட்டாளிகளாகவும், தமது ஆட்சியைக் கண்டிப்பவர்களைக் கொன்றொழிப்பவர்களாகவும் செயற்பட்டனர். ஈ.பீ.ஆர்.எல்.எஃப் இன் துரோக அரசியலையொட்டி மக்கள் அவர்கள் மீது வெறுப்பும் ஆத்திரமும் அடைந்தார்கள். இறுதியாக இந்திய ஆக்கிரமிப்பு இராணுவத்தின் கொலையாளிக் குழுவாகவும், ஈ.பீ.ஆர்.எல்.எஃப் தொழில் புரிந்தது. அவர்களைக் கண்டித்தவர்களும், கருத்து வேறுபட்டவர்களும் திடீரென்று காணாமற் போனார்கள். அவர்களைப் பற்றிப் பின்னர் என்றுமே விபரம் வெளியாகவில்லை. விடுதலைப் புலி ஆதரவாளர்கள் என்று பெயர் பெற்றவர்கள், தங்கள் வீடுகளிலோ, வீதிகளிலோ கொலையுண்டு காணப்பட்டார்கள். இந்தப் பயங்கர ஆட்சியின் விளைவாக, விடுதலைப் புலிகளுக்கான மக்கள் ஆதரவு பெருகியது. இந்திய இராணுவ ஆக்கிரமிப்புக்கும், அதன் கைப் பொம்மைகளான ஆட்சியாளருக்கும் எதிராகப் புலிகள் நடத்திய போராட்டத்துக்கு மக்கள் ஆதரவு திரண்டது. தமிழ் மக்களால் புறக்கணிக்கப்பட்டவர்களாக, சிங்கள அரசினால் கைவிடப்பட்டவர்களாக, வரதராஜப்பெருமாளின் வடக்கு கிழக்கு மாகாண நிர்வாகம் மக்களிடையே தாக்குப் பிடிக்க முடியவில்லை. மாறாக, திருகோணமலை நகர எல்லைக்குள் ஒரு சதுர மைல் பரப்பில், இந்திய ஆக்கிரமிப்பு இராணுவத்தின் பாதுகாப்புக் கவிகையில், அந்த நிர்வாகம் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டது.
முன்னெப்போதும் நிலவாத சமூக அரசியல் சீரழிவு, இந்தக் காலப் பகுதியில் இலங்கையைச் சின்னாபின்னப்படுத்தியது. பன்னிரண்டு ஆண்டுகள் ஐக்கிய தேசியக் கட்சி (யூ.என்.பி) ஆட்சியை வழிநடத்திய ஜே.ஆர் ஜெயவர்த்தனா, தமது வாரிசாகப் பதவியில் அமர்த்திய ரணசிங்க பிரேமதாசா அவர்களிடம் இந்தச் சீரழிவையே அரசியல் முதிசமாகக் கையளித்தார். சிறீலங்காவின் இரண்டாவது நிறைவேற்று அதிகார அரசுத் தலைவராக 1988 டிசம்பர் 20இல் பிரேமதாசா தேர்ந்தெடுக்கப்பட்டபோது, மட்டு மீறிய நெருக்கடி நிலையை அவர் முகம் கொடுத்தார். நாடு பூராகவும் குழப்பம். அமைதியின்மை, என்றுமே, நிலவாத அத்துணை வன்செயல்கள் ஆகியவை அவரை எதிர்கொண்டன. வடக்குக் கிழக்கில், இந்தியாவுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் போர் தீவிரமாக நடந்து கொண்டிருந்தது. ஒரு இலட்சத்துக்கும் அதிகமான இந்திய அமைதிப் படை, பொதுமக்கள் ஆதரவுடனும் அர்ப்பணிப்போடும் செயற்பட்டுக் கொண்டிருந்த விடுதலைப் புலிகளை அடக்க முடியாது திணறிக் கொண்டிருந்தது. தென்னிலங்கையில் அரசுக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியின் (ஜனதா விமுக்தி பெரமுன) ஆயுதம் தரித்த வன்முறைக் கிளர்ச்சி வேகம் பெற்றிருந்தது. சிறீமாவோ பண்டாரநாயக்கா அம்மையாரின் 1971ஆம் ஆண்டு ஆட்சியின் போது, புரட்சி செய்து நசுக்கப்பட்ட மார்க்சிய போராளி அமைப்பான ஜே.வி.பி மீள முளைவிட்டு வளர்ந்து பல சிங்கள மாவட்டங்களில் குழப்பத்தையும் கிளர்ச்சியையும் ஏற்படுத்தி வந்தது. படுகொலைகள், வன்செயல்கள், ஆகியவை மூலம் பொதுமக்கள் மீது பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்துவிட்ட இந்த மார்க்சியப் புரட்சியாளர்கள், தெற்கில், பல மாவட்டங்களை விடுதலை செய்திருந்ததோடு, அரசின் நிர்வாக அமைப்பினைச் செயலிழக்கச் செய்திருந்தனர். இரத்தச் சகதி நிறைந்த அவர்களது வன்செயலில் ஆயிரமாயிரம் பேர் உயிரிழந்தார்கள். அரசியற் படுகொலைகள், விளக்குக் கம்பக் கொலைகள், பொதுப் புதைகுழிகள், சித்திரவதைக்கும், உறுப்புச் சிதைப்புக்கும் உள்ளாகி நதிகளில் மிதந்த பிணங்கள், எரியும் ரயர்களால் வீதிகளில் சிதை மூட்டப்பட்டு இறைந்து கிடக்கும் மனிதக் கருகல்கள், காணாமற் போதல்கள் ஆகிய இவையெல்லாம் ஜே.வி.பியின் கிளர்ச்சி வன்செயலினதும், அரச பாதுகாப்புப் படைகளினது முறியடிப்புக் குரூரத்தினதும் பிரதிபலிப்புகளாக வடிமெடுத்தன. இவற்றின் சிகரமாக, கிளர்ச்சியாளர்கள் ஹர்த்தாலுக்கு ஆணையிட்டார்கள். அதன் விளைவாகச் சாதாரண மக்கள் சமுதாயம் முடங்கியது. பொது நிர்வாகம் கடும் பாதிப்புக்கு உள்ளாகியது. சமுதாயமே ஸ்தம்பிதம் அடைந்தது. கிளர்ச்சியாளரின் ஆணைக்கு அமையாவிட்டால் தண்டனை கடுமையாகியது. அதன் குரூரம் மக்கள் மனதில் பேரச்சத்தைத் தோற்றுவித்தது. ஜே.வி.பியின் வன்செயல் பரவ, காவல்துறை நிலையங்கள் தாக்கப்பட்டன. பல்கலைக் கழகங்களும், கல்லூரிகளும் மூடப்பட்டன. பொதுப் போக்குவரத்து திடீரென நின்றது. தலைநகர் கொழும்பு தவிர்ந்த பெரும்பாலான மாவட்ட மையங்கள், ஜே.வி.பியின் கிளர்ச்சியால் வெகுவாகப் பாதிக்கப்பட்டன. கிராமப்புறங்களைக் கைப்பற்றிய பின், நகரத்தைச் சுற்றி வளைக்கும் மாவோவின் கெரில்லா முறையின் சீரிய வடிவத்தைக் கடைப்பிடித்து, புதிதாகப் பதவியேற்றிருந்த, பிரேமதாசா அரசுக்கு உடனடி அச்சுறுத்தலாக ஜே.வி.பி கிளர்ந்தது. 1971இல் கடைப்பிடித்த வழியை ஜே.வி.பியினர் இம்முறை தேர்ந்தெடுக்கவில்லை. வர்க்க முரண்பாட்டுப் பிரச்சினையையோ, பாட்டாளிப் புரட்சியையோ, முதலாளித்துவ அரசுக்கு எதிரான தமது கிளர்ச்சிப் போராட்டத்தின் மையக் கருத்தாக அவர்கள் இந்தத் தடவை முன்வைக்கவில்லை. சிறீலங்காவின் வடக்குக் கிழக்கில் இந்திய இராணுவ ஆக்கிரமிப்பே அடிநாதப் பிரச்சினையாக முன்வைக்கப்பட்டது. சிங்கள இனத்தின் பரிசுத்த பூமியை இந்திய ஏகாதிபத்தியவாதிகள் ஆக்கிரமிக்க யூ.என்.பி ஆளும் வர்க்கத்தினர் இடமளித்திருப்பதாகவே ஜே.வி.பியினர் குற்றம் சுமத்தினர். இந்தியாவின் கேந்திர அபிலாசைகள் பற்றிக் காலாகாலமாகவே சந்தேகப்படும் சிங்களப் பொதுமக்கள், இந்த அதிதீவிர தேசியவாதப் பரப்புரையால் ஈர்க்கப்பட்டார்கள். ஓர் அந்நிய வல்லரசுக்குச் சிறீலங்காவின் இறைமையைத் தாரை வார்த்துக் கொடுத்த அடிமைச் சாசனமாகவே இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை, ஜே.வி.பி தலைமை கண்டித்தது. பிரேமதாசா அரசுத் தலைவராகப் பதவி ஏற்கும் வேளை, தலைநகரைத் தாக்க ஜே.வி.பியின் ‘செம்படை’ உண்மையில் தயாராக நின்றது.
பிரேமதாசா அவர்கள் தந்திரமும் அனுபவமும் கொண்ட அரசியல்வாதியாவார். வடக்கிலே விடுதலைப் புலிகளின் போருக்கான அடிப்படைக் காரணத்தையும், தெற்கிலே ஜே.வி.பியின் கிளர்ச்சிக்கான காரணத்தையும் அவர் புரிந்து கொண்டார். கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த திருகோணமலை உள்ளடங்கலாக வடக்குக் கிழக்கு மாநிலங்களில் அனைத்து எட்டு மாவட்டங்களையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்ட இந்திய அமைதிப் படையின் பிரசன்னமே, வடக்கிலும் சரி, தெற்கிலும் சரி, வன்செயலுக்கான இயக்கத்தைத் தூண்டிவிட்டிருந்தது என்ற சரியான முடிவுக்கு அவர் வந்தார். இந்தியப் படைகளைக் களைப்புறச் செய்து, வலுவிழக்கச் செய்யும் நோக்குடனேயே விடுதலைப் புலிகளின் கெரில்லாப் போர் வடிவெடுத்தது. இப்போர் தீவிரம் குறைந்து இழுபட்டுச் செல்லும் போராட்டமாக மாறிவிட்டிருந்ததால், இந்தியப் படைகள் கால வரையறையின்றி இலங்கை மண்ணிலே தரித்து விடக்கூடும் என்றும் பிரேமதாசா அஞ்சினார். இந்திய – இலங்கை ஒப்பந்தமோ, இந்திய இராணுவத்தின் பிரசன்னமோ இனப் பிரச்சினையைத் தீர்த்து வைக்க மாட்டாதென்றும், அவர் கருதினார். வெளிநாட்டு இராணுவத் தலையீட்டுக்கும் ஆக்கிரமிப்புக்கும், காரணம் சிங்கள அரசியல் தலைமையிடம் தூரநோக்கோ மன உறுதியோ இல்லாமையே என்றும் அவர் நினைத்தார். இந்தியப் படைகளை நாட்டிலிருந்து வெளியேற்றி விட்டு வடக்கிலும் தெற்கிலும் உள்ள போராளிகளை அமைதிப் பேச்சுவார்த்தைக்கும் நல்லிணக்கத்துக்கும் வருமாறு அழைக்க வேண்டும் என்பதே அவருடைய உடனடி நோக்கமாக இருந்தது.
பிரேமதாசாவின் பூர்வீகத்தைப் பார்க்கும் போது, அவரை ஒரு ‘சாதாரண மனிதராகக்’ கணிப்பிடலாம். இருப்பினும் பிரேமதாசாவில் இருந்த அந்தச் சாதாரண மனிதம் ஆழமான சிங்கள பௌத்த உணர்வுகளைக் கொண்டிருந்தது. அவருடைய பதவிப் பிரமாண வைபவம் 1989 ஜனவரி 2இல் இடம்பெற்றது. சிங்கள பௌத்தத்தின் இதய பூமியான கண்டியில், பற்கோவிலான தலதா மாளிகையில் தமது பதவிப் பிரமாண வைபவத்தை நடத்த அவர் ஒழுங்கு செய்ததில் இருந்தே அவருடைய பௌத்த உணர்வுகள் தெளிவாகத் தெரிந்தன. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் தலம் தேர்ந்தெடுக்கப்பட்டமை, அவருடைய அரசியல் இலக்குகளின் விசாலத்தை உணர்த்தின எனலாம். புனிதப் பற்கோவிலைத் தமது தனிப்பட்ட வாழ்வின் முக்கிய நாளன்று தேர்ந்தெடுத்தமை பௌத்தம் மட்டில் அவருடைய ஆழ்ந்த பற்றையும், அரச அலுவல்களை விட மதத்துக்கு முதன்மை அளிக்கும் பௌத்த மரபை அவர் முக்கியத்துவப்படுத்துவதையும் காணலாம். வரலாற்று பூர்வமாக ஆழப் பதிந்துள்ள சிங்களத் தேசிய உணர்வுகளை வெளிப்படையாக இது முன்னிலைப்படுத்துவதாகும். வடக்குக் கிழக்கை இந்திய இராணுவம் ஆக்கிரமித்திருப்பது தொடர்பாக நாடு பூராவும் வெளிப்படுத்தப்பட்ட எதிர்ப்பு உணர்வையே பிரேமதாசாவும் கொண்டிருந்தார் என்று கூறலாம். வெளிநாட்டு ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வரலாறு படைத்த கண்டியை, பிரேமதாசா தெரிவு செய்ததன் மூலம் இந்தியப் படைகளின் ஆக்கரமிப்பைத் தாமும் எதிர்ப்பதையும் நாட்டிலிருந்து அந்தப் படைகளை வெளியேற்றத் தாம் எண்ணியிருந்தார் என்பதையும் பிரேமதாசா தெளிவாக எடுத்துணர்த்தினார். இந்திய – இலங்கை ஒப்பந்தத்துக்கும், நாட்டில் இந்தியத் தலையீட்டை ஆழமாக்கும் எந்த அரசியல் ஏற்பாட்டுக்கும் பிரேமதாசா தொடர்ச்சியாக எதிர்ப்பைத் தெரிவித்து வந்தார் என்பது கொழும்பு அரசியல் வட்டாரங்களில் பிரசித்தமானது.
பேச்சுவார்த்தைக்கு அழைப்பு
அரசுத் தலைவர் பிரேமதாசா 1989 ஜனவரி 2இல் தலதா மாளிகையில் இருந்து நாட்டுக்கு விடுத்த செய்தியில், பேச்சுவார்த்தைக்கு வருமாறு விடுதலைப் புலிகளுக்கும், ஜே.வி.பிக்கும் அழைப்பு விடுத்தார். இனப் பிரச்சினையானது ஒரு உள்நாட்டுப் பிரச்சினை என்றும் வெளிநாட்டுச் சக்திகளின் தலையீடு இன்றி அது தீர்க்கப்பட வேண்டியது என்றும் கூறியது இந்தியாவின் முகத்தில் அறைந்தது போல அமைந்தது. சிறீலங்காவின் ஓர் அங்குலத்தையும் அந்நியருக்கு விட்டுக் கொடுக்க மாட்டார் என்றும் அவர் சபதம் உரைத்தார். விடுதலைப் புலித் தலைமையைப் பொறுத்த வரையிலே, செய்தி தெளிவாக இருந்தது, புதிய அரசுத் தலைவர் இந்தியாவை எதிர்க்கும் கொள்கையோடு நின்றார். விடுதலைப் புலிகள் அப்போது இருந்த நிலையில், பிரேமதாசாவின் நிலைப்பாட்டைப் பற்றிக் கருத்தில் எடுப்பது நல்லது எனப்பட்டது. அந்தத் தருணத்தில், லண்டனில் இருந்த பாலா, பிரபாகரன் அவர்களுடன் தொலைத்தொடர்பு பேணி வந்தார். பிரேமதாசா ஆட்சியினருடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு பாலா ஆதரவாக இருந்தார் என்பதும் எனக்குத் தெரியும். புதிய அரசுத் தலைவருடன் விடுதலைப் புலிகள் கூட்டுச் சேர்ந்து, அமைதிப் படையைத் தமிழர் தாயகத்தில் இருந்து வெளியேற்றக் கூடுமாக இருந்தால், அது குறிப்பிடத்தக்க சாதனையாக இருக்கும் என்று பாலா என்னிடம் குறிப்பிட்டார். பதில் கொடுக்கும் முன் கொழும்பில் வேறு என்ன வளர்ச்சிகள் ஏற்படுகின்றன என்று அவதானித்தோம். அவசர கால நிலையைப் பிரேமதாசா அகற்றினார். நல்லிணக்கச் சமிக்கையாக ஜே.வி.பியின் முழு நிலைப் போராளிகள் 1800 பேரை விடுதலை செய்தார். இதனால், ஜே.வி.பியினரும் தமது பயங்கர நடவடிக்கைகளை இரண்டு மாதம் கைவிட்டார்கள். ஆனால், விடுதலையான இளைஞர்களையும் சேர்த்து, தங்கள் அணிகளுக்குப் புத்துயிர் அளித்து, முழுமூச்சுடன் திரும்பவும் தம் கிளர்ச்சிப் போராட்டத்தை பிரேமதாசா ஆட்சிக்கு எதிராகத் தொடக்கினர். ஜே.வி.பி மட்டில் தமது நல்லெண்ண முயற்சி வெற்றியளிக்காது என்பதைப் பிரேமதாசா உணர்ந்தார். இராணுவ ரீதியாக அவர்களை ஒடுக்குவதைத் தவிர அவருக்கு வேறு வழியிருக்கவில்லை. தமது ஆட்சிக்குப் பெருஞ்சவாலாக அமைந்துவிட்ட ஜே.வி.பி கிளர்ச்சியைத் தெற்கில் அடக்குவதானால் அதற்கு முன், இந்திய அமைதிப் படையை வெளியேறச் செய்ய வேண்டும் என்று உணர்ந்தார். இதற்கு விடுதலைப் புலிகளின் ஆதரவு அவருக்குத் தேவையாக இருந்தது.
விடுதலைப் புலிகளின் மன உறுதி, அர்ப்பணிப்பு, துணிச்சல், தியாகம் ஆகியவற்றுக்காக, பிரேமதாசா அவர்களை மதித்தார். இதை அவருடன் உரையாடும்போது நேரிலேயே கேட்டறிந்தேன். விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டத்தைத் தூண்டியது சிங்கள அரசின் ஒடுக்குமுறை நடவடிக்கைகளே என்பதை அவர் நன்கு உணர்ந்திருந்தார். காரிய சாத்தியமான பேச்சுவார்த்தை ஒன்றிலே ஈடுபட்டு, கலந்துரையாடல், சமரசம், கருத்து ஒருமைப்பாடு ஆகியவற்றின் வழியாக முரண்பாட்டைத் தம்மால் தீர்க்க முடியும் என்றும் பிரேமதாசா நம்பினார். பேச்சுவார்த்தைக்கு வருமாறு விடுதலைப் புலிகளுக்குப் பகிரங்க அழைப்பு விடுத்ததோடு, நேரடியாகவும் புலிகளோடு தொடர்பு கொள்ள அவர் பெரும் பிரயத்தனம் செய்தார். அதை எப்படிச் செய்வது என்று அவர், ஈரோஸ் தலைவர்களான பாலகுமாரிடமும், பரராஜசிங்கம் அவர்களிடமும் உசாவிய போது, அவர்கள் பாலா லண்டனில் இருக்கிறார் என்றும், இலங்கைக்கு வெளியே வாழும் ஒரேயொரு மூத்த விடுதலைப் புலித் தலைவர் பாலாவே என்றும், வன்னியில் உள்ள தலைமையுடன் பாலா இன்னமும் தொடர்பு வைத்திருக்கிறார் என்றும் அவர்கள் பிரேமதாசாவிடம் தெரிவித்திருக்கிறார்கள். எப்படியோ, எமது தொலைபேசி எண்ணைப் பிரேமதாசா பெற்று பாலாவுடன் கிரமமாகத் தொடர்பு கொண்டு நட்புறவை ஏற்படுத்திக்கொண்டார். அமைதிப் பேச்சுவார்த்தைக்கான பிரேமதாசாவின் அழைப்பை வன்னியில் உள்ள தலைமை கருத்தில் எடுத்திருப்பதாகவும், உரிய வேளையில் பொருத்தமான ஒரு தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்றும் பிரேமதாசாவிடம் பாலா கூறினார். அதே சமயம், தமிழர் தாயகத்தில் இருந்து இந்தியப் படைகளை வெளியேற்றுவது தமது எண்ணம் என்பதைப் பிரேமதாசா பகிரங்கமாக அறிவித்தால் அது பயன் தரும் என்றும் பாலா தெரிவித்தார். அதன் பின்னர், பிரேமதாசாவின் அடுத்த செயற்பாட்டுக்காக விடுதலைப் புலிகள் காத்திருந்தார்கள். தமிழ் சிங்கள புத்தாண்டு விழாக் கொண்டாட்டங்களையொட்டி, சிறீலங்கா அரச படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையே ஒரு பக்கப் போர் நிறுத்தத்தை 1989 ஏப்பிரல் 12ஆம் திகதி அன்று அறிவித்த பிரேமதாசா அவர்கள், அமைதியைக் கடைப்பிடிக்குமாறு இந்திய அமைதிப் படையையும் கேட்டுக்கொண்டார். பிரேமதாசாவின் பகிரங்க அறிவித்தலுக்குப் பதிலாக, விடுதலைப் புலிகள் அரசுத் தலைவருக்கென வெளியிட்ட காரமான பகிரங்கக் கடிதம் ஒன்றிலே, “ஒடுக்குமுறையில் ஈடுபட்டிருக்கும் இந்திய இராணுவம் எமது மண்ணை விட்டு அகலும் வரை, போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை” என்று கூறி சிறீலங்கா அரசுத் தலைவரின் போர் நிறுத்த அழைப்பையும் நிராகரித்தார்கள். இந்திய இராணுவம் திருப்பி அழைக்கப்படுவதற்கான ஏற்பாடுகளைத் தாம் செய்வார் என்று தேர்தல் வாக்குறுதியாக வழங்கியதைப் பிரேமதாசா அவர்கள் கைவிட்டு விட்டதற்காக அவரை மிகக் காரமாகவும் புலிகள் தங்கள் பகிரங்கக் கடிதத்தில் கண்டித்திருந்தார்கள். அதன் உட்கருத்தையும் புலிகளின் கடுப்பையும் பிரேமதாசா புரிந்து கொண்டார். இந்திய ஆக்கிரமிப்பு இராணுவத்துக்கு எதிராக விடுதலைப் புலிகள் நடத்திக் கொண்டிருந்த தற்காப்பு போராட்டம் மட்டில், பிரேமதாசாவின் தேசியப் பற்றும், இந்திய எதிர்ப்பு உணர்வும் அனுதாபம் உடையவையாக இருந்தன. விடுதலைப் புலிகளைச் சாந்தப்படுத்தவும் தமது நிர்வாகத்தில் அவர்கள் நம்பிக்கை வைக்கச் செய்ய வேண்டுமென்றால், இந்தியப் படை வெளியேற்றம் பற்றித் தாம் ஒரு பகிரங்க அறிவித்தல் கொடுக்க வேண்டும் என்பதை அவர் உணர்ந்திருந்தார். இதற்கு அமைவாக 1989 ஏப்பிரல் 13 அன்று கொழும்பு புறநகர்ப் பகுதிப் பௌத்த வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போது, இந்திய அமைதிப் படைகளை மூன்று மாதத்துக்குள் இந்திய அரசு முற்றாகத் திருப்பி அழைத்துவிட வேண்டும் என்று பகிரங்கமாக அறிவித்தல் கொடுத்தார். அதே நாளில், சிறீலங்காவின் வெளியுறவு அமைச்சர் ரஞ்சன் விஜயரத்தினா அவர்கள் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு வருமாறு விடுதலைப் புலிகளுக்கு அழைப்பு விடுத்தார். சம்பவத் திருப்பங்களால் திருப்தியடைந்த விடுதலைப் புலித் தலைமை, லண்டனில் உள்ள தனது தலைமைப் பணிமனையில் இருந்து சிறீலங்கா அரசுத் தலைவருக்குக் கடிதம் ஒன்று அனுப்பியது. பேச்சுவார்த்தைக்கான அழைப்பைத் தாம் ஏற்பதாகவும், அது நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை அரசு செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டது. அந்தக் கடிதத்தை உடனடுத்து, அதிகாரம் பெற்ற பிரதிநிதியாகவும் முக்கிய பேச்சாளராகவும் பாலாவை விடுதலைப் புலிகளின் தலைமை நியமித்தது. இந்தச் சம்பவங்களை அடுத்து, அமைதி முயற்சிக்காகச் சிறீலங்காவுக்குப் பயணம் புரிவதற்கான ஏற்பாடுகளில் பாலாவும் நானும் ஈடுபட்டோம்.
நாம் 1989 ஏப்ரல் 26ஆம் திகதியன்று கொழும்பு சென்றடைந்தோம். கொழும்பு ஹில்டன் உல்லாசப் பயணிகள் விடுதியில் நாம் தங்க வைக்கப்பட்டோம். அன்று மாலை அரச அணி ஒன்று மரியாதைச் சந்திப்பிற்காக வந்தது. அதில் அரசுத் தலைவரின் செயலர் கே.எச்.விஜயதாசா, பாதுகாப்பு செயலர் ஜெனரல் சேப்பால ஆட்டிகல, வெளியுறவு அமைச்சின் மூத்த அதிகாரி பீலிக்ஸ் டயஸ் அபேசிங்கா, ஆகியோர் இருந்தனர். அந்தச் சிறிய சந்திப்பில், பேச்சுவார்த்தைக்கு புலிகள் சம்மதித்ததை ஒட்டி அரசுத் தலைவர் மகிழ்ச்சி அடைந்திருப்பதாக விஜயதாசா கூறினார். ஏனைய போராளிகள் கொழும்புக்கு கொண்டுவரப்பட்ட பின், அரசுத் தலைவர் புலிகளின் அணியைச் சந்திப்பார் என்றும் கூறப்பட்டது. மறுநாள், சேப்பால ஆட்டிக்கல அவர்களும், தளபதி ரணதுங்காவும் விடுதிக்கு வந்தார்கள். வடபகுதிக் காடுகளில் இருந்து புலிப் பிரதிநிதிகளைக் கொண்டு வருவதற்கான வழிமுறைகளையும், எப்போது பேச்சுவார்த்தை நடத்துவது என்பது பற்றிய விபரங்களையும் ஆராய்ந்தோம். வன்னிப் பயணம் தொடர்பாகப் பரப்புரை நடத்தவும், தேர்ந்தெடுத்த ஊடகவியலாளர்களை உலங்குவானூர்தியில் ஏற்றிச் செல்வது என்றும் தீர்மானிக்கப்பட்டது. பயணம் 1989 மே 3இல் நடைபெறும் என்றும் முடிவாகியது.
பிரேமதாசாவுடன் சந்திப்பு
வன்னியிலிருந்து நாம் விடுதியை அடைந்ததும், அரசுத் தலைவர் பிரேமதாசா அவர்களை, மறுநாள் மே 4ஆம் திகதி 5 மணிக்கு சந்திக்க ஏற்பாடு செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு நலன்களோடு சம்பந்தப்பட்ட விடயங்களைப் பற்றியே பேசுவது என்றும், இந்தச் சந்திப்புக்கு ஒரு நல்லெண்ண அணுகுமுறையோடு செல்ல வேண்டும் என்றும், தீர்மானித்தோம். அப்படிச் சென்றால், பேச்சுவார்த்தையும் பயனுள்ளதாக அமையும் என்றும், விளைவும் நல்லதாகவே இருக்கும் என்றும் கருதினோம். பேச்சுவார்த்தை தொடங்கும் முதற்கட்டத்தில் அரசியல் முரண்பாடுகள் எழுவதற்கு இடமளிக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தோம். பேச்சுவார்த்தைகள் வெற்றி பெற வேண்டும் என்பதில் இரண்டு பக்கத்துக்கும் நிறையத் தேவை இருந்தது. எமது நோக்கை வென்றடையப் பிரேமதாசா அவர்களுடன் நல்லுறவு ஏற்படுத்துவது அவசியமாக இருந்தது. பிரேசமதாசாவைப் பற்றியும், அவர் எப்படியான மனிதர், அவருடைய சொந்த வரலாறு என்ன, அவருடைய அரசியல் சித்தாந்தம் என்ன என்பது பற்றிய முழுமையான விபரங்களை பாலா எமக்கு எடுத்துரைத்தார். கொழும்பிலே ஓர் இளம் ஊடகவியலாளராக பாலா இருந்த காலத்தில், பிரேமதாசாவைத் தனிப்பட்ட முறையிலே அறிந்திருந்தார். தாழ்த்தப்பட்ட சமூகத்தில், எளிமையான நிலையிலே பிறந்த பிரேமதாசா, நாட்டின் ஆக உயர்ந்த நிலைக்கு, கடும் உழைப்பினாலும், விடா முயற்சியாலும், சுயகட்டுப்பாட்டாலும் உயர்ந்திருந்தார். அவர் ஒரு கவிஞரும், நாவலாசிரியருமாவார். இளைஞராக இருந்தபோது, வலதுசாரி முதலாளித்துவக் கட்சி ஒன்றிலே சேர்ந்திருந்த போதிலும், ஒரு சோஷலிச அரசியல் சித்தாந்தத்தை அவர் தழுவியதோடு, வறிய மக்களின் சமூக – பொருளாதார மேம்பாட்டுக்காக அர்ப்பணிப்போடு பணிபுரிந்தார். உள்ளூராட்சி அமைச்சராகவும், பின்னர் பிரதம மந்திரியாகவும், பதவி வகித்த காலத்தில், பொருளாதார சமத்துவத்தையும், நீதியையும் நிலைநாட்டுவதற்காகச் சமுதாய நலன்புரி இயக்கங்களை நாடுபூராகவும் அறிமுகம் செய்தார். அவருடைய ‘லட்ச வீட்டுத் திட்டம்’ மக்கள் தலைவராக அவரை உயர்த்தியது. முற்போக்கான அரசியலை அவர் சாதகம் செய்தார். ஆனால் அவருடைய பணியும் செல்வாக்கும் நாட்டின் தெற்கில் உள்ள சிங்கள குடிமக்கள் மத்தியிலும், தொழிலாளர் மத்தியிலுமே கவனம் செலுத்தியது. நீண்ட கால, பலதரப்பட்ட அரசியல் அனுபவம் பெற்றவராக பிரேமதாசா இருந்தபோதிலும், தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தின் பின்னணியிலுள்ள அசைவியக்கத்தை அவரால் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியவில்லை. தமிழ் மக்களுக்குப் பிராந்தியத் தன்னாட்சியோ, சுயாட்சியோ வழங்கப்படுவதை அவர் எதிர்த்தார். அவர் எப்பொழுதுமே ஒரே மக்கள், ஒரே தேசிய இனம், ஒரே தாயகம் என்ற கொள்கையுடன் வாழ்ந்தவராதலால், தமிழர் தாயகம், பிரிவினை, என்ற எண்ணக் கருக்களை தீண்டத்தகாத பழியுரைகள் என்றே நிராகரித்தார். பிரேமதாசா ஒரு உள்ளார்ந்த சிங்கள பௌத்தத் தேசியவாதி. தமது மேலாண்மைவாத முலாமை ஒற்றை ஆட்சி அரசியல் என்ற போர்வையால் மறைத்துக் கொண்டார். அவருடைய நீண்ட அரசியல் வரலாற்றில், தமிழர் பிரச்சினையைத் தீர்ப்பதில் அவர் என்றுமே தீவிர ஈடுபாடு காட்டியதில்லை. மாறாக, யூ.என்.பி ஆட்சியின் அடக்குமுறை என்ற இருண்ட வரலாற்றில் மௌனமாக அரசுடன் ஒத்துழைத்த நிலையையே அவர் கடைப்பிடித்திருப்பதைக் காணலாம். அவருடைய அதிதீவிர தேசிய உணர்வுகள், இந்தியா மட்டில் அவரை அச்சமும் சந்தேகமும் கொள்ளச் செய்தன. இந்தியாவின் அதிகார முனைப்பு, சிறீலங்காவுக்கு அச்சுறுத்தலாக அமைவதாக அவர் கருதினார். இந்திய-இலங்கை ஒப்பந்தத்தையும், இந்திய அமைதிப் படையையும் அவர் கடுமையாக எதிர்த்தார். இந்தியப் படைகளை நாட்டிலிருந்து வெளியே தள்ள வேண்டும் என்று உறுதி பூண்டிருந்தார். இவையெல்லாம் இந்திய மேலாண்மை தொடர்பாக அவர் உள்ளூரக் கொண்டிருந்த அச்சத்தின் வெளிப்பாடே என்று கூறலாம். இந்த வகையில் எமது போராட்டத்துக்குப் பெரும் அச்சுறுத்தலாகி விட்ட இந்திய ஆக்கிரமிப்பு இராணுவத்தை வெளியேற்றும் விடயத்தில், புலிகளுடைய நாட்டமும் பிரேமதாசா அவர்களுடைய நாட்டமும் ஒன்றிணைந்தன என்பதில் ஐயமில்லை. இந்தப் பொதுநலனின் அடிப்படையில் பிரேமதாசாவுடன் பேசலாம் என்று நாம் கருதினோம். அரசுத் தலைவர் பிரேமதாசாவின் பிரத்தியேக வதிவிடமான சுக்சித்ராவுக்கு பாலா, நான், யோகரெத்தினம் யோகி, பரம மூர்த்தி ஆகியோர் சிறப்பு அதிரடிப் படைத் தொடரணி முன்னும் பின்னுமாக வர அழைத்துச் செல்லப்பட்டோம். சிறீலங்கா கொடி ஒரு பக்கம், அரசுத் தலைவர் இலச்சினை சுவரில்; அனைத்துலக முக்கியஸ்தர்கள் பிரேமதாசா அவர்களுடன் சந்தித்திருப்பதைக் காட்டும் சில நிழற்படங்கள்; அதுவே அந்த வரவேற்பறை! எம்மைச் சந்திக்க அரசுத் தலைவர் முன்னே வந்தார்.
