தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றைச் சர்வதேச உலகிற்கு அறிமுகம் செய்து வைக்கும் நோக்குடன் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட War and Peace என்ற எனது நூல், பரந்துபட்ட தமிழ் மக்களும் படித்தறிந்து பயன்பெற வேண்டும் என வற்புறுத்தி, அதனைத் தமிழாக்கம் செய்து வெளியிடுமாறு என்னை ஊக்கப்படுத்தியவர் எனது மனைவி அடேல் பாலசிங்கம். முதற்கண் அவருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

ஆங்கில நூலின் பிரதிகளை முதன்முதலாக நான் வன்னிக்கு எடுத்துச் சென்று, தலைவர் பிரபாகரனிடமும் ஏனைய மூத்த தலைவர்கள், தளபதிகளிடம் கையளித்த போது அவர்கள் விடுத்த கேள்வி என்னவென்றால், “எப்பொழுது இந்நூல் தமிழில் வெளிவரப் போகின்றது” என்பதுதான். எனவே, இயக்கத் தலைமையின் விருப்பையும் நிறைவு செய்யும் நோக்குடன் இந்நூலைத் தமிழாக்கம் செய்தேன். தமிழ்ப் பதிப்பில் சில பகுதிகளை, குறிப்பாக வரலாற்று முக்கியத்துவம் பெற்ற சமர்களையும் தாக்குதல் நடவடிக்கைகளையும் சிறிய அளவில் விரிவுபடுத்தி விளக்கியிருக்கிறேன். சில முக்கிய சமர்கள் பற்றியும் தாக்குதல் நடவடிக்கைகள் பற்றியும் மேலதிக தகவல்கள், வரைபடங்கள் தந்துதவிய மூத்த தளபதிகளுக்கு எனது நன்றி.

இந்த நீண்ட நூலை கணினியில் அச்சடித்துத் தந்ததுடன், பக்கங்கள் அனைத்தையும் சிறப்பான முறையில் வடிவமைத்தவர் எனது பாசத்திற்குரிய தம்பி ரஞ்சித் (சி. ஐஸ்வர்யரஜித்). தனது நாளாந்த வேலைப் பளுவுடன், நீண்ட நேரத்தை ஒதுக்கி, மிகவும் கவனமாக, பொறுமையாக, நேர்த்தியாக அவர் ஆற்றிய நற்பணிக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள். விடுதலைப் புலிகளின் வீர வரலாறு எழுத்தில் பதியப்பட வேண்டும் என்பதிற் பேரார்வம் கொண்டவர் எமது இயக்கத்தின் நிதிப் பொறுப்பாளர் திரு. செ. வ. தமிழேந்தி அவர்கள். அத்துடன் அவர் தமிழ்மொழி வளர்ச்சியிலும் ஆழமான பற்றுள்ளவர். தனது பொறுப்புள்ள வேலைச் சுமையுடனும் இந்நூலைப் பக்கம் பக்கமாகப் பார்த்து எழுத்துப் பிழைகளைத் திருத்தித் தந்தமைக்காக அவருக்கு எனது நன்றிகளைத் தெரிவிக்க விரும்புகிறேன்.

இந்த நூலின் முன் அட்டையை வடிவமைத்ததுடன் வரைபடங்களையும் செழுமைப்படுத்தித் தந்த T.கண்ணன் அவர்களுக்கும், இந் நூலின் உருவாக்கத்திற்கு உழைத்த வாசன் அச்சக உரிமையாளர் திரு. வாசன் அவர்களுக்கும் அச்சகப் பணியாளர்களுக்கும் எனது நன்றியும் பாராட்டுகளும்.