I

அவர் ஒரு சிறந்த நாவலாசிரியர். பிரபல நாடகாசிரியர். இலக்கிய விமர்சகர். நோபல் பரிசு பெற்ற இலக்கிய கர்த்தா.

அவர் ஒரு அரசியற் சிந்தனையாளர். மனிதத்துவவாதி. மாக்சியவாதி.

அவர் ஒரு தத்துவாசிரியர். தத்துவத்தில் வித்தகர். பிரஞ்சு இருப்பியத்தின் பிரதம குரு.

அவர்தான் ஜோன் போல் சாத்தர் (Jean Paul Satre, 1905-1980) அரை நூற்றாண்டுக்கு மேலாக ஐரோப்பிய கருத்துலகை ஆட்டிப் படைத்தவர். பெரும் சிந்தனைப் புயல்களுக்கு மையமாக நின்றவர். தனித்து நின்று, கம்யூனிச உலகத்துடன் கருத்துப் போர் தொடுத்தவர். இருப்பு என்னும் பேரியக்கத்தில் தனி மனித இருப்பிற்கு முதன்மை கொடுத்தவர். தனிமனிதனின் இருப்பும், அவனது வாழ்வனுபவமுமே, பேருண்மைக்குப் பொருளையும் அர்த்தத்தையும் கொடுப்பதாகச் சொன்னவர். சமூக வரலாற்றுக் காவியத்தில் தனிமனிதனின் அடையாளத்தைப் பொறித்துவிட முனைந்தவர்.

சாத்தரின் படைப்புலகம் பெரிது. எழுத்துக் கலையை ஒரு உன்னத சமூகப் பணியாக வரித்து அவர் ஓய்வில்லாமல் எழுதிக் குவித்தார். தத்துவமாக, நாவலாக, நாடகமாக, வாழ்க்கை வரலாறாக, சுயசரிதமாக, கட்டுரையாக செறிந்து கிடக்கும் சாத்தரின் பரந்த சிந்தனையுலகைச் சுருக்கி எழுதுவது சிரமம். மிகவும் கனமான, பூடகமான, சிக்கலான மொழியில் அவர் எழுதினார். அர்த்த பரிமாணங்களின் எல்லைக் கோட்டிற்கு அப்பால் வார்த்தைகளை நெகிழ்த்திச் சென்று சொற்சிலம்பாடுவதில் அவர் ஒரு விற்பன்னர். இலக்கியத்திலும் தத்துவத்தைப் புகுத்தினார். கருத்துகளின் குறியீடுகளாகக் கதாபாத்திரங்களைப் படைத்தார். விவாத மேடைகளாக நாடகங்களை எழுதினார். உரையாடல்களில் தத்துவ விசாரணைகளை எழுப்பினார். இருப்பிய சிந்தனையின் கலை வடிவங்களாக அவர் இலக்கியத்தைச் சிருஷ்டித்தார்.

மனிதத்துவத்தின் மையத்தில் நின்றபடி சாத்தர் தன்னை ஒரு இருப்பியவாதியாக இனம் காட்டிக் கொண்ட போதும், அவரது உலகப் பார்வையில் பல சிந்தனை உலகங்கள் சங்கமித்து நின்றன. காலத்திற்குக் காலம், வெவ்வேறு தத்துவ தரிசனங்களால் அவர் ஆகர்ஷிக்கப்பட்டார். இதனால், காலத்திற்கு காலம், அவரது உலகப் பார்வை மாற்றம் கண்டது. அத்தோடு அவர் வாழ்ந்த காலமும், இடமும், புறநிலைச் சூழலும், அந்தக் காலத்தில் கட்டவிழ்ந்த வரலாற்று நிகழ்வுகளும் அவரது சிந்தனையோட்டத்தில் திருப்பங்களை நிகழ்த்தின.

சாத்தரை சரிவரப் புரிந்து கொள்வதாயின் சாத்தரை ஆட்கொண்டு நின்ற சிந்தனை உலகங்களைத் தெரிந்து கொள்வது அவசியம். சாத்தரின் சிக்கலான மொழி நடையையும், அவரது ஆழமான தத்துவப் பார்வையையும் கிரகித்துக் கொள்வதற்கு இது முக்கியம். சாத்தரை ஈர்த்த சிந்தனை உலகங்கள் என்ற வரிசையில், ஹூசேளின் உணர்வாய்வுத் தத்துவம் (Husserl’s Phenomenological Philosophy), கைடேகரின் இருப்பியம் (Heidegger’s Existentialism), ஹேகலின் இயங்கியல் (Hegel’s Dialectics), பிராய்டின் மனப்பகுப்பியல் (Freud’s Phychoanalysis), மாக்சின் வரலாற்றுப் பொருளியம் (Marx’s Historical Materialism) ஆகியனவற்றை குறிப்பிட்டுச் சொல்லலாம்.

ஹூசேளின் சிந்தனைகள் சாத்தரின் ஆரம்பகால எழுத்துகளை ஆக்கிரமித்து நிற்கின்றன. ஹூசேள் ஒரு ஜெர்மானியத் தத்துவாசிரியர். அவரது தத்துவம் மனித புலனானுபவத்தைக் கூர்மையாக விசாரணை செய்கிறது. புலன்களின் வெளிச்சத்தில் புலனாகும் இந்த உலகத்தின் தோற்றப்பாட்டை மிகவும் நுண்ணியமாக ஆராய விழைகிறது. பட்டுணர்வின் பண்புகளை விளக்க முனைகிறது.

எனது அகவுலகம் வாயிலாகவே நான் புறவுலகத்தை பட்டுணர்ந்து கொள்கிறேன். எனது அகமானது ஒரு திட்பநுட்பமான அளவுகோல் அல்ல. அது ஒரு களங்கப்பட்ட கண்ணாடி. கடிவாளம் பூட்டிய குதிரை. அது பழமையில் கட்டுண்டு கிடக்கிறது. மூட நம்பிக்கைகளில் மூழ்கிப் போயிருக்கிறது. ஏற்கனவே திணிக்கப்பட்ட எண்ணற்ற அனுமானங்களில் சிறைப்பட்டுக் கிடக்கிறது. இந்த மாசுபடிந்த மனதினால் புற உலகின் மெய்யுண்மையைக் கண்டு கொள்ள முடியாது. மனமானது முதலில் தூய்மை பெறவேண்டும். பழமை, பொய்மை என்ற தளைகளிலிருந்து விடுதலை பெறவேண்டும். அனுமானங்களிலிருந்து விடுபட வேண்டும். தூய்மையான பிரக்ஞை மூலமே துல்லியமான பார்வை சாத்தியமாகும். அந்தக் களங்கற்ற வெளிச்சத்தில்தான் தீட்சண்யமான அறிவைப் பெறலாம். வெறும் தோற்றப்பாட்டின் பின்புலத்திலுள்ள மெய்யுண்மையைக் கண்டு கொள்ளலாம்.

பட்டுணர்வைக் கூர்படுத்தும் நுட்பமான ஆய்வுமுறையாக ஹூசேளின் தத்துவம் அமைகிறது. கருத்துருவங்கள், கற்பிதங்களிலிருந்து மனதைச் சுத்திகரித்து, அந்தக் களங்கமற்ற கண்ணாடியில் காட்சி தரும் மெய்யுலகை, அப்படியே விபரித்துக் கூறும் புதுமையான உத்தி ஒன்றை அவர் விளக்கிக் காட்டுகிறார்.

ஹூசேளின் உணர்வாய்வுத் தத்துவம் இருப்பியல்வாதிகள் பலரைக் கவர்ந்து கொண்டது. மனிதானுபவத்தை, மனிதவுணர்வுகளை ஆழமாக விபரித்துக் கூற இந்தப் பார்வை ஒரு சிறந்த வழிமுறையாக விளங்கிற்று. ஹூசேளின் சிந்தனை, சாத்தரின் ஆரம்பகால எழுத்துகளை ஆக்கிரமித்து நிற்கிறது.

குமட்டல் (Nausea) என்ற சாத்தரின் முதலாவது நாவலும், இருத்தலும் இல்லாமையும் (Being and Nothingness) என்ற அவரது ஆரம்பகால தத்துவ நூலும் ஹூசேளின் தரிசனத்தைத் தழுவி நிற்கும் படைப்புகள்.

Nausea ஒரு பரிசோதனை நாவல். நனவோடை உத்தியில் எழுதப்பட்டது. உணர்வு நிலைகளை படிமங்களில் சித்தரித்துக் காட்ட முனையும் ஒரு வித்தியாசமான படைப்பு.

கதாநாயகன் ஒரு தனியன். வாழ்வோட்டத்திலிருந்து அந்நியப்பட்டு நிற்பவன். வேரற்ற, பற்றற்ற, உறவற்ற மனிதன். வாழ்வை அபத்தமாகக் காண்பவன். மற்றவர்களை வெறுப்பவன். தனது மனக் குகையின் அந்தரங்க மாளிகையில் வாழ்பவன். முன்பின் தெரியாத அந்தப் பட்டினத்திற்கு வருகிறான், ஒரு பிரபுவின் வாழ்க்கைக் குறிப்பு எழுதுவதற்கு. எதிலும் மனம் இருப்புக் கொள்ளவில்லை. மனவுளைச்சலில் அலைகிறான். பட்டினத்துப் பூங்கா அவனுக்குத் தஞ்சம் கொடுக்கிறது. பிரமாண்டமான ஒரு விருட்சத்தின் முன்பு அமர்ந்து கொள்கிறான். அதிலிருந்தபடி சிந்தனையில் ஆழ்ந்து போகிறான். அவனது மனம் உலகத்தை அசைபோடுகிறது. அகமும், புறமும் புணர்ந்து கொள்கிறது. அந்தப் புலனானுபவத்தில் திடீரென அவனுக்கு ஒரு புத்துணர்வு பிறக்கிறது.