நான் நிழற்படங்களில் பார்த்த அதே பிரேமதாசா அவர்கள். சுத்தமான தோற்றம். கேசம் சிறிதும் கலையாது மினுமினுக்கும் கறுத்த முடி. பளிச்சென்ற வெள்ளைத் தேசிய ஆடை. அவருடைய தோற்றம் அவரைப் பற்றிய பொதுக் கருத்தைப் பிரதிபலித்தது. பிரேமதாசா அவர்கள் ஒவ்வொன்றையும் வரிசைக் கிரமமாக செய்யும் மனிதர்; தனிப்பட்ட நடத்தையிலும் கடும் ஒழுங்கைக் கடைப்பிடிப்பவர்; தம்மைச் சூழ உள்ளவர்களிடம் அதையே எதிர்பார்ப்பவர்.
அவருடைய அலுவலகத்துக்குள் நாம் நுழைந்தபோது, என்னோடு கைகுலுக்க அவர் முனையவில்லை. ஆசிய மரபுப்படி கைகூப்பினார். தமிழ், சிங்கள மரபுகளில் ஆண்களும் பெண்களும் கைகுலுக்குவதில்லை. கை கூப்பி, தலை சாய்த்து வணக்கம் தெரிவிப்பர். வணக்கம் தெரிவிக்கும் போது எனக்குள்ளே ஒரு குற்ற உணர்வோ, ஆசாடபூதித்தனமோ ஒரு கணம் ஓடி மறைந்தது. ஏனென்றால் தமிழ் மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறையை ஏவிவிட்ட முக்கியமானவர்களில் ஒருவர் என்று நான் கண்டித்த ஒருவருடன் வணக்கம் பரிமாறிக் கொண்டிருந்தேன். எனது ‘பகைவர்’ எனப்பட்டவர், கலகலப்பும் விருந்தோம்பலும் உடையவராகக் காணப்பட்டார். ஆனால் வெறும் இனிய சமூக ஊடாட்டப் பண்புகளால் மட்டும் ஒருவர் அரசுத் தலைவராக வந்து விடுவதில்லை. அப்பழுக்கற்ற தோற்றமுடைய இந்த மனிதரின் பின்னே வேறு என்ன இருக்கிறது என்பதை அறிவதில் ஆர்வமாக இருந்தேன். பேச்சுவார்த்தைக்கான தமது அழைப்பை விடுதலைப் புலிகள் சாதக நிலையில் ஏற்றது தமக்கு மகிழ்ச்சி தருவதாக இராஜதந்திர நல்லுறவுக்கு அமைவாக அவர் முதலில் கூறினார். பேச்சுவார்த்தைக்கு எந்த முன் நிபந்தனையும் விதிக்காது விட்டமைக்காக, பாலா தமது பாராட்டைத் தெரிவித்தார்.
தொடக்கத்தில், தாம் தமிழ் மக்களின் நண்பர் என்றும், அவர்களுடைய இடர்பாடு நிலையையும் அவர்களுடைய அரசியல் போராட்டத்தையும் தாம் புரிந்து கொண்டிருப்பதாகவும் கூறினார். அதை விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகள் நம்ப வேண்டும் என்பதிலும் பிரேமதாசா அக்கறை காட்டினார். அவரைப் பொறுத்த வரையில் இனப்பிரச்சினை என்பது வெகு சாதாரண பிரச்சனை; அண்ணனுக்கும் தம்பிக்கும் இடையே உள்ள உள்வீட்டு உறவுப் பிரச்சினை. சம்பந்தப்பட்டவர்கள் தம்மிடையே தீர்க்க வேண்டிய பிரச்சினை. சிறீலங்காவின் உள்நாட்டு விவகாரத்தில் இந்தியா ஈடுபடக்கூடியதாக அரசியற் களத்தை உருவாக்கிய முன்னாள் அரசுத் தலைவர் ஜுனியஸ் ஜெயவர்த்தனா மீது அவர் குற்றஞ்சுமத்தினார். இதனாலேயே நாடு பூராவும் வன்செயல் இடம்பெற்று, இரத்த ஆறும் கிளர்ச்சியும் ஏற்பட்டதாக அவர் கூறினார். தாம் முன்வைக்கும் முக் கோட்பாடுகளை – அதாவது கலந்துரையாடல், சமரசம், கருத்தொற்றுமை – ஆகியவற்றைக் கடைப்பிடித்து, ‘தீவுப் பிரதேசத்தில்’ வாழும் அனைத்து இனங்களும் திருப்தி அடையும் வகையில் இனப்பிரச்சினையைத் தீர்த்து விடலாம் என்று அவர் வலியுறுத்தினார். ஒற்றையாட்சி அரசியல் யாப்புக்கு அமைவாகத் தீர்வு காணமுடியும் என்று அவர் எப்போதும் கூறிவந்த கருத்தை எம்முன்னும் வலியுறுத்தினார். முக்கிய பேச்சுவார்த்தையாளர் என்ற நிலையில், முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும் பிரச்சினைகளைத் தவிர்க்க வேண்டும் என்பதில் பாலா குறியாக இருந்தார். ஆகவே, பேச்சை உடனடி அவசியமான பிரச்சினையின் பக்கம் அதாவது இந்திய இராணுவ ஆக்கிரமிப்பு, தற்காப்புப் போர், தமிழ்ப் பொதுமக்கள் படும் இன்னல்கள் ஆகியவற்றின் பக்கம் திசை திருப்பினார். ஏனென்றால், இவையே விடுதலைப் புலிகளுக்கும் தமிழ் மக்களுக்கும் அங்கலாய்ப்பைத் தோற்றுவித்து இருந்தன. ஏற்கனவே தயாரித்த மெய் நிகழ்வுகளையும் புள்ளி விபரங்களையும் பாலா முன் வைத்ததோடு, வடக்குக் கிழக்கின் உண்மையான நிலை பற்றியும், இந்திய இராணுவ ஆக்கிரமிப்புக்கும் சித்திரவதைக்கும் உட்பட்டிருக்கும் தமிழ்ப் பொதுமக்கள் படும் இன்னல்கள் பற்றியும் அவர்கள் வாழும் நிலைபற்றியும் கச்சிதமான பகுப்பாய்வு ஒன்றை வழங்கினார். இந்தியத் தலையீடு தமிழ் மக்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்குப் பதிலாக, அதை ஆபத்து மட்டத்துக்கு நிலைகுலைத்திருந்தது. தமிழ் மக்கள் சொல்லொணாத் துயரை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆயிரமாயிரம் மக்கள் அழிந்தும் போனார்கள். இந்திய அமைதிப் படை வடக்குக் கிழக்கு மீது இரும்புத்திரையைப் போர்த்திவிட்டு, வெளி உலகுக்குச் செய்தி எதுவும் கசியாது பார்த்துக் கொண்டது. இவற்றையெல்லாம் பாலா விளக்க, அரசுத் தலைவர் திகைத்துப் போய்க் கேட்டுக் கொண்டிருந்தார். இனி, இந்திய இராணுவ ஆக்கிரமிப்புக்கு எதிராக, தெற்கிலே பரந்த அடிப்படையில் மறுப்புக்களும், எதிர்ப்பும், கலகங்களும் நடந்தாலும், ஆக்கிரமித்து நிற்கும் இந்தியப் படையினருக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தில் நேரடியாக ஈடுபட்டிருப்பவர்கள் விடுதலைப் புலிகளே என்பதால், உண்மையான நாட்டுப்பற்றுக்காக பாராட்டப்பட வேண்டியவர்கள் புலிகளே என்றும் அரசுத் தலைவர் முன்னிலையில் பாலா எடுத்துரைத்தார். பிரேமதாசா அவர்களுக்குள் இருக்கும் தேசியவாதி உடனே விழித்திருக்க வேண்டும். உடனேயே அவர் பிரபாகரன் அவர்களையும் அவருடைய கெரில்லாப் படையினரையும் அவர்களுடைய துணிச்சலுக்காகவும் அர்ப்பணிப்புக்காகவும் நாட்டுப்பற்றுக்காகவும் பாராட்டினார். ஜே.வி.பி போராளிகள் கோழைகள் என்றும், சூதுவாதற்ற பொதுமக்களைக் கொல்லும் அவர்கள் ஆக்கிரமிக்கும் இந்திய இராணுவத்தை எதிர்த்து ஒரு கல்லைக் கூட வீசவில்லை என்றும் அவர் பரிகசித்தார்.
தமிழ் மாணவர்களை வலுக்கட்டாயமாகக் குடிமக்கள் தொண்டர் படையில் சேர்த்து அதனைத் தமிழ்த் தேசிய இராணுவம் என்ற பெயரில் தனியார் படையாக மாற்றி அதன் மூலம் வடக்குக் கிழக்கு மாகாண சபையில் ஈ.பீ.ஆர்.எல்.எஃப் இன் ஈடுபாட்டைப் பலப்படுத்த இந்தியர்கள் முயல்வதாகவும், இதை விடுதலைப் புலிகள் மும்முரமாக எதிர்ப்பதாகவும் பாலா விளக்கினார். வடக்கு கிழக்கு மாகாண சபை, தில்லுமுல்லு வழிகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட சபை என்றும் தமிழ் மக்கள் அதை வெறுக்கிறார்கள் என்றும் பிரேமதாசா அவர்களுக்கு விபரமாகத் தெரிவிக்கப்பட்டது.
பேச்சுவார்த்தை தொடங்கப்படுவதற்கு முன்னதாக, பேச்சுவார்த்தைக்கான ஒரு நிகழ்ச்சி நிரல் முதலில் வரையப்பட வேண்டும் என்று பாலா கேட்டுக் கொண்டார். இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் விதிகளுக்கு அமையப் பேச்சுவார்த்தை நடத்தினால் அதில் விடுதலைப் புலிகள் ஈடுபாடு காட்ட மாட்டார்கள் என்றும் அரசுத் தலைவரிடம் பாலா வலியுறுத்திக் கூறினார். ஒப்பந்தத்தை விடுதலைப் புலிகள் எடுத்த எடுப்பிலேயே நிராகரித்து விட்டார்கள்; ஆகவே, பின் வாயிலால் அதைக் கொண்டுவர அவர்கள் இடமளிக்கமாட்டார்கள் என்றும் முன் எச்சரிக்கையாக பாலா கூறிவைத்தார். இந்த நிலைப்பாடு பிரேமதாசா அவர்களுக்கும் ஏற்புடையதாகவே காணப்பட்டது. இந்திய-இலங்கை ஒப்பந்த நிபந்தனைகளின் அடிப்படையிலேயே பேச்சுவார்த்தை அமைய வேண்டும் என்று, இந்திய வெளியுறவுச் செயலர் சிங் அவர்கள் தம்மிடம் வேண்டுகோள் விடுத்த போதிலும் தாம் அதை நிராகரித்து விட்டதாக அரசுத் தலைவர் அப்போது கூறினார். பயனுள்ள இரண்டு மணிநேரக் கலந்துரையாடல் அத்துடன் நிறைவு பெற்றது. இந்தத் தொடக்கச் சந்திப்பை ஒட்டி இரண்டு தரப்பினரும் மகிழ்வடைந்தனர். இறுதியில் அமைதி முயற்சியை வசதிப்படுத்துவதற்காக, விடுதலைப் புலிப் பிரதிநிதிகளைத் தாம் கிரமமாகச் சந்திப்பார் என்று பிரேமதாசா உறுதிமொழியளித்தார். பேச்சுவார்த்தைகளின் போது ஏதாவது இடர்பாடு நேர்ந்தால் நேரடியாகத் தொலைபேசியில் தம்மோடு தொடர்பு கொள்ளுமாறும் அவர் பாலாவிடம் தெரிவித்தார்.
ஆக்கிரமிப்பு இராணுவம்
மறுநாள் – மே 5ஆம் திகதி அந்தத் தூதுக் குழுவிற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே முதல் சுற்றுப் பேச்சுவார்த்தை ஹில்டன் விடுதியில் நடந்தது. அரசின் பிரதிநிதிகளாக அரசுத் தலைவரின் செயலர் கே.எச்.ஜே.விஜயதாசா, வெளியுறவுச் செயலர் பேணாட் திலகரட்ண, அரசுத் தலைவரின் அனைத்துலக விவகார மதியுரைஞர் பிரட்மன் வீரக்கூன், பாதுகாப்பு அமைச்சரின் செயலர் தளபதி சிறில் ரணதுங்க, பாதுகாப்புச் செயலர் சேப்பால ஆட்டிக்கல, அமைச்சரவைத் துணைக்குழுச் செயலர் டபிள்யூ. ரீ.ஜயசிங்கா, தேர்தல் ஆணையாளர் பீலிக்ஸ் டயஸ் அபேசிங்க ஆகியோர் கலந்து கொண்டார்கள். உயர் நிலை அதிகாரிகள் அடங்கிய இரண்டாவது மட்ட அணியே அரச குழுவாக ஒன்றிணைக்கப்பட்டிருந்தது. இவர்கள் பிரேமதாசா அவர்களுடைய நம்பிக்கைக்குப் பாத்திரமாகவும் இருந்தார்கள். தொடர்ந்து நடக்க இருந்த பேச்சுவார்த்தைகளுக்கு வழிமுறைகளையும் நிகழ்ச்சி நிரலையும், வகுப்பதே இந்தச் சந்திப்பின் நோக்கமாக இருந்தது. கலந்துரையாடல் இரண்டு மணி நேரத்துக்குக் கூடுதலாக நடைபெற்றது. இந்திய அமைதிப் படையின் கொடுமைகளையும், மனித உரிமை மீறல்களையும் விடுதலைப் புலிகள் அணி விரிவாக எடுத்துரைத்ததோடு, பேச்சுவார்த்தையின் மையப் பொருளாக இந்தியப் படையின் வெளியேற்றம் அமைய வேண்டும் என்றும் வாதிட்டது. உடனடி நடவடிக்கைக்குத் தேவையானதாக, மாகாண நிர்வாகத்தின் பங்கு, தமிழ்ப் பகுதிகளில் சிங்களக் குடியேற்றம் தோற்றுவிக்கும் பிரச்சினைகள், தமிழ் அகதிகளின் பிரச்சினை, வடக்குக் கிழக்கில் மீளக் குடியேற்றம், மீள நிர்மாணம் செய்தல், ஆகியவையும் நிகழ்ச்சி நிரலில் சேர்க்கப்பட்டன. நிகழ்ச்சி திட்டம் ஏற்கப்பட்டதும் அடுத்த சந்திப்பு மே 11ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்னதாக, மே 11ஆம் திகதியன்று அரசுத் தலைவருடன் ஒரு சுருக்கமான சந்திப்பு நடந்தது. பேச்சுவார்த்தை எப்படித் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்பதை, பிரேமதாசா தெளிவாகக் குறிப்பிட்டார். அவர் ஒரு யதார்த்தவாதி. தந்திரம் மிக்க திட்டமிடலாளர். விடுதலைப் புலிகளுடனான பேச்சு எவ்வாறு இடம்பெறவேண்டும் என்று தமது சொந்தத் திட்டத்தை அவர் மிகக் கவனமாக வகுத்திருந்தார். அந்தத் திட்டத்தின் படி, அரசுப் பேச்சுவார்த்தை அணி, படிப்படியாக உயர் நிலைக்கு விரிவாக்கம் செய்யப்பட இருந்தது. மூத்த அமைச்சர்களை உள்ளடக்கும் அரசியல் மட்டத்துக்கு உயர்த்தப்பட இருந்தது. தொடக்கத்தில், வடக்குக் கிழக்கு மக்களின் உயிர்வாழ்வுக்கான பிரச்சினைகளை அணுகி அடுத்த கட்டங்களில் இனப்பிரச்சினையைத் தீர்ப்பது தொடர்பான அரசியல் விவாதங்களாக வளர்தெடுக்க அவர் எண்ணியிருந்தார். அது தவிர, பேச்சுவார்த்தைச் சுற்றுக்களின் இடையே, ஓய்வுக்கும் அவர் இடமளிக்க விரும்பினார். அந்த ஓய்வுக் காலத்தில் விடுதலைப் புலிப் பேச்சுவார்த்தை அணியினர், வடபகுதிக் காடுகளுக்குச் சென்று, பிரபாகரன் அவர்களுடன் கலந்தாலோசிக்க வசதி செய்து தருவதாக அவர் தெரிவித்தார். தமது அரச தூதுக்குழுவை அமைச்சர்கள் அடங்கிய உயர் நிலை அணியாகத் தாம் உயர்த்தியிருப்பதாகவும் அவர் எமக்குத் தெரிவித்தார். ஆயினும், முதல் அணியின் உயர் அதிகாரிகள், பேச்சுவார்த்தையின்போது, அமைச்சர்களுக்கு உதவுவார்கள் என்றும் கூறினார். அன்றைய அமர்விலும் அதன் பின்னரும், பங்குபற்றப் போகும் நான்கு அமைச்சர்களை அவர் அறிமுகம் செய்து வைத்தார். அதன் பின்னர் விவாதிக்கப்படும் விடயங்களுக்குப் பொருத்தமாக, வேறு அமைச்சர்களும், புதிதாகச் சேர்ந்து கொள்வார்கள் என்றும் கூறினார். அரச அணியை வழி நடத்தும் பிரதான பேச்சுவார்த்தையாளராக, அப்போது உயர்கல்வி, அறிவியல், தொழில்நுட்பம் ஆகியவற்றுக்கு அமைச்சராக இருந்த ஏ.சீ.எஸ்.ஹமீது அவர்களை, அரசுத் தலைவர் நியமித்தார். ஹமீது அவர்கள், முன்னாளில் ஜெயவர்த்தனா அரசின் வெளியுறவு அமைச்சராகத் திகழ்ந்தவர். அரச அணியில் நியமிக்கப்பட்ட ஏனைய அமைச்சர்களில், வெளியுறவு அமைச்சர் ரஞ்சன் விஜேரத்னா, கைத்தொழில் அமைச்சர் ரணில் விக்ரமசிங்கா, வீடமைப்பு நிர்மாண அமைச்சர் சிறீசேன கூரே, ஆகியோரும் சேர்க்கப்பட்டனர். இரண்டு அணிகளும் மனம் திறந்து கலந்துரையாட வேண்டும் என்று அறிவுரை கூறிய பிரேமதாசா அவர்கள், விவாதத்தைத் தவிர்த்துக் கொண்டு சரியான பேச்சுவார்த்தை நடத்துமாறும் ஆலோசனை வழங்கினார். கலந்தாலோசித்தல், சமரசம், கருத்தொருமிப்பு, என்ற தமது முத்தத்துவத்தை விளக்கிய பின், ஹில்டன் விடுதிக்குச் சென்று கலந்துரையாடலைத் தொடர இரண்டு அணிகளையும் அவர் அனுப்பினார். அமைச்சர்கள் அணியுடனும், அரசுத் தலைவருடன் தனியாகவும் பலசுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தினோம். எல்லாமாக ஒன்பது அமர்வுகள் 1989 மே 4இல் இருந்து மே 30 வரை நடைபெற்றன. அமைச்சரணியுடன் நாம் நடத்திய அமர்வுகளின்போது, தமிழர் தாயகம் மீது இந்திய இராணுவத்தின் ஆக்கிரமிப்புப் பற்றியும் தமிழ் மக்கள் மீது நடத்தப்படும் அட்டூழியங்கள் பற்றியும் குறிப்பாகக் கவனம் செலுத்தினோம். புலிகளுக்கும் தமிழ் மக்களுக்கும் இவை முக்கியமான வாழ்வா சாவா என்ற பிரச்சினைகளாகும். இந்திய அமைதிப் படையினரின் ஒட்டுமொத்த மனித உரிமை மீறல்களை அம்பலப்படுத்தி, இந்திய இராணுவத் தலையீட்டை அனைத்துலகக் கவனத்துக்கு கொண்டுவர நாம் திட்டமிட்டோம். நெருக்கடி நிறைந்த இலங்கைத் தீவில் அமைதி பேணும் அற்புதமான பணியை இந்தியப் படைகள் புரிந்து கொண்டிருப்பதாக அனைத்துலகச் சமுதாயம் நம்பும் வகையில் ஒரு மாயை உருவாக்கப்பட்டிருந்தது, இந்திய அரசின் பலம் வாய்ந்த பரப்புரைப் பொறிமுறையையும் உலகம் பூராவும் அதற்கிருந்த இராஜதந்திர வலைப்பின்னலையும் தாக்கும் வல்லமை எம்மிடம் முன்னர் இருக்கவில்லை. இப்பொழுது அமைதிப் பேச்சுவார்த்தை கொழும்பிலே தொடக்கப்பட்டு, எமது உணர்வுகளைப் பகிர்ந்து கொண்ட பிரேமதாசா அவர்களுடைய புதிய நிர்வாகத்தின் ஆதரவும் எமக்குக் கிடைத்த நிலையில், எமது கருத்தை வெளிப்படையாகக் கூறவும் உண்மையைப் புட்டுக்காட்டவும் எமக்கு இப்பொழுதுதான் ஒரு தளம் கிடைத்தது. சிறீலங்கா அமைச்சரணியுடன் முதற் சுற்றுப் பேச்சு அமர்வுகள் நடைபெறும்போது, விடுதலைப் புலி அணியின் தலைவர் என்ற நிலையில், பாலா வடக்குக் கிழக்கில் நடைபெறும் இந்திய இராணுவ ஆட்சி தொடர்பாகத் தமிழ் மக்களின் கருத்து விதானத்தை வெளியிட்டார்.
இலங்கை வடக்குக் கிழக்கில் உள்ள தமிழர் தாயகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இந்தியப் படையை அமைதி காக்கும் படை என்று வகைப்படுத்தக் கூடாது என்றும் ஆக்கிரமிப்பு இராணுவமாகக் கணிக்க வேண்டும் என்றும் அவர் தமது வாதத்தில் முதன்மைப்படுத்தியிருந்தார். இந்தச் சந்திப்புக்களின்போது நான் எடுத்த குறிப்புக்களில் இருந்து பாலா முன்வைத்த வாதங்களைப் பின்வருமாறு தொகுப்பேன்.
“அமைதி காக்கும் நடவடிக்கை என்ன என்பது தொடர்பாகத் தெளிவான ஐ.நா கருத்துருவாக்கம் ஒன்று உள்ளது. முரண்பாட்டு மோதல்களைக் கட்டுப்படுத்துவது தொடர்பாகவும், அமைதியை முன்னெடுப்பது தொடர்பாகவும், அனைத்துலக மட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நியமங்களும் தரங்களும் உள்ளன. அமைதி காக்கும் ஒரு இராணுவமானது, முரண்பாட்டு மோதலில் ஈடுபட்டிருக்கும் இரண்டு அல்லது கூடுதலான பிரிவுகளுக்கிடையே பக்கம் சாராது நிற்பது முக்கியமானது. அமைதி காக்கும் நடவடிக்கையின் முக்கிய பணி என்னவென்றால், மோதல் இடம்பெறும் பகுதிகளில் அமைதியைப் பேண அல்லது மீள நிறுவ உதவுவது. அமைதி காக்கும் நடவடிக்கை என்பது மோதலைக் கட்டுப்படுத்தும் செயற்பாடாகும். ஐ.நா மரபிலே பார்த்தால், அமைதிப் படையானது மோதல் நிலை விரிவடையாது தடுத்து, அமைதிக்கான சுமுகச் சூழலை ஏற்படுத்த ஆணைபெற்று இயங்குவது. அமைதி நடவடிக்கையிலே ஈடுபடும் இராணுவ உறுப்பினர்களுக்கு வலிந்து திணிக்கும் அதிகாரம் எதுவும் வழங்கப்படுவதில்லை. தற்காப்புத் தவிர்ந்த வேறு எதற்கும் இராணுவ உறுப்பினர்கள் ஆயுத பலத்தைப் பயன்படுத்த அதிகாரம் வழங்கப் படுவதில்லை. அத்துடன் இலகுவான பாதுகாப்பு ஆயுதங்களை மட்டுமே அவர்கள் தரித்திருப்பார்கள். போராட்டத்தில் சம்பந்தப்படுத்தப்பட்ட தரப்பினரின் இராணுவச் சமநிலை, பாதிக்கப்படும் வகையில் அமைதிப் படை நடந்து கொள்ளக் கூடாது. இவையே அமைதி காப்புச் செயற்பாட்டை வழிநடத்தும் அடிப்படை வழிமுறைகளும் கோட்பாடுகளுமாகும். அனைத்துலக மட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட நியமங்கள் இவை. இந்த வழிமுறைகளுக்கும் நியமங்களுக்கும் அமைவாக அமைதிப் படைத் தகைமையைப் பெற இந்திய இராணுவம் அருகதையுடையதல்ல. தொடக்கத்தில், இந்திய -இலங்கை ஒப்பந்த நிபந்தனைகளுக்கு அமைவாகவே, இந்திய இராணுவப் பிரிவு ஒன்று இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டது. சிறீலங்கா அரச படைகளுக்கும் விடுதலைப் புலிப் போராளிகளுக்குமிடையே நடக்கும் போர் முடிவுக்கு கொண்டு வரப்படுவதை மேற்பார்வை செய்வதும், அமைதியைப் பேணுவதுமே அதன் பணியாக இருந்தது. ஆனால் விரைவிலேயே இந்திய இராணுவம் முற்றிலும் வேறுபாடான பங்காற்றத் தொடங்கியது. போரில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஒரு பிரிவினருடன், அதாவது விடுதலைப் புலிகளுடன் ஆயுதபாணிகளாக விரைவிலேயே மோதத் தொடங்கியது. ஆயுத மோதல், ஆயுதங்களைக் களையும் முயற்சியாகவே முதலில் கருதப்பட்ட போதிலும், விரைவில் இந்தியப் படைகளுக்கும் புலிக் கெரில்லாப் படையினருக்கும் இடையே முழுமையான போராக வடிவெடுத்தது. கடந்த 20 மாதங்களாகத் தணிவு எதுவும் இன்றிப் போர் நடந்து கொண்டிருப்பதோடு, போரில் ஈடுபட்டிருப்பவர்கள் இந்திய படையினரும் விடுதலைப் புலிகளுமே. நடுநிலை நின்று அமைதி காக்க மத்தியஸ்தம் செய்ய வேண்டியவர்கள் தாமே நேரடியாக இராணுவ மோதலில் ஈடுபட்டிருந்தால், இந்திய அமைதி காக்கும் முயற்சியின் தன்மையே கேள்விக்கு உரியதாகிவிட்டது. இந்திய இராணுவத் தலையீடும் அதன் தாக்குதல் நடவடிக்கைகளும், அமைதி காக்கும் நடைமுறை என்று ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கும் அனைத்து நியமங்களையும் மீறிவிட்டன. தமிழ்ப் பகுதிகளில் செயலாற்றிக் கொண்டிருக்கும் இந்தியப் படையை இனிமேலும் பக்கஞ்சாராப் படை என்று கொள்ள முடியாது. அது போரைக் கட்டுப்படுத்தவும் இல்லை, அமைதியைப் பேணவும் இல்லை. போராட்டம் தீவிரமடைவதைத் தடுப்பதற்குப் பதிலாக, இந்தியப் படைகள் வன்செயலையும் போரையும் தீவிரப்படுத்தியிருக்கின்றன. இந்திய இராணுவம், தான்தோன்றித்தனமாக ஆட்சி அதிகாரங்களைச் சுவீகரித்துக் கொண்டு, இந்த நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் நேரடியாகத் தலையிட்டிருக்கிறது. தமிழ்ப் பகுதிகளில் பிரசன்னமாகி இருக்கும் இந்தியப் படை அமைதி காக்கும் படையல்ல. மாறாக, ஆக்கிரமிப்பு இராணுவமே என்பது விடுதலைப் புலிகளின் தீர்க்கமான முடிவாகும்.”
இந்தியப் படைகளின் பங்கும் பணியும் பற்றி, கொழும்பு அமைதிப் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட விடுதலைப் புலிப் பிரதிநிதிகள் முன்வைத்த ஆழம் மிக்க ஆய்வும், அதையடுத்து வெளியான கூட்டறிக்கைகளும், பேச்சுவார்த்தையின் நோக்கத்தையும் உள்ளடக்கத்தையும் வெளிப்படுத்தியபோது, ரஜீவ் நிர்வாகத்துக்கும் பிரேமதாசா ஆட்சிக்கும் இடையே ஒரு நெருக்குவார நிலை தோன்றியது. புதுடில்லியை அவமதிக்க விடுதலைப் புலிகளுக்கு ஒரு தளம் வழங்கியமைக்காக இந்திய வெளியுறவு அமைச்சு, சிறீலங்கா அரசிடம் கடுமையான கண்டனம் தெரிவித்தது. இந்தியாவின் பார்வையிலே, இந்திய – இலங்கை ஒப்பந்த ஏற்பாடுகளுக்கு அமைவாகவே இந்திய அமைதிப் படைகள் சிறீலங்காவின் வடக்குக் கிழக்குப் பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. அதாவது, விடுதலைப் புலிகளின் ஆயுதங்களைக் களைவதன் மூலம் அமைதியை நிலைநாட்டி சிறீலங்காவுக்கு உதவுவதற்காகவே இந்திய அமைதிப் படை அனுப்பப்பட்டது. ஆனால் இப்பொழுது, சிங்கள அரசு, தனது பரம வைரியுடன் கைகோர்த்துக் கொண்டு சிங்களத்தின் போரை நடத்திக் கொண்டிருக்கும் இந்திய இராணுவப் பிரிவுகளை அவமானப்படுத்திக் கொண்டிருக்கிறது. பேச்சுவார்த்தை அரங்கிலே இந்தியாவின் கண்டனங்கள் சமர்ப்பிக்கப்பட்டபோது, அதை மறுத்துரைத்த விடுதலைப் புலிகள், அமைதியை நிலைநாட்டுவதிலும் சரி, புலிகளின் ஆயுதங்களைக் களைவதிலும் சரி, இந்திய அமைதிப் படைகள் படுமோசமான தோல்வி கண்டு விட்டன என்று சுட்டிக்காட்டினர். மாறாக, போர் விரிவாக்கம் கண்டிருந்ததோடு, இந்தியப் படைகள் தங்கள் இழப்புக்களை ஈடுகட்டுவதற்காக, தமது துப்பாக்கிகளைத் தமிழ் மக்கள் மீது பழிவாங்கும் நோக்கோடு திருப்பிக் கொண்டிருந்தன. இந்த அமைதி காக்கும் நடவடிக்கையின் போது, ஐயாயிரத்துக்கும் அதிகமான தமிழ்ப் பொதுமக்கள் உயிரிழந்திருந்தனர். அப்பாவிப் பொதுமக்கள் உயிர்பலியாகி விட்டதைச் சுட்டிக் காட்டிய விடுதலைப் புலிப் பிரதிநிதிகள், தமிழ் மக்களை சிறீலங்கா அரசு தனது குடிமக்கள் என்று கருதுமேயென்றால், அவர்களுடைய உயிர்களைக் காப்பாற்றுவதைத் தனது கடமையும் பொறுப்பும் என ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் தர்மம் உணர்த்தினர்.
திரு. ஹமீதின் பங்கு
புதுடில்லி தனது அதிருப்தியை வெளியிட்டதையடுத்து, ஒவ்வொரு அமர்வின் பின்னரும் ஊடகங்களுக்கான கூட்டறிக்கைகளைத் தயாரித்து வெளியிடுவது கடினமாகியது. இந்தக் கடினமான பணி திரு. ஹமீது அவர்களிடமும் பாலாவிடமும் என்னிடமும் ஒப்படைக்கப்பட்டது. இந்திய – இலங்கை ஒப்பந்தம் மீதான கண்டனம், இந்தியப் படைகள் புரியும் அட்டூழியங்கள், இந்திய அமைதிப் படைகள் வெளியேற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கை ஆகியவையே பேச்சுவார்த்தையில் பெரிதும் அலசப்பட்ட விடயங்களாக இருந்ததால், இந்திய அரசுக்கு மனம் நோகடிக்காத அல்லது ஆத்திரமூட்டாத வகையில் கூட்டறிக்கைகளைத் தயாரிப்பது சவாலாக அமைந்தது. சில வேளைகளில் சில வாக்கியங்களைத் தயாரிக்கவே பல மணிநேரம் பிடித்தது. கலந்துரையாடலின் கருவும் உள்ளடக்கமும் கூட்டறிக்கைகளில் சேர்க்கப்பட வேண்டும் என்று பாலா வலியுறுத்துவார். இந்தியாவுடன், பிரச்சினையைத் தவிர்க்க வேண்டும் என்று திரு. ஹமீது விரும்புவார். பேச்சுவார்த்தைகளின் விரிவான விளக்கங்களை நீக்கிவிட்டு, புறச்சட்டங்களை மட்டும் விட்டு வைத்தார். தமது மக்களின் இழி நிலையாலும் துயர நிலையாலும் மனப் பாதிப்புக் கண்டிருந்த பாலா, உண்மை நிலை உலகுக்கு உணர்த்தப்பட வேண்டும் என்று வாதிட்டார். இராஜதந்திரத்தில் ஆழ்ந்த அனுபவம் உடைய ஹமீது அவர்கள், அனைத்துலக உறவுகளில் ஏற்படக்கூடிய உணர்வலைகள் பற்றிய அக்கறையுடையவராக இந்தியாவை அதிருப்திப்படாது வைத்திருக்க விரும்பினார். இதனால் எமது முயற்சிக்கு நேரம் பிடித்தது. எமது பொறுமையும் சோதனைக்கு உள்ளானது. ஆனால் ஹமீது அவர்களுடன் பணி புரிவது மகிழ்ச்சியாகவும் இருந்தது. முரண்பாடுகளைத் தீர்ப்பதில் அவர் சமர்த்தர்.