என்றுமில்லாதபடி மனம் விழித்துக் கொள்கிறது. மனத்திரை விலகிக் கொள்கிறது. பொருட்களில் ஒட்டியிருந்த வார்த்தைகள் கழன்று விழுகின்றன. பூச்சுக்கள் அழிந்து போகின்றன. குறியீடுகள் அர்த்தமிழந்து செத்துப் போகின்றன. மனமானது இயற்கை மீது போர்த்திருந்த ஆடைகள் அவிழ்ந்து விழ, பொருட்கள் பொருளிழந்து விடுகின்றன. அந்தப் பெருமரமும், அதன் பருத்த முறுக்கேறிய வேர்களும், நிலத்தின் மேல் படுத்திருக்கும் அந்தப் புற்தரையும், பூச்செடிகளும், பூங்காவின் கதவுகளும், ஆங்காங்கே குந்தியிருக்கும் ஆசனங்களும், எல்லாமே தத்தம் தனித்துவத்தை இழந்து மறைந்து போக, வெறும் தோற்றப்பாடு மட்டுமே தெரிகிறது. திடீரென, இருப்பானது தனது நிர்வாண தோற்றத்தில் அவனுக்கு காட்சி கொடுத்தது. எங்கும், எல்லாம் அவனைச் சூழ அடையாளமற்ற உருவங்களாக, பொருண்மத் திரள்களாக, பிண்டங்களாக, பூதாகாரத் தோற்றம் கொண்டது. இந்தத் திடீர் வெளிப்பாட்டினால் சாத்தரின் கதாநாயகன் கலங்கிப் போகிறான். இருப்பின் மெய்த்தோற்றம் அவனுக்குப் பயத்தைக் கொடுத்தது. அருவருப்பை ஏற்படுத்தியது. குடல் புரண்டு குமட்டியது. இருப்பின் தரிசனம் அவனுக்கு அங்கலாய்ப்பை ஏற்படுத்துகிறது. அதற்கும் அவனுக்கு என்ன உறவு? அந்த உறவில் என்ன அர்த்தம்? அவனால் ஒன்றும் விளங்கிக் கொள்ள முடியவில்லை.

“இந்த உலகில் இருப்புக் கொள்வதெல்லாம் காரணமெதுவுமின்றித் தோன்றுகிறது. பலவீனத்துடன் நிலைத்து நிற்க முனைகிறது. தற்செயலாகச் செத்துப் போகிறது. ஏன், எதற்காக, இந்த உலகம் தோற்றம் கொண்டது? இருப்பிற்குப் பதிலாக இல்லாமை இருந்திருக்கலாம் அல்லவா? எதையுமே என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.” அவன் சிந்திக்கிறான். இருப்பு அபத்தமாகத் தோன்றுகிறது.

இறுதியில் தனது வரலாற்று ஆய்வைக் கைவிட்டு அந்தப் பட்டினத்திலிருந்து வெளியேறுகிறான். புகையிரத நிலையத்தில் தனது எதிர்காலம் பற்றி கவலை கொள்கிறான். அபத்தமான வாழ்க்கையில் அர்த்தம் காண்பது எப்படி எனச் சிந்திக்கிறான்.

சிருஷ்டிப்புக் கலைதான் உன்னதமானது. கலைஞனாக வாழ்வதில்தான் அர்த்தமிருக்கிறது. படைப்புத் தொழிலில் ஒருவன் தனது இருப்பின் அடையாளத்தை நிலை நிறுத்துகிறான். தனது வாழ்வனுபவத்தை மற்றவர்களுக்கு உணர்த்திவிடுகிறான். இறந்த பின்னரும் தனது சுவட்டை இந்த உலகத்தில் விட்டுச் செல்கிறான். ஒரு நாவல் எழுதவேண்டுமென கதாநாயகன் உறுதி செய்து கொள்வதுடன் தனது நாவலை முடிக்கிறார் சாத்தர்.

‘குமட்டல்’ என்ற இந்த நாவல் சாத்தரை பிரஞ்சு இலக்கிய உலகில் அறிமுகப்படுத்தியது. கலைவடிவத்தில் தத்துவத்தை விளக்கும் பரிசோதனை முயற்சியாக அவர் இந்த நாவலை எழுதினார். கம்யூவின் ‘அந்நியனுக்கும்’ சாத்தரின் ‘குமட்டலுக்கும்’ சில ஒருமைப்பாடுகளைக் காணலாம். ஆனால் அடிப்படையில் வேறுபாடுகள் உண்டு. இரு கதாநாயகர்களும் வாழ்க்கையில் விரக்தி கொண்ட அபத்த மனிதர்கள். கம்யூவின் கதாநாயகனுக்கு மரணத்தின் வாயிலில் ஞானோதயம் பிறக்கிறது. வாழ்வின் அர்த்தத்தை அவன் உணர்ந்து கொள்கிறான். ஆனால் சாத்தரின் கதாநாயகனுக்கு இருத்தல் அசிங்கமாகத் தெரிகிறது. இருத்தலின் வெளிப்பாடு அருவருப்பைத் தோற்றுவிக்கிறது. வாழ்வு அபத்தமாக இருப்பினும் எழுத்தில் அர்த்தத்தைக் காணலாம் என்ற முடிவுக்கு வருகிறான். இருப்பு பற்றிய ஒரு எதிர்மறையான சித்தரிப்பை இங்கு சாத்தர் தருகிறார். ஆனால் நாவலின் மையக்கருத்து வேறு. மனித மொழிக்கும், அந்த மொழியால் மனிதன் உருவகப்படுத்த முனையும் மெய்யுலகத்திற்கும் மத்தியில் பெரிய விரிசல் உண்டு. சொற்களால், கருத்துருவங்களால் மனிதன் கட்டியெழுப்பும் உலகம் வேறு, மெய்யுலகம் வேறு. வார்த்தைகளுக்கு அப்பாலான தூய்மையான பிரக்ஞையில் இருத்தலின் மெய்மையைக் கண்டு கொள்ளலாம். ஹூசேளிடம் உள்வாங்கிய இந்தத் தத்துவமே நாவல் வடிவம் எடுத்திருக்கிறது.

பிந்திய ஒரு காலகட்டத்தில், அதாவது 26 ஆண்டுகளுக்குப் பின்னர், சாத்தர் தனது முதலாவது நாவலை கடுமையாக விமர்சித்திருக்கிறார். “உலகம் பற்றிய அன்றைய பார்வையில் எனக்குத் தெளிவு இருக்கவில்லை. இன்று மெய்யுலகின் உண்மை நிலையை என்னால் உணர்ந்து கொள்ள முடிகிறது. குழந்தைகள் பசியினால் மடிந்து போவதை நான் கண்டிருக்கிறேன். செத்துக் கொண்டிருக்கும் ஒரு குழந்தையின் அவலத்திற்கு எனது நாவல் ஈடாக முடியாது” என்று அவர் எழுதியிருக்கிறார்.

1943ஆம் ஆண்டு பாரிஸ் நகரை ஜெர்மானியர் ஆக்கிரமித்திருந்த காலத்தில், இருத்தலும் இல்லாமையும் (Being and Nothingness) என்ற சாத்தரின் பிரபல தத்துவ நூல் வெளியாகியது. ஆயிரம் பக்கங்களைக் கொண்ட இந்த நீண்ட, கனமான தத்துவப் படைப்பு மனித பிரக்ஞையின் பல்வேறு உணர்வுநிலைகளை மிகவும் நுணுக்கமாக அலசிப் பார்க்கிறது. ஹூசேளின் உணர்வாய்வுத் தத்துவத்தைத் தழுவி நின்றபோதும், சாத்தரின் இருப்பியக் கருத்துக்கள் இந்த நூலில்தான் அறிமுகம் செய்யப்படுகிறது.

மனவுலகத்தையும் பொருளுலகத்தையும் இருப்பின் இரு முகங்களாக, இரு முரண்பட்ட சக்திகளாக விளக்கிக் காட்ட முனையும் சாத்தர், அகத்தினதும் புறத்தினதும் சிக்கலான உறவு பற்றி மிகவும் நீண்ட தத்துவார்த்த வியாக்கியானங்களைத் தருகிறார். இந்த உறவு பற்றிய ஆய்வில் மனித மனம் முதன்மை பெறுகிறது. தனித்துவம் பெறுகிறது. எல்லா நிர்ணய சக்திகளுக்கும் அப்பால் சுயாதீனம் கொண்டதாக, சுதந்திரம் பெற்றதாக சித்தரிக்கப்படுகிறது.

மெய்யுலகம் எனக்குப் புறம்பாக இருக்கிறது. என்னைச் சூழ இருக்கிறது. எனது புலனுக்கு எட்டிய தூரத்தில் எங்கும், எல்லாவிடமும் வியாபித்து நிற்கிறது. எனது தோற்றத்திற்கு முன்பே அது இருந்தபடியே இருக்கிறது. ஏற்கனவே, எப்படியோ, ஏதோ ஒரு வழியில், அது உருவாக்கம் பெற்று நிற்கிறது. இருப்பாக இருந்து கொண்டே இருக்கிறது. அதற்கு வடிவமில்லை; உருவமில்லை; பண்புகளில்லை; இயல்புகளில்லை; அவை எல்லாம் மனித மனதால் சிருஷ்டிக்கப்பட்டவை. மனமே இந்த உலகிற்கு பொருளைக் கொடுக்கிறது; பண்பைக் கொடுக்கிறது; அர்த்தத்தைக் கொடுக்கிறது. காலம் என்றும், வெளி என்றும் காரண காரியம் என்றும், தேவை என்றும், இயல்பு என்றும், பண்பு என்றும், நாம் பாவிக்கும் பதங்கள் இந்த உலகத்தைத் தரம்பிரித்து, வகைப்படுத்த நாம் கையாளும் கருது கோள்கள்; அளவுகோல்கள்.

மனித மனமே இந்த உலகத்திற்கு ஆடைகளை அணிந்து அழகுபடுத்தியிருக்கிறது. பூச்சுக்களைப் பூசி விட்டிருக்கிறது. அர்த்தங்களைப் பிதுக்கி விட்டிருக்கிறது. தான் விரும்பியவாறு, தனது இயல்புகளிலிருந்து, தனது அளவுகோல்களிலிருந்து, இந்த உலகத்தை மனமே சிருஷ்டித்துள்ளது. ஆனால் இந்த உலகமானது மனித கணிப்புகளுக்கு அப்பால், மனித அனுமானங்களுக்கு அப்பால், மனித கற்பிதங்களுக்கு அப்பால், மனிதனுக்குப் புலனாகாத மெய்ப்பொருளாய், மெய்யுண்மையாய் இருப்புக் கொண்டு இருக்கிறது. நாம் காணும் இந்த நிஜவுலகம், நாம் பட்டுணர்ந்து கொள்ளும் இந்தப் புறவுலகம் மனிதனின் உலகம்; மனிதனால் வனையப்பட்ட உலகம்.

சாத்தரின் இந்தத் தத்துவார்த்த விளக்கம், பொருளுலகத்தை, புலனானுபவத்திற்கு அப்பாலான மாயப் பொருளாக, மறைபொருளாக சித்தரிக்க முனைகிறது. அகத்திலிருந்து புறத்தை துண்டித்துவிட விழைகிறது. மனித மனதிற்கு அலாதியான முக்கியத்துவத்தைக் கொடுக்கிறது.

சாத்தரின் பார்வையில் மனித மனமானது ஒரு சுதந்திரப் பறவை. அது சுயமாகச் சிந்திக்கிறது, உணர்கிறது, முடிவுகளை எடுக்கிறது, தெரிவுகளைச் செய்கிறது, திட்டங்களைப் போடுகிறது, சுயவுணர்வு கொள்கிறது, ஞாபகமீட்டுகிறது, உலகத்தைக் கிரகிக்கிறது, உலகத்தாரோடு உறவு கொள்கிறது, சொற்களில் கருத்துகளைச் செதுக்குகிறது, படைக்கிறது.

இவ்வாறாக மனித பிரக்ஞை (Human Consciousness) செயற்படுகிறது; இயங்குகிறது. இந்த மன இயக்கத்தை சுதந்திரத்தின் வெளிப்பாடாக, சுயாதீனத்தின் செயற்பாடாகக் கற்பிக்க முனைகிறார் சாத்தர். இங்கு அவர் மன இயக்கத்தை விபரித்துச் சொல்வதுடன் நின்றுவிடவில்லை. மனித பிரக்ஞையை முழு மனிதனாக உருவகித்து, மனிதன் ஒரு பூரணமான சுதந்திரப் பிறவி எனப் பிரகடனம் செய்து விடுகிறார். அதாவது, எவ்வித நிர்ப்பந்தங்களுக்கும், நிர்ணய சக்திகளுக்கும் அப்பாலான ஒரு சுதந்திர ஜீவனாக மனிதனை சித்தரித்து விடுகிறார். சாத்தரின் தத்துவ வித்தையில் மனமானது முழு மனிதனாக மாற்றப்படுகிறது; எண்ணத்தின் அசைவியக்கம் மனிதனின் சுதந்திர இயக்கமாக மாற்றப்படுகிறது. இப்படியான ஒரு கற்பனாவாதக் கருத்து நிலையில் நின்று கொண்டு, மனிதன் சுதந்திரமாக வாழ விதிக்கப்பட்டிருக்கிறான் (Man is condemned to freedom). அது அவனது தவிர்க்க முடியாத தலைவிதி என அறைகூவல் விடுக்கிறார். மானசீகமான ஒரு சுதந்திரத்தைக் கற்பித்து அதை மனித இருப்பின் மையத்தில் நிறுவி விட முனைகிறார் சாத்தர்.

சாத்தரின் இந்தத் தத்துவப் படைப்பில் புரிந்து கொள்ள முடியாத புதிர்கள் பலவுண்டு. முரண்பாடுகள் பலவுண்டு. மெய்யுலக யதார்த்தத்திற்குப் புறம்பான கற்பிதங்கள் பலவுண்டு. உலகத்திலிருந்தும் உறவுகளிலிருந்தும் அந்நியப்பட்டு நிற்கும் ஒரு அலாதியான அகவுலகத்தைப் படைத்து, அதைச் சுதந்திரத்தின் ஆன்மாவாகச் சித்தரித்து, அதன் அத்திவாரத்தில் தனது இருப்பியக் கருத்துலகைக் கட்டியெழுப்புகிறார் சாத்தர். உலகத்தின் தளைகளிலிருந்து விடுபட எத்தனிக்கும் ஹூசேளின் ‘தூய பிரக்ஞை’ (Pure Consciousness) சாத்தரின் சுதந்திர புருஷனாக மறு அவதாரம் எடுத்திருக்கிறது.

இந்தத் தத்துவ நூலை எழுதிய அன்றைய காலகட்டத்தில், சாத்தரின் சிந்தனைகள் நிஜத்தின் நிலத்தில் கால் பதிக்கவில்லை. வாழ்வுக் கடலில் நங்கூரம் தரிக்கவில்லை. வரலாற்று ஓட்டத்தைக் கண்டு கொள்ளவில்லை. சமூக வாழ்விற்கும் வரலாற்றிற்கும் புறம்பாக நின்று, நிஜவுலக நிர்ப்பந்தங்களை நிராகரித்துவிட்டு, மனவுலகச் சுவர்களுக்குள் மனிதனைத் தேட அவர் முயற்சித்தார். இயற்கையால் படைக்கப்பட்ட மனிதனை, இயற்கையோடு இணைந்து வாழும் மனிதனை, சமூக உறவுச் சங்கிலியால் பிணைக்கப்பட்ட மனிதனை, வரலாறு படைக்கும் மனிதனை, இரத்தமும் சதையுமான உயிருள்ள மனிதனை, மெய்யான மனிதனை அவர் கண்டுகொள்ளவில்லை. விலங்கிடப்பட்டிருக்கும் அடிமையிடம், சிறையில் வதைபடும் கைதியிடம், பசியால் செத்துக் கொண்டிருக்கும் மனிதனிடம் சாத்தர் சொல்லும் சுதந்திரம் செல்லுபடியாகாது. அது மனித மெய் நிலைக்குப் புறம்பானது. அகவயமானது.

பிந்திய ஒரு காலத்தில், முந்திய படைப்புகளை சுயவிமர்சனம் செய்யும் போது தனது ஆரம்ப கால கற்பனாவாதத்தை அவர் கண்டிக்கத் தவறவில்லை. உளவியல் நிலவறைக்குள் நின்று, முழு உலகத்தையும் விளக்க முயன்றது தவறு என்பதை அவர் ஒப்புக் கொண்டார்.

ஐரோப்பாவை அதிர வைத்த இரண்டாம் உலகப் போர் சாத்தரின் கனவுலகத்தைக் கலைத்தது. நிஜவுலகின் யதார்த்தத்தைப் புரிய வைத்தது.

நாசிச யுத்த பூதம் ஐரோப்பிய நாடுகளை விழுங்கியது. நகரங்களை அழித்தது. கோடிக் கணக்கில் மனிதர்களைக் கொன்று குவித்தது. நெப்போலியனின் நாடு, சாத்தரின் தாய்நாடு, ஹிட்லரின் காலடியில் மிதிபட்டது.

அந்நிய ஆக்கிரமிப்பால் எழுந்த அடிமைப்பட்ட வாழ்வும், அவலமான சூழ்நிலைகளும் சாத்தருக்கு சுதந்திரம் பற்றிய தெளிவை ஏற்படுத்தியது. சுதந்திரம் என்பது மனவுலகத்தின் மானசீகப் பொருளல்ல; அது சமூக வாழ்நிலையோடு சம்பந்தப்பட்டது. அடிமைத் தளைகளிலிருந்து விடுபடுவதைக் குறிக்கிறது. மனித மேம்பாட்டைக் குறிக்கோளாகக் கொண்டது. புறநிலைகள் சாத்தருக்கு இந்த உண்மையைப் புலப்படுத்தியது. நாசிச ஆதிக்கத்திற்கு எதிரான பிரஞ்சு எதிர்ப்பியக்கத்தில் இணைந்து செயலாற்றிய வேளையில், சுதந்திரம் போராடிப் பெறவேண்டியது என்ற ஞானோதயம் அவருக்கு ஏற்பட்டது.

இரண்டாம் உலக யுத்தத்தை அடுத்து, அரசியலிலும், இலக்கியத்திலும் தீவிரமாக ஈடுபட்டார் சாத்தர். மாக்சிய சிந்தனை அவரை வெகுவாகக் கவர்ந்தது. சமத்துவமும் சமூக நீதியும் தழைத்தோங்கும் சமூகத்தில் தனிமனிதனின் சுதந்திரம் மேம்பாடு பெறுமெனக் கருதினார். ஒடுக்கப்படும் மனிதனின் விடுதலைக்காக குரல் கொடுத்தார். அரசியல் நாடகங்களை அரங்கேற்றினார். நாவல்களை எழுதினார். அரசியல் ஈடுபாடு கொண்ட படைப்பிலக்கியத்தை வலியுறுத்தினார்.

எழுத்து என்றால் என்ன? ஒரு எழுத்தாளன் ஏன் எழுத வேண்டும்? அவன் யாருக்காக எழுத வேண்டும்? என்ற வினாக்களுக்கு விடையளித்து ‘இலக்கியம் என்றால் என்ன?’ (What is Literature?) என்ற நூலை எழுதி வெளியிட்டார். 1948இல் பாரிசில் பிரசுரமான இந்த நூல் பிரஞ்சு இலக்கிய உலகில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.