ஹமீது அவர்களைத் தேர்ந்தெடுத்தமை பிரேமதாசா அவர்களுடைய இராஜதந்திரத்தினதும் அரசியலினதும் கூர்மதி என்றே கூறவேண்டும். ஹமீது அவர்கள் இதில் சம்பந்தப்படாது போயிருந்தால், இந்தியப் படை தொடர்ந்தும் வட-கிழக்கில் இருந்திருக்கும் என்றே கூறவேண்டும். ஹமீது அவர்கள் தெரியப்பட்டதற்கு காரணம், அவர் இலங்கை முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதாகும். நாட்டின் தமிழ் பேசும் இனங்களின் உறுப்பினர்கள் என்ற வகையிலே, விடுதலைப் புலிகள் அணிக்கும் ஹமீது அவர்களுக்கும் இடையிலே ஒரு நல்லிணக்கமும் கூடிப்பணி புரிவதற்கான சுமுக நிலையும் ஏற்படும் என்று பிரேமதாசா கருதினார். அது பொருத்தமானதாகவே பட்டது. ஆனால், விடுதலைப் புலிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையிலே ஹமீது வெற்றி கண்டார் என்றால், தமிழ் மக்கள் பால் அவர் கொண்டிருந்த பரிவுணர்வு மட்டுமே என்று குறைத்து எடை போடக் கூடாது. அவரிடம் இருந்த சிறந்த தனிப்பட்ட பண்புகளுமே காரணம் என்று கூற வேண்டும். உருவத்தில் ஹமீது குட்டையானவரே. ஆனால் ஆளுமையில் அவர் பென்னம் பெரியவர் என்பதே எனது அனுமானமுமாகும். அவருடைய திறைமை மிக்க இராஜதந்திரத்துக்கும், பொறுமைதான் காரணமா அல்லது வெளியுறவு அமைச்சராக அவர் பெற்ற நீண்டகால அனுபவம் அவரிடம் எல்லையற்ற பொறுமையைப் படிய வைத்ததா என்பதைத் தீர்மானிக்க எனது அறிவு போதாது என்பேன். ஆனால் ஹமீது அவர்களுடைய வியக்கத்தகு பண்பாக அவருடைய பொறுமையையும் நிச்சயம் குறிப்பிடலாம். பொறுமை, அவரை ஒரு அறிவாளியாகவும் ஆக்கியிருந்தது. அவருடைய உள்ளுணர்வு, கத்திமுனைக் கூர்மையானது. பேச்சுவார்த்தை அரங்கிலே அவர் வந்து அமரும்போது, குறித்த சில நோக்கங்களுடனேயே வருவார். அவற்றைச் சாதிப்பதற்கான, நன்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தந்திரோபாயமும் அவரிடம் இருக்கும். உண்மையில் ஒரு சதுரங்க ஆட்டத்தில் ஈடுபட்டிருப்பது போல, தமது வாதத்தையும் அவர் திட்டமிட்டிருப்பார். ஹமீது அவர்கள், தாம் திட்டமிட்ட பாதையில் பேச்சுவார்த்தையை வழிநடத்திச் செல்வதை ஒரு பார்வையாளராக இருந்து கவனித்துக் கொண்டிருக்கும் வாய்ப்பு, விடுதலைப் புலி அணியின் செயலர் என்ற வகையிலே எனக்குக் கிடைத்தது. எத்தகைய கருத்து வெளியிடப்படும் என்ற எதிர்பார்ப்போடு ஒவ்வொரு வார்த்தையையும் அளந்தே பேசுவார். உடனடிப் பதிலும் அவரிடம் தயாராக இருக்கும். இப்படி, தமது இலக்கை நோக்கிய முடிவை எய்த, தமது விவாதத்தை அவர் நகர்த்திக் கொண்டிருப்பார். ஹமீது அவர்களுடைய இலக்கு எது என்று புரிந்து கொண்டு பாலா தம்மைத் தயாராக்குவார். இருவருக்கும் இடையே இடம்பெறும் அறிவுசார் மோதல், எமக்கு விருந்தாக அமையும். தமக்கு சம நிலையான சவாலை எதிர்கொண்டதும் மோதலை மெள்ளத் துண்டித்துக் கொள்ளும் தருணமும் ஹமீதுக்குத் தெரியும். சிறீலங்காக் குழுவின் தலைவர் என்ற நிலையில், தமது அணித் தோழர்களுடைய கருத்தமைவும் உணர்வுகளும் எப்படி இருக்கின்றன என்று நாடி பிடித்துக் கொண்டே இருக்கும் ஹமீது அவர்கள், முரண்பாடுகள் தலைதூக்கும்போது, அவற்றைச் சாதுரியமாக தவிர்த்து விடுவார். பேச்சின் தொனி பழுதுபடாமலும், இணக்கப்பாட்டிற்கு வருவது ஊறுபடாமலும் பார்த்துக் கொள்வார். பிரேமதாசா மேலும் ஒரு புத்தி சாதுர்யமான காரியம் செய்திருந்தார். கடும்போக்கு இனவாதிகளான லலித் அத்துலத்முதலியையும் காமினி திசநாயக்காவையும் பேச்சுவார்த்தை அணியிலே சேர்க்காது விட்டிருந்தார். அவர்களுக்கும் எமக்கும் இடையே கடும் கசப்புணர்வு நிலவியதால், பேச்சுவார்த்தை அரங்கிலே எதிரெதிர் இருக்கைகளில் நாம் அமர்ந்தோமேயென்றால், முதல் சுற்றுப் பேச்சையே நாம் கடந்திருப்போமா என்பது சந்தேகமே.
வெளிப்படையான அரங்கிலே பேசப்படுவதும் குறிப்பிடப்படுவதும் எப்போதும் முழுமை பெற்றுவிடுவதில்லை என்பது பெரும்பாலான, அனுபவம் மிக்க இராஜதந்திரிகளுக்குத் தெரியும். தனியாக நடைபெறும் பேச்சுவார்த்தை சில வேளைகளில் பகிரங்கப் பேச்சுவார்த்தையை விட முக்கியமானதாக அமைந்தது விடும். தனியாக நடத்தும் இராஜதந்திர முயற்சியிலே ஹமீது அவர்கள் பெருமளவு நம்பிக்கை வைத்திருந்தார். சிக்கலானதும் உள்ளார்ந்ததும், பிரச்சினையைத் தோற்றுவிப்பதுமான விடயங்களை மற்றவர்களுடைய பார்வையிற் படாது பிரத்தியேகமான சூழலில், நம்பிக்கை அடிப்படையில் நடத்தப்படுவதையே அவர் விரும்பினார். இந்த அணுகுமுறையோடு மாலை வேளைகளில் எமது விடுதியில் பாலாவுடன் தனிப்பட்ட கலந்துரையாடல்களை அவர் அடிக்கடி நடத்தினார். இப்படியான சந்திப்புக்களின் போதே பாலாவும் ஹமீது அவர்களும் ஓர் ஆரோக்கியமான புரிந்துணர்வையும் ஒருவருக்கு ஒருவர் இடையிலான மரியாதையும் கட்டியெழுப்பினார்கள். வடக்குக் கிழக்கு நிர்வாகம் போன்ற விடயங்களை இந்தியப் படைகள் வெளியேற்றப்பட்ட பின்னரே அணுக ஹமீது விரும்பினார். இது தொடர்பாகவும் விடுதலைப் புலிகளின் நிலைப்பாடு என்ன என்பதை பாலாவும் தெளிவுபடுத்தினார். இருவரிடமும் முதிர்ச்சி இருந்தது. ஆகவே முக்கிய கருத்து வேறுபாடுகள் தொடர்பாக தரம் கெட்ட பொது விவாதத்துக்கோ, பாதகம் ஏற்படக்கூடிய அரசியல் பிளவுக்கோ இடம் இருக்கவில்லை. தனிப்பட்ட முறையிலே பாலாவும் நானும், இனிப் பொதுவாக ஏனைய விடுதலைப் புலிகளும் ஹமீது அவர்கள் மீது மதிப்பு வைத்திருந்தோம்; அவரை விரும்பினோம். விடுதலைப் புலி அணிக்கென்று சுவை சொட்டத் தயாரிக்கப்படும் முஸ்லிம் புரியாணிகளையும் ஆட்டிறைச்சிக் கறியையும் அவர் வழங்குவார். வெறும் அரசியல் தொடர்புக்கு மேலாக, மிக முக்கயமானதான மானுட பந்தத்தை அது எம்மிடையே ஏற்படுத்தியது. மேலும் பிரபாகரன் அவர்களும் ஹமீது அவர்கள் மட்டில் பெரும் மரியாதை வைத்திருந்தார். இது இரு தரப்பினரையும் உரையாடலில் இணைத்தது. பேச்சுவார்த்தை தேவைப்பட்ட அளவு நீடிக்கவும் இது இடமளித்தது. எதிர்பாராத வகையில் நேர்ந்த ஹமீது அவர்களுடைய மரணம், துயர் தருவதாக அமைந்தது. அத்தகைய ஆற்றலும் ஆளுமையும் கொண்டவர்கள் சிறீலங்கா அரசியலில் இல்லாமற் போனது ஈடுசெய்ய முடியாத இழப்பேயாகும்.
அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை முன்னேறிக் கொண்டிருந்தது. தமிழர் தாயகத்தில் இந்திய இராணுவத்தின் அத்துமீறல்கள் மீதே முக்கிய கவனம் செலுத்தப்பட்டது. இது புதுடில்லிக்கு அங்கலாய்ப்போடு எரிச்சலையும் மூட்டியது. ரஜீவ் நிர்வாகத்துக்கு ஒரு கடுமையான இராஜதந்திரப் பாதிப்பு நிலையை இது ஏற்படுத்தியது. ஹமீது அவர்களுடைய கவனமான தணிக்கையால் கடுமையாகக் கட்டுப்படுத்தப்பட்ட போதிலும், பகிரங்கமாக வெளியிடப்பட்ட கூட்டறிக்கைகள் உள்நாட்டிலும் அனைத்துலகிலும் இந்தியப் படைகள் புரிந்த போர்க் குற்றங்களை அம்பலப்படுத்தின. புதுடில்லியின் அதிருப்தி 1989 மே 14 இல், கொழும்பில் இருந்த இந்திய உயர் ஸ்தானிகர் லக்கன் லால் மெக்ரோத்ரா அவர்களுடைய ஊடகச் செவ்வியில் கடுப்போடு தெரிவிக்கப்பட்டது. அதில், இந்திய அமைதிப் படையின் பணியை அவர் ஆதரித்துப் பேசியதோடு, தவறான செய்திகளை வெளியிடுவதாக அவர் புலிகளைக் கண்டித்தும் இருந்தார். மெக்ரோத்ரா அவர்களுடைய செவ்வி, உள்ளூர் ஊடகங்களால் பரவலாகப் பிரசித்தப்படுத்தப்பட்டது. தவறான எதிர்க்கருத்தையும் பரப்பியது. எனவே அமைச்சர் அணியுடனான சந்திப்பு மே 16இல் இடம்பெற்ற போது, விடுதலைப் புலிகள் அணி, அந்த விடயத்தைப் பற்றிக் குறிப்பிட்டதோடு தங்கள் பதிலுரை கூட்டறிக்கையிலே கடும் தணிக்கையின்றி உள்ளடக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டது.
வடக்குக் கிழக்கிலே அமைதியும் சுமுக நிலையும் இந்தியப் படைகளால் மீள நிறுவப்பட்டுவிட்டதாக இந்திய தூதர் முன்வைத்த கருத்தை விடுதலைப் புலிகள் அணி முற்றாக நிராகரித்தது. நேர் மாறாக அந்தப் படைகள் வன்செயலையும், பயங்கரத்தையும் தீவிரப்படுத்தியிருப்பதாகவும் தமிழ் மாநிலங்களில் தணிவின்றிப் போர் நடந்து கொண்டிருப்பதாகவும் புலிகள் வாதிட்டார்கள். விடுதலைப் புலிகளுக்கு எதிரான ஆயுதக் களைவு நடவடிக்கையில், இந்தியப் படைகள் குறைந்த பட்சப் பலத்தையே பயன்படுத்துவதாகத் தெரிவித்த இந்தியத் தூதரின் கூற்றை நிராகரித்த புலிகளின் பிரதிநிதிகள், அதிக பட்சப் பலத்தை இந்தியப் படைகள் பயன்படுத்துவதோடு கனரக ஆயுதங்களான பீரங்கி, பெரிய மோட்டார் ஆகியவற்றையும் கவச வாகனங்களையும் இயந்திரத் துப்பாக்கி பொருத்திய உலங்குவானூர்திகளையும் பயன்படுத்துவதாகக் கூறினார்கள். பொதுமக்கள் குறைந்த பட்சத் தொகையினரே தாக்குதலுக்கு உள்ளாகினர் என்று உயர் ஸ்தானிகர் அறிக்கையிட்டிருப்பது, வேண்டும் என்றே உண்மையை மறைக்கப் பார்க்கும் ஒரு முயற்சி என்று விளக்கிய புலிகள், ஐயாயிரத்துக்கும் அதிகமான தமிழ் மக்கள் கொல்லப்பட்டிருப்பதைத் தாம் ஏற்கனவே உறுதியான ஆதாரங்களுடன் நிரூபித்ததாகக் கூறினர். இந்தியர் மேற்கொண்ட ஆயுதக் களைவு முயற்சி வெற்றியளித்து இருப்பதாகவும், விடுதலைப் புலிகள் போராடும் வீச்சை இழந்து காடுகளுக்குள் ஓரங்கட்டப்பட்டிருப்பதாகவும் இந்திய தூதர் கூறியிருப்பதைப் புலி அணியினர் நிராகரித்தனர். தமது கெரில்லாப் போராளிகள் வடக்கு கிழக்கு முழுவதிலும், இந்தியப் படைகளுடன் பொருதிக் கொண்டிருப்பதாகவும், கணிசமான உயிர்ப் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் இந்தியப் படைகள் மனம் தளர்ந்து போகச் செய்திருப்பதாகவும் புலிகள் கூறினர். விடுதலைப் புலிகளுக்கு எதிராக ஆயுதக் களைவை நடத்தும் இந்தியப் படைகள் தமிழ்க் குழுக்களுக்கு ஏன் ஆயுதங்கள் வழங்கிக் கொண்டிருக்கின்றன என்றும், தமிழ்த் தேசிய இராணுவம் என்ற பெயரில் தொண்டர் படை ஒன்றை ஏன் திரட்ட வேண்டும் என்றும் கேட்டார்கள். இத்தகைய நடவடிக்கைகள் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் உண்மையான நோக்கத்தையும் அதன் முக்கிய கடப்பாடுகளையும் மீறுவதாகும் என்றும் புலிகள் வாதிட்டார்கள். தமிழ் மக்களின் அன்றாடப் பொருளாதார நடவடிக்கைகள் மீது இந்திய இராணுவம் விதிக்கும் வெவ்வேறு கட்டுப்பாடுகளாலும், தடைகளாலும் வடக்கு-கிழக்கில் உள்ள விவசாயம், கைத்தொழில், மீன்பிடி ஆகியவை வெகுவாகப் பாதிக்கப்பட்டிருப்பதையும் இதன் விளைவாக தமிழ் மக்கள் மோசமான துயரங்களை அனுபவிப்பதையும் புலிகளின் அணி விரிவாக எடுத்துரைத்தது. கூட்ட முடிவிலே இந்திய உயர்ஸ்தானிகருக்குப் பதிலளிக்கும் வகையிலே எமது கருத்துக்களைக் கூட்டறிக்கையிலே உள்ளடக்குமாறு ஹமீது அவர்களுடன் வாதாடி வெற்றி பெற்றோம்.
பேச்சுக்களுக்கு இந்தியா கண்டனம்
ஊடகங்களுக்கான கூட்டறிக்கை உள்நாட்டிலும் அனைத்துலகிலும் பரவலாகப் பிரசித்தம் பெற்றது. இது ரஜீவ் காந்தி அரசுக்கு ஆத்திரமூட்டியது. இதன் பிரதிபலிப்பாக கொழும்பிலுள்ள இந்திய தூதரகத்திலிருந்து கண்டன அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அந்த இந்திய அறிக்கை பின்வருமாறு அமைந்தது:
“சிறீலங்காவில் உள்ள இந்திய அமைதிப் படையின் பங்கும் பணியும் பற்றி, பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள ஒரு பிரிவின் கருத்தை சிறீலங்கா அரசின் அறிக்கைகள் வெளிப்படுத்தியிருப்பதையும் தேவையற்ற அவதூறு தெரிவித்திருப்பதையும் இந்திய உயர் ஸ்தானிகராலயம் கவனித்துள்ளது. இந்திய அமைதிப் படை இந்த நாட்டுக்கு வந்த சூழ்நிலை பற்றியோ, இந்திய மற்றும் சிறீலங்கா அரசுகளினால் அதனிடம் கூட்டாக ஒப்படைக்கப்பட்ட கடப்பாடுகள் பற்றியோ, அதன் பணியில் உள்ள பேரிடர்பாடுகள் பற்றியோ, சிறீலங்காவின் ஐக்கியத்தையும் இறைமையையும் பாதுகாக்கும் முயற்சியில் அது புரிந்துள்ள பாரிய தியாகங்கள் பற்றியோ இந்த அறிக்கைகள் குறிப்பிடாதிருப்பதையும் உயர் ஸ்தானிகராலயம் கவனித்திருக்கிறது. இதன் விளைவாக, மக்கள் மனதில் தவறான கருத்தொன்று விதைக்கப்படலாம். தற்போது நடைபெறும் பேச்சுவார்த்தையின் நோக்கம் பரப்புரைத் தளம் ஒன்றை வழங்குவதல்ல. மாறாக சம்பந்தப்பட்ட அனைவரும் வன்செயலைக் கைவிட்டு, ஜனநாயக நீரோட்டத்துக்குள் சிறீலங்காவின் ஐக்கியத்தையும் இறைமையையும் ஏற்பதை இலக்காக கொள்ள வேண்டும் என்று நாம் கருதுகிறோம். ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டால், அவற்றை நாம் சீராக்கிப் பதிலளிக்க வேண்டியிருக்கும்.”
அமைச்சர் அணியோடு மே 18ஆம் திகதியன்று கூட்டம் மீளக் கூட்டப்பட்டபோது, இரண்டு அமைச்சர்கள் அந்த அணியில் சேர்க்கப்பட்டிருந்தார்கள். ஒருவர் யூ.பீ.விஜேக்கோன். அவர் பொதுநிர்வாகம், மாகாணசபை மற்றும் உள்நாட்டு அலுவல்கள் ஆகியவற்றிற்கு அமைச்சராக இருந்தார். மற்றவர் பீ.தயாரத்ன. காணி, நீர்ப்பாசனம், மகாவலி அபிவிருத்தி ஆகியவற்றிற்கு அமைச்சர் இவர். விடுதலைப் புலிகளுக்கும் சிறீலங்கா அரசுக்கும் இடையே நடைபெறும் பேச்சுவார்த்தை தொடர்பாக இந்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்ட விடயங்களை விவாதிக்க விடுதலைப் புலி அணியினர் விரும்பினார்கள். புலிகளின் தலைமைப் பேச்சாளர் என்ற நிலையில், வாதாடிய பாலா, இந்திய இராணுவத்துக்கு வழங்கப்பட்ட அதிகாரப் பொறுப்பானது அமைதியை மீளக் கொண்டுவருவதும், சுமுக நிலையைத் தமிழ்ப் பகுதிகளில் ஏற்படுத்துவதுமேயன்றி, தமிழ் மக்களுக்கு எதிராகப் போர் தொடுப்பதல்ல என்று எடுத்துக் கூறினார். அமைதியைப் பேணும் மனுவுடன் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தியப் படையினர், வடக்குக் கிழக்கில் போர்ச் சூழலைத் தோற்றுவித்து, தெற்கிலே கொந்தளிப்பும் குழப்பமும் உருவாக்கி விட்டார்கள் என்று பாலா கூறினார். ஹமீது அவர்கள் தமது வாதத்தை முன்வைத்துப் பேசுகையில், இந்தியப் படைகளிடம் பொறுப்பிக்கப்பட்ட அதிகாரம், அமைதியை நிலைநாட்டுவது மட்டுமல்லாமல், விடுதலைப் புலிகள் உள்ளிட அனைத்துப் போராளிக் குழுக்களிடமிருந்தும் ஆயுதக் களைவு செய்வதுமாகும் என்று வாதிட்டார். இதற்கு பதிலளித்த பாலா, ஒப்பந்தப்படி, ஆயுதக் களைவுக்காக இந்தியப் படைகளுக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் எழுபத்திரண்டு மணி நேரமே என்றும், இருபத்து நான்கு மாதங்கள் சென்றபோதிலும் விடுதலைப் புலிகளிடமிருந்து ஆயுதங்களைக் களைய இந்தியப் படைகளால் இயலாது போய்விட்டது என்று சுட்டிக்காட்டியதோடு, தங்கள் பொறுப்பை நிறைவேற்ற இந்திய அரசு தவறிவிட்டது என்றும் சுட்டிக்காட்டினார். அது தவிர, ஒப்பந்தத்தின் விதி ஒன்றின் படி, வடக்குக் கிழக்கு மாகாணத்தின் அனைத்து மக்களின் உயிர்க்காவலையும், பாதுகாப்பையும் இந்தியாவும் சிறீலங்காவும் இணைந்து வழங்கக் கடப்பாடுடையன என்பதை புலிகள் அணியினர் சுட்டிக் காட்டினார்கள். ஆயிரமாயிரம் பொதுமக்கள் உயிரிழந்து பெரும் ஆபத்துக்கு உள்ளான போதிலும், சிறீலங்கா அரசு வேண்டுமென்றே மௌனமாக இருப்பதாகவும் புலிகள் கண்டித்தார்கள். ஈ.பீ.ஆர்.எல்.எஃப் இன் மாகாண நிர்வாகத்தைப் பாதுகாத்துப் பேணுவதற்காகத் தமிழ் இளைஞர்களை வலுக்கட்டாயமாக ஆட்சேர்ப்பிற்கு உள்ளாக்கி, பயிற்சி வழங்கி, ஆயுதம் வழங்கி தமிழ்த் தேசிய இராணுவம் என்ற பெயரில் பலமான இராணுவக் கட்டமைப்பை இந்தியப் படைகள் கட்டியெழுப்புவதாகவும் புலிகள் முறையிட்டனர். இந்த இராணுவக் கட்டமைப்பை உருவாக்குவதால், அது தமிழ்ப் பகுதிகளில் உள்நாட்டுப் போருக்கும் இரத்தக் களரிக்கும் வழிகோலப் போகிறது என்றும் புலிப் பிரதிநிதிகள் எச்சரித்தார்கள்.
இந்திய உயர் ஸ்தானிகராலயம் வெளியிட்ட கருத்தறிக்கை பற்றிக் குறிப்பிட்ட புலி அணியினர், இந்திய அதிகாரிகள் தங்கள் கொழும்பு வருகையின் நோக்கத்தைத் தவறாகப் புரிந்து கொண்டார்கள் என்றும் கூறினார்கள். தமிழர் தாயகத்தைச் சின்னாபின்னப்படுத்தி, தமிழ் மக்களுக்குச் சொல்லொணாத் துயரத்தை ஏற்படுத்தும் போருக்கும் வன்செயலுக்கும் முடிவு கட்டவே தாம் கொழும்பு வந்திருப்பதாக விடுதலைப் புலிப் பிரதிநிதிகள் வலியுறுத்திக் கூறினார்கள். தமிழ் மக்களின் தேசிய வேணவாவை நிறைவேற்ற வல்ல அரசியல் இணக்கம் ஒன்றைப் பேசித் தீர்க்கும் நோக்கத்துடனேயே தாம் கொழும்பு வந்திருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தார்கள்.
அமைச்சர் அணியுடன் 1989 மே 23இல் இடம்பெற்ற சந்திப்பின் போது தமிழ்ப் பகுதிகளில் குறிப்பாகக் கிழக்கு மாகாணத்தில் சிங்களக் குடியேற்றம் தொடர்பான விபரங்களே விவாதிக்கப்பட்டன. புள்ளி விபரங்கள், வரைபடங்கள் அடங்கிய நீண்ட ஆய்வு ஒன்றைச் சமர்ப்பித்த புலிகள், சுதந்திரம் கிடைத்த காலத்தில் இருந்து, கிழக்கு மாகாணத்தில் தொடர்ச்சியான குடியேற்றம் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும், இந்தக் குடியேற்றத் திட்டங்கள் அரசினால் நடத்தப்படுபவை என்றும், வாதிட்டார்கள். இனப் போராட்டத்தின் முக்கியமான காரணிகளில் ஒன்று, திட்டமிட்ட குடியேற்றங்களே என்றும் உறுதியாகக் கூறினார்கள். இது, தமிழ்ப் பகுதிகளின் சமுதாயக் கட்டமைப்பை மாற்றியமைத்ததோடு, தமிழ் பேசும் மக்களின் சமூக, பொருளாதார அரசியல் வாழ்வையே படுகேடாகப் பாதித்திருந்தது. இக் கொடூரமான இனவாதக் கொள்கையால் ஆயிரமாயிரம் தமிழர்களும் முஸ்லிம்களும் தமது பாரம்பரிய வாழ்விடத்திலிருந்து விரட்டப்பட்டார்கள் என்றும் புலி அணி வாதிட்டது. இது தொடர்பாகக் காரமான விவாதம் நீண்ட நேரம் இடம்பெற்றது. இறுதியில் இப் பிரச்சினையை அரசுத்தலைவரிடம் விடுவது என்று இணங்கப்பட்டது.
முந்திய சந்திப்புகளின் போது, புலிகள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிப்பதற்காக 1989 மே 27இல் ஹமீது அவர்கள் புலி அணியைச் சந்தித்தார். நாட்டில் இருந்து இந்தியப் படைகளை அகற்றும் விடயத்தில் அரசுத் தலைவர் உறுதியாக இருக்கிறார் என்று ஹமீது உறுதிப்படுத்தினார். நடைபெற்றுக் கொண்டிருக்கும் குடியேற்றத் திட்டங்களை நிறுத்துவதற்கு முன், குறித்த சில குடியேற்றத் திட்டங்கள் பற்றிய விபரங்களைப் படிக்க அரசுத் தலைவர் விரும்புவதாக ஹமீது கூறினார். இனி, விடுதலைப் புலிகளுக்கும் சிங்கள அரச படைகளுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்த அரசுத் தலைவர் விரும்புகிறார் என்றும் ஹமீது தெரிவித்தார். போர் நிறுத்த விடயம் தொடர்பாகத் தாம் பிரபாகரன் அவர்களுடன் கலந்தாலோசிக்க வேண்டும் என்று புலி அணியினர் தெரிவித்தனர். பேச்சுவார்த்தை தொடங்கியதில் இருந்தே பிரகடனப்படுத்தாத போர் நிறுத்தம் நிலவுவதை அவர்கள் குறிப்பிட்டார்கள். நாட்டை விட்டு இந்திய அமைதிப் படை வெளியேறிய பின்னர், விடுதலைப் புலிகள் நாட்டு அரசியல் நீரோட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று அரசுத் தலைவர் வெகுவாக விரும்புவதாக ஹமீது கூறினார். விடுதலைப் புலிகள் தேர்தலில் நிற்கத் தயாரென்றால், வடக்குக் கிழக்கு மாகாண சபையைக் கலைத்துவிட அரசுத் தலைவர் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இது தொடர்பாக, வன்னியில் உள்ள தலைமையுடன் தாம் கலந்தாலோசிக்க வேண்டும் என்று, புலி அணியினர் கூறினர்.
முதற் சுற்றுப் பேச்சுவார்த்தைகளின் இறுதி அமர்வு 1989 மே 28இல் நடைபெற்றது. பேச்சுவார்த்தை முன்னேற்றங்களை அளவிடும் இறுதிக் கூட்டமாக அது அமைந்தது. அது வரை இடம்பெற்ற அமர்வுகள், சம்பந்தப்பட்ட விடயங்கள் பற்றி, பெருமளவு புரிந்து கொள்ளவும் தெளிவுபடவும் வழிகோலியதாகவும், எதிர்காலப் பேச்சுவார்த்தைக்கு ஒரு உதவியான அடித்தளத்தை நிறுவியிருப்பதாகவும் இரண்டு பிரிவினரும் ஏற்றுக் கொண்டனர். அடிப்படைச் சிக்கல் இனப் பிரச்சினையே என்பதையும் இரு அணியினரும் ஏற்றுக் கொண்டதோடு, இப்பிரச்சினை சகிப்புத் தன்மையோடும், புரிந்துணர்வோடும் நேரடிப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட வேண்டும் என்பதையும் ஒப்புக் கொண்டனர்.
காட்டில் பிரபாகரனுடன் சந்திப்பு
பாலா, நான், யோகி, மூர்த்தி, ஜுட் ஆகியோரும் எமது மெய்ப்பாதுகாவலர்களும் 1989 மே 30ஆம் திகதி பிரபாகரன் அவர்களுடன் கலந்தாலோசனை புரிவதற்காகச் சிறீலங்கா விமானப் படை உலங்குவானூர்தி ஒன்றில் வன்னிக்கு எடுத்துச் செல்லப்பட்டோம். எம்மைப் பொறுத்த வரையிலே பிரபாகரன் அவர்களையும், எமது போராளித் தோழர்களையும் சந்தித்து எமது பழைய நட்பைப் புதுப்பித்து 1987இலே இந்தியாவுக்கும் புலிகளுக்கும் இடையே போர் மூண்ட பின், நாம் அனைவரும் பெற்ற அனுபவங்களைப் பரிமாறிக் கொள்ள வேண்டும் என்ற வேணவாவும் எமக்கு இருந்தது.
பிரபாகரன் அவர்களுடைய தலைமைப் பணிமனையான 1:4 தளம் என்ற பாசறையை நோக்கி நாம் சென்றுகொண்டிருந்தோம். இந்தப் பிரதேசத்தில் உள்ள பாசறைகள் மீது இந்தியர் தொடரான தாக்குதல் நடவடிக்கையை நடத்தியிருந்தார்கள். யாழ்ப்பாணத் தீபகற்பத்தில் ‘பவான் நடவடிக்கை’ காலத்தில், விடுதலைப் புலிகளை அழித்தொழிக்க முயன்று தோற்றபின், இந்தியப் படை, வன்னிக் காடுகளில் உள்ள விடுதலைப் புலித் தளங்களை நோக்கித் திரும்பிக் குரூரம் பரவிய, ரத்தச் சகதி நிறைந்த களமாக உருமாற்றியிருந்தது. பாரிய இராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. விடுதலைப் புலிப் போராளிகளையும் அவர்களுடைய தலைமையையும் வெளியே இழுத்து அழித்தொழிக்கும் நோக்கம் ஒன்றே அவர்களிடம் இருந்தது. இந்த நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்த ஆயிரமாயிரம் புதிய இந்தியப் படையினர் ஈடுபடுத்தப்பட்டார்கள். கிளர்ச்சி முறியடிக்கும் வல்லுநர்கள் அடங்கிய சிறப்பு அதிரடிப் படையினர் ஈடுபடுத்தப்பட்டனர். படையினரின் நகர்வுக்கும் தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் கனரக கவச வாகனங்களும் ஏவுகணை பொருந்திய உலங்குவானூர்திகளும் பயன்படுத்தப்பட்டன. ஆயிரமாயிரம் இந்தியப் படைகள் கிழக்குக் கரையான முல்லைத்தீவில் இருந்து ஒட்டுசுட்டான் வரை பரவி நிலைகொண்டார்கள். வடகிழக்கில் உள்ள கிளிநொச்சி வரை இந்தப் படைக் குவிப்பு நடந்தது. சுற்றி வளைப்பும், தேடலும் அளவுக்கு அதிகமாக நடைபெற்றன. இந்த நடவடிக்கைகளில் பெருந்தொகைப் பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள். ஆனால் இந்தியப் படைகளால் குறிவைக்கப்பட்ட விடுதலைப் புலிகள் அடர்ந்த காடுகளில் பாதுகாப்பாகத் தங்கள் போராட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள்.
விடுதலைப் புலிகளை நிலைகுலையச் செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட இந்த ஆரம்ப முயற்சிகள் தோல்வி கண்டன. எனவே வேறு புதிய தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்திய இராணுவத் தலைமை திட்டமிட்டது. ‘செக்மேற்’ என்ற குறிப்பெயரோடு 1988 ஜுனில் இருந்து அடுத்தடுத்து நடவடிக்கைகளை இந்திய இராணுவம் நடத்தியது. இதில், அலம்பில் காடுகளில் உள்ள புலிகளின் பாசறைகளை இந்திய இராணுவம் தனியாக குறிவைத்துத் தாக்கியது. விமானத் தாக்குதலும் பீரங்கித் தாக்குதலும் அடுதொடராக அந்தப் பகுதியை அதிர வைத்தன. பலம் வாய்ந்த குண்டுகளும், பீரங்கி எறிகணைகளும் ஆயிரமாயிரம் தொன்கள் அளவில் இரவு பகலாக புலிகளின் நிலைகள் மீது மழையெனச் சொரிந்தன. ஆயினும் இந்த அதி தீவிர முயற்சி தோல்வியிலேயே முடிந்தது. புலிகள் மீதான பாதிப்பு மிகக் குறைவாகவே இருந்தது. தரைமோதல்களைப் பொறுத்த வரையிலே, காடுகளில் போராடி அனுபவம் பெற்ற இந்தியப் படைகளின் சிறப்பு அதிரடி அணிகள் புலிக் கெரில்லாப் படைகளிடம் படுதோல்வி கண்டன. மணலாற்றுப் பகுதியில் சிறீலங்காப் படைகளுக்கும் அதே கதி நேர்ந்தது. அங்கு ஏப்ரல் 15இல் ஆண், பெண் போராளிகள் அடங்கிய கெரில்லா அணி ஒன்று சிறீலங்கா இராணுவக் காவல் உலா அணியைத் தாக்கி 21 அரச படையினரை அதே இடத்தில் கொன்றது.