இலக்கியம் ஒரு சமூகக் கலை; ஒரு சமூகச் செயற்பாடு; அதற்கு ஒரு சமூகப் பங்கு இருக்கிறது. சமூக உலகத்தின் மீதும், சமூக இயக்கத்தின் மீதும் அது தாக்கத்தை விளைவிக்கிறது. சமூக மாற்றத்திற்கு உந்து சக்தியாக விளங்குகிறது. மனித விழிப்புணர்விற்கும் விடுதலைக்கும் பாதை அமைத்துக் கொடுப்பதே இலக்கியத்தின் உன்னதமான இலட்சியமாக அமைய வேண்டும். ஒரு குறிப்பிட்ட சமூகத்தில், குறிப்பிட்ட காலகட்டத்தில், ஒரு குறிப்பிட்ட வரலாற்றுச் சூழலில் எழுத்தாளன் வாழ்கிறான். தான் வாழும் சமூகத்தையும், அந்தச் சமூகத்தின் வாழ்நிலைப் பிரச்சினைகளையும், போராட்டங்களையும் எழுத்தாளன் உதாசீனம் செய்ய முடியாது. வரலாற்றிலிருந்து அவன் ஒளிந்துக் கொள்ள முடியாது. அவன் எழுத வேண்டும். அவனது எழுத்து அந்த சமூகத்தின் வாழ்நிலையை ஊடுருவி நிற்க வேண்டும். சமூகத்தாரை சிந்திக்கத் தூண்டி, செயற்பட வைக்க வேண்டும். சமூக விடுதலையை இலக்காகக் கொண்டிருக்க வேண்டும். இந்த வகையில் எழுத்தாளனுக்கு சமூகப் பற்றுணர்வு அவசியம், அர்ப்பணிப்பு அவசியம், ஈடுபாடு அவசியம். எழுத்து, அரசியல் ஈடுபாடு உடையதாக இருக்க வேண்டும் என்பதை இந்த நூலில் வலியுறுத்துகிறார் சாத்தர்.

சொற்களுக்கு அபாரமான சக்தியுண்டு. அவை வாசகனின் ஆன்மாவைப் பற்றிக் கொள்கிறது. அவனது இருண்ட மனக் குகைக்குள் வெளிச்சத்தைக் காட்டுகிறது. மாயைகளைப் போக்கிவிடுகிறது. கனவுகளைச் சிதைத்துவிடுகிறது. எழுத்துக் கலையானது அரசியல் விழிப்புணர்வைத் தூண்டி, மனித விடுதலைக்கு வழிசமைத்துக் கொடுக்கிறது. சமூகப் பிரக்ஞையுடன் எழுதுபவன், சமூக விடுதலைக்காக எழுதுபவன் தனது இருப்பிற்கும் மற்றவர்களது வாழ்விற்கும் அர்த்தத்தைக் கொடுக்கிறான் என்கிறார் சாத்தர்.

மனித இருப்பு நிலைக்கு அப்பால், சமூக வாழ்நிலைக்கு அப்பால், அழகுணர்விற்காக, கலையுணர்விற்காக, நித்திய விழுமியங்களைத் தேடி எழுதுவதில் அர்த்தமில்லை. அது சமூகத்தின் ஒடுக்குமுறையாளர்களை, அதிகார வர்க்கத்தினரை திருப்திப்படுத்தும் படைப்புகளாகும். அந்த எழுத்துக்கள் சமூகத்தின் ஒடுக்குமுறையை நியாயப்படுத்துவதாக அமையும் என்கிறார் சாத்தர்.

II

இரண்டாவது உலகப் போர் முடிவுக்கு வந்தது. இரண்டாவது தடவையாக, உலகத்து மனிதர்கள், தமக்குள் பெரும் போர் செய்து, பெருமளவு இரத்தம் சிந்தி, தமக்குத் தாமே பேரழிவை ஏற்படுத்தி, அந்தப் பெரும் சிதைவுகளிலிருந்து ஒரு புதிய உலக ஒழுங்கைக் கட்டினார்கள். பூமியை ஆளுவதற்கு ஆசைகொண்ட நாசிச அரக்கன் களத்தில் மடிந்து போனான். அவனது புதைகுழியிலிருந்து இரு பெரும் வல்லாதிக்க பூதங்கள் பிறப்பு எடுத்தன. புதிய உலக அமைப்பு இந்தப் பூதங்களின் கையில் வீழ்ந்தது. இந்த இருபெரும் வல்லாண்மை சக்திகள் மத்தியில் பிடுங்குப்பட்டு, இரண்டாகப் பிளவு கண்டது ஐரோப்பிய கண்டம்.

கிழக்கு ஐரோப்பாவை ரஷ்ய கம்யூனிசம் விழுங்கிக் கொண்டது. அமெரிக்க முதலாளியத்தின் கைப்பொம்மை ஆக மாறியது மேற்கு ஐரோப்பா. உலகத்தை உலுப்பிய உலக யுத்தம் முடிந்தபோதும் ஐரோப்பிய மனிதனின் அடிமை வாழ்வு முடியவில்லை. அவன் ஒரு சிறையிலிருந்து மீட்கப்பட்டு இன்னொரு சிறைக்குள் தள்ளப்பட்டான்.

யுத்தம் முடிந்த காலகட்டத்தில், அன்றைய ஐரோப்பிய அரசியல் சூழ்நிலையை இப்படித்தான் எடைபோட்டார் சாத்தர். ஐரோப்பிய கண்டத்திற்குள் அவரது பார்வை அன்று முடங்கிக் கிடந்தது.

ஐரோப்பிய மனிதனை வரலாறு இன்னும் விடுதலை செய்யவில்லை. அவனைச் சூழ, நாலாபுறமும் ஆதிக்கச் சுவர்கள் எழுந்து நின்றன. அதன் நடுவே, நகர முடியாதபடி, அவன் விலங்கிடப்பட்டுக் கிடந்தான். முதலாளியமும் கம்யூனிசமும் ஐரோப்பிய மனிதனை அடிமை கொண்டு நின்றன. முதலாளியம் மனிதத்துவத்திற்கு விரோதமானது. அது மானிடத்தின் இரத்தத்தைக் குடித்து வளர்கிறது. மனித படைப்பாக்க சக்தியை பண்டமாக்கி, பணமாக்கி வாழ்கிறது. மனிதத்தின் சாரத்தை பொருளுலகில் புதைத்து விடுகிறது. கம்யூனிசம் என்ற எண்ணக் கரு, ரஷ்ய மண்ணில் வேதாள வடிவம் எடுத்திருக்கிறது. மாக்சின் சமத்துவ தத்துவம், ஸ்டாலினிச சர்வாதிகாரமாக பிறழ்ச்சி கண்டிருக்கிறது. அது மனித சுதந்திரங்களை ஏப்பம் விட்டு வருகிறது. ரஷ்ய கம்யூனிசத்தையும், அமெரிக்க முதலாளியத்தையும் கடுமையாகச் சாடினார் சாத்தர்.

ஒரு புதிய ஐரோப்பாவை சாத்தர் கனவு கண்டார். ஆதிக்க சக்திகளின் அதிகாரப் பிடியிலிருந்து ஐரோப்பிய சமூகம் விடுதலை பெறவேண்டும். ஒரு சுதந்திரமான, சமத்துவமான, உண்மையான சோசலிச சமூகமாக ஐரோப்பா மாற வேண்டும். ஒரு புதிய வரலாற்றுப் பாதையில், புதிய யுகத்தை நோக்கி ஐரோப்பிய மனிதன் முன்னேறிச் செல்ல வேண்டும். இப்படியான ஒரு இலட்சியக் கனவைக் கண்டார் சாத்தர். உலகப் போர் ஓய்வு கண்ட அன்றைய காலகட்டத்தில், சாத்தரின் அரசியல் ஈடுபாடும், எழுத்தும் இந்த இலட்சியத்தின் அடிப்படையில் அமைந்தது.

தனது புதிய பார்வைக்கு களம் அமைக்க விரும்பிய சாத்தர், நவயுகம் (Les Temps Modernes) என்ற பத்திரிகையை ஆரம்பித்து அதன் ஆசிரியராகப் பணிபுரிந்தார். அத்துடன் ‘சர்வதேச புரட்சிகர சனநாயக மக்கள் சபை’ என்ற அரசியல் இயக்கத்தையும் ஆரம்பித்தார். சாத்தரின் அரசியல் இயக்கம், கருத்து முரண்பாடு காரணமாக சொற்ப ஆயுசுடன் மடிந்து விட்டது. அவரது அரசியல் ஈடுபாட்டிற்கு எழுத்தாற்றல் மட்டும் மிஞ்சி நின்றது. புதிய சோசலிசப் பாதையை வேண்டிநின்ற அவரது அரசியற் தத்துவார்த்த எழுத்துகள் மரபுவாதத்தில் மூழ்கிக் கிடந்த பிரஞ்சு கம்யூனிச இயக்கத்திற்குச் சினத்தை மூட்டியது.

மிகவும் பலம்வாய்ந்த அரசியற் கட்சியாக, பாட்டாளி வர்க்கத்தின் ஏக பிரதிநிதியாக, பரந்து வளர்ந்து நின்ற பிரஞ்சுக் கம்யூனிச இயக்கம் சாத்தரை ஒரு சித்தாந்த விரோதியாகக் கண்டது. மனிதத்துவத்திற்கு முதன்மை கொடுத்த சாத்தரின் சோசலிச தரிசனத்தை ‘அபத்தவாதம்’ என்றும் பிற்போக்குவாதம் என்றும் கிண்டல் செய்தது. சாத்தரும் பதிலுக்கு சொல் அம்புகளை ஏவினார். சோவியத் கம்யூனிசத்தின் கைப்பொம்மைகள் எனப் பிரஞ்சு கம்யூனிஸ்டுகளைச் சாடினார். சுதந்திரமாகச் சிந்திக்க மறுக்கும் குருடர்கள் என கம்யூனிச புத்திஜீவிகளைக் கண்டித்தார். முரண்பாடு முற்றியது. பிரஞ்சு கம்யூனிச அறிவுஜீவிகள் மட்டுமன்றி, ரஷ்ய, கிழக்கு ஐரோப்பிய சித்தாந்தவாதிகளும் சாத்தருக்கு எதிராக அணி சேர்ந்தனர். தனி ஒருவனாக நின்று, முழுக் கம்யூனிச உலகத்துடன் கருத்துப் போர் நடத்தினார் சாத்தர். நாற்பதுகளின் நடுப்பகுதியில் தொடங்கிய இந்தக் கருத்துப் போர் தொடர்ச்சியாக ஐந்து ஆண்டுகள் வரை நீடித்தது. இந்தக் கால கட்டத்தில், அரசியற் தத்துவார்த்தக் கட்டுரைகள் மட்டுமன்றி, அரசியல் ஈடுபாட்டை வலியுறுத்தும் நாவல்களையும் படைத்து, நாடகங்களையும் மேடையேற்றினார்.

மரபுவாத கம்யூனிஸ்டுகளுடன் முரண்பட்டு நின்றபோதும், மாக்சிய சிந்தனையின் மையக் கருத்துகளை சாத்தர் ஏற்றுக் கொண்டார். கார்ள் மாக்சின் வரலாற்றுப் பொருளியம் அவரை ஆழமாகப் பற்றிக் கொண்டது.

மாக்சிய வரலாற்றியல் மானிடத்தின் உண்மைக் கதையைச் சொல்கிறது. மனித குலத்தின் சமூக வரலாற்றிற்கு உண்மை விளக்கத்தைக் கொடுக்கிறது. மனிதனை மையமாகக் கொண்டு மனித வரலாற்றைத் தரிசிக்க முனைகிறது. மனித உழைப்பிலிருந்து, அந்த உழைப்பால் எழும் உறவுகளிலிருந்து, அந்த உறவுகளின் பிணைப்பால் பிறக்கும் பொருளிய வாழ்விலிருந்து மனிதனின் கதையைச் சொல்கிறது. மனிதனின் இருண்ட வரலாற்றுக் குகைக்குள் வெளிச்சத்தைக் காட்டினார் மாக்ஸ். அந்த, வெளிச்சத்தில், கற்பித நிழல்கள் கலைந்து போக மனிதனின் உண்மையான வரலாற்று முகம் தெரிந்தது. இந்த வகையில் வரலாற்றுப் பொருளியம் ஒரு புதுமையான தத்துவம் என்றார் சாத்தர்.

மனிதன் பற்றிய ஒரு புரட்சிகரமான பார்வையில் சோசலிச சமூகம் நிர்மாணிக்கப்பட வேண்டும். மனிதத்துவத்தை மேம்பாடு செய்வதே சோசலிசத்தின் உண்மையான இலட்சியமாக அமைய வேண்டும். இந்தக் கருத்தை மையமாகக் கொண்டு 1946இல் பொருளியமும் புரட்சியும் (Materialism and Revolution) என்ற நூலை வெளியிட்டார் சாத்தர். இந்தப் படைப்பில் மனிதாபிமான சோசலிசத்தை அவர் வலியுறுத்தினார்.

ஒரு புதிய மனிதனை, சுதந்திரமான மனிதனை, முழு மனிதனை உருவாக்கம் செய்வதே சோசலிசப் புரட்சியின் குறிக்கோளாக இருக்க வேண்டும். பாட்டாளி வர்க்க விடுதலை என்ற வரையறைக்குள் சோசலிச எல்லைக் கோடுகளை நிர்ணயிக்கக் கூடாது. வர்க்க முரண்பாடுகள் நீங்கிய சமூகத்தில், சகல மனிதர்களும் சமத்துவமாக வாழவேண்டும். சகல மனித உறவுகளும் ஒத்திசைவாக அமைய வேண்டும். அதிகார உறவுகள் அற்றுப் போக வேண்டும். ஒருவனது சுதந்திரத்தையும் தனித்துவத்தையும் மற்றவன் மதிக்க வேண்டும். தனிமனிதனது அகவாழ்வும் ஆற்றலும் ஆளுமையும் தளைத்தோங்க வழிசெய்ய வேண்டும். சோசலிசப் புரட்சியானது இந்தக் குறிக்கோள்களைக் கொண்டதாக அமையுமானால், ஒரு உன்னதமான சமத்துவ சமூகம் உருவாகும். அது மனிதத்துவத்தை மேம்பாடு செய்யும் என எழுதினார் சாத்தர்.

மனிதத்துவத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து, மனிதாபிமான தர்மத்தை வேண்டி, சாத்தர் வலியுறுத்திய சோசலிசத் தத்துவத்தைக் கம்யூனிச உலகம் நிராகரித்தது. முதலாளிய அறநெறியை (Bourgeois ethic) பிரதிபலிக்கும் இருப்பிய கற்பனாவாதக் கருத்துகளை ‘விஞ்ஞான சோசலிச சிந்தனையில்’ திணிக்க முயல்கிறார் எனப் பிரஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி சாத்தரைக் கண்டித்தது.

இருப்பிய தத்துவத்தின் அடிப்படைகளைப் புரியாது, அதனைப் பிற்போக்குவாதம் என்றும் அகவயமான கருத்தியக் கோட்பாடு என்றும் (Subjective Idealism) கம்யூனிஸ்டுகள் சித்தரிக்க முனைவது சிறுபிள்ளைத்தனமானது என்றார் சாத்தர். இந்த விமர்சனங்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் இருப்பியமும் மனிதத்துவமும் (Existentialism and Humanism) என்ற தலைப்பில் அவர் நிகழ்த்திய சொற்பொழிவு, 1946இல் சிறு நூலாக வெளிவந்தது.

இந்தச் சிறிய நூலில் இருப்பிய தத்துவத்தின் அடிப்படைக் கோட்பாடுகளை விளக்க முனைகிறார் சாத்தர்.

இருத்தலிலிருந்துதான் ஒருவனது வாழ்வு தொடங்குகிறது. முதலில் மனிதன் இருப்புக் கொள்கிறான். அந்த இருப்பு நிலையிலிருந்து சுயவிழிப்புக் கொள்கிறான். உலகத்தை அறிகிறான். உலகத்தோடு உறவு கொள்கிறான். அந்த உலகானுபவத்திலிருந்து தன்னைத் தானே உருவாக்கிக் கொள்கிறான். மனிதமாக, மனித அகமாக, சுயமாக, ஆளுமையாக, ‘நானாக’ உருவாக்கம் பெறும் மனித இயல்பை மனிதனே படைக்கிறான். இருப்பே எல்லாவற்றிற்கும் முன்நிலையானது, அடிப்படையானது. இருப்பிலிருந்துதான் மனித இயல்பு தோன்றுகிறது. இதுதான் இருப்பியத்தின் அடிப்படைத் தத்துவம் என்கிறார் சாத்தர்.

மனிதர்களுக்குப் பொதுவான பண்பு என்று எதுவுமில்லை. தெய்வமோ, விதியோ, மனிதனுக்கு அப்பாலான மறுவுலக சக்திகளோ, மனிதனைப் படைக்கவில்லை. மனிதனே தனது சித்தத்தால், செயலால், தன்னைத் தானே படைத்துக் கொள்கிறான்.

தனிமனிதன் என்பவன் சமூகப் பெருவெள்ளத்தில் அள்ளுப்பட்டுச் செல்லும் நிலையற்ற நீர்க்குமிழி அல்ல. அன்றி அவன் ஒரு உணர்வற்ற, உயிரற்ற, அசைவற்ற சடப் பொருளுமல்ல. மனிதன் என்பவன் வாழ்வுலகின் பேருண்மை. இருப்பியக்கத்தின் மையம். அவன் சுயவுணர்வுடன் சீவிப்பவன். சிந்திப்பவன். சுயமாக முடிவுகளை எடுப்பவன். விருப்புக்கேற்ற தெரிவுகளைச் செய்பவன். எதிர்காலத்தை நெறிப்படுத்தி வாழ்பவன். பொறுப்புணர்வுள்ளவன். மற்றவர்களுக்கும் பொறுப்பானவன். தனக்குக் கிட்டிய வாய்ப்புகளைக் கொண்டு, தனது சித்தத்திற்கு ஏற்றவாறு தன்னை உருவாக்கிக் கொள்பவன். அவனது ஒட்டுமொத்தமான செயற்பாடுகளே அவனது தனித்துவத்தையும், சுயத்தையும், வாழ்நிலையையும் நிர்ணயித்து விடுகிறது. ஒரு தனி மனிதனானவன் மானிடத்தின் பொதுப்படிமம். அந்தத் தனிமனிதன் தன்னை உருவாக்கம் செய்யும்போது மானிடமும் உருவாக்கம் பெறுகிறது.

மனிதன் அகநிலையில் வாழ்பவன். மனித உறவுகளுக்கு எல்லாம் அகநிலைதான் ஆதாரம். எனக்கும் மற்றவனுக்கும் ஏற்படும் உறவு அகவயமானது. அகநிலையில் தான், நான் மற்றவனை தெரிந்து கொள்கிறேன், புரிந்து கொள்கிறேன், உறவாடிக் கொள்கிறேன். அகநிலை உறவுகளே மனித உறவாக, சமூக உறவாக, கூட்டுறவாகப் பரிணமிக்கிறது. அகநிலையில் தான், தனிமனிதன் ஒருவன் சமூக உலகில் சங்கமித்துக் கொள்கிறான். “மனித உலகத்தைத் தவிர வேறு உலகம் எதுவுமில்லை. அந்த மனித உலகம் அகவயமானது” என்கிறார் சாத்தர்.

மனிதன் தனக்காக வாழாமல், தன் நலனுக்காக வாழாமல், தனக்கு அப்பால், தனது சுயத்திற்கு அப்பால், மற்றவர்களுக்காக, மற்றவர்களின் நலனுக்காக, மானிடத்தின் நல்வாழ்விற்காகத் தன்னை அர்ப்பணித்து வாழும் மாண்பினை மனிதத்துவம் என்கிறார் சாத்தர். தன்னை விஞ்சி வாழ்பவன், சுயத்தின் எல்லைகளைக் கடந்து மற்றவர்களுக்காக வாழ்பவன், மானிடத்தின் உயர்ச்சிக்காக வாழ்பவன், உண்மையான மனிதனாக வாழ்கிறான். மனிதத்துவம் அவனிடம் நிறைவு பெறுகிறது. இதுதான் இருப்பியம் வேண்டி நிற்கும் மனிதாபிமானம் என்கிறார் சாத்தர்.