பிரபாகரன் அவர்களுடைய காவல் உரம் பெற்ற பாசறைகள் தூரக் காட்டினுள் இருந்தன. எமது உலங்குவானூர்தி முந்திய தடவை நெடுங்கேணியில் தரை இறங்கி இருந்தது. ஆனால் இந்தத் தடவை முல்லைத்தீவில் உள்ள அலம்பில் காடுகளில் தரை இறங்க இடம் குறிக்கப்பட்டது. இதனால், பிரபாகரன் அவர்களுடைய பாசறைக்குச் செல்லும் தூரம் கணிசமான அளவு குறைக்கப்பட்டது. தரையிறங்கும் தளத்தில், எமது வரவை எதிர்பார்த்துப் பெருந்தொகைப் போராளிகள் ஆயத்த நிலையில் நின்றார்கள். இந்தியாவுடனான எமது போர் இன்னமும் நடந்து கொண்டிருந்ததால், அவர்கள் அந்தப் பகுதியில் படை நகர்வு நடவடிக்கையில் ஈடுபடமாட்டார்கள் என்று எதிர்பார்க்க முடியாதிருந்தது. கொழும்புப் பேச்சுவார்த்தையின்போது இந்திய எதிர்ப்பு நிலைப்பாட்டை நாம் எடுத்திருந்ததால், நாம் அலம்பிலில் இறங்கும்போது, இந்திய அமைதிப் படைகள் எம்மைப் பழிவாங்க முற்படலாம் என்று அஞ்சினோம். எனவேதான் பெருந்தொகைப் போராளிகள் அங்கு நிறுத்தப்பட்டிருந்தார்கள். நாம் தரை இறங்கியதும் சோதியா அங்கே வந்தார். சென்னையில் வாழ்ந்த காலத்திலிருந்து அவருடன் தோழமை பூண்டிருந்தோம். அவருடன் ஆயுதம் தரித்த பெண் போராளிகள் குழு ஒன்று, எம்மைக் கூட்டிச் செல்ல வந்திருந்தது. அவருடைய தோற்றம் அவரில் ஏற்பட்டிருந்த தன்னம்பிக்கையைப் பிரதிபலித்தது. இலங்கைப் படைகளுக்கு எதிராகவும் இந்தியப் படைகளுக்கு எதிராகவும் பல சமர்களில் பங்குபற்றியதால் அனுபவ முறுக்கேறி இருந்தார். அதைவிட பெண் போராளிகளிடையே அவருக்கு அளவற்ற செல்வாக்கு இருந்தது. தங்கள் தலைவியாகச் சோதியாவை அவர்கள் ஒட்டு மொத்தமாக ஏற்றுக் கொண்டிருந்தார்கள். பெண் போராளிகளின் தளபதியாக அவர் பதவி உயர்த்தப்பட்டிருந்தார். இந்தியப் படை ஆக்கிரமிப்புக் காலத்தில் அலம்பில் காட்டில், இவர் பின்னர் மரணமானார். நெஞ்சினுள் ஏற்பட்ட ஒரு நச்சுத் தொற்றி, உள்ளே பரவி இருதயத்தைத் தாக்கி அவரது உயிரைப் பறித்தது. கலகலப்பான ஆற்றல் மிக்க ஒரு தலைவியைப் பெண் போராளிகள் இழந்தார்கள். சோதியாவுக்கு அடுத்ததாகத் தலைமை வகித்தவர் சுகி. சோதியாவும் சுகியும் ஒன்றாகவே சென்னையில் புலி அணியில் சேர்ந்தவர்கள். பெண் போராளிப் பிரிவின் இரண்டாவது தலைவியாக சுகி பொறுப்பேற்றார்.
கொழும்பில் இருந்து நாம் அலம்பிலுக்கு சென்ற நேரத்தை விட, பிரபாகரன் அவர்களுடைய காட்டுப் பாசறைக்கு நடந்து செல்ல, பல மடங்கு அதிக நேரம் பிடிப்பதை விரைவிலே உணர்ந்தோம். காட்டுக்குள் அடி அழிக்கப்பட்ட ஒற்றறையடிப் பாதைகள், சிற்றாறுகள், அடர்ந்த இலை குழைப் பற்றைகள் ஆகியவற்றினூடாக இழுத்திழுத்து நடந்தோம்.
பாலாவுக்கு நீரிழிவு நோய். நெடுந்தூரம் நடக்க முடியவில்லை. இரண்டு கம்புகளின் நடுவே ஒரு கதிரையைக் கட்டி, பாலாவை அதில் இருத்தி, ஆள்மாறி, ஆள்மாறி, அவரைத் தம் தோளிலேயே போராளிகள் சுமந்து சென்றார்கள். பிரபாகரன் அவர்களிடம் எம்மை அழைத்துச் செல்லும் பாதுகாப்பு ஏற்பாட்டுக்கு அந்தத் தடவை பொறுப்பாக மூத்த தளபதி சங்கர் இருந்தார். இயக்கத்துடனும் பிரபாகரன் அவர்களுடனும் சங்கருக்கு நீண்ட நெருங்கிய தொடர்பு இருந்தது. ஒரு சிறிய கெரில்லாக் குழுவை வைத்துக் கொண்டு வன்னிக் காடுகளில் பிரபாகரன் அவர்கள் பயிற்சி பெற்ற தொடக்க நாட்களிலே இருந்து தம்மை இணைத்துக் கொண்டவர். பின்னர் கனடாவில் அவர் சில காலம் வாழ்ந்தார். அங்கே விமானப் பொறியியல் கற்றார். வேறும்பல தமிழரைப் போல 1983 ஆண்டு கலகங்கள் அவரையும் கொதிப்படையச் செய்தன. சென்னை திரும்பி, பிரபாகரன் அவர்களுடனும் ஆயுதப் போராட்டத்துடனும் சங்கர் மீள இணைந்து கொண்டார். பல சமர்களில் பங்கு பற்றிய நீண்ட காலப் போர் அனுபவம் அவருக்கு உண்டு. பிரபாகரன் அவர்களின் மிகுந்த நம்பிக்கைக்கும் விசுவாசத்துக்குமுரிய போராளிகளில் சங்கரும் ஒருவர். பிரபாகரன் அவர்களுடைய தளத்துக்கு நாம் நடந்து கொண்டிருந்தபோது நாம் செல்லும் நடைபாதையில் நின்று அங்காலோ, இங்காலோ கால் மாறி வைக்க வேண்டாம் என்று சாதாரணமாகச் சங்கர் கூறினார். இந்தியப் படைகள் அங்கு அடிக்கடி ஊடறுத்து வந்த போதெல்லாம் நிலக் கண்ணி வெடிகளைத் தாராளமாக நட்டிருப்பதாக எதுவித பதற்றமும் இல்லாமல் குறிப்பிட்டார். இந்த விபரத்தைக் கேட்டதும் நான் பயத்தில் உறைந்து போயிருக்க வேண்டும். ஆனால் அஞ்சுவதால் என்ன பயன் என்று என்னைத் தேற்றிக் கொண்டேன். எமது போராளிகள் தாம் ஆபத்தினூடாக நடந்து கொண்டிருப்பதைப் பொருட்படுத்தவில்லை. ஆகவே நான் மட்டும் ஏன் அலட்டிக் கொள்ள வேண்டும்? ஆபத்து என்றால், எல்லோருக்கும் பொதுவானதுதான் என்று முடிவு செய்தேன். இப்படியான சந்தர்ப்பத்தில் மனப் பூர்வமாகத் தயார்படுத்திக் கொண்டு, வருவது, வரட்டும் என்று ஏற்றுக் கொண்டு தொடர்ந்து முன்னேற வேண்டியதுதான். அஞ்சுவதால் மட்டும் நிலக்கண்ணி வெடியில் இருந்து தப்பிவிடமுடியுமா என்ன? பயந்தால் ஒரு இனிய பயணம் கெட்டுவிடும். பயம்தான் நீளும். இந்தியப் படைகள் வேறு அடையாளங்களையும் அங்கு விட்டு வைத்திருந்தார்கள். தொட்டம் தொட்டமாக மரங்கள் முறிந்திருந்தன. நீர் தேங்கிய ஆழமான குழிகள் பறிக்கப் பட்டிருந்தன. பலத்த விமானக் குண்டுப் பொழிவுகளினதும் இடைவிடாத ஆட்டிலெறி ஷெல் அடிகளின் எச்சங்களே அவை என்பது புரிந்தது.
காடுகளுக்குள் நெடுந்தூரம் செல்லச் செல்ல, காவல் உலாச் செல்லும் போராளிக் குழுக்களைக் கண்டோம். தேவையான பொருட் பொட்டலங்களைச் சுமந்து செல்வதற்காக நீண்ட தூர நடையில் ஈடுபட்டிருந்தவர்கள் அவர்கள். புலிப் பிரதேசத்தின் ஆழப்பகுதிக்குள் நாம் வந்துவிட்டதை அது உணர்த்தியது. ஆயுதம் தரித்த போராளிகள், உருமறைப்பு உடையில் ஆங்காங்கே நிலை கொண்டிருப்பதைக் காணத் தொடங்கியதும் புலித் தளங்களுக்கு அருகே சென்றுவிட்டதை உணர முடிந்தது. நன்கு பலப்படுத்தப்பட்ட காவல் அரண்களும், இங்கும் அங்கும் தென்பட்டன. தொடர்ந்து, காட்டினுள் நடந்தோம். காட்டு இலை குழைகளினூடாக குடில்கள் தெரிந்தன. நன்றாக உருமறைக்கப்பட்ட குடில் ஒன்றின் அருகே நின்றோம். எமது வருகை பற்றிப் பிரபாகரன் அவர்களுக்குக் கூறப்பட்டிருந்ததால், பாசறையை நாம் போய்ச் சேர்ந்ததும் அவரும் அங்கே வந்தார். காட்டுப் பச்சைச் சீருடை. பளிச்சென்ற தோற்றம். குதூகலமாக எம்மை அவர் வரவேற்றார். கெரில்லாப் பாசறைப் பகுதி என்று அந்த இடத்தைக் கூற முடியவில்லை. கச்சிதமான ஒரு சாதாரண கிராமமாக சுத்தமாக இருந்தது, அத்தனை இடர்பாடுகளுக்கு மத்தியிலும் தமது போராளிகளின் மன உற்சாகத்தையும் பிரபாகரன் அவர்கள் பேணி வருவது தெரிந்தது. எத்தகைய பாடுபட்டு, இடர்பாடுகளை மேவி, அந்தப் பாசறையை அவர்கள் கனகச்சிதமாக நிறுவியிருந்தார்கள் என்பது அந்தக் காட்டுச் சூழலில் ஒரு அற்புதமே. ஒரு பூர்வீகக் காடு, வெட்டித் துப்புரவாக்கப்பட்டு, இலை செறிந்த முது மரங்கள் மட்டும் காப்பும் நிழலும் வழங்க, அந்த அகன்ற பரப்பு, மனிதர் வாழ்வதற்கு ஏற்றதாக உருமாற்றப்பட்டிருந்தது. அணி அணியாகப் போராளிகள் பணிபுரிந்திருந்தார்கள். பாறைகளைப் புரட்டி, ஆழத் தோண்டி, நீர் தேடியிருக்கிறார்கள். சில தடவைகளில் அறுபது, எழுபது அடி ஆழக் கிணறுகள் தோண்டப்பட்டு, இறுதியில் அங்கு நீரில்லை என்பதால் கைவிடப்பட்டிருக்கின்றன. இதே கடும் முயற்சி, போதுமான அளவு நீர் கிடைக்கும் கிணறு கிடைக்கும்வரை தொடர்ந்திருக்க வேண்டும். பாசறைகள் தொடங்கிய நாட்களில், கிரமமான உணவு விநியோகம் ஏற்பாடு செய்யப்படவில்லை. அந்த நாட்களில் நாளுக்கு ஒரு வேளை உணவு; உப்பில்லாத சோறும் பருப்பும். இந்த இடர்பாட்டை மேவ நிலக்கண்ணி வெடி நிறைந்த காட்டினூடாக நீண்ட தூரம் நடந்து சென்று, விநியோகப் பொருட்கள் வருவதற்கான பாதை திறந்தார்கள். விநியோகப் பொருட்களை வாங்க ஒரு நாள் பயணமும் செய்ய வேண்டியிருக்கும். அப்படியான வேளைகளில் இந்திய காட்டுச் சுற்றுலா அணிகளிடம் அகப்படுவதைத் தவிர்ப்பதற்குப் பதுங்க வேண்டியிருக்கும். அரிசி, மா, சீனி மூடைகளையும் ஏனைய பொதிகளையும் தோளிலே சுமந்த வண்ணம், தளத்துக்கு நீண்ட பயணம் மேற்கொள்வார்கள். இத்தகைய ஆபத்தான பயணங்களில் பெண் போராளிகளும் மாறி மாறிச் செல்வார்கள். காடுகளின் முரட்டுத்தனத்தைப் பணிய வைத்து வாழ்வதற்கு உரியதாகத் தளம் அமைக்கப்பட்டு வாழ்க்கை முறையும் சுமுகப்படுத்தப்பட்ட சூழ்நிலையில்தான் நாம் அங்கு சென்றோம். பெருந்தொகைப் பதுங்கு குழிகள் தரைப் படுக்கையில் அமைக்கப்பட்டிருந்தன. எறிகணை வீச்சு மற்றும் குண்டுப் பொழிவு போன்ற ஆபத்துகள் அங்கும் நிலவுவது அதிலிருந்து தெளிவாகியது. பிரபாகரன் அவர்களுடைய பாசறை இடையறாது தாக்கப்பட்டதெனினும் உயிரிழப்பு அங்கே மிகக் குறைவு என்பது குறிப்பிடற்பாலது. இரண்டே இரண்டு பெண் போராளிகள் மட்டும் அந்தத் தளத்தில் உயிரிழந்திருக்கிறார்கள். உடனடியாகப் பாதுகாப்புத் தேட வேண்டும் என்றும், பீரங்கி எறிகணை வீச்சு முடியும் வரை, உணவோ, நீரோ இன்றிப் பலமணிநேரம் பதுங்கு குழியில் இருக்க வேண்டும் என்றும் தமது போராளிகளுக்கு இடையே ஒழுக்கக் கட்டுப்பாட்டை பிரபாகரன் அவர்கள் வலுவாக ஊட்டியதால், உயிரிழப்புக் குறைவாகவே இருந்தது. நிலத்தின் கீழுள்ள எமது பதுங்கு குழித் தங்குமிடத்தின் தன்மையையும் கட்டமைப்பையும் பார்த்தபோது, இடையறாத எறிகணை வீச்சாலும், விமானக் குண்டுப் பொழிவுகளாலும், எமது போராளிகள் எத்தகைய ஆபத்துக்கு முகம் கொடுத்திருந்தார்கள் என்பதும் புரிந்தது. நாம் காட்டிலேயே தங்கியிருந்தவேளை, இந்தியர் பீரங்கி ஷெல் அடியில் இறங்கலாம் என்ற எதிர்பார்ப்பில், தற்காப்பு நடவடிக்கையாக, எமது பாதாளப் பதுங்கு குழித் தங்குமிடத்தில் நாம் தரித்திருக்க வேண்டும் என்று பிரபாகரன் அவர்கள் கேட்டுக் கொண்டார். அமெரிக்காவுக்கு எதிரான வியட்னாம் விடுதலைப் போரின்போது, வியட்கொங் போராளிகளுக்குப் பாதுகாப்பும் நடமாட்ட வசதியும் வழங்கும் பொருட்டு, பல மைல்கள் நீளமான சுரங்க வழிகளையும் பதுங்கு குழிகளையும் ஆயிரமாயிரம் வியட்னாமிய கெரில்லாக்கள் அகழ்ந்தது பற்றிய வியத்தகு செயல்பற்றி நாம் படித்திருந்தோம். அத்தகைய மனித முயற்சியின் மகத்தான விந்தையை நாம் இங்கே நேரில் பார்த்தோம். பாதாளப் பதுங்குகுழிக்கு ஓரமாக அளவெடுத்து அச்சறுத்துச் செதுக்கப்பட்ட படிக்கட்டுகள் வழியாக ஆழத்துக்கு இறங்கும் போது, இத்தகைய கடினப் பணியைச் சாதித்து முடித்த போராளிகளின் ஆற்றல், பொறுமை, கூட்டுணர்வு, ஆகியவற்றை மனதாரப் பாராட்டினோம். இந்தப் படிகள் வழியாக, தரைக்குக் கீழே முப்பது, நாற்பது அடி நீளமான அறை ஒன்றுக்குள் போராளிகள் எம்மை இட்டுச் சென்றார்கள். இந்த நிலத்தடிச் சுரங்க அறைகளும் இந்தப் பகுதியில் நிலத்தடியில் உள்ள பாறைகளிலிருந்து செதுக்கப்பட்டிருப்பதைப் பார்த்தபோது, வியப்பால் திகைத்துப் போனோம். எமது அறை, எழுந்து நிற்கக் கூடிய அளவுக்கு உயரமாகவும், நடமாடுவதற்கு வசதியாகவும் இருந்தது, அந்த அறையிலிருந்து ஒடுக்கமான கருங்கல் பாதையொன்று சென்றது. அங்கே ஒரு சிறிய அறை. கழிப்பறை நோக்கத்தோடு கட்டப்பட்டது. பிரபாகரன் அவர்களுடைய அறை எமது அறையைவிட இன்னும் நிலத்தின் அடியின் கீழே அமைந்திருந்தது. பதுங்கு குழிகள் மீது தாழ்வாகச் செல்லும் கூரைகளும் நீரை வழிப்படுத்த வரப்புகளும் கட்டப்பட்டிருந்தன. கால மழை உள்ளே வந்து பதுங்குகுழிகளை ஈரமாக்காது இவை தடுத்தன. காடு முழுவதும் பருவ மழையின் போதும் அடை மழையின்போதும் சேறும் சகதியுமாக இருக்க, கொங்கிறீற்றிலும் பலமான இந்தக் கருங்கல் கட்டிடம் ஈரம் இல்லாமல் தாக்குப்பிடித்தது. இந்த வியத்தகு கட்டிட அமைப்பில் ஒரேயொரு குறைபாடு. சாத்தியமாக இருந்தால் அதையும் தீர்த்திருப்பார்கள். ஆனால் இது அவர்கள் கட்டுப்பாட்டை மீறியது. நாம் தரைக்குக் கீழே மிக ஆழத்தில் இருந்தோம். சூரியனின் வெப்பம் அங்கே வர வாய்ப்பு இல்லை. இதனால் அறை – அதுவும் இரவில், கடுங்குளிராக இருந்தது. குளிரில் எனது எலும்புகள் வலித்தன. நீண்ட நாட்களுக்கு எப்படித் தாக்குப் பிடிக்கலாம் என்று வியந்தேன். ஆனால் தாக்குப் பிடிக்கவும் முடிந்தது. பாதக விளைவுகள் எதுவும் ஏற்படவில்லை.
பல சமையல் அறைகளும், அவற்றோடு ஒட்டிய பெரிய உணவருந்தும் கூடங்களும் கட்டப்பட்டிருந்தன. ஆயுதசாலை ஒன்றில் சில போராளிகள் ஆயுதங்களைப் பழுது பார்ப்பதிலும், சீராக்குவதிலும் ஈடுபட்டிருந்தார்கள். ஒரு சிறிய மருந்தறையும், மருத்துவமனையும் கட்டப்பட்டிருந்தன. பாசறையின் பல்வேறு பாகங்களைத் தொடுக்கும் பாதைகளும் கட்டப்பட்டிருந்தன. குறிப்பிடப்பட வேண்டியது எதுவென்றால், ஒரு துயிலும் இல்லமும் அங்கே இருந்தது. நன்கு பேணப்பட்ட அவ்விடத்தில் சமரில் கொல்லப்பட்ட சில போராளிகளின் உடலங்கள் மீளாத் துயிலில் ஆழ்ந்திருந்தன.
பெண் போராளிகளும் சுறுசுறுப்பாகவே இயங்கினார்கள். பிரதான தளத்திலிருந்து சில நிமிட நடை தூரத்தில் பென்னம் பெரிய தளம் ஒன்றை அவர்கள் நிறுவியிருந்தார்கள். அங்கும் சமையல் கட்டு, மருந்து நிலையம், தையற்கடை, ஆயுதக் கூடம், இத்தகையவை எல்லாமே சிறப்பாக இயங்கிக் கொண்டிருந்தன. அவர்களுடைய பாசறையில் சில பகுதிகள் இராணுவப் பயிற்சிக்காக ஒதுக்கப்பட்டிருந்தனÉ முழுமையான தடைதாண்டல் பயிற்சி நெறியும் இதற்கென வகுக்கப்பட்டிந்தது ஆய்வாளர்கள் பலரின் எதிர்பார்ப்புக்கு நேர் மாறாக, விடுதலைப் புலிகளின் ஆட் சேர்ப்புக் குறையவே இல்லை. மாறாக இயக்கத்தில் இணைவது அதிகரித்தபடி இருந்தது. தங்கள் மகனும், மகளும் புலிகள் அணியில் சேர்ந்தால், புலிகளின் பாசறையில் அவர்கள் உயிர் பிழைத்து வாழ்வதற்கு அதிக வாய்ப்பு உண்டு என்று பல பெற்றோர் கருதினர். மாறாக அவர்கள் கிராமங்களில் தங்களோடு தரித்திருந்தால், இந்திய அமைதிப் படையின் கொடூரத் தாக்குதலுக்கு உள்ளாவதற்கும், ஈ.பீ.ஆர்.எல்.எஃப் இன் கட்டாய ஆட்சேர்ப்புக்கு ஆளாவதற்கும் இடமேற்படும் என்றும் பெற்றோர் அஞ்சினர். புதிய போராளிகள் பயிற்சி பெற்றுக் கொண்டிருந்தார்கள். வேறு சிலர் அடுத்த அணியில் பயிற்சி பெறுவதற்காகக் காத்திருந்தார்கள். சிறிது தூரத்துக்கு அப்பால், காட்டின் வேறொரு பகுதியில், மூத்த பெண் போராளிகளுக்கான உயர் நிலைப் பயிற்சி ஒன்று நடந்து கொண்டிருந்தது. இந்த அதிரடிப் பயிற்சிக்குப் பொறுப்பாக ஜெயந்தி இருந்தார். புலிகள் யாழ்ப்பாணத்துக்குத் திரும்பிய பின், பெண்கள் இராணுவப் பிரிவின் தளபதியாக, சுகியின் இடத்துக்கு இவர் நியமிக்கப்பட்டார். மூத்த பெண் போராளிகளுடன் இந்த அணியிலே விதுசாவும் ஒருவர். புலிப் பெண் போராளிகளின் தற்போதைய தளபதி இவரே. துணிச்சல் மிக்க இந்த இளம் பெண்களில் பலர், பல வீரச் சமர்களில் கலந்து கொண்டு, மற்றவர்களுக்கு வழிகாட்டிகளாக இருந்திருக்கிறார்கள். இவர்களுடைய சாதனைப் படைப்புகள் வரலாறாய் அமைந்தவை. துயர் தருவது என்னவென்றால் ஆரம்பத்தில் இடம் பெற்ற பெண்களுக்கான இந்த உயர் நிலை அதிரடிப் பயிற்சியில் பங்கெடுத்த ஒரு சிலரே இன்று உயிரோடு இருக்கிறார்கள்.
பாசறையில் கிட்டுவைக் கண்டதும் எமக்கு மகிழ்ச்சியைத் தந்தது. 1988 இல் தமிழ் நாட்டில் இருந்து நாம் தப்பிச் சென்ற சில நாட்களில் தமிழ் நாட்டில் இடம் பெற்ற ஒரு சுற்றிவளைப்பில் அப்போது, சென்னையில் இருந்த கிட்டுவும் அகப்பட்டு, பாதுகாப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தார். பின்னர் இவர் யாழ்ப்பாணத் தடுப்புக் காவலுக்கு இடமாற்றம் பெற்றார். ஆயினும் அவருடைய உடல் ஊனத்துக்கு வழங்கப்படும் ஒரு சலுகையாக இந்திய அமைதிப் படைத் தலைமைப் பீடம் தடுப்புக் காவலில் இருந்து அவரை விடுவித்தது. அவர், உடனடியாக முல்லைத்தீவுக் காடுகளில் இருந்த பிரபாகரன் அவர்களிடமும், புலிப் போராளிகளிடமும் சென்றார். பிரபாகரன் அவர்களுடன் இந்தத் தருணத்தில் உளவியல் ரீதியாக, போராளிகளுக்கு உற்சாகம் ஊட்டுவதில் கிட்டு தமது தீரத்தைக் காட்டினார். புதிதாகக் கற்க வேண்டும் என்பதிலும், ஒருவர் தம்மை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதிலும் கிட்டு எப்பொழுதுமே பேரார்வம் கொண்டவர். போராளிகளுக்கு அவர் வகுப்புகள் நடத்தினார். அவர்களுடைய நடவடிக்கைகளிலும் ஈடுபாடு காட்டினார். நிழற்படம் பிடிப்பதில் கிட்டு சூரர். நாம் அங்கு தரித்திருந்த போது பிரபாகரன் அவர்களையும் எம்மையும் பல கோணங்களில் படம் பிடித்தார்.
பொட்டு அம்மானும் அலம்பிலில் இருந்தார். அந்த நேரம், யாழ்ப்பாண தீபகற்பத்தில் களத் தளபதியாக அவர் பணியாற்றிக் கொண்டிருந்தார். பிரபாகரன் அவர்களுடன் ஆலோசனைக்காக அவர் அங்கே அழைக்கப்பட்டிருந்தார். தமது காயங்களில் இருந்து முற்றாகக் குணமடைந்திருந்த பொட்டு அம்மான், யாழ்ப்பாணத்தில் இந்திய அமைதிப் படையினருக்கு எதிராக, நகர்ப்புறக் கெரில்லாப் போராட்டம் ஒன்றை வெற்றிகரமாக நடத்துவதில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தார். மூத்த புலிப் போராளிகளில் இன்னொருவர் கபில் அம்மான். போராட்ட களங்கள் பல கண்டவர் இவர். நாம் சென்னையில் இருந்த காலத்திலேயே எம்முடன் நட்புப் பூண்ட நண்பர். மென்மையான அமைதியான இளைஞர். திருகோணமலைக் காடுகளில் இருந்து எம்மைப் பார்க்க முல்லைத்தீவுக்கு வந்திருந்தார்.
எனது நேரம் பெண் போராளிகளுடன் கழிந்தது. அதேவேளை பாலா, பிரபாகரன் அவர்களுடனும், வேறு தலைவர்களுடனும் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தார். பாலாவின் கூற்றுப்படி, பிரேமதாசா அவர்களைப் பற்றியும், அவருடைய சிந்தனைகள், வழிமுறைகள் பற்றியும் குறிப்பாக இந்திய இராணுவ ஆக்கிரமிப்புத் தொடர்பாகவும் தமிழ் மக்களின் ஆயுதத் தற்காப்பு நடவடிக்கைகள் தொடர்பாகவும் அவருடைய கருத்து என்ன என்பது பற்றியும் பிரபாகரன் அவர்கள் அறிந்து கொள்ள விரும்பினார். பிரேமதாசா அவர்களுக்கும் விடுதலைப் புலி அணிக்கும் இடையே எப்படியான பேச்சு இடம்பெற்றது என்பது பற்றி இரத்தினச் சுருக்கமாக பாலா அவருக்கு விளக்கினார். கொழும்பில் இருந்து கொண்டே, சங்கேத மொழியில் சிறிய குறிப்புகளை பிரபாகரன் அவர்களுக்கு பாலா வழங்கியிருந்தார். இப்பொழுது சம்பந்தப்பட்ட ஆட்கள் பற்றிய தமது அளவீடுகள் பற்றியும் அவர்களுடைய சிந்தனைப் போக்குகள், எதிர்பார்ப்புக்கள், அச்சங்கள் பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார். பிரேமதாசா அவர்கள் கொழும்பிலே தமது அதிகாரத்தை நிலைநாட்டுவதன் பொருட்டு, இந்தியப் படைகள் திருப்பி அழைக்கப்பட வேண்டும் என்பதில் மிகவும் ஆக்ரோஷமான உறுதி மனப் பான்மையோடு இருக்கிறார் என்பதையும், அதற்குப் புலிகளின் உறுதியான ஆதரவு அவருக்குத் தேவையாக இருக்கிறது என்பதையும், விடுதலைப் புலிகளின் தலைவர் நம்பக் கூடிய வகையில் பாலா விளக்கினார். விடுதலைப் புலிகள் சிறீலங்கா அரசியல் நீரோட்டத்தில் கலந்து கொண்டு தேர்தலுக்கு முகம் கொடுக்கத் தயாரென்றால், ஈ.பீ.ஆர்.எல்.எஃப் இன் மாகாண சபை நிர்வாகத்தைக் கலைத்துவிட அரசுத் தலைவர் சம்மதமாக இருப்பதாகவும் பிரபாகரன் அவர்களிடம் பாலா தெரிவித்தார். விடுதலைப் புலிகளுக்கும் சிறீலங்கா அரச படைகளுக்கும் இடையே போர் நிறுத்தம் ஒன்று ஏற்படுவதைப் பிரேமதாசா விரும்பினார். அதன் பின்னர், விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை முடிவுக்கு கொண்டு வருமாறு இந்தியாவை தாம் நிர்ப்பந்திக்க முடியும் என்றும் பிரேமதாசா கருதினார். இதையும் விடுதலைப் புலித் தலைமையிடம் பாலா தெரிவித்தார்.
கொழும்பு உண்மையிலேயே ஆர்வமாகவும், உண்மை பேசுவதாகவும் இருந்தால், போர் நிறுத்தம் ஒன்றுக்கு உடன்படுவதையும் பிரேமதாசா அரசுடன் ஓர் இடைக்கால இணக்கத்துக்கு வருவதையும் பிரபாகரன் அவர்கள் ஏற்கக் கூடிய நிலையில் இருப்பதாக பாலா கூறினார். இந்தியப் படைகளைத் திரும்பிப் பெறச் செய்வதையும், பிரேமதாசா நிர்வாகத்துடன் அரசியல் இணக்கத்தை ஏற்படுத்துவதையும் உறுதிப்படுத்தும் வகையில், பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு, விடுதலைப் புலிகளின் தலைமைப் பீடம் பாலாவுக்குப் பச்சைக் கொடி காட்டியது.
இரண்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தைக்கு நாம் கொழும்புக்கு புறப்படுவதற்கு முன்னதாக, பிரபாகரன் அவர்கள் எம்மோடு பேசினார். தமிழ்த் தேசிய இராணுவத்தின் உதவியோடு, விடுதலைப் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை இந்தியப் படைகள் வேகம் பெறச் செய்திருப்பதாக அவர் எம்மிடம் கூறினார். நடந்து கொண்டிருக்கும் பேச்சுவார்த்தையால் எரிச்சலும் அவமதிப்புணர்வும் அடைந்த ரஜீவ் நிர்வாகம், விடுதலைப் புலித் தலைமையையும், புலிப் படைகளையும் பூண்டோடு அழிக்க உறுதி பூண்டிருப்பதாகவும் அவர் கூறினார். புலிகளிடம் ஆயுதங்களுக்கும் வெடிபொருட்களுக்கும் தட்டுப்பாடு நிலவியது. தீவிரமடைந்து வரும் இந்தியப் படைகளின் தாக்குதலுக்கு முகம் கொடுத்து புலிகள் நடத்தும் ஆயுத எதிர்ப்புப் போருக்கு பிரேமதாசாவின் உதவியை நாடுமாறு பிரபாகரன் அவர்கள் பாலாவைக் கேட்டுக் கொண்டார். உண்மையான ஆபத்து அப்போது தோன்றியிருந்தது. காடுகளில் புலிகள் பதுங்கியிருந்த ஒளிவிடங்கள் மீதும் படிமுறையான விமானக் குண்டுவீச்சுகளும், பீரங்கித் தாக்குதல்களும் நடந்து கொண்டிருந்தன. இந்தக்கட்டத்தில் விடுதலைப் புலிகள் மூன்று படைகளை முகம்கொடுத்து போராட வேணடியிருந்தது. ஒன்று இந்தியப் படை, இரண்டாவது சிறீலங்காப் படை, மூன்றாவதாக தமிழ்த் தேசிய இராணுவம். விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்ட வரலாற்றில், இதுவே அதிக நெருக்கடியான போராட்ட காலமாக இருந்தது. பிரேமதாசாவுடன் போர் நிறுத்தம் புரிவதன் மூலம், சிறீலங்கா இராணுவ அச்சுறுத்தலைத் தவிர்க்கலாம். இருந்தபோதிலும் இந்தியப் படைகளும், தமிழ்த் தேசிய இராணுவமும் புலிகளுக்கு ஒரு காத்திரமான அச்சுறுத்தலாக அமைந்தது. விடுதலைப் புலிகளின் படையணிகள், துணிச்சல் மிக்கதும், உயர் ஒழுக்கம் தழுவுவதுமான கெரில்லாப் போராளிகளைக் கொண்டு விளங்கின. ஆனாலும் ஒரு மரபு வழி இராணுவத்துடன் போராடுவதற்கு அவர்களிடம் ஆயுதங்களும் படைத் தளபாடங்களும் கைவசம் இருக்க வேண்டும். தமிழர் தாயகத்திலிருந்து இந்தியர்கள் வெளியேறும் வரையிலாவது அவர்கள் தாக்குப் பிடிக்க வேண்டும். இந்த நிலையிலே பாலாவிடம் ஒரு முக்கிய இக்கட்டான பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. இதுவரை காலமும் இயக்கத்தின் வரலாற்று எதிரியாக விளங்கியவர்களிடமிருந்து ஆயுதம் பெற்றுக் கொள்ளும் பணியே அது.
இந்திய – இலங்கை முரண்பாடு
முல்லைத்தீவு அலம்பில் காடுகளில் விடுதலைப் புலிகளின் தலைவர்களுடனும் போராளிகளுடனும் நாம் அந்தக் குறுகிய கால ஓய்வில் இருந்தபோது புதிய நிலைமைகள் உருவாகிக் கொண்டிருந்தன. ரஜீவ் நிர்வாகத்துக்கும் பிரேமதாசா ஆட்சிக்கும் இடையே நிலவிய உறவுகளில் முரண்பாடுகள் எழுந்தன. கொழும்புப் புறநகர்ப் பகுதியில் பௌத்த சமய விழா ஒன்றில் மக்களிடையே உரையாற்றிய சிறீலங்கா அரசுத் தலைவர், 1989 ஜுலை முடிவில் இந்தியப் படைகள் அனைத்தும் இலங்கையிலிருந்து திருப்பி அழைக்கப்படவேண்டுமென இந்தியப் பிரதமரை தாம் கேட்கப் போவதாகக் கூறியிருக்கிறார். அந்த ஆண்டு நவம்பர் மாதத்தில், சார்க் எனப்படும் தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு அமைப்பின் அரசுத் தலைவர்களுக்கான மாநாடு ஒன்றைக் கூட்டுவதற்குத் தாம் திட்டமிட்டிருப்பதாகவும், ஆனால், இலங்கை மண்ணை வெளிநாட்டு இராணுவம் ஒன்று ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் நிலையில் தம்மால் அதைச் செய்ய முடியாதிருப்பதாகவும் கூறியிருக்கிறார். மறுநாள், அதாவது ஜுன் 2ஆம் திகதியன்று திரு. ரஜீவ் காந்திக்கு பிரேமதாசா அவர்கள் அனுப்பிய கடிதத்திலே ஜுலை 31 அளவில் இந்தியப் படையைத் திருப்பிப் பெறுமாறு வேண்டினார். இந்தியப் படை திருப்பி அழைக்கப்பட்டால், சார்க் உச்சி மாநாட்டை நவம்பரில், அமைதியான சூழலில் கூட்டுவதற்கு அது வாய்ப்பாக இருக்கும் என்றும் அவர் அதில் எழுதியிருந்தார். இந்திய அமைதிப் படையின் பிரசன்னம் ‘ஆழமான பிளவையும் எதிர்ப்புணர்வையும்’ தோற்றுவிக்கும் விடயமாக அமைந்து விட்டதால், நிலைமையை சுமுகப்படுத்துவதற்குப் படைகள் முழுமையாகத் திருப்பி அழைக்கப்படுவது உதவியாக அமையும் என்றும் அவர் வாதிட்டார். இரண்டு மாத காலத்தில் படைகளை வெளியேற்றுமாறு பிரேமதாசா கேட்டதால் சீற்றமடைந்த ரஜீவ் காந்தி அவர்கள், உடனடியாகப் பதில் அனுப்பவில்லை. ஆனால், புதுடில்லியின் இந்திய வெளியுறவு அதிகாரிகள் அறிக்கைகளை வெளியிட்டார்கள். பிரேமதாசா அவர்கள் கேட்டதற்கு அமைய, குறித்த கால எல்லைக்குள் பல்லாயிரம் இந்தியப் படைகளைத் திருப்பிப் பெறுவதில் படை அமைப்புப் பிரச்சினைகள் இருக்கும் என்று குறிப்பிட்டார்கள். பங்களூரில் ஜுன் 14இல் நடைபெற்ற பொதுப் பேரணி ஒன்றில் உரையாற்றிய இந்தியப் பிரதமர், பிரேமதாசாவின் கோரிக்கையைப் பற்றிக் குறிப்பிட்டார். ஈ.பி.ஆர்.எல்.எஃப் இன் மாகாண நிர்வாகத்துக்குக் கணிசமான அதிகாரங்கள் வழங்கப்பட்டு, தமிழ் மக்களின் பாதுகாப்பும் உத்தரவாதப்படுத்தப்பட்டாலன்றி, இந்தியப் படைகள் திருப்பி அழைக்கப்படமாட்டா என்று கூறினார். அத்துடன், படைகள் திருப்பி அழைக்கப்படுவது தொடர்பாக, அரசுகளிடையேயும் கலந்தாலோசனை நடத்தப்பட வேண்டும் என்றும் விதந்துரைத்தார். புதுடில்லிக்கும் கொழும்புக்கும் இடையே இராஜதந்திர மனக் கசப்பு நிலவிக் கொண்டிருந்த அந்தப் பின்னணியிலேயே ஜுன் 14ஆம் திகதியன்று, இலங்கைத் தலைநகருக்கு நாம் திரும்பினோம். நாம் முன்பு தங்கியிருந்த கொழும்பு ஹில்டன் விடுதிக்கே திரும்பவும் கொண்டு செல்லப்பட்டோம். இரண்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள எமது அணியிலே, லோறன்ஸ் திலகர், எஸ். கரிகாலன், சமன்ஹசன், அபூபக்கர் இப்ராஹிம் ஆகியோர் சேர்க்கப்பட்டிருந்தனர்.
மறுநாள் ஜுன் 15 காலை, பிரேமதாசா அவர்கள் தமது வதிவிடமான ‘சுச்சித்ரவுக்குத்’ தனிப்பட்ட கலந்துரையாடலுக்காக எம்மை அழைத்தார். இந்தச் சந்திப்பு ஒன்றரை மணிநேரம் நீடித்தது. இந்திய அமைதிப் படையைத் திருப்பிப் பெறுவது தொடர்பாக, முதல் நாள் பங்களூரில் ரஜீவ் காந்தி அவர்கள் நிபந்தனைகள் விதித்து விடுத்த அறிக்கை பிரேமதாசா அவர்களுக்குக் கலக்கத்தைக் கொடுத்திருந்தது. அத்தகைய நிபந்தனைகளை இந்தியா விதிக்க முடியாது என்று அவர் வாதிட்டார். முந்திய அரசுத் தலைவர் ஜெயவர்த்தனா இந்தியப் படைகளை அழைத்தார்; தற்போதைய அரசுத் தலைவர் அவர்களை வெளியேற வேண்டும் என்கிறார். இந்த நிலையில், படைகளைத் திருப்பிப் பெறுவதைத் தவிர இந்திய அரசுக்கு வேறு வழியில்லை என்றும் அவர் வாதிட்டார். தாம் அதிகாரபூர்வமாக அனுப்பி வைத்த கடிதத்துக்கு இதுவரை பதில் அனுப்பாமல், ஏற்க முடியாத நிபந்தனைகளைப் பகிரங்க அறிக்கை மூலம் ரஜீவ் காந்தி வெளியிட்டிருப்பதையடுத்து, நாட்டிலே இந்திய இராணுவம் நிரந்தரமாகத் தங்கிவிடுமோ என்ற அச்சமும் குழப்பமும் உருவாகியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். சிறீலங்கா ஆயுதப் படைகளுடன் விடுதலைப் புலிகள் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று பிரேமதாசா விதந்துரைத்தார். புலிகள் அப்படிச் செய்யும் பட்சத்தில், ஒப்பந்தத்துக்கு அமைவாக, அமைதி நிறுவப்படவேண்டும் என்ற முக்கிய கடப்பாடு நிறைவேற்றப்படுவதால், இந்தியாவுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் எதிரான தனது பகைமை நடவடிக்கைகள் அனைத்தையும் முடிவுக்கு கொண்டு வந்து, தனது படைகளையும் திருப்பி அழைக்க வேண்டும் என்று தாம் வற்புறுத்தக் கூடுமாக இருக்கும் என்றும் பிரேமதாசா கூறினார்.
விடுதலைப் புலிப் பிரதிநிதிகளுக்கும் சிறீலங்கா அமைச்சரவை அணிக்கும் இடையே ஜுன் 16ஆம், 19ஆம் திகதிகளில் இரண்டாவது சுற்றுப் பேச்சுவார்த்தைகளின் முதல் இரண்டு அமர்வுகளும் இடம்பெற்றன. அங்கு முதன்மை பெற்ற விடயங்களில், படைகளைத் திருப்பிப் பெறுவது தொடர்பாக சிறீலங்காவுக்கும், இந்தியாவுக்கும் இடையே உருப்பெருத்துவரும் இராஜதந்திர மோதல் ஒன்றாகும். குடிமக்கள் தொண்டர் படை என்ற பெயரில் அமைக்கப்படும் தமிழ்த் தேசிய இராணுவத்துக்கு, தமிழ் இளைஞர்கள், குறிப்பாக மாணவர்கள் நிர்ப்பந்த அடிப்படையில் சேர்க்கப்படுவது, இந்த அமர்வுகளில் விவாதிக்கப்பட்ட இன்னொரு விடயமாகும். இந்தப் பேச்சுவார்த்தைகளில் அரச அணியில் இரண்டு புதிய அமைச்சர்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டார்கள். மின் சக்தி அமைச்சர் பொஸ்ரஸ் பெரேரா ஒருவர். வர்த்தகம் மற்றும் கப்பல்துறை அமைச்சர் மன்சூர் மற்றவர். முதல் அமர்வின்போது, சிறீலங்கா அணியின் தலைவர் என்ற முறையில் ஹமீது அவர்கள், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே உருவாகி வரும் இராஜதந்திர முரண்பாடுகள் பற்றிய விபரங்களை விளக்கிக் கூறினார். வடக்கு-கிழக்கிலே போரும், தெற்கிலே கிளர்ச்சியும் இடம்பெற்றுக் கொண்டிருப்பதற்குக் காரணம் சிறீலங்கா மண்ணிலே இந்தியப் படையின் பிரசன்னமே என்று பிரேமதாசா அவர்கள் உறுதியாக நம்புவதாலேயே இந்திய அமைதிப் படை திருப்பி அழைக்கப்பட வேண்டும் என்று அரசுத் தலைவர் வலியுறுத்துவதாக ஹமீது அவர்கள் தமது பகுப்பாய்வை முன்வைத்தார். ஒப்பந்தம் காலாவதியாகிவிட்டது. சிறீலங்காவின் அரசியல் நிலை முற்றாக மாறிவிட்டது. போரில் ஈடுபட்டிருந்த இரண்டு தரப்பினரும், அதாவது புலிகளும் சிறீலங்காவும், அரசியற் தீர்வு காண்பதற்காக அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள்; இந்த நிலையில் இந்திய அமைதிப் படையின் தேவையே அற்றுப் போய்விட்டது என்று ஹமீது அவர்கள் விளக்கினார். சார்க் உச்சி மாநாட்டை நவம்பரில் கூட்ட பிரேமதாசா அவர்கள் விரும்பியதால், ஜுலை மாத முடிவளவில் இந்திய அமைதிப் படையை வேகமாகத் திருப்பி அழைக்க வேண்டும் என்று பிரேமதாசா கோரினார். இந்தக் கோரிக்கை இந்தியாவுக்குப் பெரும் பிரச்சினைகளைத் தோற்றுவித்துவிட்டதாக ஹமீது கூறினார். ஆயிரமாயிரம் படையினரையும் போர்த் தளபாடங்களையும் இரண்டு மாதங்களுக்குள் திருப்பி அழைப்பது, இராணுவ ஒழுங்கு முறையில் காரிய சாத்தியம் அற்றது என்றும் ஹமீது சுட்டிக் காட்டினார். இந்தியா முன் நிபந்தனைகளை விதித்துக் கொண்டிருக்கிறது. படைகளைத் திருப்பி அழைப்பதால் ஏற்படப்போகும் அவமானத்தைத் தவிர்க்கவே இந்தியா அவ்வாறு செய்கிறது. படைகள் திரும்பிச் சென்றால், டிசம்பரில் நடைபெறவிருக்கும் தேர்தலில் ரஜீவின் வெற்றி வாய்ப்பு வெகுவாகப் பாதிக்கப்பட்டு விடும் என்ற அச்சமே அதற்குக் காரணம் என்றும் ஹமீது விளக்கிக் கூறினார்.
அவ்வேளைய நிலவரம் பற்றி விடுதலைப் புலிப் பிரதிநிதிகளின் கருத்தை அறியவும் ஹமீது அவர்கள் ஆவல் தெரிவித்தார். ஹமீது அவர்கள் தெரிவித்த கள நிலவரக் கருத்தை விடுதலைப் புலிகள் ஏற்றுக் கொண்டதோடு, ஈ.பீ.ஆர்.எல்.எஃப் இன் மாகாண நிர்வாக எதிர்காலம் தொடர்பாக ரஜீவ் நிர்வாகம் அக்கறை கொண்டிருப்பதைச் சுட்டிக் காட்டினார்கள். இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் ஒரேயொரு எச்ச சொச்சமாக விளங்கும் வடக்கு-கிழக்கு மாகாண நிர்வாகம், இந்திய அமைதிப் படை நாட்டை விட்டு அகன்ற மறுகணமே பொல பொலவென்று விழுந்து ஒழிந்து விடும் என்று அவர்கள் கூறினார்கள். ஈ.பீ.ஆர்.எல்.எஃப் இன் ஊசலாட்டமான நிர்வாகத்தை காப்பாற்றும் பலமான துணைப்படை ஒன்று நிறுவப்படும் வரைக்கும் இந்திய அமைதிப் படையைத் தொடர்ந்து வைத்திருக்க ரஜீவ் விரும்புவதாகவும் அவர்கள் குறிப்பிட்டார்கள்.
ஜுன் 19ஆம் திகதி இடம்பெற்ற அமர்வின் போது, ஈ.பீ.ஆர்.எல்.எஃப் இன் துணைப்படை தொடர்பாகவும், விடுதலைப் புலிகளுக்கும் சிறீலங்கா பாதுகாப்புப் படைகளுக்கும் இடையிலான போர் நிறுத்தம் தொடர்பாகவுமே விரிவாக ஆராயப்பட்டது. இந்திய இராணுவ அதிகாரிகள் ஈ.பீ.ஆர்.எல்.எஃப் இன் மாகாண நிர்வாகத்தோடு சேர்ந்து தொண்டர் படைக்காக பிரமாண்டமான அளவில் தமிழ் இளைஞர்களைச் சேர்க்க முற்பட்டுக் கொண்டிருப்பதாக முறையிட்டார்கள். இந்த அமர்வு நடைபெறுவதற்கு ஒரு வாரம் முன்னதாக, 4500 இளைஞர்கள் அதுவும் பெரும்பாலும் பள்ளி செல்லும் இளைஞர்கள் ஈ.பீ.ஆர்.எல்.எஃப் இன் ஆயுதபாணிகளால் சுற்றி வளைக்கப்பட்டு கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய இடங்களில் உள்ள வெவ்வேறு இந்திய இராணுவப் பாசறைகளுக்குப் பலவந்தமாகக் கொண்டு செல்லப்பட்டார்கள். இது தமிழ்ப் பகுதிகளில் ஒரு பிரச்சினையாகியது. தங்கள் பிள்ளைகளை விடுவிக்குமாறு ஆயிரக்கணக்கான பெற்றோர்கள் இந்திய இராணுவப் பாசறைகளின் வாயிலில் தவிப்போடு கெஞ்சினார்கள். இந்த விடயத்தில் சிறீலங்கா அரசின் நிலைப்பாடு என்ன என்று புலிகள் கேள்வி எழுப்பினார்கள். வடக்கு கிழக்கு மாகாண நிர்வாகத்துக்கென ஆயுதப் படை ஒன்றை நிறுவ ஒப்பந்த விதிகளில் இடம் கிடையாது என்பதை அமைச்சரவை அணி ஒப்புக் கொண்டது. அரசுத் தலைவர் இந்த விடயத்தை இந்தியப் பிரதமருடன் விவாதிப்பார் என்று ஹமீது அவர்கள் உறுதிமொழி கூறினார்.
சிறீலங்காப் படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே போர் நிறுத்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்தபோது, பகைமை ஒழிப்பை விடுதலைப் புலிகள் முதலில் ஒருதலைப்பட்சமாக வெளியிடவேண்டும் என்றும், பின்னொரு நாளில் சிறீலங்கா அரசு தனது போர் நிறுத்தத்தை அறிவிக்கும் என்றும் அரச அணி கூறியது. ஏற்கனவே பிரகடனப்படுத்தப்படாத போர் நிறுத்தம் ஒன்று புலிகளுக்கும் அரச படைகளுக்கும் இடையே நடைமுறையில் இருப்பதை விடுதலைப் புலிகளின் அணி சுட்டிக் காட்டியது. இந்த நிலையில் இரண்டு பக்கப் போர் நிறுத்தத்தை இரு தரப்பினரும் பிரகடனம் செய்வதே சாலச் சிறந்தது என்றும் இரு தரப்பினரும் அமைதியைக் கடைப்பிடிப்பதோடு அரசியல் இணக்கத்துக்கான பேச்சுவார்த்தையையும் ஏற்கனவே நடத்திக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் அனைத்துலகச் சமூகத்தில் ஒரு நல்லபிப்பிராயத்தை நிறுவும் என்றும் புலிகள் சுட்டிக் காட்டினார்கள். இத்தகைய சுமுகச் சூழலில், வெளிநாட்டுச் சக்தி ஒன்று அமைதி காக்கும் இராணுவத்தை வைத்திருக்க வேண்டிய தேவை இல்லை என்றும் புலிகள் கருதினார்கள். இந்த விடயம் தொடர்பாக அரசுத் தலைவருடன் தாம் கலந்தாலோசிப்பர் என்றும் அமைச்சர்கள் கூறினார்கள்.
பிரேமதாசா அவர்கள் ஜுன் 2இல் எழுதிய கடிதத்திற்கு ரஜீவ் காந்தி அவர்கள் ஜுன் 20இல் பதில் அனுப்பினார். இராஜதந்திர வார்த்தைப் பிரயோக முலாமிட்ட அந்தப் பதிலில், இந்தியப் படைகள் தமது பலத்த இழப்புக்கு மத்தியில், தமிழ்ப் பகுதியில் அமைதியையும் இன ஒத்திசைவையும் நிலை நாட்டுவதில் பெருஞ்சாதனை புரிந்திருப்பதாகக் காந்தி அவர்கள் எழுதியிருந்தார். இந்திய – இலங்கை ஒப்பந்தத்துக்கான பொறுப்பையும் கடப்பாடுகளையும் சிறீலங்கா ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று பிரேமதாசா அவர்களுக்கு ரஜீவ் நினைவூட்டினார். இந்திய அமைதிப் படையைத் திருப்பிப் பெறுவது தொடர்பாகவும் ஒப்பந்தத்தை முழுமையாகச் செயற்படுத்துவது தொடர்பாகவும் இரு பக்கமும் ஏற்கக்கூடிய ஒரு ஏற்பாட்டை வகுக்கக் கலந்துரையாடல் ஒன்றை நடத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். ஒப்பந்தம் நடைமுறைப் படுத்தப்படுவதும், இந்தியப் படைகள் திருப்பி அழைக்கப்படுவதும் சமவேளையில் நடைபெற வேண்டும் என்று இந்தியப் பிரதமர் வலியுறுத்தியது, பிரேமதாசா அவர்களுக்கு எரிச்சலூட்டுவதாக அமைந்தது.
பிரேமதாசா அவர்கள் கேட்டுக் கொண்ட போதிலும் ஜுலை முடிவிலே இந்திய அமைதிப் படைகள் திருப்பி அழைக்கப்படமாட்டா என்பது, கடும் வார்த்தைப் பிரயோகம் மூலம் எழுதப்பட்ட காந்தி அவர்களுடைய கடிதம் மூலம் அறிய முடிந்தது. இந்தியா தனது படைகளைத் திருப்பி அழைக்குமுன், வரதராஜப்பெருமாளின் மாகாண ஆட்சிக்குப் பாதுகாப்பும் உறுதி நிலையும் வழங்க விரும்பியது. ஆனால், இதைச் சாதிப்பதற்கு இந்திய இராணுவ நிர்வாகம் கடைப்பிடித்த வழிமுறைகள் தமிழ் மக்களுக்கு வெறுப்பூட்டுபனவாக இருந்தன. கட்டாய ஆட்சேர்ப்பிலிருந்து தப்பிப் பிழைப்பதற்காக, பல இடங்களில் மாணவர்கள் வீட்டுக்குள்ளே முடங்கிக் கிடந்தார்கள். கைது செய்யப்பட்டு, கட்டாயப் பயிற்சி வழங்கப்பட்டவர்களில் கணிசமான தொகையினர், தங்கள் நிலைகளில் இருந்து தப்பியோடி, புலிகளுடன் சேர்ந்தார்கள். சம்மதமோ விருப்பமோ இல்லாது நிர்ப்பந்த அடிப்படையில் சேர்க்கப்பட்ட இளைஞர் அணியானது, இலட்சியத்துக்கான தீவிர அர்ப்பணிப்பாலும், போர் அனுபவங்களால் புடமிடப்பட்டிருக்கும் விடுதலைப் புலிகளுக்கு இணையாக மாட்டார்கள் என்பது நன்கு தெரிந்திருந்த போதிலும், இந்திய இராணுவமும், ஈ.பீ.ஆர்.எல்.எஃப் உம் தொடர்ந்தும் படைதிரட்டலில் ஈடுபட்டார்கள். பெருமாள் நிர்வாகத்துக்குக் கூடுதலான அதிகாரப் பகிர்வு வழங்கப்படவேண்டும் என்று ரஜீவ் காந்தி கேட்டுக் கொண்ட போதிலும் சிறீலங்கா அரசு, அனைத்து நிர்வாக அதிகாரங்களையும் படிப்படியாகத் தளர்த்தி, நிதியையும் தடைசெய்து, வடக்கு-கிழக்கு மாகாண சபையை நிரந்தரமாகவே நிதி வற்றிப்போன ஒரு சபையாக உருக்குலைத்திருந்தது.
முரண்பாடு முற்றிச் சென்றது
ரஜீவ் காந்தி அவர்களிடம் இருந்து கிடைத்த விதண்டாவாதப் பதிலால் சீற்றம் அடைந்த பிரேமதாசா அவர்கள், விடுதலைப் புலி அணிக்கு, ஹமீது அவர்கள் மூலம் செய்தி அனுப்பினார். அதில் சிறீலங்காப் படைகளுடன் விடுதலைப் புலிகள் ஒரு முறையான போர் நிறுத்தத்துக்கு வரவேண்டும் என்று கேட்டார். இதற்கமைய, இரு தரப்புப் போர் நிறுத்தம் ஒன்று, புலிகளாலும், சிறீலங்கா அரசாலும் கூட்டாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. கூட்டுச் செய்தி அறிக்கை மூலம் ஜுன் 28ஆம் திகதியன்று அது பகிரங்கப்படுத்தப்பட்டது.
இந்த நிகழ்வு பிரேமதாசா அவர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்க, 29ஆம் திகதியன்று ரஜீவ் காந்திக்கு அவர் ஒரு குறுஞ் செய்தி அனுப்பினார். விடுதலைப் புலிகளுக்கும் சிறீலங்கா அரச படைகளுக்கும் இடையே அமைதி ஏற்பட்டுவிட்டதாகவும், அரசியல் பிரச்சினைகளைத் தீர்க்கப் பேச்சுவார்த்தை முயற்சி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் அறிவித்தார். இந்தப் பேச்சுவார்த்தைக்கு இடையூறு ஏற்படக்கூடாது என்பதற்காக, விடுதலைப் புலிகளுக்கு எதிரான இந்திய அமைதிப் படையின் தாக்குதல் நடவடிக்கை அனைத்தையும் முடிவுக்கு கொண்டு வருமாறு கேட்டுக் கொண்டார். மறு நாள், ஜுன் 30 ரஜீவ் காந்தி அனுப்பிய குறும் பதில் ஒன்று பிரேமதாசாவை வந்தடைந்தது. நையாண்டித் தொனியில் எழுதப்பட்ட அந்தக் கடிதம் புலிகளுக்கும் சிறீலங்காவுக்கும் இடையே உருவான போர் நிறுத்த உடன்படிக்கையின் முக்கியத்துவத்தை ஊதாசீனப்படுத்தியது. விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கையளிக்க வேண்டும் என்று ஆணையிட்டது. அதில், இது தொடர்பான பந்தி பின்வருமாறு அமைந்தது.
“இந்திய – இலங்கை ஒப்பந்தமானது, தமிழ்ப் போராளிக் குழுக்களுக்கும் சிறீலங்கா படைகளுக்கும் இடையே பகைமை ஒழிப்புக்கும் ஏற்பாடு செய்வதோடு, வடக்குக் கிழக்கு மாகாணத்தில் படைப் பாசறைகளில் சிறீலங்காப் படைகள் தரித்திருப்பதற்கும் ஏற்பாடு செய்கிறது. இவை இரண்டும் 1987 ஜுலை 30இல் நடைபெற்றுவிட்டன. ஆகவே, சிறீலங்கா படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே செம்மையான பகைமை ஒழிப்பு ஏற்கனவே இடம்பெற்றுவிட்டது. இந்த யதார்த்த நிலையை விடுதலைப் புலிகள் இப்போது ஏற்றுக் கொண்டிருப்பது எமக்கு மகிழ்ச்சி தருகிறது.
பகைமை முடிவுக்கு விடுதலைப் புலிகள் முழுமையாகச் சம்மதிக்கிறார்கள் என்றால், சிறீலங்காவின் ஐக்கியத்தையும் இறையாண்மையையும் அவர்கள் இப்போது ஏற்றுக் கொண்டு, வன்செயலைக் கைவிட்டு மக்களாட்சி மரபை ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதே தெளிவாகத் தெரிகிறது. விடுதலைப் புலிகள் வன்செயலைக் கைவிட்டிருப்பதை அடுத்து, 1987 ஓகஸ்ட் 5இல் தொடங்கி, இன்னமும் முற்றுப்பெறாத ஆயுதக் கையளிப்பை சிறீலங்கா அரசினூடாக மீளத் தொடர வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். விடுதலைப் புலிகள், தங்கள் ஆயுதங்களைக் கையளிப்பதோடு, சிறீலங்கா அரசுக்கு எதிரான வன்செயலை மட்டும் கைவிடுவதோடு நிற்காது, வடக்குக் கிழக்கு மாகாணத்தில் உள்ள ஏனைய குடிமக்களுக்கு எதிரான வன்செயலைக் கைவிடுவதாக இருந்தாலன்றிப் போர் நிறுத்தப் பிரகடனம் அர்த்தம் அற்றதாகிவிடும்.”
விடுதலைப் புலிகளோடு புதுடில்லி போர் நிறுத்தம் புரிய விரும்பவில்லை என்பதை ரஜீவின் கடிதம் தெளிவாக உணர்த்தியது. போர் நிறுத்தத்துக்கு முன், ஒப்பந்த கடப்பாடுகள் அனைத்தும் நிறைவேற்றப்படவேண்டும் என்று இந்தியா வாதித்தது. விடுதலைப் புலிகளால் சற்றேனும் ஏற்க முடியாத நிபந்தனைப் பட்டியலில் அந்தக் கடப்பாடுகள் உள்ளடக்கப்பட்டு இருந்தன. அவை (அ) ஆயுதக் கையளிப்பு (ஆ) சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தைக் கைவிட்டு சிறீலங்காவின் ஐக்கியத்தையும் இறையாண்மையையும் ஏற்றுக் கொள்ளல் (இ) ஏனைய குடிமக்களுக்கு (அதாவது ஈ.பீ.ஆர்.எல்.எஃப் துணைப்படைக்கு) எதிராக வன்செயலைத் துறத்தல் ஆகும். இந்த விடயங்கள் தொடர்பாகச் சிறீலங்கா அரசுத் தலைவர் விளக்கம் தரவேண்டும் என்று ரஜீவ் தமது கடிதத்தில் கேட்டிருந்தார்.
சிறீலங்கா அரசுக்கும் புலிகளுக்கும் இடையில் ஜுலை 2இல் நடைபெற்ற கொழும்புப் பேச்சுவார்த்தையில் இந்தியத் தலைவர் அனுப்பிய முரண்பாடுகளுக்குரிய கடிதம் பற்றியே விவாதிக்கப்பட்டது. ரஜீவ் கேட்ட கேள்விகளுக்கும் விதித்த நிபந்தனைகளுக்கும் பதில் அளிக்கும் போது, சிறீலங்காவுக்கும் புலிகளுக்கும் இடையே ஏற்பட்ட இருதலைப்பட்சமான போர் நிறுத்தத்தை அற்பமாகக் கருதி, இந்தியா புறக்கணித்ததையொட்டி, விடுதலைப் புலி அணி, தன் வருத்தத்தைத் தெரிவித்தது. சிறீலங்காப் படைகளுக்கும் விடுதலைப் புலிப் படையணிகளுக்கும் இடையே செம்மையான போர் நிறுத்தம் ஏற்பட ஒப்பந்தம் ஏற்கனவே வழிசெய்து விட்டதாகக் காந்தி அவர்கள் கூறியிருப்பது உண்மைக்குப் புறம்பானது என்றும், பிழையான அபிப்பிராயத்தைத் தோற்றுவிக்கின்றது என்றும் புலிகள் வாதிட்டார்கள். ஒப்பந்தத்தில் விபரிக்கப்பட்ட போர் நிறுத்தம் செம்மையாக நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கவில்லை. சிறீலங்காப் படைகளுக்கும் புலிப் போராளிகளுக்கும் இடையே பல மோதல்கள் இடம்பெற்றும், கணிசமான அளவு சிங்களப் படையினர் கொல்லப்பட்டும் இருந்தார்கள். போரில் ஈடுபட்டிருந்த இரண்டு பிரிவினருக்கும் இடையே அமைதியை மேற்பார்வை செய்யும் பொறுப்பை எடுத்துக் கொண்ட இந்திய ஆயுதப் படைகள் வன்செயலைக் கட்டுப்படுத்த மேற்கொண்ட முயற்சிகள் படுமோசமான தோல்வி கண்டிருந்தன.
இந்திய அமைதிப் படைகளுக்கும் புலிகளுக்கும் இடையே போர் நிறுத்தம் வருவதற்கு இரண்டு நிபந்தனைகளை ரஜீவ் விதித்திருப்பதாகப் புலிகள் சுட்டிக்காட்டினார்கள். ஒன்று புலிகள் ஆயுதக் கையளிப்பை மீளத் தொடங்க வேண்டும்; இரண்டு, வடக்குக் கிழக்கில் உள்ள ஏனைய அனைத்துக் குடிமக்களுக்கு எதிராகவும் வன்முறையை பயன்படுத்துவதில்லை என்று பிரகடனம் செய்ய வேண்டும். இந்தியப் படையின் ஆயுதக் களைவு முயற்சி முற்றுமுழுதாகத் தோல்வி கண்டிருந்தது. அந்த முயற்சியே இரத்த ஆறு ஓடும் போராகவும் நீடித்துச் செல்லும் போராகவும் வடிவெடுத்தது. இந்திய அமைதிப் படை, தானே ஒரு கொலைப் பொறியாக மாறியது; ஆயிரமாயிரம் அப்பாவித் தமிழ் மக்கள் உயிரிழந்தார்கள். இப்பொழுதோவென்றால், சிறீலங்கா அரசுத் தலைவராலேயே அமைதிப் பேச்சுவார்த்தை தொடக்கப்பட்டிருக்கின்றது. அது ஒரு புரட்சிகர, புதிய நிலையைத் தோற்றுவித்திருக்கின்றது. அதை நடைமுறைச் சாத்தியமான வழியாக இனம் கண்டு அதற்கு முகம் கொடுக்க வேண்டும். சிறீலங்கா அரசுக்கும் புலிகளுக்கும் இடையே நடந்து கொண்டிருக்கும் பேச்சுவார்த்தை எதுவித நிபந்தனைகளோ, இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் கடப்பாடு நெருக்குவாரங்களோ இல்லாமல் நடந்து கொண்டிருக்கின்றது; ஆயுதங்களை வைத்திருப்பதும் அவற்றைக் களைவதும் சிறீலங்காவுக்கும் புலிகளுக்கும் இடையே உள்ள ஒரு பிரச்சினையாகும். சம்பந்தப்பட்ட இரண்டு பிரிவினருமே பேசித் தீர்க்க வேண்டிய விடயம் இது. ஆகவே, ஆயுதங்களைக் கீழே வைக்கும் பிரச்சினையைத் தீர்க்கும் பொறுப்பு சிறீலங்கா அரசினுடையதே என்பதை சிறீலங்கா அரசு இந்தியாவிடம் வலியுறுத்திக் கூறவேண்டும் என்று புலிகள் விதந்துரைந்தார்கள். அது தவிர, தமிழ்த் தேசிய இராணுவம் என்ற பெயரில் பலமிக்க இராணுவ இயந்திரம் ஒன்றை இந்தியா கட்டி எழுப்புவதையொட்டி, புதுடில்லியிடம் கடும் மறுப்பை அரசு தெரிவிக்க வேண்டும் என்றும் புலிகள் வலியுறுத்தினார்கள். ஆயுதக் களைவு என்ற பெயரில் வடக்கு-கிழக்கிலே பாரிய இராணுவ மயத்திட்டம் ஒன்றில் இந்திய அமைதிப் படை ஈடுபட்டிருப்பதாகவும் புலிகள் குற்றஞ் சாட்டினார்கள். ரஜீவ் காந்தியின் கடிதத்தில் கூறப்பட்ட இரண்டாவது நிபந்தனை தொடர்பாக, வடக்குக் கிழக்கில் உள்ள அனைத்துக் குடிமக்கள் மட்டிலும் போர் நிறுத்தம் கடைப்பிடிக்கத் தாம் தயார் என்று கூறிய புலிகள், அதற்கு முன், இந்திய அமைதிப் படைகளும் அதன் அடிவருடி ஆயுதக் குழுக்களும் புலிகளுக்கு எதிரான வன்செயலைக் கைவிடுவார்கள் என்று இந்தியா உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று கேட்டார்கள். சனநாயக அரசியல் நீரோட்டத்தில் கலந்து கொள்ள விடுதலைப் புலிகள் தயாராக இருந்தார்கள்; ஆனால் அதற்கு முன், தமிழர் தாயகத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் இந்திய படைகள் முழுமையாக வெளியேற வேண்டும் என்றும் அவர்கள் கூறினார்கள். கூட்டத்திலே புலிகளின் அணி தெரிவித்த கருத்துக்களை அரசுத் தலைவர் பிரேமதாசா இந்தியப் பிரதமருக்கு எடுத்துரைப்பார் என்று அரச அணி உறுதியளித்தது.