ஐம்பதுகளில் படைப்பிலக்கியத்துடன் நின்று விடாமல், மூன்றாம் உலகத்து மக்களுக்காகவும் குரல் கொடுத்தார் சாத்தர். பிரஞ்சு காலனித்துவத்திற்கு எதிராக நிகழ்ந்த வியட்னாமிய, அல்ஜீரிய விடுதலைப் போராட்டங்களையும் ஆதரித்தார். அல்ஜீரிய விடுதலை இயக்கத்திற்கு மறைமுகமாக உதவிகளைச் செய்தார். பிரஞ்சுக் காலனிய கொடுமைகளை அம்பலப்படுத்தினார். அல்ஜீரிய மக்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டங்களையும் முன்நின்று நடத்தினார். இதனால் பிரஞ்சு ஆட்சியாளர் அவரைத் தேச விரோதியாகக் கண்டனர். கொலை முயற்சிகளும் நடந்தன. பாரிசிலுள்ள அவரது வாசத்தலம் குண்டுவெடிப்புகளுக்கு இலக்காகியது. உலக சமாதான இயக்கத்திற்கு தலைமை தாங்கி நின்றதால் அவரைக் கைது செய்து சிறையில் தள்ளிவிட பிரஞ்சு அரசு துணியவில்லை.

மேற்குலக காலனித்துவத்திற்கு எதிராகப் போர் தொடுத்து நிற்கும் உலகப் புரட்சி இயக்கங்களை சாத்தர் ஆதரித்தார். மேற்குலக வல்லரசுகளை மட்டுமன்றி, மேற்குலக மக்களையும் காலனித்துவ சுரண்டல்காரர்கள் என வர்ணித்தார். ஐரோப்பிய மனிதன் ஒவ்வொருவனதும் அந்தரங்க ஆன்மாவினுள் காலனித்துவ பிசாசு குடிகொண்டிருக்கிறது என அவர் எழுதியது ஐரோப்பியருக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது.

பிராங்ஸ் பனன் எழுதிய ‘பூமியின் இழிநிலைப்பட்டோர்’ (Wretched of the Earth) என்ற நூலுக்கு அவர் எழுதிய அறிமுகக் கட்டுரை மிகவும் பிரபல்யமானது. அதில் காலனித்துவ முகமூடியை கிழித்துக் காட்டினார்.

பூமியின் முகத்தைக் காலனித்துவம் சிதைத்து விட்டிருக்கிறது. தேசங்களைப் பிரித்து, சமூகங்களை உடைத்து, பண்பாடுகளைச் சீர்குலைத்து விட்டிருக்கிறது. ஒன்றுபட்டு வாழ்ந்த சுதேசிய மக்களை வர்க்கங்களாக பிளவுபடுத்தி, நீங்காத முரண்களைத் தோற்றுவித்திருக்கிறது. மேற்குலக மனிதர்கள் எல்லோருமே காலனித்துவ சுரண்டலால் இலாபமடைந்திருக்கிறார்கள். இந்த வகையில், மேற்குலக மனிதர்கள் எல்லோருமே காலனித்துவவாதிகள். காலனித்துவம் புரிந்துவரும் பொல்லாத பாவங்களுக்கு எல்லோருமே பொறுப்பாளிகள். ஒடுக்கப்படும் மனிதர்களின் ஆத்திரமும், ஆவேசமும், ஆழமான வெறுப்புணர்வும் வன்முறைப் புயலாகக் கிளம்பும். ஐரோப்பியனுக்கு எதிராக வன்முறையைக் கையாண்டே அடக்கப்படுபவன் தனது மனிதத்துவத்தை நிலைநாட்டிக் கொள்வான். இது தவிர்க்க முடியாத வரலாற்று நிர்ப்பந்தம். “முன்பு, கடந்த காலத்தில், நாம் வரலாறு படைத்தோம். இனி எமக்காக வரலாறு படைக்கப்படும்.” என்று எழுதினார் சாத்தர்.

1964ஆம் ஆண்டு, இலக்கியத்திற்கான நோபல் பரிசு சாத்தருக்கு கிட்டியது. அந்தப் பரிசை ஏற்றுக் கொள்ள அவர் மறுத்தார். மேற்குலகின் நலனைப் பேணும் ஒரு முதலாளிய நிறுவனத்திடமிருந்து ‘கலாச்சாரப் பிரமுகர்’ என்ற பட்டத்தை சூட்டிக் கொள்ள தாம் விரும்பவில்லை என அவர் பகிரங்கமாக அறிவித்தார். “அல்ஜீரிய நாடு விடுதலை பெறுவதற்கு முன்னராக அல்ஜீரியப் போராட்டத்தில் நான் தீவிரமாக ஈடுபட்ட காலத்தில் இந்தப் பரிசு எனக்கு வழங்கப்பட்டிருந்தால் நான் அதை ஏற்றுக் கொண்டிருப்பேன். அது எனக்குக் கிடைத்த தனிப்பட்ட மதிப்பாக அல்லாமல், அல்ஜீரிய சுதந்திரப் போராளிகளுக்கு கிடைத்த கௌரவமாக அதனைக் கருதியிருப்பேன்.” என்று குறிப்பிட்டார் சாத்தர்.

III

உண்மையைத் தேடும் தத்துவார்த்த விசாரணைகள் அனைத்தும் மனிதனிடமிருந்தே தொடங்க வேண்டும் என்பது சாத்தரின் நிலைப்பாடு. ஏனெனில் மனிதனே வாழ்வியக்கத்தின் மையமாக நிற்கிறான். அவனே இருப்பின் மெய்ப்பொருளாகவும் இருக்கிறான். அவனிடமிருந்தே வாழ்வின் அர்த்தங்கள் அவிழ்கின்றன. அவனே அறிவியக்கத்திற்கும் ஆதாரமாக நிற்கிறான். அவனே தன்னையும் படைத்து, வரலாற்றையும் படைக்கிறான். அவனே தன்னையும் தேடி, சத்தியத்தையும் தேடுகிறான். இந்த அபூர்வமான மனிதனை, அவனது முழுமையில் தரிசித்துக் கொள்வது சாத்தியமா? அகநிலையிலும் புறநிலையிலும் உருவாக்கம் பெறும் மனிதனை, முழு மனிதனாகக் கண்டு கொள்வது எப்படி?

சாத்தரை உறுத்தி வந்த கேள்வி இது. பிரஞ்சு இருப்பியத்தின் பிரதம குருவாகவும், நவ மாக்சியத்தின் தத்துவ வித்தகராகவும், ஒரே சமயத்தில் இரு வேறுபட்ட கருத்து நிலைகளில் காலூன்றி நின்றபடி, மனிதனை அவனது ஆழத்தில் தரிசிக்க விழைந்தார் சாத்தர்.

இருப்பியம் மனிதனை ஒரு பரிணாமத்தில் விசாரணை செய்கிறது. இந்தத் தத்துவம் மனிதனைத் தனிமனிதனாகக் காண்கிறது. தனிமனிதனின் வாழ்நிலைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. தனிமனிதனின் அகவய வாழ்வை, அவனது உலகத்தை ஆழமாகப் பார்க்கிறது. எனவே, இருப்பியம் காணும் மனிதன் அகமனிதன். இந்த அகமனிதன் முக்கியமானவன். ஆனால் அவன் முழு மனிதனில்லை.

மனித வாழ்வின் சமூகப் பரிமாணத்தை இருப்பியம் செம்மையாகப் பார்க்கவில்லை. சமூக உலகத்தில், அதன் அசைவியக்கத்தில் மனிதனை நிலைநிறுத்திப் பார்க்கவில்லை. இதனால் சமூகத்தைப் படைக்கும் வரலாற்று மனிதனை இருப்பியம் கண்டு கொள்ளவில்லை. இதுதான் இருப்பிய தத்துவத்தின் பிரதான குறைபாடு. இந்தக் குறைபாட்டை மாக்சியம் நிவர்த்தி செய்து விடுகிறது. இந்த வகையில், மாக்சியம் ஒரு புதுமையான சமூக – வரலாற்றியல் நோக்கு என்பது சாத்தரின் கருத்து.

மாக்சியம் சமூக உலகத்தின் நிதர்சனத்தை வலியுறுத்துகிறது. சமூக வாழ்விற்கும், சமூக உறவுகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறது. மனிதனைத் தனி மனிதனாகக் காணாமல், சமூக உறவுகளைச் சுமந்து நிற்கும் சமூகப் பிறவியாகக் காண்கிறது. எனவே, மாக்சியம் காணும் மனிதன் சமூக மனிதன். மனிதனை சமூக மனிதனாகக் கண்டு, அவனை சமூக உற்பத்தி உறவுகளில் நிலைநிறுத்தி, அந்த உறவுகளை வர்க்க உறவுகளாகப் பார்த்து, அந்த வர்க்க உறவுகளால் எழும் முரணியப் போராட்டத்தை வரலாற்றின் அசைவியக்கமாக விளக்கி, மனிதனை வரலாற்றுப் படைப்பாளியாகச் சித்தரிக்கிறது மாக்சியம். எனினும், மாக்சியம் புலப்படுத்திக் காட்டும் சமூக மனிதனும் முழு மனிதன் அல்ல என்பது சாத்தரின் வாதம்.