பிரேமதாசா அவர்கள் ரஜீவ் காந்தி அவர்களுக்கு ஜுலை 4இல் எழுதிய கடிதத்தில், சில விடயங்களைத் திட்டவட்டமாகக் கூறினார். சிறீலங்காவுக்குள் வாழும் அனைத்துக் குடிமக்களுக்கும் பாதுகாப்பையும் காப்புறுதியையும் வழங்க வேண்டிய பொறுப்பு சிறீலங்கா அரசுக்கு மட்டுமே உண்டு என்று அவர் குறிப்பிட்டார். அத்துடன் இலங்கைக் குடிமக்கள் மீதான பாதுகாப்பு அதிகாரங்கள் எவற்றையும் இந்திய – இலங்கை ஒப்பந்தம் இந்தியாவிடம் ஒப்படைக்கவில்லை என்றும் கூறினார். முந்திய இரண்டு ஆண்டுகளாகப் புலிகளிடம் இருந்து ஆயுதக் களைவு நடத்த இந்தியா தவறிவிட்டதைச் சுட்டிக் காட்டிய பிரேமதாசா, புலிகள் அந்தத் தருணத்தில் சிறீலங்காவுடன் அரசியல் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருப்பதாகவும், இந்திய ஆயுதப் படைகள் வெளியேறியபின், புலிகள் தங்கள் ஆயுதங்களைக் கைவிடுவார்கள் என்றும் தெளிவாகத் தெரிவித்தார். ஒப்பந்தத்துக்கு அமைவாக, இந்திய அரசோ, அதன் ஆயுதப் படைகளோ இலங்கைக்குள் செயற்படக் கட்டளையுரிமை கொண்டிருப்பதாக வாதிப்பது ‘தனித்த இறையாண்மையுடைய நட்பு நாடு ஒன்றின் உள்நாட்டு விவகாரங்களில் பாரதூரமாகத் தலையிடுவதாக அமையும்’ என்றும் அவர் எச்சரித்தார்.
சிறீலங்காவில் இருந்து இந்திய ஆயுதப் படைகளைத் திருப்பி அனுப்பும் முயற்சியில், ரஜீவ் நிர்வாகத்துடன் முட்டிமோதும் நிலைப்பாட்டை எடுக்க பிரேமதாசா முற்பட்டு விட்டார் என்பதைக் கடிதத்தின் பகைமைத் தொனியும் உள்ளடக்கமும் உணர்த்தின. அதே கடும் நிலைப்பாட்டையே காந்தியும் எடுத்தார். தமது பதிலை ஜுலை 11ஆம் திகதி சிறீலங்கா அரசுத் தலைவருக்கு அனுப்பினார். இரண்டு நாடுகளுக்கும் இடையே கைச்சாத்தான ஒப்பந்தம் ஒன்று இருப்பதை அவர் நினைவூட்டினார். ஒப்பந்தத்தின் அடிப்படையில், வடக்கு கிழக்கு மக்களின் பாதுகாப்புக்கும் காப்புறுதிக்கும் உத்தரவாதம் வழங்கும் கடப்பாடு இந்தியாவுக்கு இருப்பதை அவர் சுட்டிக்காட்டினார். வடக்கு – கிழக்கு மாகாண சபைக்கு வழங்குவதாக வாக்குறுதியளித்த அதிகாரப் பகிர்வுகளை சிறீலங்கா நடைமுறைப்படுத்தவில்லை என்று கண்டனம் தெரிவித்தார். இந்தியப் படைகளின் வெளியேற்றம் தொடர்பாகப் பேசுவதானால் இந்திய – இலங்கை ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த ஒரு அட்டவணையையும் கூடித் தயாரிக்கலாம் என்றும் காந்தி வலியுறுத்தினார். அரசுத் தலைவர்களிடையே நம்பிக்கையின் அடிப்படையில் நடைபெறும் அதிகாரபூர்வ கடிதங்களையொட்டிப் பேணப்பட வேண்டிய ஒழுக்காற்றைக் கைவிட்டு, அவற்றையெல்லாம் பகிரங்கப் படுத்தியமைக்காக, ரஜீவ் காந்தி, தமது கடிதத்தின் கடைசிப் பந்தியில், பிரேமதாசா மீதும் நேரடிக் கண்டனம் தெரிவித்தார்.
ரஜீவின் மூர்க்கத்தனமும், பகைமைப் போக்கும் பிரேமதாசாவுக்குக் கடுஞ் சீற்றத்தைக் கொடுத்தது. இந்தியப் பிரதமருக்கு கடிதங்கள் எழுதி, இந்தியப் படைகளைத் திருப்பி அழைக்கக் கேட்டதில், பயனேதும் இல்லை என்று அவர் உணர்ந்தார். வகையறியா நிலையில், அவர் இன்னொரு தந்திரோபாயத்தைக் கடைப்பிடித்தார். இந்திய அமைதிப் படை அடங்கலாக நாட்டில் உள்ள அனைத்துப் படைகளினதும் ஏக தளபதி என்ற தம் நிலையில் நின்று இந்திய அமைதிப் படையின் கட்டளைத் தளபதி லெப். ஜெனரல் கல்கற் அவர்களுக்கு இறுதியாணை அனுப்பினார். இந்தியப் படைகள் அனைத்தும் ஜுலை முடிவுக்குள் வெளியேற்றப்பட வேண்டும் என்றும், அல்லது பாசறைகளுக்குள் முடக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார். இந்த இறுதியாணை ஒரு சட்டப் பத்திரமாக, ஜுலை 23ஆம் திகதியன்று, திருகோணமலையில் தளபதி கல்கத்திடம் கையளிக்கப்பட்டது. இதற்குப் பதிலாக, தளபதி கல்கற், எச்சரிக்கை ஒன்றை பிரேமதாசாவுக்கு அனுப்பினார். சிறீலங்கா படைகள் தம் பாசறைகளை விட்டு வெளியே வந்தால், அவர்களுக்கு எதிரான தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட இந்தியப் படையினர் நிர்ப்பந்திக்கப்படுவார்கள் என்று அதில் தெரிவித்தார். பிரேமதாசாவின் உராய்வு நிலை இராஜதந்திர அணுகுமுறை இங்கு பயனளிக்கத் தவறிவிட்டது.
ஆயுத உதவிக்கான வேண்டுகோள்
பிரேமதாசாவின் இறுதி எச்சரிக்கையை உடனடுத்து, வடபகுதி முல்லைத்தீவுக் காடுகளில் இருந்த புலிகளின் கெரில்லாப் படையணிகளுக்கு எதிராக இந்தியப் படைகள் தங்கள் தாக்குதல் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தின. இன்னொரு புறத்தில், இந்திய அமைதிப் படையோடு அருகருகாக நின்று, தமிழ்த் தேசிய இராணுவம், விடுதலைப் புலிகளுக்கு எதிரான தனது நடவடிக்கைகளைத் தொடங்கப் போவதாக வரதராஜப் பெருமாள் அறிவித்தார். இந்திய – இலங்கை ஒப்பந்தக் கடப்பாடுகளை பிரேமதாசா நிர்வாகம் நடைமுறைப்படுத்தத் தவறினால், தாம் தனி அரசான ஈழப் பிரகடனத்தை செய்யப் போவதாகவும் அவர் தெரிவித்தார். இப்படியான இக்கட்டான பின்னணியிலேயே நாம் தங்கியிருந்த விடுதியில் ஓர் அவசரச் சந்திப்புக்காக ஹமீது அவர்களை பாலா அழைத்தார். இந்தியப் படைகளிடம் இருந்தும் தமிழ்த் தேசிய இராணுவத்திடம் இருந்தும் கிளர்ந்திருக்கும் இராணுவ அச்சுறுத்தலுக்கு விடுதலைப் புலிகள் முகம் கொடுப்பதற்கு வசதியாக ஆயுத உதவிகளை அரசிடமிருந்து பெறமுடியுமா என்பதை ஆராய்வதற்காகவே ஹமீது அவர்களை பாலா அழைத்தார். அன்று மாலை ஒன்பது மணிக்கே ஹமீது அவர்கள் விடுதிக்கு வந்து, கூடத்துக் கதிரையில் சாவகாசமாக அமர்ந்து, நீண்ட கியூபா சுருட்டுப் புகைத்த வண்ணம், பாலா கூறுவதைப் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்தார். மிகக் கவனமாக எடுத்துரைக்கப்பட வேண்டிய விடயம்! அதே சமயம், ஆபத்தானதும் பிரச்சினைக்கு உரியதுமான விடயம்! உண்மையான களநிலையையும் அதன் கனதியையும் அதுவும் முல்லைத்தீவுப் போராட்டக் கள நிலையையும் தமிழிலும், ஆங்கிலத்திலும் மிக நிதானமாக பாலா விளக்கினார். புலிகளிடம் இருந்த ஆயுதத் தளபாடங்கள் கடகடவென்று குறைந்து போய்க்கொண்டிருந்தன. மறுபுறம் பெருந்தொகை இந்திய போர்ப் படைகளையும் தமக்கு ஆதரவாகத் தமிழ்ப் போராளி அணிகளையும் பெருமளவிலே முல்லைத்தீவுக் காடுகளுக்குள் இந்தியப் படைகள் குவித்துக் கொண்டிருந்தன. பாலா இவற்றை ஹமீது அவர்களுக்கு விளக்கினார். பிரேமதாசா அவர்களுடைய கடும்போக்கு இராஜதந்திரத்தினால் சீற்றம் அடைந்த இந்திய இராணுவமும் தமிழ்க் கூலிப் படைகளும், தமிழ்ப் புலிக் கெரில்லாப் போராளிகளையும் அவர்களுடைய தலைமையையும் அழித்தொழிக்கத் தீர்மானித்தனர். கொழும்பு பேச்சுவார்த்தையின் போது இந்திய அமைதிப் படையினரின் அடாவடித்தனங்களை அம்பலப்படுத்தியமையும் அவர்களைத் திரும்பப் பெறவேண்டும் என்று சிறீலங்கா அரசுத் தலைவர் ஆணையிட்டமையும் புதுடில்லியைத் தர்மசங்கடத்துக்கு உள்ளாக்கியதால், அவர்களுடைய கடுங்கோபம் புலிகள் மீது திரும்பியிருந்தது. இந்திய அமைதிப் படையினதும், தமிழ்த் தேசிய இராணுவத்தினதும் கூட்டுத் தாக்குதலுக்கு அவ்வேளை முகம் கொடுத்து, தம்மைக் காப்பாற்றிக் கொள்ள முனைந்து நிற்கும் புலிகளுக்கு ஆயுதங்களையும் போர்த் தளபாடங்களையும் வழங்க பிரேமதாசா அவர்களால் இயலுமாக இருக்குமா என்று பாலா கேட்டார்.
ஹமீது அவர்கள் ஆழாகச் சிந்தித்தார். இது ஒரு மிகவும் பாரதூரமானதும், மிகவும் கவனமாக அணுக வேண்டியதுமான விடயம் என்றார். விடுதலைப் புலிகளுக்கு உதவ, பிரேமதாசா தீர்மானித்தாலும், சிறீலங்கா இராணுவக் கட்டமைப்பு அதை எதிர்க்கக் கூடும் என்று எச்சரிக்கையாகக் கூறினார். ஆனால், வெளிநாட்டு ஆக்கிரமிப்பை எதிர்த்து நிற்கும் நாட்டுப்பற்றுடைய அணியான விடுதலைப் புலிகள் பெருமளவில் ஒழிக்கப்பட்டால், இந்தியப் படைகளை வெளியேற்ற வேண்டும் என்ற பிரேமதாசாவின் உறுதியான எண்ணம் என்றுமே நிறைவேறாது போகலாம் என்று பாலா சுட்டிக்காட்டினார். இறுதியில் நீண்ட நேரக் கலந்தாலோசனையின் பின், எமது வேண்டுகோளை அரசுத் தலைவரிடம் தெரிவிக்க அவர் இசைந்தார். மறுநாள் இரவு பாதுகாப்புச் செயலர் தளபதி ஆட்டிகல அவர்களையும் அழைத்துக் கொண்டு ஹமீது அவர்கள் எமது விடுதிக்கு வந்தார், அரசுத் தலைவர் எமக்கு உதவி புரியச் சம்மதமாக இருப்பதாக அவர்கள் பாலாவிடம் கூறினார்கள். ஆனால் இந்த விடயம் எதிர்விளைவுகளையும் முரண்பாடுகளையும் தோற்றுவிக்கக் கூடியதாதலால் இதை மிக அந்தரங்கமாகக் கையாள வேண்டியிருந்தது. இதைக் கேள்விப்பட்டதும், இராணுவம் கொதித்தெழும். ஆனால் மிக ரகசியமாக இதைச் செய்து முடிக்கலாம் என்று தளபதி கூறினார். தேவையானவற்றின் பட்டியலை வழங்குமாறு ஆட்டிகல கேட்டார். எமது தொலைத் தொடர்பு வழியாகப் பிரபாகரன் அவர்களைப் பாலாவும் யோகியும் தொடர்பு கொண்டு ஆயுதப் பட்டியல் ஒன்றை ஒப்படைத்தார்கள். ஒரு வாரத்துக்குள், முல்லைத்தீவு மாவட்ட மணலாறு பிரதேச எல்லையில் உள்ள சிங்கள இராணுவ முகாம் ஒன்றின் வழியாக, கணிசமான அளவு ஆயுதங்களும் போர்த் தளபாடங்களும் புலிகளிடம் ஒப்படைக்கப்பட்டன.
இந்திய அமைதிப் படை திரும்பப் பெறவேண்டும் என்ற முக்கிய திருப்புமுனை நாளான, 1989 ஜுலை இறுதி நாள் நெருங்கி வந்தபோது, இந்தியப் படைகளைத் திருப்பி அனுப்புவது என்பது புதுடில்லியுடன் பேச்சுவார்த்தை நடத்தியே சாத்தியமாகும் என்று கொழும்பு உணர்ந்தது. அச்சுறுத்தல்களாலும் இறுதி எச்சரிக்கைகளாலுமல்ல. புதுடில்லி முன்பிருந்து கூறியதுபோல, இரண்டு பக்கமும் பேசியே இதைத் தீர்க்கலாம் என்பது தெளிவாயிற்று. பிரேமதாசா தமது கர்வத்தை அடக்கிக் கொண்டு ரஜீவ் நிர்வாகத்துடன் பேசித் தீர்க்க வேண்டும் என்பதற்கு இணங்க வேண்டியதாயிற்று. இதன் விளைவாக, ஒரு பலம் வாய்ந்த சிறீலங்கா அணி ஒன்று, ஜுலை 29ஆம் திகதியன்று புதுடில்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த அணியில், வெளிவிவகார அமைச்சர் ரஞ்சன் விஜயரத்னா, உயர்கல்வி அமைச்சர் ஏ.சீ.எஸ்.ஹமீது, வெளியுறவுச் செயலர் பேணாட் திலகரத்னா, இந்தியாவில் இருந்த சிறீலங்கா உயர்ஸ்தானிகர் கலாநிதி ஸ்ரான்லி கல்பகே, அனைத்துலக விவகாரங்களில் அரசுத் தலைவருக்கு ஆலோசகராக இருந்த பிரட்மன் வீரக்கோன், சட்ட மா அதிபர் சுனில் டீ சில்வா, அமைச்சரவைச் செயலர் டபிள்யூ.ரீ. ஜயசிங்கா, சமாதானக் குழுச் செயலர் பீலிக்ஸ் டயஸ் அபேசிங்கா ஆகியோர் உறுப்பினராகச் சென்றனர். இந்தியப் பிரதமரையும் பீ.வீ. நரசிம்ம ராவ் அவர்களையும் பாதுகாப்பு அமைச்சர் கே.சீ.பான்ற் அவர்களையும் சிறீலங்கா அணி பல தடவை சந்தித்தது. பேச்சுவார்த்தைகள் ஓகஸ்ட் 4ஆம் திகதி நிறைவடைந்தன. இந்திய, சிறீலங்கா அணிகள் நான்கு முக்கிய விடயங்களை ஆராய்ந்தன. முதலாவதாக, சிறீலங்காவில் இருந்து இந்திய அமைதிப் படைகளைத் திருப்பிப் பெறுவதற்கான கால அட்டவணைக்கான ஆயத்தங்களைப் புரிதல்; இரண்டாவதாக, விடுதலைப் புலிகளுக்கு எதிரான பகைமை நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டு வருதல்; மூன்றாவதாக இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக மீளாய்வு செய்தல்; நான்காவதாக வடக்குக் கிழக்கு மாகாணத்தின் அனைத்துக் குடிமக்களின் பாதுகாப்புக்கும் காப்புறுதிக்கும் வழிவகுத்தல்.
புதுடில்லியில் நடைபெற்ற வெற்றிகரமான பேச்சுக்களின் விளைவாக, இந்திய அமைதிப் படைகளை ஒரு கால அட்டவணைக்கு ஏற்ப, படிப்படியாகத் திருப்பி அழைக்க இந்தியா ஒப்புக் கொண்டது. இந்திய அமைதிப் படைகளைத் திருப்பி அழைக்கும் பணிக்கும் வேகம் கொடுத்து டிசம்பர் 31ஆம் திகதியளவில் அந்தப் பணியை முடிவுக்கு கொண்டுவர அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும் என்று இந்தியா உறுதியளித்தது. எப்படியாயினும், சார்க் மாநாடு நடந்த பின்னரே, இறுதி அமைதிப் படையணி நாடு திரும்புவதாக இருக்கும். செப்டெம்பர் 20ஆம் திகதியில் இருந்து இந்திய அமைதிப் படை தனது இராணுவத் தாக்குதல் நடவடிக்கைகளைக் கைவிடும் என்று புதுடில்லி இணங்கியது. சிறீலங்கா அணி, அளித்த வாக்குறுதியின்படி, வடக்குக் கிழக்கு மாகாணசபை செவ்வையாக இயங்குவதன் பொருட்டு அதற்கு அதிகாரப் பகிர்வு வழங்கும் அலுவல்களுக்கு வேகம் கொடுக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்து, இரண்டு அணியினரும் ஒரு ‘பாதுகாப்பு ஒருங்கிணைப்புக் குழு’ ஒன்றை நிறுவ இணங்கினர். அதில் சிறீலங்கா பாதுகாப்பமைச்சுச் செயலர், இந்திய அமைதிப் படைத்தளபதி, வடக்கு – கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் ஆகியோர் உறுப்பினராய் அமைவர். வடக்கு – கிழக்கின் சட்டம், ஒழுங்கு ஆகியவற்றிற்கு இந்தக் குழு பொறுப்பாக இருப்பதோடு, வடக்கு, கிழக்கில் உள்ள அனைத்து குடிமக்களின் பாதுகாப்புக்கும் காப்புறுதிக்கும் பொறுப்பாகவும் இருக்கும்.
புதுடில்லிக்கும் கொழும்புக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டதை ஒட்டி, பிரேமதாசா பெரிதும் மகிழ்ந்தார். அவருடைய இல்லத்தில் இடம்பெற்ற ஒரு பிரத்தியேகச் சந்திப்பின்போது, ரஜீவ் காந்தியுடன் இடம்பெற்ற இராஜதந்திர பலப் பரீட்சைப் போட்டியில் தாம் வெற்றி பெற்றுவிட்டதாகவும், இந்திய அமைதிப் படையின் கதை முடிந்து விட்டதாகவும் எம்மிடம் கூறினார். ஈ.பீ.ஆர்.எல்.எஃப் இன் மாகாண நிர்வாகத்திற்குக் கூடுதலான அதிகாரம் வழங்கி அதைத் தரம் உயர்த்த சிறீலங்கா வாக்குறுதி வழங்கியிருந்த போதிலும், பிரேமதாசா அவர்கள் அதற்கென இரகசியத் திட்டம் ஒன்றை வைத்திருந்தார். விடுதலைப் புலிகளைப் பொறுத்த வரையிலே, தமிழர் தாயகத்தில் இருந்து இந்திய அமைதிப் படை வெளியேற வேண்டும் என்ற அவர்களுடைய அரசியல் நோக்கம் நிறைவேறுவதால், அவர்களுக்கு இந்த ஏற்பாடு மகிழ்ச்சியையே கொடுத்தது.
இந்தியப் படைகளை ஒரு கால அட்டவணைக்குள் படிப்படியாகத் திருப்பி அனுப்புவதை இந்திய அரசுடன் ஓர் உடன்படிக்கை வடிவில் உறுதிப்படுத்தி, அமைதிப் படை விலகிய பின் தமிழர் தாயகத்தின் அரசியல் வெற்றிடத்தை எவ்வாறு நிரப்புவது என்பது பிரேமதாசா எதிர்நோக்கிய பிரச்சினை ஆகியது. போதுமான அளவு அதிகாரப் பகிர்வும், ஒரு காவல்துறை அமைப்பும் வழங்கி, பெருமாளின் மாகாண நிர்வாகத்தைப் பலப்படுத்துவதாக ரஜீவ் காந்திக்கு பிரேமதாசா உறுதி வழங்கிய போதிலும், விடுதலைப் புலிகள் தங்கள் காட்டு மறைவிடங்களில் இருந்து நகருக்குள் வந்து இந்திய அமைதிப் படையின் நிலைகளில் காலூன்றியதும் ஈ.பீ.ஆர்.எல்.எஃப் இன் ஆட்சி காற்றிலே கரைந்து மறைந்து விடும் என்பது பிரேமதாசாவுக்கு நன்கு தெரியும். விடுதலைப் புலிகளின் தீரம், உறுதி மற்றும் தங்கள் இலட்சியம் மட்டில் அவர்களுக்கு இருந்த பற்று ஆகியவற்றை பிரேமதாசா மதித்தார். ஆனால், தமிழரின் தாயகம், சுயநிர்ணய உரிமை, ஆகிய கோரிக்கைகளை அவர் வன்மையாக எதிர்த்தார். இந்தியப் படைகள் வெளியேறத் தொடங்க பிரேமதாசாவின் சிந்தனைகளும் திட்டங்களும் வெளிப்படையாகத் தெரிந்தன. இனப் பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வு, சிறீலங்காவின் ஒற்றையாட்சி யாப்புக்கு உள்ளேயே அமைய வேண்டும் என்பதை அவர் வலியுறுத்தத் தொடங்கினார். இந்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறத் தொடங்கிவிட்டதால், புலிகளும் அரசியல் நீரோட்டத்துக்குள் நடைமுறையில் கலந்து கொள்ள வேண்டிய வேளை முதிர்ந்து விட்டதாக அவர் கூறினார். விடுதலைப் புலிகளுக்குத் தமிழ் மக்களிடையே நிலவிய அமோக ஆதரவுடன், வடக்குக் கிழக்குத் தேர்தல்களில் அவர்கள் மாபெரும் வெற்றி பெறுவது உறுதி. இந்த நிலையில், விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகள், அரசியல் கட்சி ஒன்றை நிறுவி, தேர்தல் ஆணையாளரிடம் அதைப் பதிவு செய்ய வேண்டும் என்றும் அவர் ஆலோசனை வழங்கினார்.
விடுதலைப் புலிகளின் அரசியற் கட்சி
விடுதலைப் புலிகளின் இறுதி நோக்கம் பற்றிப் பிரேமதாசா சந்தேகம் கொள்ளத் தொடங்கியிருக்கிறார் என்று, தனிப்பட்ட சந்திப்புகளின்போது, ஹமீது அவர்கள் பாலாவிடம் கூறினார். அரசியல் யாப்புக் கட்டமைப்புக்குள் ஒரு தீர்வைப் புலிகள் நாடமாட்டார்கள் என்றும் தனித் தமிழ் அரசை நிறுவுவதில் உறுதியாக இருக்கிறார்கள் என்றும் சில அமைச்சர்கள் அரசுத் தலைவரை எச்சரிப்பதாகத் திரு. ஹமீது தெரிவித்தார். வடக்கு – கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் புலிகள் பங்குபற்றி வெற்றி பெற்றால், உள்நாட்டிலும், அனைத்துலகிலும் புலிகளின் மதிப்பு உயரும் என்று திரு. ஹமீது எமக்கு அறிவுரை கூறினார். விடுதலைப் புலிகளின் தலைமை இதற்கு இணங்கினால் அல்லாமல், பெருமாள் நிர்வாகத்தைக் கலைத்து, புலிகளிடம் அதிகாரத்தை ஒப்படைப்பது அரசுத் தலைவருக்கு மிகக் கடினமாக இருக்கும். அரசியல் கட்சி ஒன்றை உருவாக்குவதற்கும் புலிகளின் தலைமை சம்மதமாக இருப்பதாக ஹமீது அவர்களிடம் பாலா கூறினார். தமிழ் மக்களின் உண்மையான ஏகப் பிரதிநிதிகள் தாமே என்று பெரும்பான்மைச் சிங்களவருக்கும் அனைத்துலகத்திற்கும் நிரூபிப்பதன் பொருட்டு, மாகாணசபைத் தேர்தலில் பங்கெடுக்க புலிகள் சம்மதமாக இருந்தார்கள். அதே நேரம் பிரேமதாசாவின் இறுதி நோக்கம் என்ன என்பது பற்றி புலிகளும் சந்தேகம் கொண்டிருக்கிறார்கள் என்று பாலா அங்கு தெரிவித்தார். அதே சமயம் வடக்கு – கிழக்கு மாகாண சபையைக் கலைத்து விடுவாரா, அரசியல் யாப்பின் ஆறாவது திருத்தச் சட்டத்தை நீக்கி ஆயுதப் படைகளைப் பாசறைகளில் முடங்கியிருக்கச் செய்வாரா, அமைதியான முறையில் அதிகாரம் புலிகளின் கரங்களுக்கு மாற அவர் இடமளிப்பாரா என்ற பாலாவின் வினாக்களுக்கு, ஹமீது அவர்கள் வழங்கிய பதில்கள் சாதகமாகவே அமைந்தன. நாம் மக்களாட்சி அரசியல் நீரோட்டத்தில் கலந்து கொள்ள ஆயத்தம் என்றால், பிரேமதாசாவை இணங்கச் செய்ய முடியுமாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.
அரசியல் கட்சி ஒன்றைத் தொடக்குவது தொடர்பாக முல்லைத்தீவில் உள்ள விடுதலைப் புலிகளின் தலைமைப் பணிமனைக்கு நாம் சென்றபோது, பிரபாகரன் அவர்களிடமும் ஏனைய தலைவர்களிடமும் பாலா அனுமதி கோரியிருந்தார். எமது தொலைத்தொடர்புச் சாதனம் மூலம் பிரபாகரன் அவர்களுடன் பேசி, கட்சிக்கான பெயருக்கும், கட்சிப் பதவியாளர் பெயர்களுக்கும் பாலா நேரடி அங்கீகாரம் பெற்றார். கட்சிக்கான யாப்பு ஒன்றை வரையும் பணியே மீதமிருந்தது. அரசியல் கட்சி யாப்புக்கள் பற்றித் தாம் முன்னர் ஆய்வு செய்தவற்றை அடிப்படையாக வைத்து, பத்திரத்தை பாலா வரைந்தார். அதைச் செப்பனிட்டு, தட்டச்சிலிட, நான் உதவினேன். அரசியல் கட்சிக்கு, ‘விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி’ என்று பெயர் சூட்டப்பட்டது. விடுதலைப் புலிகளின் பிரதித் தலைவர் மகேந்திரராசா (மாத்தையா) கட்சியின் தலைவராகவும் யோகரட்ணம் யோகி செயலதிபராகவும் நியமிக்கப்பட்டனர். உண்மையான மக்களாட்சிக் கட்சிக்கான அடித்தளம் ஒன்றுக்கு யாப்பு இடமளித்தது; மக்களின் பல்வேறு பிரிவினரும் அதில் பிரதிநிதித்துவம் பெற்றுப் பங்கெடுக்கவும் வகை செய்தது. யாப்பின் பிரதி ஒன்று, பதிவுக்காக, தேர்தல் ஆணையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர் கட்சியைப் பதிவு செய்துவிட்டு, அரசுத் தலைவருடன் ஆலோசித்த பின்னர் தயக்கத்தோடு புலிகளின் இலச்சினையை விடுதலைப் புலிகளின் மக்கள் முன்னணியின் சின்னமாக அங்கீகரித்தார். விடுதலைப் புலிகள் புதிய அரசியற் கட்சி ஒன்றை நிறுவி, அரசியற் பிரதான நீரோட்டத்தில் கலந்து கொள்ளத் தங்கள் சம்மதத்தைத் தெரிவித்தமை பிரேமதாசாவுக்குப் பெருமகிழ்ச்சியைக் கொடுத்தது. நாடு முழுவதையும் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளை விவாதிப்பதற்காகத் தாம் கூட்ட உத்தேசித்திருக்கும் அனைத்துக் கட்சி மாநாட்டில் புலிகளின் பிரதிநிதிகளும் கலந்து கொள்ள வேண்டும் என்று அவர் பெரிதும் கேட்டுக் கொண்டார். பதிவு செய்யப்பட்ட ஓர் அரசியல் கட்சியாகப் பகிரங்க அரசியல் அரங்கு ஒன்றிலே விடுதலைப் புலிகளைக் கொண்டு வரும்போது, அமைதிப் பேச்சுவார்த்தைகளின் முக்கிய அரசியல் அறுவடையாக இதைக் காட்டக் கூடுமாக இருக்கும் என்பதே அவருடைய எண்ணமாக இருந்தது. மாநாட்டு அங்குரார்ப்பண வைபவத்தில் ‘பார்வையாளராக’ கலந்து கொள்ளப் புலிகளின் பிரதிநிதிகள் சம்மதித்தார்கள். அனைத்துக் கட்சி மாநாடு ஓகஸ்ட் 12இல் கூடியபோது இருபத்தாறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளாக ஏறத்தாள நூறு பேர் கலந்து கொண்டார்கள். பிரேமதாசாவின் அங்குரார்ப்பண உரை, பிரச்சினைத் தீர்வை இலக்காகக் கொண்டு அமைந்தது. கலந்தாலோசனை, சமரசம், கருத் தொற்றுமை ஆகிய தமது மூன்று அணுகுமுறைகளையும் அவர் முன்வைத்தார். முக்கிய விடயமான இன நெருக்கடி தவிர்ந்த அனைத்துப் பிரச்சினைகளையும் மாநாடு விவாதித்தது. கலந்தாலோசனையோ, சமரசமோ கருத்தொற்றுமையோ ஏற்படாததால் மாநாடு விரைவிலேயே பிசுபிசுத்துப் போயிற்று. ரஜீவ் நிர்வாகத்துக்கும் பிரேமதாசாவுக்கும் இடையே இடம்பெற்ற கூட்டு உடன்பாட்டில் உறுதியளித்தபடி, 1989 ஒக்ரோபர் முற்பாகத்தில் இந்திய அமைதிப் படைகளைத் திருப்பி அழைக்கும் பணி தொடங்கியது. மெதுவாகவே அது செயற்பட்டது. படிப்படியாகவும் மாவட்டம் மாவட்டமாகவும் இந்தியப் படைகள் வெளியேற, தமிழ்த் தேசிய இராணுவத்தினர், அந்தப் பாசறைகளில் குடிகொண்டு தங்கள் நிலைகளைப் பலப்படுத்தினர். முதலில் கிழக்கு மாகாண அம்பாறையிலும், மட்டக்களப்பிலும் இருந்து இந்தியப் படைகள் வெளியேறின. கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழ்த் தேசிய இராணுவத்தின் நிலைகள் மீது விடுதலைப் புலிகள் பாரிய தாக்குதல் ஒன்றை நடத்துவது சாத்தியம் என்பதால், திகிலடைந்து குழம்பிப்போன பெருமாள் நிர்வாகம், பெரும்படை திரட்டும் முயற்சியில் மூர்க்கத்தனமாக ஈடுபட்டது. வீதிகளில், வீடுகளில், பள்ளிகளில் நுழைந்த ஈ.பீ.ஆர்.எல்.எஃப் அணியினர், திடகாத்திர உடலுடைய இளவயது ஆண்கள் அனைவரையும் பலவந்தமாகப் பிடித்துச் சென்றனர். தமது இராணுவப் பிரிவிற்கு ஆளணி மூலம் ஊட்டம் வழங்கி, ஈடாட்டம் கண்டு நொருங்கும் நிலையில் இருந்த தமது ஆட்சியைத் தக்க வைப்பதே இந்த ஆட்சேர்ப்பின் நோக்கமாக இருந்தது. தான் அதிகாரத்தில் ஒட்டிக் கொண்டு இருக்க வேண்டும் என்ற பகீரதப் பிரயத்தன முயற்சியில் பயிற்சியோ, போர் அனுபவமோ இல்லாத பெருந்தொகையினரைப் பலி கொடுக்க ஈ.பீ.ஆர்.எல்.எஃப் செய்த இந்த ஆட்சேர்ப்பு முயற்சி, தமிழ் மக்களிடையே பெருமாள் மட்டில் மனக் கொதிப்பை ஏற்படுத்தியது.
விடுதலைப் புலிகளின் தலைமை ஓர் இக்கட்டான நிலைக்கு உள்ளாகியது. அனாவசியமாக ரத்தம் சொரியப்படுவதைத் தவிர்க்க விரும்பிய பிரபாகரன் அவர்கள், சிறீலங்கா அரசுத் தலைவருக்கு பாலா மூலம் ஓர் அவசர செய்தி அனுப்பினார். புலிகளுக்கும் ரீ.என்.ஏ இற்கும் இடையே நடைபெறும் போரில் சிங்கள ஆயுதப் படைகள் கலந்து கொள்ளக்கூடாது என்று கேட்டுக் கொண்டார். தமிழ்த் தேசிய இராணுவத்தின் ஆயுதம் தரித்த அணியினர் சரணடைந்தால் அவர்கள் அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்கப்படும் என்றும் அறிவித்தார். 1989 நவம்பர் முற்பகுதியில் விடுதலைப் புலிப் படையணிகள் கிழக்கு மாகாணத்தில் தாக்குதலை நடத்தினார்கள். முதலில் அம்பாறையிலும் அடுத்த சில வாரங்களில் மட்டக்களப்பிலும் தமிழ்த் தேசிய இராணுவத் தளங்களை இலகுவாகத் தம்வசப்படுத்தினார்கள். தமிழ்த் தேசிய இராணுவத்திற்குத் திரட்டப்பட்ட ஆயிரமாயிரம் இளைஞர்கள் விடுதலைப் புலிகளிடம் சரணடைந்தார்கள். ஈ.பீ.ஆர்.எல்.எஃப் இன் ஆயுதம் தரித்த உறுப்பினரே எதிர்த்து நின்றார்கள். சரணடைந்த அனைவரும், கிழக்கு மாவட்டங்களில் உள்ள பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்கள். சரணடைந்த பலர் புலிகள் அணியில் சேர்ந்தார்கள்.