மாக்சிய மனிதனுக்கு சமூக முகம் இருக்கிறது; வரலாற்று முகம் இருக்கிறது; ஆனால் மனித முகம் இருக்கவில்லை என்பது சாத்தரின் கருத்து. சாத்தரின் பார்வையில் இந்த மனித முகம் என்பது மனிதத்தைக் குறிக்கிறது. மனிதா சாரத்தைக் குறிக்கிறது. இந்த மனிதா சாரம் என்பது மானிடத்தின் பொதுவுடமையல்ல. அது மனிதர்களின் தனியுடமை. ஒவ்வொரு தனி மனிதனும் தனது வாழ்வனுபவத்திலிருந்து சுயமாகத் தேடிக் கொள்ளும் தனியியல்பு. அகவயமான அனுபவத்திலிருந்து பெறப்படும் இந்தத் தனிமனிதத்துவத்தை மாக்சியம் மறுதலிக்கிறது என்பது சாத்தரின் நிலைப்பாடு. மனிதனானவன் தனது தேர்வுகள், தீர்மானங்கள், செயற்பாடுகளிலிருந்து, ஒட்டுமொத்தத்தில் தனது உலகானுபவத்திலிருந்து உருவாக்கிக் கொள்ளும் தனிமனிதத்துவத்தை நிராகரிப்பதால், மாக்சியம் முழு மனிதனைத் தரிசித்து நிற்கவில்லை என்பது அவரது வாதம்.

பொருளுற்பத்தியை ஆதாரமாகக் கொண்ட பொருளிய வாழ்விற்கு மாக்சியம் முதன்மை கொடுக்கிறது. பொருளியல் புறநிலைகளின் நிர்ணயத் தன்மையை வலியுறுத்துகிறது. பொருளிய வாழ்வும் வரலாற்றுச் சூழலும் சமூகத்தின் கருத்துலகை நிச்சயித்து விடுவதாகக் கூறுகிறது. மனித மனமானது வாழ்க்கையை நிர்ணயிப்பதல்ல; பொருளிய வாழ்வே மனித மனதை நிர்ணயித்து விடுகிறது என்ற கருத்தை முன் வைக்கிறது. இந்தப் பார்வையின் அடிப்படையில், அகநிலையை நிர்ணயிப்பது புறநிலைகள்; மனவுலகத்தை நிர்ணயிப்பது பொருளுலகம்; தனிமனிதத்தை நிர்ணயிப்பது சமூகம்; இவ்விதம் காலம், இடம், சமூக சூழல் என்ற ரீதியில் புறவுலக நிர்ணய சக்திகளின் ஆதிக்க அழுத்தத்திற்கு உட்பட்டதாக மனித மனம் வரையறுக்கப்படுகிறது.

மாக்சியத்தின் இந்தப் பார்வையை ‘பொருளிய நிர்ணயத் தத்துவம்’ என விமர்சிக்கிறார் சாத்தர். இது முற்று முழுதாக மனித மனதையும், மனிதனின் அகவாழ்வையும் புறநிலை நிர்ப்பந்தங்களுக்குள் சிறைபடுத்தி விடுகிறது; மனித பிரக்ஞையின் சுயாதீனத்தையும் சிருஷ்டித்தன்மையையும் இது மறுதலிக்கிறது என்பது சாத்தரின் குற்றச்சாட்டு.

காலம், இடம், சூழல் என்ற ரீதியில் புறநிலைகள் மனிதனின் அகநிலையில் பாதிப்புகளை விழுத்துகின்றன என்பதை சாத்தர் மறுக்கவில்லை. சமூகப் பொருளிய வாழ்வும், சமூக உறவுகளும் மனிதனின் சிந்தனையுலகை நிச்சயித்து, நெறிப்படுத்தி விடுகிறது என்பதையும் அவர் மறுக்கவில்லை. ஆயினும், மனவுலக வாழ்வை, தனிமனித இயல்பை முற்றுமுழுதாகப் புறவுலக நிர்ப்பந்தங்களுக்கு ஆட்படுத்த முனைவது தவறு என்கிறார் சாத்தர். மனித மனமானது புறவுலக நிர்ப்பந்தங்களுக்கு அப்பால், நிர்ணய அழுத்தங்களுக்கு அப்பால், விஞ்சி எழும் விழிப்புத் தன்மை கொண்டது; சிருஷ்டித்தன்மை கொண்டது; சுயாதீனமுடையது என்பது சாத்தரின் வாதம்.

மனித மன இயக்கத்தை முற்றுமுழுதாகப் பொருளுலக நிர்ப்பந்தங்களுக்குள் முடக்கி விட முடியாது. மனவுலகத்தை பொருளுலகம் முற்றுமுழுதாக நிர்ணயிப்பதாயின் இந்த உலகத்தில் புரட்சிகரமான மாற்றம் எதுவும் நிகழ்வது சாத்தியமில்லை என்கிறார் சாத்தர். ஆனால் உலகம் சதா மாறிக்கொண்டே இருக்கிறது. ஒரு வளர்ச்சிப் பாதையில் முன்னேறிக் கொண்டிருக்கிறது. இந்த மாற்றமும் முன்னேற்றமும் நிகழ்வது எப்படி? சிந்தனை வளர்ச்சியும், சிருஷ்டி ஆற்றலும் இல்லாமல் மனித நாகரீகங்கள் தோன்றுவது எப்படி? மனித சிந்தனைக்கு சிறகுகள் இருக்கின்றன. அதனைப் பொருளுலகச் சிறைக்குள் பூட்டி வைக்க முடியாது. பொருளுலக நிர்ப்பந்த விலங்குகளை உடைத்துக் கொண்டு வெளியில் வரும் ஆற்றல் மனித பிரக்ஞைக்கு இருக்கிறது என்கிறார் சாத்தர்.

மனித மனமானது ஆழமான விழிப்புணர்வைப் பெறும் அபாரமான தன்மையைக் கொண்டது. விழிப்புணர்வு கொள்ளும் மனதில் வெளிச்சம் பிறக்கிறது. அந்த வெளிச்சத்தால் புறவுலக நிர்ப்பந்தங்கள் பிரக்ஞைக்குப் புலனாகிறது. இந்தப் புரிந்துணர்வால் நிர்ணயத்தின் பிடியிலிருந்து மனமானது விடுதலை பெற்றுக் கொள்கிறது. இவ்விதம் விடுதலை பெறும் மனம்தான் புரட்சிகர மனம். இந்தப் புரட்சிகரப் பிரக்ஞைதான் புரட்சிகரமாகச் சிந்திக்கும்; செயற்படும்; புரட்சியையும் செய்யும்.

அகவாழ்வும் புறவாழ்வும் புணர்ந்து பிரவேசிப்பதுதான் முழு மனிதத்துவம். இருப்பியம் மனிதனின் அகவாழ்வையும், மாக்சியம் மனிதனின் புறவாழ்வையும் ஆழமாகத் தரிசித்து நிற்கும் தத்துவங்கள். எனவே, இருப்பியமும் மாக்சியமும் இணைந்து கொண்டால் முழு மனிதனைக் கண்டு கொள்வது சாத்தியமென சாத்தர் எண்ணினார். 1960இல் அவர் எழுதிய Critique of Dialectical Reason என்ற தத்துவார்த்த நூல் மாக்சியத்தையும் இருப்பியத்தையும் இணைக்க முனைகிறது.

“மாக்சின் வரலாற்றுப் பொருளியமானது மனித சமூகங்களின் வரலாற்றிற்கு விளக்கத்தைக் கொடுக்கிறது. அதே சமயம் இருப்பியம் தனிமனித வாழ்வின் நிதர்சனத்தை வலியுறுத்துகிறது. இந்த இரு பார்வைகளையும் கோட்பாட்டு ரீதியாக ஒன்றிணைப்பதன் மூலம் சமூக வரலாற்று இயக்கத்தில் தனிமனிதனின் இருப்பை நிறுவி விடுவதே இந்த ஆய்வு நூலின் நோக்கம்” என்கிறார் சாத்தர்.

சாத்தரின் தத்துவ விசாரணை தனிமனிதனிலிருந்து, தனிமனிதனின் செயற்பாட்டிலிருந்து தொடங்குகிறது.

தனிமனிதன் தனிமையில் வாழவில்லை. அவன் சமூக உலகத்தில் வாழ்கிறான். சமூக உலகமானது தனிமனிதனுக்குப் புறம்பான, தனித்துவமான மெய்யுண்மையாக இயங்கவில்லை. தனிமனிதர்கள் என்ற அத்திவாரக் கற்களிலிருந்தே சமூக உலகம் கட்டப்பட்டிருக்கிறது. தனி மனிதர்களைக் கொண்டதாகவே சமூகம் அமையப் பெற்றிருக்கிறது. தனி மனிதர்கள் இல்லாமல் சமூகம் என்பது இருக்க முடியாது என்கிறார் சாத்தர்.

சமூக உலகத்தை ஒரு தன்னியக்க சக்தியாக, தனித்துவ விதிகளைக் கொண்டதாக, தனி மனிதர்களுக்கும் புறம்பானதாக, தனி மனிதர்களை வனைந்து விடும் ஒரு பூதாகர இயந்திரமாகச் சித்தரித்துக் காட்டுவது தவறு. தனி மனிதர்கள்தான் சமூகத்தின் மூலப் பொருள். அந்த மையப் புள்ளியிலிருந்தே சமூக உலகத்தை விசாரணை செய்ய வேண்டும் என்பது சாத்தரின் வாதம். தனிமனிதனிலிருந்து சமூக உலகத்தைக் கண்டு கொள்வது எப்படி? இந்தக் கேள்விக்குப் பதிலளிக்கும் வகையில், மனித செயற்பாடு (Human Praxis) என்ற கருத்துருவத்தை அறிமுகப்படுத்துகிறார் சாத்தர்.

மனித செயற்பாடுதான் தனிமனிதனையும் சமூக உலகத்தையும் பிணைக்கிறது. வாழ்க்கையின் தேவைகளை நிறைவு செய்து கொள்ள மனிதர்கள் செயற்பாட்டில் ஈடுபடுகிறார்கள். ஒவ்வொருவனும் ஏதோ முயற்சியில் ஈடுபடுகிறான்; செயற்படுகிறான்; உழைக்கிறான். இந்தச் செயற்பாடு ஆக்கமானது. படைப்பாற்றல் கொண்டது. எதிர்காலத்து நிறைவையும், முழுமையையும் தேடுவது. ஒவ்வொருவனது செயற்பாடும் மற்றவனுடன் தொடர்புடையதாக இருக்கிறது. தனி மனிதர்களது ஒட்டுமொத்தமான செயற்பாடுகளின் முழு வடிவமாகவே சமூக உலகம் உருவாக்கம் பெறுகிறது என்கிறார் சாத்தர். தனிமனிதச் செயற்பாட்டில் நோக்கமும் ஆக்கமும் அர்த்தமும் இருக்கிறது.

இந்த நூலில், சாத்தர் நடத்தியுள்ள சமூக விசாரணை, முதலாளிய சமூக உலகத்தின் முரண்பாட்டு முடிச்சுகளை கட்டவிழ்த்துக் காட்டவில்லை. திண்ணியமான சமூக மெய்யுண்மைகளை ஆழமாகப் பார்க்கவில்லை. அவரது ஆய்வு, சமூக அறிவியல் தளத்தில் நிலைகொள்ளாது, மனித வாழ்நிலை அவலங்களை மட்டும் சித்தரிக்கும் இருப்பிய விசாரணைகளாகவே அமைகிறது. பற்றாமையின் (Scarcity) கோரத் தாண்டவமும், அதனால் எழுந்துள்ள அநீதியும், அராஜகமும், பண்ட உலகத்தின் அழுத்தமும், அதன் அழிவுப் போக்குமாக சாத்தர் வரைந்து காட்டும் மனித உலகம் கொடுமையும் துன்பமும் நிறைந்தது. இந்த உலகத்தில், மனித முனைப்புகளுக்கு அப்பால், பொருளிய எதிர்மறை சக்திகளின் ஆதிக்கமே மேலோங்கி நிற்கிறது. இந்த இருண்ட உலகத்திலிருந்து மானிடத்திற்கு விடிவு இருப்பதாகத் தெரியவில்லை. மனித விமோசனத்திற்கான நம்பிக்கைகளையும் சாத்தரின் எழுத்து தகர்த்து விடுகிறது.

சமூக உலகத்தில், தனி மனிதன் இருப்பு நிலைக்கு இடம் தேடும் இந்தப் பரிசோதனை முயற்சி தோல்வியில் முடிகிறது. இதுபற்றி இனிப் பார்ப்போம்.

சாத்தரின் நூல், பற்றாமை என்ற இருப்புநிலையை வரலாற்று இயக்கத்தின் புறநிலைத் தளமாகக் கொண்டு சமூக உலகத்தை ஆய்வு செய்ய முனைகிறது. எல்லா ஆய்வுகளும் வேரிலிருந்து தொடங்க வேண்டும் என்பது சாத்தரின் நிலைப்பாடு. சமூகம் என்ற விருட்சத்தைத் தாங்கி நிற்கும் வேர்களாக தனி மனிதர்களை அவர் கருதினார் போலும். ஆகவேதான் சாத்தரின் சமூக விசாரணை தனி மனிதர்களிலிருந்து தொடங்கி சமூக உலகத்தினுள் பிரவேசிக்கிறது. ‘மனித செயற்பாடு’ என்ற சாத்தரின் கோட்பாடு, தனிமனிதனையும் சமூகத்தையும் இணைக்கிறது. தனிமனித செயற்பாடு மற்றவர்களது செயற்பாடுகளுடன் சங்கமிக்கும் பொழுது, அது கூட்டு மனித உறவாக, சமூக உறவாக பரிணமிக்கிறது. இந்தக் கூட்டுறவிலிருந்து சமூகக் குழுக்கள் தோன்றுகின்றன. இந்தச் சமூகக் குழுக்கள் பல்வேறு வடிவங்களில், சிறிதும் பெரிதுமாக பல்வேறு அமைப்புகளாக இயங்குகின்றன. இவ்விதம் தனி மனிதர்களது செயற்பாடுகள் அனைத்தும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையதாகப் பின்னப்பட்டு ஒட்டுமொத்த முழுமை பெறும் பொழுது, அது சமூகம் என்ற வடிவத்தைப் பெறுகிறது. இந்த வகையில், தனிமனிதர்களைக் கொண்ட கூட்டமாகவே சமூகத்தைக் காண்கிறார் சாத்தர்.

சமூகம் பற்றிய சாத்தரின் வரையறையில் சமூகத்திற்கு மேலாக தனிமனிதனுக்கு முதன்மை கொடுக்கப்படுகிறது. தனிமனிதனை சமூகத்தின் அச்சாணியாக நிறுவிவிட வேண்டும் என்ற முனைப்பில் சமூக உலகத்தின் தனித்துவமான மெய் நிலையை சாத்தர் மறுதலித்து விடுகிறார். அத்துடன் தனிமனித செயற்பாடுகளின் கூட்டுவடிவமாகவோ, அல்லது தனிமனிதர்கள் கூடிவாழும் கூட்டுக் குடும்பமாகவோ, அன்றி தனிமனிதர்கள் அணிசேர்ந்து கொள்ளும் மக்கள் திரளாகவோ சமூகத்தை சித்தரித்துக் காட்ட முனைவதும் தவாறானதாகும். சமூகமானது தனிமனிதர்களின் சேர்க்கையால் உருவாக்கம் பெறுவதல்ல. தனிமனிதர்களை உள்ளடக்கியதாக சமூகம் அமையப் பெற்ற பொழுதும், அது தனிமனிதர்களுக்குப் புறம்பான, தனித்துவமான மெய்நிலையைக் கொண்டது. சிக்கலான சமூக உறவுகளால் பின்னப்பட்ட கட்டமைவாக, வரையறுக்கக் கூடிய சில பண்புகளைக் கொண்ட ஒழுங்கமைவாக, சமூக உலகம் அமையப் பெற்றிருக்கிறது. இந்தச் சமூக மெய்யுலகைத் தனி மனிதனிலிருந்து, தனிமனிதச் செயற்பாடுகளிலிருந்து தரிசித்துக் கொள்ள முடியாது.

சாத்தரின் சமூக தத்துவம், மாக்சிய வரலாற்றுப் பொருளியத்தின் அறிவியற் தளத்திலிருந்து எழுதப்படவில்லை. அவரது சமூகப் பார்வை மாக்சிய சமூகவியலின் அடிப்படைகளுக்கு முரணானதாகவே அமைகிறது. மாக்ஸ், சமூக உலகத்தை தனிமனிதர்களின் ஒன்றியமாகக் காணவில்லை. மனிதர்களின் பொருளிய வாழ்விலிருந்தும், உறவுகளிலிருந்தும் சமூக உலகத்தைக் கட்டியெழுப்புகிறார் மாக்ஸ். மனிதர்களின் பொருளிய வாழ்விற்கு பொருளுற்பத்தியே ஆதாரமானது. பொருளுற்பத்தியின் மையமாக பொருண்மிய அமைப்பு அமைகிறது. எனவே, பொருண்மிய அமைப்பையே சமூகத்தின் திண்ணியமான அடித்தளமாகக் கொள்கிறார் மாக்ஸ். அவரது ஆய்வில், சமூகமானது, பொருண்மிய அடித்தளத்தையும், அந்த அடித்தளத்தின் மீது நிலைகொண்டு நிற்கும் பல்வேறு சமூக அலகுகளையும் கொண்ட கட்டமைப்பாக உருவாக்கம் கொள்கிறது. இந்தக் கட்டமைப்பை முழுமையுடையதாக, இயங்கு நிலையுடையதாக அவர் காண்கிறார். பொருளுற்பத்தித் தளத்தில் எழும் முரணியங்கள் சமூக அசைவியக்கத்தின் உந்து சக்தியாக இயங்கி, சமூக மாற்றத்தை நிகழ்த்தி, மனித வரலாற்றை நகர்த்துகிறது. மாக்சிய தரிசனமானது, மனித பொருளிய வாழ்வின் மையத்திலிருந்து மனித வரலாற்றிற்கு விளக்கமளிக்கும் சமூகப் பார்வையைக் கொண்டது. மாக்சிய சமூகவியல் மனிதர்களைத் தனிமனிதர்களாகக் கொள்ளாமல், சமூக உறவுகளைத் தாங்கி நிற்கும் சமூகப் பிறவிகளாகவே காண்கிறது.

மாக்சிய சமூகவியல் தளத்தில் நின்று காலம், இடம், சூழல் என்ற புறநிலைகள், எவ்விதம் தனிமனித சுயத்தின் உருவாக்கத்திற்கு ஏதுவாக அமைகின்றன என்பது பற்றி சாத்தர் விசாரணை செய்யவில்லை. மாறாக, சமூகப் புறநிலை நிர்ப்பந்தங்களுக்கு அகப்படாத, சுயாதீனமுடைய தனிமனிதனைச் சமூக உலகில் நிலைநிறுத்திக் காட்டுவதே சாத்தரின் நோக்கம். இந்த நோக்கில் அவர் வெற்றி பெறவில்லை. ஒட்டுமொத்தத்தில், சாத்தர் சித்தரிக்கும் மனிதன் சமூக மனிதன் அல்ல. சமூகக் குழுவில் ஒருவனாக, சமூகத் திரளில் ஒருவனாக, தனி மனிதனை, சமூக உலகத்தில் அவர் சஞ்சரிக்கவிட்ட போதும், சமூகப் பொருளிய வாழ்வில் காலூன்றி நிற்காதவனாக, சமூக உறவுகளில் சிக்குப்படாதவனாக, சமூகத்திற்கு அந்நியனாக, தனியனாகவே அவர் மனிதனைச் சித்தரிக்கிறார். ஆகவே, மாக்சியமும் இருப்பியமும் இணைந்து, அகநிலையும் புறநிலையும் புணர்ந்து, உருவாக்கம் பெறும் சாத்தரின் இலட்சிய மனிதனை, முழு மனிதனை, வரலாற்று மனிதனை இந்தத் தத்துவார்த்த நூலில் நாம் காணமுடியாது.