கிழக்கிலே மாகாண நிர்வாகம் வீழ்ச்சி அடைய ஆற்றா நிலையில் தவித்த பெருமாள், ரஜீவ் காந்தியிடமும், பிரேமதாசாவிடமும், மனுக்கள் விடுத்தார். இந்திய இராணுவம் விட்டுச் செல்லும் மாவட்டங்களில், விடுதலைப் புலிகள் நிர்வாகத்தைத் தமதாக்கிக் கொள்ளும் முயற்சியைத் தலையிட்டுத் தடுக்க வேண்டும் என்றே பெருமாள் மனுப் பண்ணினார். காந்தியைப் பொறுத்த வரையிலே பொதுத் தேர்தல் ஒன்றுக்கு அவர் ஏற்பாடு செய்யும் நிலையில் இருந்ததாலும், போபஸ் விவகார ஊழல் குற்றச்சாட்டுக்களுக்கு அவர் முகம் கொடுக்க வேண்டி இருந்ததாலும், பெருமாளின் வேண்டுகோளிற்கு செவிசாய்க்க அவர் விரும்பவில்லை. நிலைமையை பிரேமதாசா புரிந்திருந்த போதிலும், இந்தியப் படை வெளியேற்றம் தாமதம் அடைவதை ஒட்டியே அவருடைய கவலை இருந்தது. உடைந்து நொருங்கிக் கொண்டிருக்கும் பெருமாளின் இராணுவக் கட்டமைப்பை அவர் மீளத் திரட்டி, ஒழுங்கு செய்து, உறுதிப்படுத்த அவருக்கு அவகாசம் அளிக்கும் நோக்கத்தோடு, புதுடில்லி இந்தியப் படைகளைத் திருப்பி அழைப்பதைத் திட்டமிட்டே தாமதப்படுதுகிறதோ என்று பிரேமதாசா சந்தேகப்பட்டார்.
தமிழ்த் தேசிய இராணுத்தை அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் இருந்து விரட்டியடித்த விடுதலைப் புலிகள், தமது அதிகாரத்தை அங்கே வலுவாக நிறுவுவதில் முனைந்தார்கள். தேசிய மாவீரர் நாளில் கலந்து கொள்வதற்காக பாலாவும், யோகியும் நானும் மட்டக்களப்பு நகரத்துக்கு விமானப் படை உலங்குவானூர்தி மூலம் சென்றோம். உயிர்ப்பலியான விடுதலைப் புலிப் போராளிகளைக் கௌரவிக்கும் முகமாக நவம்பர் 27ஐ ஒரு தேசிய நாளாகப் பிரபாகரன் அவர்கள் பிரகடனப்படுத்தியிருந்தார். 1989இல் முதல் ஆண்டு ஞாபகார்த்தம் நடைபெற்றது. போராட்டத்தில் உயிர்ப்பலியான முதல் விடுதலைப் புலிப் போராளி சங்கரின் நினைவு நாளே மாவீரர் நாளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. விடுதலைப் புலிகளின் தேசிய நாட்காட்டியில் மாவீரர் நாள் ஒரு முக்கிய நாளாக அமைந்துவிட்டது. ஒரு நாள் நிகழ்வாக 1989இல் முதலில் தொடங்கிய மாவீரர் நாள், ஒரு வாரம் முழுவதிலும் நடைபெறும் நிகழ்வுகளாக மாறி, நவம்பர் 27ஆம் திகதி மாலை ஆறு மணிக்கு உச்சத்தை எட்டும். அந்தத் தருணத்தில், தமிழர் தாயகத்தில் எங்கனும் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்களில் குடும்பத்தினர் கூடுவர்; ஆலய மணிகளும் அவ்வேளை ஆர்ப்பரிக்கும்.
இந்தத் தேசிய எழுச்சி நாளைக் கொண்டாடுவதற்காக மட்டக்களப்பில் இருந்து அம்பாறை மாவட்டத்திலுள்ள பொத்துவிலுக்கு பயணம் புரிந்தோம். அம்பாறைக்குச் செல்லும் பாதை வழியே, தங்கள் மாவட்டத்தை விட்டு இந்தியப் படைகள் அகன்றதை ஒட்டி, மக்களிடம் காணப்பட்ட நிம்மதியும் மகிழ்ச்சியும் அப்பட்டமாகத் தெரிந்தன. மகிழ்ச்சியில் திளைத்த மக்கள் திரள், எங்கள் வாகனத் தொடரை வழிவழியே நிறுத்திப் புலிப் போராளிகளுக்கு மாலை சூட்டிக் கொண்டிருந்ததால், குறித்த இடத்தைச் சென்றடைய இரட்டிப்பு நேரம் பிடித்தது. பயணப் பாதையில், மக்கள் தங்கள் வீடுகளிலிருந்து ஓடி வந்து தங்கள் தாயகத்திலிருந்து இந்தியப் படைகளை வெளியேற்றுவதில் பேச்சுவார்த்தை வெற்றி பெற்றமைக்காக எம்மைப் பாராட்டினார்கள். அம்பாறை முழுவதிலும், ஒரு நகரில் இருந்து இன்னொரு நகருக்குப் போகும் வழி நீளம் நினைவுச் சிற்றாலயங்கள் காணப்பட்டன; புலிகளின் சிவப்பு மஞ்சள் கொடிகள் அங்கே பறந்தன. மாவீரர் நாளைக் கொண்டாட மக்கள் கூட்டம் கூட்டமாகத் திரண்டார்கள். உரிமைப் போராட்டம் இன்னும் முடியவில்லை என்றும், போராட்டம் ஒரு வித்தியாசமான மட்டத்தில் தொடரும் என்றும் புலித் தலைவர்கள் கூறுவதைக் கேட்க மக்கள் பெருந்திரளாகக் கூடினார்கள். மட்டக்களப்பு நகருக்கு அருகே, கிழக்குக் கரையில் அக்கரைப்பற்றிலும் திருக்கோவிலிலும், வகுப்பறைகளை விட்டு ஓடி வந்த பள்ளிப் பிள்ளைகள், பொதுமக்களோடு விடுதலைப் புலிப் போராளிகளையும் அவர்களுடைய தலைவர்களையும் பார்ப்பதற்காகவும் அவர்கள் கூறுவதைக் கேட்பதற்காகவும் காத்து நின்றார்கள். புலிப் போராளிகளுக்கு மல்லிகை மலர் மாலை சூட்டித் தங்கள் பாராட்டைத் தெரிவிக்க வாய்ப்புக் கிடைக்கும் என்ற நம்பிக்கையில், கூட்டம் நடைபெறும் இடங்களில் நீண்ட வரிசைகளிலே மக்கள் காத்து நின்றார்கள்.
பிரேமதாசா அவர்களுடனான தனிப்பட்ட சந்திப்புகளின் போது, விடுதலைப் புலித் தலைவர் பிரபாகரனை தாம் சந்திக்க விரும்புவதாக, தமது உண்மையான ஆவலை அவர் வெளியிட்டார். சிங்களத் தலைவர்கள் எவருமே அவரைச் சந்திக்கவில்லை என்றும், இதனால் அவரைப் பற்றிய திரிபுபட்ட கருத்துக்களே நிலவுகின்றன என்றும் அவர் எம்மிடம் தெரிவித்தார். பிரபாகரன் அவர்களுடன் உரையாடி, அவரை ஆழமாகப் புரிந்து கொள்ளவும் கூடிப் பணியாற்றக் கூடிய ஈடுபாட்டை அவருடன் ஏற்படுத்திக் கொள்ளவும் தாம் விரும்புவதாகவும் அவர் கூறினார். ஆளுமைப் புரிந்துணர்வைத் தளமாகக் கொண்ட நேரடித் தொடர்புகள் அரசியலுக்கு அவசியமானவை என்பது அவருடைய நம்பிக்கையாகும். பிரபாகரன் அவர்களுடைய இராணுவ ஆற்றலும் பலம் மிக்க சக்திகளை எதிர்நோக்கும் போது அவர் காட்டும் தீரமும் மன உறுதியும் அவர் மட்டில் பிரேமதாசாவுக்கு வியப்பை ஏற்படுத்தியிருந்தன. சாதாரண குடும்பத்தில் உதித்த யாருமறியாத ஒரு சிறுவன், எப்படி மக்களால் பூசிக்கப்படும் வரலாற்று நாயகனாக முகிழ்த்தான் என்பது பிரேமதாசாவுக்கு அதிசயமாக இருந்தது. பாதுகாப்புக் காரணங்களுக்காக பிரபாகரன் அவர்கள் கொழும்புக்கு வரமுடியாது என்று நாம் அரசுத் தலைவரை நம்ப வைக்க நேர்ந்த போது அவருக்கு ஏமாற்றமாக இருந்தது. நாம் முல்லைத்தீவு மூலத் தளப் பாசறையில் இருந்தபோது, பிரபாகரன் அவர்களைப் பிரேமதாசா சந்திக்கப் பெரும் ஆவலாக இருந்ததை பிரபாகரன் அவர்களிடம் பாலா எடுத்துக் கூறினார். அந்தத் தருணத்தில், நாம் அடுத்த தடவை கொழும்பு செல்லும் போது, பிரதித் தலைவர் மகேந்திரராசாவை கூட்டிச் சென்று அவரை அரசுத் தலைவருக்கு அறிமுகம் செய்து வைக்குமாறு கருத்துரைத்திருந்தார்.
ஒக்ரோபர் முற்பகுதியில், பிரபாகரன் அவர்களை நேரில் சந்தித்து ஆலோசனை புரிவதற்காக, முல்லைத்தீவு காடுகளுக்கான இரண்டாவது பயணத்தை மேற்கொண்டோம். கிட்டுவின் துண்டிக்கப்பட்ட காலுக்குச் சிகிச்சை பெறுவதற்காக அவரை இலண்டனுக்கு அனுப்பத் தாம் விரும்புவதாக இந்தப் பயணத்தின் போதே பிரபாகரன் அவர்கள் பாலாவிடம் கூறினார். தம்மை வெளிநாடு அனுப்பத் தீர்மானிக்கப்பட்டிருப்பதை அறிந்ததும் கிட்டுவின் மனம் ஊசலாடியது. சரியான உறுப்புப் பொருத்தல் கிடைத்தால், இலகுவாக நடக்கவும், தடையின்றி நடமாடவும் முடியும் என்பது அவருக்கு மகிழ்ச்சியே. ஆனால் தாம் வெகுவாக நேசிக்கும் தமது போராளிகளையும் தாய் நாட்டையும் விட்டுப் பிரிவது அவருக்குச் சஞ்சலத்தைக் கொடுத்ததால், பிரிவை அவரால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. தமது போராளிகளுக்குப் பயிற்சி வழங்கும் பணியில் கிட்டு ஒளிர்ந்தார்; அவர்களுடைய ஈடுபாடுகளில் அவர்களை ஊக்குவித்தார்; அவர்களை உற்சாகமாக ஈடுபடுத்தப் புதிய திட்டங்களையும் அறிமுகப்படுத்தினார். எனவே, பிரிய வேண்டிய நாள் நெருங்க, அவரும் சரி, அவருடைய போராளிகளும் சரி, கலகலப்பின்றிச் சோர்வாகக் காணப்பட்டார்கள். நான் பார்த்த பரிதாபத்துக்கு உரிய காட்சிகளில் ஒன்று அலம்பில் காட்டிலிருந்து கிட்டுவை வெளியே கூட்டிச் சென்ற நாளன்று, அந்த வரலாற்று நாயகன், பிரபாகரன் அவர்களுடைய தோளில் முகத்தைப் புதைத்துத் தேம்பி அழுததுதான். அவரை ஒரு கதிரைப் பல்லக்கில் இருத்திய அவருடைய போராளிகள் அவரை உலங்குவானூர்தி வரை தோளிலே சுமந்து சென்றார்கள். இந்த வடிவிலேதான் பாலாவை அவர்கள் முன்னர் தோளில் சுமந்தமையை நினைவு கூர்ந்தேன். காட்டுக்குள் இருந்து வெளியே கொண்டுவரப்படும் போது, தமக்கே உரிய நேர்த்தியில், கிட்டு தமது போராளிகள் முன், கலக்கத்தை முகத்தில் காட்டாது கலகலப்பாக வேடிக்கையாகப் பேசித் தமது பாசத்தை அவர்கள் மீது கொட்டினார். கிட்டு கொழும்பை அடைந்ததும் அவரை பிரித்தானியத் தூதரகத்திற்கு கூட்டிச் சென்றோம். பிரித்தானியத் தூதருடன் கலந்துரையாடிய பின், பிரித்தானியாவுக்கான கிட்டுவின் வீசா அனுமதி அங்கீகரிக்கப்பட்டது. ஆனால், இலண்டன் புறப்படும் முன், கிட்டு ஒரு முக்கிய விடயத்தைக் கவனிக்க வேண்டியிருந்தது. இந்திய அமைதிப் படைப் பாதுகாப்பிலிருந்து விடுவிக்கப்பட்ட பின் முல்லைத்தீவுக் காடுகளுக்குச் சென்றதிலிருந்து, மருத்துவ மாணவியான அவருடைய காதலி சிந்தியாவிடம் இருந்து அவர் பிரிந்து வாழவேண்டியதாயிற்று. சிந்தியாவோடு மீண்டும் இணைய வேண்டும் என்று அவர் தவித்தார். அவரைச் சந்திக்க சிந்தியா யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்குப் பயணம் புரிந்தார். அங்கே திருமணம் செய்ய அவர்கள் தீர்மானித்தார்கள். சடங்கிலே கலந்துகொள்ளக் கிட்டுவின் தாயார் வல்வெட்டித்துறையில் இருந்து கொழும்புக்கு அவசரமாக வந்தார். சிந்தியாவின் பெற்றோர் ஏற்கனவே கொழும்பில் இருந்தார்கள். பேச்சுவார்த்தையின் போது புலிப் பிரதிநிதிகள் தரித்திருந்த விடுதியின் அறை ஒன்றிலே ஒக்ரோபர் மாதம் 25ஆம் திகதி, கிட்டுவுக்கும் சிந்தியாவுக்கும் பதிவுத் திருமணம் நடைபெற்றது. சில நாள் கழித்து கிட்டு இலண்டனுக்கு விமானம் மூலம் பயணமானார். பயண ஏற்பாடுகளைச் செய்து கொண்டு சிந்தியா பின்னர் இலண்டனில் அவரோடு இணைந்து கொண்டார்.
(பின் குறிப்பு: 1989 நவம்பர் முற்பகுதியில் இலண்டன் வந்து சேர்ந்த தளபதி கிட்டு, விடுதலைப் புலிகளின் சர்வதேச விவகாரங்களுக்குப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். இப் புதிய பொறுப்பை ஏற்றுக் கொண்ட கேணல் கிட்டு, தனது நிர்வாகத் திறமையினால் வெளிநாட்டுச் செயற்பாடுகளில் புதுமையான மாற்றங்களைக் கொண்டு வந்தார். தமிழீழ மக்களின் தேசிய விடுதலைப் போராட்டம் உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பரப்புரையை முடுக்கி விட்டார். அவரது ஊக்கம் காரணமாக இயக்கத்தின் வெளியீடுகள் புதுப் பொலிவுடன் வெளிவரத் தொடங்கின. தமிழீழ மக்களின் வாழ்வையும், போராட்டத்தையும், தாயக மண்ணின் வளங்களையும் சித்தரித்துக் காட்டும் ஓவிய, புகைப்படக் கண்காட்சிகளை மேற்குலக தலைநகரங்களில் நடாத்தினார். தமிழரின் விடுதலைப் போராட்டங்கள் பற்றிப் பிற மொழிகளில் துண்டுப் பிரசுரங்களையும், சிறு கை நூல்களையும் வெளியிட்டார். தனது அன்பாலும் பண்பாலும், அபாரமான ஆளுமை வீச்சாலும் புலம்பெயர்ந்த மக்களைக் கவர்ந்து இழுத்து, போராட்டத்திற்குப் பக்க பலமாக அணிதிரட்டினார். போராட்டத்தில் ஒதுங்கியிருந்த அறிவுஜீவிகள், கல்விமான்கள், மாணவர்கள், தொழிலாளர்கள் எனப் பலதரப்பட்டோரையும் அரவணைத்துத் தாயக விடுதலைக்காகப் பங்களிக்கும் தேசிய கடமையுணர்வை அவர்களுக்கு ஊட்டினார். தனது பன்முகப்பட்ட ஆற்றலாலும் ஆளுமையாலும் வெளியுலகத் தமிழர்களிடையே தேசப் பற்றையும் விடுதலைக்கான விழிப்புணர்வையும் ஏற்படுத்தினார்.
1993ஆம் ஆண்டு ஜனவரி மாதம். ஐரோப்பிய நாடுகளின் சமரசத் திட்டத்துடன் தலைவர் பிரபாகரனைச் சந்தித்துக் கலந்துரையாடுவதற்காக, தளபதி கிட்டுவும் போராளிகள் சிலரும் கப்பல், மார்க்கமாகத் தமிழீழம் பயணித்தனர். வங்கக் கடல் வழியாகக் கிட்டுவும் அவரது தோழர்களும் சமாதானத் தூதில் வந்துகொண்டிருந்த செய்தி இந்திய அரசுக்குத் தெரிய வந்தது. உடனடியாகவே இந்திய அரசு இவ் விவகாரத்தில் தலையிட முனைந்தது. இந்தியக் கடற்படையின் இரண்டு நாசகாரக் கப்பல்கள் கிட்டு பயணித்த கப்பலைச் சுற்றிவளைத்து இந்தியக் கரையோரமாக செலுத்தும்படி கட்டளையிட்டன. இரண்டு நாள் கடற்பயணத்தின் பின்பு, ஜனவரி 15ஆம் திகதி தமிழகக் கடல் எல்லையை அடைந்ததும், தளபதி கிட்டுவையும் அவரது தோழர்களையும் சரணடையுமாறு இந்தியக் கடற்படையினர் மிரட்டினர். இந்தியாவின் பயமுறுத்தலுக்கு அடிபணிய மறுத்த கிட்டுவும், அவனுடனிருந்த ஒன்பது போராளிகளும் தமது கப்பலைத் தகர்த்தழித்து வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.
தளபதி கேணல் கிட்டுவின் நினைவாக தலைவர் பிரபாகரன் விடுத்த இரங்கல் செய்தியில், “நான் கிட்டுவை ஆழமாக நேசித்தேன். தம்பியாக, தளபதியாக, எனது சுமைகளைத் தாங்கும் இலட்சியத் தோழனாக நான் அவனை நேசித்தேன். இது சாதாரண மனித பாசத்திற்கு அப்பாலானது. ஒரே இலட்சியப் பற்றுணர்வில், ஒன்றித்த போராட்ட வாழ்வில் நாம் பகிர்ந்து கொண்ட அனுபவத்தில், ஒருவரை ஒருவர் ஆழமாக இனம் கண்ட புரிந்துணர்வில் வேரூன்றி வளர்ந்த நேயம் அது.
அவனுள் ஒரு அபூர்வம் இருந்ததை நான் ஆரம்பத்திலிருந்தே கண்டு கொண்டேன். அது அவனது அழகான ஆளுமையாக வளர்ந்தது. ஒரு சுதந்திர வீரனுக்குரிய அனைத்துச் சிறப்பியல்புகளும் அவனிடம் இருந்தன. அதனால் அவன் ஒரு அற்புதமான இலட்சியவாதியாக வாழ்ந்தான்; போராடினான்; அனைத்து மக்களது இதயங்களையும் கவர்ந்தான். போர்க் களத்தில் வீரனாகவும், பொதுமக்களின் தோழனாகவும், எங்கும் எல்லாவற்றிலும், எல்லோரிடமும் அவனது ஆளுமையின் வீச்சு நிறைந்திருந்தது.
கிட்டு ஒரு தனிமனித சரித்திரம். நீண்ட ஓய்வில்லாத புயலாக வீசும் எமது விடுதலை வரலாற்றில் ஒரு காலத்தின் பதிவு.
வங்கக் கடலில் பூகம்பமாக அவனது ஆன்மா பிளந்தது. அதன் அதிர்வலையால் எமது தேசமே விழித்துக் கொண்டது.” எனக் குறிப்பிட்டார்.)
கலைஞர் கருணாநிதியுடன் சந்திப்பு
இந்தியாவிலே பொதுத் தோதல் 1989 டிசம்பரில் நடைபெற்றது. அதில் காங்கிரஸ் கட்சி தோற்கடிக்கப்பட்டது; ரஜீவ் காந்தி பதவி விலகினார். வீ.பீ.சிங் புதிய பிரதமரானார். வீ.பீ.சிங் அவர்களுடைய நிர்வாகத்தைப் பொறுத்த வரையிலே ரஜீவ் காந்தி சிறீலங்காவில் தலையிட்டமை ஒரு பாரிய இராஜதந்திரத் தவறுதலாகக் கொள்ளப்பட்டது. ரஜீவ் காந்தி புரிந்த தவறு நீடித்துச் செல்லக் கூடாது என்பதில் சிங், உறுதியாக இருந்தார். சிறீலங்காவுடனும் ஏனைய அண்டை நாடுகளுடனும் நல்லுறவை நிறுவ விரும்பினார். இந்திய அமைதிப் படையைத் திருப்பி அழைக்கும் முயற்சி வேண்டுமென்றே தாமதப்படுத்துவதாகக் கருதிய சிங், 1990 மார்ச் 31 இற்கு முன்னர், இந்தியப் படைகள் மீளப் பெறப்படும் என்று கட்டளை பிறப்பித்தார். ஈ.பீ.ஆர்.எல்.எஃப் இன் மாகாண நிர்வாகமும் விரைவிலே செயலிழந்து செத்துவிடப்போகிறது என்பதையே சிங் அவர்களின் நடவடிக்கைகள் உணர்த்தின. இதனால் பதற்றமடைந்த பெருமாள் புதுடில்லிக்கும் சென்னைக்கும் ஓடிப்போய், சிறீலங்காவிலிருந்து இந்தியப் படைகளைத் திருப்பிப் பெறவேண்டாம் என்று, இந்தியத் தலைவர்களிடம் கெஞ்சினார். புதிய பிரதமர் சிங் அவர்கள், தலையிடாக் கொள்கையைக் கடைப்பிடிக்கவும் சிறீலங்காவுடன் நட்புறவு பூணவும் விரும்பினார். எனவே பெருமாள் அவர்களின் வேண்டுகோளை நிராகரித்தார். புதுடில்லியின் புதிய நிர்வாகத்திடமிருந்து அனுதாபம் பெறமுடியாத பெருமாள் சென்னைக்கு விரைந்தோடி, தமது மாகாண நிர்வாகத்தைக் காப்பாற்ற உதவுமாறு முதலமைச்சர் மு. கருணாநிதி அவர்களை வேண்டினார். ஈழத் தமிழர் மட்டில் இந்திய இராணுவம் நடந்து கொண்ட விதத்தை வெளிப்படையாகக் கண்டித்த கருணாநிதி அவர்கள், விடுதலைப் புலிகளுடன் பெருமாள் இணக்கத்துக்கு வந்து, வடக்கு, கிழக்கு மாகாண நிர்வாகத்தைப் புலிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என்று புத்திமதி கூறினார். கருணாநிதி அவர்கள் ஒரு மத்தியஸ்தராக இருந்து, இணக்கம் ஒன்றை ஏற்படுத்தித் தரவேண்டும் என்று கருணாநிதியிடம் பெருமாள் கெஞ்சினார். இத்தகைய சூழலிலேயே, தமிழ்நாட்டு முதலமைச்சர் கருணாநிதியிடம் இருந்து நாம் இருந்த விடுதி அறைக்கு அவசர தொலைபேசி அழைப்பு வந்தது. நாம் சென்னையில் இருந்த காலத்தில் கருணாநிதி அவர்களை பாலாவுக்கு நேரடியாகத் தெரியும். கூடுதலான அளவு விரைவாக, சென்னை வருமாறு, கருணாநிதி பாலாவைக் கேட்டார். என்ன விடயம் என்பதை அவர் வெளியிடவில்லை. ஆனால், விடயம் மிக அவசரமானதும் முக்கியமானதுமாகும் என்று மறைமுகமாகக் குறிப்பிட்டார். தமிழ் நாட்டுப் பலம் மிக்க முதலமைச்சரின் வேண்டுகோளைப் புறக்கணிக்க பாலாவால் முடியவில்லை. ஆகவே இணங்கினார். பிரபாகரன் அவர்களிடமிருந்தும் பிரேமதாசா அவர்களிடமிருந்தும் அனுமதி பெற்று, இரண்டு நாட்களில், பாலாவும் நானும் யோகியும் விமானம் மூலம் சென்னை சென்றோம்.
சென்னையிலே பலத்த பாதுகாப்புடன் ஒழுங்கு செய்யப்பட்ட துறைமுக விருந்தினர் இல்லத்தில் நாம் தங்கியிருக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முதலமைச்சரும் அவருடைய மருமகன் முரசொலி மாறனும், நாம் அங்கு தரித்திருந்தபோது மூன்று தடவை எம்மைத் தரிசித்தார்கள். வடக்கு – கிழக்கு மாகாண சபை மீளக் கூட்டப்பட்டால், ஈ.பீ.ஆர்.எல்.எஃப் உடன் அதிகாரத்தைப் பங்கிடப் புலிகள் சம்மதிப்பார்களா என்று கருணாநிதி விசாரித்தார். சபையில் சரிபாதி இருக்கைகளை புலிகளோடு பங்கிட ஈ.பீ.ஆர்.எல்.எஃப் தயார் என்று அவர் தெரிவித்தார். இது வடக்கு-கிழக்கு மாகாண நிர்வாகத்தில் புலிகள் சரிபாதி பங்குபற்ற வழிகோலும் என்றும் அவர் விளக்கினார். புலிகள் புதிய தேர்தலுக்கு முகம் கொடுக்கத் தயாராக இருப்பதாக முதலமைச்சருக்கு விளக்கிய பாலா, தமிழீழ மக்களே தங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். இந்திய ஆக்கிரமிப்பு இராணுவத்துடன் கூட்டுச் சேர்ந்த ஈ.பீ.ஆர்.எல்.எஃப் இன் ஆயுதம் தரித்த உறுப்பினர்கள் தமிழ் மக்களுக்கு எதிராகப் புரிந்த குரூரக் குற்றங்கள் பற்றிய விரிவான விளக்கத்தைக் கருணாநிதி அவர்கள் முன்னிலையில் பாலா விபரித்தார். பெருமாளின் நிர்வாகம் புரிந்த தவறான செயல்களுக்காக ஈழத் தமிழ் மக்கள் அதை வெறுத்து ஒதுக்குவதாக பாலா எடுத்துரைத்தார். முறை தவறிய தேர்தல் வழிகளால் அதிகாரத்துக்கு வந்த ஈ.பீ.ஆர்.எல்.எஃப், இந்திய அமைதிப் படையின் கைப் பொம்மையாக இயங்கியது. இந்திய இராணுவமும் ஈ.பீ.ஆர்.எல்.எஃப் இன் ஆயுதக் குழுக்களும் புரிந்த தாங்க முடியாக் குரூரக் கொடுமைகள் காரணமாக, புலிகளே அதிகாரத்துக்கு வரவேண்டும் என்று தமிழ் மக்கள் விரும்பினார்கள். தமிழர் தாயகத்தில் புதிய தேர்தல்கள் இடம்பெற்றால், விடுதலைப் புலிகள், பெருவெற்றி பெறுவது திண்ணம் என்று தமிழ்நாட்டு முதலமைச்சர் நம்பும் வண்ணம் பாலா எடுத்துரைத்தார். இறுதியில் புலிகளின் நிலைப்பாட்டைக் கருணாநிதி அங்கீகரித்தார். கூட்டு நிர்வாகத்தை வலியுறுத்துவதைத் தவிர்த்தார். இந்தச் சந்திப்புக்களின்போது, வடக்குக் கிழக்கு நிலவரம் பற்றிய விரிவான மதிப்பீட்டையும் பாலா வழங்கினார். கருணாநிதி அவர்கள் ஆழமாக மனக் கலவரமடைந்து காணப்பட்டார். யாரும் அறியாத வண்ணம் முதலமைச்சருடன் நடந்த இந்தச் சந்திப்புகள் தவிர பல விடுதலைப் புலி ஆதரவாளர்களையும், வைகோ, வீரமணி போன்ற தமிழ்நாட்டுத் தலைவர்களையும் நாம் சந்தித்தோம். எமது ஐந்து நாள் பயண முடிவில் நாம் சென்னையில் இருந்து புறப்படுமுன் செய்தியாளர் மாநாடு ஒன்றும் இடம்பெற்றது.
புலிகளின் இரு கோரிக்கைகள்
தென்னிலங்கை ஜே.வி.பி கிளர்ச்சிகளை 1990 தொடக்கத்திலேயே பிரேமதாசா அரசு செவ்வையாக அடக்கியிருந்தது. சிறீலங்கா அரச படைகளுக்கும் புலிகளுக்கும் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டதால், வடக்கிலே போரும் முடிவுக்கு வந்திருந்தது. இந்திய இராணுவம் தனது தாக்குதல் நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டு வந்திருந்தது. படைகள் திரும்பிச் செல்லும் முயற்சியும், மார்ச் மாத இறுதிக்குள் முடிவுற வேண்டும் என்பதால், வேகமாக நடந்து கொண்டிருந்தது. இந்தியப் படை விட்டு விலகும் வெற்றிடங்களில் விடுதலைப் புலிகள் நிலைபெற்றனர். இலங்கையில் அமைதியும் உறுதியும் நிலவியது.
கொழும்பு அமைதிப் பேச்சுவார்த்தைகள் அரசுத் தலைவருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே தனிப்பட்ட பேச்சுவார்த்தை அமர்வுகளாக அமைந்தன. ஹமீது அவர்கள் எமது விடுதிக்குக் கிரமமாக வந்தார். அரசியல் தீர்வு தொடர்பான விடயங்கள் மீது கலந்துரையாடல்கள் தொடர்ந்தன. மாகாண சபைத் தேர்தல்களில் பங்குபற்ற விடுதலைப் புலிகள் சம்மதித்து இருந்ததால், பேச்சுவார்த்தையில் பெரிதும் அலசப்பட்ட விடயங்கள் அரசியல் யாப்பு மீதான ஆறாவது திருத்தச் சட்டம் பற்றியதாகவும், பெருமாளின் மாகாண நிர்வாகத்தைக் கலைப்பது தொடர்பாகவும் இருந்தன. இந்த இரண்டு கடினமான விடயங்களும், விடுதலைப் புலிகளுக்கும் பிரேமதாசா ஆட்சிக்கும் இடையே கடும் பிரச்சினையைத் தோற்றுவிப்பனவாக அமைந்தன.
சிறீலங்காவின் 1978ம் ஆண்டு அரசியல் யாப்பின் ஆறாவது சட்டத்திருத்தமானது சிறீலங்கா அரசின் ஒற்றையாட்சித் தன்மையை வலியுறுத்துவதாகவும் பிரிவினை உரிமையைத் தடுப்பதாகவும் அமையும் மோசமான சட்டவாக்கமாகும். அது 1983ஆம் ஆண்டு இனக்கலவரங்களை அடுத்து, சிங்கள பௌத்த தீவிரவாதிகளைத் திருப்திப்படுத்துவதற்காக, ஜெயவர்த்தனாவால் பிரகடனம் செய்யப்பட்டது. இந்தக் கொடிய சட்டத்தின்படி, சுதந்திரத் தமிழ் அரசுக்கான பிரிவினை அரசியலை விதந்துரைக்கும் அல்லது ஆதரிக்கும் எவரும் கடும் தண்டனைக்கு உள்ளாக்கப்படலாம்; அவருடைய குடியுரிமை பறிக்கப்படலாம்; சொத்துடமையும் பறிமுதல் செய்யப்படலாம். நாடாளுமன்றம், மாகாணசபை, நகரசபை போன்ற அரச நிறுவனம் எதற்கும் தேர்ந்தெடுக்கப்படும் அனைத்து உறுப்பினர்களும் ஒற்றையாட்சி அரசுக்கு விசுவாசப் பிரமாணம் செய்ய வேண்டும். ஆனால் ஒற்றையாட்சி அரசுக்கு, தாம் எந்தச் சந்தர்ப்பத்திலும் விசுவாசப் பிரமாணம் செய்யமுடியாது என்று, பிரேமதாசாவிடமும் ஹமீதிடமும் விடுதலைப் புலி அணியினர் தெரிவித்தார்கள். இந்தச் சட்டவாக்கம் ஒடுக்குமுறையானது எனவும், அரசியல் தெரிவு, பேச்சுரிமை ஆகிய அடிப்படைச் சுதந்திரங்களை நசுக்குவதாகவும் இருப்பதாகப் புலிகள் வாதிட்டார்கள். சுயநிர்ணய உரிமைத் தத்துவத்தில் புலிகள் உறுதியான நம்பிக்கை கொண்டிருப்பதாகவும், இந்தச் சட்டபூர்வமான உரிமை தமிழ் மக்களுக்கு உரித்தானது என்றும் அவர்கள் மேலும் அடித்துக் கூறினார்கள். சுயநிர்ணய உரிமையானது, மக்கள் தங்கள் அரசியல் தலைவிதியைத் தாங்களே தீர்மானிக்கும் தெரிவுச் சுதந்திரத்தைத் தெளிவாக அறிவிப்பது என்றும், இது பிரிவினையை முன்னெடுப்பது அல்ல என்றும் புலி அணியினர் குறிப்பிட்டார்கள். ஒருவர் தமது அரசியல் எதிர்காலத்தைத் தெரிவு செய்யும் உரிமையைத் தடை செய்யும் ஆறாவது சட்டத்திருத்தம் ஒழிக்கப்படாவிட்டால், விடுதலைப் புலிகள் மக்களாட்சி அரசியல் நீரோட்டத்தில் கலந்து கொள்ள மாட்டார்கள் என்றும் தேர்தலில் பங்கெடுக்க மாட்டார்கள் என்றும் பிரேமதாசாவிடம் புலிகள் தெரிவித்தார்கள்.
ஒற்றை ஆட்சியை ஓம்பும் சிங்களத் தேசியவாதியான பிரேமதாசாவுக்கு விடுதலைப் புலிகளின் கோரிக்கை பிடிக்கவில்லை. அதே சமயம் இவ்விடயத்தை ஒட்டி, பேச்சுவார்த்தை தோல்வி காண்பதையும் அவர் விரும்பவில்லை. விடுதலைப் புலிகளை மக்களாட்சி அரசியலுக்குள் கொண்டு வந்து இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு வேறு மாற்று வழி கிடையாது என்றால், ஆறாவது திருத்தச் சட்டத்தைக் கைவிடத் தாம் தயார் என்று புலிகளுக்கு உறுதியளித்தார். ஆனால், நாடாளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை வாக்கு இல்லாமல் அந்த சட்டத் திருத்தத்தை ரத்துச் செய்ய முடியாது என்பதோடு, அந்தப் பெரும்பான்மை அவரிடம் இல்லையென்பதால், அதை ரத்துச் செய்வது தம்மால் முடியாத காரியம் என்பதை அவர் உள்ளூர அறிந்திருந்தார். மேலும், சிங்கள பௌத்த சக்திகள் போர்க் கொடி தூக்கும் என்பதும் அவருக்குத் தெரியும். பிரேமதாசா, இருதலைக் கொள்ளி எறும்பானார். ஆறாவது சட்டத்திருத்தத்தை ரத்துச் செய்வது பற்றி பாலா குறிப்பிடும்போதெல்லாம் அவர் முகத்தில் ஆற்றாமை படர்வதை நான் அவதானித்திருக்கிறேன்.
வடக்கு-கிழக்கு மாகாண சபையைத் தாமதம் இன்றிக் கலைத்து விடவேண்டும் என்று விடுதலைப் புலி அணியினர் வற்புறுத்தினர். ஈ.பீ.ஆர்.எல்.எஃப் ஆனது தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட அமைப்பு அல்ல என்றும், இந்திய அமைதிப் படையின் கைப்பொம்மை ஆட்சியாக நிறுவப்பட்டது என்றும், வடக்குக் கிழக்கு நிர்வாகத்தை நடத்த அதற்குச் சட்டத் தகைமை கிடையாது என்றும் வாதிட்டனர். மாகாண சபையைக் கலைத்துவிட்டு, புதிய தேர்தலை நடத்துமாறும், அவ்வாறு செய்தால், விடுதலைப் புலிகளுக்கு இருக்கும் மக்களாதரவை உலகுக்கு எடுத்துக் காட்டலாம் என்றும் உறுதியாகக் கூறினார்கள். ஆனால், சபையைக் கலைக்கும் விடயத்தில் பாரதூரமான அரசியல் மற்றும், சட்டப் பிரச்சினைகள் இருந்ததால், அதற்கு இணங்க, பிரேமதாசா தயங்கினார். செவ்வையான காரணங்கள் இருந்தாலன்றி மாகாண சபைகளை அரசுத் தலைவர் கலைக்க முடியாதபடி 13ஆவது திருத்தச் சட்டத்தில் உள்ள விதிகள் தடுத்தன.
விடுதலைப் புலிகள் முன்வைத்த இரண்டு பிரச்சினைகளும் பேச்சுவார்த்தையை மேலே நகர விடாதவாறு தடுத்தன. ஆனாலும் இரு தரப்பினரும் ஒருவருக்கு ஒருவர் எதிராக நின்று மோதத் தயாராக இருக்கவில்லை. புலிகளுக்கும் பிரேமதாசா நிர்வாகத்துக்கும் இடையே நட்புடனான நல்லுறவு நிலவியது. பொறுமையுடனும் விடா முயற்சியுடனும் கட்டியெழுப்பப்பட்ட புதிய உறவு இது. இதைப் பங்கப்படுத்தும் வகையில் கூட்டாளிகளிடையே பிளவு ஏற்படாது ஹமீது அவர்கள் பார்த்துக் கொண்டார்.
வாகரையில் மாநாடு
அதே சமயம், அம்பாறை, மட்டக்களப்பில் இருந்து வெளியேறிய இந்தியப் படைகள், வட மாவட்டங்களான முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், கிளிநொச்சி ஆகிய பிரதேசங்களில் இருந்தும் வெளியேறின. யாழ்ப்பாணத் தீபகற்பத்திலும் திருகோணமலை மாவட்டத்திலும் கணிசமான தொகை இந்தியப் படையினர் தொடர்ந்தும் ஆக்கிரமித்திருந்தனர். இந்தியப் படைகள் வெளியேறிய வட மாவட்டங்களில் தமிழ்த் தேசிய இராணுவத்தின் நிலைகளைத் துடைத்தொழிப்பதில் விடுதலைப் புலிகளின் படையணிகள் ஈடுபட்டிருக்க விடுதலைப் புலிகளின் மக்கள் முன்னணி, கிழக்கு மாவட்டங்களான மட்டக்களப்பிலும் அம்பாறையிலும் தனது கட்சிக் கட்டமைப்பை விரிவுபடுத்தத் தொடங்கியது. மக்கள் முன்னணியின் அங்குரார்ப்பண மாநாடு மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வாகரை என்ற கரையோரப் பட்டினத்தில் 1990 பெப்ரவரி 24 இற்கும் மார்ச் 21 இற்கும் இடையே நடைபெற்றது. பாலாவும் யோகரெத்தினம் யோகியும், வேறு போராளிகளும் நானும் சிறீலங்கா உலங்குவானூர்தி மூலம் மட்டக்களப்பு நகருக்குச் சென்று அங்கிருந்து வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாநாட்டுக்குத் தரைப் பயணம் புரிந்தோம். வடக்குக் கிழக்கின் அனைத்து மாவட்டங்களிலும் இருந்த மூத்த விடுதலைப் புலி அரசியற் போராளிகள் வானூர்திகளில் கொண்டுவரப்பட்டனர். இயற்கை அழகுக்கும் அமைதிக்கும் பெயர்பெற்ற வாகரையில் அவர்கள் அனைவரும் குழுமி இருந்தனர்.
இந்தியாவுடனான போர் இறுதியாக முடிந்து, இந்தியப் படைகள் தமிழர் தாயகத்தில் இருந்து வெளியேறிக் கொண்டிருப்பதால் கிடைத்த நிம்மதியோடு மக்கள் முன்னணிப் பிரதிநிதிகள் வாகரையிலே உவகை உணர்வில் மிதந்தார்கள். அங்குரார்ப்பண மாநாட்டுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட வாகரை வாடி வீடு, கடலை அடுத்திருந்த அழகிய வெண் மணற் பரப்பில் அமைந்திருந்தது. இதுவும் பிரதிநிதிகளிடையே நிலவிய உவகை உணர்வுக்கு உரமூட்டியது. மாநாட்டு நிகழ்வுகள் ஒரு வாரம் நீடித்தது. இந்த நாட்களில் முக்கிய தேசிய, மற்றும் சமூக விடயங்கள் தொடர்பாக இரகசியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சாதி அடிப்படையில் சமூக அநீதிகளையும் வேறுபாட்டுக் கொடுமைகளையும் ஒழிக்க, மனப்பூர்வமான ஈடுபாடு காட்டவேண்டும் என்பது ஒரு தீர்மானம். பெண் விடுதலை மக்கள் முன்னணியின் வேலைத் திட்டத்தில் உள்ளடக்கப்படவேண்டும் என்பது இன்னொரு தீர்மானம். இவை இரண்டும் தீர்மானப் பட்டியலில் முதன்மை பெற்றன. சீதன நடைமுறை காரணமாக பெண்கள் சுரண்டப்படுவதையும் துன்புறுத்தப்படுவதையும் அவமானப்படுத்தப்படுவதையும் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெண் பிரதிநிதிகள் வற்புறுத்தினார்கள். வடக்கு – கிழக்கு முழுவதிலும் மக்கள் முன்னணியை நன்கு நிறுவ வேண்டும் என்பதைப் பெருந்தொகைப் பிரதிநிதிகள் வற்புறுத்தினார்கள். புலிகளின் அரசியற் கட்சியில் பொது மக்கள் சம்பந்தப்படவேண்டும்; அவர்களே அரசியல் பங்களிப்பிலும் ஈடுபடவேண்டும்; இனி கட்சி அமைப்புக்கள் கிராம அடிமட்டத் தளத்திலும் நிறுவப்படவேண்டும்; மாகாணத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் வளர்த்தெடுக்கப்பட வேண்டும் என்றும் இணங்கப்பட்டது. இது தொடர்பாக உடனடியாகச் செயலில் இறங்கவும் தீர்மானிக்கப்பட்டது.
இந்திய அமைதிப் படையின் இறுதி அணி திருப்பி அழைக்கப்படும் தருணம் நெருங்கியபோது, வடக்கு கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் பெருமாள் பிரச்சினைக்குரிய நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டார். மார்ச் முதலாம் திகதியன்று, தீர்மானம் ஒன்றை அவர் முன்வைத்தார். வடக்கு கிழக்கு மாகாண சபை ஓர் அரசியல் சுயநிர்ணய சபையாக மாறி, சுதந்திரத் தமிழ் அரசுக்கான அரசியல் யாப்பை வரையும் பொறுப்பை ஏற்குமென்றும் அந்த அரசு ஈழ மக்களாட்சிக் குடியரசு என அழைக்கப்படுமென்றும் இத் தீர்மானம் கூறிற்று. இந்த முரட்டுத்துணிச்சலை ஒரு தன்னிச்சையான சுதந்திரப் பிரகடனமாகக் கொழும்பு அரசு கருதியது. பிரேமதாசா ஆத்திரம் அடைந்தார். ஆனால், இந்தியப் படைகள் திருகோணமலை மாவட்டத்தை விட்டு வெளியேறும் நிலையில் இருந்ததால், பெருமாளுக்கு எதிராக எந்த நடவடிக்கையையும் அவர் மேற்கொள்ளவில்லை. இந்திய அமைதிப் படை முற்றாக வெளியேறும் வரை அவர் காத்திருந்தார். திட்டமிடப்பட்டதற்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக, அதாவது மார்ச் 25ஆம் திகதியன்று, இந்தியப் படையின் கடைசி அணி, திருகோணமலைத் துறைமுகத்தை விட்டு வெளியெறியது. பெருமாளும் ஈ.பீ.ஆர்.எல்.எஃப் இன் ஏனைய தலைவர்களும், கடைசி இந்தியப் படைகளுடன் இந்தியாவுக்கு ஓடினார்கள்.
இந்திய இராணுவத்தின் வெளியேற்றத்தோடு, வடக்கு கிழக்கில் அனேகமாக அனைத்து மாவட்டங்களையும் விடுதலைப் புலிகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்கள். தமிழர் தாயகம் மீது தாம் நடத்தும் நிர்வாகக் கட்டுப்பாட்டுக்குச் சட்ட ஆதரவு வேண்டும் என்று விடுதலைப் புலித் தலைமை விரும்பியது. இத்தகைய சூழ்நிலையிலே அரசுத் தலைவரைச் சந்தித்த புலித் தூதுக்குழு மாகாண சபையைக் கலைத்துவிட்டு, புதிய தேர்தல்களை நடத்துமாறு அவரைக் கேட்டது. சபையைக் கலைப்பதற்கு பெருமாள் அவர்களுடைய தனியரசுப் பிரகடனம் ஒன்றே போதும் என்று நாம் பிரேமதாசாவிடம் கூறினோம். நாடாளுமன்றத்தில் ஒரு திருத்தச் சட்டமே தேவையாக இருந்தது. இதை, பிரேமதாசாவின் ஆளும் கட்சியால் எளிதாகப் பெற்றிருக்க முடியும். ஆனால் அரசுத் தலைவர் தடுமாறினார். பிரேமதாசா அவர்கள் வேண்டுமென்றே தமது வாக்குறுதிகளை நிறைவேற்றாது விடுகிறார் என்பது விடுதலைப் புலிகளுக்குத் தெளிவாகத் தெரிந்தது. புதிய தேர்தல்கள் நடத்தப்பட்டால், விடுதலைப் புலிகள் பெருவெற்றி பெற்று, தமிழர் தாயகத்தில் சட்டத்துக்கமைவான நிர்வாகத்தை நிறுவுவார்கள் என்பது பிரேமதாசாவுக்கு நன்கு தெரியும். அப்படி நடைபெறும் பட்சத்தில், அனைத்துலக அங்கீகாரம் புலிகளுக்குக் கிடைத்து விடும் என்று அவர் அஞ்சினார். இது, சுயாட்சிக்கான மேலதிக அதிகாரங்களைக் கோருவதற்கு தூண்டுவதாகிவிடும் என்றும் பிரேமதாசா அஞ்சினார்.
பிரேமதாசாவின் இரகசியத் திட்டம்
அரசியல் சுதந்திரத்துக்கும் சுதந்திர அரசுக்கும் மாற்றீடு ஒன்றைத் தேடுவது விடுதலைப் புலிகளின் அரசியல் இலட்சியத்திற்கு விரோதமானதாக அமையுமா என்று பாலாவுடன் தனியாக இருக்கும்போது, நான் விசாரித்ததுண்டு. விடுதலைப் புலிகளின் அரசியல் அணுகுமுறையில் முரண்பாடு எதுவும் இல்லை என்று பாலா பதிலளித்தார். புலிகளின் இறுதி இலக்கானது, சிங்கள மக்களுடன் இணைந்து வாழும் பரிசோதனை முயற்சிகள் அனைத்தும் தோல்வி காணும் பட்சத்தில், சுயநிர்ணய உரிமை அடிப்படையில் சுதந்திர அரசை நிறுவுவதே என்று பாலா விளக்கினார். பிரேமதாசா அவர்கள் முட்டுக்கட்டைகளை நீக்கினால், அதாவது மாகாணசபையைக் கலைத்து, ஆறாவது சட்டத் திருத்தத்தைக் கைவிட்டு, புதிய தேர்தல்களை நடத்தினால், வடக்கு – கிழக்கு மாகாண சபைத் தேர்தல்களுக்கு முகம் கொடுக்க விடுதலைப் புலிகள் முழுமையாகத் தயாராக இருக்கிறார்கள் என்று கூறினார். விடுதலைப் புலிகளைப் பொறுத்த வரையிலே சிங்கள மக்களுடன் இணைந்து வாழ்வது சாத்தியமா என்பதைப் பரீட்சித்துப் பார்க்கும் ஒரு முக்கிய சந்தர்ப்பம் இதுவாகும். இந்த மாற்று வழியைக் கடைப்பிடிப்பதால், புலிகள் எதையும் இழக்கப் போவதில்லை. தேர்தலில் புலிகள் வென்றால், தமிழர் தாயகம், தமிழ்த் தேசியம், என்ற எண்ணக்கருக்களுக்கு அவர்கள் உறுதியான நிதர்சன வடிவம் கொடுப்பார்கள். இவையே அவர்களுடைய வெளிப்படையான அரசியல் இலட்சியங்கள் என்றும் பாலா தெளிவுபடுத்தினார்.
பிரேமதாசாவைப் பொறுத்த வரையிலே, விடுதலைப் புலிகளை வழிப்படுத்த அவர் தமது சொந்தத் திட்டம் ஒன்றை வகுத்திருந்தார். அதற்கேற்ப சபையைக் கலைப்பதற்குத் தாமதித்தார்; புதுத்தேர்தல் வாய்ப்பையும் தள்ளிப் போட்டார். ஆறாவது திருத்தச் சட்டத்தை நீக்குவது தொடர்பான முக்கிய விடயத்தைக் கண்டும் காணாதவராகப் புறக்கணித்தார். நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெறுவது முடியவே முடியாது என்று வாதிட்டார். இறுதியில், பிரேமதாசா அவர்களுடன் தனிப்பட்ட சந்திப்புகளை நடத்துவதால் யதார்த்த அரசியல் தீர்வுகளுக்கு அதிகம் பயன் கிடைக்கப் போவதில்லை என்பது தெளிவாயிற்று. மிகுந்த பொறுமையுடன் அவருடைய நீண்ட பிரசங்கங்களைச் செவிமடுப்போம். ஒரே மக்கள், ஒரே தேசம் என்ற அவருடைய உரையில் அவருடைய மும்மணிக் கோட்பாடுகளோடு அனைத்து இனங்களும் அமைதியாகவும் ஒத்திசைவாகவும் வாழலாம் என்ற தத்துவமும் எப்போதும் இருக்கும்.
ஹமீது அவர்கள் எமது விடுதி அறைக்கு வந்து, பாலாவுடனான தமது பிரத்தியேகச் சந்திப்பின் போது, விடுதலைப் புலிகளிடமிருந்து ஆயுதக் களைவு நடத்துவது பற்றிப் பேச்சைத் தொடக்கியபோது, பிரேமதாசாவின் இரகசியத் திட்டம் மெதுவாக அம்பலமாயிற்று. மே மாத நடுப்பகுதியில் ஒரு மிகவும் வெப்பமான நாளன்றே இந்தக் கலந்துரையாடல் நடந்தது; விவாதப் பொருளும் சூடானது. எனவே விவாதமும் சூடு பிடித்தது. அரசுத் தலைவரின் அச்சங்களையும் அங்கலாய்ப்புக்களையுமே தாம் பிரதிபலிப்பதாக ஹமீது கூறினார். “தேர்தல் சுதந்திரமாகவும், நியாயப்படியும் நடைபெற வேண்டும் என்று பிரேமதாசா விரும்புகிறார்; அந்தத் தேர்தலில், ஈ.பீ.ஆர்.எல்.எஃப் உட்பட, அனைத்துக் கட்சிகளுக்கும் குழுக்களுக்கும் போட்டியிட சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என்றும் அரசுத் தலைவர் கருதுகிறார். ஆனால், வடக்கு – கிழக்கிலே, விடுதலைப் புலிகள் ஆயுதங்களோடு ஒரு மேலாண்மை நிலையை வகித்தால், அப்படியான தேர்தல் சாத்தியமாகாது. ஆகவே புதிய தேர்தல் நடத்துவதானால், அதற்கு முன், புலிகள் ஆயுதங்களைக் கையளிக்க வேண்டும். இதுவே அரசுத் தலைவருடையதும், ரஞ்சன் விஜேரத்னா போன்ற சில அமைச்சர்களுடையதும் கருத்தாகும்.” என்று அமைதியாக ஆனால் உறுதியாக ஹமீது அவர்கள் தெரிவித்தார்.
விடுதலைப் புலிப் பிரதிநிதிகளை அரசுத் தலைவர் தனிமையில் சந்தித்தபோது, ஆயுதக் களைவு விடயத்தை ஏன் குறிப்பிடவில்லை என்று பாலா கேட்டார். அதே சமயம் இந்தியப் படைகள் வெளியேறிய பின், புலிகளுக்கு எதிரான வேறு தமிழ்க் குழுக்களுடன் தனியான சந்திப்புக்களை பிரேமதாசா நடத்தி வருவதாகவும் பாலா முறையிட்டார். வடக்கு – கிழக்குத் தமிழ் மக்களின் பாதுகாப்பு ஏற்பாட்டைப் பொறுத்தவரையிலே புலிகள் ஆயுதங்களை வைத்திருப்பது ஒரு முக்கிய அம்சமாகக் கருதப்படவேண்டும் என்று பாலா விளக்கமும் அளித்தார். நிரந்தர அரசியல் தீர்வு மூலம் நிரந்தர அமைதி நிறுவப்படுமானால் அந்தப் பாதுகாப்பு அமைப்புக்குப் புலிகளே பொறுப்பாக இருப்பார்கள். சட்டம் ஒழுங்கு ஆகியவற்றைப் பேண, பயிற்சி வழங்கப்பட்ட பாதுகாப்புப் படை ஒன்று, ஆயுதங்களுடன் புலிகள் வசம் இருக்க வேண்டும். தமிழ் மக்களுக்கு உறுதியான பாதுகாப்பை வழங்கக் கூடிய ஆளணி, தளபாடம், அனுபவம் ஆகியவை புலிகளிடம் உண்டு என்பதையும் திகைத்து நின்ற அரச அணித் தலைவரிடம் பாலா தெளிவுபடுத்தினார். “உங்களுடைய அரசுத் தலைவர் புதிய தேர்தலுக்கான தடைகளை நீக்க, அதாவது சபையைக் கலைத்து, ஆறாவது திருத்தச் சட்டத்தை நீக்கத் தயாராக இல்லை. இந்தக் கட்டத்தில் புலிகளிடமிருந்து ஆயுதக் களைவு நடத்த வேண்டும் என்பது காலத்துக்கு முந்திய அவசர முடிவாகும்; மேலும் மாகாண சபை மட்டுமே ஒரு நிரந்தரத் தீர்வுக்கான நல்ல தளமல்ல; மாகாண சபைத் தேர்தலில் புலிகள் நிற்க முன்வருவது, அதை ஒரு இடைக்கால ஏற்பாடாக ஏற்பதேயன்றி, நிரந்தரத் தீர்வாக ஏற்று அல்ல; சிங்கள மக்களுடன் அமைதியாகவும் ஒத்திசைவாகவும் இணைந்து வாழ விரும்புகின்றோம்; மக்களாட்சி வழிமுறைகளை நிறுவி மக்களாட்சி அரசியல் நடைமுறைகளை பேண விரும்புகின்றோம். அனைத்துக் குழுக்களும் கட்சிகளும் தேர்தலில் பங்கெடுக்க வாய்ப்பு வழங்கும் வகையில் சுதந்திரமான, நியாயமான அடிப்படையிலான தேர்தலை நடத்துவதற்கு அரசுடன் நாம் ஒத்துழைப்போம். மக்களின் பிரதிநிதிகளாக நாம் தேர்ந்தெடுக்கப்பட்டதும், தமிழ் மக்களின் பாதுகாப்பு ஏற்பாடுகள் என்ற முக்கிய பிரச்சினை சம்பந்தமாக நிரந்தரத் தீர்வு காண்பது பற்றி நாம் பேச்சுவார்த்தை நடத்தலாம்.” என்று புலிகளின் நிலைப்பாட்டை பாலா எடுத்துரைத்தார். ஹமீது அவர்கள் கருத்துத் தெரிவிக்கும் போது, மாகாண நிர்வாகக் கட்டுமாணத்தின் ஓர் அம்சமாக மாகாணக் காவல்துறையை அமைத்து, புலிப் போராளிகளைக் காவல் அதிகாரிகள் ஆக்கலாமே என்று கூறினார். “அது சாத்தியப்படும் பட்சத்திலும், வடக்கு – கிழக்குக்கான பத்தாயிரம் பேர் அடங்கிய காவல் துறையை உருவாக்க விடுதலைப் புலிகளுக்கு மேலும் ஆயுதங்களும், ஆட்களும் தேவைப்படும்,” என்று பாலா கருத்துத் தெரிவித்தார். “அப்படிப் பார்த்தால், விடுதலைப் புலிகளின் காவல்துறைப் பிரிவுக்கு, அரசுத் தலைவர் மேலும் ஆயுதங்களை வழங்க வேண்டி இருக்கும்” என்று பாலா கேலியாகக் குறிப்பிட்டார். விடுதலைப் புலிகளிடமிருந்து ஆயுதங்கள் களையப்பட வேண்டும் என்று தொடங்கிய விவாதம், புலிகளுக்கு திரும்பவும் ஆயுதம் வழங்கும் கட்டத்துக்குத் தாவியது. எமது விடுதி அறையை விட்டு வெளியேறும் போது, ஹமீது அவர்கள் வெகுவாகத் தளர்ந்து போயிருந்தார்.
முரண்பாட்டுப் பாதையிலே பிரேமதாசா செல்கிறார் என்பது எமக்குப் புரிந்தது. சிறீலங்கா நாட்டின் ஒற்றையாட்சித் தகைமை மீதான இறுக்கமான பிடி இளக வேண்டுமானால், ஆறாவது திருத்தச் சட்டம் நீக்கப்பட வேண்டும். ஆனால் அதைச் செய்ய பிரேமதாசா அவர்கள் தயாராக இல்லை. ஒற்றையாட்சி அரச வடிவுக்குள்ளேயே தீர்வைக்காண அவர் விரும்பினார். ஒரு வளைந்து கொடுக்காத தேசியவாதி என்பதால், ஒற்றையாட்சி அரசமைப்புக்கு மாற்றீடான எந்த ஆட்சி வகையையும் அவர் எதிர்த்தார். ஜே.வீ.பி கிளர்ச்சியை ஒடுக்கி, இந்தியப் படைகளையும் வெளியேற்றிய பின், புதியதொரு தலைவலியை அவர் தீர்க்க வேண்டி இருந்தது. விடுதலைப் புலிகளை எவ்வாறு சமாளிப்பது? அவர்களைச் சமாதான வழியில் அணைத்து, பிரதான அரசியல் நீரோட்டத்துக்குள் சேர்த்துக் கொள்ள இன்னமும் வாய்ப்பு இருந்தது. அதற்கு, முட்டுக்கட்டையாக இருந்த ஆறாவது திருத்தச் சட்டத்தை தூக்கி எறிய வேண்டும் அல்லது, எதிர்த்து நின்று இராணுவ ரீதியாகப் புலிகளை ஒடுக்கும் மாற்று வழியைக் கண்டு பிடிக்க வேண்டும். இரண்டாவது வழியையே அவருடைய கடும்போக்குடைய அமைச்சர்களும் இராணுவத் தலைமையும் விரும்பியது. அவர்களுடைய நெருக்குவாரத்துக்கு பிரேமதாசா வளைந்து கொடுத்தார்.
இக்கட்டான சூழ்நிலை ஒன்றில், தமக்குச் சாத்தியமான வெவ்வேறு வழிகளைப் பிரேமதாசா ஆராய்ந்தார். அது பற்றி அரசுத் தலைவரின் நம்பிக்கைக்குரியவரும், மதியுரைஞருமான பிரட்மன் வீரக்கூன் அவர்கள் குறிப்பிடும்போது, “அவருடைய நான்காவதும் இறுதியானதுமான, அதாவது சாம, பேத, தானம் தவிர்த்த தண்ட வழிமுறை, அரசுத் தலைவரின் கூற்றுப்படி கவுத்திலிய (சாணக்கிய) வழிமுறையாக அமைகிறது. இந்திய அமைதிப் படை குறுக்கே நிற்காதபடி நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டு விட்டது; புலிகள் களைத்துப் போய் விட்டார்கள்; ஓய்வும் புத்துயிர்ப்பும் பெற்ற சிறீலங்காப் படைகளை அவர்கள் மீது ஏவிவிட்டால், அவர்களை முற்றாக அழித்தொழித்து விடலாம்; வடக்கு – கிழக்கு மீதும், சிறீலங்கா முழுவதன் மீதும் சட்டம் – ஒழுங்கை நிலைநாட்டி, நல்லாட்சியையும் அமைதியையும் சுபீட்சத்தையும் நிறுவி விடலாம். அவருடைய வேணவாத் திட்டத்தில் இந்த இறுதி வழி, கவர்ச்சியாகத் தோன்றியிருக்க வேண்டும்.” என்கிறார். வீரக்கூன் சரியாகக் குறிப்பிட்டது போல, விடுதலைப் புலிகளை அழித்தொழிக்க இராணுவ வழிமுறையையே பிரேமதாசா தேர்ந்தெடுத்தார். ஆனாலும், ஒரு கபடத்தனமான வழி முறையையே அவர் நாடினார். விடுதலைப் புலிகளே பேச்சுவார்த்தையை முறித்துக் கொண்டு போரைத் தொடங்கியதாகப் பழி முடித்தார். வடக்கிலும் கிழக்கிலும் 1987 ஜுலையில் இருந்து பாசறைகளில் முடங்கிக் கிடந்த சிறீலங்கா ஆயுதப் படைகளை, கட்டுப்பாடின்றி வெளியேற்றி, அரசின் அதிகாரத்தை நிலைநாட்டுமாறு, எந்தவித எச்சரிக்கையும் இன்றி, அவர் அதிகாரம் வழங்கினார். ஜே.வீ.பி. கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான அண்மைக்கால வெற்றிகளால் பெற்ற தன்னம்பிக்கையோடு, இராணுவத் தலைமைப்பீடம் புலிகள் மட்டில் ஆக்ரோஷ உணர்வு காட்டி எதிர்த்து நின்றது. பல சம்பவங்கள், குறிப்பாகக் கிழக்கில் நிகழ்ந்தன. போர்நிறுத்த உடன்படிக்கையை அவை மீறின; பொறுமையைக் கைவிடும் அளவுக்கு விடுதலைப் புலிகளைச் சீண்டின.
கிழக்கு மாவட்டங்களில் உள்ள இராணுவத் தளங்களுக்கும் காவல் நிலையங்களுக்கும் பலம் ஊட்டும் பொருட்டு 1990 மே மாத இறுதியில் புதிய படையணிகளும் கூடுதலான காவல்துறையினரும், அங்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள். நகரங்களிலும் பட்டினங்களிலும் படைகளின் காவல் உலாக்கள் அதிகரிக்க, சிங்கள ஆயுதப் படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே முறுகல் நிலை கூர்மை அடைந்தது. எமது போராளிகளை இராணுவத்தினர் துன்புறுத்தும் காரமான ஆத்திரமூட்டும் சம்பவங்கள் பல இடம்பெற்றன. மட்டக்களப்பு இராணுவ முகாமுக்கு அருகே ஒரு சம்பவம் நடந்தது. இரண்டு மூத்த புலிப் போராளிகளின் ஆயுதங்களைப் பறித்தெடுத்த இராணுவத்தினர், பல மணிநேரம் தார் வீதியில், உச்சி வெய்யிலில் முழந்தாழிட்டு நிற்க அவர்களை நிர்ப்பந்தித்தார்கள். பெருந்திரளான மக்கள் முன்னிலையில் இது நடந்தது, அவமானம் தாங்காத ஒரு போராளி தனது சயனைட் குப்பியைக் கடித்து அந்த இடத்தில் மரணத்தை தழுவினார். அடுத்த போராளி மயங்கி விழும் வரை, இராணுவத்தினர் அவரைத் தாக்கியிருக்கிறார்கள். இத்தகைய கொடுமைகளும் சித்திரவதைச் சம்பவங்களும் அதிகரிக்க, புலிகளை வேண்டுமென்றே சீண்டி மோதச் செய்வதற்கு சிறீலங்கா அரச படைகள் முயல்வதை, புலித் தலைமை உணர்ந்தது. பாலா அந்தத் தருணத்தில் கொழும்பிலே இருந்தார். அரச படைகளைக் கட்டுப்படுத்துமாறு அரசுத் தலைவரிடம் வேண்டுகோள் விடுத்தார். ஆனால், பலன் எதுவும் கிடைக்கவில்லை. இந்தியப் படைகள் விட்டுச் சென்ற வெற்றிடத்தைப் படிப்படியாக நிரப்புமாறு இராணுவ உயர் பீடத்திற்குப் பிரேமதாசா கட்டளையிட்டிருப்பதை ஹமீது அவர்கள் மூலமாகப் பின்னர் அறிந்தோம். கிழக்கு மாவட்டங்களான திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறையில் முதலிலும், வடபகுதியில் பின்னரும் முழுக் கட்டுப்பாட்டை நிறுவுமாறு படையினருக்கு அவர் பணிப்புரை வழங்கி இருந்தார். இரண்டாவது ஈழப் போரைத் தவிர்க்க முடியாது என்று உணர்ந்த பிரேமதாசா, அதற்காகத் தமது ஆயுதப் படைகளைத் தயாராக்கினார்.
மோதலின் உடனடிக் காரணம் ஒரு சிறிய சம்பவமே. மட்டக்களப்பு காவல் நிலையத்தில் ஜுன் 10ஆம் திகதியன்று முஸ்லிம் பெண் ஒருவர் தொந்தரவு செய்யப்பட்டார். விடுதலைப் புலிகள் தலையிட்டு, காவல்துறையினரின் நடத்தையை கண்டித்தனர். இது விடுதலைப் புலிகளுக்கும் காவல் துறையினருக்கும் இடையே மோதலைத் தோற்றுவித்தது. இந்தச் சண்டை, விரிவடைந்து வடக்கு-கிழக்கின் தமிழ்ப் பகுதிகளில் விடுதலைப் புலிகளுக்கும் சிங்கள ஆயுதப் படைகளுக்கும் இடையே மோதல்களாக வடிவெடுத்தது. ஒரு முழு நிலைப் போர் வெடித்தது. மோதல்களைத் தவிர்க்கும் கடைசி நேர முயற்சியாக, ஜுன் 11ஆம் திகதி ஹமீது அவர்கள் விமானம் மூலம் யாழ்ப்பாணம் வந்தார். பலாலி விமானத்தளத்திற்கு வெளியே அவரை வரவேற்க பாலாவுடனும் வேறு போராளிகளுடனும் நான் கூடச் சென்றேன். சந்திப்பு இடம்பெறும் இடத்தை ஹமீது அவர்களுடைய வண்டி அடையுமுன், ஒழுக்கம் மீறிய சிங்கள இராணுவத்தினர் சிலர் அவருடைய வண்டியை நோக்கிச் சுட்டனர். எனினும், பிரபாகரன் அவர்களையும் வேறு புலித் தலைவர்களையும் ஹமீது அவர்கள் சந்தித்தார். போர் நிறுத்தம் ஒன்றை ஏற்பாடு செய்ய அவர் மேற்கொண்ட முயற்சி, போரைத் தொடரவேண்டும் என்ற உறுதி பூண்ட கிழக்கு மாகாண அரச படைகளின் பிடிவாதத்தால் தோல்வியில் முடிந்தது; ஹமீது ஒருவரைத் தவிர, அவருடைய அரசுத் தலைவரோ, கடும்போக்கு அமைச்சர்களோ அமைதியை விரும்பவில்லை. போர் தனது குரூர வேகத்துடன் மீளத் தொடங்கியபோது, பிரதிப் பாதுகாப்பமைச்சர் திரு. ரஞ்சன் விஜேரத்தினா நாடாளுமன்றத்திலே, “முழுமையாகப் புலிகள் மீது பாயப் போகிறேன். அவர்களை நாம் அழித்தொழிப்போம்,” என்று முழங்கினார். விடுதலைப் புலிகளுக்கும் பிரேமதாசா நிர்வாகத்துக்கும் இடையே இடம்பெற்ற பேச்சுவார்த்தை, இவ்வாறு தோல்வியடைந்தது.